மறக்க முடியாத மரக்காயர் மாமா

This entry is part 3 of 11 in the series 3 ஜனவரி 2021

(24.4.1991  “தேவி” இதழில் வந்தது. “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்”-இன்

“அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)

      காலியாய்க் கிடந்த பக்கத்து வீட்டு மனையின் எதிரே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து, குஞ்சம் வைத்த அந்தக் காலத்துப்பாணித் தொப்பியுடனும், கையில் ஒரு தடியுடனும் இறங்கிய பெரியவரைப் பார்த்ததும், விசாலாட்சி, ‘பக்கத்து மனை யாரோ சாயபுக்கு சொந்தம்னு பேசிண்டாளே, அது இவராத்தான் இருக்கணும்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். ‘மனையை வெறுமனே பார்வையிட்றதுக்கு வந்தாரோ, இல்லேன்னா வீடுகீடு கட்டப் போறாரோ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். சாயபுவுக்குப் பின்னாலேயே ஆட்டோவைவிட்டு இறங்கிய நடுத்தர வயது மனிதர்  அவருடைய பிள்ளையாக இருக்கலாம், அல்லது தம்பியாக இருக்கலாம், அல்லது நண்பராக இருக்கலாம் என்கிற ஊகத்துடன் விசாலாட்சி இருவரையும் கவனித்தபடி நின்றாள். ஆட்டோ வாசலிலேயே நின்றிருந்தது.  ‘ஆட்டோ காத்துக்கொண்டிருக்கிறது என்றால், கொஞ்ச நேரத்தில் திரும்பிப் போய்விடுவார்கள்… எப்படியானாலும், கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பித்தானே போயாகணும்? வெறும் மனையில் எவ்வளவு நேரம் இருக்க முடியும்?’

      காலி மனைக்குள் காலடி வைத்த பெரியவரின் பார்வை விசாலாட்சியின் மேல் விழ, அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டவாறு, “வணக்கம், பெரியம்மா,” என்றார்.

      பதிலுக்கு வணங்கத் தோன்றாமல் புன்சிரிப்பு மட்டும் காட்டிய விசாலாட்சி, “வீட்டு மனைக்குச் சொந்தக்காரரா?” என்று கேட்டாள்.

       “ஆமாம்மா. எம்பேரு     அப்துல் மரக்காயர். இது என்னோட மகன். ரஸாக்னு பேரு,… அப்படியே பாழும் மனையாப் போட்டு வச்சிருக்கமே பாத்துப்போட்டுப் போகலாம்னு வந்தோம்.” என்றார் அவர்.

       “வீடு கட்டப் போறேளா?”

       “ஆமாம்மா. இன்னும் பத்துப் பதினஞ்சு நாள்ல வேலை தொடங்கிடலாம்னு இருக்கோம். எப்பவோ கட்டி இருக்க வேண்டியது. நாளுக்கு நாள் சிமிட்டியும் செங்கல்லும் வெலை ஏறிக்கிட்டே போகுதில்ல? அதான். சொந்த ஊர்ல எங்களுக்கு ஒரு வீடு இருந்திச்சு. அதை வித்தோம். அதோட இன்னும் கொஞ்சம் பணம் போட்டு எப்படியாச்சும் கட்டிடணும்னு. இல்லாட்டி வீடு வித்த பணமும் கரைஞ்சும மறைஞ்சே போயிறுமே? … நமக்கும் சின்னக் கை இல்லேம்மா…”

       “நீங்க சொல்றது உண்மைதான். நாங்க பத்து வருஷத்துக்கு முந்தி இந்த வீட்டைக் கட்டினோம். எங்க வீட்டுக்காரர்தான் எல்லாம் பண்ணினார்.”

       அப்துல் மரக்காயரின் பார்வை கணத்துக்கும் குறைவான நேரம் விசாலாட்சியின் பாழ் நெற்றியில் தயங்கி மீண்டது.

       “அவர் காலமாயி அஞ்சு வருஷம் ஆயிடுத்து. இப்ப என் பிள்ளையோடதான் இருக்கேன்.”

       “உங்க மகன் என்னவா இருக்காரு?”        

       “ஒரு ப்ரைவேட் கம்பினியில சேல்ஸ்மேனா இருக்கான். ரெண்டு பசங்க – ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை. ரெண்டும் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்குகள். மாட்டுப்பொண்ணும் ஆபீசுக்குப் போயிருக்கா. அவளுக்கும் ஒரு ப்ரைவேட் கம்பெனியில டைப்பிஸ்ட் உத்தியோகம்.”

       “அப்ப, அவங்கல்லாம் வர்ற வரைக்கும் நீங்க தனியாத்தான் இருக்கணும்?”

       “ஆமா. ஆனா சமையல்கார அம்மா எங்களோடவே நிரந்தரமா இருக்காங்க. அது ஒரு சவுகரியம். சமையலுக்கு ஆள் வெச்சுக்கிறதுக்கெல்லாம் எங்களுக்கு வசதி இல்லேதான்.  ஆனா, வயசான காலத்துல என்னை ஆத்துல தனியா விட்டுட்டுப் போகணுமேங்கிறதுக்காக ஆள் வெச்சிருக்கு.”

       “உங்க மகன் நல்லவரா இருக்கணும்.”

       விசாலாட்சி பெருமை ததும்பச் சிரித்துவிட்டு, “என்னோட மாட்டுப்பொண்ணும் நல்லவதான். அவ நல்லவளா இருந்தாத்தானே அவனை நல்லவனா இருக்க விடுவா?” என்று கூற, அப்துல் மரக்காயரும் அவர் மகனும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

       “மருமவளை நல்ல பொண்ணுன்னு சொல்லி நான் கேக்குற முதல் மாமியார் நீங்கதாம்மா!”

       “இதுல என்ன ஆச்சரியம் இருக்கு? நல்லவாளை நல்லவான்னுதானே சொல்லியாகணும்?”

       “அப்படிச் சொல்றதுக்கும் ஒரு நல்ல மனசு வேணுமே, பெரியம்மா?”

       விசாலாட்சி அகலமாய்ப் புன்னகை காட்டினாள்.

       பிறகு, “வீட்டை வாடகைக்கு விடுவேளா, இல்லே எப்படி?” என்று வினவினாள்.

       “நாங்களே குடி வந்துடலாம்னு இருக்கோம்மா. வாடகைக்கு விட்டா வீடு குட்டிச் சுவராயிடும். இப்ப வித்தோம்னு சொன்னமே எங்க வீடு, அதை இப்படித்தான் நாற அடிச்சுட்டாங்க. ரிப்பேருக்கே அஞ்சாயிரம் செலவு பண்ண வேண்டி வந்திச்சு. அதுக்குப் பிறகுதான் விக்கவே முடிஞ்சிச்சு.”

       “அப்படியா? அப்ப நீங்களே வந்து இருக்கப் போறேளா? இவர் ஒரே பிள்ளையா உங்களுக்கு?”

       “இல்லேம்மா. நாலு பிள்ளைங்க, நாலு பொண்ணுங்க. இவருதான் பிள்ளைங்கள்ல மூத்தவரு. எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடிச்சு. அவங்கவங்க வெவ்வேற இடங்கள்ல தனித்தனியா இருக்காங்க.  இங்க வந்து இருக்கப் போறது நானும் இவரோட குடும்பமும்தான். இவருக்கு அஞ்சு பசங்க – மூணு பிள்ளைங்க, ரெண்டு பொண்ணுங்க. பெரிய பிள்ளைங்க உங்க மகன் மாதிரிதான் – ப்ரைவேட் கம்பெனியில வேலை செய்யிறாங்க. பொண்ணுங்க படிக்குது. கடைசிப் பையனும் படிச்சுட்டு இருக்கான்.”

      விசாலாட்சி பதில் சொல்லாமல், கண்கள் விரிய அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் விழிகளில் தெரிந்த கலக்கத்தைக் கவனித்துவிட்ட அப்துல் மரக்காயர், “நீங்க கவலையே படாதீங்கம்மா. நாங்க மாமிசம் சாப்பிட மாட்டோம்….எந்த வாசனையும் உங்க பக்கம் வராது. கொஞ்சம் மசாலா போட்டு சமைப்பாங்க. அது பிடிக்கல்லைன்னா நீங்கல்லாம் மூக்கைப் பொத்திக்கிட்டுத்தான் ஆவணும். வேற வழி இல்லேம்மா,” என்று சிரித்தார்.

      கண்களின் விரிவு குறைந்து விசாலாட்சி சிரித்தாள்: ”அதுக்கு என்ன பண்றது? நீங்க மாமிசமே சாப்பிட்டாலும், கூடாதுன்னு நாங்க சொல்ல முடியுமா? அது தப்பில்லே? அது உங்களோட சாப்பாட்டுப் பழக்கம். …” – குரலில் தெறித்த சன்னமான மகிழ்ச்சி இந்தச் சொற்கள் வெறும் சம்பிரதாயச் சொற்கள் என்பதை உணர்த்த, அப்துல் மரக்காயர் சிரிப்புடன் தம் மகனைப் பார்த்தார்.

      பிறகு, “அது சரி, நீங்கல்லாம் தினமுமே மாமிசம் சாப்பிட்றவாளாச்சே? அதெப்படி உங்க வீட்ல அப்படி ஒரு பழக்கம்?” என்று கேட்டாள் விசாலாட்சி.

       “எங்க தாத்தா காலத்துலேர்ந்து அப்படித்தாம்மா. என்னமோ அப்படியே பழகிட்டோம். எங்க சொந்தக்காரங்களுக்கெல்லாம் கூட எங்க பழக்கத்தைப் பார்த்துக் கேலிதாம்மா. … இப்ப பாருங்க, மரக்கறி உணவுதான் நல்லதுன்னு சொல்றாங்க. எப்படியோ, நீங்க நிம்மதியா இருக்கலாம். …”

       “மனையைச் சுத்திப் பார்த்துட்டு எங்காத்துக்கு வந்து ஒரு வாய்க் காப்பி குடிச்சிட்டுப் போலாம்.”

       “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா.”

       “அப்படி யெல்லாம் சொல்லப்படாது. கட்டாயம் வறேள் ரெண்டு பேரும். என்ன?” என்று அதிகாரம் கலந்த அன்புடன் கட்டளையிட்டுவிட்டு விசாலாட்சி உள்ளே போனாள்.

       அவள் தலை மறைந்ததும் அப்துல் மரக்காயரும் அவர் மகனும் வாய்விட்டுச் சிரித்தார்கள். “நம்மளப் பார்த்ததுமே பெரியம்மாவுக்குப் பகீர்னு ஆயிடிச்சுன்னு தோணுது. அதான் நைஸா வாடகைக்கு விடுவீங்களா, இல்லே நீங்களே இருப்பீங்களான்னு விசாரிச்சுது. நாம மாமிசம் சாப்பிட்றது இல்லேன்னு சொன்னதுக்கு அப்புறந்தான் அந்தப் பெரியம்மா முகத்துல களையே வந்திச்சு,“ என்று பெரியவர் சொல்ல, மகன் அவரது கூற்றை ஆமோதித்துச் சிரித்தார்.

      … போவதற்கு முன்னால், வாசலில் நின்று சொல்லிக்கொள்ள இருவரும் வந்த போது, “அதெப்படி காப்பி குடிக்காம போவேள் ரெண்டு பேரும்?” என்று கேட்டுவிட்டு விசாலட்சி இருவரையும் உள்ளே அழைத்தாள்.

       சமையல்கார அம்மாள் ஒரு முக்காலியில் வைத்த காப்பியைக் குடித்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள்.

       “உங்க மகன் கிட்ட சொல்லுங்கம்மா. ஞாயித்துக் கிழமையன்னிக்கு வந்தா இருப்பாரில்ல? ஆனா நாளைக்கே சிமிட்டி மூட்டை, செங்கல்லாம் வந்துடும். நீங்கதான் கொஞ்சம் கவனிச்சுக்கணும். திருடு போவாம.”

       “அதுக்கென்ன? பார்த்துண்டாப் போச்சு.”

      … மறு நாளே செங்கற்கள், மணல், சிமிட்டி மூட்டைகள் ஆகியவை வந்தன …

       … ஞாயிறன்று அப்துல் மரக்காயர் தம் மகன் ரஸாக்குடனும், கட்டடக் கலைஞர், பொறியாளர், கட்டட ஒப்பந்தர் ஆகியோருடனும் வந்தார். அப்போது விசாலாட்சியின் மகன் ராமகிருஷ்ணன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பக்கத்து மனையில் கேட்ட பேச்சுக்குரலால் அவர்களது வருகையை ஊகித்த விசாலாட்சி, “நான் சொன்னேனே, அந்த மரக்காயர் வந்திருக்கார் போலிருக்கு. …” என்றாள்.

      தொடர்ந்து, “சாப்பிட்டுட்டுப் போய் அவாளை விசாரிடா. நல்ல மனுஷாளாத் தெரியறா …” என்றாள்.

       “ஆகட்டும், ஆகட்டும்,” என்று ராமகிருஷ்ணன் தலை ஆட்டியபடி, ரசத்தை உறிஞ்சினான்.

      … பக்கத்து மனையில் திடீரென்று உரத்த குரல் கேட்டது: “அதெப்படி, வாப்பா, கிட்டத்தட்ட ஒம்பது சதுர அடிக்கு விட்டுக் கொடுக்குறது? மூணடிக்கு மூணடி கட்டுமானம் இருக்கே? கேக்கத்தான் வேணும் …”

       விசாலாட்சியும் ராமகிருஷ்ணனும் உன்னிப்பாய்க் கவனித்தனர் – தங்களையும் அறியாமல்.

       “அவங்க என்ன காம்பவுண்டுச் செவரா எழுப்பிட்டாங்க? எதிரே சின்னதா ஒரு கட்டுமானம். துளசி மாடம் கட்டி இருக்காங்க. வேணும்னு செய்திருக்க மாட்டாங்க. கணக்கு எப்படியோ தவறி இருக்கலாம். …”

       “அப்படியே இருக்கட்டும், வாப்பா. அதுக்காக கம்னு இருந்துட முடியுமா? அந்தத் துளசி மாடம் நம்ம நிலத்துல இல்ல இருக்குது? சாயபு வீட்டு மனையில இந்துக் கடவுளா!”

       “நம்ம நிலத்துல இருந்துட்டுப் போகட்டும்னு யாரு சொன்னது?”

       “அப்ப? இடிக்கத்தானே வேணும்? இடிக்கவும் கூடாது, அவங்க மனசு வருத்தப்படும்குறீங்க. என்ன வாப்பா சொல்றீங்க? புரியும் படியாப் பேசுங்க.”

       “இத பாரு, ரஸாக்கு. தப்பு நேர்ந்து போயிடிச்சு. தெரிஞ்சு செய்திருக்க மாட்டாங்கன்னுதான் எனாகுத் தோணுது. காம்பவுண்டுச் சுவரு எழுப்பும் போது அதை ஒட்டினாப்ல இருக்கணும்னு கட்டியிருப்பாங்க. அப்படித்தான் கொத்தனாரு கிட்ட சொல்லி யிருப்பாங்க. எப்படியோ தப்புப் பண்ணி அது இந்தப் பக்கத்துல வந்திடிச்சு…”

       “ஊர்ல உள்ளவங்களுக் கெல்லாம் நீங்க வக்காலத்து வாங்குவீங்க, வாப்பா.”

       “இப்ப நீ என்ன சொல்றே? வேணும்னு நம்ம பக்கம் கட்டி இருப்பாங்கன்னா? இருக்கவே இருக்காது.  நாளைக்கு வம்பு வரும்னு அவங்களுக்கா தெரியாது? தவறுதான் நடந்து போச்சு. அட, அப்படியே வேணும்னே செய்திருந்தாங்கன்னே வச்சுக்க. அதைச் சரிக்கட்டப் பார்க்கணுமே தவிர, பெரிசுபடுத்தக் கூடாது, ரஸாக்கு.”

       “என்ன வாப்பா சொல்றீங்க நீங்க?”

       “இது மாதிரி சின்னச் சின்ன விசயங்கதான் பெரிசா வெடிச்சு மதக் கலவரமா ஆயிடுது. நான் சொல்றதைக் கேளு. ,,, துளசி மாடம் இப்ப நம்ம நிலத்துல இருக்கு. அது நமக்கு ஒத்து வராத விசயம். அதனால நான் என்ன சொல்றேன்னா, காம்பவுண்டுச் சுவர் எழுப்புறப்ப, துளசி மாடம் அவங்க பக்கம் இருக்கும் படியா செவத்தை நம்ம பக்கமாத் தள்ளி எழுப்பிறலாம்குறேன்.”

       “என்ன வாப்பா இது? என்ன பேசுறீங்க நீங்க? மூணடி இந்தப் பக்கம் காம்பவுண்டுச் சுவத்தை நகத்தின்னிங்கன்னா மூணடிக்குத் தொண்ணூறடி நம்ம நிலம் அவங்க பக்கம் போயிறுமே! அதுக்கு நஷ்ட் ஈடு கேக்கப் போறீங்களா என்ன? தருவாங்களா?”

       “சொல்ல வந்ததை முடிக்கிறதுக்குள்ள குதிக்காதே, ரஸாக்கு. மூணடிக்கு மூணடி இப்ப நம்ம நிலத்துக்குள்ள துளசி மாடம் வந்திடிசில்ல? இப்ப என்ன பண்ணலாம்னா, ஒரு அடிக்கு ஒதுங்கினாப்ல ” ப “ வடிவத்துல காம்பவுண்டுச் சுவர் எழுப்பிறலாம். “ ப “ மாதிரி வளையிற பகுதி நம்ம நிலத்துலதான் இருக்கும். ஆனா துளசி மாடத்துடைய பின்பக்கத்துல நம்ம பக்கத்துக் காம்பவுண்டுச் செவரு அதை மறைச்சிறும். “ ப “ மாதிரி வளைஞ்ச பிறகு நம்ம காம்பவுண்டுச் செவரு கரெக்டான இடத்துல தொடரும். புரியுதா? … நான் படம் போட்டுக் காட்டுறேன்… இரு…”

       “படம் வேணாம், வாப்பா. இப்ப புரியுது. ஆனா, துளசி மாடத்தைச் சுத்தி ஒரு அடி நிலம் விட்டா, மூணும் ரெண்டும் அஞ்சு… துளசி மாடத்தோட பக்கவாட்டு அகலம் ஆகும்…பின் புறத்துல ஒரு அடி விட்டா நம்ம நிலத்துக்குள்ள அகல வாட்டத்துல நாலடி உள்ள வரும். ஆக மொத்தம் அஞ்சுக்கு நாலு – இருபது சதுர அடி – நம்ம நிலத்துல நஷ்டம் ஏற்படும். இல்லையா?”

       ”ஆமா. அதேதான். ஆனா வாசப் பக்கத்துல, அவங்க பக்கத்து நிலத்துல இதே மாதிரி அளவில ஒரு “ ப “ வடிவத்துல உள்பக்கமாத் தள்ளிட்டம்னு வய்யி, அந்த இருபது சதுர அடி நமக்கு அவங்க நிலத்துல கிடைச்சிறும். அதுக்கும் இதுக்கும் சரியாப் போயிறும். அந்தப் “ ப “ வடிவ இடத்துல நம்ம ஸ்கூட்டரையோ, மோட்டார் பைக்கையோ நிறுத்திக்கலாம்”

       “அவங்க ஒத்துக்கணுமே?”

       “கணிடிப்பா ஒத்துப்பாங்க. நம்ம நிலம் அவங்களுக்கும் போகவேணாம். அவங்க நிலம் நமக்கும் வரவேணாம். அந்தப் பெரியம்மா கிட்ட நான் பேசறேன். அவங்க மகன் மனசு எப்படியோ தெரியாது.  ஆனா, அம்மா எடுத்துச் சொன்னா கேப்பாங்க. … அதை விட்டுப் போட்டு இடிக்கிறேன், மிதிக்கிறேன்னு ஆரம்பிச்சா, அநியாயத்துக்குச் சண்டைதான் வரும். இது சின்ன சமாசாரந்தான். ஆனா, அது எப்படிப் போயி எப்படி முடியும்னே சொல்ல முடியாது. தமிழ்நாடு ஒண்ணுதான் கொஞ்சம் அமைதியா இருந்துட்டிருக்கு. இங்கே மதக் கலவரத்தை ஆரம்பிச்சு வெச்ச புண்ணியத்தை நாம கட்டிக்க வேணாம், ரஸாக்கு. காம்பவுண்டுச் செவரு கட்டுறப்ப அதுக்கு ஆகிற செலவைப் பக்கத்துக்காரங்களும் பங்கு போட்டுக்குறதுதானே வாடிக்கை? ரெண்டு “ ப “ வடிவக் கட்டுமானம் வர்றதால சில நூறு அதிகப்படியா ஆகப் போவுது. அதையும் பங்கு போட்டுக்கிட்டா விசயம் முடிஞ்சுது. அதை விட்டுப் போட்டு …”

       அது வரை சாப்பிடுவதை நிறுத்தியிருந்த ராமகிருஷ்ணன் முகம் மலர்ந்து விசாலாட்சியை நோக்கினான்.

      ”நான் சொல்லல்லே? ரொம்ப நல்லவர்டா அந்த மரக்காயர் மாமா. …”

       அவரைச் சந்திக்கும் ஆர்வத்தில் ராமகிருஷ்ணன் அவசரம் அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு, தண்ணீர் குடித்துவிட்டு எழுந்தான். …

       “வணக்கம், சாயபு சார்!”

       “அடடே! …. வாங்க, வாங்க. பெரியம்மா மகனா நீங்க?”

       “ஆமா. அம்மா சொன்னாங்க …”

       “ஒரு சின்ன வில்லங்கம் இருக்குது. அதை நாம் பேசித் தீர்த்துக்கணும். நானே உங்களைச் சந்திக்க வர்றதா இருந்தேன்.”

       “இந்தத் துளசி மாடத்தைத்தானே சொல்றீங்க?”

       “அடடே! ஆமா. அதே தான்.”

       “நீங்க பேசினதெல்லாம் எங்க காதுல விழுந்தது. துளசி மாடம் உங்க பக்கத்து நிலத்துல வந்திருக்குற விஷயமே இப்ப நீங்க சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். தப்பு எப்படியோ நடந்திருக்கு. கான்ட்ராக்டர் பண்ணின தப்பா, கொத்தனார் சரியாப் புநிஞ்சுக்காம பண்ணின தப்பான்னு தெரியல்லே. காம்பவுண்ட் வால் கட்டாம விட்டுட்டதால அதைக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கல்லே. ஏன்னா, காம்பவுண்ட் வால் கட்டியிருந்தா எப்படியும் நிலத்தை அளந்திருப்போம். அப்ப எங்க தப்பு புரிஞ்சு போயிருக்கும். மொட்டையா விட்டுட்டதால தெரிஞ்சுக்க முடியல்லே.  வேணும்னு பண்ணின தப்பு இல்லே.”

       “அட, என்னங்க தம்பி, நீங்க? யார்தான் வேணும்னு பண்ணுவாங்களாம்? அத விடுங்க…”

       “அப்படி இல்லே. இருந்தாலும் எங்க கட்சியை நாங்க சொல்லிடணும், இல்லியா? அநாவசியத் தப்பு அபிப்பிராயம் வரக் கூடாதில்ல? எங்க வீட்டை எங்கப்பாதான் இருந்து கட்டினார். அவராவது கவச்னிச்சிருக்கணும். தவறிட்டாரு…இப்ப அவரும் இல்லே. எனக்கு இதைப்பத்தி எதுவுமே தெரியாது …”

       “அட, என்னங்க நீங்க? அதைப்பத்தி இப்ப என்ன? விடுங்க. இப்ப நான் என்ன சொல்றென்னா …”

       “அதான், “ ப “ வடிவத்துல ரெண்டு பேர் நிலத்துலயும் ஒரு கட்டுமானத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்னு சொன்னீங்களே, அதானே? நல்லாப் புரிஞ்சுது. அப்படியே செய்துடலாம். காம்பவுண்ட் வாலுக்கு ஆகிற செலவுல ஆளுக்குப் பாதி போட்டுக்கலாம். … எங்களுக்கு முழுச் சம்மதம். துளசி மாடத்தும் மேல எங்கம்மாவுக்கும் என் வீட்டுக்காரிக்கும் ரொம்ப பக்திங்க… இடிச்சுத்தான் ஆகணும்னு சொல்லாம ஒரு நல்ல யோசனையாச் சொல்றீங்களே, அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு. ஆனா இடிச்சுத்தான் ஆகணும்னு நீங்க சொன்னா அதுக்கு நாங்க ஆட்சேபிக்க முடியாது. ஏன்னா தப்பு எங்க பக்கம் இருக்கு. உங்களுக்குப் பெரிய மனசு, சாயபு சார்!”

       “பெரிய பெரிய வார்த்தை யெல்லாம் சொல்லாதீங்க! … இன்னிக்கு நான் விட்டுக் கொடுத்தா, இன்னொரு விசயத்துல நாளைக்கு நீங்க விட்டுக்குடுக்க மாட்டீங்களா? அந்த சுயநலந்தான்!” என்று மரக்காயர் சிரித்த சிரிப்பில் எல்லாருமே கலந்து கொண்டனர்.

…….

Series Navigationஅ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *