பார்வதியம்மா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 22 in the series 18 ஜூலை 2021

                                                  

வேல்விழிமோகன்

“அந்தப் பொம்பளையா.. அது செத்துப்போச்சுங்க..” தலையை நிமிர்த்தாமல் அந்த டைலர் சொன்னான்.. பசுபதி முகத்தில் உணர்ச்சி இல்லாமல் “எப்போ..?”

        “ஒரு ஏழெட்டு மாசம் ஆயிருக்கும்..” என்றபோது பக்கத்தில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தவன்..”இல்லீங்க.. ஒரு வருசம் இருக்கும்..” என்றான்..

        டைலர் இப்போது நிமிர்ந்து பார்த்து..”நீங்க..?”

        “நானு அவங்களுக்கு சொந்தக்காரன்..”

        “ஓசூரா..?”

        “இல்லீங்க  கிருஷ்ணகிரி.”

        கொஞ்சம் தலையை வெளியே இழுத்து..”அங்க பாருங்க ஒரு சைக்கிளு நிக்குதே.. அந்த வீடுதான்.. போங்க..”

        பேப்பர் “அந்தம்மாவுக்கு யாருமில்லையே.. ?” என்றது..

        டைலர்.. “விடுய்யா.. அங்க போயி விசாரிச்சுக்கட்டும்..இல்லன்னா பொன்ராச பாருங்க” என்றபோது பேப்பர் சிரித்ததை புரியாமல் பார்த்தவாறு பகவதி நடக்க துவங்கியிருந்தான்.. ஊர் பலகைக்கு கீழே குப்பை சேர்ந்திருந்தது.. இரண்டு..மூன்று பாறைகளோடு கூடிய வீடுகள்.. உலர்ந்துக்கொண்டிருந்த சோளத்தட்டுகள். ஒரு மேட்டில் தூளி கட்டி நான்கு சிறுசுகள் விளையாடிக்கொண்டிருந்தது.. வெயில் தரையில் விழுந்து தெறித்து “ஸ்ஸ்.. “ என்று வியர்வையை துடைத்துக்கொண்டான்..

        அந்த வீடு வந்தது.. பழைய கோரைப்புல் கொட்டாய்.. வெளியே அடுப்பு.. மண் சுவர்.. பழைய சைக்கிள்.. தையல் போட்ட செருப்பு.. கொட்டாயின் இடுக்குகளில் மடித்த காகிதங்கள்.. கிழிந்த துணி.. ஒரு சீப்பு.. ஒற்றடை.. உள்ளே ஒரு கனைப்பு சத்தம்..”ஆரு..?”

        “பகவதி..”

        “அப்படீன்னா..?”

        “பாட்டியோட சொந்தக்காரன்..”

        “எந்தப்பாட்டி..?”

        “பார்வதியம்மா..”

        “அது செத்துப்போச்சு..”

        “தெரியும்..”

        “இந்த வீடு இப்ப அவங்களது இல்ல.. அவங்களுக்கு இங்க எதுவுமில்ல.. நீங்க போயிடுங்க.. சாவுக்கு வந்திருந்தீங்களா..?”

“இல்ல..”

“அவங்க பொணத்த சுடுகாட்டுல அந்த பனமரம் பக்கமா பொதைச்சிருப்பாங்க.. பாக்கறதுன்னா பாருங்க.. இல்லன்னா பஸ்ஸூ ஏறிடுங்க.. ஒரு மணிக்கு தன்ராஜ் வருவான்..”

“தன்ராஜ் யாரு..?”

“பஸ்ஸூ பேரு..”

“இல்லீங்க.. பாத்துட்டு போறேன்..”

“தங்கிக்கோங்க..” அந்தாள் வெளியே வந்தான். .இல்லை. வந்தார்.. அரை முடியுடன் நீள நீளமான கைகளுடன் ஒட்டிய வயிறுடன் மேலே துணியில்லாமல் முகம் முழுக்க முள்ளு தாடியுடன் கையில் வாழைப்பழ தோலுடன்.. “இந்தா சாப்புடு..”

      “இது தோலு..”

      “பரவாயில்ல சாப்புடு..” தள்ளாடினார்.. ஒன்றிரண்டு பேர் பின்னாடி வந்து நின்று “ஏ.. நீ போ.. தண்ணி அடிச்சுட்டு..” இவனிடம்..”அந்தாளு அப்படிதாங்க.. யாற பாக்கறதுக்கு வந்தீங்க..?” கேள்வி கேட்டவள் புடவையை இழுத்து இடுப்பில் சொருகி கூட ஒரு சின்ன பாப்பாவுடன் சிரித்தபடியே.. நெற்றியில் அகலமான சந்தன பொட்டு.. இவன் கீழே தெரிந்த கால்களின் வெள்ளை நிறத்தை கவனித்து பாப்பாவை பார்த்து வெறுமனே சிரித்து இன்னும் இரண்டு பேர் வருவதை கவனித்தான்.. அந்தாள் அந்த சைக்கிளை பிடித்தபடி அகலக்கால் வைத்து விலகி நடக்க ,,”வேணுமுன்னே நடக்கறது. மூஞ்சியப்பாரு..” என்றாள் பின்னாடி வந்தவள்..

      “நானு பார்வதியம்மாவுக்கு சொந்தக்காரனுங்க..”

      “எதுக்கு வந்தீங்க..?”

      “செத்தது தெரியாது..”

      “அட்டா..” என்றவள் வயதாகி ஆனால் தோற்றத்தை மறைத்த புவுடர் முகம்.. தலையில் வகிடு வளைந்து காதுகளோரம் முடி வெளியே பறந்தது..இடுப்பில் ஒரு துணியை தொங்கவிட்டு அது கால் வரை நீண்டு அவளுக்கு அது பிடித்திருக்கும் போல..”நான்தான் அவளுக்கு தோஸ்து..” என்றாள்..

      “அவங்க செத்தது எனக்கு தெரியல.. நான் அப்ப வெளிய இருந்தேன்.. ஊர்ல சண்முகம் வீட்டுக்கு வருவாங்க..”

      “ஓ.. கிருஷ்ணகிரியா நீங்க.. ?”

      “ஆமா.. சண்முகம் வீட்லயிருந்து பத்து வீடு தள்ளி என்னோட வீடு..  தெருவுல போகும்போது எங்கிட்ட பேசுவாங்க.. நான் இந்தப்பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. அப்படியே பாத்துட்டு போலாமுன்னு வந்தேன்..”

      “வாங்க வீட்டுக்கு..” என்றாள் தோஸ்து.. அதற்குள் சந்தனபொட்டு “எங்க வீட்டுக்கு வாங்க..” கூடவே அந்த பாப்பாவும்..”எங்க வீட்டுக்கு வாங்க..” என்று இழுத்ததும் பேசாமலிருந்த அந்த கருத்த ஆள் உரக்க சிரித்தான்.. கத்தரித்து விடப்பட்ட மீசை.. கண்களில் ஒரு மிரட்டல்.. நல்ல உயரம்.. மேலே வெற்றுடம்பில் வியர்வை வழிந்தது.. இடது கையில் நீளமான கோடாரி.. லுங்கியில் பளிச் வெள்ளை பூக்கள்.. சிரித்தபோது காது வரை நீண்டது..

      “இது அவங்க வீடுதானே..?”

      “ஆமாங்க..” என்றான் அவன்..

      “நான் பாக்கனும்..” என்றதும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு அவன்..”வேணாங்க.”

“ஏன்..?”

“அதைதான் நாங்களும் கேக்கறோம்.. ஏன்..?”

“எனக்கு போகனம்னு தோனுது..”

“சரி .. போங்க..” என்றபோது அவன் உள்ளே நுழைந்திருந்தான்..  சாராய வாடை.. மண் தரையில் எலிப்புழுக்கைகள்.. மேலே பொத்தல்கள்.. வெயில் உள்ளே விழுந்து வட்டம் வட்டமாக.. ஒரு இடத்தில் மறைந்து ஓடும் அரணை.. நடுவில் தாங்கி நின்ற மூங்கில் குச்சி உடைந்து நின்றிருந்தது.. ஏழெட்டு பாட்டில்கள்.. உடைந்த கண்ணாடிகள்.. ஒரு ஓட்டையில் எட்டிப்பார்க்கும கரப்பான்..அந்த மூலையில் விளக்கு வைக்கும் மாடத்துக்கு அருகில் பாதி கிழிந்து தொங்கிய புகைப்படம்..

      அருகில் நெருங்கி அந்த கிழிந்ததை தூக்கிப்பார்த்தான்.. அந்தம்மாதான்.. பார்வதி.. ஈஸ்ட்மென் நிறத்தில் பாதி கிழிந்த உதடுகளுடன்.. ஒன்று சேர்த்ததும் ஒரு கண் தேய்ந்து தலை முடிகளில் வெள்ளை கலந்து கண்களில் ஏதோ சொல்ல வருவது போல..

      சட்டென்று வெளியே வந்தான் பசுபதி.. அந்த கருத்த ஆள் மட்டும்தான் இருந்தான்.. இவனைப் பார்த்து சிரித்து “தன்ராஜ்ல போயிடறீங்களா..?”

      “அந்தம்மா எப்படி செத்தாங்க..?”

      “சாகலை.. சாகடிச்சுட்டாங்க..”

                              0000

      அந்த மரத்தை சுற்றி சுத்தம் செய்து  கம்பங்கதுருகளை பரப்பி இரண்டு மாடுகளை விட்டு சுற்றி வந்துக்கொண்டிருந்தார்கள்.. நிறைய புளிய மரங்கள் இருந்தது.. குறிப்பிட்ட நிறத்தில் கட்சிக்கொடிகள் பறந்தது.. ஏழெட்டு தெருக்கள் இருந்தன.. பட்டிகளில் பெரும்பாலும் நாட்டு மாடுகள் இருந்தன.. தெருக்களில் மண் புழுதியில் ஆட்டுப்புழுக்கை வாசனையும் அடித்தது.. அந்தப் பெண்கள் பெரும்பாலும் கருத்து உருண்டையாக ஆனால் வலுவாக இருந்தார்கள்.. கூடவே ஒரு வித கருத்த அழகு.. குழுந்தைகளிடம் கூட..

      “இங்கெல்லாம் காலைல நெலத்துல எறங்கிட்டா சாயந்திரம்தான் வீட்டுக்கு கெளம்புவோம்..” அந்த கருத்த ஆள் நின்றுக்கொண்டே பேசினான்..

      “உக்காருங்க..”

      “பரவாயில்ல..”

      “உங்க வீடுதானே.. உக்காருங்க..”

      “பரவாயில்ல.. நீங்க சீக்கரம் கெளம்பிடுங்க.. அந்தம்மாவ பத்தி பேசறதுக்கு எதுவுமில்ல.. அப்படி ஒரு வாழ்க்கை..”

      “எனக்கு அவங்களை பத்தி அதிகம் தெரியாது..”

      “நல்லதே..”

      “ஏன் அப்படி சொல்லறீங்க..?”

      “அந்த வீட்டுக்குள்ள போனீங்களே.. என்ன தோணுச்சு..?”

      “வருத்தம்,,

      “உள்ள பாட்டிலு.. சாராய வாசன.. எலி பொந்து.. சரிதானே..?”

      “ஆமா..”

      “அந்தம்மா செத்து ரண்டு மாசம் அந்த வீடு அப்படியேதான் இருந்தது..அப்பறம் அந்த சண்முகம் பைய வந்தான்.. வந்தவன் உள்ள இருந்த சாமானையெல்லாம் எடுத்துட்டு போயிட்டான்.. ஓட்ட குண்டாவ கூட விடல.. அந்தம்மா இருக்கும்போது அவனெல்லாம் வருசத்துக்கு ஒருமுற கூட வரமாட்டான்.. இந்தம்மாதான் போகும்.. ஒரு நிமிசம் இருங்க..” கீழே சற்று தள்ளி உட்கார்ந்து..” காரியம் கூட பண்ணலை.. நாங்கதான் நாலு பேருக்கு சாப்பாடு போட்டு பண்ணோம்.. எவ்வளவு திமிரு பாருங்க.. வீடு மொத்தமா காலி.. டிவி இருந்தது.. மிக்ஸி.. ஒரு சின்ன பீரோ.. மடக்கற கட்டுலு.. அண்டா.. குண்டா.. எல்லாத்தையும் லவட்டிட்டு போயிட்டான்.. ஒரு பவுன்ல சங்கிலி வச்சிருந்தாங்க.. அதுதான் பிரச்சன ஆயிடுச்சு..”

      “என்ன..?”

      “  அந்தம்மா செத்தப்ப அவங்க கழுத்துல இருந்தது.. சண்முகம் கூட்டத்தோட வந்த பெறகு அத காணோம்.. சரி.. இவன்தான் எடுத்து வச்சுக்கின்னான்னு நெனைச்சா அடக்கமெல்லாம் முடிஞ்சு செயின யாரு எடுத்ததுன்னு  ஊர்ல பஞ்சாயத்து வச்சிட்டான்னா பாருங்க.. போலிஸ்ல போயி சொல்றான்னு வெரட்டிட்டோம்.. அப்பறம் சாமான எடுக்க வந்ததோட சரி.. அதுக்கப்பறம்தான் அந்த வீடு அப்படி ஆயிடுச்சு..”

      “ஒரே ஒரு கேள்வி..?”

      “சொல்லுங்க..” என்றபோது பால் வந்தது.. “குடிங்க.. ஒரிஜினல் நாட்டு மாட்டுப்பால்.. தோட்டத்து பக்கம் போலாங்களா.?. எளசா கம்பங்கதுர அறுத்து தர்றேன்.. “

      “இருங்க.. பால குடிச்சிடறேன்..” வாங்கி குடித்தான்.. இன்னும் பத்து..பதினைந்து பேராக சேர்ந்திருந்தார்கள்.. “பார்வதி.. “ பெயர் காதில் விழுந்துக்கொண்டேயிருந்தது.. ஒரு புஷ்டியான ஆள் ரொம்ப நேரம் வருவதும் போவதுமாக இருந்தான்..

      “இருந்து சாப்புட்டு போங்க.. கம்பங்களி செய்ய சொல்லியிருக்கேன்.. தக்காளி சட்னி.. மல்லாக்கொட்ட போட்டது.. நாக்குக்கு சுர்ர்…ரு…ன்னு இருக்கும்.. காலைல போயிடுங்க.. நானு சந்தைக்கு போகனும்.. “

      “நானு இப்பவே கெளம்பிடுவேன்..  ஒரு கேள்வி..?”

      “கேளுங்க.. “

      “அந்தம்மாவுக்கு குடும்பம் இல்லன்னு தெரியும்.. இங்க எப்படி..?”

      “அதுவா.. அந்தம்மா ரொம்ப தைரியசாலிங்க.. உங்கூர்ல இருந்துதான் வாக்கப்பட்டு வந்தது.. கொழந்த இல்லைன்னு அவங்க ஊட்டுக்காரன் வேற ஒருத்திய கட்டிக்கிட்டான்.. இந்தம்மா சம்மதிக்கல.. வீட்டுப்பக்கம் அந்தாள சேத்தல அதுககப்பறம்.. வந்து வந்து பாத்துட்டு கட்டிக்கிட்ட பொம்பளையோடவே தங்கிட்டான் அந்தாளு.. ஒரு கொழந்த ஆகி ரண்டு மாசத்துல செத்துப்போயிட்டான்.. அந்தப் பொம்பள புள்ளைய கூட்டிக்கிட்டு ஊருக்கே போயிடுச்சு.. அந்தாளு பேர்ல இருந்த நெலம்.. வீடு.. எல்லாத்தையும் வித்து எடுத்துக்கிட்டு போயிடுச்சு.. இந்தம்மாவ பங்கு கேக்க சொன்னாங்க ஊர்காரங்க.. தூ..ன்னு காறித்துப்பிடுச்சு.. அந்தாளு சாவுக்கும் போல.. வைராக்கியமுங்க.. அந்த வயசுல அவங்க இருந்த அழகுக்கு பின்னாடி சுத்தன ஆம்பளைங்கல எப்படி கதற வச்சாங்கன்னு ஊர்ல கேட்டீங்கன்னா கதையா சொல்லுவாங்க.. அந்த மாதிரி பொம்பளைய  இந்த ஊரு எழந்திருச்சு.”

      அந்த வீடு..?”

      “அது அவங்களது இல்ல.. உள்ள பட்ட போட்டுக்கிட்டு இருந்தாரு பாருங்க.. பெரியவரு.. அவரோடது.. அவர்தான் அப்ப அந்தம்மாக்குன்னு கொடுத்தாரு.. ஊட்டுக்காரன் வேற கல்யாணம் கட்டிக்கிட்ட பெறகு கிருஷ்ணகிரி போயிடலாமுன்னு கெளம்பிடுச்சு.. அவருதான் இங்கேயே இருன்னு அவரோட நெலத்துல கட்டிக்கொடுத்தாரு.. ராத்திரியில தனியாதான் இருக்கும்.. இப்பவாச்சும் அக்கம் பக்கத்துல ஒன்னு. ரண்டு வீடுங்க இருக்கு.. அப்பவெல்லாம் எதுவுமே கெடையாது.. பெரியவரு பாத்தாரு.. நைட்ல அந்த வீட்டுக்கு வெளியில போயி படுத்துக்குவாரு.. அவரு வீட்ல அரசல் புரசலா பேச ஆரம்பிச்சாங்க.. பார்வதியம்மா உள்ளாற வந்து படுங்கன்னு கூட்டிட்டு போயிட்டாங்க.. அவரு ரண்டு வயசு பெரியவரு.. வேணாம்.. ஊரு பேசுமுன்னு சொன்னாரு.. அந்தம்மா சிரிச்சுக்கிட்டே நீங்க என்னைய என்னவா நெனைச்சு வீடு கட்டிக்கொடுத்தீங்க அப்படீன்னு கேட்டுச்சாம்.. அனாதையா நினைச்சுன்னு சொன்னாராம்.. அப்படியே நினைச்சுக்குங்க.. அனாதைக்கு உதவறங்க அம்மா மாதிரி அப்படின்னாங்களாம்.. பெரியவரு அந்தம்மா செத்த பெறகுதான் குடிக்க ஆரம்பிச்சாரு..சாவுல அழும்போது போயிட்டியே மகளேன்னுதான் அழுதாரு.. ரொம்ப ஒழுக்கமுங்க அந்தம்மா.. பெரியவருதான் புடிவாதமா இன்னொரு கல்யாணத்துக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சாரு.. அந்தம்மாதான் ஒத்துக்கல “

      இவன் பாலை குடித்துமுடித்து விட்டு எதிரில் ஒரு குழந்தையோடு இருந்த அந்தம்மாவை கூப்பிட்டான்..  அது தயங்கி கிட்டே வந்தபிறகு “குழந்தைய கொடுங்க..” என்று கேட்டான்..

      குழந்தை மிரட்சியோடு இவனிடம் தாவியது.. அது கத்துவதற்குள் ஒரு முத்தத்தை கொடுத்தான்.. அது அழ ஆரம்பிக்கும்போது தாயிடம் திரும்ப கொடுத்து “அழகான குழந்தை..” என்றான்..

      “உங்களுக்கு ஊரு ரொம்ப புடுச்சுப்போச்சு போல..
      “ஜனங்களும்..”

      “தண்ணிதாங்க பிரச்சன.. மழைய நம்பிதான் மண்ணு.. அதனாலதான் எல்லாம் மாட்டுக்கு.. ஆட்டுக்குன்னு மாறிட்டோம்.. அதுங்கெல்லாம் எங்க வீட்ல ஒன்னுன்னு ஆயிடுச்சு.. ஆடு மாடு செத்தா அழுவாங்க.. பாசம்.. ஆட்டுக்குட்டியெல்லாம் வீடுங்க பூரா சுத்தும்.. கன்னுக்குட்டி.. ஆட்டுக்குட்டின்னு பொறந்தா ஒரு கொழந்த பொறந்த மாதிரி கம்பு பாயாசம் செஞ்சு சாப்புடுவோம்.. இங்கெல்லாம் கம்புதான் எங்களுக்கு.. அரிசி எப்பவாச்சும்.. கம்புங்கஞ்சி.. கம்பஞ்சோறு.. கம்பு தோச.. கம்பு ரொட்டி.. கம்பங்களி.. கம்பு புட்டு.. கம்பு அட.. மொள கட்டி வெல்லம் கலந்து கூட கடிச்சுக்கறதுக்கு தேங்காய கொடுப்போம்.. ரொட்டி சுட்டு வெல்ல பாகுல போட்டு ஊறவச்சு தருவோம்.. பசங்க எப்படி இருக்கானுங்க பாருங்க.. மாடு மாதிரி..”

      “பொம்பளைங்க கூடத்தான்.. கம்புன்னா சும்மாவா..?..சந்தோசம்.. இன்னொரு கேள்வி..?”

      “சொல்லுங்க..”

      மெதுவாக “சாகடிச்சுட்டாங்கன்னு சொன்னீங்களே அந்தம்மாவ..?”

                                    0000

      பெரியவர் தன்னுடைய தாடியை தடவினார்.. பசுபதியை மேலும் கீழும் பார்த்தார்.. அவர் உட்கார்ந்திருந்து அந்த வரப்போரம் இரண்டு மாடுகள் புற்களை இழுக்கும்..கடிக்கும் சத்தம் கேட்டது. ஒரு கம்பங்கதுரை இரண்டு கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டிக்கொண்டே கம்புகளை உதிர்த்து ஊதினார். மீசை உதடுகளில் ஒட்டிக்கொண்டதை தள்ளிவிட்டு கம்புகளை வாயில் போட்டுக்கொண்டார்…

      அந்த கருத்த ஆள் “இவருதாங்க அப்படி சொல்லுவாரு”

      பெரியவர்..”எதுக்குடா இந்தாள கூட்டிட்டு வந்த..?”

      “பக்கத்துல ஏதோ வேலையா வந்தாராம்..அதுக்காட்டி இந்….

      “நான் கேட்டது இந்தாள எதுக்கு கூட்டியாந்த..?”

      பசுபதி “எனக்கும் கொஞ்சம் கம்பு கொடுங்க “ என்றான்.. அவர் தரவில்லை.. மறுபடியும் வாயில் போட்டுக்கொண்டு அருகில் வந்த ஒரு மாட்டை “அந்தாப்ல போ.. “ என்றார்..

      அது வேகமாக  திரும்பி வாலை அடித்துக்கொண்டு இன்னொரு பக்கம் போனது.. வெயில் தாழ அடித்தாலும் வியர்வை கன்னத்தில் இறங்கியது.. அவர் அதை கவனித்து “மோரு கொடுத்தியாடா இவருக்கு..?”

      “இல்ல பெரியப்பா.. பாலுதான்..”

      “கம்பங்கஞ்சி..?”

      “இல்லீங்க.. களி செய்யறாங்க.. சாப்பிடுவேன்..” என்றான் இவனே.. அந்த கருத்த ஆள் “ஏய்..இருப்பா..” என்று ஒரு சைக்கிள்காரனை நிறுத்தி அவனோடு நடந்து போனான்..

      பெரியவர் குடிசையில் பார்த்த மாதிரி இல்லாமல் தெளிவாக பார்த்தார்.. வெள்ளை சட்டைக்கு மாறி  தலைக்கு எண்ணெய் வைத்து படிய வாரி வேட்டி சுருக்கமாக இருந்தாலும்  புதிதாக தெரிந்தது.. ஒரு மாடு கத்தியபோது சோளப் பயிர்களுக்கு நடுவே சிட்டாங்குருவிகள் கத்திக்கொண்டே பறந்ததை திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டார்..  கம்பு வாசனை வந்தது..

       “எளங்கம்பு,, அதான் அப்படி..” என்றவர்  “டைலரு சொன்னானா உங்கிட்ட ஏதாவது.. ?”

      “ஆமாங்க. பொன்ராச பாக்கச்சொல்லி..”

      “எங்கிட்ட சொன்னான்.. குடிபோதைல இருக்கேன்னு அலட்சியமா.. மூஞ்சி மேலே விட்டேன் ஒரு குத்து.. மடங்கி படுத்துட்டான்.. கூட இருந்தவன் என்னைய புடுச்சிக்கிட்டான்.. இல்லன்னா ஒரு பஞ்சாயத்து நடந்திருக்கும்..”

      “என்னாச்சு..?”

      “என் வாய புடுங்கறீங்க. .பரவாயில்ல.. பார்வதிய தேடி ஒரு ஆளுன்னு நினைக்கும்போது சந்தோசமா இருக்குது.. அவள கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்.. அது நடக்கலை.. இந்த பொன்ராசு இருக்கான் பாரு.. அப்பப்போ அவக்கிட்ட வந்து பேசிட்டு போவான்.. எப்ப..?.. நான் சொல்றது அவ வீட்டுக்காரன் அந்த பொறம்போக்கு செத்து ஒன்னு ரண்டு வருசம் கழிச்சு.. பொன்ராசு ஊர்ல பால்கட வச்சு பால்கோவா கம்பெனிக்கு ஊத்திட்டிருந்தான்..  ஒரு வண்டி வச்சுட்டு வீடுங்களுக்கும் வருவான்.. அப்படித்தான் பார்வதி வீட்டுப்பக்கம் வந்தான்.. ஒரு மாட்ட வச்சுக்கிட்டு பால் கறந்து சம்பாதிச்சிட்டிருந்தா..கூலி வேலைக்கும் போவா.. எங்க ஊரு பொம்பளைங்களுக்கு அவள ரொம்ப புடிக்கும்.. காரணம் அவ எதுக்கும் பயப்படாதவன்னு அவங்களுக்கு நினைப்பு.. நெஜமும் அதானே.. “ அந்த வேட்டி நுனியில் வாயை துடைத்துக்கொண்டு “கொஞ்சம் உள்ளாற போனா பந்தலு இருக்குது .. போயிடலாமா.. வெய்யிலு..”

      “பரவாயில்ல.. சொல்லுங்க..”

      “அப்பதான் அவளோட பழக ஆரம்பிச்சான்.. பார்வதியை யாரும் சந்தேகிக்க மாட்டாங்க.. நானும்தான்.. ஆனா ஒரு முறை கேட்டேன்.. அந்தப்பைய உன்னைய விரும்பற மாதிரி தெரியுது.. கட்டிக்கிறியான்னு.. அவன் ஒரு நண்பன் மாதிரி.. அவ்வளவுதான்னு சொல்லிட்டா.. டைலரு கடைல அந்த விழயம் வரும்போது அவன் ஒரு மாதிரி பேசிட்டு போனதா தகவல் வந்தது..”

      “என்னான்னு..?”

      “அவள விரும்பறதாவும் அவ சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக்க போறதாவும்.. “

      “நல்ல விழயம்தானே..?”

      “ஆனா இன்னொரு பக்கம் பொண்ணு பாக்க சுத்திட்டிருக்கானே..”

      “புரியலை..”

      “எனக்கும்தான்.. அவக்கிட்ட சொன்னேன்.. அவ அவன்கிட்ட பேசினா.. அவன் அப்படியெல்லாம் இல்ல.. எனக்கு உன்கிட்ட பழக்கம் மட்டும்தான்.. ஊர்லதான் தப்பா பேசறாங்கன்னு சொன்னான்.. பார்வதிக்கு புரிஞ்சுடுச்சு.. அவன் அவளுக்கு தூண்டில் போடறான்னு.. வீட்டுக்கு ஒருத்திய கட்டிக்கிட்டு இவள வச்சுக்கலாமுன்னு.. பார்வதி யாரு.. ஆனா பழகின தோசத்துக்கு இனிமே என்னைய தேடிட்டு வராத.. பாலுக்கும் நான் வேற எடம் பாத்துக்கறேன்னு சொல்லி அனுப்பிச்சிட்டா.. அவன் கிராதகன் வெளியில கதைய திருப்பி போட்டான்.. பார்வதியை முடிச்சுட்டேன்னு..” அவர் திரும்பிப்பார்த்து “மழை வந்தா கூட நல்லாயிருக்கும் ..” என்றார்..

      எழுந்து வேட்டியை கட்டிக்கொண்டு திரும்பி வரப்பில் நடந்தார்.. சோளத்தட்டுகளை இரண்டு கைகளாலும் விலக்கிக்கொண்டே போனார்.. பசுபதி எழுந்து எதிரில் அந்த புளியமரத்து அடியில் வந்து நின்றான்.. உள்ளே நான்கைந்து பனைமரங்களை தாண்டி சலசலப்பு கேட்டது.. இரண்டு ஆடுகள் ஒன்றுக்கொன்று துரத்திக்கொண்டிருந்தன.. எங்கேயோ பனம்பழம் தீய்க்கும் வாசனை..

      “என்னா பேசிட்டீங்களா..?” என்கிற குரல்.. தலையில் முக்காடு வைத்து அந்த தோஸ்து.. “இப்படி வாங்க..” என்று அழைத்தவள் அந்த பனைமரத்தின்  ஒரு இடத்தில் கையிலிருந்த அருவாவை கொத்தி நிற்கவைத்தாள்..

      இவன் ஒரு சிறிய காலடி தடத்தில நடக்கும்போது “முள்ளு இருக்கும்.. பாத்துங்க..” என்று சற்று தள்ளி ஒரு நிழலில் அமர்ந்து “கஞ்சி குடிக்கறீங்களா..?”

      இவன் நெருங்கி..”தன்ராஜ் எப்ப வருவான்..?”

                              0000

      அவள் காதோரம் வளைந்திருந்த முடிகளை இழுத்துவிட்டுக் கொண்டாள்.. உதட்டில் இருந்த புன்னகை செயற்கையாக இருந்தது.. குனிந்து அந்த கம்பங்கஞ்சி கூடையை எடுக்கும்போது மென்மையாக அருகிலிருந்த குச்சியை தள்ளிவிட்டாள்.. “உக்காருங்க..” என்று ஒரு இடத்தை காட்டியபோது கஞ்சி வாசனை வந்தது..  வெங்காயம்.. பச்சை மிளகாய்.. அந்த கஞ்சி மீது மோர் மிதந்தது.. பனை மரத்தை தாண்டி பனை ஓலைகள் அடுக்கி வைக்கப்பட்டு பக்கத்தில் நான்கைந்து பழுத்த பனங்காய்கள்..  

      “பெரியவரு அவ்ளோதான் சொன்னாரா..?” அவளும் பக்கத்தில் உட்காரும்போது கழுத்து சுருக்கத்தில் வயது எட்டிப்பார்த்தது.. கீழ் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு எச்சிலை விழுங்கி ஒரு பக்கமாக உட்கார்ந்து அடியில் சேலையை இழுத்துவிட்டுக் கொண்டபோது அந்த வளைவிலிருந்து கண்களை அகற்றினான்..

      “ஆமாங்க..”

      “அவரு பொல்லாதவரு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டைலர வாங்கிட்டாரு வாங்கின்னு சொன்னாங்க..”

      “இன்னும் ஏதாவது இருக்கா..?”

      “பார்வதி என்கிட்டதான் ரொம்ப பேசுவா.. நாங்க ரண்டு பேரும்தான் எல்லா இடத்திலேயும் சுத்துவோம்.. நான் சும்மா. அவ வேற எடத்துல பொறந்திருக்க வேண்டியவ..”

      “ஏன்..?”

      “புத்தி அப்படி.. தைரியம்.. தெளிவு.. வேகம்.. சுறுசுறுப்பு.. உழைப்புன்னு அவ வேற மாதிரி.. சாதாரண பொம்பள இல்ல அது..”

      அவன் கஞ்சியை பாதி குடித்துவிட்டு “தன்ராஜ் எப்ப வருவான்..?”

      “இருங்க.. அவ சந்தோசமா இல்லை.. அவ அழுததை நான் பாத்ததில்லை.. ஆனா உள்ளுக்குள்ள எனக்கு தோணுது.. அவ தைரியத்துக்கு ஏன் அவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைன்னு இப்ப கூட யோசிப்பேன்.. அவ சொல்லுவா.. இன்னொரு கஷ்டமான அனுபவம் எனக்கு வேண்டாமுன்னு.. அவளுக்கு அந்த புருசன் பொண்டாட்டி வாழ்க்க வெறுத்துருச்சு.. ஊர பாத்துட்டு வாழ்ந்திடறேன்னு இருந்துட்டா.. அவளுக்குன்னு இருந்த ஒரே ஒரு உறவு அந்த சண்முகம்தான்..”

      “தெரியும்.  வருவாங்க அங்கதான்.. ரண்டு பொண்ணுங்க அந்தாளுக்கு.. அவங்கள பாக்கறதுக்குனே வருவாங்க.. அவங்களோடதான் இருப்பாங்க..”

      “அந்தப் பைய செஞ்ச துரோகத்த பாருங்க.. பார்வதியோட அண்ணன் பையன் அவன்.. வெற சொந்தமெல்லாம் தூரத்து சொந்தம்.. பெருசுங்கெல்லாம் குழிக்கு போயிடுச்சு.. புருசன அறுத்துவிட்ட பெறகு கிருஷ்ணகிரி போயிடலாமுன்னு அவளுக்குள்ள ஒரு எண்ணம் இருந்தப்போ வேணாம்.. வராதேன்னு சொல்லிட்டான் படும்பாவி.. “

      “ஏன்..?”

      “யாரு பாத்துக்கறது..? பொண்டாட்டி திட்டறாளாம்.. இவ பட்டுன்னு சொன்னா.. நான் வந்தா உன் வீட்ல எதுக்குடா தங்கப்போறேன்.. உன் வீட்டுக்கு வருவேன்னு சொல்லலையே நானுன்னு ஏறிப்போட்டா ஏறி.. பெரியவரு மாடு வாங்கிக்கொடுத்து ஒரு பவுன்ல சங்கிலி எடுத்துக்கொடுத்தாரு.. திடீருன்னு எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இது உதவுமில்லன்னு அவ மறுத்தும் கேக்காம வச்சுக்கோன்னு சொல்லிட்டாரு.. பத்தாதுக்கு வீடு வேற.. அவரு வீட்ல அடக்கி வச்சுட்டாரு.. கோவக்காரு அவரு.. நியாயமுன்னா நியாமா பேசனும்னு சொல்லுவாரு.. அந்த பொன்ராச சட்டைய புடுச்சு தரதரன்னு தெருவுல  இழுத்துட்டு போனவரு அவரு.. அடிச்ச அடில பத்து நாளைக்கு ஆஸ்பிட்டல்ல இருந்தான் அவன்.. இப்ப டைலருக்கு ஆரம்பிச்சிருக்கு சனியன்.. உங்களான்ட பொன்ராச பாருங்கன்னு சொன்னானில்ல.. அவனுக்கும் பார்வதி மேல ஒரு கண்ணு.. எத்தன பேரு..ஒரே பார்வையில அடக்கி வச்சுருவா.. அவ கொஞ்சம் தாராளமா பேசுனது பொன்ராசுக்கிட்டதான்.. பின்னாடி அவனை புருஞ்சுக்காம போயிட்டோமேன்னு வருத்தப்பட்டா.. அவன டைலர் கடைக்கிட்ட நிக்கவச்சு.. “என்னைய கல்யாணம் பண்ணிக்கறியான்னு நாலு பேரு முன்னாடி கேளு.. ஆமா..இல்லன்னு சொல்லறேன்.. ஒடம்பு மேல ஆசைன்னா அதுக்கும் கேளு.. ஆமா.. இல்லன்னு சொல்லிட்டு போறேன்..நீ எனக்கு புதுசா..?.. இல்லன்னு எத்தனையோ பேருக்கிட்ட சொல்லியிருக்கேன்.. பத்தோட நீ பதினொன்னு.. அவ்ளோதான்.. ஆனா நல்லவன் மாதிரி என் உடம்ப பாத்தே என்கிட்ட பேசியிருக்கற.. அதான் ஏமாளியா போயிட்டேன்னு மானத்த வாங்கிட்டா.. அவனுக்கு கல்யாணமே இதனால தள்ளித்தானே போச்சு..” ஒரு வெங்காயத்தை எடுத்து கடித்து “அந்த சங்கிலிய திருடின திருட்டப்பய இதெல்லாம் தெரிஞ்சும் ஊருக்கு வா.. இங்கேயே இருன்னு சொல்லலையே.. பின்னாடி சங்கிலிக்காகதானே வந்து பல்லைக்காட்டி வந்துருன்னு நடிப்பு காட்டினான்.. ..” என்று  எங்கேயோ துப்பினாள்..

      “எப்ப..?”

      “கஞ்சி எப்புடி இருக்குதுன்ன சொல்லலையே..” என்றபோது இன்னொரு பக்கமாக கால்களை திருப்பி உட்கார்ந்தாள்.. பெண்கள் மட்டும்தான் இப்படி உட்கார முடியும் என்பது போல அவளுடைய உடம்பு செங்குத்தாக உயர்ந்து பிறகு தாழ்ந்து ஒரு பெருமூச்சுடன் தரையை பார்த்தது..

       “கஞ்சியா இது.. அமுதம்..”

      “அதுக்கும் மேல.. கம்புக்கு மட்டும்தான் இந்த வாசன.. “

      “நான் இப்போதைக்கு போகப்போறதில்ல.. இந்த கஞ்சிக்காக இங்கேயே இருக்கப்போறேன்..”

      “எங்க வீட்ல தங்கிக்கோங்க.. நாலு ஜீவன் இருக்குது. எதுவும் சொல்லாது.. கம்புமாவு அவிச்சு வெல்லம் போட்டு தர்றேன்.. அவ்வளவு ருசியா இருக்கும்..”

      “உகும்.. எங்கேயும் இல்ல..”

      “பின்ன…?”

      “பார்வதியம்மா குடிசைல..”

                              0000

      அந்த கருத்த ஆள் தலைக்கு முண்டாசு கட்டி இரண்டு ஆடுகளை கழுவிக்கொண்டு வீட்டுக்கு முன் தன்னுடைய வளர்ந்த பையனை கொஞ்சிக்கொண்டிருந்தான்.. “இன்னும் போலியா நீங்க..?” என்றவன் இவன் சொன்னதை கேட்டு “சர்தான்.. குடிசைல புண்ணாக்கு அரைக்க போறீங்களா..? ஏதோ வந்தீங்க. போனீங்கன்னு இல்லாம.. அந்த எடம் ராசியில்லைங்க..”

      “ஆனா அந்தம்மா வாழ்ந்த வீடு..”

      “இருக்கட்டும்..”

      “சுத்தம் பண்ணி ஒலையெல்லாம் மாத்தி மறுபடியும் மண்ணு பூசி வெளிய ஒரு பந்தல போட்டு விட்டா அந்தம்மாவுக்கு ஒரு சாந்தி..”

      “நல்லாத்தான் பேசறீங்க.. அவனுக்கில்லாத அக்கற உங்களுக்கெதுக்கு..?”

      “யாரு..?”

      “அந்த சண்முகம்..”

      “பெரியவர விட என்னாங்க உசத்தியா செய்யப்போறோம்.. சண்முகத்த பாத்தரம் பண்டமெல்லாம் எடுத்துக்கிட்டு போக நீங்க விட்டிருக்கக்கூடாது.”

“ஊருல இருந்து பத்து.. பதினஞ்சு பேர கூட்டிட்டு வந்துட்டாங்க.. அவங்க அந்தம்மாவுக்கு வாரிசு இவன்தான்னு வெத்தலைய மென்னுக்கிட்டே சொல்லறாங்க.. அந்தம்மாவுக்கு சொத்தா இருக்குது.?. கட்டிக்கிட்டவன் சொத்தையே தூன்னு துப்புனவங்கதானே அவங்க.. வெறும் மிக்ஸி.. டிவிக்கு ஆசப்பட்டு இப்படி செஞ்சுட்டானுங்க.. பெரியவரு எடுத்துட்டு போடா மைரான்னு சத்தம் போட்டுட்டாரு.. சங்கிலிய காணோம்.. மொதல்ல அதுக்கு வழிய சொல்லுங்கன்னு அவன் திருப்பி கத்தினான்.. அப்ப ஊர்காரங்க திருடனுங்களான்னு அவரு அடிக்கப் போயிட்டாரு.. அந்த பத்து பேருக்கு பின்னாடி மறைஞ்சிட்டு பொருளோட போயிட்டான்.. திருடனுங்க அவன்.. பொணத்து மேல இருந்த சங்கிலிய அத்தன பேரு இருக்கும்போது யாருக்கும் தெரியாம அமுக்கனவன் அவன்.. அந்தம்மா கழுத்தில சங்கிலி தொங்குதுன்னு தெரிஞ்சு ஊருக்கு போனப்ப அவுத்துக்குடு.. கடன்ல இருக்கேன்.. அடமானத்துக்கு வச்சுட்டு தற்றேன்னு கேட்டிருக்கான்.. முடியாதுன்னு வந்துருச்சு.. கொஞ்ச நாளு கழிச்சு இங்கேயே வந்து கைல கால்ல விழுந்திருக்கான்… மெரட்டியிருக்கான்.. அது பெரியவரு வீட்டுது.. திரும்ப அங்கதான் அது போகனும்னு பார்வதியாம்மா சொல்லிருச்சு.. அவன் கடைசியா தர்றியா இல்ல போட்டுமான்னு கேட்டுப்பாத்தான்.. கெளம்பிடுன்னு சொல்லிடுச்சு.. இல்லன்னா சாவுக்கு கூட வந்திருக்கமாட்டான்.. சங்கிலிக்காகவே வந்தான்..  அந்தம்மா அதுக்கப்புறம் அங்க போகாம இருந்துச்சு.. இருந்தது இந்த உறவுதான்.. அதுவும் இல்லைன்னு ஆயிடுச்சு.. இப்ப புரிதுங்களா ஏன் பெரியவரு சாகடிச்சுட்டாங்கன்னு சொன்னாருன்னு.. ஒரு பொம்பளைக்கு இந்த மாதிரி அமையக்கூடாதுங்க… பெரிய தைரியசாலிதான்.. அவங்களே அமைச்சுக்கிட்ட வாழ்க்கைதான்.. ஆனா என்னாங்க வாழ்க்கை… எங்க ஊரையே சொந்த ஊரா நினைச்சுக்கிட்டு.. எந்த பொம்பளைங்க இப்படி பண்ணும்..?,, யாரும் இல்லன்னா யார் கால்லயாவது விழற இந்த காலத்துல..ம்..” நிறுத்திவிட்டு ஆடுகளை துரத்திவிட்டு ஓரமாக போன ஒரு நாயை “தசொ.. த்சொ..” என்றான்..

      ஒரு பெண் முறத்தில் எதையோ கொண்டுவந்து எதிரில் குப்பையில் கொட்டிவிட்டு போனது.. நான்கு வீடுகள் தள்ளி எட்டிப்பார்த்த ஒரு பாட்டி.. கருப்பு நிற வேட்டிகள் கொடிகளில் தொங்கியது.. பின்னாடி ஒரு கோணக்காய் மரத்தின் உச்சியில் குருவிக்கூடுகள்.. சுவர்களில் செம்மண் வழிந்து அறையும் குறையுமாக.. வழக்கம்போல அந்த ஆட்டுபுழுக்கை வாசனை..

      பசுபதி நகர்ந்தான்.. தெருக்களை கடந்து அந்த டைலர் கடையை தாண்டி.. தாண்டும்போது எட்டிப்பார்த்தான்.. கடை மூடியிருந்தது.. வெளி திண்ணையில் விழுந்திருந்த  அந்த பேப்பர்.. தாண்டி அந்த குடிசை பக்கம் வந்தபோது சைக்கிள் தெரிந்தது..

..                             0000

      “அந்த தோஸ்து சொன்னா.. நீ இங்கதான் தங்கப்போறேன்னு.. வந்து ஒடைஞ்ச பாட்டிலை எடுத்துட்டேன்.. ஒட்டடைய தொடைச்சுட்டேன்.. என் வீட்ல ஒரு போட்டா இருந்தது.. கொண்டாந்து வச்சுட்டேன்.. பூவ போட்டு கற்பூரம் வச்சு கும்புட்டுக்கலாம்.. வாழ இலையில வச்சு படையல் போட்டுடலாம்.. சாப்பாடு பூசனிக்கா பொரியலோட.. அது பார்வதிக்கு புடிக்கும்.. தோஸ்த வரச்சொல்லியிருக்கேன்.. பத்து பேர கூட்டிட்டு வருவா.. தரைய சாணி போட்டு மெழுகனும்.. சுத்திலும் மண்ணு பூசனும்.. மேல ஓலைய மாத்தனும்…நாளைக்குள்ள முடிச்சுடலாம்.. முன்னாடி பந்தல போட்டு தண்ணி தெளிச்சு கோலம் போட்டுடலாம்.. எல்லாம் சரி.. இன்னிக்கு நாளைக்கு இருப்பே.. அப்பறம்..?”

      “நீங்கதான்..”

      “குத்திக்காட்டறே.. பார்வதி மாதிரி ஒரு பொம்பள இருந்த வீட்ட நாசம் பண்ணிட்டு.. தண்ணியடுச்சுட்டு.. அப்படித்தானே.. ?”

      “இருக்கலாம்..”

      “பார்வதிக்கு ஏதாவது சொத்து பத்து.. பேங்கு புக்கு.. சேமிப்பு.. அப்படின்னு வேவு பாக்க வந்தியா..?”

      “அதான் எதுவுமில்லையே..”

      “அப்ப ஏன் இப்படி..?”

      “அந்தம்மா சாதாரண மனுசி இல்ல..”

      “அதுக்காக..?”

      “அவங்க வாழ்ந்த எடம் பத்தரமா இருக்கனும்.. சுடுகாட்டுல அவங்க இருக்கற எடத்துக்கு அடையாளம் வச்சு கல்லு கட்டனும்.. அவங்க பேர்ல ஊருக்கு ஏதாவது செய்யனும்..”

      “இரு.. இரு.. என்ன சொன்ன..?”

      “சுடுகாட்டுல..

      “இல்ல.. அதுக்கப்பறம்..?”

      “ஊருக்கு ஏதாவது நல்லது செய்யனமுன்னு..”

      “அதாவது அவங்க பேர்ல..”

      “ஆமா..”

      “நீ யாரு..?, உண்மைய சொல்லு..”

      “சொல்லிட்டேனே. வழில போறவன்னு வச்சுக்கோங்க.. “ இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து வீடியோவை கட்..காபி.. பேஸ்ட் செய்து அந்த மென்பொருளில் ஜிகினா வேலைகள் காட்டி எழுத்துக்களை ஓடவிட்டு பார்வதியம்மாவின் கிழிந்த புகைப்படத்தை முகப்பில் வைத்து “இதுவரை பார்த்திராத வீரத்தாயி பார்வதியம்மா..” என்று பெயர் வைத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து “மறைந்த கேமராவில் பதிவான வாழ்க்கை காவியம் “ என்கிற துணுக்கு வரியை சேர்த்து பத்து நிமிடம் கழித்து உலகத்தின் பார்வைக்கு வரும் அந்த வீடியோ ஏற்படுத்தும் பார்வையாளர்களுக்காக கால்களை நீட்டி கையில் இருந்த வெங்காய பக்கோடாவை மென்றுக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தான் பசுபதி..

                        0000

 

       

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *