மொழிபெயர்ப்புக் கவிதைகள்

author
0 minutes, 28 seconds Read
This entry is part 15 of 15 in the series 13 டிசம்பர் 2020

 

 

மூலம்: ஆங்கிலம் 

தமிழில் : ட்டி. ஆர். நடராஜன் 

இனிமை 

பாப் ஹிகாக் 

நான் நடக்கையில்

ஒரு ஆரஞ்சை உரிப்பது என் வழக்கம்.

ஃப்ளோரிடாவின் மணத்தை நினைவூட்டும் தோலிகளை

என் கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு.

சிலநேரங்களில் நாற்சந்தியில் நிற்கும் 

காரை நெருங்கி ஜன்னலைத் தட்டுவேன். 

பச்சை விளக்குக்காக ஆவலுடன் காத்திருக்கும் 

ஓட்டுனரின் கவனத்தைக் கலைக்கும் விதமாய்.

பெரும்பாலும் கிடைப்பது  திட்டுகள்.

மறுதலிப்புகள்.

உதாசீனப்படுத்துதல்கள் – 

என்னை மறுக்கும் கடவுளைப் போல்  – 

ஆனால் அன்று நான் என் கையால் 

ஜன்னலைச் சுரண்டிய போது  

அவள் ஜன்னலைக் கீழே இறக்கி –  

ஒரு பிரகாசமான வானத்தை நினைவூட்டும் வகையில் – 

ஆரஞ்சுச் சுளைகளை என் முன்னேயே வாங்கித் தின்றாள். 

என் கூடச் சேர்ந்து.

எங்களின் சாதாரண வாழ்க்கையின் .

ஓர் அமரத்துவ பந்தத்தின் தருணம் அது.

எங்களை இணைத்த நீண்ட கயிறு ! 

வரவிருக்கும் மற்ற நாள்களில் 

இந்த இன்பம் காத்திருக்குமோ தெரியாது – 

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு

கொஞ்சம் கொஞ்சமாய் உலகைத் தின்றோம். 

சூனியத்தை  நிரப்பும் சூரியக் கதிர்களின் வெளிச்சத்தில்

ஒரு  சிறிய கூரான தருணத்தில் 

எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் காதலித்தோம். 

.என்னிடம் ஒரு பரிசு இருந்தது.

அதை ஏற்றுக் கொள்ளும் விருப்பம் அவளிடம் இருந்தது. 

நாங்கள் முழுமையுற்றவர்களாயிருந்தோம்.

லேசாகப் புழுதி படிந்த சாலையில்

எங்கள் இருப்பை உணர வைக்கும்

மெல்லிய சந்தோஷத்தை  நோக்கிச் சென்றோம்.     . 

ஸப்ரீனா  இஸ்லாம் கவிதைகள் 

ஒதுக்கப்பட்ட சித்திரம் 

ஒதுக்கப்பட்டதல்ல.

என் துயரம் என்பது

என் வலியல்ல.

என் தாய் கணிதவியலாளர்.

ஆகவே நான் 

என் துக்கத்தைக் கணக்கெடுக்க முயன்றேன்.

என் தந்தை ஒரு பொறியாளர்.

ஆகவே நான் 

என் துக்கத்தை

அடைக்க ஒரு பெட்டியைத் தேடினேன்.

அதன் கூடவே ஒரு படுக்கையையும்,

என் துக்கத்தைக் கிடத்த. 

எழுத்து என் துக்கத்தில் குறுக்கிட் டு

நிர்ப்பந்திக்கிறது:

அர்த்தமற்றதைப் பேசச் சொல்லி.

2

எல்லாவற்றையும் நேசிப்பதை 

நிறுத்தி விட முடியுமா?

ஆந்தையை

பருந்தை

நான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் 

என் தாயாகப் பார்க்க.

நள்ளிரவினால் உருவாக்கப்பட்ட 

இதயமாக  இருக்க.

3.

இவ்வளவு நேசிப்புக்கும் 

பின்புலம்  

பறவைகளுக்குள் வாழ்வதே 

.

இந்த இதயம் 

ஒளி மங்குவதைக் காணக் 

காத்திருக்கிறேன்.

இல்லாவிடில் அது மண்டியிடுவதையாவது.

இந்த இதயம் என்னுள் இல்லை;

மாறாக 

அதனுள் நான்.

Series Navigationஅமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *