இறுதிப் படியிலிருந்து –  கிருஷ்ணன்

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 11 in the series 25 ஜூலை 2021

 

                             

                                   ப.ஜீவகாருண்யன்                           

‘அய்யோ! அய்யோ! எதற்காக இந்தத் துவாரகை யாதவர்கள் இப்படி அடித்துக் கொண்டு மாய்கிறார்கள்?’ என்று வேதனைப்படத்தான் முடிந்தது. கொலை வெறி கொண்டவர்களாகத் தாறுமாறாக அடித்துக் கொள்பவர்களை எத்தனை முயன்றும் என்னால் தடுக்க இயலவில்லை.

ஆண்டுதோறும் நடத்தும் கடற்கரைத் திருவிழா வழக்கத்தில் வயது முதிர்ந்தவர்கள், நோயுற்றவர்கள் ஒருசிலர் தவிர துவாரகையின் மற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வழக்கத்தில் மாறாதவர்களாக சரஸ்வதி நதி கடலில் சங்கமமாகும் இந்த பிரபாச தீர்த்தக் கடற்கரையில் கூடினர்.

.கடற்கரை வந்து சேர்ந்த உடனே பெரியம்மா ரோகிணியின் புதல்வர் அண்ணன் பலராமன் என்னிடம் சொன்னார்.

‘கிருஷ்ணா, நூறை நெருங்கும் கிழவனாகி விட்ட காரணத்தில் பற்களெல்லாம் போய்விட்டன. விழா விருந்தில் எனக்கு இறைச்சி எதுவும் வேண்டாம். அளவாக மைரேயகம் மட்டும் போதும்.’

நான் அண்ணனிடம் குறுஞ்சிரிப்புடன் கூறினேன்.

‘அண்ணா நீங்கள் நூறு வயதை நெருங்குகிறீர்கள் என்றால் நானும், உங்கள் வயதை நெருங்கியவனாகத்தானே இருக்க வேண்டும்? இப்போது என்னுடைய வயது என்ன தெரியுமா? எண்பத்து நான்கு. நூறு வயதை நெருங்கும் உங்களுக்குத்தான் பற்கள் கொட்டி விட்டனவா? எனக்குந்தான். இப்போதெல்லாம் இறைச்சி உணவு எனக்கும் சிரமமானதாகத்தான் இருக்கிறது. கன்றிறைச்சி உட்பட விதம் விதமான இறைச்சி உணவுகள் இருக்கின்றன. பற்களில்லாத நிலைமையில் மதுவுடன் விருப்பமான இறைச்சித் துண்டுகள் ஒன்றிரண்டை விழுங்கிப் பாருங்கள்!’

உடனிருந்த இளைஞனிடம் அண்ணனுக்கு அளவாக மதுவைக் கொடுக்கச் சொன்னவன் அவரிடமிருந்து விலகி தனியே எனக்கெனக் காத்திருந்த மைரேயகக் குடத்திலும் இறைச்சித் துண்டங்களிலும் ஆர்வத்தைத் திருப்பினேன். அளவற்றுக் குடித்தேன். ஆண்களில் குழந்தைகள் போக மற்றவர்கள் இளமை, முதுமை பேதமில்லாது கொஞ்சம் குடித்தாலே தடுமாற்றத்தில் தள்ளிவிடும் வீரியம் மிகுந்த மைரேயக மதுவை இறைச்சியுடன் சேர்த்து விருப்பம் போலக் குடித்தனர். பெண்களிலும் பெரும்பாலோர், ‘ஆண்கள் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லை’ என்னும் எண்ணத்துடன் ஆண்களுக்குப் போட்டியாகக் குடித்தனர்.

திடீரென ஏற்பட்டுவிட்ட யாதவர்களின் கொடூர சண்டையின் காரணத்தில், உச்சியைப் பிடித்து உலுக்குவதாக எனக்கு ஏறியிருந்த போதை, ஏறிய வேகத்தினும் வேகமாக இப்போது இறங்கி விட்டது. அண்ணன் நடை தடுமாறும் போதையில் இருப்பதைக் கவனித்தேன்.

அளவு மீறிப்போன குடி வெறியில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து முடிந்து போன குருக்ஷேத்திரப் போரில் கெளரவ, பாண்டவ அணியில் நின்று போர் புரிந்த கிருதவர்மா, சீனியின் பேரன் சாத்யகி இருவரிடையே அந்தப் போர் குறித்து விவாதம் வளர்ந்திருக்கிறது.

எனது இன்னுயிர் நண்பன் சாத்யகிதான் முதலில் ஆரம்பித்திருக்கிறான்.

சாத்யகிக்குச் சளைக்காதவனாகத் தலை மீறிய போதையில்-கோபத்தில் அண்ணன் பலராமனின் ஆருயிர் நண்பனும் எனக்கும் ருக்மிணிக்கும் பிறந்த சாருமதியைத் தனது மகன் விசாலாக்கனுக்குத் திருமணம் புரிந்திருப்பவனுமான கிருதவர்மா அவனுக்கு எதிர்க்கணை போட்டிருக்கிறான்.

கடற்கரைப் போருக்கு சாத்யகி, கிருதவர்மா வாய்ச் சண்டையே போதுமானதாக ஆயிற்று. வாய்ச் சண்டை கைச் சண்டையாக வடிவம் மாறிற்று.  கண்ணை மறைக்கும் குடி வெறியில் கட்டுத் திட்டமற்று சாத்யகிக்கும் கிருதவர்மாவுக்கும் ஆதரவாக இரு அணியாகத் திரண்ட யாதவர்கள் கைத் தடிகள்,  அடுப்பெரிக்க எடுத்து வந்த விறகுகள், படகுத் துடுப்புகள், மாட்டு வண்டிகளில் அரணாகப் பொருத்தி வந்த மூங்கில் கழிகள், பண்டம் பாத்திரங்கள் என கண்களில் பட்டதையெல்லாம் ஆயுதங்களாகக் கொண்டு கண்மூடித்தனமாக அடித்தழிந்து விட்டனர்.  துவாரகையின் யாதவர்கள் அனைவரும் நெடிய கடற்கரையின் மணல் வெளியில் கண் கொண்டு காண முடியாத கோலத்தில் ஆங்காங்கே பிணங்களாகிக் கிடக்கின்றார்கள். தேடியலைந்து, கணக்கற்றுக் கிடக்கின்ற  பிணங்களினிடையே இரத்தச் சேற்றில் அண்ணனைக் கண்டு பிடித்தேன். பின்னந்தலை பிளந்து போயிருந்தது. யாதவன் யாரோ ஒருவனின் குடி வெறி, காரணமில்லாமல் எனது அன்புக்குரிய சகோதரரைக் காவு வாங்கி விட்டது. ஆற்றுவார்–தேற்றுவார் இல்லாத அவல நிலையில் கடற்கரை வெளியெங்கும் பெண்கள் குழந்தைகளின் கதறலோசை கேட்கவியலாததாகக் கிழவன் எனது செவிப்பறைகளைக் கிழிக்கிறது. கடற்கரை மரங்களின் கீழே நிழல் பரப்பில் அவிழ்த்து விடப்பட்டிருந்த வண்டிகளின் காளைகள் நடந்து விட்ட களேபரக் காட்சியிலும் ஓசையிலும் மிரண்டு பெருங்குரலெடுத்து அலறுகின்றன. அதிசயமாக இருக்கிறது. எப்படி நான் ஒருவன் மட்டும் தப்பிப் பிழைத்தேன்? என்ன கொடூரம் இது? எதற்காக-எப்படி நான் மட்டும் பிழைத்தேன்? நடந்த குடிவெறிக் கொடூரம் கண்டு எங்கேனும் ஓடி ஒளிந்து கொண்டேனா? உயிருடன் இருப்பதையே என்னால் நம்ப முடியவில்லை.

தூரத்தில் யாரோ ஒருவர் நடந்து வருவது மங்கலாகத் தெரிகிறது. வருகின்ற மனிதன் எனது தேரோட்டி தாருகன் என்பதில் மனம் மகிழ்கிறது. ‘சிறிய தந்தை தேவகரின் மகன் தம்பி உத்தவன் காசிக்குப் பயணம் போனதால் பிழைத்தான். மற்றபடி… ஆஹா! தாருகனாவது தப்பிப் பிழைத்தானே!’ தாருகன் நெருங்கி விட்டான். நான் அவனிடம் குரல் தழு தழுக்க, ‘தாருகா, என்ன நடந்திருக்கிறது பார்த்தாயா? ஏன் இந்த யாதவர்கள் இப்படி அடித்தழிந்து போனார்கள்? என்ன கொடுமையிது?’ என்றேன்.

“யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், இத்தனை கொடூரத்துக்கு யாதவர்கள் மட்டுமே காரணம் இல்லை போலிருக்கிறது. கடற்கரையில் பிணங்களாக வீழ்ந்து கிடக்கும் ஆடவப் பிணங்களினிடையே ஆடை குலைந்தும் நிர்வாணமாகவும் குழந்தைகளுடன் அலங்கோலக் காட்சியாகியிருக்கும் பெண்களைப் பார்க்க, கோட்டைச் சுவர்களுக்குள் பாதுகாப்பாயிருக்கும் துவாரகைக்குள் நமக்கெதிராக வாலாட்ட முடியாது தவித்த ஆபீரர்கள் கடற்கரை யாதவச் சண்டையினிடையில் புகுந்து சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி விபரீதமாக விளையாடி விட்டதாகத் தெரிகிறது.”

தாருகன் சொல்வது உண்மையாயிருக்குமோ? அப்படியானால்…?

யாதவர் என்னும் பெரு மரத்தில் யது, மது, அந்தகர், போஜர், விருஷ்ணீ, சட்வத்துவர், சாத்துவர், தசார்ஹர், அத்புதர், ஷுரர், மாதுரர், குந்திகள் என்று பல கிளைகளின் பிரிவினை உரசல் இருப்பது உண்மைதானென்றாலும் யாதவர்களின் உரசலையுங் கடந்து துவாரகையின் வடக்கிலிருக்கும் ரைவதக மலைக்கும் வடக்கில் எங்கிருந்தோ வந்து நிலங்களை ஆக்ரமித்திருக்கும் ஆபீரர்கள் இந்தப் படு கொலைக் களத்தில் பங்கேற்றிருப்பார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆபீரர்களுடன் கூடவே சேர்ந்தவர்களாக அழகான யாதவப் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களாயிருக்கும் நாகர்கள், குலீந்தர்களுக்கும் பங்கிருக்க வாய்ப்பிருக்கிறது.  

அதிர்ந்து போய் விழிக்கத்தான் முடிந்தது என்னால்.

பாழும் குடிவெறி கடற்கரை வெளியைச் சரியாகப் பார்க்க முடியாத வகையில் பாவி எனது கண்களை மறைத்து விட்டது.   

நான் தாருகனிடம் துயரம் மேவியவனாகக் கட்டளையிட்டேன்.

“தாருகா, கடற்கரைப் பிணங்களைக் காக்கை, கழுகுகள் கொத்திப் பிடுங்க ஆரம்பித்து விட்டன. இங்கிருந்து என்னால் இம்மியும் நகர முடியாது. என்னை எதிர் பார்க்காதே! கடற்கரை வெளியில் மிச்சமாயிருப்பவர்களை எளிதாக அஸ்தினாபுரம் அழைத்துச் செல்லும் வகையில் முதலில் இவர்களைக் கங்கோதராவிற்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்! வேறு வழியில்லை. விரைந்து அஸ்தினாபுரம் போ! உதவிக்கு பாண்டவர்களில் ஓரிருவரையாவது உடன் அழைத்து வா! அர்ச்சுனன் வந்தால் நல்லது! புறப்படு! தாமதிக்காதே!”

தாருகன் தாமதிக்காமல் புறப்பட்டுப் போய் விட்டான்.

என்னுடன் வந்த எனது குடும்பத்துப் பெண்கள் அனைவரையும் ஏற்கனவே பார்த்துக் கதறி விட்டேன். இதற்கு மேல் யாரையும் பார்க்கத் துணிவில்லை; விருப்பமுமில்லை. ‘ஆனது ஆகி விட்டது.  அஸ்தினாபுரம் சென்றுள்ள தாருகன் திரும்பும் வரை இங்கேயே ஏதாவது ஒரு மரத்தடியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடக்க வேண்டியதுதான்.’ என்னும் முடிவுடன் கடற்கரையிலிருந்து ஒதுங்கியிருக்கும் தோப்பின் பெரிய அஸ்வத்த மரத்தடிக்குச் சென்றவன் அதன் குளிர்ந்த நிழற்பரப்பில் சிந்தை குலைந்தவனாகச் சோர்ந்து வீழ்ந்தேன்.

இதற்கு மேல் வாழ ஆசையில்லை. ஆனாலும் கடமை ஒன்று எதிர் நிற்கிறது. பிணங்களாகிவிட்ட யாதவர்களை ஒன்று சேர்த்து அடக்கம் செய்ய வேண்டும். இனி என்னால் ஆகப் போவது ஒன்றுமில்லை. துவாரகையில் மிச்சமாகியிருக்கும் பெண்கள்தான் பிணங்களை ஏதாவது செய்ய வேண்டும். எரிக்கவோ புதைக்கவோ எது செய்தாலும் சரிதான்.  ‘துவாரகையிலிருந்து பெண்களை, குழந்தைகளை வெளியேற்ற தாருகன் சீக்கிரம் திரும்பினால் நல்லது.’ என எண்ணுகிறேன். அஸ்தினாபுரம் என்ன அருகிலா இருக்கிறது? வேறு வழியில்லை. துவாரகை மக்களில் மிச்சமாயிருப்பவர்களை வெளியேற்றித்தான் ஆக வேண்டும்.

பிரசித்தி பெற்ற யது வம்சத்தின் வாசுதேவருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தேன். ‘தங்கையின் எட்டாவது பிள்ளையால் கட்டாயம் மரணம்!’ எனச் சொன்ன ஜோசியனை நம்பி எனது தாயின் சகோதரன் கம்சன், என்னைக் கொன்று விட முயன்ற காரணத்தில் பிருந்தாவனத்தில் நந்தகோபர் – யசோதாவிடம் வளர்ந்தேன். வளர்ந்து வாலிபனாகிய பிறகு அண்ணன் பலராமன் உதவியுடன் கம்சனைக் கொன்றேன்.    

அஸ்தி, ப்ராப்தி ஆகிய தனதிரு மகள்களின் கணவனான கம்சனைக் கொன்ற என்னைக் கொல்ல பதினேழு முறை படையெடுத்து முயன்ற, படைபலமும் உடல் பலமும் மிகுந்த மகத அரசன் ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவிலிருந்து யாதவர்களை தம்பி உத்தவன், சாத்யகி மற்றும் பலருடைய உதவியில் நாற்றைப் பிடுங்கி வருவது போல் இடம் பெயர்த்துக் கொண்டு வந்தவன், காடு மேடாகக் கட்டாந்தரையாகக் குசஸ்தலை என்னும் பெயருடன் கிடந்த சிறிய தீவை, புலம் பெயர்ந்து வந்தவர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக – வசதியாக மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் தாமரை, அல்லித் தடாகங்கள், பசுஞ் சோலைகள் என எதற்கும் குறைவில்லாத வகையில் ‘பூலோக சொர்க்கம்!’ என்று புகழ்ந்துரைக்கும் அளவில் அழகிய தேசமாக மாற்றினேன். யாதவர்களுக்கு வல்லுநர்களைக் கொண்டு பெரும்படகுகள் கட்டப் பயிற்சியளித்தேன். மீன் பிடித்தலையும் வியாபாரத்தையும் நெசவையும் முக்கியத் தொழிலாக்கினேன். என்னாலியன்ற அளவில் இன்னும் ஏதேதோ செய்தேன். அழகிய துவாரகைக்கு அரசன் நானில்லையெனினும் அரசனுக்கும் மேலாகப் பேரரசன் போலவே வாழ்ந்தேன்.

கம்சனுக்குப் பயந்து நந்தகோபர் வீட்டில் வளர்ந்த எனது வாலிப காலம் என்னிலும் ஆறு வயதுகள் மூத்த விதவைப் பெண் ராதை உட்பட பிருந்தாவனத்து அழகழகான கோபியர்கள் பலருடன் கொண்டாட்டம் கொண்டதாக இருந்தது.

குந்த மரங்களும் மந்தார மரங்களும் தம்மில் மட்டில்லாது மலர்களை நிறைத்து மணம் பரப்புகின்ற, பேல், பேரி, அஸனம், அசோகம் ஆகிய மரங்கள் குளிர்மை விதைக்கின்ற கோடை நாட்களின் முன்னிரவுப் பொழுதுகளில் மற்றும் பெளர்ணமி இரவுகளில் யமுனை நதியின் மணல் மடியின் மேல் தாங்கள் விரித்து வைத்த மேலாடை மஞ்சத்தில் நாயகனாக என்னை இருத்தி சந்தனக் களபம் மேவிய தங்களின் அழகிய முலைகளில், மேகலைகள் தளர்ந்த சிறுத்த இடைகளில், காணும் கண்களில் மிரட்சிக் கனலேற்றும் கனத்த தொடைகளில் எனதிரு கரங்களை இழுத்துப் பதித்து, தளர்ந்து, தழுவி, நெகிழ்ந்து, மகிழ்ந்து தனியாகவும் கூட்டாகவும் எனது விருப்பத்திற்குரிய அந்த பிருந்தாவனப் பெண்கள் என்றோ நிகழ்த்திய சரச சல்லாபங்கள் நேற்று நிகழ்ந்தவை போல நினைவலைகளில் மிதக்கின்றன.

எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன. பெருங்கிழவனாகி விட்டேன். ஆனாலும் இன்னும் மனம் இளமை குன்றாமல்தான் இருக்கிறது. இளமை குன்றாதிருக்கும் மனத்திரையில் என்றோ நிகழ்ந்தவை இன்றைய காட்சியோட்டம் போல் நிழலாடுகிறது.

ரோகிணி, இந்திரா, வசாகி, பத்ரா, சுனாமினி, சகதேவி, சாந்திதேவி, ஷ்ரீதேவி, தேவரட்சதை, விருகதேவி, உபதேவி, தேவகி, சுதனு, வடவா இந்தப்  பெயர் வரிசையில்  பதினான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட தந்தை வாசுதேவருக்கு இணையில்லையென்றாலும் ஏறக்குறைய என்னும் அளவில் என்னை விரும்பியவர்களாகவும் எனது விருப்பத்துக்கு ஆட்பட்டவர்களாகவும் ருக்மிணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, நப்பின்னை என்னும் சத்தியவதி,  மித்திரவிந்தை, நீலாவதி என்னும் பத்ரா, லக்ஷ்மணை ஆகிய எட்டுப் பெண்களைப் போரிட்டும் போட்டியிட்டும் காளைகளை அடக்கியும் கைப்பிடித்தேன். எட்டு மனைவியர் வழியில் எண்ணற்ற பிள்ளைகள், பேரர்கள் கொண்டவனாக இருந்தேன். இன்று, எனக்கும் ருக்மிணிக்கும் பிறந்த பிரத்யும்னன்–ருக்மதி வழி பேரன் அநிருத்தன்–ரோசனை இவர்களின் மகனும் கொள்ளுப் பேரனுமாகிய வஜ்ஜிரன் ஒருவனைத் தவிர மற்ற ஆடவர்கள் அனைவரையும் ஒரு சேர இழந்து நிற்கின்றேன்.

அத்தை குந்தியின் மகன்களான பீமன், அர்ச்சுனன் இருவரின் உடல் பலத்திலும் வில் திறனிலும் இணையானவன் இல்லையென்றாலும் பாணாசுரன், நரகாசுரன் போன்றவர்களைப் பல்வேறு காரணங்களுக்காகக் காடுகள், மலைகள் கடந்து, துவாரகையிலிருந்து வட கிழக்குத் திசையில் வெகு தூரம் படை நடத்திச் சென்று அவர்களைச் சிரமத்துடன் வென்று திரும்பினேன். மதுராவிலிருந்து யாதவர்கள் வெளியேறக் காரணமாயிருந்த ஜராசந்தனைப் பின்னாளில் பீமனை வைத்து தந்திரமாகக் கொன்று முடித்தேன். குருக்ஷேத்திரப் போரில் அத்தை மகன்கள் என்னும் காரணத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாக – ஆலோசகனாகக் களத்தில் முன் நின்று அவர்களுக்கு வெற்றிக் கனியைத் தேடிக் கொடுத்தேன். இன்னும் என்னவெல்லாமோ செய்தேன்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களாக எத்தனையோ நிகழ்ந்திருக்கின்றன.          

அழகி சத்தியவதியை மனைவியாகக் கைப்பிடிக்க மூர்க்கம் கொண்ட ஏழு காளைகளுடன் உயிரைத் துச்சமெனக் கருதி மோதியதும், அழகும் துணிவும் ஒருங்கே கொண்ட அருமை மனைவி சத்யபாமாவைத் தேர்ச் சாரதியாகக் கொண்டு நரகனை வெற்றி கொண்டதும், இந்திரப்பிரஸ்தம் நகரம் அமைப்பதற்காக என்னுயிர் நண்பனும்-அத்தையின் புதல்வனுமான அர்ச்சுனனுடன் சேர்ந்து காண்டவ வனம் எரித்த நிகழ்வும், அண்ணன் பலராமனின் எதிர்ப்பையும் மீறித் தந்திரமாக தங்கை சுபத்திரையை அர்ச்சுனனுக்கு மணம் முடித்து வைத்த காரியமும் எந்நாளும் – உடலில் உயிர் இருக்கும் வரையிலும்- என்னால் மறக்க இயலாதவை.

வாழ்க்கையில் வெட்கப்படும் படியான நிகழ்வு ஒன்றே ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

காண்டவ வனத்தை எரிப்பதற்கு முன்பாக அதன் புற வெளியில் திரெளபதி, சத்யபாமா, அர்ச்சுனன்,  நான் என நால்வரும் நடத்திய குடி விளையாட்டு!

‘அய்யோ! என்ன காரியம் செய்தீர்கள்! கட்டற்றக் குடி வெறியில் நால்வருமே நிதானத்தை இழந்து விட்டீர்களா? ‘ ‘வனம் பார்த்து வருகிறோம்!’ என்று எப்போதோ புறப்பட்டவர்கள் இன்னும் வரவில்லையே!’ என்னும் கவலையுடன் தேடி வந்த நான் கண்ணெதிரில் கண்ட காட்சி! தன்னிலை மறந்த போதையில் தலையொரு பக்கம், காலொரு பக்கமுமாக ஆடைகள் குலைந்த நிலையில் திரெளபதியின் கால்கள் உங்கள் மீதும், அர்ச்சுனனின் கால்கள் சத்யபாமாவின் மீதும் விழுந்து கிடந்த அலங்கோலக் காட்சி! ஆபத்து எனத் தெரிந்தும் எதற்கு அளவு மீறுவதாய்க் குடி? இனிமேலாவது எச்சரிக்கையாயிருங்கள்!’

எப்போதும் எனது நலனில் அக்கறை கொண்ட தாருகனின் எச்சரிக்கையில் வெட்கி அன்று அவனெதிரே தலை கவிழ்ந்தவன் அதன் பிறகு எப்போதும் தலை தாழ்த்தும் காரியங்களில் ஈடுபட்டவனில்லை.

‘அரக்கு மாளிகையில் அத்தையுடன் பாண்டவர்கள் எரிந்து விட்டார்கள்!’ என்னும் துயரச் செய்தியுடன் திரெளபதியின் சுயம்வர நிகழ்வுக்கு அண்ணன் பலராமனுடன் பார்வையாளனாகச் சென்றவன் சுயம்வர மண்டபத்தில் கட்டழகுச் சிலையாக திரெளபதியை முதன் முதல் கண்ட அந்தத் தருணத்தில், ‘அடடா! கறுப்புக் கட்டழகி இவளை அடையும் முயற்சியில் சுயம் வரத்தில் கலந்து கொண்டிருக்கலாமே! அண்ணன் ஏன்,  ‘சுயம் வரத்தில் பங்கேற்க வேண்டாம்!’ எனத் தடை போட்டார்?’ என்னும் எண்ணத்துடன்–கேள்வியுடன் திரெளபதி மீது அன்று நான் ஆசை கொண்டது மறைக்கவியலாத உண்மை. அதைப் போலவே சுயம் வரம் முடிந்து திரெளபதி, அத்தை மகன் அர்ச்சுனனுக்கு மனைவியான நொடியில் அவள் எனது உடன் பிறவா சகோதரியாகி விட்டதும் மறுக்க முடியாத உண்மை. காண்டவ வனப் புற வெளியில் கட்டற்றுப் போன போதையில் நிகழ்ந்த விபரீதம், இன்றும் எனது நெஞ்சத்தில் கூர்மை கொண்ட முள்ளாகத் தைத்துத்தான் கிடக்கிறது.

அஸ்தினாபுரம் சென்ற தாருகன் எப்போது வருவானோ தெரியவில்லை. இன்னும் ஓரிரு நாழிகைப் பொழுதுகளில் கடற்கரையை இருள் சூழ்ந்து விடப் போகிறது. ‘தாருகன் திரும்பி வரும் வரையிலும், நிலை கொண்டிருக்கும் இந்த அஸ்வத்த மரத்தடியை விட்டு வேறெங்கும் நகர்வதில்லை.’ என்று தீர்மானித்திருக்கிறேன்.

தாருகனை ஆவலோடு எதிர் நோக்குகிறது நெஞ்சம்.

‘கிருஷ்ணா, துவாரகை யாதவர்களின் சாவுக்குச் சரியான காரணம் என்னவென்று சற்றேனும் யோசித்துப் பார்த்தாயா?’ என்று மனம் வரை முறையில்லாமல் வண்டுக் குடைச்சலாய்க் குடைகிறது. யோசிக்கும் வேளையில் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரப் போரின் முடிவில் மலையென மாண்டு கிடந்த தனது தலை மகன் துரியோதனனைத் தொட்டுத் தடவி, துடித்துக் கொதித்து, கன்னப் பரப்புகளில் கண்ணீர் வழிய எனை நோக்கிக் கதறலுடன் அன்று காந்தாரி கொடுத்த சாபம்  நினைவுக்கு வருகிறது.

‘கிருஷ்ணா! என் புதல்வர்கள் அனைவரையும் பீமன் கொன்று விட்டான். பிற மன்னர்களின் முடி அடி தொட வாழ்ந்த என் மக்கள் இன்று பிணங்களாகப் புழுதியில் கிடக்கிறார்கள். பதின்மூன்று ஆண்டுகள் குரு ராஜ்ஜியத்தை நல்ல முறையில் ஆண்ட என் அன்பு மகன் துரியோதனன் இதோ பிணமாக வீழ்ந்து கிடக்கின்றான். கணவனை இழந்து கதறித் துடிக்கும் எனது தலை மருமகளை, சிந்து அரசனாக சிறப்புடன் இருந்த கணவன் ஜயத்ரதனைப் பறி கொடுத்து பரிதவித்து நிற்கும் எனது மகள் துச்சலையைக் கண் கொண்டு பார்! கிருஷ்ணா! நீ நினைத்திருந்தால் இந்த யுத்தத்தைத் தடுத்திருக்கலாம்! இத்தனைப் பேரழிவுக்கும் மூலகாரணமானவன்–முதலாக நின்றவன் நீ! இதற்குரிய பலனைத் தவறாமல் நீ அனுபவிப்பாய்! இன்று தங்களது கணவர்களை இழந்து கதறுகின்ற பரத குலப் பெண்களைப் போல யாதவர்கள் அனைவரையும் ஒரு சேர இழந்து உனது யது குலப் பெண்கள் ஒன்றாக ஓலமிட்டழும் நாள் ஒன்று நிச்சயம் வரும்! கெளரவ குலம் பூண்டற்றுப் போனது போல் உனது யாதவ குலமும் ஒருநாள் பூண்டற்றுப் போகும்! ஆமாம், பூண்டற்றுப் போகும்!’

அன்று நான் காந்தாரியின் கதறலுக்கு எதிராக அவளிடம், ‘அதர்மம் செய்தாவது தர்மத்தைக் காப்பது எனது எண்ணம். ஆகவே தர்மத்தைக் காக்க முயன்றேன். வென்றேன்.’ எனச் சொன்னவன் இன்னும் ஏதேதோ சொன்னேன்.

புத்திரர்கள் அனைவரையும் போரில் பறி கொடுத்த தாய்மைச் சோகத்தில் நியாயத்தை அறவே மறந்து பத்தினிப் பெண் காந்தாரி அன்று பதறிக் கதறிக் கொடுத்த சாபம் பலித்து விட்டதா?

சாபங்கள் பலிக்குமா? தெரியவில்லை.

காந்தாரியின் சாபம் குறித்துக் கவலையில்லையென்றாலும் குருக்ஷேத்திரப் போரில் சூழ்நிலை நெருக்குதலில் வேறு வழியில்லாமல் நான் நடத்திய சில சூழ்ச்சிச் சாகசங்கள் குறித்து இப்போது சஞ்சலப்படுகிறேன். ஒரு வேளை அன்று போரில் நான் நடத்திய அந்த ஓரிரு அநியாய சாகசங்கள்தான் இன்று நான், உறவுகளையும் உயிருக்குயிரான யாதவர்களையும் இழந்ததற்குக் காரணமோவெனக் கருதுகிறேன்.

பிதாமகர் பீஷ்மர், பெண்ணை எதிர்த்துப் போர் புரிய மாட்டார் என்பது தெரிந்து பெண்ணும் ஆணும் அற்ற சிகண்டியை அவர் முன் நிறுத்தி அந்த நேரிய மனிதரை நிலை குலைய வைத்து அர்ச்சுனன் மூலம் அம்புப் படுக்கையில் கிடத்திய சாகசம்!

மல்யுத்த சாஸ்திரத்திர முறை மீறி பீமன், துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்திய சாகசம்!    

வெல்லவே முடியாதவராக வீறு கொண்டு நின்ற ஆச்சாரியார் துரோணரை வீழ்த்த, போரில் அசுவத்தாமன் என்னும் யானை இறந்ததைச் சாதகமாக வைத்து, ‘அசுவத்தாமன் இறந்தான்!’ என்று யுதிஷ்டிரரைச் சொல்ல வைத்து, ‘மகன் இறந்து விட்டானே!’ என மனங்கலங்கி நின்ற துரோணரை எளிதாக மரணக் குழியில் தள்ளிய சாகசம்!

அர்ச்சுனனுக்கு நிகரான சிறந்த வில்லாளியான கர்ணன் அத்தையின் தலைமகன் எனத் தெரிந்த பிறகும் பாண்டவர்களிடம் கர்ணன் அவர்களின் சகோதரன் என்பதை மறைத்து களத்தில் அர்ச்சுனன், கர்ணனைக் கொல்ல நான் நடத்திய சாகசங்கள்.

‘போர்க்களத்தில் ஒப்பாரிக்கு இடமில்லை!’ என்னும் உண்மையில்  ‘அநியாயத்திற்கெதிராக அநியாயங்கள் செய்வதில் தவறில்லை!’ என்னும் எண்ணத்துடன் நான் நடத்திய அந்தச் சாகசங்கள் ஒரு வகையில் சாகசங்கள்தான் என்றாலும் அத்தனையும் சாகசங்களை மீறிய சதிப் பின்னல்கள்தானே? சூழ்ச்சிகள்தானே?

அன்று நான் நடத்திய அந்த சாகச சதிப் பின்னல்கள்தான் இன்று எனது யாதவ இனம் ஆடவர் அற்றுப் போன இனமாகிப் போனதற்கு அடிப்படைக் காரணமோ?

தெரியவில்லை.

ஆக, குதிரைகள் வெளியேறிப் போன – ஆண் குதிரைகள் அற்றுப் போன –  வெற்று லாயமாகி விட்டது, துவாரகை. இதற்கு மேல் எண்பத்து நான்கு வயதுக் கிழ கிருஷ்ணன் நான் எது குறித்தும் வருத்தப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை.   

மல்லாந்த நிலையில் உயர்த்தி நிறுத்தியிருந்த வலது தொடையின் மீது இடது முழங்காலைச் சார்த்தி ஆசுவாசமாகக் கண்களை மூடினேன். அஸ்வத்த மரத்தையடுத்த கிழக்குத் திசையின் நெருக்கத்தில் மரங்களினிடையே சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்கிறது. ‘நாய் அல்லது வேறு விலங்கு ஏதாவது சருகுகளின் மேல் நடக்கும்!’ என எண்ணங் கொண்ட க்ஷணத்தில் வலதுத் தொடையின் மீது கிழக்கு திசை நோக்கி நிலைத்திருந்த இடது பாதத்தின் வழியே எங்கிருந்தோ பாய்ந்து வந்த கூரிய அம்பொன்று முழங்காலுக்குள், எலும்பு மஜ்ஜைக்குள் புகுந்துக் குடைகிறது. அதிர்ந்து அலறி, ‘அய்யோ! யாரிடமிருந்து இந்த அம்பு?’ என்று பார்வையைச் சுழற்றுகிறேன்.

தூரத்தில் எனது ஒன்று விட்ட சகோதரன் ஜரா, வில்லும் அம்பறாத் தூணியுமாக தோப்பிலிருந்து வெளியேறிப் போவது தெரிகிறது.

சகோதரன் ஜரா ஏதோ காரணத்தில் என் மீது செலுத்திய விஷ அம்பு தனக்கு விதிக்கப்பட்ட கடமையின் உறுதியில்,  ‘யது குல சிம்மம்!’ எனப் புகழ் பெற்ற வாசுதேவ கிருஷ்ணன் எனது உயிர்ப் பானத்தை ஆவலுடன் உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்து விட்டது. ‘என்ன காரணத்திற்காக எனக்கு இப்படியொரு மரணம்?’ என்னும் எண்ணத்தை மீறி மரணம் என்னளவில் இப்போது மிகுந்த மதிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியதாகி விட்டது.

தாருகனின் வருகையை இனியும் எதிர் பார்ப்பதில் அர்த்தமில்லை.                                                        

                ***

                     

    

 

Series Navigationஇறுதிப் படியிலிருந்து- அர்ச்சுனன்நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *