காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

author
4 minutes, 56 seconds Read
This entry is part 13 of 14 in the series 15 நவம்பர் 2020

முருகபூபதி – அவுஸ்திரேலியா

தன்முனைப்பற்ற மனிதநேயவாதியின் மறைகரத்தால்  மலர்ந்த  பணிகள் !

நவம்பர் 17 ஆம் திகதி பிறந்த தினம்

                                     

எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் மு. கனகராஜன். மல்லிகை ஜீவா எனக்கு  கனகராஜனை  அறிமுகப்படுத்தியிருந்தார்.

இவ்வாறு அறிமுகங்களினாலேயே எனது நட்பு வட்டம் விரிவடைந்திருக்கிறது.  பெருகியிருக்கிறது.

பிரேம்ஜியுடன் 1974 ஆம் ஆண்டிலிருந்து  நெருங்கியிருந்த நான், 05-02-2014 ஆம் திகதி வரையில்  அவருடன் தொடர்போடிருந்தேன்.  இவ்வாறு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக  எனது நெஞ்சத்திற்கு நெருக்கமாக வாழ்ந்திருக்கும் அவருடன் நான் தொலைபேசியில்  இறுதியாக உரையாற்றிய திகதியைத்தான் இங்கே பதிவுசெய்கின்றேன்.

அன்றைய தினம்தான் நான் அவருடன் தொலைபேசியில் உரையாற்றிய இறுதிநாள்.  சுகவீனமுற்றிருக்கிறார் என அறிந்ததும் தொடர்புகொண்டு உரையாடினேன்.  வழக்கமாக உற்சாகத்துடன் சிரிக்கச்சிரிக்கபேசும் அவரது குரலில் தொனித்த சோர்வு என்னை நிலைகுலையச்செய்தது.

அவரை நாம் ஞானா என்றுதான் அழைப்போம்.

 “ என்ன ஞானா..? எப்படி இருக்கிறீர்கள்..?  “ என வழமையான சம்பிரதாய கேள்விதான் கேட்டேன்.

 “  ஏதோ இருக்கிறன்.  கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. அவ்வளவுதான்.  நீர் எப்படி..? பிள்ளைகள் எப்படி…?   “ எனக்கேட்டார். அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு பேச்சை தொடர்ந்து வளர்க்காமல்,  “ பிறகு தொடர்புகொள்கின்றேன்.  “ என்றேன்.

மூன்று நாட்களில், அதாவது  08-02-2014 ஆம் திகதி அவர்  எங்களையெல்லாம்  விட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற தகவல் என்னை வந்தடைந்தது.

மௌனத்துள் உறைந்துபோனேன்.

எனது வாழ்வில் நேர்ந்த சில எதிர்பாராத நல்ல  திருப்பங்களிலும் அவர் கலந்திருக்கின்றமையால் இன்றும் அவர் என்னோடு வாழ்கின்ற உணர்வுடனேயே இதனை எழுதுகின்றேன்.

அச்சுவேலியில்   17-11-1930   ஆம்    திகதி    பிறந்த    பிறந்த   ஞானசுந்தரன்,  தமது    ஆரம்பக்கல்வியை   அச்சுவேலி    கிறீஸ்தவ     கல்லூரியிலும்   பின்னர்  உயர்தரக்கல்வியை    யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும்    கற்றார்.    1947 இல்   தமது  17 வயதிலேயே     சுதந்திர     இளைஞர்    சங்கம்    என்ற   அமைப்பை உருவாக்கினார்.     அன்றிலிருந்து       ஞானசுந்தரன்     தீவிரமான     வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும்    ஈடுபடத்தொடங்கினார்.

தமிழகம்சென்று     மூத்த    அறிஞர்கள்     நாமக்கல்     கவிஞர்  வி.க. , பாரதியின் தோழர்  வ.ரா,  சுவாமிநாத சர்மா  ,  குயிலன்,  பேராசிரியர்    ராமகிருஷ்ணன்  , தமிழ் ஒளி முதலானோரின்    தொடர்பினால்     இடதுசாரிக்கருத்துக்களை     உள்வாங்கி  இடதுசாரியாகவும்     முற்போக்கு     எழுத்தாளராகவும்    இயங்கிய ஞானசுந்தரன்,     அங்கு      கம்யூனிஸ்ட்    கட்சியின்       முன்னணி என்ற  இதழிலிலும் பணியாற்றினார்.    தாயகம்    திரும்பிய    பின்னர்    கே.கணேஷ் ,  கே. ராமநாதன்     ஆகியோரின்     தொடர்புகளினால்     இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்     தேசாபிமானி, அத்துடன்       சுதந்திரன்     முதலான     இதழ்களிலும்   ஆசிரியர் குழுவில்     இணைந்தார்.

தேசாபிமானியில்     அவர்     அக்காலப்பகுதியில்     எழுதிய    தேசபக்தன் கண்ணோட்டம்    என்ற    பத்தி    எழுத்து     வாசகர்களை    பெரிதும்   ஈர்த்தது. 1954    இல்  இலங்கை    முற்போக்கு    எழுத்தாளர்     சங்கத்தில்    இணைந்து அதன்     வளர்ச்சிக்கு    அள்ளும்பகலும்     தொண்டாற்றினார்.

சுயநலமற்ற,      தன்முனைப்பு     உணர்வுகளற்ற     பொது    நோக்குடன்    அவர் இயங்கியதனால்     மாற்றுக்கருத்துள்ளவர்களும்     அவரை நேசித்தனர். அந்த    நேசிப்பே    அவரை     தொடர்ந்தும்    பல    வருடகாலமாக சங்கத்தின்    பொதுச்செயலாளர்     பதவியில்    நீடிக்கச்செய்தது.

பிரேம்ஜி      என்ற     புனைபெயரில்    அவர்    எழுதத்   தொடங்கியது    முதல் பிரேம்ஜி     ஞானசுந்தரன்    என்ற    பெயரிலேயே      அழைக்கப்பட்டார்.

சங்கத்தின் கிளை அமைப்புகளான எழுத்தாளர்    கூட்டுறவுப்பதிப்பகம், அறிவுவட்டம்  முதலானவற்றையும்    உருவாக்குவதில்  முன்னின்று உழைத்தார்.

தேசிய    இனப்பிரச்சினைக்கு    நிரந்தர      தீர்வு தரக்கூடிய    திட்டங்கள்,  மற்றும்     தமிழகத்தின்     வணிக     இதழ்களுடன்     தரக்குறைவான இதழ்களையும்     இலங்கைக்கு    தருவிப்பதில்     கட்டுப்பாடுகள்     விதிக்கும் நடைமுறைகளை     அமுல்படுத்துவதிலும்     யாழ். பல்கலைக்கழக   வளாகம் உருவாக்கப்பட்டபொழுது    அதன்    முதல்    தலைவராக     பேராசிரியர் கைலாசபதியை    நியமித்தல்    தொடர்பான    ஆலோசனைகளிலும் பிரேம்ஜி    மிக   முக்கிய    பங்காற்றியுள்ளார்.

சோவியத்     தூதரகத்தின்    சோவியத் நாடு,     சோஷலிஸம்   தத்துவமும்  நடைமுறையும் ,   சக்தி     முதலான     இதழ்களிலும்     முற்போக்கு    எழுத்தாளர் சங்கத்தின்    புதுமை  இலக்கியம்     இதழிலும்   ஆசிரியராக   பணியாற்றினார்.

 சிறந்த   பத்திரிகையாளருக்கான    சோவியத்தின்   லெனின்   விருதும் அவருக்கு  கிடைத்துள்ளது.    இலங்கையில்  பாரதி   நூற்றாண்டு    விழா உட்பட    பல    இலக்கியம் சார்ந்த     மற்றும்    தேசிய    ஒருமைப்பாடு   மாநாடு  முதலானவற்றில்    பிரேம்ஜியின்    கடுமையான   உழைப்பு குறிப்பிடத்தகுந்தது.

1971   முதல்   1975  வரையில்     இலங்கை    தமிழ் ஆலோசனைச்சபையிலும்    யாழ். பல்கலைக்கழக அமைப்புக்குழுச்செயலாளராகவும்       இலங்கை பத்திரிகைக்குழுவில் உறுப்பினராகவும்    இலங்கை    ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஆலோசனைச்சபையின்     உறுப்பினராகவும்    இயங்கிய    கால   கட்டத்தில் பல    ஆக்கபூர்வமான     பணிகளை    முன்னெடுத்தார்.    சில   உலகநாடுகளில் நடந்த    இலக்கிய     மாநாடுகளிலும்     பங்கேற்றுள்ளார்.

அவரது     பிரேம்ஜி கட்டுரைகள்     நூல்    2008    இல்   வெளியாகியது. இதனை கனடா நான்காவது பரிமாணம் இதழின் வெளியீடாக அதன் ஆசிரியர் க. நவம் வெளியிட்டார்.

 பலரதும் நூல்களை வெளியிட்டு வைப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காண்பித்த பிரேம்ஜி,  தனது படைப்புகளை  நூலாக்குவதில் காண்பிக்கவில்லை. நீண்ட கால தாமதத்தின் பின்னர் அவரது ஓரே ஒரு நூல் அவரது பெயரையும் தாங்கி வெளியானது.  அதுவும் நண்பர்களின்  தொடர்ச்சியான வற்புறுத்தலினால்தான் சாத்தியமானது !

கனடாவுக்குச்சென்ற     தமது    இரண்டு    பெண்    பிள்ளைகளின் வேண்டுகோளை  ஏற்று  அங்கு   சென்றார்.    அவரது   புலப்பெயர்வு இலங்கை   தமிழ்   இலக்கிய   உலகிற்கு     பேரிழப்பாகவே   கருதப்பட்டது.

புலம்பெயர்ந்தாலும்    ஈழத்து    இலக்கிய     வளர்ச்சிக்கு   தம்மாலியன்ற ஆதரவையும்   அவர்   வழங்கத்தவறவில்லை.

அவரது     எழுத்துலகப்பிரவேச    பொன்னாண்டை     முன்னிட்டு    அவரது இலக்கிய     நண்பர்கள்  1998 இல்     கனதியான     தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளனர். கொழும்பில்     சில   மூத்த   முற்போக்கு எழுத்தாளர்களை     பாராட்டி    கௌரவிககும்    நிகழ்வை     இலங்கை முற்போக்கு    கலை    இலக்கிய     அமைப்பு    நடத்தியபொழுது    பிரேம்ஜியும் பராட்டப்பட்டார்.

இந்தத்தகவல்கள் பிரேம்ஜி பற்றிய சுருக்கமான குறிப்புகளே.

பலரதும் நூல்கள் வெளிவரவேண்டும் என்பதற்காக சங்கத்தின் மற்றும் ஒரு அமைப்பாக  எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை தொடக்கிய இவர், தனது நூலை வெளியிடுவதில் அக்கறை காண்பிக்கவில்லை. சில நூல்களுக்கு  பதிப்புரைகளும் முன்னுரைகளும் எழுதினார்.

தமிழ்நாடு வாசகர் வட்டத்தினைப்போன்று இலங்கையிலும் தொடர்ச்சியாக தமிழ் நூல்களை வெளியிடவேண்டும் என்ற சிந்தனைவயப்பட்டவராக அதே பாணியில் நூல்களின் முகப்பினையும் அமைப்பதற்காக சங்கத்தில் இணைந்திருந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் அவர்களிடம் ஆலோசனை தந்து ஓவியம் வரையச்செய்தார்.

அந்த ஓவியத்துடன்தான் மேமன் கவி, செ. யோகநாதன், காவலூர் ராசதுரை ஆகியோரின் நூல்கள் அடுத்தடுத்து வெளியாகின.

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறப்பிரதேசங்களிலும் வசித்த எழுத்தாளர்களை கூட்டுறவுப்பதிப்பகத்தில் இணைப்பதிலும் கொழும்பு தமிழ்ச்சங்கம், புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்த முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி மண்டபம் ஆகியவற்றில் மாதாந்தம் இலக்கிய கருத்தரங்குகள் நடத்துவதிலும் புதுமை இலக்கியம் இதழை தொடர்ச்சியாக வெளியிடுவதிலும் பிரேம்ஜி கடுமையாக உழைத்தார்.

இந்தப்பணிகளின்போது அவருடன் நானும் சோமகாந்தன், சிவராசா மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய ஆசிரியர்களும் இணைந்திருந்தோம். அவர்களுக்கு அரசாங்க வேலை இருந்தது. நானோ வேலையில்லாமல் அவருடன் சுற்றிக்கொண்டிருந்தேன். எனது நிலையை கவனத்தில்கொண்டு மாதாந்தம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார். எனது போக்குவரத்து செலவுகளுக்கே அந்தப்பணம் உதவியது. எனது எதிர்காலம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்த பிரேம்ஜி, வீரகேசரி பத்திரிகை ஒப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பம் கோரியிருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, என்னை அதற்கு விண்ணப்பிக்கச்சொன்னார்.

அவரே  விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் தயாரித்தும் தந்திருந்தார்.  நேர்முகப்பரீட்சைக்கு சென்றிருந்தேன். தெரிவானதன் பின்னர் அவருக்குச்சொல்வதற்காக சந்திக்கச்சென்றேன். வாழ்த்தினார். ஆனால்,  எனக்கு அந்த வேலை கிடைப்பதற்கு அவர்தான் முக்கிய காரணம் என்பது பின்னாளில் வீரகேசரி பொது முகாமையாளர் (அமரர்) எஸ். பாலச்சந்திரன் சொல்லித்தான்  எனக்குத் தெரியும்.

எதிர்காலத்தில் பத்திரிகையாளனாக வரக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பதை தீர்க்கதரிசனமாக பிரேம்ஜி தெரிந்துவைத்திருந்தமையால்தான் என்னைப்பற்றி பாலச்சந்திரனிடம் சொல்லியிருக்கிறார் என்ற தகவலை நான் அங்கிருந்து விலகிய வேளையில்தான் தெரிந்துகொண்டேன். இவ்வாறு தன்முனைப்பு இல்லாமல் பலரது வாழ்வில் விளக்கேற்றியவர்தான் பிரேம்ஜி.

சோவியத்தகவல் பிரிவு, லேக்ஹவுஸ், இலங்கை வானொலி, ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முதலானவற்றில் சில எழுத்தாளர்கள் இணைந்தமைக்கும் பிரேம்ஜிதான் பின்னணியிலிருந்திருக்கிறார் என்ற தகவலை  காலம்தாழ்த்தியே மற்றவர்களினால் நாம் அறிந்துகொண்டோம்.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உருவானவேளையில் அதன் முதல் தலைவராக யாரை நியமிப்பது என்ற ஆலோசனையை கல்வி அமைச்சு பரிசீலித்த வேளையில், பேராசிரியர் கைலாசபதியை முன்மொழிந்தவர் பிரேம்ஜிதான் என்ற தகவல் பலருக்கும் தெரியாது.

இத்தனைக்கும், கைலாசபதி அவர்கள், பிரேம்ஜி சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) ஆதரவாளர் அல்ல. கைலாஸின் நிருவாகத்திறனில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் பிரேம்ஜி.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள நிரந்தரத்தீர்வு வேண்டும் என்பதில் தீவிரமாக சிந்தித்த பிரேம்ஜி,  அரசியலில் மாற்றுக்கருத்துக்கொண்டிருந்தவர்களுடனெல்லாம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

தமிழ்த்தலைவர்களுடனும் , அரச மட்டத்தில் சிங்கள, முஸ்லிம் தலைவர்களுடனும்  சிநேகபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடன் சென்றிருந்தமையால் பிரேம்ஜியின் சாதுரியமான காய் நகர்த்தல்களை அவதானித்திருக்கின்றேன்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணத்தவறினால் நாடு பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் அவர் அந்த சந்திப்புகளின்போது தென்னிலங்கை தலைவர்களிடமும் வலியுறுத்தினார்.

ஆனால், பிரேம்ஜியின் முயற்சிகள் ” செவிடன் காதில் ஊதிய சங்காகியது.” எனினும் அவர் விரக்தியடையவில்லை. போர் தொடங்கிய பின்னர் 1983 இற்குப்பின்னரும் போராளிக்குழுக்களுடனும் அவர் பேசுவதற்கு முன்வந்தார்.

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த              இ. மு. எ.ச. வின் மாநாட்டின் பின்னர்,  விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்டத்தளபதி கிட்டுவுடனும் சந்திப்புக்கு அவர் ஒழுங்குசெய்தார்.

ஆனால், கிட்டு  இச்சந்திப்பிற்கு கவிஞர் புதுவை ரத்தினதுரையையும் மலரவனையும் அனுப்பிவிட்டு தனது வருகையை தவிர்த்துக்கொண்டார்.  நானும் மல்லிகை ஜீவாவும் பிரேம்ஜியுடன் அச்சந்திப்புக்குச்சென்றோம்.

புதுவை இரத்தினதுரையை நான் உரிமையோடு  “  மச்சான்  “  என்றும் விளிப்பதுண்டு.

 “  மச்சான்….  என்னடாப்பா… எழுத்தாளர்கள் – புத்திஜீவிகள் என்றால் போராளிகளுக்கு அலர்ஜியா…?  “ எனக்கேட்டேன்.

 “  கிட்டு ஒரு முக்கிய அலுவலாகப் போய்விட்டார். எங்களை அனுப்பினார்  “ என்று புதுவை சமாதானம் சொன்னார்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வரும்போது,   “  ஞானா… இதுவரைகாலமும்  பேனை பிடித்து எழுதிக்கொண்டிருந்தவர்களுடனும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருந்தவர்களுடனும் இனப்பிரச்சினை தொடர்பாக பேசிவந்தீர்கள்.  இனி வரும் காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகளுடன்தான் நீங்கள் பேசநேரும் என்பதற்கு இந்தச்சந்திப்பு அச்சாராமா…?  எவரும் உங்கள் புத்திமதியை கேட்கமாட்டார்கள்.  “  என்றேன்.

நல்லூரில்  அச்சந்திப்பு நடந்த இல்லம்  யாரோ ஒரு குடும்பத்திடமிருந்து விடுதலைப்புலிகள் எடுத்துக்கொண்டது.   மீண்டும்  மறுநாள் அதே இல்லத்திற்கு  காலைவேளையில் புதுவையை சந்திக்கச்சென்றேன்.   அவருடன் அமர்ந்து புட்டும் கத்தரிக்காய் குழம்பும் சாப்பிட்டேன். வெளியே வந்து கை கழுவும்போது,   அருகில் அமைந்திருந்த ஒரு அழகான வீட்டை  கவிஞர் காண்பித்து,   “  மச்சான்… நாளை அந்த வீட்டை சுவீகரிக்கின்றோம்  “  என்றார்.

அந்த வீட்டைப் பார்த்தேன். ஒரு முதிய பெண்மணி வெளிமுற்றத்தில் கொடியில்  ஈரலிப்பான உடைகளை காயப்போட்டுக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் வின்ஸர் தியேட்டரை  விடுதலைப்புலிகள் சுவீகரித்து, அங்கே அவர்களது கலை பண்பாட்டு கழகத்தின் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்ததை அறிவேன். நண்பர் புதுவையே அங்கும் முன்னின்றார்.

“  சரிதான்…. இப்படியே…. வீடுகள், தியேட்டர்கள், காணிகளை படிப்படியாக சுவீகரித்து இறுதியில் முழு யாழ்ப்பாணத்தையும் சுவீகரித்துவிடுவீர்கள் போலத் தெரிகிறது.. “ என்றேன்.

அதற்கு புதுவை,  “ மச்சான்… நீ… வந்தால்,  வந்து உன்ர வேலையை  பார்த்துக்கொண்டுபோ…? அதிகம் பேசவேண்டாம்.. “ என்றார்.

அவரது கோபத்தை நான் நன்கு அறிவேன்.

இது பற்றி, பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரேம்ஜியிடம் சொன்னபோது,  அவர் அமைதியாக சிரித்துக்கொண்டு                               “  பொறுத்திருந்து  நடக்கப்போவதைப் பாரும்.  புதுவை சொன்னதுபோல் நாம் இனி எமது வேலைகளை கவனிப்போம்.”   என்றார்.

போர் முடிந்த பின்னர், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் புதுவையும் இணைந்துவிட்டார்.

இலக்கிய நண்பர் நடேசனுடன் 2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சென்று போர் நிகழ்ந்த இடங்களையும்  பார்த்துவிட்டு,  போரினால் பாதிக்கப்பட்ட எமது இலங்கை மாணர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவிட்டு, திருகோணமலை உவர்மலையில் அவ்வேளையில் தங்கியிருந்த புதுவை ரத்தினதுரையின் மனைவி றஞ்சி மற்றும் மகன்மாரையும் பார்க்கச்சென்றேன்.

திரும்பி கொழும்பு வந்து புதுவையை பெரிதும் விரும்பும் பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கும் மல்லிகை ஜீவாவுக்கும் தகவல் சொல்லிவிட்டு, அவுஸ்திரேலியா வந்துவிட்டேன்.

இங்கிருந்து கனடாவிலிருந்த  பிரேம்ஜிக்கும் புதுவையின் குடும்பத்தைப்  பற்றிய தகவல் சொன்னேன்.

 “ புதுவையையும் அரசாங்கம் சுவீகரித்துவிட்டது  “  என்று இரத்தினச்சுருக்கமாக அங்கதச்சுவையுடன் அமைதியாக அவர் பதில் தந்தார்.

அரசால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு அரசுதானே பொறுப்புக்கூறல் வேண்டும்.  பொறுப்புக் கூறாத பட்சத்தில் அரசே அவர்களை சுவீகரித்துவிட்டது என்றுதானே  அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் பிரேம்ஜியின் அமைதியான கூற்றில்   உறைந்திருந்த மறைபொருள்.

புதுவை அன்று   எனக்குச் சொன்ன சுவீகரிப்புக்கும் பிரேம்ஜி பின்னர்  எனக்குச்  சொன்ன சுவீகரிப்புக்கும் இடையிலிருக்கும்  வித்தியாசத்தை இதனை படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

இது இவ்விதமிருக்க,  போர் முடிந்தபின்னர் புதுவை இரத்தினதுரையின் மூத்த சகோதரியார் தமது கணவருடன் சென்று, அச்சமயமும் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து, தனது தம்பியை விடுவித்து தருமாறு கேட்டிருந்தார்.  ஏற்கனவே, கவிஞரைப்போன்று சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பினைச்சேர்ந்த தயா மாஸ்டரையும் விடுவிக்க தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது அவரும் விடுதலையாகிவந்து குடும்பத்தினருடன் இருக்கிறார். அதுபோன்று உங்கள் தம்பி, கவிஞர் விடயத்திலும் தன்னால் முடிந்ததை செய்வேன் என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போதைய அரசிலும் அமைச்சாராக பதவியிலிருக்கிறார்.

காணாமல் போனவர்களை தேடும் உறவுகளின் அறப்போராட்டம்   இரண்டு வருடங்களையும் கடந்து தொடர்ந்துவருகிறது.  எனினும் இதனைக்காண்பதற்கு எமது நண்பர் பிரேம்ஜி இன்று எம்மத்தியில் இல்லை.

   பிரேம்ஜியின் இலக்கிய, அரசியல், ஊடகப்பணிகள் பலவற்றினை அருகிலேயே இருந்து அவதானித்தமையினால் நானும் அவரிடமிருந்து நிறையக்கற்றுக்கொண்டேன்.

தன்முனைப்பு அற்ற அடக்கமும் நிதானமும் அனுபவத்தால் வந்த தீர்க்கதரிசனமும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எவரையும் நேசிக்கும் இயல்புகளும் பிரேம்ஜியிடம் குடியிருந்த அருங்குணங்கள்.

அவருடன் கருத்தியல் ரீதியில் முரண்படுபவர்களும் பிரேம்ஜியை நெகிழ்ச்சியான மனிதர் என்றே வர்ணித்திருக்கின்றனர்.

அவர் கனடாவுக்கு புலம் பெயர்ந்தமை இ.மு. எ. ச.வுக்கு நேர்ந்த பாரிய இழப்பு. அதனை அவருக்குப்பின்னர் வேறு எவராலும் மீளக்கட்டி எழுப்ப முடியாது போயிற்று என்பதும் துர்ப்பாக்கியம்தான்.

பிரேம்ஜிக்கு மிகவும் பிடித்தமானவர்கள் மகாத்மா காந்தி, கார்ல் மார்க்ஸ், லெனின்,  அம்பேத்கார், காமராஜர்.

இவர்களில் கார்ல்மார்க்ஸ் தமது பாடசாலைப்பருவத்தில் எழுதியதாக கூறப்படும் ஒரு பிரபல வாசகம் பற்றி இங்கே நினைவூட்டலாம்.

“  ஒரு நபர் தனக்காக மட்டும்  உழைத்தால் , சில வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால்,   உண்மையான மனிதராக முடியாது”

பிரேம்ஜி ஞானசுந்தரன்  தனக்காக மாத்திரம் இலக்கிய மற்றும் பொது வாழ்வில்  ஈடுபடவில்லை. தனது இருப்பை –  அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக  பணியாற்றவில்லை.

அதனால் உண்மையான மனிதராக இறுதிவரையில் திகழ்ந்தார்.

அவரது எழுத்துக்கள் என்னை பாதிக்கவில்லை. ஆனால் அவரது இயல்புகள் என்னையும் பாதித்திருக்கிறது.  

அதனால், அவர் மறைந்திருந்தாலும்,   என்னுடன்  தொடர்ந்து வருகிறார்.

                                            —0—

letchumananm@gmail.com

Series Navigationபயணம் மாறிப் போச்சுஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *