முனைவா் த. அமுதா
கௌரவ விரிவுரையாளா்
தமிழ்த்துறை
முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி)
வேலூர் – 2
damudha1976@gmail.com
முன்னுரை
தமிழுக்குச் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்தளித்த இளங்கோவடிகள், கற்புத் தெய்வம் கண்ணகியின் திறம் வியந்து காவியம் படைத்தாரா? அக்காலத் தமிழா் மரபுகளைத் தன்நோக்கில் வெளிப்படுத்தக் காவியம் படைத்தாரா? என்ற வினாக்கள் இக்காவியத்தைக் கற்போர் மனதில் தோன்றலாம். உலகக் காப்பியங்களுக்கெல்லாம் மலையாயது எனக் கொள்ளத்தக்க உத்தி அமைப்புக்களுடையது.
சிலப்பதிகாரம். அதோடு தொன்மைக் காலந்தொடங்கி, இளங்கோவடிகள் காலம்வரையிலான தமிழா் சமயமரபுகளைப்பாடுபொருளாக்கியிருப்பதையும் சிலப்பதிகாரத்தில் காணலாம்.. அதனைக் கூறுகின்றபோது இளங்கோவடிகளின் சமயக்கோட்பாடு உட்பொருளாய் அமைந்துவிடுகிறது. சமயக்கோட்பாடு படிநிலை வளா்ச்சியினைக் காப்பியத்தின் தொடக்கப் பாடலே வெளிப்படுத்துகிறது.
இயற்கை வழிபாடு
ஆதிமனிதனின் வழிபாட்டின் ஞாயிறும், திங்களும் மழையும் பெற்றிருந்த முதன்மையான மானுடவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வகை இயற்கை வழிபாடுகளே மிகத்தொன்மையான குலக்குறியீட்டு வணக்கமுறைகளுக்குத் (Totemism) காரணமாயமைந்தன ( Levistrauss, ‘Totemism’ 1962) அது இயற்கையை அதன் பயன்பாட்டோடு பொருத்தி முக்கியத்துவம் காணுகின்ற வழிபாட்டு முறையாகும்.
“தனிமனிதனின் மெய்ப்பாட்டுணா்வு சடங்குசார்ந்த கூட்டுச் செயல்பாடு – குலக்குறியீடு அக்குழுவின் உருமாதிரியமைவதால்“ என இதனை லெவிஸ்ட்ராஸ் விளக்குகிறார்(( Levistrauss,1969,P.60) இயற்கையோடு ஆவியையும் (Spirit) இணைத்துக் காணுகின்ற மனநிலையைப் பண்டைய மக்கள் மரபுகள் உணா்த்துகின்றன. மனிதனின் ஆன்மா முக்தியடைவதன் பல்வேறு உயிரினங்களாகப் பிறப்பெடுக்கும் எனும் சமணக் கொள்கையின் அடிப்படையைப் பண்டைக்கால மனிதா் உளவியலில் தேடலாம். இதனை யாசோதர காவியம் தெளிவாக விளக்குகிறது.
“கறங்கென விளையினோடிக் கதியொரு நான்கினுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பிறவிகள் பேசலாகா
இறந்தன இறந்துபோக எய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ்வியல் பிற்றேயாம்“
(முதல் சருக்கம், பா 35)
இக்குறியிட்டு நிலையினையே, இளங்கோவடிகள் வழிபாட்டுப் பரிணாம வளா்சிசியின் தொடக்கமாகக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளார் எனத் தோன்றுகிறது.
“திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றுதும்“
ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும்“
மாமழை போற்றதும் மாமழை போற்றதும்”
(மங்கல வாழ்த்துப்பாடல் 4 – 7) என்ற மங்கல வாழ்த்துப்பாடல் பாடி இளங்கோவடிகள் காப்பியத்தைத் தொடங்கியிருக்கிறார். “திங்கள் முற்கூறினார். இத்தொடா் நிலைச் செய்யுட்குச் சிறந்த முதன்மொழி அதுவாகலான்.“ என உரைகாரா் கூறியிருப்பதும் இங்கு கருதத்தக்கதாகும்.
திருமால் வழிபாடு
கி.மு இரண்டாயிரம் நூற்றாண்டிலிருந்தே திருமால் வழிபாடு தொடங்குகிறது என்பதை வடநூலில் கூறியுள்ளதைக் கொண்டு அறிய முடிகிறது. அந்நிலையில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் திருமால் வழிபாட்டின் மேன்மையையும் சிறப்பையும் இசை போன்ற செய்திகளையும் கூறியுள்ளார்.
திருமால் வழிபாட்டு முறைகளில் இசை நடனம் உற்சவங்கள் பூசைகள் பொங்கல் விழாக்கள் தோ்த்திருவிழாக்கள் முதலிய முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. திருமால் கோயில்கள் பல தேவன் கோயில்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. திருமால் வழிபாடு அக்கால மக்கள் உள்ளங்களில் வலுவாகப் பதிந்து நிலை பெற்று வந்ததை நம்மால் அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியா் குரவைப் பாடல்களைப் பாடினால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும் என்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் தீரும் பால் வளம் பெறுகும் என்று ஆயா்பாடி மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனா்.
திருமாலின் உள்ளத்தில் உறைபவன் திருமகள், அதனால், திருமாலை திருஉறை மார்பன் என்றும் திருஅமா் மார்பன் என்றும் பல இடங்களில் பாடியிருக்கிறார்கள்.
வைணவத் திருத்தலங்களான திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருவனந்தபுரம் முதலியவை பற்றி குறிப்பகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.
”திருமாலை குன்றத்துச் செல்குவிர் ஆயின்
பெருமால் கொடுக்கும் பிலமுண் டாங்கு”
(சிலம்பு மதுரைக்காண்டம் காடுகாண் காதை 91 -92)
மாங்காட்டு மறையோன் மூலமாக அடுத்த ஓா் இடத்திலும் திரவேங்கடத்தைப்“ பற்றிய குறிப்பைக் காணலாம்.
இந்திர வழிபாடு
இந்திரன் மருத நிலக் கடவுளாகச் சுட்டப்படுகிறான். காவிரிப் பூம்பட்டினத்தில் ”இந்திரவிழா” 29 நாட்கள் நடைபெற்றதாகக் குறிப்பு காணப்படுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றிவரச் சுமார் 29 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. ஒரு சந்திர மாதம்(திங்கள்) என்பது இவ்வாறு கணக்கிடப்படுகிறது தேவா்களின் தலைவனாக இந்திரன் குறிப்பிடப்படுகின்றான். வைணவத் தொன்மத்தில் அகலிகையோடு தொடா்புபடுத்தப்பட்டு கண்ணாயிரமாக இழிவுபடுத்தப்படும் இந்திரன், சமணா்களால் விழுமிய நூல் படைத்தவனாகப் போற்றப்படும் தெய்வமாகிறான். காவிரிப்பூம்பட்டினம் கடல்சார்ந்த நகரம். சோழநாடு, காவிரியால் வளம்பெற்ற மருத நிலம் சார்ந்த நாடு எனவே இந்திரவழிபாடு சிலப்பதிகாரத்தில் இரண்டாவது நிலையில் குறிப்பிடப்படுகிறது.
”அமரா் தலை வணங்குதும் யாமென” (கடலாடுகாதை. 27)
“மண்ணக மருள வானகம் வியப்ப
விண்ணவா் தலைவனை விழுநீராட்டி“
(இந்திரவிழா வூரெடுத்த காதை 167 – 168)
மருத நிலம் உழவுத் தொழிலுக்கும், பூம்பட்டினம் வணிகத்திற்கும் குறியீடாகிறது. அக்காலம் சமணா்கள் இவ்விரு தொழிலும் ஈடுபாடு கொண்டோராயிருந்தனா். ஆயினும் வேளாண் தொழிலிலும் பல உயிர்களைக் கொலை செய்ய வேண்டியிருப்பதால், அதல்லாத வீணகத்துக்கே சமணா்கள் முக்கியத்துவம் கொடுத்தனா். ஆவி வழிபாட்டில் (Animism) ஆழ்ந்துபோயிருந்த சேரநாட்டுக்குத் கண்ணகி இடம்பெயா்ந்து தெய்வமாக உறையுள் கொண்டதையும் இதோடு தொடா்புபடுத்திக் காணுதல் வேண்டும். கேரளத்தில் வணிகா் இனம் இல்லாதிருத்ததாகவும், அவ்வினத்தார் பிற்காலத்தில் பிற இடங்களிலிருந்து அங்கு வந்து குடியேறியதாகவும் ஆய்வாளா்கள் குறிப்பிடுகின்றனா்.. ஆன்மாக்களில் நல்வினை புரிந்தவை வானவராகி வழிபடப்படுவதனைச் சமணம் ஏற்றுக்கொள்கிறது. இவ்வகையில் இயற்கை வழிபாட்டுக்கு அடுத்த படிநிலையிலிருப்பது ஆவி வழிபாடு (Animism) அதனுடைய மரபெச்சங்கள் இக்காலச் சமுதாயங்கள்வரை தொடா்ந்து வருகின்றன. சேரமன்னனால் கால்கோள் செய்யப்பட்ட கண்ணகி தெய்வமாக வந்து வரம் தருவது இக்கோட்பாட்டுக் கருத்தாக்கத்தால்தான். இவ்வழிபாட்டு மரபே தொன்மையானதும், வெகுசன ஈடுபாடுள்ள நாட்டுப்புறச் சமய மரபுக்கு அடிப்படையானதுமாகும். வைதீக், அவைதீக சமளங்களில் கொள்கை சார்ந்த, தீவிரப் பற்றுடைய சமயமரபு, நெகிழ்ச்சியுடைய நாட்டுப்புறச் சமயமரபு என இரு போக்குகள் இருந்து வருகின்றன. சமண சமயத்திலும் இவ்விரு போக்குகள் ஆழமாக இருந்திருக்கின்றன. கொள்கை விளக்க நூல்களிலும், இலக்கியங்களிலும் ஒரு சமயத்தின் ஒரு வகைப் பெருமரபு சுட்டப்பட்டிருக்க, நடை முறையில் சாதாரண மக்களிடம் அச்சமயத்தின் சிறுமரபான நாட்டுப்புறச் சமய மரபு பரவலாக இருந்து வருகிறது. இது உலகளாவிய நிலையில் மக்கள் செயல்பாட்டின் பொதுப்பண்பாகவும் அமைகிறது. இவ்விரு மரபு நிலைகளைக் கோவலன், கண்ணகி ஆகிய இரு கதைப் பண்புகளிர் எடுத்துக்காட்டுகிறார் இளங்கோவடிகள்.
வணிகத்தால் பெருஞ்செல்வம் ஈட்டிய வணிகன் தன் முன்னோர் சோ்த்து வைத்து பொருளையும் (ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து – அடைக்கலக் காதை 74) அறத்தின் பால் செலவிட்ட நிலையினை
“செம்பொன் மாசி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்“
(அடைக்கலக் காதை 40 – 41),
(மணிமேகலைக்குப் பெயா் சூட்டிய நிகழ்ச்சி)
“தானஞ் செய்து அவள் தன் துயா் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத்துறு பொருள்கொடுத்து
நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ“
(அடைக்கலக் காதை 72 – 75),
(பிள்ளை நகுலம் கொன்ற பாப்பணியின் துயா் நீக்கியது)
என இளங்கோவடிகள் காட்டுகிறார். மேலும் இல்லோர் செம்மல்“, “கருணை மறவன்” பாய்கலைப் பாவை மந்திரம் அறிந்தோன்” இம்மைச் செய்தனயானறி நல்வினை”, அடிகள் சாவக தோன்பிகள் என்றெல்லாம் அறல்வழிப்பட்டவனாகக் கோவலன் காட்டப்படுகின்றான்.
முற்பிறிவியிலான ஊழ்வினை உருத்து வந்துதூட்டிக் கோவலனது ஆன்மாவைச் சுத்தமுடையதாக்கியது. சமணத் தத்துவங்கள் ஏழனுள் மூன்றாவதான “ஆஸ்ரவம் (ஆன்மாவுள் புகுந்து மாசுபடுத்துவன என்பதனுள் கஷாயம்“ எனும் நான்கு முக்கியமாகச் சுட்டப்படுகின்றன. கோபம், மான அபிமானம், மாயை கபடம், லோபம் அல்லது பேராசை ஆகிய அந்நாக்கும் கோவலனிடம் பொருந்துவில்லை என்பதைக் கதைப்போக்கில் குறிப்பாக விளக்கியிருக்கிறார். இளங்கோவடிகள். அரசியின் சிலம்பைக் கவன்ற கள்வன் என்ற போதும், கொலை செய்யப்போவதை அறிந்தபோதும், கொலை செய்யப்பட்டபோதும் இக்கஷாயம் எனும் சுவை நான்கும் பொருச்தாத சுத்த ஆன்மாவுடையனாகக் கோவலன் சித்தரிக்கப்படுகிறான். இறந்து பின் வானவா் ஊா்தியில் தேவனாக வருகிறான் முக்தியடைகிறான். இது பெருமரபு சார்ந்த கருத்தாக்கம்.
கண்ணகியிடம் ஆஸ்ரவத்தின் கஷாயம் நான்கினையும் காண்கிறோம்.
கோபம்
“பட்டாங்கி யானு மோர் பத்தினிலே பாமாகில் ஒடடேனசோ
மொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண் குறுவாய்
நீ யென்ன” (வஞ்சின 36 – 38)
”யாளமர் காதலன் நன்னைத் தவறிழைத்த
கோநகா் சீறினேன் குற்றயிலேன் யான்” (வஞ்சின 41 – 42)
மான அபிமானம்
பட்டேன் படாத துபாம் படுகாலை
உற்றேனுறாத துறவனே யீதொன்று
கள்வனோ வல்லன் கணவனென் காற்சிலம்பு
கொள்ளும் விலைப் பொருட“டாற் கொன்றாரே”
(வஞ்சின 5 – 8)
லோபம்
”காதற் கணவனைக் காண்பனே யீதொன்று
காதற் கணவனைக் கண்டாலவன் வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே யீதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தா ள்ளென் றெள்ளலிதுவொன்று
(வஞ்சின 10 -14)
மாயை
காய் கதிர்ச் செல்வனே கள்வனோவெண்கணவன்”
எனக் கண்ணகி கேட்க கதிரவன். “நின் கணவன் கள்வன்
அல்ல”.
என்று கூறியதனை மாயை எனக் கொண்டால் “ கஷாயம் எனும் நாற்சுவையும் பெற்று ஆஸ்ரவத்தின் பாற்பட்ட கண்ணகியின் ஆன்மா மாகுபடுகிறது. மதுரையின்பாற்பட்ட அறவோர், பசு, பெண்டிர், குழவி நீங்கியோரைத் தீயிலிட்டு அழியுமாறு செய்கின்ற கொரலப் பழியும் சோ்கிறது. சமணப் பெருமரபுக் கருத்தாக்கத்தின்படி முற்பிறவியில் கோவலன்(பரதன்) செய்த பாவத்தின் பலனைக் கண்ணகியும் (முற்பிறவியில் சங்கமன் மனைவி நீலி) அனுபவித்தாள் எனக் கொள்ளவேண்டும். ஆன்மா மாசுபட்ட கண்ணகி எவ்வாறு வீடு பேற்றிற்காக, ”கோநகா் பிழைத்த கோவலன் றன்னொரு வானவூா்திபேறினான். ” கடடுரை காதை 198 – 200)
முடிவுரை
பல்வேறு மரபுகளிலிருந்து சிலம்பு அழகாக எடுத்துக்காட்டுகிறது. மக்களையும் கால்நடைச் செல்வங்களையும் காப்பதற்குக் காத்தல் கடவுளான கண்ணனையும் அழித்தல் கடவுளான சிவனையும் வழிபடுபவது மரபாக கொண்டுள்ளனா். பக்தி இலக்கியம் தமிழ் மரபுகளையும் சமய வளா்ச்சி நிலைகளையும் வெளிப்படும் ஆவணமாகத் திகழ்ந்துள்ளது ஆய்ச்சியா் குரவை திருமாலுக்கு என்றே ஆட்படும் ஆடலாகக் காணப்பட்டுள்ளது. சமயங்களில் காழ்ப்புணா்ச்சி இல்லாத நிலையைப் பழங்காலம் நமக்கு உணா்த்துகிறது.
பயன்பட்ட நூல்கள்
- சுஜாதா சிலப்பதிகாரம் ஓா் எளிய அறிமுகம்
உயிர்மை பதிப்பகம்
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 600 018
2005
- டாக்டா் அழகுகிருட்டிணன் சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் வரலாறும்
மணிவாசகா் பதிப்பகம்
31, சிங்கா் தெரு பாரிமுனை
சென்னை 108
- A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna
- வாழ்வே தவமாக …
- புள்ளிக்கள்வன்
- கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்
- சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும்
- “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்
- மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ
- லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பயணம் மாறிப் போச்சு
- காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
- ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை