மீளுதல்…

author
0 minutes, 1 second Read
This entry is part 14 of 17 in the series 2 மே 2021

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

கனவு கண்டா… வெளியிலே சொல்லக்கூடாது… என்றான் யாஸீன்

 

கதை உடாம…சும்மா இரிங்க மச்சான்.. யார் சொன்னது உங்களுக்கு? என்று கேட்டேன்

 

வடக்குத் தெரு டிஸ்க்கோ ஆலிம்ஸாதான் ஒரு தடவை ஜும்மா பயான்ல (மார்க்க பிரசங்கம்) சொன்னமாதிரி ஞாபகம் இரிக்கிது.. என்றான்

 

அடப்போப்பா.. எதாச்சும் கெட்டக்கனவு கண்டாதான் வெளியில சொல்லக்கூடாதுன்னு  ஹதீஸ்ல (இஸ்லாமிய போதனை நூல்) சொல்லியிருக்கு…என்றேன்

 

அப்ப …போனமாசம் நாம கேரளாக்கு போயிக்கும் போது வாங்குன காருண்யா லாட்டரில 

6 கோடி ரூவா அடிச்ச மாதிரியா.. உனக்கு கனவு வந்துச்சு. .. என விடைத்தான்..

 

எங்களின் தைக்காவின் அமீர் (ஆண்மீக தலைவர்) சேகுனாதான் சொல்வார்கள்

கனவுங்குறது  என்னண்டா.. மனுஷனோட  பின்னிப் பிணைஞ்சது…. மனசுல ஒழிச்சி வச்சிக்கிற ஹவாவை (ஆசையை) கனவா  கொண்டுவந்து நமக்கு காட்டும் …  உள்மனசுல படிஞ்சி கிடக்குற  எண்ணங்களின் வாசம்தான் கனவுகளுக்கு காரணம்… என்பார்கள்

 

எனக்கு என்னவோ வெளி நாட்டு கனவுகளாத்தான் வருது மச்சான்.. என்றேன்..

 

சேகுனாவும் கொழும்புலதான் இரிக்கிறாஹ. ரெம்ப அவசியம்டா ஒரு போனைப்போட்டு கேளுவேன்.. என்று சொல்லி சிரித்தான் யாஸீன்…

 

போனவாரம் மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு பின் மெதுவாக உடம்பு தேறிய நேரத்தில் கண்ட கனவை அசைபோட்டேன்….

 

அது… ஒரு  இளவேனிற்கால அந்திப்பொழுது.. அஜர்பைஜானின்  தலைநகரமான பாக்கு நகரில்..  பேஸ்மார்த்தபா பகுதியில்  இருந்து சாஹில் மெட்ரோவுக்கு செல்லும் வழியில்…அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் முளைவிட்டிருந்த  காட்டுக் காளான்களிலிருந்தும்.  காற்றில் அசைந்து கொண்டிருந்த வில்லோ மரத்து மஞ்சள் பூக்களில் இருந்தும் நறுமனம் வீசிக் கொண்டிருந்தது…

 

ஒரு பக்கம் எலக்ட்ரிக் ட்ராம் ஊர்ந்து செல்லும் அந்த பள பளக்கும் சிமெண்ட் சாலையில்  பவுண்டைன் ஸ்கொயரை ஒட்டி சாலையின் இடது புறத்தில்  சோவியத்காலத்தைய பிரசித்திப்பெற்ற ஜூம் பஜார் வணிக வளாகத்தின் முகப்பு வாயிலுக்குள்  குட்டி மகள் ஆயிஷாவின் கைகோர்த்து நுழைகிறேன்… 

சாலைகளில் அவசரகதியில் செல்லும் வாகனங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டே  துள்ளலுடன் நடந்து வரும் ஆயிஷா …  ஷாபிங் மாலுக்கா போறோம் வாப்பா.. என்கிறாள்..

 

அந்த வணிக வளாகத்தின்  உள்ளே சென்ற நான் திடீரென  வயது குறைந்து இளைமையும் மிடுக்குமாக உணர்கிறேன்….. உள்ளே ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல  பயன்படுத்தப்படும் 500 மீட்டர் தொலைவை அநாயசமாக கடத்தி செல்லும் சோவியத் காலத்தைய பழைய அதே நேரத்தில் உறுதியுடன் பிரமாண்டமாக தெரியும் ரஷ்ய எஸ்கலேட்டரில் மிகுந்த  கவனத்துடன் குட்டி மகள் ஆயிசாவின் பிஞ்சு கையினை இறுக்கி பற்றி முதல் அடி எடுத்து வைக்க முனைகிறேன்….

 

சேன்ந்தா.. சூ யோக்து… லாஸிம்து.. ( உன்னிடம் ஷூ இல்லையா.. அவசியம்) என்றான் அங்கிருந்த அஜர்பைஜானிய  செக்யூரிட்டி இளைஞன் ஒருவன்….

 

வெறும் செருப்புடன் சென்ற என்னை காலில் ஷூ அணிந்து கொண்டுதான் அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்கிறான்… என்ன செய்வது?

 

ஆப்ஷனும் அங்கேயேதான் இருக்கிறது.. கனவுகளில் மட்டும்தான் காரியங்கள் சடுதியில் நடக்கும் போலும்…

 

அங்கேயே ஒரு ட்ரேயில் புத்தம் புதிய பளிச் என  பாலிஸ் போடப்பட்ட பிரவுன் கலர் ஷூ ஜோடி ஒன்று தயாராக இருக்க, அதனை அவசர அவசரமாக  காலில் மாட்டிக்கொண்டு எஸ்கலேட்டரில் மகளுடன் பயணிக்கிறேன்… பாதி தூரம் கடந்த வழியில் …

 

திடீரென… சுற்றுப்புறம் துபாய் ஏர்போர்ட் டெர்மினல்  போன்று காட்சியில் பரிணாமிக்கிறது.. ஷு மாட்டும் இடத்தில் எனது பேண்ட் பக்கெட்டில் வைத்திருந்த  கருப்பு நிற மனி பர்ஸை மறந்து வைத்து வந்து விட்ட ஞாபகம் ஏற்படுகிறது. அதில் சில அமெரிக்க டாலர்களும், அஜர்பைஜான் மனாட்டுகளும், காந்தி மகான் சிரிக்கும் சில ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுக்களும் இருந்ததே… உடனே திரும்பி சென்று அந்த பர்ஸை திருப்பி எடுத்து வந்து விட வேண்டும் என மனம் பதைக்கிறது… 

 

ஆனால் நான் சென்று கொண்டிருக்கும் எஸ்கலேட்டர் மூலம் ஒரு பகுதியை அடைந்த பின் ரிட்டர்ன் வரும் எஸ்கலேட்டரில் அல்லவா வரவேண்டும்… தவறவிட்ட  பர்ஸின் நினைவுடனே மறு முனையை அடைந்துவிட்டேன்…

 

என்ன விந்தை..  என் கைப்பிடித்து வந்த குட்டி மகள் ஆயிஷா நான் மறுமுனையை வந்தடைந்தபோது  என்னுடன் இல்லை…. சுற்றுமுற்றும் கண்கள் தேடுகிறது…எங்கே ஆயிஷா? மனம் பதறி.. பின் உடனே மகளை மறக்கிறது…. 

 

நான் சென்றடைந்த  மறுமுனை … நான் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே  சென்றிருந்த  எங்கள் ஊரில் இருக்கும் அபூபக்கர் சித்திக் பள்ளி வாசலை போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு கட்டிடம்….

 

சரி..   எனது பர்ஸை மீட்டெடுக்க மீண்டும் வந்த முனைக்கே திரும்பலாம் என ரிட்டர்ன் வரும் எஸ்கலேட்டரை தேடும் பொழுது…. அந்த எஸ்கலேட்டர் அருகில் இருந்த  கபுர்ஸ்தான் ( மையவாடி) இருக்கிறது. கபுர்ஸ்தானின் வெளிர் பச்சை நிற சுற்று சுவரை ஒட்டி எஸ்கலேட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது..  அந்த மிக  ஒடுக்கமான , குறுகிய எஸ்கலேட்டரில் பயனிக்கிறேன்.. நாம் வந்தது போன்ற விசாலமானதாக இல்லையே இது.. என்ற கேள்வி உள்ளத்தில் எழுகிறது…

 

என்ன கொடுமை… அந்த எஸ்கலேட்டரில் பயணிக்கும் பொழுது இரு பக்கமும் பெரிய கூரிய ஆணிகள் பொறுத்தப்பட்டு மிக ஆபத்தானதாக இருக்கிறது..  விட்டலாச்சாரியாரின் மாயாஜால படங்கள் நினைவில் வந்து போகிறது… அவரின் திரைப்படங்களில் வரும் நாயகன் என்.டி.ராமராவ் கடந்து சென்றது போல , நானும்தான்  அந்த கூரிய ஆணிகளினூடே இலாவகமாக கடந்து செல்ல முயற்சி செய்கிறேன்…

 

எனினும் ஆணிகளால் கீறல் விழுகிறது…காயம் படுகிறது… உடல் ரனமாகிறது… என்னவிதமான எஸ்கலேட்டர் …. வரும் பொழுது பயணித்தது போன்று அகன்று, வசதியாக இல்லையே……. இதில் என்னுடன் பயணிக்கும் பலர் என் வாழ்க்கையில் சில காலம் பயணித்து பின் பகைத்துகொண்டவர்களும் புண்னகையுடன் வருகிறார்களே…. அவர்களுடன்  பேச்சு எதுவும் தொடுக்காமலேயே..மறுபகுதிக்கு வந்து சேர்ந்து விடுகிறேன் … வந்த இடமும் ஒரு அறிந்த இடமாகத்தான் தோன்றுகிறது…அது ..தூத்துக்குடி புகைவண்டி நிலையத்தில் முகப்பு வாயிலை வந்தடைகிறேன்…. அங்கே நிற்கும் ரயிலில் ஏறி பயணிக்கிறேன்…இன்னொரு கம்பார்ட்மெண்டில் முன்னாள் முதல்வர் ஒருவர் பயணம் செய்வதாக சொல்கிறார்கள்…

 

அய்யா எங்கே இருக்காரு..பார்க்கனுமே….எனக் கேட்கிறேன்….அவரை சந்திக்க அவர் அமர்ந்து இருந்த  பகுதிக்கு ஆவலுடன் செல்கிறேன்…

 

அந்த இடம் ஒரு ஆம்னி பேருந்தின் முன் பகுதியாக இருக்கிறது… முழுக்கை வெள்ளை சட்டை,  வேஷ்டி அணிந்த ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் முதல்வர்  அமர்ந்திருக்கிறார். அருகில் செல்கிறேன்…

 

இடையே அந்த ஆம்னி பஸ் சிலரால் மறிக்கப்படுகிறது…. ஒரு காரில் நாகப்பட்டினத்தில்  இருந்து வந்த முன்னாள் முதல்வரின் ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷமிடுகிறார்கள். அவர்களை நோக்கி முன்னாள் முதல்வர் வணக்கம் தெரிவிக்கிறார்..  

 

பின் முன்னாள் முதல்வரின் குழுவுடன் நானும்  சேர்ந்து பயணிக்கிறேன்..  ஊரில் இருக்கும் சின்னக்கடை பகுதிக்கு வந்தடைகிறோம்..அது ஒரு மழைகாலம் போல தோற்றமளிக்கிறது…சாலைகள் எங்கும் சகதியால் சூழப்பட்டிருக்கிறது… முன்னாள் முதல்வர்  வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு சகதி ஓடும் சாலையில் நடந்து முன்னே செல்கிறார்… நான் பின்னே செல்கிறேன்… திடீரென யாரோ எனது பின்னாலிருந்து கூட்டத்தை நோக்கி கற்களை வீசுகின்றனர்… யார் அவர்கள் என அறிய  திரும்பி பின்னோக்கி நடக்கிறேன்…. 15 , 16 வது வயது இருக்கும்… மூன்று சிறுவர்கள் அங்கே தென்படுகின்றனர்.. அவர்களை அங்கிருந்த  சிலர் கண்டிக்கின்றனர்.. அதில் ஒரு சிறுவன் நான் முன்பே அறிந்தவன்… சமீபத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த  அந்த சிறுவனல்லவா அது? அவன் எப்படி இங்கே? அதிசயிக்கிறேன்..

 

பின்பு மேடு போன்ற பாதையில் நான் மட்டும் பயணிக்கிறேன்…. உயர்ந்த மினாராக்கள் ( பள்ளிவாசல் மினாரட்) தென்படுகிறது.. இஷா ( பின் மாலை) தொழுகைக்கான பாங்கொலி காதில் விழுகிறது… மீண்டும் முன்னோக்கி செல்கிறேன்…. எங்களது ஊரில் இருக்கும் பெரிய குத்பா பள்ளி  காட்சியில் விரிகிறது… இடது புறம் ஹவுலில் ( நீர் தொட்டி) பலர் தொழுகைக்கு செல்ல வேண்டி ஒலு ( சுத்தம்) செய்து கொண்டிருக்கின்றனர். அங்கே.. கிடந்த  ஒரு மரமேசையில் ஜும் பாஜாரில் தொலைந்த எனது கருப்பு பர்ஸ் ஒய்யாரமாய் உட்கார்ந்துகொண்டு கன்சிமிட்டுகிறது….. மகிழ்ச்சியில் திளைத்தவாறே திடுக்கிட்டு விழிக்கிறேன்…

 

யாவும் கனவு யாவும் கனவு

இறையே நினைவு, 

இறையே நினைவு 

யாக்கை வாழ்வு குறைகளுக்கு…

 

எனப்பாடிய அகத்திய முனிவரின் அருள் வாக்கு அந்த மூன்றாம் ஜாமத்திலும் நினைவுக்கு வருகிறது…

 

இபடித்தான்… வெகுவான சுய நினைவில், மிகுந்த விழிப்புடன்  ஒரு அந்தி மயங்கிய பொழுதில், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் அலை பொங்கி, புரண்டோடும் அழகிய சோப்பிரயா ஆற்றின் கரையை ஒட்டிய பாங்க்ராக் பகுதியில் ,  சொய் 32 சாலையில் இருந்த செவன் லெவன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நன்பன் யாஸீன் சகிதம் நுழைகிறேன்…

 

சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமான்களை ஒருபக்கம் தனியாக நோட்டமிட்டுக்கொண்டிருந்த எனது எதிரில்  தோளில் தோல் பையுடன் திடுமென வந்து நின்று புன்னைகைத்த அந்த டிப் டாப் ஈரானிய இளைஞன்

 ” ஆர் யூ ஃப்ரம் இன்டியா? என வினவினான்

 

அவனது மூக்குக் கண்னாடிக்குள் உருண்டிருந்த  காந்த விழிகள் என்னை ஊடுறுவி இழுத்த  அந்த நொடியில்

 ” ஐ லைக் காண்டி வெரிமச்” என்றான்,

 

தொடர்ந்து “ஐ லைக் டு ஸீ காண்டி” என புன்முறுவலுடன் வலிந்து காந்தி மகான் படம் இடம்பெற்றிருக்கும் இந்திய ரூபாய் நோட்டுக்களை பார்க்க ஆவலாக இருப்பதாக என்னிடம் வேண்டினான்…

 

எந்த யோசனையும் அற்று அந்த காந்திதாசனின் விருப்பத்தை நிறைவேற்ற எனது  மனம் சடுதியில் முடிவு செய்தது. 

 

பேண்ட்டின் பின்புற  பாக்கெட்டில் இருந்த கறுப்பு நிற  பர்ஸை எடுத்து திறந்து, நான்  வைத்திருந்த  காந்தியார் பொக்கை வாயால் புன்னகைக்கும் சில  500, 1000 ரூபாய் நோட்டுக்களை காட்டி அந்த ஈரானியனின் காந்தி பக்தியை மெச்ச முயன்றேன்..

 

நான் பர்ஸை எடுத்து விரித்ததும்,   இந்திய ரூபாய்கள் மற்றும் தாய்லாந்துபாட்டுகள் ஒரு சிறு கத்தையாக இருந்தது,  நான் எதிர்பாராத அந்த நொடியில் கரன்ஸிக் கத்தையை மொத்தமாக கையிலெடுத்து சீட்டுக்கட்டைப் போல கூட்டி, விசிறி, கலைத்து காந்தி நோட்டுகளை முத்தமிட்டு ” ஐ லவ் காண்டி” என ஒரு குழந்தையை தொட்டு எடுப்பது போல கொஞ்சத் துவங்கினான்…கொண்டாடினான்… அவனின் கொண்டாட்டம் எனக்கு தந்த மகிழ்ச்சி சில நொடிகளில் கலைந்தது..

 

நான் பனத்தை திரும்ப வாங்க எந்த முனைப்பும் காட்டாமல் பேயறைந்தார் போல சில நொடிகள் நிலைத்திருந்து,  ஹேய்…. வாட் இஸ் திஸ்… கிவ் பேக் டு மி… 

என அதனை திரும்பப் பெற லேசாக வேகம் காட்டும் வேளையில் அந்த இளைஞன் ” வெய்ட்.. வெய்ட்…என பனத்தை திரும்ப தருவது போல சாடை காட்டி  மேலும் கீழும் போக்கு காட்டினான்..

 

ஒரு வழியாக அவன் வலது கையால் பனத்தை திரும்பத் தந்துவிட்டான் .. என்று  நான் நிம்மதிஅடைந்த  அதே நொடியில்…   நான் அறியாமல் அவனது இடது கையால் எனது கன்னைக்கட்டி களவாடிய சில ரூபாய் நோட்டுகளை தனது பேண்ட் பாக்கெட்டில் அவன் சொறுக முயல,,,  ஏற்கனவே பின்னே இருந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த நன்பன்  யாஸீன்   களமிறங்கி அவனது இடது மனிக்கட்டை  முறுக்கி களவாடிய பனத்தை அவனிடமிடுந்து பிடுங்கி ” ஒன்ட்ட காசடிச்சிட்டான்” என பாதி பனக் கத்தையை என்னிடம் காட்ட..

 

 

இருவரும் ஒரு நேரத்தில் பர்சில் இருந்த பனத்தை பிரித்து ஆளுக்கு பாதியாக  என்னிடம் தந்தபோது எனக்கு மயக்கமே வந்து விட்டது,   ” தும் பாஹல்” என யாஸீனை ஏதோ சொல்லிக் கொண்டே விருட்.. என கடையைவிட்டு இறங்கி நடையைக் கட்டினான், அவனை தொடரவோ, கூச்சல் போடவோ முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தேன்.  

 

தாய்லாந்தில் பரவலாக நிலவும் ப்ளாக் மேஜிக் வித்தையில் இருந்து நொடியில் தப்பிய நோட்டுகளை கையிலெடுத்தேன்..தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்ய தேஜூம், காந்தி மகானும் எப்பொழுதும் போல புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.

 

குறளி வித்தையில மாட்டுனத வெளியில சொல்லக்கூடாது.. கெட்ட கனாவா நினைச்சு  மறந்துறனும். என்றான் யாஸீன்..

இந்த மாய நிலையில் இருந்து சுய நிலைக்கு திரும்ப ரிலாக்ஸாக “சோப்பிரயா ஆற்றை நோக்கி” நானும்  யாஸீன் நடக்க துவங்கினோம்… 

————————————————————————–

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

மின்னஞ்சல் : naina1973@gmail.com

Series Navigationயதார்த்தம்மீன்குஞ்சு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *