புதியனபுகுதல்

author
4
0 minutes, 27 seconds Read
This entry is part 4 of 12 in the series 17 ஜனவரி 2021

ஜனநேசன்

இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு வானத்தை ஏறிட்டிருந்த மனைவி  இவரைப் பார்த்தாள் . இவரும் வானத்தை நோக்கினார். குளத்தில் நீர் முகக்கும்போது எவர்சில்வர் குடம் கைநழுவி நீரில் விழுந்து மூழ்குகையில் பின்பாகம் வட்டமாய் மிதப்பது போல் மார்கழி முன்பனியில் மங்கலாக நிலவு மிதந்து கொண்டிருந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இவர் நினைக்கும்போது மனைவி பேசத் தொடங்கி விட்டாள்.

“இங்க பாருங்க, பௌர்ணமிக்கு இன்னும் ரெண்டு மூணுநாள் தான் இருக்கு. அப்புறம் தை பிறக்கும், முதல்நாள் போகி வந்துரும்.போன வருஷம் மாதிரி பிரச்சினை வந்துறக் கூடாது. அதனால பௌர்ணமிக்கு முன்னால தேன்கூடை அப்புறப்படுத்தற வேலையைப் பாருங்கள்“

இவர்கள் வீட்டின்முன் வேப்பமரம் ஒன்று ஆழக் காலூன்றி நீண்டு அகண்டு கிளைகள் விரிந்து நேராய் நிமிர்த்திய பச்சைநிற நுரையீரல் போல் நிற்கிறது  ! இவர்களது  வீட்டுக்கு வேப்பமரத்து வீடு  என்றும் இந்தத்  தெருவுக்கே வேப்பமரத்துதெரு என்ற அடையாளத்தையும் சூடிக் கொடுத்தது. அதன் உயரக்கிளையில் கொம்புத்தேனீ கூடு கட்டியிருக்கிறது. பகலில் எந்நேரமும் ஸ்ஸ்ஸென்று சுருதி மீட்டிய ரீங்காரமும் எந்த மலரின் மணமென்று பிரித்துணர இயலாத ஒரு சுகந்தமும் வேப்பநிழலின் குளிர்ச்சியும் மந்தகாசமாகத்தான் இருக்கும்!  தெருவில் அம்மரத்து நிழல்விரிப்பில் காய்கனி விற்கும் கூடைக்காரர்கள் , தள்ளுவண்டிக்காரர்கள் சற்று இளைப்பாறிச் செல்லுவர். காலையில் பறவைகள் பூபாளம் பாடி எழுப்பும். மாலையில் மொழி , இன வேறுபாடின்றி அடைந்து தமது அன்றைய வலசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்! கோடைக்  காலம் வந்தால் மஞ்சளும்  வெள்ளையுமாகப் பூத்த வேப்பம் பூக்கள் அட்சதை தூவியததைப் போல் சொரிந்து கிடக்கும்.  கசப்பும் இனிப்பும் கலந்த வாசம் கமழ்ந்து கிடக்கும்! மனிதர்   மட்டுமன்றி ஆடும் கோழியும் நாயும் மயங்கிக் கிடப்பர்! இப்படி கவிதை பொழியும் வேப்பமரத்தில் உச்சாங்கிளை யில் ஒருபாகை  அகலத்திற்கு தேனீ கூடு கட்டியிருந்தது. பலருக்கு அச்சத்தை ஊட்டியது. அந்தமரத்தின் நிழலை மகிழ்வோடு அண்ணாந்தவர்கள் அகலமான கல்லீரல் வடிவில் தொங்கும் தேன்கூடைக் கண்டு பிரமித்து அஞ்சுவர்.

 போன வருஷம் போகியன்று தெருவில் இளவட்டங்கள் போகி கொளுத்துவதற்காக சைக்கிள்டயரில் பழைய துணிகளைச் சுற்றி நெருப்பிட்டு சுழற்றினர் .சுழற்சி வேகத்தில் கரும்புகை சூழ்ந்த நெருப்புஜுவாலையின் பொறிகள் தேன்கூட்டைத் தாக்கியது.  வெப்பம் தாளாமல் தீச்சுடர் வந்த திசை நோக்கி கூட்டமாய் காவல்தேனீக்கள்   இறங்கி சுழுந்து சுற்றியவர்கள், வேடிக்கைப் பார்த்தவர்கள் அனைவரையும் விரட்டிக் கொட்டியது.  தேனீக்களின் தாக்குதலைத் தாங்க இயலாமல் சுழுந்துவை அங்கங்கே  போட்டுவிட்டு பக்கத்திலிருந்த வீடுகளில் நுழைந்து கதவைச்  சாத்திக் கொண்டனர். கன்னத்தில் ,கண்இமையில் , நெற்றியில் கழுத்தில் எனத் தேனீ கொட்டிய இடமெல்லாம் வீங்கியது. தைமாதம் கல்யாணமாக வேண்டிய பெண்ணின் கீழுதடு வீங்கித் தொங்கியது . பலரும் முகம் வீஙகி கோரமாய்த் தெரிந்தார்கள். இருவர் பயத்தில் மயங்கினர். தேனீயின் சீற்றம் அடங்கிய பின் மருத்துவர்களைத் தேடிப் போனார்கள். பாதிக்கப்பட்டோர் இவரது குடும்பத்தாரிடம் சண்டைக்கு வந்துவிட்டனர். அவர்களை சமாதானம் செய்யப் பெரும்பாடாகி விட்டது. கடைசியில் மரத்தை வெட்ட வேண்டும். இல்லைஎனில் தேன்கூட்டையாவது அகற்ற  வேண்டும் என்ற  நிபந்தனை இட்டு கலைந்தார்கள். சைக்கிள்டயரில் தீக்கொளுத்தியதால் தெருவெல்லாம் ரப்பர் புகை நாறி வாந்தி எடுத்தவர் குறித்து யாருக்கும்  வருத்தம்  இல்லை. அதுபற்றி பேசக்கூட இல்லையே என்ற ஆதங்கம் இவருக்கு. அந்த வருஷம் தேனீக்கு பயந்து வாசலில் பொங்கல் இடாமல் வீட்டுக்குள் அடுப்படி பொங்கல் இட்டார்கள். பொங்கல் திருநாளின் ரம்மியம் குறைந்து தோன்றியது .இதைத்தான் இவரது மனைவி நினைவூட்டுகிறாள்.

தாத்தா  வைத்த மரத்தை வெட்டுவது சரியில்லை! எலிக்கு பயந்து வீட்டை இடிக்கக் கூடாது. தேன் கூட்டை அகற்ற ஆள் தேடமுடிவெடுத்தார். அவரது நினைவில்  தேனெடுத்து விற்பவர்கள் எங்கெங்கு இருப்பார்கள் என்று தேடினார். புலப்படவில்லை. காலையில் எழுந்ததும் காய்கனிச் சந்தை , பேருந்துநிலையம் ரயில்நிலையம் ஆகிய இடங்களில் தேனெடுப்பவர்கள் தென்படுகிறார்களா என்று தேடினார். முன்பு தெருத் தெருவாய் ஊக்கு ஊசி ,பாசிமாலை  விற்றுத் திரிவார்கள். இப்போது அவர்களைக் காண முடிவதில்லை . . இப்போது முக்குக்கு முக்கு ஃபேன்சிக் கடைகள் முளைத்து வண்ண விளக்குகளில் கண்சிமிட்டுவதால்  நரிக்குறவர்கள் பிழைப்பு போனது. அவர்கள் எங்கும் தென்படுவதில்லை . கடைசியில் கோயில்வாசலில் ஒருவர் நரிக்குறவர் போல் தென்பட்டார். அவரிடம் விவரம் சொல்லி விசாரித்தார். அவர்கள் கிராமங்களுக்கு போய்விட்டார்கள்.  இரவு தூங்கப் போகும் போது பார்ப்பேன். விவரம் சொல்லி கூட்டி வருகிறேன். எனக்கு எதாவது காசு கொடுங்கள் என்றவரிடம் பத்துரூபாய் கொடுத்து தெரு அடையாளம் சொல்லித் திரும்பினார்.

மறுநாள்காலை தேனெடுக்கும் சிறுகோடாரி , சுரைக்  குடுக்கைகள், மரமேறித் தேனடை இறக்கத் தோதான கயிற்றுச்சுருளோடு இருவர் வந்தனர் .நாய்கள் குரைப்பு சத்தம் கேட்டு இவர் வெளியே  வந்து பார்த்தார். அவர்கள் இருவரும் அண்ணாந்து தேன்கூட்டைப் பார்த்தனர். காலை வெயிலில் மினுக்கும் தேனடைகளை ஊடுருவி நோட்ட மிட்டனர். அவர்களது கண்கள் மட்டுமே மரமேறி கிளைக்கு கிளை தாவி தேனடையை எட்டும்  வாகு பார்த்தன. அவர்கள்   பிடறியை அழுத்தி தடவியபடி,                            ”உச்சாணிக் கொப்பில் இருக்கு சாமி .  ஏறித் தேனெடுக்கிறது கஷ்டம்.  இருந்தாலும் முயற்சி பண்ணிப் பார்க்கிறோம் சாமி. . பௌர்ணமி நெருங்கிருச்சு . தேன் கொஞ்சம்தான் இருக்கும்! வெயிலுக்கு தேனடைகள் பல்லிளிக்கிறது பாருங்க சாமி  . உயிரைப் பத்திக் கவலைப்படாம ஏறிதேனெடுத்து தர்றோம். எவ்வளவு பணம் தருவீங்க சாமி ”ன்னு முதியவர் கேட்டார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இவரது மனைவி , ”பணமா ?  எங்கமரத்து தேனெடுக்கிறதுக்கு நாங்க எதுக்கு பணம்  தரணும்?  எடுக்கிற  தேன்ல  பாதி தர்றோமுல்ல . அந்தத் தேன்லாடுளை நீங்களே எடுத்து வித்துக்குங்க“  அவர்களது முகங்கள் கருத்து சிறுத்தன. மனைவியின் குறுக்கீடால் தேன்கூட்டை அப்புறப்படுத்துவது கெட்டுப்போகுமோ என்று  பதறியவர்,  “நீங்க முதல்ல தேனெடுங்க .  வேலை முடிஞ்சதும் பாதிப்பில்லாமப்  பார்த்து தர்றேன் “

“முன்னூறோ , நானுறோ பேசி முடிவு பண்ணினதுக்கு பிறகு தான் மரமேறுவோம் ! “ என்றார் வயதில் மூத்தகுறவர். இதற்கிடையில் தெருநாய்கள் விடாது குரைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்க வீட்டுக்காரர்கள் கூடிவிட்டனர்.

கூட்டம் கூடிவிட்டது  ,இனி கூலி பற்றி விவாதிப்பது நன்றாக இருக்காது என்று  நினைத்து ,  பிற பெண்களுடன் மனைவி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்த  தருணத்தில் இவர் மூன்றுவிரலைக் காட்டினார். கட்டாதக் கூலி என்று முனங்கியபடி வேட்டியை பெருங்கோவணம் போல் கட்டிக் கொண்டு இளையவர் மரம் ஏறத் தயாரானார் .

தேனெடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு தெரு ஜனங்கள் குழுக் குழுவாய் குழுமினர் . அவர்களுக்கு  ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்க நல்ல சாகசமான விஷயம் கிடைத்து விட்டது. கூட்டத்தைப் பார்த்ததும் நாய்கள் குரைப்பை நிறுத்தின .ஐந்தாறு பெண்கள் ஆண்க ளுடன் தீவிரமாய் விவாதிப்பது போல் தென்பட்டனர்.  இளையவர் மரத்தருகே சென்று குனிந்து பூமியைத் தொட்டு வணங்கினார்.  பின் மரத்தின் அடிப்பாகத்தையும்  தொட்டு கும்பிட்டு விட்டு வாகாக கால்களை வைத்து ஏறப்போனார்.

 ஒருபெண்மணி வேகமாக ஓடிப்போய் “நில்லுங்க. ஏறாதீங்க” என்று தடுத்தாள். இளையவருக்கு முகம் சிவந்தது.  பெரியவர் போய் இளையவர் தோளைத் தொட்டார்.அந்த பெண்மணி  தொடர்ந்து பேசினாள். “இந்தமரத்தில் தேன்கூடு இருக்கிறதால தான் தேனீக்கள் எங்கவீட்டுத் தோட்டங்களில் வலசை  வருதுக. எங்க தோட்டங்களில் நிறைய பூக்குது, காய்க்குது.  யாரோ புரியாமல் சொல்றாங்கன்னு  தேன்கூடை அப்புறப்படுத்த வேண்டாம். போகிக்கு இந்தத் தெருவில் யாரும் டயரை எரித்து  புகைமூட்டம் போடாமல் நம்ம தெருக்காரங்களே கட்டுப்படுத்திக்கலாம்“ என்றாள். யாரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை.வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் கலைந்தனர்.

இவருக்கு ஆறுதலாக இருந்தது. தேனெடுக்க வந்தவர்களைப் பார்த்தார். அவர்களது முகம் வெளுத்திருந்தது. இன்றைய வகுத்துப்பாடு போச்சே என்ற கவலை. இவர் மெல்ல இருவரையும் தெருமுனை டீக்கடைக்கு அழைத்துச் சென்று வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தார். அவர்களது கைகளில்  ஆளுக்கு நூறுரூபாய் கொடுத்து, “போயிட்டுவாங்க.  தேவைப்பட்டால் சொல்லி அனுப்புறேன்“ என்றார்.

“வேலை பார்க்காமல் கூலி எப்படி வாங்குறது” என்று ரெண்டுபேரும் ஒரே குரலில் இவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றனர்! இவர் கையை உதறி வீடு நோக்கி நடந்தார்.

Series Navigationகவிதையும் ரசனையும் – 9நான்கு கவிதைகள்
author

Similar Posts

4 Comments

 1. Avatar
  ஸிந்துஜா  says:

  ஜனநேசனின் புதியன புகுதலில் வெளிப்படும் positive approachஐ நான் வெகுவாக மதிக்கிறேன். கதை உருவமும், சித்தரிப்புகளும் பாராட்டுக்குரியவைகளாக முன் வந்து நிற்கின்றன   

 2. Avatar
  முனைவர் ப. சரவணன் says:

  வணக்கம்!
  இது சமூகச் சிந்தனை உடைய கதை. பிறப்பாலோ, தொழிலாலோ அல்ல – பண்பாலேயே மேன்மக்களாக முடியும்.
  வாழ்த்துகள்!
  நன்றி
  எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

 3. Avatar
  Valavaduraiyan says:

  அற்புதமான சிறுகதை. டயரைப் ேபாகிக்கு எரிக்காமல் தடுப்பேதே கதையின் மையம் அதைப் பிரச்சாரமாக்காமல் கதையை நன்கு எழுதி உள்ளார். இறுதியில் ெசய்யாத ேவலைக்குக் காசு வாங்க மாட்ேடாம் என்று குறவர்கள் ெசால்வது வறுமையிலும் ெம்மைெ செம்மை

 4. Avatar
  பெங்களூரில் இருந்து கௌசல்யா. says:

  புதியன புகுதல்
  இந்த கதை கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கும் வரைபடம்.
  தேன் கூடு கலைக்கப்படாமலும் மரம் காப்பாற்றப் பட்டதும் தான் இந்த கதையின் கருத்து.
  ஆசிரியரின் சுபமான முடிவு மனதுக்கு இதமாக இருக்கிறது.

  வழக்கமான இனிமையான எளிமையான கதை அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *