என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

This entry is part 9 of 15 in the series 13 டிசம்பர் 2020

 

குரு அரவிந்தன்

மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். 

குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள்.

‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி.

‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை நான்தான் கவனமாய் வெச்சிருப்பேன்’ ஒரு மனநோயாளிபோல வீரிட்டவள், மறுகணம் குழந்தையைத் தனக்குள் இறுகவணைத்தபடி மௌனமானாள். பொதுவாகப் பிரசவம் முடிந்ததும் சில தாய்மார் இப்படியான ‘போஸ்ட்பாட்டும்’ மனநோயால் பாதிக்கப்படுவதுண்டு என்பதைத் தாதி அறிந்தேயிருந்தாள்.

‘என்னம்மா, என்னாச்சு..?’ என்ற தாதியின் ஆதரவான கேள்விக்கு, வேதனை தாங்காது உடைந்து போயிருந்தவள், அப்படியே கொட்டித் தீர்த்தாள்.

என்றுமில்லாதவாறு அதிகாலையில் செல்போன் சிணுங்கிது.

படுக்கையில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தேன். அவருடைய செல்போன்தான் அழைத்தது. அவரோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கத்தைக் கெடுக்காமல் செல்போனை எடுத்துப் பார்த்தேன். மருத்துவமனையில் இருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது.

இரண்டு நாள் விடுப்பு எடுத்திருந்ததால், அவர் ஹாயாய் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்புவதா இல்லையா என்ற போராட்டம் ஒரு கணம் என்னை தடுத்து நிறுத்தியது. ஏன் இந்த நேரம் அழைக்கிறார்கள், ஆபத்தில் இருக்கும் ஏதோ ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியது மருத்துவரின் கடமை அல்லவா, பரவாயில்லை அவரைத் தூக்கத்தால் எழுப்பு என்று மனச்சாட்சி சொன்னது.

அவரை எழுப்பிச் செல்போனைக் கொடுத்தேன். சற்று நேரம் பேசிவிட்டு ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். நான் எதுவும் சொல்லவில்லை. வேலை வேலை என்று அலையும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் நான்தான் விடுப்பு எடுக்கும்படி வற்புறுத்தி இருந்தேன். சங்கடமான ஒரு சூழ்நிலையில் அவர் இருந்தார்.

‘என்ன?’ என்றேன் ஒற்றைச் சொல்லில்.

‘அவசரமாய் வரச் சொல்றாங்க மறுக்கமுடியலை, வர்றேன் என்று சொல்லிட்டேன்.’ பரிதாபமாக என்னைப் பார்த்தார்.

சட்டென்று கோபமும் எரிச்சலும் வந்தது. ஒருநாள்கூட ஓய்வெடுத்துக் குடும்பத்தோடு இருக்க முடியாமல் அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது. 

அவர் என்னுடைய பதிலுக்காகக் காத்திருந்தார், அதுவே எனக்கு எரிச்சலை மேலும் கிளப்பிவிட்டது. காரணம், முடிவை அவர்மட்டும் எடுத்துக் கொள்வார் நான் அதற்கு மேலும் கீழுமாய் தலை அசைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேறு..!

‘அதுதான் வர்றேன்னு சொல்லீட்டிங்களே, அப்புறம் ஏன் என்னைப் பார்க்கிறீங்க.. போறதுதானே..?’

‘உண்மையாவா, போகட்டா..?’ அவர் என்னுடைய கோபத்தைக் கணக்கெடுக்காமல் ‘நீயொரு அதிசயப்பிறவியெடி’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார். அவருக்குத் தெரியும் என்னுடைய கோபத்தின் காலம் ரொம்பவே குறுகியதென்று!

ஆற்றாமையால் அருகே வந்த அவருடைய தோளில் தலைசாய்த்து விம்மினேன். கொஞ்ச நாட்களாக எதிலுமே பிடிப்பில்லாத மாதிரியான உணர்வு என்னை வதைத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களாவது அவர் என்கூட இருப்பார் என்ற மகிழ்ச்சியையும் இந்த செல்போன் செய்தி கெடுத்துவிட்டிருந்தது.

‘சொறிடா..!’ என்று ஆதரவாய்த் தலையை வருடித் தேற்றினார்.

‘என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!’ என்று சொல்லி குனிந்து வயிற்றிலே ஒரு முத்தம் தந்தார். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதால்தான் எனக்கு அவரது அருகாமை தேவைப்பட்டது, இப்படிச் சின்னச் சின்ன ஆசைகள், அதனால்தான் இரண்டு நாளாவது ஓய்வெடுத்து எங்களோடு இருங்களேன் என்று கேட்டேன். அந்த சந்தோஷத்தைகூட அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அவர் கிளம்பிய போது ஓடிவந்து காபியை நீட்டினேன். ‘இந்தாபார் நேரத்திற்கு நேரம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கோ, அப்புறம் அப்பா தன்னைக் கவனிக்கலை என்று என்னோட செல்லக்கண்ணன் என்மேல குற்றம் சாட்டக்கூடாது, மீனுக்குட்டியோட சண்டை போடாதே, குழந்தைங்க அப்படித்தான் இருப்பாங்க, அவங்களை நல்ல பிரசைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது, புரியுதா?’ அவர் சொன்னதைக் கிரகித்ததுபோல, வழமைபோல முகத்திலே புன்சிரிப்பை வரவழைத்து, தலையசைத்து வைத்தேன்.

மீனுக்குட்டி தூக்கத்தில் இருந்தாள், அருகே சென்று நெற்றியில் முத்தம் ஒன்று கொடுத்து விட்டு சற்று நேரம் அவளையே பார்த்தபடி நின்றார். உணர்வுகளைத் தனக்குள்ளே விதைத்து விட்டு, வெளியே எதையும் காட்டிக் கொள்ளாதவர்போல் கிளம்பினார்.

அவரை, அதாவது டாக்டர் கிரிதரனைத் திருமணம் செய்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பெற்ரோரின் விருப்பப்படிதான் இந்தத் திருமணம் நடந்தது. மூத்தவள் பெண், மீனாட்சி. இப்பொழுது வயிற்றிலே இருப்பது ஆண்பிள்ளை என்று உறுதிப் படுத்தியிருக்கிறார்கள். அவனுக்கு என்ன பெயர் வைப்பது என்றுதான் இருவரும் தினமும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தோம்.

‘ஏன்டி அவரைப் போகவேண்டாம் என்று சொல்லி உன்னாலே நிற்பாட்ட முடியலையா?’ அம்மா ஆவேசப்பட்டாள்.

டாக்டர் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று கட்டி வைத்ததும் இவர்கள்தான். குடும்ப அந்தஸ்து உயரவேண்டுமானால் ஒரு டாக்டரைத்தான் கட்டவேண்டும் என்று திரும்பத்திரும்ப அவளது மனதில் ஆசையைப் புகுத்தியதும் இவர்கள்தான். இப்போ யதார்த்தத்தை புரிந்து கொண்டதால் யாரை நோவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

‘தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்ற நினைவுகூட இல்லாமல் இந்த மனுஷனுக்கு அப்படி என்ன வேலைவேண்டிக் கிடக்கு..?’ அம்மா சமையல் அறைக்குள் முணுமுணுத்தபடி பாத்திரம் கழுவும் ஓசையில் அம்மாவின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

‘இப்ப அவரை ஏன் கோவிக்கிறீங்க..?’

‘பா..ர்..ரா.. புருஷனைப் பற்றிச் சொன்னதும் கோபம் பொத்திக் கொண்டு வருது’ என்றாள் எரிச்சல் தாங்க முடியாமல் அம்மா.

‘டாக்டர் என்றால் இப்படித்தான் இருப்பாங்கம்மா, தெரிஞ்சுதானே கட்டிவெச்சீங்க’ குத்திக்காட்டினாள் நிரு.

‘அதுக்கு இந்தா அந்தா என்று வாயும் வயிறுமா இருக்கிற உன்னை இப்படித் தனிய விட்டிட்டுப் போவாங்களா’

‘அவங்க அவங்க தங்க கடமையைத்தானே செய்யிறாங்க, இதிலே கோபப்பட என்ன இருக்கு?’

‘என்னவோ புருஷனும் பெண்டாட்டியும் பட்டபாடு, எனக்கேன் தேவையில்லாத வேலை..!’ அம்மா அலுத்துக் கொண்டாள்.

அம்மாவின் பயம் புரிந்தது, எந்த நேரமும் ‘லேபர்பெயின்’ வரலாம். அடிக்கடி அம்மாவைச் சமாதானப் படுத்தவேண்டியிருந்தது.

அவருக்கு வீட்டுக்கு வரமுடியாத நிலை. இந்தா அந்தா என்று கடந்த ஒரு வாரமாக செல்போனில்தான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இன்று அவரிடம் இருந்து செய்தி எதுவும் இதுவரை வரவில்லையே என்ற கவலையில் செல்போனில் அழைத்தேன்.

‘என்னாச்சு ஏன் கோல்பண்ணல..!’

‘அதுவா, எதிர்பாராமல் நிறைய பேர் இந்த கொரோனா வைரஸ்ஸால பாதிக்கப் பட்டிருக்கிறாங்க, என்ன செய்யிறதென்றே தெரியலை. அதனாலே மாறிமாறி ஒவ்வொருத்தராய்ப் பார்க்க வேண்டி வந்திடிச்சு. டாக்ரேஸ் நாங்க இரண்டு மூன்று பேர்தான் எல்லோரையும் சமாளிக்க வேண்டியிருக்கு..!’

‘தொற்று நோய் என்றால் நீங்க முதல்ல கவனமாய் இருங்க, என்னங்க, நீங்க சாப்பிட்டீங்களா..?’

‘ஆமா கன்டீன்ல எடுத்து சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா..?’

‘சாப்பிட்டேன், வேணுமின்னா நான் இரவு சாப்பாடு கொண்டு வந்துதரட்டா..?’

‘வேணாம்மா, இந்த கொரோனா வைரஸ் தொற்றக்கூடியது. இதற்கு இன்னமும் மருந்தே கண்டு பிடிக்கலை, ஆனபடியால் வெளியே எங்கேயும் போகவேணாம்’

‘காலையில வந்திடுவீங்கல்லே..!’

‘வந்திடுவேன், நல்லாப் படுத்துத் தூங்கு, இந்த நேரத்தில உனக்கு நல்ல தூக்கம் அவசியம், மாத்திரைகள் எல்லாம் சொன்னபடி எடுக்கணும், புரியுதா..?’

‘ம்..ம்.. புரியுது..!’

‘மீனுக்குட்டி என்ன செய்யிறா?’

‘அப்பா எப்ப வருவாருண்னு வாசலைப் பார்த்திட்டிருக்கா, உங்களை ஒன்று கேட்டால் கோபிச்சுக்க மாட்டிங்களே..?’

‘என்னம்மா, என்ன சொல்லு..?’

‘உங்களை ஒருக்காப் பார்க்கணும்போல இருக்கு, ஒருக்கால் வந்திட்டுப் போவிங்களா?’

‘இத்தனை வருஷமாய் பார்த்திட்டுத்தானே இருக்கே, அப்புறம் என்ன திடீரென இந்த ஆசை’

‘இல்லை, மீனுக்குட்டி அப்பா எங்கேன்னு துளைச்செடுக்கிறா, ஒருக்கா என்றாலும் வந்து முகத்தைக் காட்டிட்டுப் போங்களேன்.’

மறுபக்கத்தில் அமைதி நிலவியது.

‘என்ன வீட்டை வர்றத்திற்கு யோசிக்கிறீங்களா?’

‘இல்லையில்லை, வர்றேன், ஆனால்..!’

‘ஆனால் என்ன சொல்லுங்க..?’

‘கொரோனா வைரஸ் பற்றி உனக்குத் தெரியும்தானே, காற்றிலையும் பரவுது, தொட்டாலும் பரவுது அதனாலே அருகே வந்தால் பேராபத்து, அதுவும் நீ கர்ப்பிணியாய் இருக்கும் போது வேண்டவே வேண்டாம். உனக்கு மட்டுமல்ல, நம்ம குழந்தைங்களுக்கும் தொற்றிவிடும்.’

‘மீனு படுக்கப் போகும் போதும், காலையில் எழுந்ததும் உங்களைத்தான் தேடுறாள், நான் தனிய என்ன செய்ய..!’ அவள் விசும்பும் ஓசை இவனைப் பாதித்தது.

‘சரி, நான் வர்றேன் ஆனால் வாசல்லதான் நிற்பேன், உள்ளே வரமாட்டேன், நீயும் மீனுவும் உள்ளேதான் நிற்கணும், கிட்ட வரக்கூடாது, புரியுதா?’

‘என்ன நீங்க இப்படி காண்டிஷன் போடுறீங்க, எங்களைப் பார்க்கணும் என்று உங்களுக்குத் தோணவே இல்லையா..?’

‘எனக்கு மட்டும் ஆசையில்லையா, இப்ப இருக்கிற நிலைமை அப்படி..!’

வீட்டைவிட்டு வெளியே திரிய வேண்டாம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அனேகமானவர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். பாடசாலைகள், கடைகள் பொதுவிடங்கள் எல்லாம் மூடப்பட்டதால், வீதிகள் வெறிச்சிட்டுக் கிடந்தன.

சொன்ன நேரத்திற்கு டாக்டர் கிரி வந்தார். வீதியிலேயே வண்டியை நிறுத்தி விட்டு மெல்ல நடந்து வெளி வாசல்வரை வந்தார்.

இரும்புகேற்ருக்கு வெளியே வீதியில் நின்றபடி அவர்களுடன் செல்போனில் பேசினார். குரல் உடைந்து போயிருந்தது. மீனுக்குட்டி இங்கிருந்தே ஆர்வமாய்க் கதைத்தாள். வாயையும் மூக்கையும் மூடி அப்பா கவசம் அணிந்திருந்தது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை.

ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிருக்காது, அங்கிருந்தபடியே ‘போயிட்டு வர்றேன்’ என்று அவர் கையசைத்து விடைபெற்றபோது, திடீரென ‘அப்பா’ என்று குரல் கொடுத்த மீனுக்குட்டி, என்ன நினைத்தாளோ, பாய்ந்து அவரை நோக்கி ஓடினாள்.

வேறு வழியில்லாமல், மீனுக்குட்டியைத் துரத்திப் பிடித்துப் பிடிவாதமாய் உள்ளே இழுத்துச் சென்றாள் நிருஜா. அன்று முழுவதும் மீனுக்குட்டி அழுதுகொண்டே இருந்தாள். சூழ்நிலை மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. கணவன் வழமைபோல இல்லை என்பதைச் அந்தச் சொற்ப நேரத்திலும் சட்டென்று அவதானித்தாள். அவன் அருகே இல்லாத தனிமை கையுடைந்தது போலிருந்தது. இயலாமையில் செய்வதறியாது, கையில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாய் அவள் குழம்பிய நிலையில் வீட்டிற்குள் உறைந்து போயிருந்தாள்.

‘இப்படி ஒரு வைரஸ் தொற்று வரும் என்று யாருமே எதிர்பார்கலை, நோயாளிகளைக் காப்பாற்ற வந்த உங்களையே இந்த ஆட்கொல்லி கொரோனா பிடிச்சிட்டுதே டாக்டர், இதற்கு மருந்தே இல்லையா?’ டாக்டர் கிரி இரவு பகல் பாராது உழைத்ததை அருகே நின்று பார்த்த நர்ஸ் புலம்பினாள்.

நுரையீரல் முற்றாகப் பாதிக்ப்பட்டிருந்ததால், அவரால் இயங்கமுடியவில்லை. ஆனாலும் அருகே இருந்த மேசையைக் காட்டினார். அதில் இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள். அவருடைய கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. வாசித்துப் பார்த்தாள்.

‘இதற்கு மருந்து இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. உறவுகளைக்கூடக் கடைசிநேரத்திலும் அருகே வராமல் தடுக்கிற இந்த வைரஸ்சைப் பரவாமல் தடுக்க முடியும். காற்றிலும் பரவக்கூடியது. நோயாளியையோ அவர் பாவித்ததையோ தொட்டாலும் பரவக்கூடியது. முகத்திற்கும், கையுக்கும் உறை பாவியுங்கள், தொற்றினால் இரண்டு கிழமைக்குத்தான் இதனால் உயிர்வாழமுடியும், எனவே தொற்றாமல் இருக்கக் கைகளை அடிக்கடி சோப் போட்டு நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள், எட்ட நில்லுங்கள், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், அம்மை நோய்க்கு எப்படி தனிமைப்படுத்தப் பட்டோமோ அதுபேலவாவது இரண்டு வாரங்கள் தனிமைப்படுங்கள், தொண்டை வரட்சியடையாமல் நன்றாகத் தண்ணீர் அருந்துங்கள், பொது இடங்களில் கூடாதீர்கள், இதற்கான மருந்துகள் வரும்வரையாவது காத்திருங்கள். இப்படிப் பல விடயங்களைக் குறிப்பிட்டுக் கடைசி நேரத்திலும் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். கடைசியாக ஒரு வரியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ‘இந்த நாட்டின் ஆரோக்கியம் உங்கள் கையில்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றுங்கள்..!’

பிரசவவலியில் துடித்த நிருவை ஆம்புலன்ஸில் மகப்பேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். 

அலறி அடித்துக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிட்டு, எதிர்த்தால்போல வைத்தியசாலையில் இருந்து வந்த பிரேதவண்டி ஒன்று தெருவின் கரையோரம் நிறுத்தப்பட்டு காத்திருந்து, ஆம்புலன்ஸ் வண்டி கடந்து சென்றதும் மயானத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

………………………………………………………………

Series Navigationவார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    கொரோனா காலத்தில் நாம் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை உருக்கமாக சொல்லியிருக்கிறார் குரு.அரவிந்தன் , ஒரே குடும்பத்தில் பிறப்பும் இறப்பும் உடன் நிகழ்வாக எடுதுரைத்தவிதம் மனதைப் பிசைகிறது.கொரோனாகாலத்தில் மருத்துவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பத்த்தாரும் மகத்தான தியாகங்களை மேற்கொள்ளுகிறார்கள் . அதை நெகிழ்வாகச் சொல்லியிருக்கிறார்.வாழ்த்துகள் அரவிந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *