பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்

This entry is part 6 of 19 in the series 1 நவம்பர் 2020

இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது

அதுவும் ஒரு பகல், இரண்டு இரவுகள் மட்டுமே.

காசி பற்றிய முதல் தெரிந்துகொண்டது, எழுவைதீவில் 5 -6 வயதான எனது இளம் பருவத்தில். எனது தந்தை , கங்கை நீர் என இந்தியாவில் இருந்து போத்தலில் கொண்டுவந்தபோது, அம்மாவால் அதில் சில துளிகளை எனது தலையில் வைக்கப்பட்டது. ஊரில் பலர் அந்த நீரை கையால் தொட்டு தங்கள் தலையில் வைத்தது இப்பொழுதும் நினைவிலிருக்கிறது.

சிறுபராயத்திலேயே தமிழக புத்தகங்கள் சஞ்சிகைகளை வாசித்தேன் . கங்கையைப் பற்றி யார்தான் எழுதவில்லை?

அக்காலத்தில் நான் படித்த கல்கி வாரப்பத்திரிகையில் பல எழுத்தாளர்கள் கங்கையைப்பற்றி எழுதினார்கள். பிற்காலத்தில் ஜெயமோகனது புறப்பாட்டில் காசியைப் பற்றி சொல்கிறார். கங்கை அழுக்காவதும் பிரேதங்கள் மிதந்து செல்லும் எனப் பல விடயங்களை அதில் அக்கறையோடு படித்தேன். கங்கை நதியை, பார்க்க வேண்டும் என்ற நினைவு கிணற்றுள் விழுந்த கல்லாக அடிமனதில் பல காலமாக இருந்தது.

இந்திய வரலாற்றில், சிந்து நதிக்கரையில் மனித நாகரீகம், குடியேற்றம், நகரமயமாக்கம் நடந்தாலும் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்குப் போகாமல் அழிந்துவிட்டது . மக்கள் குடியேற்றத்துடன் தொடங்கி படிமுறையான தலைமை உருவாகி பின்பு அரச உருவாக்கம் நடந்தவிடம் கங்கை சமவெளியே. மவுரிய அரசே இந்திய நிலத்தில் முதலாவதாகத் தோன்றிய பேரரசு.

பொருளாதாரரீதியில் (Standing Army) இராணுவத்தை வைத்திருப்பதற்கு உபரியான உணவு உற்பத்தி தேவை . அக்கால இந்தியாவில் கங்கையை அண்டிய பகுதிகள் தானிய களஞ்சியமாக இருந்திருக்கிறது. அரசைத் தொடர்ந்து அங்கு நிலக்கரியை இரும்புடன் கலந்து போராயுதங்கள் தயாரிப்பு , விவசாயத்திற்கு சமாந்திரமாக நடந்திருக்கிறது,

இந்தியக் கலாச்சாரம் மற்றும் காவியங்களின் உருவாக்கம் கங்கை நதியை அடுத்து நடந்தது மாத்திரமல்ல, தென்கிழக்காசியாவில் பிறந்த ஒவ்வொருவரிலும், அவர் எந்த இனம், மொழி, மதமாக இருந்தாலும் அவரது இரத்தத்திலும் கங்கையாற்றின் சில துளிகள் கலந்துள்ளது.

நாங்கள் காசிக்கு, புதுடெல்லி வழியாகச் சென்ற காலம் கொரோனாவின் குழந்தைப் பருவம். எங்களிடம் சீனா, தென்கொரியா சென்றீர்களா…? என்றும் பின்பு சிங்கப்பூர் பேங்கொக் வழியாக கடந்த இரு கிழமைகளில் வந்தீர்களா…? எனக்கேட்டபோது, இல்லையெனப் பதிலளித்தோம்.

அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு மாதத்தின் முன் இலங்கை , நேபாளம் சென்றதால் அவர்களது கேள்விகளிலிருந்து தப்பினோம். ஆனால், ஏர்போட் வரிசையில் எங்களுக்கு முன்பாக நின்ற முதிய அமெரிக்கப் பெண், பாங்கொக் ஊடாக வந்ததால் , வைத்திய சோதனைக்கு அனுப்பப்பட்டார்.

வெளியிலிருந்து வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் குறித்து, விமான நிலையங்களில் மிகவும் கறாராக இருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர்களே, இந்தியாவுக்குள் கொரோனாவைக் கொண்டு வந்தவர்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவது கடினம். ஆனால், முழு இந்தியாவிலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி, கட்டுப்படுத்தி இலகுவாகவும், குறைந்த செலவுடனும் செய்திருக்கலாம் என இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது.

வாரணாசி விமான நிலையம் இந்தியாவில் நான் கண்ட மற்றைய விமான நிலையங்கள் போல் இருக்கவில்லை. அது மிகவும் சுத்தமாகவும் ஐரோப்பிய நாடுகளில் நான் கண்டவற்றைவிட அழகாக இருந்தது. வெளியே வந்து எங்கள் முகவரிடம் அதுபற்றிக் கேட்டபோது, “ வாரணாசி பிரதமர் மோதியின் தொகுதி . விமானநிலையம் அவரால் சமீபத்தில் திறக்கப்பட்டது . “ என்றார் .

விமான நிலையத்திலிருந்து எங்களது கார் ஓடிய வீதி இரண்டு வாகனங்கள் இரு பக்கத்திலும் ஓடும் நெடுஞ்சாலை. அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்தால் அதில் வரும் லாபம் எப்படி இருக்கும்..? என்பதை என்னைச் சிந்திக்கவைத்தது.

கங்கைக் கரையில் உள்ள ஹோட்டல்களில் ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. கீழே ஓடும் கங்கை நதியை எட்டு மாடிக் கட்டிடத்திலிருந்து பார்த்தபோது, மின்சார ஒளியில் பொன்னாக உருகி ஓடியதை அவதானிக்கமுடிந்தது.

அதிகாலை ஆறு மணிக்குக் கங்கையில் படகில் போவதற்கான பயணம் ஏற்பாடாகி இருப்பதாக எங்கள் வழிகாட்டி சொல்லியிருந்தார். அன்றிலிருந்து மீன், இறைச்சியற்ற உணவே உண்ணவேண்டும் என்பது உள்துறை மற்றும் சுகாதார அமைச்சின் ஆணையாகவிருந்தது. காசியிலிருந்த இரவுகளில் பியர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பல முறை இந்தியா சென்றிருந்தாலும் , காசிக்கு மனைவியுடன் போவதற்குத் தவிர்த்த ஒரு காரணம் ஜன நெருக்கடியாக இருக்குமென்பதே. தெய்வ நம்பிக்கையில்லாத உங்களுக்கு காசியில் என்ன வேலை…? எனக் கேட்கப்படும் என்பதால் மைசூர் , ராஜஸ்தான் , கேரளா எனப்போய் காசியைத் தவிர்த்தேன்.

காலையில் எங்களுக்காக தொப்பியுடன் பெரிய பொட்டு வைத்த புதிய வழிகாட்டி காத்திருந்தார். “ எந்த ஊர்…? “ என்று என்னைக் கேட்ட போது , இலங்கையில் பிறந்து அஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் என்றதும் , “ உங்களை உல்லாசப் பிரயாணிகள் போலல்லாது யாத்திரைக்கு வந்தவர்களாக நடத்தப்போகிறேன் “ என்றபோது, எனது மனதில் “ வேண்டாம் எனச் சொல்லிவிடு “ என அசரீரி ஒலித்தது. ஆனால், நான் வாய் திறப்பதற்கு முன்பே “ நாங்கள் இந்துக்கள் “ என எனது மனைவி சியாமளா சொல்லிவிட்டதால் அமைதியாகிவிட்டேன்.

வாகனத்தில் சென்று, மக்கள் அதிகமாக நின்ற இடத்தில் இறங்கி, கங்கையின் படித்துறைக்கு நடந்தோம். நான் நினைத்தவாறு அவ்விடத்தில் மக்கள் அதிகமிருக்கவில்லை . இடமும் சுத்தமாக இருந்தது. படித்துறையை அடைந்தபோது ஏற்கனவே எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்கிருந்த ஒரு ஓடத்தில் ஏறினோம்.

சிறிது நேரத்தில் அந்த வழிகாட்டி, தனது பையில் இருந்து பூக்களை எடுத்து “ உங்கள் பெற்றோர்களைக் கண்ணை மூடியபடி நினைக்கவும். பின்பு இந்தப்பூக்களை கங்கையில் எறியவும் “ என்று சொன்னார். தினமும் பதினொரு ஆயிரம் கிலோ எடையுள்ள பூக்களை கங்கைக்குள் எறிகிறார்கள் என்பதையும் அறிந்துகொண்டேன். அதையே என்னையும் செய் என்றபோது , எனக்குள் ஒரு சேகுவேரா தலையெடுத்து மனதுள் விறைப்பு வந்துவிட்டது.

“பெற்றோர்கள் எல்லாம் போய் பலகாலமாகி விட்டது. “ என்று நான் சொன்னபோது சியாமளா என்னைப்பார்த்து முறைத்தார். அந்த வழிகாட்டி சமஸ்கிருதத்தில் தொடர்ச்சியாகச் சில மந்திரங்களைச் சொல்லியபோது, நான் கங்கையையும் அதன் கரைகளையும் படமெடுத்த படியிருந்தேன்.

எனது புறக்கணிப்பால் மனம் தளர்ந்த அந்த வழிகாட்டி விக்கிரமாதித்தன், சியாமளாவில் கவனம் செலுத்தியபடி ஒரு தீபத்தைக் கொளுத்தும்படி சொன்னபோது, அந்தச்சடங்கில் நானும் பங்கு பற்றினேன். “ உங்கள் தாய் தந்தையரை நினைத்தபடி கங்கையில் தீபத்தை விடுங்கள் “ என்று சொன்னதும், இருவரும் அவ்வாறு செய்தோம்.

கங்கையில் அதிகம் நீர் புரண்டோடவில்லை . சூரியன் உதிக்காததால் அங்கு ஒளியின் மாற்றங்கள் எதுவும் நதியில் தெரியாது, சாம்பல் பூத்த முகத்துடன் கங்கை உறங்கியபடி நகர்ந்தாள். ஆனால், நதிக்கரை உயிர்ப்பாகவும், அழகாகவும் அதேவேளையில் அமைதியாகவும் இருந்தது.

எங்களைப்போல் பலர் காலை வேளையில் தோணிகளில் சென்றனர். நான் எதிர்பார்த்ததைவிட நதிக்கரை சுத்தமாகவிருந்தது. கரையில் ஓரிடத்தில் மாணவர்கள் தங்கள் குருவிடம் படித்துக்கொண்டிருந்தனர். அன்று காலை அங்கு எந்த பிணமும் எரித்ததாக எனக்குத் தெரியவில்லை .

கங்கையில் குளிப்பதும் சாமியார்கள் மந்திரங்களைச் சொல்வதும் காலம் காலமாக நடப்பவைதான். அவை நடந்துகொண்டிருந்தன. ஆனால், பக்தர்களை மட்டும் கருத்தில் கொள்ளாது உல்லாசப் பிரயாணிகளுக்காக கரையெங்கும் சுத்தமாக வைத்திருந்தார்கள். சாமியார்கள் தங்களைப் படமெடுப்பதற்குப் பணம் வசூலித்தார்கள் .

நதியில் அரைமணி நேரப்பிரயாணம். அதிகாலையில் மனதிற்கு அமைதியாக இருந்தது. அப்பொழுது சூரிய உதயம் நிகழ்ந்தது. கங்கை நீரின் சாம்பல் நிறம் மாறி பொன்னாக உருமாறி உயிர் கொண்டது . பல நதிகளில் சூரிய உதயத்தைப் பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தைத் தருகிறது . ஏன் அது என்ற கேள்விக்கு, இயற்கைக்கு ஒளிந்து வீடுகளைக் குகைகளாக்கி வாழும் இக்காலத்தில் சூரிய உதயத்தை நதியில் பார்ப்பது அதிசயமாக இருக்கிறது என மனமே பதிலையும் கொடுத்தது. .

கரையில் இறங்கிய பின்னர் , காலங்களால் மாற்றமடையாத அங்குள்ள குறுக்கு சந்துகளில் நடமாடிய மாடுகள் நாய்களுடன் மோதிவிடாது, தரையில் சிந்தியிருந்த வெற்றிலைத் துப்பல்களையும் தவிர்த்து, கால்களைக் கவனமாக வைத்தபடி சென்றோம் .

கடைகள் எல்லாம் திறக்காத காலை நேரம் என்பதால் மனிதர்கள் நடமாட்டம் குறைவு. எனினும், தரையில் காணப்பட்ட மாடுகளது கோமயங்களை மிதிக்காது செல்லவேண்டும். இறுதியில் ஒரு கோவிலை அடைந்து அங்கு மாலை சாத்துவதற்கும் எமது பெயரில் விசேட பூசை செய்யவும் ஒழுங்கு பண்ணியிருந்தார் எமது வழிகாட்டி . நான் கோவிலுக்குச் சென்றபின்பு, அந்த விசேட பூசைக்கு மறுத்துவிட்டேன். வழிகாட்டியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஏற்கனவே நதியில் நடந்த பூசைக்கும் பணம் கொடுத்திருந்தோம். இந்தியக் கலை கலாச்சாரங்களை அறிந்துகொண்டு மதச் சடங்குகளைத் தவிர்ப்பது ஆற்று நீர் காலில் படாது ஆற்றைக்கடப்பது போன்ற சாகசச் செயலுக்கு ஒப்பானது.

சியாமளா ஒரு வைத்தியர் எனத் தெரிந்து கொண்டதால், தான் ஒரு வைத்தியரிடம் கொண்டுசெல்கிறேன் என்று சொன்ன அந்த வழிகாட்டி, ஒரு நாற்சார் வீட்டுக்கு எம்மை அழைத்துச் சென்றார். அந்த வீட்டின் மத்தியில் இரண்டு பெரிய மாடுகள் கட்டப்பட்டிருந்தன. தமிழ்நாடு, கேரளம் , கர்நாடகா முதலான தென்மாநிலங்களில் நான் பயணம் செய்தபோது அங்கே வீடுகளின் கொல்லையில் மாடுகளைப் பார்க்கமுடிந்தது. நடு வீடுகளில் அல்ல .

மாடுகளுக்கு வட இந்தியர்களது உறவுகள் நெருக்கமானது என்பது அரசியல் மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஒரு வயதானவர் உள்ளே இருந்து வந்து, வைத்தியர் என அறிமுகமானர். மிகவும் சாதுவாக இருந்த அவரிடம், எமது வழிகாட்டி எனது மனைவியை அறிமுகம் செய்ததும், அவர் உள்ளே அழைத்துச் சென்றபோது என்னையும் வரும்படி கேட்டார். நான் மறுத்துவிட்டு அந்த மாடுகளுடன் நேரத்தைச் செலவழித்தேன். அந்த வீட்டில் எங்களுக்குப் பால் கோப்பி தந்தார்கள். மிருக வைத்தியனான எனக்கு அந்த வீட்டில் கோமயம் , கோசலம் சகித்துக்கொள்ளக்கூடிய மணமாக இருந்தது.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் அந்த வைத்தியர் ஆங்கிலத்தில் மனைவியிடம் பேசி, மனைவியினது கான்சரை அறிந்து கொண்டு அதற்கான சூரணம் தைலங்களைக் கொடுப்பதற்கு தயாரானார். அஸ்திரேலியாவிற்கு அப்படியான எதையும் கொண்டுவரமுடியாது என்பதைச் சொன்னதால் அவரது வைத்திய முயற்சி எதுவும் கைகூடவில்லை.

அவர்கள் தந்த கோப்பிக்குப் பணம் கொடுக்க முயன்றேன். ஆனால், மறுத்துவிட்டார்கள். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் சோடிகளான உல்லாசப்பயணிகள் உள்ளே வந்தபோது நாங்கள் விடைபெற்றோம்.

வழிகாட்டி மீண்டும் எமக்கு கோயிலொன்றைக் காட்டியபோது, “ எங்களை யாத்திரிகராக நினைக்கவேண்டாம். உல்லாசப் பயணிகளாக நினையுங்கள் “ எனச்சொன்னதும், அவரது முகம் மழைத்துளி பட்ட தொட்டாசுருங்கி செடியயாகியது.. காசியில் இருபதாயிரத்துக்கு மேல் கோயில்கள் உள்ளன எனப் படித்திருந்தேன். அதனால் ஒரு கோயில் என்பது எத்தனையில் போய்முடியுமோ..? என்ற ஒரு பயமுமிருந்தது.

மதன் மோகன் மாளவியாவால் உருவாக்கப்பட்ட பனாரஸ் பல்கலைக்கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். முக்கியமாக ஆயர் வேதத்தின் பிறப்பிடமாகக் காசியைச் சொல்வார்கள். அதனைப் பார்க்க விரும்புகிறேன். அங்கு போவோமா என்றதும், மீண்டும் வாகனத்தில் ஏறியபோது “ பிரதமர் மோடியின் தொகுதி என்பதால் எங்களுக்கு இந்த கங்கை சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப்பாதைகள், விமான நிலையம் எல்லாம் அவர் மூலம் கிடைத்தது . நான் இந்து , பிராமணன் , வேதங்கள் அறிந்தவன் . இந்தியா, இந்து நாடாகவேண்டும் என்பதில் என்ன தவறு? ஏற்கனவே ஐம்பதுக்கு மேல் கிறிஸ்துவ நாடுகளும், அதே அளவு இஸ்லாமிய நாடுகளும் உலகில் உள்ளன. அதை விட ஏற்கனவே இந்தியாவிலிருந்து இரண்டு நாடுகள் நாங்கள் இஸ்லாமியர்கள் இந்துக்களோடு வாழமுடியாது என்று பிரிந்து சென்றுவிட்டன. அவர்களே எங்களை இந்துக்கள் நாடென்றபோது நாம் ஏன் இந்து இந்தியா என பிரகடனப்படுத்த முடியாது “ என்றார் அந்த வழிகாட்டி.

பிஜேபி சார்ந்த அவரது அரசியல் புரிந்தது . என்னிடம் இலகுவான பதிலிருக்கவில்லை . அப்போது பனாரஸ் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தபோது, சமீபத்தில் கட்டிய புதிதான வைத்தியசாலையைப் பற்றி எமக்குக் கூறத்தொடங்கினார் .

பல்கலைக் கழகத்தை வாகனத்தில் சுற்றிவந்தோம்.

பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான பெண்கள் தூசிக்காக முகத்தைத் துப்பட்டாவால் மூடிக்கட்டியிருந்தார்கள்.

“ பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எல்லாப் பெண்களும் முஸ்லீம்களாகிவிட்டார்களா… ? என்று கேட்டதும், திடுக்கிட்டு

முன்சீட்டில் இருந்து திரும்பினார்.

அவரது இதயத்துடிப்பை அதிகரிக்க விரும்பாது “ இல்லை… எல்லோரும் தங்கள் முகத்தை ஆண்கள் பார்க்கக்கூடாது என மறைத்து இருக்கிறார்களா…? எனக்கேட்டதும், வலுக்கட்டாயமான சிரிப்பை வரவழைத்தார்.

இந்த வழிகாட்டியில் மட்டுமல்ல, தற்போது வட இந்தியாவின் அரசியல் ஓட்டத்தைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது. காந்தி உருவாக்கிய இந்தியத் தேசியம், ஜனநாயக ரீதியாக தொடர்ச்சியாக தன்னை வளர்த்துக் கொள்ள முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு ?

பெருமளவில் காங்கிரஸ்சும் சிறிதளவில் இடதுசாரிகளும் பொறுப்பாவார்களா?

நேரு, ஜனநாயகத்தைப் புறக்கணித்து குடும்ப அரசியலைக் கொண்டு வந்தது ஒரு காரணமா? ?

வலதுசாரிக் கட்சிகளுக்குள் உலகளாவிய ரீதியில் உட்கட்சி ஜனநாயகம் இருந்து வந்துள்ளது . இடதுசாரிகளே பெருமளவில் குடும்ப அரசியலை உருவாக்குகிறார்களா?

சாரநாத்  – பௌத்தத்தின் தோற்றுவாய்

காலையில் கங்கை  நதிக்கரை மற்றும் காசியின்  சந்துகளில் நடந்து  முடிய மதியமாகிவிட்டது . பசி வயிற்றில் பற்றி  எரித்தது . மீண்டும் ஹோட்டலிற்கு   மதிய உணவிற்கு வந்தபோது                                “ மாலையில் கங்கைக்கரையில் நடக்கும் தீப ஆராதனையைப் பார்க்கப் போவோம் “ எனக் கூறியபோது,  என்னை ஒரு இந்து தலயாத்திரீகராக நடத்துகிறேன் எனது வழிகாட்டி சொன்ன அர்த்தம் புரிந்தது .

 “எனக்கு சாரநாத் செல்லவேண்டும்,  அத்துடன் சியாமளாவுக்குக் காசியில் பட்டுச் சேலை வாங்கவேண்டும். பின்பு நேரமிருந்தால்  தீப ஆராதனைக்கு நான் தயார் . “ என்றதும் நமது வழிகாட்டியின் முகம் மாறியது.

“ இரண்டு மணிக்குத் தயாராக இருங்கள் சாரநாத் போவோம் “ என்றார் . ஒரு பகலில் முழு நேரத்தையும் முடிந்தவரையில் பார்ப்பதற்காகச் செலவிட நினைத்திருந்தேன்.

இரண்டு மணிக்கு வழிகாட்டி வந்து ,  “காசியில் பட்டுச் சேலையைப்  பார்த்துவிட்டு  சாரநாத் செல்வோமா?” என்றபோது மீண்டும் எதிர் குரலெழுப்பினேன்.

சேலை  எதுவும் வாங்காத போதிலும்,  அவற்றை  கண்ணாலும் கையாலும் தடவியபடி பல மணிநேரத்தைச்  செலவிடத் தயாராக இருக்கும் சியாமளாவை அனுமதித்தால்,  பத்து  கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாரநாத் போகமுடியாது. ஏற்கனவே புத்தர் பிறந்த இடமான  லும்பினி சென்றதால் புத்தர்,  தர்மத்தை உபதேசித்த இடமான  சாரநாத்தையும் பார்க்க வேண்டும் என்பது எனது  ஆவலாக இருந்தது.

பத்து கிலோ மீட்டர் தூரத்தை,  பத்து நிமிடத்தில் ஆஸ்திரேலியாவில் போகமுடியும்.  ஆனால்,  இந்தியாவில் அரை மணியிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கான சாத்தியமுண்டு.

இசுபத்தான என்ற பெயரில்  கொழும்பில் ஒரு கல்லூரி உண்டு. அது   எந்த மொழிப் பெயர் எனப் பலகாலம் நான் வியந்ததுண்டு.  இசுபத்தான   என்பது துறவிகள் தங்குமிடமென்பது அர்த்தம்  என்பதும்  சாரநாத் என்பது,  சமஸ்கிருதத்தில் மான்களின் தங்குமிடம் என்பதும்   என புதிதாக  அறிந்தேன். ஒரு காலத்தில் மான்கள் பயமற்று புல் மேய்வதற்கான இடமாக காசி அரசனால் அந்தப்பகுதி உருவாக்கப்பட்டது.

புத்தர் , ஞானம் பெற்ற பின்பு தனது நான்கு  உண்மைகளை தனது சீடர்களுக்கு  இங்கு உபதேசித்தார்.  மழைக்காலத்தில் அவர் இங்கு தங்கியிருந்தபோது  60 சீடர்கள் சேர்ந்தார்கள். நாசரத்து யேசு கிறீஸ்துவின் 12 சீடர்களைப்போல் , இவர்களே பௌத்தத்தை , நாடு முழுவதும் ஆரம்பத்தில்  எடுத்துச் சென்றவர்கள். ஒரு விதத்தில் சாரநாத்தை  புத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதமுடியும்.  தற்பொழுது பெரிய தூபியும் (Dhamekh Stupa built in the 6th century) துருக்கிய தளபதிகளால் இடியுண்ட பௌத்த குருமார்களது மட ஆலயங்களும்  உள்ளன. இவைகள் செங்கட்டியால் கட்டப்பட்டவை .

இந்திய வரலாற்றில் சந்திரகுப்த மௌரியனின் அரண்மனை மரத்தால் ஆனதாகக் கிரேக்க ராஜதந்திரியின் (Megasthenes) 302 -298 BCE)  குறிப்பு கூறுகிறது. சாரநாத்தில் இப்போது காணப்படும்  இடிந்த இடங்கள் குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்டது .   இந்தியாவில் பௌத்தத்தின் உன்னதமான காலம் குப்தர்கள்( 4-6 Centuary) காலமே. பிராமணியத்தால் ஒதுக்கப்பட்ட  நான்காம் வருணத்தவர்களை  பேதமற்று புத்தமதம் உள்வாங்கிக்கொண்டது.

சீனத்துறவிகள் பிற்காலத்தில் வந்துபோன இடமாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது. ஒரு காலத்தில்  3000  இற்கும்  மேற்பட்ட துறவிகள் இருந்த இடம் என்கிறார்கள்.  ஆரம்பத்தில் தேரவாத புத்தமும் பிற்காலத்தில் உருவாகிய திபெத்தியப் புத்த மதப்பிரிவான வஜ்ர மதத்தினது  வேர்கள் இங்கிருந்தே உருவாகியது எனக் கருதப்படுகிறது.  மாமன்னன்  அசோகன் ஆணையால்  இங்கிருந்த  நினைவுத் தூணையும்  மற்றும் அசோக சக்கரத்தையும் கண்டெடுத்து ஒரு மியுசியம் உண்டாக்கியிருக்கிறார்கள்

இங்கிருந்தே தற்போதைய இந்தியாவின் தேசிய சின்னமாகிய நான்கு சிங்கங்கள் கொண்ட அசோக சக்கரம் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சாரநாத்தின் வாசலில் எம்மைக்  அழைத்துச் சென்று விட்டு விட்டு, எமது வழிகாட்டி  போய்விட்டார். நல்ல மதிய நேரம் வெயில் தலையில் நேரடியாக இறங்கியது.  

உடைவுகள் இருந்த இடத்திற்கு அருகே தலிபான்களால்  ஆப்கானிஸ்தானில் உடைக்கப்பட்ட புத்தர் சிலையின் தோற்றத்தில் தாய்லாந்து அரசால் கட்டப்பட்டுள்ளது.  அதனருகே  இலங்கையரான  அனகாரிக தர்மபாலவால் கட்டப்பட்ட சிறிய விகாரையும் உள்ளது.

இங்குள்ள மியுசியத்தில் அதிக நேரம் செலவிட  முடியவில்லை. அருமையான குப்தர் கால சிற்பங்கள் பல இருந்தன.  இங்கேயே  அசோக சின்னம் பிரதான நுழைவாயிலில் உள்ளது.

மியுசியத்திற்கு  வெளியே வந்தபோது ,  இலங்கையைச்  சேர்ந்த அனாகரிக தர்மபாலவின் சிலையுள்ளது.

  அவர்,  இந்தியாவுக்கு வந்து  சாரநாத்தையும் நேபாளத்தில்  லும்பினியும் அழிந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு,   இந்திய அரசிடமும் மற்றும் உலகிலிருக்கும்   பவுத்த நாடுகளிடமும் சென்று உதவி கேட்டு  மகாபோதி சங்கத்தை உருவாக்கினார். 

இந்த இரு இடங்களையும்  புதுப்பித்தத்துடன்   அகழ்வாராய்ச்சிக்கும்  முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் அனாகரிக தர்மபால . இவரது முனைப்பினால்,  சாரநாத் அகழ்வாய்வுக்குட்பட்ட போதே  அசோகனின் நான்கு சிங்கங்களுள்ள  அசோக சக்கரவர்த்தியின்  சின்னம்  வெளிவந்தது.  அதுவே தற்போதைய சுதந்திர இந்தியாவின் கொடியில் உள்ளது . இதை அங்குள்ள கல்வெட்டு சொல்கிறது.  

அனகாரிக தர்மபால,  புத்தமதத்தில் முக்கிய ஒருவராக உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறார் .  இந்தியாவில் 25 தடவைகள் மீண்டும் மீண்டும்  பிறந்து பௌத்தத்திற்குத் தொண்டாற்றுவதே  தனது விருப்பம் என்றாராம். அவர் இலங்கைத்தமிழர்களால்  சிங்கள இனவாதி எனத்தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் என நான் நினைக்கிறேன்.  அவர்பற்றிய தவறான  நினைப்பைப் பலர் நம் மத்தியில் விதைத்துவிட்டார்கள்.

மீண்டும் காசி நகரில் எங்கள் பயணம் காசிப் பட்டுப் புடவைகளைப்  பார்ப்பதில்   தொடங்கியது . எமது வழிகாட்டி ஒரு பெரிய கடைக்கு கூட்டிச்  சென்றார்.  அங்கு விதம்விதமான அழகிய பட்டுச்சேலைகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தன.   நல்லவேளையாக சியாமளாவுக்குப் பிடிக்கவில்லை.  ஆனால்,  எனக்கு அது பிடித்தது.  எமது வழிகாட்டிக்கும் பிடிக்கவில்லை.

மீண்டும் இரவு காசி விசுவநாதர் கோவில் செல்வதற்கு காசியின் சந்துகளுடாக போய் பார்த்தால், கோவிலை அரசு புனரமைப்பதால் ஒரு பக்கத்தாலே பக்தர்களை அனுமதித்தார்கள்.  அதற்கான வரிசை பல கிலோமீட்டர் தூரத்திற்கு பாம்பாகத்  தெரிந்தது. விசுவநாதர் கோவிலை ஒரு மதிலிலுள்ள ஓட்டையூடாக பார்த்து விட்டுத் திரும்பியபோது,  ஒரு கடையில் பல பட்டுசேலைகளையும் கொள்வனவு செய்யமுடிந்தது சியாமளாவுக்குத் திருப்தி.

அந்திசாய்ந்தபின்னர்,   கங்கைக்கரையில் தினமும் நடக்கும் தீபாராதனைக்குச் சென்றோம்.  மேடை போட்டு மந்திரங்களைச் சொல்லியபடி சங்குகள் முழங்கக்  கங்கை நதிக்குத் தீப ஆராதனை மாலைநேரத்தில் நடக்கும் .  இந்தச்  சடங்கு பிரபலமானது.   இந்தியாவெங்குமிருந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து காத்திருந்து பார்ப்பார்கள்.  கங்கை நதியின் கரையில் மட்டுமல்ல,  நதியின் மீது  ஓடங்களிலும் மக்கள் கூட்டம்  நிரம்பி வழியும் . ஆராதனையை விட  எனக்கு நதியையும் அங்கிருந்த  மக்களையும் பார்ப்பது மனமகிழ்வைத் தந்தது.  குறைந்த பட்சம்  ஒரு கிழமை  தங்கிப் பார்க்க வேண்டிய இடத்தை ஒரு நாளில் பார்த்தது,  அரைவாசி குடித்த ஐஸ்கிறீமை நிலத்தில் தவறவிட்ட சிறுவனின் நிலையில் என் மனமிருந்தது.

அடுத்தநாள் காலையில் புறப்பட்டோம் . அகமதாபாத் விமான நிலையத்தில் சில அமெரிக்க விமானங்கள் நின்றன. அதைப் பார்த்ததும்  “அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்பும் இரண்டு நாட்களில் அகமதாபாத் வருகிறார்  “ என சியாமளாவிடம் சொன்னேன் . 

Series Navigationநினைவுகளால் வருடி வருடிபாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *