ஜோதிர்லதா கிரிஜா
(23.3.1980 கல்கி-யில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)
கண்ணப்பன் எரிச்சலுடன் எழுந்தான். சமையற்கட்டிலிருந்து கிளம்பிவந்த புகை கண்ணைக் கரித்ததுதான் அவனது எரிச்சலுக்குக் காரணம். புகையின் விளைவாகக் கண்களில் நீர் சோர்ந்ததால் படிக்க முடியாமல் போன எரிச்சலுடன், “காந்திமதி, ஏய் காந்திமதி! என்னது இது, வீடு முழுக்கப் புகைய விட்டுக்கிட்டு?” என்று கத்திய வண்ணம் சமையற்கட்டுக்குப் போனான். தானும் கண்களைக் கசக்கிக்கொண்டே அங்கிருந்து வெளிவந்த காந்திமதி, “என்ன செய்யிறது? காஸ் இல்லே. கெரஸினாயிலும் இல்லே. விறகு அடுப்பில சமைக்கிறேன். விறகு அடுப்பைப் புகையவிடாம எரிய விடறது ஒரு கலைதான். அது எனக்குப் பழக்கமில்லியே?” என்று சிரித்தாள். ‘விறகு அடுப்பாய் இருந்தால் என்னவாம்? அதுக்காக இப்படியா ஓமம் வளர்த்தது மாதிரி வீடு முழுக்கப் புகையும்?’ என்று கத்த வாயெடுத்த அவன், அவள் தன்னைத் தானே மட்டம் தட்டிக்கொண்டு சிரித்த சிரிப்பில் பொட்டென்று அடங்கிப் போனான். முகத்தைக் கழுவிக்கொண்டு அவன் திரும்பவும் கூடத்துக்கு வந்து உட்கார்ந்தான். புகை கொஞ்சங்கூட அடங்கியதாய்த் தெரியவில்லை. அவன் கதவுகளை நன்றாய்த் திறந்துவைத்துவிட்டு, வாசல் பக்கம் போய் நின்றுகொண்டான். சன்னல் வழியாகப் பார்த்த போது சமையலறைப் புகைபோக்கியின் வழியாகப் புகை மண்டலம் சுருள் சுருளாக வெளிக்கிளம்பி உயரே சென்றது தெரிந்தது. சற்றுத் தொலைவில் இருந்த ஒரு தொழிற்சாலையின் மிகப் பெரிய புகைபோக்கியிலிருந்து புகைச் சுருள்கள் கன்னங்கரேல் என்று வானத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும், காந்திமதி தன் சமையலறையையும் ஒரு சின்னத் தொழிற்சாலையாக்கி விட்டது கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.
சமையலறைப் புகைக்கூண்டிலிருந்து கிளம்பிச் சென்று கொண்டிருந்த புகையை வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்த அவன் நெஞ்சில் திடீரென்று என்னமோ உறுத்தியது. புகை! … அது அவன் வாயிலிருந்து ஒரு நாள் கிளம்பிய நேரத்தில் அவனைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்து, அதிர்ந்து போய், அவனை அடிஅடி என்று அடித்து நொறுக்கிய அப்பாவின் ஞாபகம் வந்தது. அப்போது அவன் அப்பாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் கண்ணப்பனுக்கு இப்போதும் பசுமையாக நினைவில் நின்றன.
அவனுடைய அப்பா தவசுப் பிள்ளை ரொம்பவும் துப்புரவானவர். குளிக்காமல் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார். அதிகாலையில் எழுந்து ஆற்றில் குளித்துவிட்டுத் தேவாரம், திருவாசகம், எல்லாம் மணையில் சாமி படத்துக்கு எதிரே உட்கார்ந்து கண் மூடிச்சொல்லிவிட்டுத்தான் கஞ்சி குடிப்பார். காலையில் தம் நெற்றியில் அவர் இட்டுக்கொள்ளும் திருநீர்க்கோடுகள் மாலை வரை மறையா. பெரிய கண்கள். அவற்றில் தெரியும் அப்பாவித்தனத்தை நினைவு கூர்ந்த போது அவனுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. எங்கே இருக்கிறாரோ? எப்படி இருக்கிறாரோ? …
அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவு இருந்தது. அப்பா ஆற்றுக்குக் குளிக்கப் போயிருந்த வேளையில் அவன் கால் மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டு – அவர் குளித்துவிட்டுத் திரும்பக் குறைந்தது அரை மணியாவது ஆகுமே என்கிற திண்ணக்கத்தில் – அவருக்குத் தெரியாமல் வாங்கி வைத்திருந்த சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துப் புகைக்கலானான். கதவைச் சும்மா சாத்தி வைத்திருந்தான். அதைத் தள்ளித் திறந்துகொண்டு அவர் நுழைந்தது கூடத் தெரியாமல், அவன் முகத்துக்கு உயரே பறந்துகொண்டிருந்த புகை மண்டலத்தை ரசித்துப் பார்த்தபடி ஏதோ மெய்ம்மறந்த தியானத்தில் இருப்பவன் போன்று உட்கார்ந்திருந்தான்,
“ஏண்டாலே? எம்புட்டுத் திமிரு உனக்கு?” என்று அவரது இடிக்குரல் அவனைத் தூக்கிப் போட அவன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றான். தன்னையும் அறியாமல் அவன் பாதி புகைத்த சிகரெட்டைத் தரையில் நழுவவிட்டான். வாயை மூடிக்கொண்டதில், புகை மண்டைக்குள் ஏறி உச்சந்தலையில் சுற்றிக் கண்களை எரித்தது. அவன் தும்மித் திணறினான். அவனது அவஸ்தையால் மேலும் எரிச்சலடைந்தவர் போல் தவசுப்பிள்ளை – மாற்று வேட்டியை எடுத்துச் செல்லத் திரும்பி வந்திருந்தவர் – அவன் மேல் பாய்ந்து அடிக்கத் தொடங்கினார். கண், மூக்குப் பாராமல் அடித்து நொறுக்கினார்.
“போடா வெளியிலே! நாறப்பயலே! சிகரெட்டா புடிக்கிறே? ஊருக்குப் போயிருக்குற உங்கம்மா வரட்டும்டா. அப்படியே பூரிச்சுப் போயிறுவா. தேவாரமும் திருவாசகமும் சொல்றவன் வயித்துலே பொறந்துட்டு வாயாலே பொகையா ஊதறே? .. ஒன்னயச் சொல்லிக் குத்தமில்லேடா. ஒன்னயப் படிக்க வைக்கிறேனில்ல … அந்த எம்புத்தியத்தாண்டா செருப்பால அடிச்சுக்கிறணும்…” என்று முதலில் ஒன்றுமே பேசாமல் அடிக்கத் தொடங்கியவர் கைகள் ஓய்ந்த போது இப்படிச் சொன்னார். சொல்லிவிட்டுத் திரும்பவும் அடிக்கத் தொடங்கினார்.
அதற்கு மேல் கண்ணப்பனால் தாங்க முடியாமற் போயிற்று. “நிறுத்துங்க!” என்று கத்தினான். அவன் கத்திய கத்தலில் அவர் சட்டென்று அடிப்பதை நிறுத்தினார். “இனிமேற்பட்டு அடிச்சீங்க, மருவாதி கெட்டுப் போயிறும். ஆமா! நான் சிகரெட் புடிக்கிறதும் புடிக்காததும் என் இஷ்டம்! நீங்க யாரு கேக்குறது?” “என்னது! நான் யாரா? உங்கப்பண்டா நானு. நான் கேக்காம ஒன்னய வேற யார்ரா கேப்பாக? சோறு போடறதுக்கும் படிக்க வைக்கிறதுக்கும்தான் அப்பனும் ஆத்தாளுமா? தப்புச் செய்தா தட்டிக் கேக்கக் கூடாதாடா? ஏண்டா, டேய்!” “இப்ப என்ன தப்பு செய்துப் போட்டேன்? சிகரெட் குடிக்கிறது தப்பா? என் க்ளாஸ் பசங்க எல்லாம்தான் குடிக்கிறாங்க. முத்து குடிக்கிறான். ஏழுமலை குடிக்கிறான். அப்புறம் சாமிநாதன் பிடிக்கிறான். நான் பிடிச்சா என்ன தப்பு? நீயா காசு குடுத்தே?” பையன் “நீ” என்று ஒருமைக்குத் தாவி மரியாதைக் குறைவாகத் தம்மை அழைத்த அதிர்ச்சி நெஞ்சின் மீது மற்றோர் அடியாக விழ, அவர் கண்களை விரித்துக்கொண்டு நின்றார்.
“அம்மா கிட்டேருந்து திருடியிருப்பே. இல்லே, எங்கிட்டேயிருந்தே திருடினியோ? யாரு கண்டாக? அது இன்னொரு தப்பு …” “நான் எங்கிட்டிருந்தும் திருடல்லே. எனக்கு முத்து சிகரெட்டாவே கொடுத்தான்.” “இன்னொரு வாட்டி உன்னய சிகரெட்டும் கையுமாப் பார்த்தேன்?” “என்ன செய்வீங்க?” “அடிச்சு நொறுக்கி உசிரோட புதைப்பேன் …” “அது வரையில என் கை பூப்பறிக்காது. தெரிஞ்சுக்குங்க!”
தவசுப்பிள்ளை மறுபடியும் அவனை அடிக்கப் பாய்ந்த அன்று ஓடியவன்தான். அதற்குப் பிறகு அவன் அந்த ஊருக்கே போகவில்லை. …
வீட்டை விட்டு ஓடிப் பயணச் சீட்டு இல்லாமல் புகைவண்டியில் பக்கத்து ஊருக்குப் போய் ஏதேதோ சின்னச் சின்ன வேலைகள் செய்து ஒரு மாதம் போல் கழித்தான். அப்போதெல்லாம் அவன் அம்மாவின் ஞாபகம் வந்து அவன் குடலைச் சுருட்டும். திரும்பிப் போய்விடலாமா என்று மனசு அடித்துக்கொள்ளும். ஆனால் அவனுக்கு வாய்த்திருந்த நண்பர்களின் சேர்க்கையில் தாய்-தகப்பனின் அன்பு அவனுக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. தாய்-தகப்பனைச் சென்றடைந்தால், தன் சுயேச்சையான போக்குகளுக்குத் தடை விதிக்கப்படும் என்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்ததால், அவன் அவர்களைப் பிரிந்து இருந்து விடுவது என்று தீர்மானித்தான்.
சிறிது காலத்துக்குப் பிறகு, பிழைப்புக்கு வழிகள் நிறைய இல்லாத அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு அவன் சென்னைக்கு வந்து சேர்ந்தான். செனையில் கார்த் தொழிற்சாலை ஒன்றில் சிறு ஊழியனாகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இப்போது அதே கம்பெனியில் மெக்கானிக்காக இருந்து வருகிறான். அவனுடைய நண்பன் தன் தங்கையை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்பிய போது அவனுக்கு அவன் அம்மாவின் ஞாபகம் அதிகமாக வந்தது. அப்பா தன்னை அடித்தது தன்னைத் திருத்துவதற்குத்தானே என்கிற எண்ணத்தில் கண்கள் கசிந்தன. அவன் தன் ஊருக்குப் போய் அவர்களைப் பார்த்து வருவதாகச் சொல்லிச் சென்றான்.
அந்தச் சிற்றூரில் அவர்கள் காணப்படவில்லை. தான் இன்னான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு அவனை அடையாளங் கண்டுகொண்ட தெருப் பெரியவர்களில் சிலர் அவன் அம்மா காலமாகிவிட்டாள் என்றும், அப்பா அதற்குப் பிறகு பிழைக்க வழி தேடி ஊரை விட்டே போய்விட்டார் என்றும், அநேகமாகச் சென்னைக்குத்தான் போயிருப்பார் என்றும் தெரிவித்தனர். முகம் மறந்து போன அம்மாவை எண்ணிக் கண் கலங்கிவிட்டு, அவன் சென்னையில் அப்பாவைத் தேடிப்பார்க்கும் எண்ணத்துடன் கனத்த இதயத்தைச் சுமந்துகொண்டு திரும்பிவந்தான். சென்னையில் வலை வீசித் தேடினான். மூன்று மாதங்கள் பயன் விளையாமல் கழிந்ததற்குப் பிறகு நண்பனின் ஆறுதல் மொழிகளில் மனந்தேறிக் காந்திமதியை மணந்துகொண்டான்.
சென்னையிலேயே அப்பா இருந்தாலும் கூடக் கண்டுபிடிப்பது கடினம்தான் என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டான். இப்போது ஓர் இரண்டு வயதுக் குழந்தைக்குத் தகப்பனாகியிருக்கும் அவனுக்கு ஒரு தந்தையின் பாசம் தெளிவாகத் தெரிந்தது. தன் தவறுகள் புரிந்து அவன் அடிக்கடி வருந்தினான். என்ன செய்தால் தன் பாவச் சுமை குறையும் என்று தனிமையில் அடிக்கடி கண் கலங்கினான். அம்மாவின் சம்பாதனையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு எப்போதும் பக்திப் பாடல்களை முணுமுணுத்து வாழ்ந்து வந்த அப்பாவுக்கு என்ன தொழில்செய்து பிழைக்கத் தெரியும் என்று வருத்தப்பட்டான்.
புகை கொஞ்சம் குறைந்திருந்தது. அவன் திரும்பி உள்ளே வந்தான். கூடத்தில் இருந்த காந்திமதி, “கண்ணைத் துடைச்சுக்கிறுங்க. … அழுத மாதிரி செவசெவன்னு இருக்குது,” என்று சொன்ன போது, தன் கண்களில் இருந்த கண்ணீர் புகைக் கரிப்பால் விளைந்தது அன்று, அழுத கண்ணீர்தான் என்று சொல்ல வெட்கப்பட்டு, அவன் கண்களை வேட்டி நுனியால் ஒற்றித் துடைத்துக்கொண்டான்.
… வழக்கம் போல் ஒன்பது மணிக்குச் சாப்பிட்டு எழுந்த அவன், “காந்திமதி! நான் எங்க ஆஃபீசர் காரை வெள்ளோட்டம் விடறதுக்குப் பூந்தமல்லி வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்குது. அவருக்குப் பூந்தமல்லியிலே ஒரு சிநேகிதரு இருக்காராம். காரை அங்கிட்டு வரை ஓட்டிப் பார்த்துட்டுத் திரும்புவாரு. அதனால வர்றதுக்கு ராத்திரி எட்டு மணியாகும்,” என்று தெரிவித்துவிட்டுச் சைக்கிளில் தன் தொழிற்சாலை நோக்கிப் புறப்பட்டான்.
… காரின் ஓட்டம் நன்றாகவே இருந்தது. எங்கும் சிக்காமல் வழவழவென்று ஓடியது. தேவையற்ற கீச்சிடல்கள், ஓசைகள் எவையும் இல்லாமல் சீராக ஓடியது. நண்பரின் வீட்டு வாசலில் இறங்கிய அதிகாரி, “கண்ணப்பன்! நான் வர்றதுக்கு ஒரு அரை மணி ஆகும். நீ வேணா எங்கேயாவது போய்ச் சுத்திட்டு வர்றதாய் இருந்தா வா …” என்று அவனை அனுப்பிவைத்தார்.
அவன் கால்கள் போன போக்கில் நடக்கலானான். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த ஒரு சின்னத் தெருவுக்குள் நுழைந்த போது சற்றுத் தொலைவில் இருந்த பெட்டிக்கடையின் மீது பார்வை விழுந்ததும் சிகரெட் குடிக்கும் உந்துதல் கிளர்ந்தது. அவன் விரைந்து நடந்தான். கடையில் உட்கார்ந்து ஒரு பெரியவர் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அவன் போய் நின்றும் அவனைப் பாராமல் இருந்தார். சட்டென்று அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவன் அப்பாவேதான். தலை நன்றாக நரைத்திருந்தது, தோல் சுருங்கியிருந்தது, நிறம் குறைந்திருந்தது என்பவற்றைத் தவிர அவர் தன் அப்பாதான் என்பதற்கான சாயல்களும் அடையாளங்களும் மாறாமல் அப்படியே இருந்தன. கடையில் ஒரு பொடியனும் இருந்தான்.
இவனைப் பார்த்ததும் “என்ன வேணும்?” என்று அந்தப் பையன் கேட்டான். அவன் தன் போக்கில்,”ஒரு வில்சன் குடுப்பா!” என்றான். அவன் எடுத்துக் கொடுத்தான். அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொள்ளாமல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு கவனித்தான். அந்தப் பெரியவர் ஒருவேளை தன் அப்பாவைப் போன்ற சாயலை முழுக்க முழுக்கக் கொண்டவரோ என்று ஒரு கணம் நினைத்தான். அது சரியாக இருக்காது என்று பட்டது.
பெரியவர் அசையாமல் வெறித்த பார்வையுடன் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவருக்குக் கண்பார்வை சரியில்லை என்பதைக் கண்ணப்பன் அந்தச் சில விநாடிகளில் தெரிந்துகொண்டான்.
“தம்பி! இங்கிட்டு வா சொல்றேன்,” என்று அங்கே இருந்த பையனைச் சற்று ஓரமாக அழைத்தான். பையன் வியப்புடன் வந்ததும், “அந்தப் பெரியவருக்குக் கண்பார்வை சரியில்லையா?” என்று விசாரித்தான். “ஆமாங்க. அவருக்கு மாலைக்கண்ணுங்க. ஏழு மணிக்கு அப்புறம் கண்ணு தெரியாது.” “அவரு பேருதெரியுமா உனக்கு?” “தவசுப்பிள்ளைங்க.”
தன் ஊகம் சரிதான் என்பது இப்போது கண்கூடாகத் தெரிந்து விட்டதால் கண்ணப்பனின் கண்களில் குபீரென்று கண்ணீர் திமிறியது.
“எத்தினி நாளா இங்கே கடை வெச்சிருக்குறாரு?” “ரொம்ப நாளாங்க. ஆனா இப்ப ஒரு மாசமாத்தான் மாலைக்கண்ணு. அதனாலதான் ஏழுலேர்ந்து எட்டு, எட்டரை வரைக்கும் என்னை உதவிக்கு உக்காத்தி வெச்சுக்குறாரு. மாசம் அஞ்சு ரூவா குடுப்பாரு. நான் கடையிலே உக்காந்து படிச்சுக்கிட்டே யாவாரத்தைப் பார்ப்பேன்.”
“பெரியவரு வீடு எங்கிட்டு?” “அதோ எதிரிலே இருக்குது பாருங்க, அந்தச் சின்னக் குடிசையிலே இன்னொரு கெளவனாரோட இருக்காரு.” “கடை எப்பத் தொறப்பாரு?” “காலை ஏழுக்குத் தொறப்பாரு. ராத்திரி எட்டரைக்கெல்லாம் மூடிடுவாரு,” என்ற பையன், “ஏங்க, நீங்க யாருங்க? அவருக்கு எதுனாச்சும் சொந்தமா? கண் கலங்கி யிருக்குதே?” என்றான். ‘கெட்டிக்காரப் பய’ என்று மனத்துள் பொடியனை மெச்சிய கண்ணப்பன், “ஆமா. ஆனா இப்ப நீ எதுவும் அவருக்குச் சொல்ல வேணாம். நாளைக் காலையிலே நான் அவரு வீட்டுக்கே வந்து பேசறேன்,” என்றான்.
”ஏங்க, இப்பவே பேசுங்களேன்.” “இப்ப சமயம் சரியில்லேப்பா. ஆனா நீ ஒண்ணும் அவர் கிட்ட சொல்லாதே இப்ப. இந்தா இதை வச்சுக்க,” என்று அவனிடம் ஒரு ரூபாயைக் கொடுத்தான் கண்ணப்பன். “இந்தப் பெட்டிக்கடை அவருக்கு மட்டும் சொந்தமில்லே. குடிசையிலே அவரு கூட இன்னொரு கெளவனாரு இருக்காருன்னு சொன்னேனில்லே, அவரும் இவரும் சேர்ந்து வச்சிருக்கிறாங்க. அவரு தள்ளாதவரு. அதனால உள்ளாறவே இருப்பாரு …”
கண்ணப்பன் கிளம்பினான். போகுமுன், ஆசை தீர அப்பாவை நன்றாகப் பார்த்து அவரது வயோதிகத் தோற்றத்தை மனத்தில் பதித்துக்கொண்டு கிளம்பினான். மனம் சொல்ல முடியாத பரவசத்தில் ஆழ்ந்திருந்தது. பாய்ந்து சென்று அவரைக் கட்டிக்கொள்ள அவன் கைகள் பரபரத்தன. அந்தப் பரபரத்தலை வெற்றி கொள்ளுவது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தும் அடக்கிக்கொண்டான். சிகரெட் குடித்ததற்காக அடித்த அடிகளில் மனம் வெறுத்து மகன் ஓடக் காரணமாக இருந்த தாம் அதே சிகரெட்டுகளைத் தம் கடையில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த நிலையில் தம் மகன் தம்மைப் பார்த்துவிட்ட சிறுமை அவரை அவமானப்படுத்தும் என்கிற காரணத்தாலேயே அவன் தனது அப்போதைய வருகையை மறைத்து வைக்க எண்ணினான்.
அன்றிரவு முழுவதையும் அவன் கண்ணிமைக்காமல் கழித்தான். காந்திமதியிடம் பழங்கதைகளைப் பேசிப் பேசி உணர்ச்சிவசப்பட்டவாறே இரவைக் கழித்தான். அதிகாலை ஐந்துக்குப் பூந்தமல்லி நோக்கி உற்சாகம் பொங்கிய மனத்துடன் கிளம்பிவிட்டான்.
அவன் போன போது அவர் குடிசைக்குள் உட்கார்ந்து ஏதோ பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அழுக்கு உடைகளுடன் சின்ன இலையில் இரண்டு இட்லிகளை வைத்துத் தின்றுகொண்டிருந்த அவரைப் பார்த்த போது அவன் மனம் உருகிப் போயிற்று.
முதல் நாள் அமுக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பீறிட, “அப்பா!” என்று தழுதழுத்து நடுங்கிய பெருங்குரலில் கூப்பிட்டுக்கொண்டு அவன் விரைந்து போய் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
- சில்லறை விஷயங்கள்
- பூடகமாகச் சொல்வது
- அப்பாவிடம் ஒரு கேள்வி
- செயற்கைச் சிடுக்கு
- மேசையாகிய நான்
- புதராகிய பதர்
- சூடேறும் பூகோளம்
- தனிமை
- அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !
- பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
- நரதிரவங்கள்
- விலங்கு மனம்
- ‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)
- எத்தகைய முதிர்ந்த ஞானம்!
- ஒரு கதை ஒரு கருத்து
- சொல்லேர் உழவின் அறுவடை
- வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நரகமேடு!
- புகை
- விதியே விதியே
- ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை
- வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்