short story
எஸ்.சங்கரநாராயணன்
•••
ஓர் அலுவலகத்தின் வெவ்வேறு ஊழியர்கள் போல, அல்லது அதிகாரிகள் போல அவர்கள் தங்கள் வீட்டிலேயே நடமாடினார்கள்.
•••
கல்யாணம் ஆகி வெகுகாலம் கழித்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளை ஆண்பிள்ளை. பழனி வரை பாத யாத்திரை போய்ப் பெற்றெடுத்த பிள்ளை. தண்டாயுதபாணி என்றே குழந்தைக்குப் பெயர் வைத்தார்கள். தங்கள் வசதிக்கு மீறியே அவனை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். பெரிய பள்ளியில் நல்ல படிப்பு படிக்க வைத்தார்கள். இன்ஜினியரிங் வரை அவன் நன்றாகவும் படித்தான். நல்ல கம்பெனி ஒன்றில் வேலையும் கிடைத்தபோது பெற்றவர்களின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உயரே உயரே போக வேண்டும் என்று அவனுக்கு ஒரு வெறி இருந்தது. அந்த வயதுக்கு அது ஓர் அழகுதான்.
வேலைக்கு வந்தவுடன் ஒரு இருசக்கர வாகனம் வாங்கிக் கொண்டான் தண்டபாணி. கூடிய விரைவில் கார் கூட வாங்கி விடலாம்… அவன் ஆசைகள் சரி, இந்த வேகம் மலைப்பாய் இருந்தது. எதையோ நோக்கி இத்தனை வேகமாய் அவன் ஓடும் அவசியம் என்ன? எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள் அவர்கள். தன் நாற்பத்தியைந்து வயது வரை அப்பா சம்பாத்தியம் என்றால் இந்த அடுக்கக வீடு. மற்றபடி அவரது பெற்றோருக்கும் மாதாமாதம் எதாவது பணம் அனுப்ப வேண்டியிருந்தது அவருக்கு. அதை அவர் முகஞ் சுளிக்காமல் செய்தார்.
தண்டபாணி தன் சம்பளம் பெற்றவர்களுக்குத் தேவை இல்லை, என நினைத்தான் போல. அவர்களைப் பற்றி அவன் கவலைப்படத் தேவை இல்லை, என்றே அவர்கள் அவனை வளர்த்திருந்தார்கள். அத்தனை செல்லம். தவங் கிடந்து பெற்ற பிள்ளை. வாராது வந்த மாமழை. பெற்றவர்கள் மேல் அவனுக்கு அன்பு இருந்ததா? இன்னும் வசதியான இடத்தில் தான் பிறந்திருக்கலாம் என்று அவனுள் யோசனை ஓடியதோ என்னவோ. அதற்கு அவர்கள், பெற்றவர்கள் என்ன செய்ய முடியும்?
இத்தனை உயர்ந்த விலையில் அவனது உடைகள் அவர்களைத் திகைக்க வைத்தன. மலிவான எதுவும் தரமானது அல்ல என நினைக்கிறவனாய் இருந்தான். இந்தமாதிரி வெளி அலங்காரங்கள், மோஸ்தர்கள் தனது அந்தஸ்தாக அவன் கொண்டாடினான். என்னிடம் உள்ளதைப் போல சாதனங்கள் வேறு யாரிடமும் இல்லை, என அவன் பெருமை கொண்டாட விரும்பினான். கையில் மோதிரமும் கழுத்தில் தங்கச் சங்கிலியும் ஆட பைக்கில் அமர்ந்து அவன் வேலைக்குப் போனான். எப்போதும் ‘சென்ட்’ அடித்துக்கொண்டு வாசனையாய் இருந்தான். என் உலகம் வேறு, அது உயர்ந்தது என்கிற பாவனைகள் கொண்டாடினான்.
திறமையும் இருந்தது. அதை மறுக்க முடியாது. முன்னேற வேண்டும் என்கிற அவனது துடிப்பு, கம்பெனி வளர அது தேவையாய் இருந்தது. கிடுகிடுவென்று அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. மற்ற எல்லாரையும் விட ஐந்து ஆறு வருடத்தில் அவன் முதலாளிக்கு நெருக்கமாகி விட்டான். கம்பெனி விவகாரங்களில் அவனைக் கேட்காமல் அவர் எந்த முடிவும் எடுப்பது இல்லை. கம்பெனியில் அவன் வைத்தது சட்டமாகி விட்டது.
சியாமளா நல்ல அழகி. அவள் நிற்பதும் நடப்பதுமே அதிசயம் போல எல்லாரும் உணர்ந்தார்கள். முதலாளியின் மகள். எப்பவாவது அவள் கம்பெனிக்கு வருவாள். பெண் மேல் உயிரையே வைத்திருந்தார் முதலாளி. ஒரே பெண் அவருக்கு. தண்டபாணியின் கணக்குகள் பொய்க்கவில்லை. அவனால் சுலபமாக சியாமளாவை நெருங்க முடிந்தது. முதலாளியைப் பார்க்க என்று அவர்வீட்டுக்கே கூட தண்டபாணி போய்வந்தான். சதுரங்க ஆட்டத்தின் காய் நகர்த்தல்கள் போல.
தண்டபாணியின் வீட்டு வாசலில் முதலாளியின் கார் வந்து நின்றபோது பெற்றவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “வாங்க வாங்க” என்று அவர்கள் வாசலுக்கே ஓடிவந்தார்கள். செய்தி நல்ல செய்திதான். அவருக்கு, முதலாளிக்கு தன் பெண்ணை தண்டபாணிக்குத் தருவதில் மறுப்பு ஏதும் இல்லை. “எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல துடிப்பான பையன் அவன். இனி என் கம்பெனியையும் அவனிடமே விட்டுறலாம்னு இருக்கு எனக்கு… எனக்கும் ஓய்வு எடுக்கலாம்னு தோணிட்டதே…” என்று புன்னகைத்தார் அவர்.
சிறிய அடுக்ககம் அது. இங்கே வந்து சியாமளா தங்க மாட்டாள், அது அவர்களுக்குத் தெரியும். தனியே வீடு பார்த்துக் கொள்வான் அவன், தண்டபாணி… என பெற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால் சியாமளா தன் வீட்டின் வசதிகளை இழக்கத் தயாராய் இல்லை. மாமனார் வீட்டில், வீட்டோடு மாப்பிள்ளையாய்… இது சரியா என்று பெற்றவர்கள் யோசித்தார்கள். ஆனால் தண்டபாணி யோசிக்கவில்லை. அவன் வெற்றி மிதப்பில் இருந்தாற் போலிருந்தது. எதையும் கேட்டுக் கொள்கிற நிலையில் அவன் இல்லை. எப்போதுமே இல்லை. இப்போது காதலும் வசதிகளும் ஒருசேர அனுபவிக்கக் கிடைக்கிற நேரம். அவர்களால் என்ன சொல்ல முடியும்? பணம் என்பது பெரும்பாலும் தூண்டில் இரை எனவே ஆகிப் போகிறது.
வாரம் ஒருமுறை அல்லது விசேஷ நாட்கள் என்று திருவாளர் தண்டபாணி அப்பா அம்மாவைப் பார்க்க வந்து போனார். அவர் மாத்திரம் வருவார். மருமகளுக்கு எத்தனை வேலையோ. எல்லா வேலையும் முக்கியம் அவளுக்கு, மாமனார் மாமியாரைப் பார்க்க வருவதைத் தவிர. அதாவது தான் நிற்கிற சபையில் தான் கொண்டாடப் பட வேண்டும். அது முக்கியம் அவளுக்கு. தான் கொண்டாடப் படாத பட்சம் அங்கே அவளுக்கு வேலை இல்லை. இதுகுறித்து விசனப்பட ஏதும் இல்லை. தவிரவும் இக்கால கட்டங்களில் அவர்கள் தண்டபாணியிடம் பெரிய எதிர்பார்ப்புகளைக் கைவிட்டிருந்தார்கள். “ஹ்ம்…” என்று பெருமூச்சு விட்டார் அப்பா. “நம்ம பிள்ளை, இனி நமக்கு இல்லடி” என்றார் மனைவியிடம்.
தண்டபாணிக்குக் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அழகான பையன். “பரவாயில்லை. என்னைப் போல இவனுக்குக் குழந்தை தாமதம் ஆகவில்லை” என்று சிரித்துக் கொண்டார் பெரியவர். தண்டபாணியின் அப்பா பெயர் முத்துராமன். கர்நாடகமான பெயர். விஷால் என்று பெயர் வைத்தார்கள் குழந்தைக்கு. இது குறித்து ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை.
குழந்தையைப் பார்க்க என்று முத்துராமனுக்கும் செண்பகத்துக்கும் ஆசை மனம்நிறைய உண்டு. எப்பவாவது தண்டபாணி குழந்தையைக் கொண்டுவந்து காட்டினால்தான் உண்டு. சியாமளாவின் அப்பாவுக்கு அவர்கள்மேல் சிறிது மரியாதை இருந்தது. பிள்ளையை நல்லபடி வளர்த்து ஆளாக்கி யிருக்கிறார்கள், என அவர் பிரிய முகம் காட்டுவார். “நீங்களும் கூட அங்க எங்ககூட வந்திறலாமே?” என்று தன்மையாய்த்தான் சொன்னார். ஆனால் மருமகள் சியாமளா வேத்து முகம் காட்டுவாள், என்றிருந்தது. தவிர நம்ம பையன், தண்டபாணி அதைப் பற்றி பிரஸ்தாபிக்கவே இல்லை. வயதான காலத்தில் பெரியவர்களுக்கு எது மகிழ்ச்சி? பேரன் பேத்திகளோடு பேசிச் சிரித்து விளையாடுவது தானே? எல்லாத்துக்கும் கொடுப்பினை வேண்டும். அவர்களுக்கு அது இல்லை.
சம்பந்தி இறந்து போனதும் கிட்டத்தட்ட தொடர்பு அறுந்தே விட்டது என்று சொல்லலாம். விஷால் ‘சிபிஎஸ்ஈ’ பள்ளியில் படித்தான். தினசரி அவனைக் காரில் கொண்டுவிட தனி கார், தனி டிரைவர். இக்காலங்களில் கம்பெனி பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. தண்டபாணிக்குப் பிள்ளையை கவனிக்க நேரம் இல்லை. சியாமளாவுக்கு எப்பவுமே நேரம் இல்லை. பெரும்பாலும் வேலைக்குப் போகிற பெண்கள்தான் வீட்டில் இருக்கும் மனைவிகளை விட, பிளளைகள் மேல் அதிக கவனம் செலுத்துகிறார்கள், என்றுகூடத் தோன்றியது. வீட்டில் சமையலுக்குத் தனி ஆள் இருந்தது. குற்றேவல்களுக்கு ஓடோடி வர வேலைக்காரர்கள் இருந்தார்கள். படிப்பு நேரம் தவிர டியூஷன் எடுக்க என்று ஒரு வாத்தியார் வந்துபோனார். முக்கியமாய் எதுவும் பேசவேண்டும் என்று இருந்தால் விஷால் அப்பாவிடம் அலைபேசியில் பேசினான். அவர் வேலைமுடிந்து வீடு திரும்பும்போது அநேகமாக அவன் தூங்கி யிருப்பான்.
விஷால் படிப்பில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தான். அதில் தண்டபாணிக்கு திருப்தி. பின்னே? விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும், என்று நினைத்துக் கொண்டார். அவர் மீசை சிறிது நரைக்க ஆரம்பித்து ‘டை’ அடிக்க ஆரம்பித்திருந்தார். சில இடங்களில் முடியை அப்பபடியே வெள்ளையாக விடுவதும் அழகுதான். கிருதாக்ள் மாத்திரம் அவருக்கு நரையாகவே இருந்தன. நான் வாழ்க்கையை ஆரம்பித்த இடம் எங்கே, இப்போது நிற்கிற இடம் எங்கே… என ஒரு யோசனை. அவருக்குப் பெருமிதமாய் இருந்தது. சியாமளாவை அவர் கைப்பிடித்த போது அலுவலகத்தில் எத்தனை கண்கள் பொறாமையாய் அவரைப் பார்த்தன. அவருக்கு அது பிடித்திருந்தது. சியாமளாதான், தான் கல்யாண வயதில் அவளை எப்படிப் பார்த்தோமோ அப்படியே இருக்கிறாள். ஒரு பிசிர் கூடவில்லை. குறையவில்லை. அதே மெலிவு. அதே பொலிவு. வளர்ந்த ஊட்டம் அப்படி, என்று நினைத்துக் கொண்டார்.
சியாமளாவின் உறவினர்கள் யாரும் வீட்டுக்கு வருவது இல்லை. விஷாலின் பிறந்தநாள் என்றால் அவனது பள்ளித் தோழர்கள் வருவார்கள். கம்பெனியில் தண்டபாணியை அறிந்தவர்கள் வருவார்கள். பெரும் பெரும் பொதிவுகள் தருவார்கள். எல்லாமே காரிய காரணங்களின் பாற்பாட்ட செயலாகவே இருக்கும். அந்தப் பரிசுப் பொருள் சாமான் எல்லாமே ஏற்கனவே அவர்கள் வீட்டில் இருந்தன. அவர்கள் வீட்டில் இல்லாத பொருள் எதுவும் கிடையாது.
லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் என்று சியாமளாவுக்கு எப்பவுமே வெளி வேலைகள் இருந்தன. சாதாரணமாகவே பிசி தான். தவிர இப்போது அவள் தண்டபாணியின் திருமதி என்கிற ஹோதா வேற. சமூகநலத் திட்டங்கள் என நிறைய அவர்கள் செய்தார்கள். ஏழைகளுக்கு கண் பரிசோதனை முகாம்கள். (இதன் சிறு பகுதி அக்கறை மாமனார் மாமியாரிடம் அவள் காட்டி யிருக்கலாம்.) அநாதைகளுக்கு நிதி உதவி. பாவப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்குவது… அடிக்கடி அவளது வண்ணப் புகைப்படம் தினசரிகளில் இடம் பெறும்படி அவள் பார்த்துக் கொண்டாள்.
பதினெட்டு வயது வந்ததுமே விஷால் கார் ஓட்டக் கற்றுக் கொண்டான். இனி அவன் தன் பாட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும், என அப்பா நினைத்தார். நான் எப்படி? என் பாட்டை நானே தானே நிர்ணயம் செய்து கொண்டேன். அதுவே இளமைக்கு அழகு, என நினைத்தார். கல்லூரி மூன்றாம் வருடம் விஷால் காரிலேயே போய் வந்தான். வழியில் அவன் நண்பர்களும் கூட ஏறிக் கொண்டார்கள். என்றாலும் கெட்ட பழக்கங்கள் எதுவும் அவனுக்கு ஒட்டிக் கொள்ளவில்லை. தண்டபணிக்கே பெரிய சந்திப்புகள் என்றால் அதில் ‘டிரிங்ஸ்’ இல்லாமல் இராது. அது ஒரு கௌரவம் என்று ஆகிவிட்ட காலம் இது. அவரும் அருந்துவார். எனினும் பையன் இப்படி எதுவும் பழகிக் கொள்வானோ, என்று யோசனையாய் இருந்தது அவருக்கு. என்னை மாதிரி, அவனும் லிமிட்டோடு இருந்தால் அவருக்கு அது பெரிய விஷயம் இல்லை.
ஆனால் ஆச்சர்யமான விஷயம் அவன் எவ்வகையிலும் அப்பாவைப் போல இருக்கக் கூடாது, என்பதாக ஏனோ நினைத்தான். அப்பாபாணியிலான வாழ்க்கை சரி அல்ல, என்பதில்லை. அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் எளிமையாக வாழ்க்கையை நகர்த்தலாம் என்று தோன்றியது அவனுக்கு. விஷாலின் உடைகள் சுத்தமான எளிமையான பருத்தி உடைகளாக இருந்தன. கையில் கடிகாரம் கட்டவே அவன் விரும்பவில்லை. இயல்பாக இருப்போம். உடலுக்கு செயற்கையான அலங்காரங்களே, அணிகலன்களே எதற்கு, என அவன் நினைத்திருக்கலாம். உடலில் கை அழகு. அதன் வலிமைதான் அழகு. அதில் அணியும் மோதிரம் அல்ல அதன் உண்மயான அழகு. எத்தனை தங்கச் சங்கிலிகள் அவனுக்குப் பரிசளிக்கப் பட்டன. எதையுமே அவன் அணிந்துகொண்டு கல்லூரிக்குப் போய் அப்பா பார்த்ததே இல்லை.
தேர்வு அடிப்படையில் அல்லாமல் பாடங்களை நன்கு அனுபவித்துப் படித்தான். பாடங்கள் தொடர்பான வெளிப் புத்தகங்களைத் தேடி வாசிக்கிற பழக்கம் இருந்தது அவனுக்கு. ரொம்ப ஆச்சர்யமான விஷயம், நுண் கலைகளில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. எப்படியோ புல்லாங்குழல் ஒன்று அவனுக்குக் கிடைத்து தட்டுத் தடுமாறி வாசிக்கவும் ஆரம்பித்திருந்தான். ஒலி அலைகளின் அந்த ஸ்வர வரிசை அவனை மயக்கியது. அது தனி உலகமாய் இருந்தது அவனுக்கு. அவரவர் அதைத் தங்கள் தனி உலகமாகக் கொண்டாட முடிகிற உலகம்.
தண்டபாணி ஒருநாள் கவனித்தார். வெளியே தோட்டத்தில் ஒரு மர நிழலில் அமர்ந்து தன்னைமறந்து விஷால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். மெல்ல அவர் அவன் பின்பக்கமாக வந்து தோளோடு அணைத்துக் கொண்டார். “அப்பா?” என்று எழுந்துகொண்டான் விஷால். “அருமையா வாசிக்கறியேடா…” என்று புன்னகை செய்தார் அப்பா. உண்மையில் அவருக்கு அவன் வாசித்ததைப் பற்றி ஒன்றும் தெரியாது. “யார் கிட்டயாவது கத்துக்கறியா? வாத்தியார் ஏற்பாடு பண்ணட்டுமா? அதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கா, படிப்பைத் தவிர?” என்று கேட்டார். “நேரம் இல்லைன்றது சோம்பேறிகளின் அகாராதியில் உள்ள வார்த்தை அப்பா” என்று அவனும் புன்னகை செய்தான்.
“நானே ஒரு வாத்தியார் கேட்டு வெச்சிருக்கேன்… வார இறுதி நாட்கள்… அப்பிடி போய் கத்துக்கலாம்னு இருக்கு அப்பா” என்றான். “என்னப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்களா?” என்று கேட்டான். “ஒரு மீட்டிங் இன்னிக்கு கேன்சல் ஆயிட்டது…” என்றபடி அவனுடன் வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவன் இஷ்டப்பட்ட வரை படிக்கட்டும், என்ன சப்ஜெக்ட் வேணாலும் படிக்கட்டும். பிறகு வந்து என் கம்பெனியில் உட்காரட்டும், என்பதாக அவர் நினைத்திருந்தார். அதுபற்றி இன்னும் அவனிடம் பேச வேளை வரவில்லை, என நினைத்தார்.
ஆனால் விஷால் வெளியே வேலைக்குப் போக விரும்புவதாகத் தெரிந்தது. எது எப்படியாயினும் அப்பாவின் கீழ் என்பதை அவன் தேர்வுசெய்ய விரும்பவில்லை என நினைத்தார். யோசிக்கட்டும். தன் பாதையை அவன் தேர்ந்து கொள்வதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆனால் ஏன் வேலை என்று பிறரிடம் கைகட்டி சேவகம் செய்ய வேண்டும்? வி ஷுட் டிக்டேட் திங்ஸ் டு ஹேப்பன்… நண்பனே. வெற்றிகள் நம் பின்னே ஓடி வர வேண்டும். நீ யார். நீ தண்டபாணியின் பிள்ளை.
இவனை இன்னும் நெருக்கமாக கவனித்திருக்லாம்… என இப்போது நினைத்துக் கொண்டார். அவன் மனதில் என்ன இருக்கிறது, அவருக்குத் தெரியாது. ஆ, என்னைப் போல இல்லை இவன், என நினைத்தார். ஒரு மூங்கில் கழி… அதில் இன்பம் துய்க்கிறான். உலகின் ஆகச் சிறந்த மகிழ்ச்சிகள் எளிமையானவை, என்கிறான். அன்பு விலை மதிப்பற்றது. ஆனால் எளிதில் பரிமாற வல்லது, என்கிறான். அவன் பேச்சு அவருக்குப் புரியவில்லை. ஒன்று புரிந்தது. என்னைப் போல இல்லை அவன்…
விஷாலுக்கு வேலை கிடைத்தது. உள்ளூரில் அல்ல. வெளி மாநிலத்தில். எப்போது விண்ணப்பித்தான் தெரியவில்லை. அவருக்குத் தெரிய வந்திருந்தால் வேண்டாம் என்று சொல்லி யிருப்பார். அவருக்குத் தெரிய வேண்டாம் என அவன் நினைத்திருக்கலாம். அல்லது என் முடிவுகளை நான் எடுப்பேன்… என்கிற யோசனையும் அவனுக்கு இருக்கலாம் அல்லவா, என நினைத்தார். காரிலேயே புறப்பட்டுப் போனான் விஷால்.
எதோ கை நழுவினாற் போல நினைத்தார் தண்டபாணி. ஏன் இப்படி எனக்குத் தோன்றுகிறது? சியாமளாவுக்கு எப்படி இருக்கும் இந்த விஷயம் தெரியவில்லை. அவளது உலகம் தனி. அவளது பிரத்யேகங்களுக்குள் யாரும் நுழைய முடியாது. அவள் அனுமதிப்பது இல்லை. ஓர் அலுவலகத்தின் வெவ்வேறு ஊழியர்கள் போல, அல்லது அதிகாரிகள் போல அவர்கள் தங்கள் வீட்டிலேயே நடமாடினார்கள். இதை முதல் நாளில் இருந்தே அவர் சரிசெய்திருக்க வேண்டும். எரிமலையைப் பொங்க விடாமல் சர்வ நிதானத்துடன் கையாண்ட மாதிரியே அவர்கள் இருவருமே அசாத்திய மௌனத்துடன் இயங்கினார்கள் என்று தோன்றியது. மகன் கிளம்பிப் போனதும் தான் இப்படியெல்லாம் அவர் மனதைத் திருப்பிப் பார்க்கிறார். இதுநாள் வரை அவர் உட்கார நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தார். அது தவறல்ல தான். ஆனால் சரிதானா, என்ற கேள்வி இப்போது அவரில் தலை காட்டுகிறதா? விடியலின் கீற்று போல தலையில் நரைகள் கிளம்பிய இந்த வயதில்…
ஒரு விடுமுறை நாளில் காரில் ஊர் திரும்பினான் விஷால். நேரே வீட்டைப் பார்க்க வந்து கொண்டிருந்தவன் சட்டென புறநகர்ப் பகுதிக்கு வண்டியைத் திருப்பினான். பெரிய சாலையில் பாலம் முடிந்து வலப்புறமாக உள்மடங்கித் திரும்பிய சிறு தெரு என்று ஊருக்குள் நுழைந்தான். தெரு மருங்குகளில் மரங்களே அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தன. காற்று இலைகளூடே புறப்பட்டுத் தாண்டிப் போகும் தோறும் மரம் கிசுகிசுப்பாய் என்னவோ பேசினாற் போலிருந்தது. புல்லாங்குழல் கலைஞன் அல்லவா? வாழ்க்கை அதன் எளிமையில் மகா அழகைக் காட்டித் தருகிறது, என நினைத்தான்.
முத்துராமனும் செண்பகமும் கார் ஹாரன் ஒலி கேட்டு வெளியே வந்தார்கள். பளபளப்பான புதிய கார். அதில் இருந்து ஓர் இளைஞன். வெளியே இறங்கி சட்டென அவர்களைக் காலைத்தொட்டு நமஸ்கரித்தான் விஷால். அவர்கள் உடம்பே பரவசத்தில் துடித்தது. “யாரு, விஷாலா?” என்று அவனை முதலில் அடையாளங் கண்டுபிடித்தது பாட்டிதான். “உனக்கா வரணும்னு தோணிச்சேடா… வா வா வா” என அவனை அணைத்தபடி அவளே உள்ளே அழைத்துப் போனாள். அவள் உடம்பும் முகமும் வரிவரியாய் ரேகை காட்டின. கைபனியன் அணிந்திருந்தார் தாத்தா. கண்ணாடி தூக்கி அவனைப் பார்த்தார். அவருக்கு ஜாடை தெரிந்தது. இது நம்ம குடும்ப முகம், யார் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம்… அவருக்கு அது பெருமிதமாய் இருந்தது.
“ஏண்டா சொல்லிட்டு வரப்டாதா?” என்றார் தாத்தா. “ஏன் சொல்லிட்டு வரணும்?” என்று சிரிக்கிற அவனை அவருக்குப் பிடித்திருந்தது. எளிய அடுக்ககம் அது. சற்று அங்கங்கே காரை பெயர்ந்து கிடந்தது. கடைசியாக சுண்ணாம்பு பூச்சு கண்டு ஏழெட்டு வருடங்கள் ஆகி யிருக்கும் போலிருந்தது. “நான் வேலைக்கு வந்திட்டேன் தாத்தா” என்றான் விஷால். “இப்ப கர்நாடகால இருக்கேன். உங்களையும் அங்க கூட்டிட்டுப் போலாம்னு பாக்கறேன்” என்றான் விஷால்.
அவன் கையில் புல்லாங்குழல். “எங்க ஐயா, நல்லா வாசிப்பாரு.அதான் தன்னைப்போல உனக்கு அந்த ருசி வந்திருக்குடா…” என்று சிரித்தார்.
•