விதியே விதியே

This entry is part 21 of 23 in the series 6 ஜூன் 2021

எஸ்ஸார்சி

 

 

திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிக்கிடக்கின்றன திருக்கோவில்கள்.

இந்தியாவில் தாய் தந்தை இருவரையும் பெருந்தொற்றில் பலிகொடுத்துவிட்டு அனாதைகளாகிய இரண்டாயிரம் குழந்தைகள் வீதிக்கு வந்திருக்ககிறார்கள்.  மத்திய   மாநில அரசுகள் அவர்கட்கு நிறையவே உதவி செய்ய  உறுதியேற்றுக்கொண்டுள்ளன.  மக்கள் எல்லோரும் துயர் உற்ற குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டஅறைகூவல் விட்டிருக்கிறார்கள்..   சற்றே ஆறுதல் தரும் விஷயங்கள் இவை.

அண்மையில் அஸ்ஸாமில் கொரானா வைத்தியம் பார்க்கும் மருத்துவர் ஒருவரை த்தாக்கியிருக்க்கிறார்கள்.  பெருந்தொற்று நோயாளி இறந்து போனதற்கு அந்த  மருத்துவரே காரணம் என்கிற  தவறான குற்றச்சாட்டை வைத்துத் தெரு நாயை அடிப்பதுபோல்  அடித்துத் துவைத்து  எடுத்து இருக்கிறார்கள்.  தொலைக்காட்சியில் இக்கொடுமையை ப்பார்த்தபோது கண்கள் கலங்கின. இவையும் இன்னபிறவும் நம் தேசத்திற்கே அவமானம்   அநியாயம்  சர்வ அக்கிரமம். விபரீதம்.

 தியாகப்படையாய் உலக அரங்கில்  மருத்துவப்பணி செய்யும் மருத்துவர்கள்  மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் எல்லோருமே இன்று  நடமாடும் தெய்வங்கள் என்றுமட்டுமே  மக்கள் சமூகத்திற்கு அனுபவமாகவேண்டும்.

ஒன்றரை ஆண்டுகாலமாக முடிதிருத்தும் அழகு நிலையங்கள் மூடிக்கிடக்கின்றன.ஆளுக்கொரு கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் வெட்டி முடியை சரிசெய்துகொண்டு  நம் காலம் ஓடுகிறது. யார் முகத்தையும் யாரும் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் எதிரே நிற்பவர்முகக்கவசம் அணிந்திருந்தாலே போதுமடா சாமி என்கிறபடிக்குத்தான்  நேரும் அனுபவங்கள்.

துணி வெளுக்கும் தொழிலாளி வண்டி தள்ளிக்கொண்டு  வீதியில் இஸ்திரிபோடும் தொழிலாளி என்னவெல்லாம் ஆகியிருப்போரோ அவர்களையெல்லாம் பார்த்து எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. அவர் பெற்ற குழந்தைகளுக்குச்சோறு போடுவதெப்படி. அவர் எப்படி எப்படி  காலட்சேபம் செய்துகொண்டு இருப்போரோ தெரியவில்லை..

’ஏ  தயிரு தயிரே’ என்று கூவித்  தயிர் விற்றபடி   சதா வெற்றிலைபோடும் பாட்டியின் குரலைக்கேட்டு மாதங்கள் பலவாகின.. அவ்வம்மையின்வ யோக க்‌ஷேமங்கள் நமக்கு எங்கே தெரிகிறது.

தினம் தினம் விடியற்காலை ’கோலமாவே  கோலமாவே’ என்று  எறும்புதின்னா அந்தக்கல் கோலமாவு விற்ற சைக்கிள்காரனை  நாம் எப்போது பார்ப்பது.

நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் என எத்தனையோ மனித உயிர்களை இப்பெரும்தொற்று விழுங்கிவிட்டது  விருந்து புறத்ததா தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்கிற அய்யன் குறளுக்கு இப்போது என்னதான் மரியாதை. அன்றாடம் விருந்தோடு உண்பான்  சொந்த விளை நிலத்தில் விதைக்கவும் வேண்டாம் தானாகவே அவனுக்கு நிலம் விளையும் என்றார்களே. அது நெஞ்சில் ரணமாக உறுத்துகிறது.

வாழும் நகருக்கு மத்தியாய் சக்தி விநாயகர் திருக்கோவில் திண்டுக்கல் பூட்டுப்போட்டு. கதவடைத்துக்கிடக்கிறது. எப்போதேனும் வீதிக்கு வரும் மக்கள் அந்தக்கோபுரம் பார்த்துத்தாடையில் போட்டுக்கொண்டே நகர்ந்து போகிறார்கள். அந்த ஐயர்  கற்பூரத்தட்டைக்காண்பித்து காசு சம்பாரித்து காலம் ஓட்டினார்.  ஐந்துபேருள்ளது அக்குடும்பம்.அவர் என்னவானார் சேதியில்லை.

பிணம் சுடும் கூடங்கள் ஜே ஜே என்று கூட்டமாய்.  பிணம் சுடும் தொழிலாளி நன்றாக ப்படுத்துத்தூங்கியும் உண்டும் எத்தனையோ காலமானது.  மயான பூமியைச் சுற்றியுள்ள தெருக்களெல்லாம் துர்நாற்றம். புகை கடும்புகை. ஓலங்கள் அழுகுரல்கள் அன்றாடம் இவை.   ஏதோ வீச்சமடிக்கும் தண்ணீரில் நனைந்து போன துணிகளுடன்  ஓயாத மனித  நடமாட்டங்கள் புழக்கங்கள்.

சென்ற ஆண்டு குழந்தைகளுக்கு வாங்கிய யூனிஃபாரம் துணி இன்னும் கட்டுப்பிரிக்காமல்  கிடக்கிறது   இதோ இந்தாண்டு அந்தத்துணி மூட்டை. இந்த தான் பள்ளிக்கதவே திறக்கக்காணோம் தையலர்கள் கடைகள்  நிரந்தரமாய் அடைத்தே கிடக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளித் திறக்கும் போதெல்லாம் கடைத்தெருக்களில் நோட்டு புத்தகம் புத்தகப்பை எழுதுகோல் அது உறங்கு பெட்டி விதம் விதமாய்க் காலணிகள்  தண்ணீர் பாட்டில்கள் என்று வாங்க எத்தனையோ மக்கள் அலை கூடுவார்கள். கடைக்கு கடைக்கு ஏறி ஏறி இறங்குவார்கள். கல்வி நிறுவனங்கள் எல்லாம்தான் முடங்கிக்கிடக்கிறதே.

·         மருந்துக்கடைகள்  மட்டும் ஓயாமல் திறந்து கிடக்கின்றன.  முகமணியும் மாஸ்க் விற்பனை படு ஜோர். சானிடைசர்கள் கையுறைகள் விற்பனைதான் ஓய்வதே இல்லை.

மருத்துவ மனை வாயில்களில் எப்போதும் கூட்டம் கூச்சல் ஆரவாரம் ஆம்புலன்சுகள் அவை எழுப்பும் முனகல். அவை வழங்கும் கிலி தரு ஒலி இவை இவை

பேருந்து நிலையங்கள்  தெரு நாய்கள்  கால்களைப் பரப்பிக்கொண்டுஉலவும் உறங்கும் அரங்கங்களாக  மாற்றம் பெற்றுள்ளன. வேறு ஒன்றையுமே அங்கே பார்க்கத்தான் முடியவில்லை

ரயில் நிலையங்கள் வெறிச்சோடி அச்சம் தருகின்றன. பசு மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. தினம் ஆயிரம் ரயில் பிச்சைக்காரர்கள் இங்கே  வந்து வந்து போவார்கள். அவர்கள் என்ன ஆனார்களோ. திரு நங்கைகளின் கைததட்டொலி கேட்டிலையே நாம்

வங்கிக்கிளைகள் வாயிலில் ஒத்தை ஒத்தையாய் மனிதர்கள் கால் கடுக்க நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன  வங்கிச்சேவை கிடைத்ததோ. உள்ளே ஆட்கள் ஓரிருவர்  வாடிக்கையாளர்களோடு முட்டிக்கொண்டு இருக்கக்கூடும்

தனியார்ப்பள்ளி ஆசிரியர்கள் அதுதான் சுய நிதிக்கல்லூரி ஆசிரியர்கள் ஆன் லைனில் பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் மணிக்கணக்கில் கைபேசி முன் அமர்ந்து பாடம் கேட்கிறார்கள்.  ஆசிரியர்களுக்கு ப்பாதி சம்பளம் கொடுப்பதாய் நிர்வாகம் சொல்கிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

நீதிமன்ற இரும்புக்கேட்டுக்கள் பெரும்பாலும் சாத்தியே கிடக்கின்றன.திண்டுக்கல் பூட்டுக்கள்  அங்கே அழகாய்க் காவல் செய்கின்றன. நீதிபதிகளுக்கு சம்பளம் வந்துவிடும். வக்கீல்கள் பாதிபேர் பட்டினி.  பெருந்தொற்றுக்காலம். ஒரு தே நீர் குடிப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பில்லையே. அரைக்கட்டனச்சலுகையில் உயர் நீதி மன்ற வளாகத்துக் காண்டினை நம்பியே வாழ்ந்த வக்கீல்கள் ஏராளம். அவர்கள் கதியெல்லாம் என்னவானதோ.

கல்யாணமண்டபங்களில் வவ்வால்கள் கம்பீரமாய் ஆட்சிசெய்கின்றன. நாதசுரக்காரர்கள் சமையலர்கள் வாழயிலை சப்ளை செய்யும் வாழைமர விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள்.   மண்டபப் புரோகிதர்கள் கண்கள் கலங்கியபடியே அங்கும் இங்கும் விழித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

எப்போது வரும் எல்லோருக்குமான வெளிச்சம்.

Series Navigationபுகைப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *