அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

This entry is part 17 of 17 in the series 2 மே 2021

ஜோதிர்லதா கிரிஜா

(நவம்பர், 1992 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் அன்பைத்தேடி எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)

        பகுத்து அறியாமல் எதையும் ஏற்கக்கூடாது எனும் பிடிவாதமும், மாறுபட்ட கருத்துக் கொண்டிருப்பவர்களே யானாலும், அவர்களுடன் விவாதித்துத் தனது சிந்தனையை மறு பரிசீலனை செய்யும் தன்மையும்  கொண்டிருந்த அஞ்சலி, நாத்திகர்களின் தலைவர் என்று போற்றப்பட்ட நாகரத்தினத்தின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்துடன் கூட்டத்துக்கு முன் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டதில் வியப்பதற்கு ஏதிமில்லைதான்.  ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ எனும் கூற்றை அடங்கிய பலகை மேடையின் மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. ஐந்தரை மணிக்குத் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய கூட்டம் தலையாய பேச்சாளர் இன்னும் வந்து சேராமையால் தாமதப்பட்டுக்கொண்டிருந்தது. கடைசியில் ஒரு வழியாக ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த நாகரத்தினம் கூப்பிய கைகளுடன் அவையோரைப் பார்த்தவாறு சில நொடிகள் நின்றபின், மேடை ஏறித் தாமதத்துக்கு வருந்திய பின் தமது இருக்கையில் அமர்ந்தார்.

       அஞ்சலி பேரார்வத்துடன் நிமிர்ந்து அமர்ந்தாள். பகுத்தறிவுப் புரவலர் எனப் போற்றப்பட்ட நாகரத்தினம் அந்த அடைமொழிக்கு எல்லா வகைகளிலும் தகுதியுள்ளவரே எனும் அசைக்க முடியாத முடிவுக்கு அவரது அன்றைச் சொற்பொழிவைக் கேட்டதும் அவள் வந்தாள். அவரது ஒவ்வொரு வாக்கியமும் ஆத்திகர் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும், பழக்க வழக்கங்கள் மீதும் விழுந்த சவுக்கடி என்று அவள் எண்ணினாள்.

       கடவுள் எனும் அமானுடப் பேராற்றல் உண்டா இல்லையா என்பது குறித்து அண்மை நாட்களாகக் குழம்பிய மனநிலையில் இருந்து வந்த அவளுக்கு அவர் தமது பேச்சில் அள்ளித் தெளித்த கடவுள் எதிர்ப்புக் கருத்துகளும் ஆவேசச் சாடல்களும் கிட்டத்தட்ட ஒரு தெளிவை ஏற்படுத்தி இருந்தன. இருந்தாலும் அது தெள்ளத் தெளிவாக இருக்கவில்லை. குழம்பிய குட்டை போல் அவளது மனநிலை இருந்தது.

       நாகரத்தினத்தைத் தனியாகச் சந்தித்து அவரோடு நிறைய வாக்குவாதம் செய்து, குழந்தைப் பருவந்தொட்டுத் தன் மனத்தில் விதைக்கப்பட்டு வந்துள்ள பழங்கருத்துகளுக்கு மாறாக  அண்மை நாளாக எழுந்து வீழும் எண்ணங்களுடன் பெரிய அளவில் ஒத்துப்போன அவர் கருத்துகள்தான் அறுதியானவையா என்பது பற்றிய குழப்பமற்ற தீர்வைப் பெற அவள் அவாவினாள்.

       கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த பின் வெகு நேரம் வரையிலும் நாகரத்தினத்தின் மணியோசைக்குரல் இடி முழக்கமாய் அவள் செவிகளில் ஒலித்தவாறாக இருந்தது. ‘என்ன ஆணித்தரமான பேச்சு! என்ன இறுதியான முடிவுகள்! இதற்கு மேல் கருத்தே கிடையாது என்று அறிவிக்கிற அழுத்தம்! அடேயப்பா!’     கூடத்தில் ஒரு வார இதழைக் கையில் பிடித்துப் புரட்டிக் கொண்டிருந்த போதிலும், அவள் விழிகள் அதன் வரிகளில் நகர மறுத்தன.

       வழிபாட்டு அறையில் அரைக் கதவு மூடிய நிலையில் முணுமுணுவென்று அவள் அப்பா பதஞ்சலி சாஸ்திரிகள் உச்சரித்துக் கொண்டிருந்த சுலோகங்களின் தெளிவற்ற ஓசை அவள் செவிகளுள் புகுந்து, அப்போதைய மனநிலையில் ஒரு கேலிப் புன்னகையைத் தோற்றுவித்தது.

        ‘இந்த இருவரில் யாரை ஏற்பது? அப்பாவையா, நாத்திகம் நாகரத்தினத்தையா?’

       திடீரென்று அடித்த காற்றில் வழிபாட்டு அறைக்கதவு முழுவதுமாய்த் திறந்து கொண்டதில், அதுகாறும் அரைகுறையாய்த் தெளிவற்று வந்துகொண்டிருந்த சொற்கள் அழுத்தம் பெற்று அவள் செவிகளில் நன்றாக விழுந்தன.

        ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாமை வேண்டும் …’

       அவள் அப்பா வடமொழியில் கடல் என்றால், தமிழில் பெருங்கடல். காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் கடவுளரின் படங்களுக்கு முன்னால் உட்கார்ந்து வழிபட்ட பிறகே உணவு அருந்துவார்.

       அவளது அறிவுக்கும் புரிந்துணர்வுக்கும் அப்பாற்பட்ட – அல்லது அவள் ஒப்புக்கொள்ளாத – சில வைதீகர்களில் பெரும்பான்மையோரைப் போலின்றி, அறிவார்ந்த முற்போக்குக் கருத்துகளைக் கொண்டிருந்தவர் என்கிற வகையிலும், இங்கர்சாலைப் போற்றுகிற அளவுக்கு ஒரு காலத்தில் நாத்திகராக இருந்து பின்னர் மாறியவர் என்கிற முறையிலும் அவர் மீது அவளுக்கு மரியாதை உண்டு. எனினும் உலகப் புகழ் பெற்ற நாத்திகர் இங்கர்சாலின் கட்டுரைகளைப் படித்த பின் ஒருவர் எவ்வாறு ஆத்திகராக மாற முடியும் என்பது அவளது வினாவாக இருந்தது.          

       அவளைப் பொறுத்த வரையில், அடிப்படைக் கல்வியறிவும் நல்ல நூல்களின் வாசிப்பும் விளைவிக்கும் அறிவார்ந்த சிந்தனையின் முடிவாகவே இறைவன் பற்றிய கேள்விக்குறி அவளுள் எழுந்திருந்தது.

       பழைமை, புதுமை ஆகிய இரண்டினுடையவும் கலவை அவள் அப்பா என்றால், பழைமையின் முழுமையான உருவம் அவள் அம்மா பார்வதி. அதிகம் படிக்காதவள். சிறு வயதில் திணிக்கப்பட்ட கருத்துகளை எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அப்படியே அவள் ஏற்றுக்கொண்டவள். எனவே, தன் தாயைப் பொறுத்த வரை அவரால் அந்த எல்லையைத் தாண்டி வர இயலாது என்பதால் அவரோடு அவளுக்கு எத்தகைய போராட்டமும் இல்லை! ஆனால் மெத்தப் படித்தவரான தன் அப்பாவுடன் அவளால் கருத்து மோதல் கொள்ளாதிருக்க முடியவில்லை.

       அன்று பிற்பகல் நாகரத்தினத்தின் சொற்பொழிவைக் கேட்க அன்று மாலை தான் வெளியே போகப் போவதாக அவள் அவரிடம் கூறிய போது, “போய்விட்டு வா! எல்லாக் கருத்துகளையும் தெரிந்துகொண்டு அறிவுப் பூர்வமாக அலசி நீயே ஒரு முடிவுக்கு வருவதுதான் சரி,” என்று சொல்லிவிட்டார்!

       அவரிடம் அவளுக்குப் பிடித்திருந்தது இந்தப் பேரியல்புதான். மாறுபட்ட கருத்துகளை மதிப்பது கூடப் பெரிசில்லை. ஏனெனில் அவரே ஒரு காலகட்டத்தில் நாத்திகராக இருந்தவர் என்கிற அளவில் இந்த மனப்பாங்கில் வியக்க ஏதுமில்லைதான். ஆனால் தாம் வெவ்வேறு நிலைகளைக் கடந்து வந்து தற்போது கடவுள் நம்பிக்கை யுள்ளவராகி விட்டதால், தமது அந்த இறுதி நிலைக்கு அப்பால் வேறொன்றும் இருக்க முடியாது, அதையே அவள் ஏற்க வேண்டும் என்று அவர் சாடையாகவோ, மென்மையாகவோ கூட வற்புறுத்தவில்லை என்னும் பரந்த மனப்பான்மையில்தான் அவரது பெருமையெல்லாம் அடங்கியிருப்பதாக அவள் கருதினாள். அந்த முறையில், ‘நான் சொல்லுவதே சரி’ என்று அடித்துச் சொல்லுகிற நாகரத்தினத்தை விட அவர் உயர்ந்தவர்தான்! ‘இந்தப் பெருந்தன்மைக்காக அப்பாவைப் பாராட்டலாமே தவிர, அதற்காக நாகரத்தினத்தை ஒதுக்கிவிடலாமா என்ன?’ என்றெண்ணி அவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

        ‘அப்பாவும் அந்த நாகரத்தினமும் ஒரே மேடையில் ஒரு பட்டி மன்றப் பாணியில் அவளுள் தோன்ற அவள் இதழ்கள் வெளிப்படையாகவே புன்னகை கொண்டன.

        வழிபாட்டு அறைக்கதவு திறந்துகொண்டது. பதஞ்சலி சாஸ்திரிகள் வெளியே வந்தார். ‘அதென்னமோ தெரியவில்லை. வழிபாடு முடிந்த பின் இந்த அப்பாவின் முகத்தில் எங்கிருந்துதான் அப்படி ஓர் ஒளி வருகிறதோ! இதற்கு அறிவார்ந்த காரணம் இருந்தே ஆகவேண்டும் …’

        “என்னம்மா! நாத்திகத் திலகம் நாகரத்தினம் என்ன சொன்னார்?”

        கையிலிருந்த வார இதழை மூடி வைத்த அவள், “… ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என்றார்!” என்று அழுத்தந்திருத்தமாக – அக்கருத்தில் தனக்கு உடன்பாடே எனும் அறிவிப்பும், அவரது கருத்துக்கு அது மாறானது என்பதால் கிண்டலும் ததும்ப – உரத்த குரலில் கூறியவண்ணம் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள்.

       பதஞ்சலி வாய்விட்டுப் பெருங்குரலில் தமக்கே உரிய பெருந்தன்மையுடன் சிரித்த போது, தான் அவ்வளவு அழுத்தமாக அதைச் சொல்லி இருந்திருக்கலாகாது என்றெண்ணி அவள் வருத்தமுற்றாள்.

        அடுத்து அவர் சொன்னதுதான் அவளைத் தூக்கிப் போட்டுவிட்டது.

       “அந்த ஆள் சொன்னது சரிதான்!”

 அவள் ஒரு நம்பாமை விழிகளில் தெரிய அவரை ஏறிட்டாள்.

        “என்ன அப்பா சொல்லுகிறீர்கள்?”

        “உட்கார், அஞ்சலி!” என்ற அவர் தாமும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

        “கடவுளையே எல்லாவற்றுக்கும் நம்பக்கூடாது. மனிதர்கள் முழுக்க முழுக்கக் கடவுளை நம்பினால் சோம்பித் திரியத் தொடங்கி விடுவார்கள் என்பதால், ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள்’ என்பது சரிதான்.”

        “அவர் அந்தப் பொருளில் அதைச் சொல்லவில்லை. கடவுள் என்பதாக ஒன்று அறவே இல்லை எனும் பொருளில்தான் சொன்னார்.”

        “நம் சாஸ்திர நூல்களில் சொல்லியுள்ளவற்றுக்கு நகரத்தினம் தமக்குத் தோன்றியபடி எல்லாம் பொருள் கொள்ளலாம்.  ஆனால் நான் மட்டும் சொந்தமாக வியாக்கியானம் பண்ணக் கூடாதாக்கும்!” – அப்பாவின் நக்கலான இந்த அடியில் எல்லாமே அடங்கி இருந்ததாக அஞ்சலிக்குத் தோன்றியது.

        “அப்பா! எனக்கு ஓர் ஆசை!”

        “என்ன?”

        “உங்களையும் அந்த நாகரத்தினத்தையும் ஒரே மேடையில் மோத விட்டுப் பார்க்கவேண்டும்!”   

        “பட்டிமன்றம் மாதிரி?”                                                        

        “ஆமாம்.”                                                                     

        “தேவையே இல்லை. அவரவர் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரவர் பாடு! இதில் மற்றவர் தலையீட்டுக்கு வேலையே இல்லை. என்னுடைய கடவுள் நம்பிக்கை நாகரத்தினத்தை என்ன செய்யும்? அல்லது அவரது அவநம்பிக்கை என்னைத்தான் என்ன செய்யும்? கடவுள் பற்றிய தர்க்கங்களும் சண்டைகளும் சிறிதும் தேவை இல்லாதவை!”

        “நீங்கள் சொல்லுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. தர்க்கங்களும் கருத்து மோதல்களும் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகின்றன; வளப்படுத்துகின்றன. சிந்தனைத் தேக்கத்தால் கருத்து வளர்ச்சி பெற முடியாமல் போனவர்களுக்கு இத்தகைய கருத்தரங்குகள் அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடங்கள் போன்றவை.”

        “இதில்  உண்மை ஓரளவுக்குத்தான் உண்டு! ஏனெனில் கருத்தரங்கில் கூடும் கூட்டத்தினர் பல்வேறு மட்டங்களில் சிந்தனைத் தேக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பாதிப்பு விளையும். மேடைப் பேச்சாளர்களை விடவும் முதிர்ந்த கருத்து வளம்கொண்ட சிலர்  பேச்சுக் கேட்க வரும் கூட்டத்தினரிடையே கூட இருக்கக்கூடிய சாத்தியக்கூறும் உண்டு. இவர்கள் எழுந்து குறுக்கிட்டு வாதிடும் போது, சில வேளைகளில் மேடையில் நிற்பவர்கள் கூட இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நேரும்!”

        “ஆகக்கூடி, வெவ்வேறு அளவில் வெவ்வேறு பாதிப்பைக் கருத்தரங்குகள் ஏற்படுத்தவே செய்யும். அதைத்தான் நானும் சொல்லுகிறேன்.”

        “கடவுளைப் பொறுத்தவரை கருத்தரங்கு எதுவும் தேவை இல்லை என்பதற்காகச் சொல்ல வந்தேன். கடவுள் என்பது சொல்லி, விளக்கிப் புரிவதன்று. அது ஒரு மனிதன் தானே அறிந்து, உணர வேண்டிய ஒன்றாகும்! அதில் மாற்றானின் தலையீட்டுக்கு வேலை இல்லை என்பதால் கருத்தரங்கெல்லாம் தேவை இல்லை என்றேன்.”

        “அப்படி நீங்கள் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது, அப்பா! மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நடக்கும் மனிதாபிமானமற்ற மோசடிகளை மேடைகளில் விவாதிப்பதால் எல்லா மனிதர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வரவே செய்யும்.”

        “நீ பாதை மாறிப் போகிறாய், அஞ்சலி! நாம் இப்போது, ‘கடவுளை நம்புவது அல்லது நம்பாதிருப்பது’ என்பதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். மதத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ நடக்கும் மோசடிகளைப் பற்றி அன்று. ஏனென்றால், கடவுளின் பெயரால் நடக்கும் மோசடிகளுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை! அவை மனிதர்கள் செய்யும் மோசடிகள்.”

        “உண்மைதான். ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால்…நம் சாஸ்திரங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் என்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளதே?”

  “பெண்களுக்கும், நசுக்கப்பட்டவர்களுக்கும் ஊறு செய்தவர்கள் உயர் சாதியினர் என்று தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக்கொண்ட தன்னலக்கார இனத்தினர்! அம்மா! பெண்ணைக் கண்ணீர் சிந்தச் செய்யலாகாது என்று முதல் சுலோகத்தில் விதித்த மனு அடுத்த சுலோகத்திலேயே பெண்ணைக் காலமெல்லாம் அழச் செய்யும் அநீதிகளைப் புரிய ஆணுக்கு அதிகாரம் வழங்குவானா? இவை யெல்லாம் தன்னலம் பிடித்தவர்கள் செய்த இடைச்செருகலகள் என்பது இதிலிருந்தே நமக்குப் புரிய வேண்டாமா? … நம்முடைய பேச்சு திசை மாறி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது…”

 “இல்லை, அப்பா. சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. நாகரத்தினம் இவை பற்றியெல்லாம் நிறையவே பேசினார்! கடவுளும் மதமும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், மதநூல்களில் உள்ள குறைபாடுகளை அவர் அடுக்குவதில் என்ன தவறு?”

 “எந்தக் குறைபாட்டைப் பற்றியும் எவரும் பேசலாம். அந்த உரிமையை மறுக்கவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கைக்கும் மதப்பற்றுக்கும் கூடத் தொடர்பில்லை என்பேன் நான்! எந்த மதத்தையும் சாராமல் கடவுள் நம்பிக்கை கொள்ள முடியும்.”

 “நம்பிக்கை கொள்ளாதிருக்கவும் முடியும்.”

 “நம்பிக்கை என்பது மன உறுதி யளிக்க வல்லது. ‘பாசிடிவ்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோமே அத்தன்மையது. அவநம்பிக்கை என்பது உள்ள உறுதியைச் சிதைப்பது. ‘நெகடிவ்’ என்கிறோமே, அது. ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வது என்பது ஆரோக்கியமானது என்றும் அவநம்பிக்கை என்பதோ முட்டுக்கட்டை போன்றது என்றும் மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பகுத்து அறிவதே பகுத்தறிவு. பகுக்க்காமலே எதையும் எறிவதன்று!”

 “அப்படியானால், கடவுள் என்பது பொய்யே யானாலும், நம்புதல் தரும் மனநிம்மதிக்காக  அதைப் பிடித்துக்கொண்டு தொங்கலாம் என்கிறீர்கள்!”

 “நீ எப்படி அர்த்தம் செய்துகொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. கவலையும் இல்லை. நாகரத்தினத்தின் அவநம்பிக்கையில் குறுக்கிட எனக்கு உரிமை இல்லையெனில் எனது நம்பிக்கையை ஆட்சேபிக்க அவருக்கும் உரிமை இல்லை. என்னைக் கேலி செய்யும் உரிமை அவருக்கு இருப்பின், அவரைக் கேலி செய்யும் உரிமை எனக்கும் உண்டு.”

        “இது கேலி செய்வதற்கு உள்ள உரிமையைப் பற்றிய தர்க்கம் இல்லை, அப்பா! கடவுள் நம்பிக்கை நல்லதா கெட்டதா என்பதே கேள்வி. நீங்கள் அது நல்லதென்கிறீர்கள். நாகரத்தினமோ கடவுள் நம்பிக்கையால் இந்த நாடே கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது என்று ஆணி அடித்தாற்போல் அறிவிக்கிறார். கர்மவினை, முந்திய ஜென்மத்துப் பாவம், புண்ணியம் இவையெல்லாம் அபத்தம் என்கிறார். ஒருவன் ஏழையாய்ப் பிறப்பதும் ஏழையாகவே சாவதும் முந்திய பிறவியில் அவன் செய்த பாவத்தின் பயன் என்று சொல்லிச் சொல்லியே மக்களைச் சோம்பேறிகளாகவும் செயலற்றவர்களாகவும் ஆக்கிவிட்டோம் என்கிறார். எல்லாமே முந்திய பிறவியின் சங்கிலித்தொடர் நிகழ்ச்சிகளாயின், காவல்துறை எதற்கு? நீதிமன்றம் எதற்கு? என்னை ஒருவன் அடித்துக் காய்ப்படுத்தினால், ‘போன ஜென்மத்தில் நான் இவனை அடித்ததன் விளைவு’ என்று நான் சகித்துக்கொள்ள வேண்டியதுதானே! நான் ஏன் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்? அல்லது, ஏன் அவனைத் திருப்பி அடிக்கவேண்டும்?”

        “திருப்பி அடிக்காததோடு மறு கன்னத்தையும் காட்டு என்றுதானே இயேசு கிறிஸ்து கூடச் சொல்லுகிறார்? அதையேதான் மகாத்மா காந்தியும் வேறு மாதிரி சொன்னார். அகிம்சை, திருப்பித் தாக்காமை இரண்டும் அவர் சொன்ன மந்திரங்கள். மிகப் பெரிய மகாத்மாக்கள் பேசுவது ஒரே மொழியாகத்தான் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. மகாத்மாக்களின் மொழி நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கும் துராத்மாக்களுக்கும் புரியாமற் போவது மகாத்மாக்களின் தவறில்லையம்மா. கர்மவினை என்பதன் உட்கிடையான நோக்கம் வன்முறைகளைத் தவிர்ப்பதன் பொருட்டானது. ஒருவன் துன்பப்படுவது அவனது கர்மவினை என்று சொன்னவர்கள்தான் வசதி படைத்தவர்கள் பிறரின் துன்பங்களைப் போக்கப் பாடுபட வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதை நீ ஏன் கவனிக்கவில்லை?”

        “இது அபத்தமான முரண்பாடாக இருக்கிறதே!”

        “இல்லையம்மா! ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பதன் முரண்பாடு ‘ஐயமிட்டு உண்’ என்பாயா?”

        அஞ்சலிக்கு வாயடைத்துப் போயிற்று ‘உண்மைதான்! கருமவினை உண்மையோ பொய்யோ, துன்பப்படுகிறவர்களையும் ஏழைகளையும் அவர்கள் உய்ய ஏதும் செய்யாமல்,  ‘அது அவர்கள் செய்த பாவம். அதனால் நீ அவர்களுக்கு உதவ வேண்டாம்’ என்று எந்த மதநூலும் சொல்லவில்லை. மாறாக மனிதர்களுக்குத் தொண்டு செய்யுமாறே அவை போதிக்கின்றன.’

        “சரி, அப்பா! உங்களுக்குக் கர்மவினையில் நம்பிக்கை உண்டா?”

        “உண்டு.”

        “அந்த நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது?”

        “மிக நல்ல மனிதன் ஒருவனுக்குத் துன்பங்கள் தொடர்ந்து வந்து தொல்லை தருகின்றன. இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று நீ நினைக்கிறாய்? எந்த ஒன்றுக்கும் காரணம் அல்லது அடிப்படை இருக்கவேண்டுமல்லவா? ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் – அதாவது ‘ரீயாக்‌ஷன்’ என்கிறோமே, அது – ஏற்பட்டே தீரும் என்பது விஞ்ஞான அடிப்படையிலான விதியாகும். இப்போது நல்லவனாக இருக்கும் ஒருவன் நியாயமற்ற முறையில் துன்பங்களுக்கு ஆளாகிறான் என்றால், இப்போதைய அவனது நிலை எப்போதோ அவன் புரிந்திருக்கும் செயலின் எதிர்விளைவே ஆகும்! இந்தப் பிறவியில் செய்யாத கெட்டதை அவன் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும் என்று கொள்ள வேண்டியதுதானே அறிவுடைமை? இதைத் தவிர உன்னால் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? அதனால்தான் நம்மவர்கள் – அதாவது இந்துக்கள் – எப்போதும் நல்லதே செய்யவேண்டும்; தீயது செய்யின், இப்பிறவியில் இல்லாவிட்டாலும், அடுத்த பிறவியில் அனுபவிப்போம்’ என்கிறார்கள். கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் கூட மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை ஏற்பவர்கள். இன்னும் சொல்லப் போனால் அதை வற்புறுத்துபவர்கள்.  ‘மனிதன் செய்ய வேண்டியது அதைத்தான். கடவுள் வழிபாடு அன்று’ என்றும் கூறுகிறார்கள். உணமைதான். ஆனால் அறிவுஜீவிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளும் இந்த நாத்திகர்கள் நல்லவர்கள் துன்புறுவதற்கான காரணம் இன்னதென்று சொன்னதில்லை! சொல்ல முடிந்ததில்லை! சிலர் இதனைத் தற்செயல் என்கின்றனர். நல்லவன் துன்புறுவதைத் தற்செயல் என்று விமர்சித்தல் அறிவுடைமையாகாது. அந்தச் செயலுக்கும் ஒரு காரணம் இருந்துதானே தீரவேண்டும்?”

        “எனக்குத் தலை சுற்றுகிறது, அப்பா!”

        பதஞ்சலி சிரித்தார்: “ஒரு காலத்தில் இந்த நாகரத்தினத்தை விட மோசமான நாத்திகனாக இருந்தவன் அம்மா நான்! அனுபவங்களும் நடுவுநிலையான சிந்தனைகளும் ஏற்பட, ஏற்பட, எண்ணங்கள் மாறுகின்றன. சிலர் இன்னும் திடமான நாத்திகர்களாகவும் மாறக்கூடும்தான்! எல்லாம் அவரவர் உள்ளத்து முதிர்ச்சியைச் சார்ந்த விஷயம்.”

        “எனக்கு ஒன்று தோன்றுகிறதப்பா.”

        “என்ன?”

        “கடவுள் உண்டா இல்லையா எனும் சிந்தனையே வேண்டாம். ‘மனிதர்கள் எல்லாரும் அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஏழை எளியவர்க்கும், இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும் எனும் கொள்கையைக் கடைப்பிடித்தால் போதுமானது’ என்று தோன்றுகிறதப்பா!”

        “இந்தச் சிந்தனையைக் கடந்து வந்தவனம்மா நான். நீ சொல்லும் செயல்கள் மிக உயர்ந்தவை. அதில் துளியும் சந்தேகமே கிடையாது. இவற்றை எல்லாரும் – குறைந்த பட்சம் பெரும்பாலோர் – கடைப்பிடித்தால், இந்த உலகம் ஒரு சொர்க்கமாகிவிடும். ஆனால் அந்த எண்ணம் மனிதர்களுக்கு இலேசில் வருவதில்லை. அதனால்தான் கடவுள் பற்றிய உணர்வு அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டியதாகிறது. மேலே ஒருவன் தங்கள் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனும் உண்மையான அச்சம் மனிதனுக்கு இருந்தே தீரவேண்டியுள்ளது. அப்படி ஓர் அச்சம் இருப்பின், மனிதன் ஒரு சில வேளைகளிலேனும் நல்லவனாக நடப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதையே மாற்றி, அவன் குற்றங்களைச் சில நேரங்களிலேனும் செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லலாம்.  நாத்திகனுக்குக் கடவுள் பற்றிய அச்சம் இல்லாததால், அவன் குற்றங்கள் செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.”

        “அப்படியானால் ஆத்திகர்களை விடவும் நாத்திகர்கள் மேலானவர்கள் என்றா

சொல்லுகிறீர்கள்?”

        “இல்லை, இல்லை! நல்லவன் எந்த நிலையிலும் பொதுவாக நல்லவனாகத்தான் இருப்பான். ஆனால், உண்மையான ஆத்திகனுக்கு – ‘உண்மையான’ என்று நான் சொல்லுவதைக் கவனிக்க வேண்டும் – ஒரு தார்மிக அச்சம் கண்டிப்பாக இருக்கும். மேலும், ‘நம்பிக்கை’ என்பது நான் முன்பே சொன்னது போல் மன உளைச்சலைக் குறைக்கக் கூடியது. நிம்மதியைத் தரக்கூடியது.  அது நாத்திகத்துக்குக் கிடையாது. எது  எப்படியானாலும், நீயே சிந்தித்துத் தெளிவு பெற வேண்டும் என்பதே எனது ஆசை. நான் சொல்லுகிறேன் என்பதற்காக நீ கடவுளை ஏற்கவும் வேண்டாம்; நாகரத்தினத்தின் கவர்ச்சியான வாதங்களில் மயங்கி நிராகரிக்கவும் வேண்டாம்.”

       அஞ்சலி மவுனமானாள். அம்மா பார்வதி அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்தாள்: “பேச்சு முடிந்ததா? சாப்பிட இலை போடலாமா?”

        இருவரும் சிரித்துக்கொண்டே எழுந்தார்கள்.

        “அதிகம் படிக்காத உன் அம்மாவுக்கு இது போன்ற குழப்பமெல்லாம் கிடையாது. மெத்தப் படித்த மூஞ்சூறுகள்தான் குழப்பத்திலும் சந்தேகங்களிலும் சிக்கிக்கொள்ளுகிறார்கள்,” என்று மேலும் சிரித்தபடி பதஞ்சலி மகளுக்கு அருகே இலை முன் உட்கார்ந்தார்.                                                                           சாப்பிட்டுக்கொண்டே அவர் பேச்சைத் தொடர்ந்தார்: “அஞ்சலி! நீ கடவுள் நம்பிக்கை உடையவள் என்று வைத்துக்கொண்டு இப்போது உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்….”

        “கேளுங்கள், அப்பா!.”

        “பக்தி என்பது என்னவாக இருக்குமென்று நீ நினைக்கிறாய்?”

        “கடவுள் பற்றிய தீர்ந்த முடிவுக்கே நான் இன்னும் வராத போது. இதற்கு என்னால் எப்படி அப்பா  பதில் சொல்ல முடியும்? பக்தியைப் பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.”

        “பக்தி என்றால் மிக மேலோரிடம் வைக்கும் அன்பு என்றும் சொல்லலாம்.  மேலோரிடம் அன்பு வைப்பவர்கள் உண்மையில் மேலானவர்களாக இருந்துதான் ஆக வேண்டும்.  மேலான குணங்களையும் நடத்தைகளையும் கொண்டவர்களே மேலானவர் ஆக முடியும். ஆக, பக்தி என்பதன் சரியான பொருள் நன்னடத்தை என்பதேயாகும். நன்னடத்தையில் ஒருவரின்  நாணயம், ஏழை எளியவரிடம் அன்பு போன்ற அரும் பெருங் குணங்கள் அடங்குகின்றன.”

        “ரொமபச் சரியான விளக்கம்!”

 “பக்தியின் மற்றோர் அம்சம் மெய்ம்மறத்தல், கடவுளிடம், ‘எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு’ என்று கேட்பதற்குப் பதில் – அதாவது  பொருளாதார அடிப்படையில் கார், பங்களா, இலட்சக்கணக்கான பணங்காசு என்று கேட்பதற்குப் பதில் – எனக்கு நல்ல தன்மைகளைக் கொடு, தெளிவான அறிவைக் கொடு, பிறருக்குப் பணி செய்யும் பொருட்டு பிணியற்ற வாழ்வைக்கொடு என்று கேட்க வேண்டும். இப்படி யெல்லாம் நல்லவற்றுக்காக மட்டுமே வேண்டுகையில் விளையும் புனிதம் நிறைந்த இறையுணர்வின் விளைவாக ஒருவர் தான், தனது எனும் உணர்வுகள் மங்கி – அல்லது  நீங்கி – உடம்பின்பாற்பட்ட உணர்ச்சிகளையும் அறவே மறந்து போகும் உன்னத அனுபவம் ஏற்படுகிறது. இடையறாத பக்தியில் இவ்வாறு திளைப்பதோடு நல்லவராக வாழ்தலையே குறியாகவும் கொண்டோர்  முகத்தில் ஓர் ஆன்மிகப் பேரொளி குடிகொள்ளுகிறது. இவர்கள் தன்னலத்தால் பொய் சொல்லும் போதும், தவறுகள் செய்யும் போதும், பேராசையால் நேர்மை தவறும் போதும் அந்த முகத்து ஒளி குன்றுகிறது.” –  இவ்வாறு சொல்லிக்கொண்டு போன அப்பாவின் முகத்தில் அவர் வழிபாட்டு அறையிலிருந்து வெளிவருகிற போதெல்லாம் தோன்றுகிற ஒளி குறித்துத் தான் சற்று முன்னர் வியப்புற்றது அப்போது அஞ்சலிக்கு ஞாபகம் வந்தது.

        அவள் மறுபடியும் ஒரு மவுனத்தில் ஆழ்ந்தாள். ‘இவ்வளவு பேசுகிற இந்த அப்பா உண்மையில் வெளிக்குத் தெரிகிற அளவுக்கு நல்லவர்தானா?’ எனும் குதர்க்க வினா கணம் போல் அவள் உள்ளத்தில் எழுந்தது. ‘சே!’ என்று தன்னைத் தானே அவள் கண்டித்துக் கொண்டதும், தோன்றிய விரைவில் அது மறையவும் செய்தது.

        “உனக்கு ஒரு சேதி தெரியுமா, அஞ்சலி? இவ்வளவு பேசுகிற இந்த நாகரத்தினத்தின் மனைவி தினமும் வீட்டில் பூஜை செய்கிறாளாம்! மனைவியின் நம்பிக்கையில் தலையிடாத அவருக்கு ஊரார் நமிபிக்கையில் மட்டும் தலையிட்டுப் பிரசங்கம் பண்ண என்ன நியாயம் இருக்கிறது?”

       இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அஞ்சலி சில நொடிகள் யோசிக்க நேர்ந்தது: “அப்படி இல்லை, அப்பா! அவர் தமக்குச் சரியென்று படுவதை ஊருக்குச் சொல்லுகிறார். அதே போல் அவர் தம் மனைவிக்கும் சொல்லவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? ஊரில் அவரது பேச்சை ஏற்காத இலட்சக்கணக்கான மக்களில் அவர் மனைவியும் ஒருத்தி! அவ்வளவுதான்!”

        “நாகரத்தினத்தைப் புரிந்து நன்றாகவே பேசுகிறாய்!”

        அஞ்சலி வாய்விட்டுச் சிரித்தாள். அதன் பிறகு வேறு சாதாரண உரையாடலில் ஈடுபட்டவாறே இருவரும் சாப்பிட்டு முடித்தார்க்ள்.

        அப்பாவின் நெடிய விளக்கங்களைக் கேட்ட பிறகு ஏற்பட்டிருந்ததாய்த் தோன்றிய மனத் தெளிவில் நாகரத்தினத்தைச் சந்திக்கும் ஆவலை அவள் கைவிட்டாள். அன்றிரவு நிம்மதியாய்த் தூங்கினாள்.

        மறு நாள் காலை வேலைக்காரி பாஞ்சாலி வராததால் அவள் செய்து வந்த வேலைகள் எல்லாம் அஞ்சலியின் தலை மீது விழுந்தன. கல்லூரிப் படிப்பை முடித்து விட்ட அவள் வீட்டில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது பார்வதிக்கு வசதியாக இருந்தது. அடுக்களையில் ஒத்தாசை, வேலைக்காரி மட்டம் போடுகிற நாள்களில் ஒத்தாசை என்று அவளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.

       அடுக்களைத் தொட்டிமுற்றத்தில் இருந்த பாத்திரங்களைத் துலக்கியபடி, “பாஞ்சாலி கொஞ்ச நாள்களாய் அடிக்கடி மட்டம் போடுகிறாளில்லை?” என்றாள் அஞ்சலி.

        “ஆமாம். அவள் பிள்ளை செத்துப் போனதிலிருந்தே அவளுக்கு உடம்பு கெட்டுப் போய் விட்டது. அடிக்கடி படுத்து விடுகிறாள். பாவம்!”

        அதிர்ச்சியான அந்த நாள் பற்றிய ஞாபகம் அவளுக்கு வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டு மணி இருக்கும். கிணற்றடியில் பாஞ்சாலி துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர்விட்டுக்காரி மரகதம்தான் ஓடி வந்த அந்த மோசமான செய்தியைச் சொன்னாள்: “அடியே, பாஞ்சாலி! உன் மகனை அந்தப் படுபாவி கதிர்வேலு கத்தியால் குத்தி இரத்தக்களரியாக்கி விட்டான்! ‘ஆத்தா, ஆத்தா’ என்று புலம்புகிறான். போலீசுக்குச் சொல்ல ஆள்கள் போயிருக்கிறார்கள். நீ உடனே வாடி!” என்று மூச்சிரைக்கப் பேசிய மரகதத்தின் பின்னால், தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பஞ்சாலி ஓட்டமாய் ஓடிப் போனாள்.

        பாஞ்சாலி பற்றிய நினைவு இன்றைய ஞாபகத்தால் என்றில்லை. பாஞ்சாலி கூக்குரலிட்டுக் கொண்டு ஓடிய தோற்றம் அஞ்சலிக்கு என்றுமே அடிக்கடி ஞாபகம் வரும்.

        ஏதேனும் காதல் விவகாரமாக இருக்கலாமென்று தான் அஞ்சலி உட்பட யாவருமே நினைத்தார்கள். ஆனால் அப்படி ஏதும் இல்லை. கதிர்வேலு திருமணமானவன்.  பாஞ்சாலியின் மகன் இசக்கிமுத்துவோ மணமாகாதவன். பத்தாம் வகுப்பில் தேறி, ஆங்கிலத்திலும் தமிழிலும் தட்டெழுத்தில் தேர்ச்சி பெற்று வேலை தேடிக்கொண்டிருப்பவன். கத்தியால் குத்திக் காயப்படுத்துகிற அளவுக்கு மோசமான சண்டை ஏதுமில்லை. இவன் ஓர் அரசியல் கட்சியின் பரிவாளன். அவன் பிறிதொன்றின் பரிவாளன். தத்தம் கட்சித் தலைவர்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்களில் குரல்கள் உயர்ந்து அதன் விளைவாய்ப் பொறுமை இழந்ததால் வந்த வினை! வாய்ச் சண்டை கைகலப்புச் சண்டையாகி, இறுதியில் கத்தி எடுத்துக் குத்திக் குருதி வழிந்தோடுகிற அளவுக்குப் போய்விட்டது.

       அந்தக் கத்திக்குத்தின் விளைவாக இசக்கிமுத்து இறந்து போனான். அவனிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின்படி நீதிமன்றம் கதிர்வேலுவுக்கு முதலில் தூக்குத் தண்டனை எனத் தீர்மானித்துப் பின் அவன் கர்ப்பிணி மனைவி குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுச் செய்ததன் பேரில் அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

        இசக்கிமுத்துவின் மீது நம்பிக்கை வைத்து, இனி வருங்காலம் ஒளிமயமாகப் போகிறது என்று கனவு கண்டுகொண்டிருந்த பாஞ்சாலி அவளது கனவு மிகக் கொடுமையான முறையில் கலைக்கப் பட்டுவிட்ட நிலையில் அப்படியே ஒடுங்கிப் போய்விட்டாள். அதன் பிறகு பழைய பாஞ்சாலியாகவே அவள் இல்லை. கண்களில் நிலையாகத் தேங்கிவிட்ட துயரமும் அடிக்கடி படுக்கையில் வீழ்த்திய நோயுமாக ஏனோதானோ என்றுதான் அவள் வளைய வந்து கொண்டிருந்தாள்.

         ‘அம்மா! என் புருசன் தங்கம். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாதவர். பீடி கூடக் குடிக்க மாட்டார்! அவருக்காகத்தான் நான் இந்த உசிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் அரளிவிதையை அரைத்துக் குடித்து என்றோ என் மகனிடம் போய்ச் சேர்ந்திருப்பேன்’ என்பவை அவள் அடிக்கடி உதிர்க்கும் சொற்கள்,

        பாஞ்சாலி மிக நல்லவள். நல்ல உழைப்பாளி. வாங்குகிற பணத்துக்கு வஞ்சனை இல்லாமல் வேலை செய்பவள். பட்டணத்துக்காரி இல்லை. பூந்தமல்லியிலிருந்து குடி பெயர்ந்து கொஞ்ச நாள்களுக்கு முன்னால் தான் சென்னைக்கு வந்தவள். பட்டிக்காட்டு மக்களுக்கே உரிய பணிவு, பதவிசு, கண்களில் தெற்றெனத் தெரியும் கவடின்மை ஆகியவற்றை அளவற்றுக் கொண்டவள். இவற்றாலெல்லாம் அந்தக் குடும்பத்து உறுப்பினள் போல் அவர்களால் நடத்தப்படுபவள்.

        ‘என்னடி பாஞ்சாலி அநியாயம் இது!’ என்ற பார்வதியின் அங்கலாய்ப்புக்குக் கசப்பான புன்னகையுடன் அவள் சொன்ன பதில், ‘என்னம்மா செய்வது? எல்லாம் அவரும் நானும் செய்த பாவம். போன சென்மத்தில் வயசுப் பிள்ளையைக் கொன்று நானும் என் புருசனும் அவனைப் பெற்றவர்கள் வயிறு எரியப் பண்ணி இருப்போம். இல்லாவிட்டால், இந்த சென்மத்தில் எந்தப் பாவமும் செய்யாத எங்களுக்கு இப்படி ஒரு சோகம் வருமா?’ என்பதுதான். பாஞ்சாலியின் இந்தச் சொற்களை நினைவு கூர்ந்த நேரத்தில், முந்தைய நாள் தன் தகப்பனார் முற்பிறவியின் பாவங்கள் இப்பிறவியில் தொடர்வது குறித்துக் கூறியவை அஞ்சலிக்கு ஞாபகம் வந்தன.       

        வேலைகளை முடித்து அவள் முகம் கவிக்கொண்ட போது அவள் தோழி ரம்யா வந்தாள். மகளுடன் அவளையும் உட்காரவைத்துப் பார்வதி சாப்பாடு போட்டாள். சாப்பிட்டுக்கொண்டே பேசுகையில், முந்திய நாள் நகரத்தினத்தின் பகுத்தறிவுச் சொற்பொழிவுக்குத் தான் போய் வந்ததைப் பற்றி அஞ்சலி குறிப்பிட்டு அவரது பேச்சாற்றலையும், ஆணித்தரமான கருத்து வெளிப்பாட்டையும் புகழ்ந்ததும் ரம்யா அவளை ஒரு பார்வை பார்த்தாள். செய்த புன்னகையில் கேலி தெரிந்தது.

        “என்ன ரம்யா ஒரு மாதிரி சிரிக்கிறாய்? உனக்கு அந்த ஆளைப் பிடிக்காதா என்ன? ஒரு தரம் அவர் பேச்சைக் கேட்டுவிட்டுப் பிறகு சொல்!”

        “பேசுவது ஒன்று, செய்வது வேறு ஒன்று என்று நடக்கும் பாசாங்குக்காரர்களை உனக்கு மட்டும் பிடிக்குமா என்ன?”

        “என்ன! என்ன சொல்லுகிறாய் நீ? நாகரத்தினத்தையா பாசாங்குக்காரர் என்கிறாய்?”

        “ … ‘கடவுள் நம்பிக்கை என்பது தேவை இல்லாத ஒன்று. மனிதர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே முக்கியமானது’ எனும் பொன்மொழியை அடிக்கடி அவர் உதிர்த்து வருவது எனக்கும் தெரியும் – அவர் பேச்சை நேரடியாகக் கேட்காவிட்டாலும் கூட! அவர் என்ன செய்தார் என்று தெரியுமா?”

        “என்ன செய்தார், ரம்யா?”

        “கூட்டுக் கணக்கின் பேரில் வங்கியில் இருந்த பணத்திலிருந்து கூட்டுக் கையெழுத்தையும் தாமே கள்ளத்தனமாய்ப் போட்டுப் பத்து லட்சம் போல் மோசடி செய்துவிட்டாராம். இப்போது வகையாக மாட்டிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் வழக்கு வந்து சந்தி சந்தியாக நாறப் போகிறது, பார்!”                                           “அது சரி, நீ சொல்லுவது நம்பகமானதுதானா? அவருக்கு ஆகாதவர்கள் எவரும் கட்டிவிட்ட புரளி இல்லையே?”

         “நிச்சயமாய்ப் புரளி இல்லை. அந்தக் கூட்டுக் கையெழுத்துக்காரர் என் அப்பாவின் நண்பர். இந்த ஆள் தனது அரசியல் செல்வாக்கால் வழக்கை அமுக்கிவிட இயலும். கட்சியில் சேர்ந்து உயர்ந்த பதவியை அடைகிற வரையில் கையில் சல்லிக்காசு இல்லாதவன். இன்று பெரிய பங்களாவுக்குச் சொந்தக்காரன்! சொந்தமாய் நாலு ஃபியட் கார் வைத்திருக்கிறான். அம்பத்தூரில் தற்போது ஒரு தொழிற்சாலை வைத்து நடத்துகிறான். இதற்கான பணமெல்லாம் இவனுக்கு எங்கிருந்து வந்தது? எல்லாம் கட்சிப்பணக் கையாடல்தான்! வேறென்ன?”

        ‘பூ! கடைசியில் இவ்வளவுதானா? கடவுள் நம்பிக்கையை விட நேர்மையே அதிக முக்கியம் என்று சொல்லுகிறவனும் கடைசியில் அயோக்கியன்தானா? ‘நேர்மையும் நன்னடத்தையும் மட்டுமே போதா. அவற்றுடன் கடவுள் நம்பிக்கையும் பக்தியும் கூட இன்றியமையாதவை’ என்று சொல்லுகிறவர்கள் ஒரு வேளை இவனைப் போன்றோரைக் காட்டிலும் சிறந்தவர்களோ! பார்க்கலாம் ….’ – அவளுக்கு உடனே அவள் அப்பா பதஞ்சலியின் ஞாபகம் வந்தது.

        வாயைக் கிழித்துக்கொண்டு இவ்வளவு பேசும் நாகரத்தினமே கடைசியில் இவ்வளவு பெரிய மோசக்காரனாக இருக்கும் போது, தன் அப்பா கூட மோசமானவராக இருப்பாரோ’ என்றே அவளுக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது.

        பதஞ்சலியைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மறுநாள் தானாகவே அவளைத் தற்செயலாய்த் தேடிவந்தது. ஆமாம். தேடித்தான் வந்தது….

        பேருந்தில் எக்கச்சக்கமான நெரிசல். அவள் உட்கார்ந்து கொண்டிருந்த இருக்கையில் சாய்ந்து அழுத்தியபடி இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். இருவரும் குசுகுசு வென்று பேசிக்கொண்டது அவள் செவிகளில் தெளிவாக விழுந்தது.

        “கடைசியில் ஒரு வழியாக எங்கள் அப்பா ஒரு வீடு வாங்கிவிடப் போகிறார்.”

        “அப்படியா? எங்கே?”

        “மேற்கு மாம்பலத்தில். யாரோ பதஞ்சலி சாஸ்திரியாம். சம்ஸ்கிருதப் பண்டிதராம். அவரிடமிருந்துதான்.  அவர் அதை விற்றுவிட்டு அண்ணாநகரில் வேறு வீடு கட்டப் போகிறாராம்.”

        “என்ன விலை?”

        “ஏழு லட்சம். ஆனால் சொத்து விற்ற தொகைக்கான வரியைக் குறைப்பதற்காக நான்கு லட்சம் என்றுதான் பத்திரத்தில் எழுதப் போகிறார்கள். இதனால் அந்தப் பதஞ்சலி சாஸ்திரிக்கு ஆயிரக் கணக்கில் வரி கட்டவேண்டிது மிச்சப்படும்.”              

        அதன் பின் இரண்டு பெண்களும் வேறு ஏதோ பேச முற்பட்டார்கள். அஞ்சலிக்குத் திகைப்பாகவும் அசிங்கமாகவும் இருந்தது. வரி ஏய்ப்பு என்பது சமுதாயக் குற்றம். அரசாங்கத்துக்குத் தர வேண்டிய தொகையை மிச்சப்படுத்தி அதைத் தன் பணப்பையில் ஒருவர் போட்டுக்கொள்ளுதல் குற்றமே! இது போன்ற வருவாய்த் தொகைகள்தான் மக்களுக்கான நற்பணிகளுக்குச் செலவிட அரசுக்கு உதவுகின்றன. இவற்றில் மோசடி செய்வது வேறு யாராக இருந்தாலும் ஒழிந்து போகிறது எனலாம். ஆனால், நிச்சயமாய்ப் பதஞ்சலி சாஸ்திரியை அன்று! வருமான வரி ஏய்ப்பு, சொத்து விற்ற வகையிலான வரி ஏய்ப்பு என்பவை இந்தக் காலத்தில் பெரிய மனிதர்களிடையே அங்கீகாரம் பெற்ற சாதாரணக் குற்றங்களாகப் பெரும்பாலோர் செய்வதால் மன்னிக்கப்படக் கூடிய அற்பத் தவறுகளாக இருக்கலாம். ஆனால் அந்த விதி பதஞ்சலி சாஸ்திரிகளுக்கு ஒருகாலும் பொருந்தாது. பொருந்தக் கூடாது! ஏனெனில், அவரும் வாயைக் கிழித்துக்கொண்டு வாய்மை, தூய்மை, நேர்மை போன்ற அருங்குணங்கள் பற்றிப் பேசுபவர்.

        அவளுக்கு அவமானமாக இருந்தது. வெறுப்பு வந்தது. அப்பாவின் மேல் கொண்டிருந்த அளவு கடந்த பாசத்தையும், அவரது புலமை, வாதாடும் திறமை ஆகியவற்றின் மேல் இருந்த பிரமிப்பு ஆகியவற்றையும் வென்ற ஒரு மரியாதைக் குறைவு அவள் மனத்தில் அவர்பால் எழுந்தது. அப்பா என்ற ஒரே காரணத்துக்காக அதை விரட்ட முயன்று அவள் தோற்றுப் போனாள்.

        மறு நாள் பாஞ்சாலி வேலைக்கு வந்தாள். கணவனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சொல்லாமல் கொள்ளாமல் மட்டம் போட நேர்ந்ததென்று தெரிவித்தாள். இன்னும் சரியாகவில்லையாம். பக்கத்திலிருந்த டாக்டரிடம் கூட்டிச் சென்று காட்டினாளாம். ஏதோ மருந்துகளுக்கான நீண்ட பட்டியலைக் கொடுத்திருப்பதுடன்  இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை போன்றவற்றுக்காகவும், ‘எலும்பு ஃபோட்டோ (எக்ஸ்ரேயைப் பாஞ்சாலி அப்படித்தான் சொல்லுவாள்) வுக்காகவும் தாம் தியாகராயநகரில் நடத்திக்கொண்டிருக்கும் மருத்துவ மனைக்கு வரச் சொல்லி இருப்பதாகத் தெரிவித்த பாஞ்சாலி நூறு ரூபாய் கடன் கேட்டாள். சம்பளப் பணத்திலிருந்து மாதா மாதம் தவணைகளில் கழித்துக்கொள்ள வேண்டினாள். வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் போது வாங்கிக் கொள்ளுவதாகச் சொல்லிவிட்டு அவள் துணி துவைக்கப் போனாள்.

        துவைக்கப் போன சிறிதே நேரத்தில் பதறி அடித்துக்கொண்டு வீட்டினுள் ஓடி வந்தாள். “அம்மா! அம்மா! ஒரு நிமிசம் ஓடி வாங்களேன்!”

        பாஞ்சாலியின் உச்சத் தொண்டை அலறலைக் கேட்டு விட்டுப் பார்வதி அடுக்களையிலிருந்து அவசரமாக வெளிவந்து, “என்ன,  பாஞ்சாலி? என்ன ஆச்சு?” என்றாள். இதற்குள் அஞ்சலியும் ஓடி வந்தாள்.

        “என்ன, பாஞ்சாலி?”

        “அய்யாவுடைய ஜிப்பாப் பையிலே இந்த ஐநூறு ரூபாய் நோட்டு இருந்ததம்மா. நல்ல காலம்! தண்ணீரில் நனைப்பதற்கு முன்னால், என் கண்ணில் தட்டுப்பட்டது. எனக்குத் திரேகம் முச்சூடும் நடுங்கி விட்டதம்மா!” என்றவாறு அவள் அந்த ஐநூறு ரூபாய்த் தாளை நீட்டியதும் பார்வதி அதை வாங்கிக்கொண்டாள்.

        பதஞ்சலி இதற்குள் கல்லூரிக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தார். தொடக்கூடாத ஏதோ ஒன்றைத் தொட்டுவிட்ட உணர்வு பஞ்சாலியின் கண்களில் மிகத் துல்லியமாய்த் தெரிந்ததைப் பார்த்து அஞ்சலியின் உடம்பு முழுவதும் ஒரு சிலிர்ப்புப் பரவியது.

 பிறர் பணத்தை விரலால் தீண்டுவது கூடப் பாவம் என்று நினைக்கிற ஜாதி! ஆனாலும் இவளோ ‘தீண்டத்தகாத ஜாதி’ என்று முத்திரை குத்தப்பட்டவள். அவளது ஜாதியைப் பாராட்டாமல் பதஞ்சலி சாஸ்திரி மனைவிக்கு எடுத்துச் சொல்லி வேலைக்கு வைத்தது அருஞ்செயல்தான். உயர்ந்த மனப்பாங்குதான். தீண்டாமை என்பது சாத்திரங்களில் அசலாக இல்லை என்றும், சில விஷமிகள் செய்த இடைச்செருகல் என்றும் அவர் அடிக்கடி சொல்லிவருவதைச்  செயலிலும் காட்டியது போற்றத் தகுந்ததுதான். ஆனால், ‘நேர்மை’ என்பது இந்த ஒரு சிறப்பியல்பின்பாற்பட்டது மட்டும் அன்று. இன்னும் கிளறப் போனால் தம்மைப் பரந்த மனப்பான்மையுள்ள மனிதன் என்பதாய் நாலு பேருக்குக் காட்டிக்கொள்ளுகிற முயற்சியாகக் கூட அது இருக்கலாம். தீயைத் தீண்டிவிட்டவளைப் போல் பாஞ்சாலி கூவியதும், பணத்தாளை அம்மாவின் கையில் கொடுத்த பிறகே அவள் முகத்தில் ஒரு நிம்மதி வந்தது என்பதும் ஒரு புதிய ஆர்வத்துடன் பாஞ்சாலியை நோக்க அஞ்சலியைத் தூண்டின.

        “அம்மா! பாஞ்சாலி கடன் கேட்டாளில்லையா? அந்த நோட்டை அவளிடமே கொடுத்துவிடு!’

        “நான் கேட்டது நூறு ரூபாய் தானம்மா! இப்போதைக்கு அது போதும். மேற்கொண்டு தேவைப்பட்டால் கேட்கிறேன்.”

        “பாஞ்சாலி! இருக்கட்டும். … அம்மா! அதை இப்படிக் கொடு.”

        “நீ வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கும் போது கொடு, அஞ்சலிக்கண்ணு! … அம்மா! பிறகு வாங்கிக்கொள்ளுகிறேன். இப்போது நோட்டு ஈரமாகிவிடும்.” –     பாஞ்சாலி பின்கட்டுக்குப் போய்விட்டாள்.

        … மூன்றே நாள்களில் பாஞ்சாலியின் கணவனுக்குச் சரியாகிவிட்டது. வெறும் காய்ச்சல்தானாம். வழக்கம் போல் பாஞ்சாலி சிரித்த முகத்துடன் வேலைக்கு வரத் தொடங்கினாள்.

        இவ்வாறு வேலைக்கு வரத் தொடங்கியதற்குப் பிறகு ஒரு வாரத்துக்குள்ளேயே பாஞ்சாலி மறுபடியும் மட்டம் போட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை.

        “என்ன இந்தப் பாஞ்சாலி அடிக்கடி இப்படி மட்டம் போடுகிறாள்?”

        “ஏதாவது எதிர்பாராத இடைஞ்சல் ஏற்பட்டிருக்கும். … நான் ஒத்தாசை செய்கிறேன் உனக்கு.”

         … “ஹாய்! அஞ்சலி! என்னடி செய்கிறாய் அடுக்களையில்? மாமி! தயவு செய்து நீங்களே சமையல் பண்ணுங்கள். ஏனென்றால் நான் இன்று இங்குதான் சாப்பிடப் போகிறேன்!” எனும் அட்டகாசமான அறிவிப்புடன் ரம்யா வந்து கொண்டிருந்தாள்.

         “என் அண்ணா ஊரில் இல்லை. அதனால் அவனுடைய ஸ்கூட்டரில் வந்தேன்!” எனும் அவளது அடுத்த வாக்கியம், ‘இவளுடன் ஸ்கூட்டரில் பாஞ்சாலியின் குடிசைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன? பாஞ்சாலி சந்தோஷப்படுவாள்!’ எனும் புதிய எண்ணத்தை அவளிடம் ஏற்படுத்தியது.

        “வாடி, வா! பாஞ்சாலி இன்று வரவில்லை. பாத்திரம் தேய்த்துவிட்டு வருகிறேன். அவள் புருஷனுக்குத்தான் உடம்பு சரி இல்லை என்று நினைக்கிறேன். உன் ஸ்கூட்டரில் இருவரும் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். நீ போய்க் கூடத்தில் உட்கார்ந்து அப்பாவோடு பேசிக்கொண்டிரு.”

        ரம்யா கூடத்துக்குப் போனாள்.

        ….“நாங்கள் இருவரும் வெளியே போய்விட்டு வந்து சாப்பிடுகிறோம். காபி குடித்ததால் பசி இல்லை. அப்பா சாப்பிட்டு விடட்டும்.” –  பதஞ்சலியிடம் சொல்லிக்கொண்டு இருவரும் படி இறங்கினார்கள்.

        … பார்வதியின் குடிசைக் கதவு சாத்தி இருந்தது. அந்தப் படல்கதவு தொட்டதும் திறந்துகொண்டது. உள்ளே யாருமில்லை. பக்கத்துக் குடிசையிலிருந்து வெளிப்பட்டு அங்கு வந்த பெண்பிள்ளை, “பாஞ்சாலி ஆசுபத்திரிக்குப் போயிருக்கிறாள்,” என்றாள்.

        “அவள் புருஷனுக்கு மறுபடியும் உடம்பு சரி இல்லையா? … நீதான் செல்வியா?”

        “ஆமாம்மா! நான் செல்விதான். பாஞ்சாலி என்னைப் பற்றிச் சொல்லுமா?”

        “ஆமாம். … அதுசரி, அவள் புருஷனுக்கு ,,,”

        “அவள் புருஷனுக்கு ஒன்றுமில்லையம்மா. அந்தக் கதிர்வேலு இல்லை? அதுதானம்மா – பாஞ்சாலியின் மகனைக் கொலை செய்தவன் – அதோ அந்த எதிர்க்குடிசையில்தான் அந்தக் கொலைகாரப் பாவியின் பெண்ஜாதி இருந்து வருகிறாள். அவளுக்கு நடு ராத்திரியில் இடுப்பு வலி எடுத்துவிட்டது. அந்தப் பெண்ணின் தம்பி ஓடிவந்து எங்களைக் கூவி அழைத்தான். அயர்ந்த உறக்கம். அதனால் காதில் விழவில்லை. அந்த அரவத்தில் விழித்துக்கொண்டுவிட்ட பாஞ்சாலியும் அவள் புருஷன் மருதமுத்துவும் – முத்துவிடம்தான் சைக்கிள் ரிக்‌ஷா இருக்கிறதே – அதில் அந்தப் பெண் சாந்தியை வைத்துக்கொண்டு ஆசுபத்திரிக்குப் போயிருக்கிறார்கள். இன்னும் வந்து சேரவில்லை. என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.”

        விரிந்த பாரையுடன் அஞ்சலி கேட்டாள்: “அவள் மகன் இசக்கிமுத்துவைக் கொன்றுவிட்டு ஜெயிலில் இருக்கிறவனின் பெண்டாட்டியையா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனாள் பாஞ்சாலி?”

        “ஆமாம்… அதோ பாஞ்சாலியும் மருதமுத்து அண்ணனும் ‌வருகிறார்கள்.”  –     இரண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள்.                                     “அடடே! வாங்க அம்மா! அப்பா சுகமா? அம்மா சுகமா?” என்றவாறு மருதமுத்து ரிக்‌ஷாவிலிருந்து குதித்தான், பாஞ்சாலியும் இறங்கினாள். இருவரும் மிகவும் களைப்பாகத் தெரிந்தார்கள்.

        “என்ன ஆச்சு, பாஞ்சாலி?” என்ற செல்வியின் கேள்விக்கு, “அழகான ஆண்பிள்ளை. அச்சு அந்தக் கொலைகார அப்பன் சாயல். அவன் மாதிரியே இரண்டு கையிலும் ஆறு விரல்!” என்று பதில் சொன்ன பாஞ்சாலியைத் தாங்க முடியாத வியப்புடன் பார்த்தவள் பார்த்தபடி நின்றாள் அஞ்சலி.

 “போய் இரண்டு கலர் வாங்கிக்கொண்டு வாய்யா! என்னவோ மலைத்துப் போய் நிற்கிறாயே!”

        “கொஞ்ச நேரம் கழித்து அவரை அனுப்பு, பாஞ்சாலி. இப்போது நான் உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்.”

        “வாம்மா, வா, வா…”

        பாஞ்சாலி விரித்த பாயில் இரண்டு பெண்களும் உட்கார்ந்தார்கள்.

        “என்ன, இவ்வளவு தொலைவு வந்துவிட்டாய், அஞ்சலிக்கண்ணு?”

        “உன் புருஷனுக்குத்தான் மறுபடியும் உடம்பு சரி இல்லையோ என்றெண்ணிப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்தேன். ஆமாம்? நீ என்ன பயித்தியமா? உன் மகனைக் கொலை செய்தவனின் பெண்ஜாதியை ரிக்‌ஷாவில் வைத்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய்ச் சேர்த்துவிட்டதோடு இவ்வளவு நேரமும் கூட இருந்துவிட்டு வந்திருக்கிறாயே, பாஞ்சாலி! நீதான் பயித்தியம் என்றால் உன் புருசனும் …” – பாஞ்சாலியும் மருதமுத்துவும் பயித்தியங்கள் அல்லர் என்பது புரிந்தாலும் வேண்டுமென்றே அவர்களைச் சீண்டி அவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அஞ்சலியிடம் கிளர்ந்தது.

       “அஞ்சலிக்கண்ணு! நீ படித்த பெண். நாங்கள் செய்தது சரிதான் என்பது உனக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும்? சும்மாவாவது எங்களைப் பயித்தியம் என்கிறாய்! என் மகனைக் கொன்றவன் அந்தக் கதிர்வேலுதானே ஒழிய, அவனுடைய பெண்ஜாதி இல்லையே! அந்தப் பெண்ணே கொலைகாரியாக இருந்தாலும் கூட, அவள் வயிற்றுக் குழந்தை என்ன பாவம் செய்தது, தாயே! ஒருத்தன் செய்த தப்புக்காக அவன் பெண்ஜாதியையும், பிள்ளைகுட்டிகளையும் பழி வாங்கலாமா?”

        “இந்த அற்ப நியாயம் கூடவா சின்னம்மாவுக்குத் தெரியாது? சும்மா நாம் என்ன சொல்லுகிறோம் என்று பார்க்குது, பாஞ்சாலி! … இதோ பாருங்கள், சின்னம்மா! போன சென்மத்திலே என்ன பாவம் செய்தோமோ, இந்த சென்மத்திலே பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். மேலே மேலே இந்த சென்மத்திலேயும் பாவம் செய்யலாமா? ஒரு பிள்ளைத்தாய்ச்சி இடுப்பு வலியாலே துடிக்கிற போது, அதற்கு உதவுவதுதான் முக்கியமே தவிர, அது என் மகனைக் கொலை செய்தவன் பெண்ஜாதி என்றா தயங்குவது? பாஞ்சாலி சொன்னது மாதிரி ஒரு பாவமும் அறியாத வயிற்றுப் பிள்ளைக்குக் கேடு நினைக்கலாமா? இந்தப் பெண்ணுக்கு நாங்கள் உதவவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அடுத்த சென்மத்திலே அதே மாதிரி யாரும் உதவிக்கு வராமல் பாஞ்சாலி தவிக்கும்! இதெல்லாம் ஒரு கணக்கு, தாயே!” –  … மருதமுத்து ‘கலர்’ வாங்கிவர வெளியே போனான்.

        “வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்கலாம் என்றுதான் இருக்கிறேன், அஞ்சலிக்கண்ணு! இன்னும் இருநூறு ரூபாய் வேணும்.”

        “அந்தப் பெண்ணுக்காகத்தானே?”                                                                                                                                              “ஆமாம், தாயே! கடனாகத்தான். திருப்பிக் கொடுத்து விடும். அது ஏமாற்றினாலும் நான் கொடுத்துவிடுவேன். ஆனால் அது ஏமாற்றாது. அதுவும் ரொம்பத்தான் புலம்பியது – எதையும் மனசில் வைத்துக்கொள்ளாமல் நாங்கள் உதவினோமாம். நாங்கள் நல்லவர்களாம்! ‘நாங்கள் நல்லவர்களோ, பொல்லாதவர்களோ! ஆனால், மனிதர்கள்’ என்றுs சொல்லிவிட்டு வந்தேன்,”  என்ற பாஞ்சாலி ஒரு குழந்தை போலச் சிரித்தாள்.

       அந்தக் கணத்தில், ‘மதாபிமானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் – அந்த ‘னி’ எனும் எழுத்தைத் தவிர – எந்த வேறுபாடும் இல்லை’ என்று பல்லாண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் அதன் ஆசிரியரின் முன்னுரையில் தான் படித்தது அஞ்சலிக்கு ஞாபகம் வந்தது. பாஞ்சாலிக்கு நிச்சயம் அது தெரிந்திராது. கட்சிப் பணத்தைக் கையாடி, அதில் பங்களாக் கட்டி, தொழிற்சாலை ஏற்படுத்தி, கார் வாங்கி, அந்த் திருட்டுக் காரிலேயே ஊர் ஊராகச் சுற்றி, ‘நாரணன் நாமத்தை விடவும் நாணயமே மனிதனுக்குத் தேவை’ என்று பறையடித்துக் கொள்ளுகிற நாத்திகர்களை விடவும், ‘நேர்மை மட்டுமே போதாது; பக்தியும் அவசியம்’ என்று நினைத்துச் செயல்படும் ‘மூட நம்பிக்கை’ கொண்ட பாஞ்சாலி-மருதமுத்துவைப் போன்றவர்கள் மிகச் சிறந்த மனிதர்கள் என்னும் புதிய தெளிவுடன் மருதமுத்து கொண்டுவந்து கொடுத்த குளிர்ப்பானங்களை வாங்கிக்கொண்ட அஞ்சலி ஒன்றை ரம்யாவிடம் கொடுத்துவிட்டு மற்றதை வாயில் வைத்து உறிஞ்சினாள் – பராசக்தியிடம் ஞானப்பால் குடித்த சம்பந்தரைப் போல! குடித்து முடித்ததும், ‘அறிவுஜீவித்தனமான நாத்திகர்களையும், ஆன்மிகவாதிகளாய்த் தங்களைக் காட்டிக்கொள்ளுகிற ஆத்திகர்களையும் நன்னடத்தையில் மிஞ்சி ஒளிர்கிற மக்கள் சாதாரணர்களில் மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளார்கள்’ எனும் ஞானத்துடன் அஞ்சலி எழுந்துகொண்டாள்.                                      …….    

Series Navigationநெஞ்சில் உரமுமின்றி
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *