குருட்ஷேத்திரம் 1  (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)

This entry is part 8 of 11 in the series 25 ஜூலை 2021

 

ப.மதியழகன்

(ஆசிரியர் குறிப்பு  : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளது தொடர்ந்து எழுதியும் வருகிறேன். (தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதினையும் பெற்றுள்ளேன்) மேலும் மன்னார்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக  பணிபுரிகிறேன். மகாபாரத கதை மாந்தர்கள் குணாதிசியத்தை எழுதத் துவங்கி முப்பது அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்.)

 

விதி மனிதனை பொம்மையாக்கி விளையாடுகிறது. இறக்கும் வரை பேராசைகள் அவனை பேயாய் ஆட்டுவிக்கிறது. நிறைவேறாத ஆசைகளுக்காக மனிதன் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. தனக்குரிய தண்டனையை அனுபவிப்பதற்காகவே இம்மண்ணில் அவன் மீண்டும் பிறக்கிறான். கங்கை புத்திரன் பீஷ்மர் பெண்ணாசையால்தான் தான் இந்தப் பிறவி எடுத்ததை நிஷ்டையிலிருந்து அறிகிறார். பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து தான் தப்பவேண்டுமானால் இப்பிறவியில் மனதால் கூட பெண்மையைத் தீண்டக் கூடாது என வைராக்கியம் கொள்கிறார். மனிதனில் சரிபாதி ஆண்தன்மையும் பெண்தன்மையும் உள்ளது. தனக்குள் இருக்கும் பெண்தன்மையை வெற்றி கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. தனது ஆன்ம பலத்தின் மூலம் ஐம்புலன்களையும் குருடாக்கினார்.

 

விதி சோதனைக் களத்தில் பீஷ்மரை சிக்க வைத்து அவரைத் தோற்கடிக்க பார்க்கிறது. மனிதன் அனுபவிக்கும் எல்லையில்லாத பேரின்பம் பெண் போகம் மட்டும் தான் என அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறது. பீஷ்மர் தன் மனதைக் கல்லாக்கிக் கொள்கிறார் எவ்வித ஆசைக்காற்றும் தன்னை அலைக்கழிக்காதபடி. தந்தைக்காக பெண் கேட்கப் போய் சாந்தனுவை கரம்பிடிக்க அவர்கள் விதித்த நிபந்தனையின்படி இளவரசன் பட்டத்தை துறக்கிறார். தந்தையின் ஆசைநாயகியின் மகனுக்கு முடிசூட்டி வேடிக்கைப் பார்க்கிறார். தன்னுடைய வைராக்கியத்துக்காக எந்த மனிதனும் செய்யத் துணியாத தியாகங்களை பீஷ்மர் செய்கிறார்.

 

ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக மட்டுமே அவர் கெளரவர் சார்பு நிலையை எடுத்தார் என நான் நினைக்கவில்லை. பாண்டவர்கள் தங்களை விருந்துக்கு அழைத்து திட்டமிட்டு பாஞ்சாலி மூலம் தன்னை கேலி செய்ய வைத்து அவமானப்படுத்தி விட்டதாக துரியோதனன் சினக்கிறான். எந்த குருதிப்புனல் ஓடும் சமருக்குப்பின்னும் ஒரே பெண்ணே இருக்கிறாள். திரெளபதியின் கேலிச் சிரிப்பொலி துரியோதனனை தூக்கமில்லாமல் செய்திருக்க வேண்டும். வெறி கொண்ட துரியோதனனுக்கு சகுனி தகுந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறான். விருந்துன்ன வந்த தருமனை சூதுக்கழைத்து வஞ்சகமாக அவனது தேசம் சகோதரர்கள் முடிவில் பாஞ்சாலி என அனைவரையும் தருமன் பணயம் வைத்து இழக்கிறான்.

 

சபை நடுவே துச்சாதனன் திரெளபதியை துகிலுரித்த போது பீஷ்மர் அவையில் தான் அமர்ந்திருந்தார். பெண் இனத்தையே வெறுக்கும் அவரால் திரெளபதியிடம் மட்டும் இரக்கம் கொள்ள முடியவில்லை. சிலை போல் அமர்ந்திருந்தார். பெண்களின் தாய்ச்சி ஆட்டம் தான் இவ்வுலகம் என பீஷ்மருக்குத் தெரியாது. தன்னை அலட்சியப் படுத்திய சிவனைத்தானே காளி காலில் போட்டு மிதிக்கிறாள். பீஷ்மரால் கவர்ந்து வரப்பட்ட அம்பாவை பரசுராமர் சொல்லியும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் பீஷ்மர். தற்கொலை செய்து கொண்ட அம்பா நிராகரிப்பின் வலி மரணத்தைவிடக் கொடியது என நிரூபிக்கிறாள். போரில் தன் முன்பு நிற்கும் சிகண்டியைப் பார்க்கையில் பீஷ்மருக்கு அம்பாவின் தோற்றம் தான் தெரிகிறது. தனது வில் அம்புகளை கீழே வைத்துவிட்டு தன்னை பழிதீர்த்துக் கொள்ள இடமளிக்கிறார். குருட்ஷேத்திர போர் முடியும் வரை அவர் அம்புப்படுக்கையில் தான் இருந்தார். திரெளபதியின் ரெளத்திரம தணிந்திருக்கும். ஆனால் பாண்டவர்களிடம் ஏற்பட்ட குற்றவுணர்ச்சி அவர்களை கைலாய மலை நோக்கி பயணப்பட வைத்தது. போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமான கிருஷ்ணனின் துவாரகை சாம்ராஜ்யமும் பிரளயத்தால் அழிந்தது.

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *