பந்தம்

author
0 minutes, 1 second Read
This entry is part 7 of 11 in the series 3 ஜனவரி 2021

குணா (எ) குணசேகரன்

வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை! நின் தோழி
எரி சினம் தணிந்த இலைஇல் அம் சினை
வரிப் புறப் புரவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வென்வேல் விடலையை,
விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?


கொல்லைப்புறத்தில் காகம் கரைந்தது. அயலூர் செய்தி வரும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் இதுவெல்லாமா நம்புவார்கள்… மனக்கிலேசம் நிற்கவில்லை.

அயல் நாட்டுச் செய்தியாய் இருக்காதா என்ற எதிர்பார்ப்பு. தபால்காரரை எதிர்பார்த்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். குறைந்தது ஒரு மாதகாலம் பிடிக்கும். முன்பெல்லாம் காக்கை கரைந்தால் முன்னர் அனுப்பிய செய்திக்கா அல்லது பின்னர் வரப்போகிற செய்திக்கா என்று தோன்றும். இப்பொழுதெல்லாம் நேரம் பார்த்து, இரவா, பகலா யோசித்து எதிர்பார்க்க தோன்றுகிறது, தூங்குவாள், இருக்காது என்று.

கைப்பேசி வந்து எல்லாம் சுலபமாகிப் போனது. தொலை தூரமானாலும் கூப்பிடு தூரத்தில் இருப்பது போல் ஒரு பிரமை.

பெற்றமனம்… கொரானா வைரஸ் பற்றி வெளிவரும் செய்திகள் சற்றே உளைச்சலைக் கொடுத்தது. முன்பெல்லாம் இது போன்ற செய்திகள் தெரியாமலே போய் விடும். அப்படியே வந்தாலும் இஞ்சி, பூண்டு, மிளகு இல்லை இருக்கவே இருக்கிறது சுக்கு, மிளகு, திப்பிலி, கஷாயம் கொஞ்சம் காரம் சேர்த்து வைத்து குடித்தால் வைரஸ் கிட்டவே வராது, வந்தாலும் செத்து போகுமாம். இதைச் சொன்னால் கேட்பார்களா? ஒரு வேளை, ‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்றிருப்பவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வார்கள்.

விருப்பப்பட்டு மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்த போது தெரியவில்லை, பெருமையாயிருந்தது, என் மகளும் மருத்துவர் என்று.

படித்து முடித்ததும் ஒரு கல்யாணம் பண்ணிப் பார்ப்போம் என்று நினைத்தால், அந்நிய தேசம் போக முடிவெடுத்தாள். வேலைக்குப் போன இடத்தில் பார்த்து இவன் தான் என் எஞ்சிய வாழ்க்கையின் துணை என்று தேர்ந்தெடுத்துக் கொண்டாள்… ஜாதி தாண்டி, மதம் தாண்டி, தேசம் தாண்டி.

மனதளவில் சிறு சலசலப்பிருந்தும் நன்றாயிருந்தால் சரியென்று மனம் சமாதானப் படுத்திக் கொண்டது.

கிராமத்து பிள்ளைப் பிராயம்… நடந்து வந்த கூடம். சறுக்கி ஏறிய சறுக்கல். அப்பொழுது நினைத்திருக்கவில்லை. அவையனைத்தும் அந்நியமாகிப் போகுமென்று. அந்த காலங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள், நம் காலம் வரை நினைவிறுத்தி மறைந்து போக வேண்டியவை என்று. இப்பொழுது ஒவ்வொரு தருணங்களையும் ஒலி யாக்கி, ஒளியாக்கி, ஒலி-ஒளியாக்கி, சேர்த்து வைத்து அவ்வப்போது ரசிக்க முடிகிறது. அவள் வளர்ந்த காலங்களில் அதற்கான சூழ்நிலையும் இல்லை, வசதியும் இல்லை.

பொக்கிஷம் என்பது யாருக்கு? பின்னாளில் உபயோகப் படுத்த இந்நாளில் சேர்த்து வைப்பவை. ஓடும் ஓட்டங்களில் அவை பொருட்டாவதில்லை. ஓடி முடித்து அல்லது ஓடிக்கொண்டிருக்கும் காலங்களில், ஆசுவாசப் படுத்தும் அல்லது நினைவு கூறும் காலங்களில் திரும்பிப் பார்க்கும் அல்லது புரட்டிப் பார்க்கும் நேரங்களில் அவை பொக்கிஷங்கள்.

இது தான் வாழ்க்கை என்று நிற்க நாம் முயலும் போது, திரும்பிப் பார்த்தால் இந்த பொக்கிஷங்கள் ஆசுவாசப் படுத்தும். நமக்கு அவற்றுடன் இருந்த பிணைப்பு ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

நம் ஓட்டம் சற்று தளர்ந்து, அடுத்தவர் ஓடிக்கொண்டிருக்கும் போது, நமக்கானது எது என்று நினைக்க வைக்கும். நம் காலம் வரை ஒடிக் கொண்டே இருந்தால், சில சமயம் இதை நினைக்காமலே போய் விடுவோம்.

அடுத்த தெரு பார்வதி மகள் போன வாரம் தான் வந்து போனாள். சிறு வயது முதல் ஒன்றாய் வளர்ந்தவர்கள். அவளும் அங்கு தான், அருகில்… எங்கோ சொன்னாள். வார இறுதியில் இல்லை சமயம் கிடக்கும் போது பார்த்துக் கொள்வார்களாம். “உங்கள் பேரனும், பேத்தியும் வளர்ந்து விட்டார்கள். இருவரும் பெற்றோர் வழியில்… மருத்துவம் பயில…” என்று சொன்னாள். அவ்வப்போது பேசிக் கொண்டாலும், யாரேனும் சொல்லும் போது, புதிதாய் கேட்பதுவாய்…

அவளைச் சார்ந்தவர்கள் வந்து போனால், அவளே வந்து போனது போல். அப்படி ஒரு சந்தோஷம்.

முன்பெல்லாம் வாரம் ஒருமுறை… மணாளனுடன் வாழத் தொடங்கியதும் மாதம் ஒருமுறை… குழந்தைகளானதும் அவ்வப்போது… அவர்கள் வளர வளர எப்போதாவது… ஆகிப் போனது.. அவள் பேசுவதும்.

தொடர்பு தொலைவான போது நாம் தொடர்பு கொள்ளும் முயற்சி அடிக்கடி. தொலை தொடர்பு கைக்குள் வந்தவுடன் முயற்சிகள் விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டன. என்ன பெரிய காரியம், வேண்டுமானால் தொடர்பு கொள்ளலாம். அவசியமானால் பேசிக் கொள்ளலாம் இல்லை பார்த்து பேசிக்கொள்ளலாம். ஆனால் அந்த நிகழ்வுகள் தான் நடப்பதில்லை.

ஒரு வேளை, வேலைப் பலுவாக கூட இருக்கலாம்… இல்லை மற்ற செய்ய வேண்டியவைகள் தடுக்கலாம். இதைப் பற்றி சிந்திக்க கூட முடியாமல் போகலாம்.

நாம் நடை போட்டு வந்த ராஜ பாட்டையும் அப்படித்தானே… திருமணமான புதிதில் மாதம் ஒரு முறை… வண்டி கட்டிக்கொண்டு என்னைப் பார்க்க பெற்றவர் வருவார். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடித போக்குவரத்தாயிற்று. பேருந்து வசதி வந்த பின், அவ்வப்போது… அவளின் விடுமுறையின் போது… அவள் வளர்ந்ததும்… பிரதானமாகிப் போனாள். பின்னர் பெற்றவர்களும் போய் விட்டனர். இப்பொழுது நாம்.

அவள் சேர்ந்து வாழத்தலைப் பட்டு, இன்னது தான் கலாச்சாரம் என்று புரியவைத்து, திருமணம் செய்து கொண்டு, ஆரம்பத்தில் நமக்கு இருந்த குறுகுறுப்பு… என்னவாகுமோ… சேர்ந்து வாழ்வார்களோ… பிரிந்து விட்டால்… இத்தனையும் கடந்து போய் விட்டது. வாழ்ந்து விட்டார்கள்.

இப்பொழுதெல்லாம் இது சாதாரணம். அயல் நாட்டவர்களை திருமணம் செய்வதென்பது. அவள் செய்த போது… அசாதாரணம். சொல்வதற்கே சங்கடப் படுவார்கள். அயல் நாட்டு வாசம் என்பதே அசாதாரணம். அந்த ஒரு தருணத்தில்… அவள் சொன்ன போது… ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை. சுற்றம், சூழல் என்று சொல்லாமல் செய்து கொண்ட திருமணம். இப்பொழுது நினைத்தாலும், ஏன் அப்படி செய்தோம் என்ற வருத்தம் தலை தூக்கும்.

அவளுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க  வேண்டும்… கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, பின் பேசிப் பேசி சேர முயன்ற போதும், அவ்வளவு சீக்கிரம் ஒட்டிக் கொள்ளவில்லை. உடைந்த சிதல்கள் சரிவர சேர்க்காமல் போனால், ஒட்டாதது போல. இருந்தும் ஒட்டிக் கொண்டுள்ளது. மனதில் கொண்ட ரணம். வெகு காலம் கழித்து, அதிக வற்புறுத்தலுக்குப் பின், அவள் வந்து போன போது அது தெரிந்தது.

ஒன்றரை மாமாங்கம் கடந்திருந்தது. அவள் திரும்ப வந்து இந்த மண்ணைத் தொட்டபோது. கூடவே மேல் நாட்டு மருமகனும்… பேரக் குழந்தைகளுடன். மாறிப் போயிருந்தாள். இருவரும் பிரபல மருத்துவர்களாம். ஊர்க்காரர் களெல்லாம் வந்து விசாரித்து போன போது… பெரு நகரத்து பிரபல மருத்துவர்களெல்லாம் வந்து பார்த்து விட்டு போன போது… அப்பொழுது தான் புரிந்தது அவர்களின் அசாதாரணம்.

பேரக்குழந்தைகளை அவர் பார்த்துப் பார்த்து புலங்காகிதம் அடைந்தது… பேரக்குழந்தைகளுடன் மருமகனும் நம் மொழி பேசி, நம் கலாச்சாரங்களில் கலந்து… நம்மோடு இருந்து விட்ட நம்மவர்கள் போலிருந்தது. இவ்வளவு நாள் ஏன் தள்ளியிருந்தோம் என சங்கடப் படுத்தியிருந்தது. வந்து போன வெகு நாள் வரை… ஏன் இன்னமும்… இந்த ஊர்க்காரர்கள் பார்க்கும் பார்வை வெகுவாய் மாறிப்போனது.

அவள் வந்திருந்த போது… கணவனோடு போய் காட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தாள்… சறுக்கிய சறுக்கலை… ஏறி இறங்கிய மாமரத்தை… சுற்றி வந்த கொல்லைப் புரத்தை… ‘நான் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறேன், அவ்வப்போது தண்ணீருடன்’ என்ற கொல்லைப்புர ஆற்றை.. அவர்களும் இருந்து விட்டுப் போனார்கள் இந்த கிராமச் சூழலில். போகும் போது பிரிய மனமில்லாமல்… என்னைக் கட்டியணைத்து… காதோரமாய் கிசுகிசுத்து… “வந்து விடுங்கள்… எங்களோடு… யோசித்து முடிவெடுங்கள்… எனக்கு வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை” சொல்லிவிட்டுப் போனாள். 

என்ன ஒரு நிதானம்… பெரிய மனுஷத்தன்மை… இருந்த அருகாமையில் நான் உன் மகளென்று தெளியவைத்து… அவள் சொன்ன போது… மனம் கோணச் செய்யாமல்… இது தான் யதார்த்தம் என்று புரிய வைத்து…

வருடங்கள் ஓடிவிட்டன… இதோ பார்வதியின் மகள் சொல்லிவிட்டு போகிறாள்… உங்கள் பேரக் குழந்தைகள் வளர்ந்து விட்டார்களென்று…

என்னவென்று தெரியவில்லை… இன்று காலை வயல்வெளி சுற்றி வந்து அமர்ந்தவர் ஒரு நிதானத்தில் இருப்பதாய் தெரியவில்லை. சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி… உச்சத்தை பார்த்து…

இந்த வீட்டில் நான் மரக்கால் விளக்கோடு அடியெடுத்து வைத்து அறுபது ஆண்டுகள் ஓடி விட்டன.

அவருக்கு…

பிறந்தது முதல்… கல்லூரி படித்த காலம் தவிர… இந்த வீடு… தோட்டம்… துரவு… சுற்றியுள்ள கிராமங்கள்… என்ன தான் சௌகரியங்கள் வளர்ந்தாலும், அத்துனையும் இங்கே கொண்டுவந்து, இதை விட்டு நகராமல்… இவை தான் என் அடையாளம் என்றிருந்து… மனதிற்கு ரம்மியமாய் “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” கேட்டு, விடியற்காலை வெளி நடந்து, பனி மூட்டக் கூட்டில் வயல்வெளி சுற்றி, புல்லின கூட்டத்தின் சிலுசிலு சப்தங்கள்… புகை மண்டலமில்லாது… எப்பொழுதும், ஏதாவது வேண்டி சுற்றி இருக்கும் கூட்டம்… ஆலோசனை வேண்டி… தீர்மானிக்க வேண்டி…

அவள் இருக்குமிடம், மாநகரத்தை ஒட்டியாமே… அரை மணி நேர காரோட்டம், தினசரி வேலைக்கு… மக்களைப் பார்க்கவென்றால் நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்… சந்தர்ப்பங்களை…

நான்கு தலைமுறையாய் உள்ள எட்டுகட்டு வீடு. அங்காளி பங்காளிகளின் பிக்கல் பிடுங்கல் இல்லாத சொத்து… ஒரே பெண்… என்ன செய்ய… அவள் சென்றபோதும் இருந்தது… நானிருக்கிறேனென்று…

பற்றற்றிறு… மண், பொன், பெண்… எனக்கு வேண்டாம். என்னை ஒட்டி நின்றவற்றை என்ன செய்ய… வாய் பேசாதவற்றை… நாமிருக்கும் காலம் வரை செய்யும் நல்லதுகளுக்கு மட்டுமே உறுதுணையாய் இருந்து… செய்வித்து… அவற்றை என்ன செய்ய..

என்னவானாலும் இருக்கும் வரை இருந்து விட்டு போகலாம். பின்னர்? எனக்குப் பின்னால் என்னவானால் என்ன என்றிருப்பதும் பற்றற்றது தானோ? இதையும் தாண்டி இருக்கிறது.

போகும் முன் அனைத்தையும் விற்று காசாக்கி கொடுத்து விட்டுப் போகலாம். அதுவா நம்மை சார்ந்து நின்றவற்றிற்கு செய்யும் தர்மம். சார்ந்திருக்க ஒரு துணை தந்து விட்டுப் போக வேண்டும். நல்லவர் கையில் விட்டுப் போக வேண்டும். இல்லையேல் பெறுவார் என்ன செய்வார்…? இவை தரும் செல்வங்கள் பத்தாது இன்னும் பெறவேண்டுமென்று விளை நிலங்களை கருவறுப்பார்… கூறு போடுவார். இதில் என் பங்கென்ன…

பெற்றவள் அண்டியிருந்த காலம் வரை முழு பாசத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அவளுக்கென்று தெரிந்தெடுத்து, இன்னதென்று முடிவெடுத்து, போகும் போது ‘வருகிறேன்’ என்று தான் சொல்லிப் போனாள்.

“வருவாளா?”

என்னவளோடு சொன்னது ‘என்னோடு வந்து விடுங்கள்’ என்று.

அவளை சொல்ல வைப்பது எது?

நான் போகாமல் தடுப்பது எது? போகவேண்டுமென்று சொல்வதெது?

அவர் உறங்கிப்போனார். எழுந்திருக்கவேயில்லை.

*** *** ***

– குணா (எ) குணசேகரன்

Series Navigationகானல்மினி பாரதம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *