வேல்விழிமோகன்
குடித்துவிட்டு உளறுவது என்னுடைய பழக்கம்.. சாதாரண குடி இல்லை.. இரவும் பகலுமாக குடித்துவிட்டு அதே நிலையில் தொடர்ந்து உளறிக்கொண்டிருப்பது.. ஒரே பொண்ணு.. ஒரே பொண்டாட்டி.. பாத்தீங்களா.. பொண்டாட்டின்னா ஒன்னுதானே இருக்கும்,, கம்பெனிக்கு போகும்போதெல்லாம் வாசல்ல வாட்ச்மேனு கிண்டலா பாப்பான்.. “சர்தான் போயா..”ன்னு நானும் கண்ணாலேயே பேசுவேன்.. அது ஒரு பெரிய கம்பெனின்னு சொல்ல முடியாது.. நெருப்பட்டி கம்பெனி.. ஒரு இருபத்தஞ்சு பேரு வேல செய்யறோம்.. அதுல பெரும்பாலும் பொம்பளைங்க.. மொதலாளிக்கு கோயமுத்தூருதான் சொந்த ஊரு.. ஆனா இங்கேயே கிருஷ்ணகிரியிலேயே வந்து செட்டில் ஆயிட்டாரு.. இப்படித்தான் ஒரு நெருப்பட்டி கம்பெனில வந்து வேல செஞ்சவராம் அவரு.. அப்பறம் படிப்படியா முன்னேறி.. அவரைப் பத்தி வேணாம் விடுங்க..
நானு என்னைய பத்திதான் பேசப்போறேன்.. ஒரு குடிகாரனை பத்தி பேச என்ன இருக்குதுன்னு பக்கத்த திருப்பிடாதீங்க.. நான் பண்ணறது தப்புதான்.. எந்த குடிகாரன்கிட்டேயும் எந்த பொண்டாட்டிங்க சந்தோழமா இருக்க முடியும்.. ? .. பசங்க கிட்ட வருவாங்களா..? கொழந்தைங்க கூட கத்ததானே செய்யும்.. நல்லவேள.. எனக்கு கொழந்தைங்க இல்ல.. ஒரே பொண்ணு.. இந்த நாத்தம் புடுச்சவன்கிட்ட வீட்ல பாசமா இருக்கறது என் பொண்டாட்டிதான்னு சொன்னா நம்புவீங்களா.. ?.. அதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்லாம நான் சொல்றத கேளுங்க.. எம் பொண்ணுதாங்க.. வயசு பதினேழு.. பதினெட்டு இருக்கும்… பிளஸ்டூ படிக்கறா.. எனக்கு போன் பண்ணறது.. “எங்கப்பா இருக்கறே..?” ன்னு கேக்கறது.. “எனக்கு குடிகாரன கட்டிக் கொடுத்துடாதீங்கப்பா” ன்னு சொல்லறது.. நைட்ல வாந்தி எடுத்தா கழுவி விடறது.. காலைல எழுப்பி விடறது.. நடுரோட்ல மயங்கி விழுந்தா ஆட்டோவுல வந்து கூட்டிக்கிட்டு போறது.. கம்பெனில கூட அப்பப்போ விழுந்துடுவேன்.. தனியா வருவாங்க.. தெருவுல ஒரு ஆட்டோக்காரன் இருக்கான்.. அந்த ஆட்டோவை கூட்டிக்கிட்டு வருவா.. எம்புள்ள தைரியசாலிங்க.. வெட்டு ஒன்னு.. துண்டு ரண்டுன்னு பேசும்..
“ஆம்பளைங்க ஏம்பா இப்புடி இருக்காங்க..?” ன்னு அடிக்கடி கேக்கும்.. “யாருமே சரியில்லை..”ன்னு சொல்லும்.. ரொம்ப ஆழமா பேசுறாளேன்னு அவங்கம்மாகிட்ட கோத்து விட்டேன் ஒரு நாளு.. “எழுந்திருச்சுப் போடி.. உங்கப்பனுக்கும் வேலையில்ல.. உனக்கும் வேலையில்ல.. எவனாச்சும் வம்பு பண்ணா எங்கிட்ட சொல்லு.. மத்தபடி மூடிட்டி இரு.. உங்கப்பன் ரொம்ப யோக்கியம் பாரு.. நானும்தானே கூட சேந்து வாந்தியெடுக்கறேன்.. “ அப்படீன்னு வாயை அடக்கிட்டா..
பாவம் புள்ளன்னு பாத்தா அது சிரிச்சுக்கிட்டே போயிடுச்சு.. நான்தான் சொன்னேனே.. அது தைரியசாலிங்க.. அவங்க டீச்சரு கூட சொல்லுவாங்க.. “அந்த மாதிரி ஒரு பொண்ண பாத்ததேயில்லை..”ன்னு.. டிராயிங்க நல்லாப் போடும்.. முக்கியமா குருவிங்கள…. கருங்குருவி.. சிட்டாங்குருவி.. அப்பறம் அந்த கூடு கட்டுமே.. ம்..ம்.. தூக்கணாங்குருவி.. அப்பறம் வீட்டுக் குருவி.. அவ குருவிங்களோட பாப்பா..
ஒரு நாளு ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருந்தா.. டீச்சருதான் கூப்பிட்டிருப்பாங்கன்னு போனேன்.. கைய புடுச்சு கைப்பந்து வெளையாடற எடத்துக்கு கூட்டிக்கிட்டு போனா.. அங்க பாழடைஞ்ச ஒரு ரூமு.. கதவு பாதியா இருந்தது.. உள்ளாற இருட்டு.. வெயிலு மட்டும் உள்ளாற நுழைஞ்சு தூசியா கோடுங்களா தெரிஞ்சுது..
“என்னம்மா இங்க.. உள்ளாற ஏதாவது போட்டுட்டியா..?”ன்னு கேட்டேன்.. அவ சிரிச்சுக்கிட்டே “இல்லப்பா.. நல்லா கவனி..” ன்னா..
ஒண்ணும் புரியல.. எப்புடி புரியும்.. அன்னைக்கு லீவுன்னு பாத்து சரக்கை சேத்துக்கிட்டேன்.. கண்ணுக்குள்ள பூச்சிங்க பறக்குது.. நிம்மதியா அனுபவிச்சு வூட்டோட இருந்திருக்க வேண்டியவன்.. பாப்பா சொல்லிருச்சே.. தட்ட முடியுமா.. “நீயே சொல்லு பாப்பா..” ன்னேன்..
அவ “ அங்க பாருப்பா.. குருவி கூண்டு.. எனக்கு ஒன்னு வேணும்.. இதுக்குள்ள யாரும் போகமாட்டாங்க.. அதுக்குதான் உன்ன கூட்டிக்கிட்டு வந்தேன்.. நல்லா பாருப்பா.. இருட்டுல எவ்வளவு அழகா இருக்குது பாக்கறதுக்கு..” ன்னு சொல்லிக்கிட்டிருந்தா..
அந்த சமயம் பாத்து “யாறது.. அங்கென்ன பண்ணறீங்க..?” அப்படீன்னு அதிகாரமா ஒரு குரல் வந்தது.. எம்பொண்ணு திரும்பி பாத்தா பாருங்க ஒரு பார்வை..
எனக்கு சரக்கெல்லாம் வடிகட்டுன மாதிரிய ஆயிடுச்சு…
0000
அது அவங்க கிளாஸ் டீச்சராம்.. அந்த டீச்சரு உடனே..”ஓ,, நீயா.. என்னடி இங்க.. உங்கப்பாவ யாரு வரச் சொன்னது..?” அப்படீன்னாங்க..
அதுக்கு இவ.. “நான்தான் டீச்சர்..”
“எதுக்குடி..?”
“குருவி கூண்டு வேணும்.. அதுக்கு..”
“எங்கேயிருக்குது..?”
“பாருங்க.. அங்க..” கை காட்டினா.. அந்த டீச்சரை எனக்கு புடிக்கலை.. குண்டா.. செவப்பா.. மூக்கு கண்ணாடி போட்டுக்கிட்டு.. வாய் அகலமா.. நெத்திக்கு நடுவுல பெருசா குங்கும பொட்டோட பாக்கும்போது… ம்.. ம்..
“பூதகி மாதிரியே இருக்குதே இந்தம்மா..” ன்னு சொல்லிட்டேன்.. கிசுகிசுன்னு எம்பொண்ணு காதுலதான் சொன்னேன்.. அது காத்துல பறந்துறுச்சு.. எம்பொண்ணு “களுக்…” க்குன்னு ஒரு சிரிப்பு சிரிச்சிருச்சு வேற…
அவ்வளவுதான்.. குச்சி நடந்து வர்ற மாதிரி ஒருத்தன் நடந்து வந்தான்..
;அதான் எச்.எம்மு.. “
“கூட வர்ற ரண்டுப் பேரு,,”
“அவங்க எச்,எம். முக்கு அடியாளுங்க மாதிரி.. அவரு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவாங்க.. “
“பின்னாடி இன்னொரு பொம்பளை ஓடிவருதே.. அது..?”
“அது பெல்லு அடிக்கும்.. சாக்பீஸ் எடுத்தாந்து கொடுக்கும்.. அட்டெண்டன்ஸ் எடுத்துக்கிட்டு போகும்.. “
“பியூன் மாதிரியா..?”
“மாதிரியில்ல.. அதேதான்..”
“எதுக்கு ஓடி வருது..?”
“அது அப்படித்தான்.. வந்த பஞ்சாயத்து பண்ணும்.. இந்த எச்.எம்மு அது சொல்றத கேக்கும்.. அதுக்கு ஒரு ஜம்பம்.. இந்த பூதகிக்கெல்லாம் அவ மேல பொறாம.. அவ சேலைய பத்தி கேவலமா பேசி வெறுப்பேத்தும்.. “
“இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கியா..? “
“கிளாஸ்ல உக்காந்து டீச்சருங்க பேசுவாங்க.. கத கதயா.. நாங்க கேக்காத மாதிரி கேட்டுக்குவோம்.. “
“பாத்தீங்களா சார்.. என்ன பேச்சு பேசறா..” அந்தம்மா கைல குச்சிய தேடுனாங்க..
மக என்னைய பாத்து சிரிச்சா.. அந்த குச்சியாண்டி எச்.எம்.மு. “இரும்மா.. நீ வேற.. குச்சிய எடுத்தா பிரச்சனைன்னு தெரியாதா.. “ என்னிடம் திரும்பி “ஏம்பா.. பொண்ணு கூப்புட்டா டீச்சருங்களை.. அல்லது என்னையத்தானே பாக்கனும்.. “
“உங்களத்தான பாக்க வந்தேன் சார்..”
“எதுக்கு..?”
“இந்தம்மா எம்பொண்ண அடிக்குதாமே..அதுக்குதான். “
“அதுக்கு இங்கென்னப்பா வேலை..?”
என் மகள் குறுக்கிட்டு “சார்.. அவரு உளருவாரு.. நான் அப்படியெல்லாம் சொன்னதில்ல.. எனக்கு கூடு வேணும்..”
“கூடா..?”
“ஆமா.. தூக்கணாங்கூடு.. உள்ளாற இருக்கு பாருங்க..இருட்டா இருக்குது.. ஏதாவது இருந்ததுன்னா.. அதுக்குதான் அப்பாவை வரச்சொன்னேன்.. “
“நீதான் தைரியசாலியாச்சே.. நீயே போறது..”
அவள் என்னை ஒரு முறை பார்த்தாள்.. “போம்மா.. அவரே சொல்றாரு இல்ல…”
எம்பொண்ணு உள்ளாற போனா.. பாத்துக்கிட்டே இருந்தோம்.. இருமினா.. சுத்தி முத்தி பாத்தா.. “அப்பா.. எலிங்க இருக்குது” ன்னா.. “ஒரே தூசிப்பா..” ன்னு சொன்னா.. அப்பறம் “அப்பா.. குருவிங்க.. இருக்குதுப்பா..”ன்னு சொன்னா.. வெளியே வந்துட்டா..
“ஏம்மா.. ?”
“இல்லப்பா.. ரண்டு .. மூணு குருவிங்க என்னையே பாத்தது.. கத்தி ஆரம்பிச்சிருச்சு.. பாத்தீங்க இல்ல..”
“ஆமா..”
“அப்பறம் குஞ்சுங்க எங்கப்பா போகும்.. வேணாம்பா.. “ என்றாள்.. உங்களுக்கு ஏதும் போரடிக்கலையே.. ஒரு உளறல் வாயன் என்னென்னவோ பேசுறான்னு நினைக்காதீங்க.. எம்பொண்ணுக்கு மனிதாபிமானம் அதிகமுன்னு சொல்றதுக்காக அந்த உதாரணத்த சொன்னேன்.. தா.. இப்ப முடிச்சுடறேன்.. ஆங்.. நான் இப்ப எங்க இருக்கேன்.. கேட்டு வாசல்ல.. கம்பெனி வாசல்ல்\.. வழக்கம்போல வாட்ச்மேனு.. வாட்ச்மேனா..? செக்கூரிட்டியா..? எதுவோ ஒன்னு.. என்னைய பாத்து சிரிச்சான்..
“இங்க வாய்யா..”ன்னான்.. பக்கத்துல போனேன்.. கைல சாப்பாட்டு கூடை.. எட்டு மணிக்கே ஒரு பாட்டிலை ஏத்தியிருந்தேன்.. எப்பவுமே நேரா நடக்க முயற்சி செய்வேன்.. அப்பவும் அப்படித்தான் செஞ்சேன்..
“என்னய்யா..?”
“நேத்து உன் ஊட்டுக்காரி வந்துட்டு போச்சே கம்பனிக்கு.. தெரியுமா.. தெரியாதா..?”
“அப்புடியா..?”
“ஆமாய்யா.. எனக்கு தெரியும்.. உனக்கு தெரியாதுன்னு.. அந்தம்மாவே சொல்லுச்சே.. அந்தாளுக்கிட்ட சொல்லாதீங்கன்னு.. “
“அப்புடியா..?” எனக்கு ஏனோ பதட்டமாக இருந்தது.. “இப்பதான்யா அடிச்சேன்.. எறங்கிற போகுது.. சமாச்சாரத்த சொல்லுய்யா..” ன்னேன்..
“உன்னய வேலய விட்டு தூக்கப்போறாங்க..”
“அய்யோ..”
“அதுக்கு பதுலா உம் பொண்டாட்டி வரப்போகுது.. “
““அய்யோ..”
“நான் சொன்னேன்னு சொல்லிடாதய்யா.. உம் பொண்டாட்டி அதையும் சொல்லிட்டு போச்சு.. “
“அய்யோ..”
0000
எம்மேல பரிதாபப்படாதீங்க சார்.. ஏன் சாருன்னு சொல்லனும்,, அம்மான்னு சொல்லறேன்.. அக்கான்னு சொல்லறேன்.. நீங்களும்தானே கேக்கறீங்க எங்கதைய.. நீங்க சந்தோழப்படுவீங்க.. எல்லா குடிகாரனுங்களோட பொண்டாட்டிகளும் சத்தியமா சந்தோழப்படுவீங்க.. ஒரு ஆம்பள குடிக்கலைன்னாலும் பொண்டாட்டி சந்தோழப்படனும்.. இப்புடி ஒரு முற நான் சாப்பாட்டு டைம்ல உளறினப்போ சத்தம் போட்டு சிரிச்சுட்டாங்க.. “குடிகாரனுங்கள விட்டுத் தர்றானா பாரு..”ன்னு கேலி வேற..
ஒரு நாளைக்கு அம்பதோ.. நூறோ இல்லைன்னா என்னால வாழமுடியாது.. ஒரு பத்து நாளைக்கு நெனைச்சு பாருங்க.. எங்கேயும் கடன் வாங்கமாட்டேன்.. ஆனா தெரிஞ்சவங்க ஒயின்ஷாப் பக்கம் வந்தா வாய் விட்டு கேப்பேன்.. அப்புடி வரலைன்னா காத்திருப்பேன்.. அங்க வழக்கமா போற கடைக்கிட்ட கொஞ்சம் தள்ளி ஒரு புளிய மரம் இருக்குது.. அங்க நின்னுக்குவேன்.. யாறாவது தெரிஞ்சவங்க வர்றாங்களன்னு பாப்பேன்.. ஒரு சிலரு “பத்தாது..”ன்னு போய்டுவாங்க.. ஒரு சிலரு தனியா கூட்டிக்கிட்டு போயி டீக்கப்புல கொடுப்பானுங்க.. ஒரு சிலரு “இங்கேதான் அடிக்கறேன்..வாய்யா..”ன்னு நாலஞ்சு பேரோட சேத்திக்குவாங்க..
“ஓசிக்கு சேந்து குடிக்கக்கூடாதுங்க..” வார்த்தையால கொதறுவானுங்க..
“நமக்கே ஜிங்கியடிக்குது.. “
“நாளைக்கும் கூட்டணியா..?”
“கெளாஸையாவது வாங்கி தரச்சொல்லு.. “
“சைட்டிஷ் பத்தாதே.. “
“காத்துட்டே இருக்காங்கப்பா.. “
ஒரு நாளு பொண்டாட்டி பணத்த புடுங்கி வச்சுக்கிட்டா.. அவதான் தினமும் தருவா.. தந்துட்டா குடி.. கம்பெனி.. வேலை.. வீடுன்னு வந்திருவேன்னு அவளுக்கு தெரியும்.. ஆரம்பத்துல அவ பட்டப்பாடு அவளுக்குதான் தெரியும்… பணம் தராம என்னைய திருத்தரேன்னு கூடவே கம்பெனிக்கு வருவா.. சாயந்திரம் கூட்டிக்கிட்டு போவா.. டாக்டருங்கள பாத்திருக்கோம்.. நாட்டு வைத்தியம் பாத்திருக்கோம்.. ஜோஸியம் பாத்திருக்கோம்.. “திருந்திடுவாரு..”ன்னு சொல்லி பொண்டாட்டிக்கு சாதகமா பேசி ரண்டாயிரம்.. மூணாயிரம் புடுங்கிட்டாங்க..
ஒரு நா கம்பெனியிலிருந்து வெளியே போயிட்டேன்.. நேரா ஒயின்ஷாப்.. ஒரு கூட்டாளிக்கிட்ட நூறு ரூபா கடன் வாங்கியிருந்தேன்.. மொதலும் கடைசியுமா அதுதான் நான் வாங்கினது..ஒரு நாளு பூரா அங்கேதான் இருந்தேன்.. ஒரு பாட்டலு பத்துமா.. ?.. பல வருசங்களாச்சுன்னு நெனப்பு.. தெரிஞ்சவங்க ஊத்தி கொடுத்தாங்க.. ஒயின்ஷாப் பின்னாடி நெறைய எடம் இருக்கும்.. உக்காந்து.. நின்னுக்கிட்டு.. படுத்துக்கிட்டு குடிக்கலாம்.. முறுக்கு.. போண்டா.. பழம்.. இதெல்லாம் கெடைக்கும்.. ஒரு பொம்பள அப்பப்போ கிளீன் பண்ணும்.. அப்படி பண்ணறப்போ பாட்டல்ல மிச்சம்.. மீதி இருக்கறத வாயில ஊத்திக்கும்.. சொன்னா தப்பா நினைச்சுக்காதீங்க.. நானும் அந்த பொம்பளேயோட சேந்துக்கிட்டேன்.. அவளுக்கு தமாசா இருந்தது.. சிரிச்சுக்கிட்டே அவளே மிச்சமானதை இன்னொரு பாட்டல்ல ஊத்தி அரை மணி நேரத்துல அர பாட்டலா கொடுத்தா..
“பீரு.. விஸ்கி.. ஜின்னு எல்லாம் கலந்திருக்கும்.. ராவா அடி நைனா..” ன்னா.. அப்புடி நானு அடிச்சதில்லை.. அது ஒரு புது சொகம்.. கிறுகிறுன்னு வந்தது.. “காராசேவு வாங்கி கொடு.. ம்..ம்.. “ ன்னு சொன்னேன்..
“அவ என்னைய தரதரன்னு இழுத்துக்கிட்டு வந்து ரோட்ல கெடாசிட்டு போய்ட்டா.. நான் தடுமாறி.. தடுமாறி.. அப்புடியே நடந்து.. நடந்து.. கோகிலா தியேட்டரு பக்கம் திரும்பி.. பன்னு கடைய தாண்டி.. வேப்ப மரத்து சந்துல செருப்பு கடை பக்கம் தடுமாறி சாக்கடைல விழுந்திட்டேன்.. இன்னும் ரண்டு சந்து கடந்தா என்னோட வீடு.. யார் யாரோ போறாங்க.. வர்றாங்க.. திரும்பி பாத்துட்டு போறாங்க.. எழுந்திருக்க முயற்சி பண்ணி,, பண்ணி.. உகும்.. வேலைக்கு ஆகலை.. அப்படியே படுத்துட்டேன்.. அதுவும் சொகமாத்தான் இருந்தது..மூக்கை பொத்திக்காதிங்க.. பட்டுன்னு நான் சொல்றத கேக்காம மூடீடாதீங்க.. எந்த குடிகாரனும் நான் அங்க விழுந்துட்டேன்.. இங்க விழுந்துட்டேன்னு சொல்லமாட்டான்.. நான் சொல்றேங்க… தா.. இப்ப முடிச்சுர்றேன்..
நைட்டு எட்டு மணிக்கு யாரோ அந்த பக்கம் போனவங்க சொல்லி எம் பொண்ணு வந்து தூக்கிட்டு போச்சு.. அர உசுரோடதாங்க இருந்தேன்.. சாக்கடைய குடிச்சுருக்கேன்.. யாரோ ரண்டு பேர கூட்டிக்கிட்டு வந்து.. அவுங்களுக்கு கூலிய கொடுத்து.. இதுக்கும் ஒரு தைரியம் வேணும் இல்லீங்களா.. ஒரு சைக்கிள்ள உக்கார வச்சு இழுத்துக்கிட்டு போனாங்க.. தெருவுல வச்சு ரண்டு கொடம் தண்ணி ஊத்தினாங்க.. எல்லாமே எம் பொண்ணுதான் செஞ்சது.. எம் பொண்டாட்டி வெளியிலேயே வரலை.. அவளோட கோவம் நியாயமுங்க.. சாக்கடைல விழறவன் கூடவெல்லாம் வாழனமுன்னு தலையெழுத்தான்னு யோசிப்பாங்களா.?. மாட்டாங்களா..?
பொண்ணுக்கிட்ட சொன்னாளாம்.. “அப்படியே விட்டிருந்தா காலைல உங்கப்பனோட பாடி கெடைச்சுருக்கும்,, தப்பு பண்ணிட்டியே.. “
0000
அன்னிக்கு முடிஞ்சதுங்க எம் பொண்டாட்டியோட முயற்சியெல்லாம்.. அப்பறம் தினமும் அம்பது.. நூறுன்னு கொடுத்திருவா.. நூறுல மிச்சமாகறத அம்பதுல சேத்திக்கனும்.. அப்படி கணக்கு..
அவ கூட சேந்து பத்து வருசத்துக்கு மேல இருக்குமுங்க.. அவள தப்பு சொல்ல முடியாதுங்க.. “ஒரு ஆம்பள பையன் வேணும்..”ன்னு ஜாடமாடையா சொல்லியிருக்கா.. “நம்ம பொண்ணே பையன் மாதிரிதா..” ன்னு அவ சொல்ல வர்றத புருஞ்சுக்காம உளறியிருக்கேன்.. நைட்ல நாத்தம்.. வாந்தி.. உளறல்.. எப்புடிங்க நடக்கும்,, பாத்ரூம் பக்கம் ஒரு தடுப்பு இருக்குது.. அங்கதான் எனக்கு படுக்க.. பகல்லதான் கொஞ்சம் தெளிவா இருப்பேன்.. அதுவும் வேலைக்கு போறதுக்கு முன்னாடி.. ஒரு புருசனா அவ மேல ஆச வராமலா இருக்கும்,, அதுவும் அவளுக்கு இருக்கற ஒடம்புக்கு..
நான்தான் ஒரு ஜோங்கி மாதிரி ஆய்ட்டேன்.. புடுச்சு தள்ளனீங்கன்னா கீழ விழுந்துடுவேன்.. அவ என்னைய பல முற தள்ளி விட்டுருக்கா.. இழுத்துக்கிட்டு போவா.. பூ மாதிரி.. எம்பொண்ணு சிரிக்கும்.. நானும் சேந்து சிரிப்பேன்.. ஆம்பள பலவீனமா இருந்தா சிரிச்சுடனும்.. காமெடியா எடுத்துக்குவாங்க.. நான் பல முற நெனச்சுக்குவேன்.. இவளுக்கு ஆசையே வராதான்னு.. ஒரு சில டைம்ல அவ கண்ண பாப்பேன்.. கவனிச்சுட்டு அலட்சியமா வேற பக்கம் பாப்பா.. எங்கேயாவது கிள்ளனும்னு தோணும்.. ஒடம்பு பூரா சதை.. முதுகுல.. இடுப்புல.. கைல.. கன்னத்துல.. அப்பறம்.. வேணாங்க.. ரொம்ப அந்தரங்கமா என்னோட பொண்டாட்டிய பத்தி நானே சொல்லக்கூடாது.. ஆனா பாருங்க.. பாழா போன நாயி.. நான்தாங்க.. என்னவோ ஒரு நாளு அப்புடி ஒரு நெனப்பு வந்துருச்சுங்க.. “வேற எவனோடவாவது பழக்கம் இருக்குமா.. ?” ன்னு..
0000
பொம்பளைங்க என்னைய அருவருப்பா படிக்கறீங்கன்னு தெரியுது.. எனக்கே என்னைய பத்தி அப்படிதான் தோணுச்சு.. அவகிட்ட உள்ளுக்குள்ள மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.. நேரடியா கேட்டா எல்லாத்தையும் சொல்லனும்,, பொய் சொன்னா அவள ஏமாத்தின மாதிரி இருக்கும்..
ஆனா ஒரு சில நாளைக்குதான்.. மறுபடியும் என்னைய அறியாம அது வந்திருச்சு.. பயமா போச்சு.. அட என்னடா இழவுன்னு அம்பது ரூபாய திருடி இன்னும் சேத்தி குடிச்சேன்.. “எல்லாம் போச்சு.. இப்ப திருடு வேறயா..”ன்னு பட்டம்தான் கெடச்சுது.. ஆனா அது போகலை.. முக்கியமா.. மறுநாளு.. அவ அப்படியே மாம்பழமாட்டம் இருந்தா.. எம் பொண்டாட்டிதான்.. புள்ள ஸ்கூலுக்கு போன பிறகு கைய புடுச்சேன்.. மஞ்சள் சேலைல.. அப்பதான் குளிச்சு முடிச்சு.. சோப்பு வாசன.. தல முடிய விரிச்சு போட்டுக்கிட்டு.. ஒ்டம்பு பூரா கதகதன்னு.. அவ கன்னத்த கடிக்கனம்னு வெறி.. அவ என்னைய தள்ளிக்கிட்டே வந்து கதவுக்கு வெளிய தள்ளி தாள் போட்டுக்கிட்டா.. தெருவுல நிக்கறேன்.. எப்பவும் இல்லாத வெக்கம்.. யாறாவது பாக்கறாங்களான்னு ஒத்த கண்ணால பாக்கறேன்.. பாக்கறாங்க.. பாக்கறாங்க.. பக்கத்து வீட்ல அந்த கண்ணாடிக்காரி.. அப்புறம் நடந்து போயிக்கிட்டிருந்த ரண்டு பேரு.. சிரிச்சாங்க.. சிரிச்சேன்.. “சாப்பாடு தராம எம்பொண்டாட்டி கழுத்த புடுச்சு தள்ளிருச்சு..ஹி.. ஹி..” ன்னு சமாளிச்சேன்.
அப்பலிருந்து எனக்குள்ள ஒரு வெறும வந்துருச்சு.. ஆனா எம் பொண்டாட்டி எப்பவும் போலத்தான் இருக்கா.. எந்த வித்தியாசமும் இல்லாம.. அவளுக்கு அதெல்லாம் தேவையில்லன்னா எதுக்கு அந்த ஒடம்பு.. கண்ணு முன்னாடி வளைய வளைய வந்துக்கிட்டு.. தொடாம.. மோந்து பாக்காம… கிள்ளாம.. தூரமா இருந்துக்கிட்டு கண்ணால பாத்து .. பாத்து..
நானு சூபர்வைசருக்கிட்ட சொன்னேன்.. “சார்.. இன்னிக்கு லீவு வேணும்..”
“வேல செஞ்சாதானே லீவு.. உனக்கு எதுக்கு லீவு..”
“வெளையாடாதீங்க.. நான் வீட்டுக்கு போகனும்..”
“போங்க. டாஸ்மாக்குதானே உங்களுக்கு வீடு…”
சிரிப்பு.. சிரிப்பு.. சிரித்தேன்.. காமெடியாக சிரிக்க முடியவில்லை.. ஆனால் சிரித்தேன்.. பையை தூக்கிக்கொண்டு வேகவேகமாக அலுவலக அறைக்கு போனேன்… வேப்ப மரம்.. ஜீப்.. கட்டி வைத்திருந்த நாய்.. விளம்பர பலகை.. அழகாக வெட்டப்பட்டிருந்த செடிகள்..நடைபாதை.. தாழ்வாரம்.. பெயர் பலகை.. கதவு.. உதவியாளன்..
“என்னப்பா.. என்ன..?”
“ஓனர பாக்கனும்..”
“இரு கொஞ்ச நேரம்.. “ எட்டிப்பார்த்து “யாரோடவோ பேசிட்டிருக்கார்.. “
காத்திருப்பு.. சேர்.. தண்ணீர் பானை.. சுவரில் குழந்தை படம்.. ஓடும் மின்விசிறி.. தரையில் சொரசொரப்பான விரிப்பு.. வளர்ப்பு செடிகளில் பூக்கள்.. குரல்கள்.. வாசலில் செருப்பு.. எங்கேயோ பார்த்த மாதிரி.. போதைல எங்கிருந்து சிந்திக்கறது.. அந்த பழக்கமே என்கிட்ட இல்லையே..
குரல்கள்.. செருப்பு.. மண்டைக்குள் எதையோ தேடினேன்.. எதுவும் பிடிபடவில்லை… மறுபடியும் செடிகளின் பூக்களை பார்த்தேன்.. எதற்கு பார்க்கிறேன் என்று தெரியவில்லை.. அப்ப அவங்க வெளியே வந்தாங்க..
எம் பொண்டாட்டியும்.. ஓனரும்,,
அவள் செருப்பை மாட்டிக்கொண்டு “வர்றேன் சார்..”.. அதே மஞ்சள் சேலை.. அதே நிற ரவிக்கை.. ஒனர் யாருக்காகவும் வெளியே வந்து “போயிட்டு வாங்க..” சொன்னது கிடையாது..
“போயிட்டு வாங்க..”
அவ என்னைய பார்த்துவிட்டு ஆனா பாக்காத மாதிரி உதவியாளனிடம் புன்னகைத்து விட்டு நடந்து போறா.. நானு அப்போ அப்படி செஞ்சிருக்க கூடாது.. அதுக்கு காரணம் அந்த அஸிஸ்டெண்டு பண்ண வேல.. கேட்ல செக்யூரிட்டி செஞ்ச மாதிரி ஒரு விழமமா எம் பொண்டாட்டி போறத பாத்து சிரிச்சான்.. அதுவும் எனக்கு தெரியற மாதிரி மட்டும்.. இந்த முற நான் அத காமடியா எடுத்துக்கல.. அப்பறம் இன்னொன்னு.. அவ அழகா இருந்தா.. ரொம்ப அழகா.. அழகான ஒடம்போட.. மஞ்சள் சேலைல வளத்தியா.. என்னைய பாக்காத மாதிரியில்ல போனா.. மொத்த கோவமும் ஓனரு மேல வந்தது.. “நில்லு.. “ன்னு சத்தம் போட்டு கத்தினேன்.. ஓனரு திரும்பி பாத்து அப்பறம் அவனைய பாத்தாரு..
“இவன் எதுக்கு கத்தறான்..?”
“இவன் அப்படிதாங்க.. குடிகாரன்..”
“புடிச்சு வெளியே அனுப்புங்க.. நாளையிலிருந்து இந்தாளு வேலைக்கு வேணாம்.. “
அப்போ நான் சொன்னேன்.. “எம் பொண்டாட்டிய வர சொல்லிட்டு.. என்னா கூத்து பண்ணீங்க உள்ளாற..?”
0000
முடிஞ்சதுங்க.. எல்லாம் முடிஞ்சிருச்சி.. கடைசில காமெடியா எதுவும் நடக்கலை.. அப்படி நடந்திருந்தா கைல ஒரு லெட்டரை பொண்டாட்டி கையெழுத்தோட கொடுத்து அனுப்பிச்சிருக்கமாட்டாங்க.. வேல போச்சுதுன்னு சொல்ல முடியாது.. நாளையிலிருந்து எம் பொண்டாட்டி போவா..
அன்னிக்கு நெறய குடிச்சேன்.. கூட்டாளிக்கிட்ட கடன் வாங்கினேன்.. “திரும்ப தர தேவையில்லை”..ன்னு கொடுத்தான்.. அந்த கம்பெனில பதினஞ்சு வருசம் இருந்திருக்கேன்.. மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம்.. தீக்குச்சு அடுக்குன சட்டங்கள தனியா அடுக்கி வைக்கனும்.. லாரி வந்தா ஏத்தி விடனும்.. காலி சட்டம் வந்தா எறக்கி வைக்கனும்.. இந்த வேலையைதாங்க பதினஞ்சு வருசமா செஞ்சுக்கிட்டிருந்தேன்.. என்னைய தொரத்தனாரு பாருங்க ஓனரு.. அவருக்கு நானு யாருன்னு தெரியும்.. வேல இல்லாதப்போ பின்னாடி புங்க மரத்துக்கு கீழ படுத்துக்குவேன்னு தெரியும்.. சாராய வாசனையோட வேலைக்கு வர்றது தெரியும்.. ஆனா என்கிட்ட பேசினதில்லை.. திட்டினதில்லை.. விசாரிச்சுது இல்லை.. நல்ல மனுஷங்க.. பிரைவேட் கம்பெனிதான்.. ஆனா எந்த தொந்தரவும் இல்லீங்க.. சொந்த வீட்டுக்கு போய்ட்டு வர்ற மாதிரி போய்ட்டு வந்தேன்.. வேலைக்கு போறதுன்னா எவ்வளவு பேரு கஷ்டப்படறாங்க தெரியுங்களா.. ஏதாவது ஒரு பிரச்சன இருக்கும்.. ஓனரு நாய் மாதிரி கத்துவான்.. நமக்கு மேல வேல செய்யறவனே நம்மளை மதிக்கமாட்டான்.. பதினஞ்சு வருசம் இந்த குடிகாரன அந்த கம்பெனி தாங்குச்சுங்க.. தப்பு பண்ணிட்டேங்க.. அந்தாள விடுங்க.. நாளைக்கு கால்ல கூட விழுந்துடலாம்.. எம் பொண்டாட்டி மொகத்துல எப்படி விழிப்பேன்.. கஸ்டமா இருக்குதுங்க.. நானே என் வாயால எம் பொண்டாட்டிய இன்னொருத்தரோட சேத்தி பேசி.. சே.. சே..
ஆனா அவ செஞ்சது தப்பா இல்லீங்களா.. எனக்கு தெரியாம .. என்னைய வேலய விட்டு தூக்கி.. அந்த எடத்துல இவ சேந்து..
“உம் பொண்டாட்டிக்கு ஆபிஸ் உத்தியோகம்.. பத்தாவது வரைக்கும் படிச்சிருக்காங்க.. அதனால கிளர்க்கு வேலை.. உனக்கு குடுத்த சம்பளமேதான்.. பொண்ண படிக்க வைக்கறதுக்கு.. கல்யாண செலவுக்கு.. தங்கம் வாங்கறதுக்கு.. எதுவுமே இல்லியாமே.. வீட்டு வாடக.. உனக்கு சாராய செலவு.. பொண்ணுக்கு படிப்பு செலவு.. ஏன்.. உம் பொண்டாட்டிக்கு செலவு இல்லையா.. வீட்டு செலவு.. ஆஸ்பத்தரி செலவு.. உனக்கே ஆஸ்பத்தரிக்கும் சேத்தி மாசம் ஆறாயிரம் ஆயுடுதாமே.. ஏன்யா.. சாராய ரேட்டெல்லாம் அதிகமாயிருச்சுன்னா என்னய்யா பண்ணுவாங்க அவங்க.. “ ன்னு சொல்லித்தான் அனுப்பிச்சாங்க..
வீட்டுக்கு வெளியே ரொம்ப நேரம் உக்காந்திருந்தேன்.. வேடிக்க பாத்துட்டு போனாங்க.. எனக்கு அதெல்லாம் பிடிபடலை.. எம் பொண்ணு உள்ளாற இருக்கா.. அம்மாவும் பொண்ணும் பேசறாங்க.. நல்லா தெரியுது.. எனக்கு எம் பொண்ணு வெளிய வந்தா நல்லாருக்கும்.. அவதான் துணை இப்ப.. எனக்கு எம் பொண்டாட்டி மொகத்துல விழிக்கற அளவுக்கு தைரியம் இல்ல.. ஆனா கதவ தட்டினேன்..
கதவு தெறந்தது.. எம் பொண்டாட்டிதான்.. திரும்பி “உங்கப்பன பாத்ரூமுக்கு கூட்டிட்டு போடி..” என்றாள் மகளிடம்..
இது வழக்கமாக சொல்லுவது.. பாத்ரூமில் வழுக்கி விடாமல் இருக்க.. அந்த முகத்துல வேற எதுவுமே தெரியலீங்க.. எம் பொண்ணு வந்துச்சு.. “வாப்பா..”ன்னு கூட்டிக்கிட்டு போச்சு.. பாத்ரூம்ல கால கழுவினேன்.. சாம்பார் வாசன.. மொட்ட மாடில குருவிங்க கத்துது.. லேசா காத்து அடிக்குது.. தண்ணி ரொம்ப குளிர்ச்சியா இருக்குது.. எம் பொண்ணு அதிகமா பேசாத மாதிரியே தெரியுது.. பட்டுன்னு கேட்டுட்டேன்..
“ஏம்மா.. உங்கம்மா ஏதாச்சும் சொல்லுச்சா.?”
“சொன்னாங்கப்பா..”
“என்னன்னு..?”
“அதாம்பா.. வேல விழயமா..”
“வேற எதுவும் சொல்லலையா..?”
“இல்லைப்பா.. அவங்க எனக்காகதான் இந்த வீட்ல இருக்காங்கப்பா..”
“இல்லீன்னா..?”
“வேற கல்யாணம் பண்ணியிருப்பாங்கப்பா.. உன்னைய டைவர்ஸ் பண்ணிட்டு.. உங்க கம்பெனி ஓனரு மாதிரியான ஆளுங்கள பாத்து”
எனக்கு கோவமா வந்தது.. பொண்ணுக்கிட்ட ஏதாவது உளறிடுவோம்னு பயமா இருந்தது.. “நானு வேலைக்கு போகலைன்னா எப்படிம்மா..?” ன்னு கேட்டேன் மெதுவா.. அவளும் மெதுவா சொன்னா.. “நீங்க எப்பவும் போல குடிக்கலாம்பா.. உங்களுக்கு குறை இருக்காது.. “
“எனக்கு அதுதான் முக்கியமுன்னு சொல்லறியா..?”
“இல்லப்பா.. நீங்க ஒரு நோயாளி.. பேஷண்ட்.. குடிய நிறுத்துங்கன்னா நிறுத்திருவிங்களா..?”
எம் பொண்ணு எப்பவுமே இப்படி கேட்டதில்லை.. அந்த சாக்கடையிலிருந்து தள்ளிட்டு வந்தப்ப கூட.. எனக்கு பதில் சொல்ல தெரியல.. தலைக்குள்ள மறுபடி பூச்சி பறக்குது.. கண்ணுக்குள்ள இருட்டு தெரியுது.. “முடியும்..”னு வெறித்தனமா கத்தனம்னு தோணுது.. ஆனா முடியல.. நானு போயி படுக்கைல விழுந்தேன்.. நான் அழுததா எனக்கு ஞாபகம் இல்லை.. ஆனா இப்ப அழனமுன்னு தோணுச்சு.. ஆனா அழு முடியல.. வெறும் நெனப்புதான்.. அதுக்கு பதிலா இன்னும் ஏன் கடைக்கு போய் சரக்க ஏத்திக்க கூடாதுன்னு தோணிச்சு.. அதுக்கு காசு வேணும்.. ஏற்கனவே திருட்டு பட்டும் கெடைச்சிருச்சு.. ஆனா குடிக்கனும்.. குடிச்சுக்கிட்டே இருக்கனும்.. இனிமே கம்பெனிக்கு போக வேண்டியதில்லை.. அதனால குடிச்சுக்கிட்டே இருக்கலாம்.. அது என்னமோ அந்த நெனப்பு வந்தவுடனே ஒரு சந்தோழம்.. கபகபன்னு சந்தோழம் மண்டைல ஏறி என்னவோ செய்யுது.. என்னவோ நடக்கப்போகுதுன்னு நினைக்கறப்பவே வாந்தி.. வாந்தியா வந்திருச்சு.. அவ்வளவுதான்.. அப்படியே கண்கள மூடிட்டேன்.. அசந்துட்டேன்.. அப்படியே தூங்கிட்டேன்..
0000
எம் பொண்ணு இப்ப காலேஜிக்கு போகுது.. எம் பொண்டாட்டி அந்த தீப்பொட்டி கம்பெனிக்குதான் போறா.. தலைக்கு பூவ வச்சுக்கிட்டு.. சாப்பாட்டு பைய தூக்கிட்டு.. பரபரப்பு இல்லாம அமைதியா தெருவுல எறங்கி நடந்து போறப்போ மரியாதைக்கு கூட “போயிட்டு வர்றேன்னு சொல்லறதில்ல.. அவ சொல்ல வேணாம்.. எம் பொண்ணு சொன்னா போதும்.. காலேஜிக்கு போகும்போது “வர்றேம்பா..” ன்னு சொல்லிட்டுதான் வாசலுக்கு போவா..
எனக்கு வீட்ல இருக்கறது பழகிருச்சு.. காலைல ஒன்பது மணி வரைக்கும்தான் வீட்ல சத்தம் இருக்கும்.. மறுபடியும் நாலு மணிக்கு மேலதான் சத்தம் வரும்.. அந்த அமைதி என்னைய கவுத்து போட்டுருச்சு.. டாஸ்மாக் கடைக்கு போய்ட்டு வந்த பெறகு தூக்கமெல்லாம் வராது.. படுக்கைல பொரண்டு படுப்பேன்.. பெருக்குவேன்.. எதையெதையோ எடுத்து எங்கேயோ வைப்பேன்.. எம் பொண்டாட்டி போட்டோவை மொறைச்சி பாப்பேன்..
அவ மேல இன்னமும் சந்தேகம் இருக்குதான்னு தெரியல.. ஆனா அவ வெளிய போகும்போது பொறாமையா.. எரிச்சலா.. வெறுப்பா இருக்கும்.. மூனுத்தையும் ஒன்னா சேத்தா என்ன நடக்கும்.. தலவலிதானே வரும்.. அத்தான் எனக்கும் நடந்தது.. தலவலி.. கூடவே நெஞ்சு எரிச்சல்.. எவ்வளவு நேரம்தான் டிவி பாக்கறது.. அந்த சீரியலயெல்லாம் பாக்கும்போது எரிச்சலா இருக்குது.. எப்புடித்தான் பாக்குறாங்களோ.. நான் உடனே சிங்கம்.. புலி .. கௌதாரி பாக்க வேற சேனலுக்கு போயிடுவேன்..
எனக்கு கொஞ்சம் கொஞ்சமாத்தான் எனக்கு வேல போயி பொண்டாட்டிக்கு மாறினதுக்கு காரணம் எம் பொண்ணுன்னு தெரிஞ்சது.. பல நாள் கழிச்சு எம் பொண்ணே சொன்னா.. அதுக்கு அவ சொன்ன காரணம் பகீருன்னு இருந்தது.. என்னைய வேலய விட்டு தூக்கறதுக்கு இருந்தாங்களாம்.. வேல போச்சுன்னா வருமானத்தை எப்படி சமாளிக்கறதுன்னு அப்புடி ஆயிருச்சாம்.. எம் பொண்ணுதான் சொன்னா.. அவ சொன்னா நம்பிதான் ஆகனும்.. மொத்தத்துல நான் இப்ப அவங்களுக்கு ஜடம்.. குடிச்சுட்டு வீட்ல வெட்டியா இருக்கற ஜடம்..
எம் பொண்டாட்டி என்கிட்ட பேசறதெல்லாம் குறைஞ்சிருச்சி.. அவளுக்கு என் மேல ஒரு இதுவும் இல்லன்னு புருஞ்சுக்கிட்டேன்,, அவ மஞ்சா சேலை கட்டிக்கிட்டு போகும்போதெல்லாம் என் காதுல புகை கெளம்பனது.. ஆனா ஜடத்தால என்ன செய்ய முடியும்.. ஒரு நா காலேஜிக்கு போறேன்னு கெளம்பி போனப்பெறகு வெளியே ஆட்டோ கெளம்பற சத்தம் கேட்டது..
ஆட்டோக்காரன்.. கல்யாணம் ஆகாத பய.. இந்த தெருவுல கடைசியில ரண்டாவது மாடியில இருக்கான்.. ஊரு.. பேரு.. எதுவும் தெரியாது.. என்ன இழவோன்னு நினைச்சுக்கிட்டேன்.. அடுத்த நாளும் அதே சத்தம்.. எனக்கு மக முன்னாடி கண்காணிக்கறதும் மகளை திட்டறதும் புடிக்கல.. ஏதாவது சொல்லிட்டான்னா.. பயம் வேற.. ஜடமாவே இருந்துக்கோன்னு மனசு சொல்லிருச்சு.. அது அவளோட விருப்பம்.. அவ எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்னு நெனைச்சுக்கிட்டேன்.. இத வச்சு நீங்க அவங்கள தப்பு கணக்கு போடாதிங்க.. எனக்கு ஆம்பள பலகீனம்.. நான்தான் சொன்னேனில்ல.. எம் பொண்ணு தைரியாசாலி.. எம் பொண்டாட்டிதான்.. ம்.. ம்.. நல்லவங்கதான்.. என்னடா.. பொண்டாட்டி விழயத்துல டபக்குன்னு கவுந்துட்டானேன்னு நினைக்காதீங்க.. எம் பொண்ணு சொன்ன மாதிரி எல்லா ஆம்பளைங்க மாதிரிதான் நானும்.. ஒன்னு.. ரண்டைத் தவிர.. ஒரு வட்டத்துக்கு மேல போனா பொண்டாட்டிய.. பெத்தவள.. மகள.. கேவலமா பேசற உலகமுங்க இது.. அந்த வட்டத்துக்குள்ள இருந்தா நல்லவங்க.. இல்லன்னா கெட்டவங்களா.. என்னாங்க பேச்சு இது.. பாத்தீங்களா.. எப்புடி பேசறேன்னு.. இதுக்கெல்லாம் எம் பொண்ணுதாங்க காரணம்.. அடுத்தது என்ன நடக்குமுன்னு எனக்கு தெரியாதுங்க.. இப்போதைக்கு மீதி வச்சிருக்கற கொஞ்சத்தை குடிக்கனும்.. இவ்வளவு நேரம் பொறுத்ததுக்கு நன்றிங்க.. சாயந்திரம் வீட்டுக்கு எப் பொண்ணு வந்த பெறகு நைசா ஆட்டோக்காரன பத்தி பேசனும்.. ஏன் தப்பா நினைக்கனும்.. அவன் வெறும் ஆட்டோக்காரனா கூட இருக்கலாம்.. போக வர்றதுக்கு வசதியா இருக்குமேன்னு பணம் கொடுத்து வாடகை பேசியிருக்கலாம்.. பாத்தீங்களா.. இதுதாங்க ஆம்பள புத்தி.. வர்றேங்க… .
- கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்
- நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும்.
- ஆவணப்பட விமர்சனப் போட்டி
- சில நேரங்களில் சில சில மனிதர்கள்
- எனக்குப் புரியவில்லை
- கடிதம் கிழிந்தது
- குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை
- குடிகாரன்
- பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை
- இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்
- மௌனம் ஒரு காவல் தேவதை
- ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்
- பரிதாப மானுடன்
- கவிதைகள்
- கனத்த பாறை
- அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !
- இருளும் ஒளியும்
- சோமநாத் ஆலயம் – குஜராத்
- இறுதிப் படியிலிருந்து கர்ணன்
- குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)