சோமநாத் ஆலயம் – குஜராத்

This entry is part 19 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

 

 

நடேசன்

எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே.  ஆனால் தெய்வ நம்பிக்கையோ  அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான்  ஏன் போகவேண்டும் ?

 

தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு அங்கே தொடங்குகிறது. இந்தியாவின் முக்கிய தலைவர்களாக  மகாத்மா காந்தி,  வல்லபாய் பட்டேல்,  மோதி என்பவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வந்தார்கள்.

 

வரலாறு என்பது வலை போன்றது. விரித்தபின் விரும்பியபோது வெளிவரமுடியாது.   வரலாற்றால் சிறைபிடிக்கப்பட்ட பல நாடுகள் உலகில்  உள்ளன. அதில் ஈராக், ஈரான், இந்தியா,  நமது இலங்கை என்பன முக்கியமான நாடுகளாகும். அவுஸ்திரேலியா அமெரிக்கா,  கனடா  போன்ற நாடுகளின் வரலாறு,   இரண்டு நூற்றாண்டுகள் மட்டுமே. வரலாறு அதிகம் இல்லாதவர்களுக்கு, வரலாற்றின்  சுமையில்லை.

 

ஈராக்கில் உள்ள கார்பாலா என்ற நகரில் 10-10-680  இல் தீர்க்கதரிசி முகமது நபியின் மகள் வழிப்பேரன் குசேன் அலி  கொலை செய்யப்பட்டதால்,  அங்கு இஸ்லாம் மதத்தில் பிளவு உருவாகிறது.  ஈராக்கில் கார்பாலா,  ஷியா முஸ்லிம்களின் புனித பிரதேசமாகிறது. அந்தக் கொலையால் அன்றிலிருந்து  இன்றுவரை மத்திய கிழக்கில்  தொடர்ந்து  வன்முறை  நீடிக்கிறது.  தற்போது சிரியா,  ஈராக், யேமன், நாடுகளில் நடக்கும் குண்டு வீச்சு, கொலைகள்,  பட்டினி என்பவற்றிற்கு,  அன்றைய முகராம் நாளில் நடந்த கொலையே காரணம். மேற்கு நாடுகள், காலனித்துவம்  இஸ்ரவேல்,  கச்சா எண்ணெய் வளம் என்பன எல்லாம் பிற்காலத்தில் வந்தவை.  அவை நிச்சயமாக ஏற்கனவே உள்ள பிளவுக்கு உரம் போடுகின்றன.

 

அதேபோன்றது வரலாற்றில்,   தொடரான தென்னிந்தியர்களது இலங்கை மீதான படை எடுப்புகள். முக்கியமாக   மகாவம்சத்தில் வரும் தமிழ் மன்னன் எல்லாளனதும்,  சிங்கள இளவரசன் துட்டகைமுனுவினதும்  போரானது,  கார்பாலா போன்று  தரவுகள்  இல்லாதபோதும்,   இருவரது போர் வரலாறு மனங்களில் இனவரலாறாக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

 

தற்போது இந்தியாவில்,  இந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி அதை இந்துத்துவம் என்ற அரசியல்  கோட்பாடாக வைத்து இரண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சியான பாஜகவின் கார்பாலா,  குஜராத்திலுள்ள சோமநாதத்தாகும்.

 

 நாங்கள் அங்கு சென்ற காலம் பெப்ரவரியின்  மிதமான கால நிலை. அலை ஓசையுடன், நாக்கில் உப்புக் கரிக்கும் காற்று வீசும்,  அரபிக் கடலண்டிய கடற்கரை பிரதேசம்.

 

மதியத்தில் சோமநாதபுரம் சென்று மாலையில் ஆலயத்திற்குச் செல்லத் தயாராகினோம் . எமது வழிகாட்டி கட்ச் பிரதேசத்தைச் சேர்ந்த  70 வயதான  மின்சார பொறியியலாளர். இளைப்பாறிய பின்பு வழிகாட்டியாகத் தொழில் செய்கிறார்.  அவர் பாஜகவின் ஆதரவாளர். அவரது தொழில் சம்பந்தமாக ஒரு விடயத்தைக் கூறினார்.   “ குஜராத்தில் மோதி முதல்வராக வந்த ஆரம்பக் காலத்தில் தொடர்ச்சியாக மின்வெட்டு  வரும் . அப்பொழுது விவசாயிகள், தொழிற்சாலைகள்,  வீட்டுபாவனையாளர் பாதிக்கப்படுவார்கள். முதல்வர் மோதி மின்பாவனையை  மூன்றாகப் பிரித்து விவசாயிகள், தொழிற்சாலைகள்,  வீட்டுபாவனையாளர் எனத் தனியாக  மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். தற்பொழுது மின்வெட்டு இல்லை.  அப்படி வந்தால் ஏதோ ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படுகிறது “  என்றார்.  நமக்கு மின்சார விநியோகம்   பற்றிய அறிவில்லாத போதும்  அது முன்னேற்றமான விடயம் எனப்புரிந்தது.

 

சோமநாத் ஆலயம்,  தங்க வர்ணம் பூசப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பக்கம்  முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய கோவில்களில் உள்ள சிற்பங்களோடு  அல்லது கட்டுமானத்தோடு ஒப்பிடும்போது மிகவும் சாதாரணம்.  ஆலயத்தைச் சுற்றி மூன்று பக்கமும் இரும்பு வேலியுடன் கோட்டைபோல் பாதுகாப்பாக இருந்தது. மற்றைய பக்கம் அரபிக்கடல்.

 

சோமநாத் ஆலயம் இந்தியாவில் உள்ள முக்கிய 12 சிவாலயங்களில் முதன்மையானது . அத்துடன் ஆரம்ப ஆலயத்தைக் கட்டியவர் யார் என்று தெரியாததால் பல கதைகள் உள்ளன.  இங்கிருந்தே கிருஷ்ணர் மேலுலகம் சென்றதாகக் கூறப்படுவதால்  மேலும் இந்த இடம்  முக்கியமாகிறது . சோமநாத் ஆலயம் செல்வம் நிறைந்திருந்ததாலே கஜினி முகம்மது மட்டுமல்ல பிற்கால சுல்தான்கள்,  போர்த்துக்கேயர்கள்  முதலானோர்  தொடர்ந்து கொள்ளை அடித்தார்கள்

 

பல முறை அழிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும்1950 களில் கட்டிய முன்னாள் உதவிப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை முன்றலில் நிற்கிறது. சோமநாத் ஆலயம் உள்ள பிரதேசம் பெரிதானதல்ல . கோயிலைச் சுற்றிய பகுதி  மிகவும் சுத்தமானதாகவும் இருந்தது .

 

உல்லாசப் பிரயாணியாக நான் செல்லும்போது எனக்கு மற்றைய பக்தர்களின் மத்தில் நிற்பது ஒரு குற்ற உணர்வைக் கொடுக்கும். எனவே   விரைவாக வெளியே வந்து வெளிப்பிரகாரத்தைப் பார்த்தேன். இருளாகிய பின்பு ஒரு ஒளிப்படம் காட்டுவதாக இருந்தது . அதற்காகப் பலர் காத்திருந்தார்கள்.

 

அந்த ஒளிப்படத்தில்  கோயிலையே திரையாக்கி வரலாறு சொல்லப்பட்டது.  அந்த வரலாறு கேட்பவர்களுக்கு, கோவிலைத் தொடர்ச்சியாக்க கொள்ளையடித்தவர்கள் மேல் விரோதத்தையும் வெறுப்பையும்  ஏற்படுத்தும். 

 

வேறுநாட்டைச் சேர்ந்த எனக்கு அது வரலாறு . ஆனால்,  இந்து ஒருவனது மனதில் என்ன ஓடும் என்பதை  என்னால் சிந்திக்க முடிந்தது.

 

அடுத்த நாள் மீண்டும் கோவிலுக்குப் போனோம். சியாமளா கோவில் அருகே சென்று வணங்கியபோது, நான்   உள்ளே போகாது  அலை மோதும் அரபிக்கடலருகே நின்று  இரவு கேட்ட வரலாற்றோடு எனக்குத் தெரிந்ததையும்  மனதில் அசை போட்டேன்

 

குஜராத்தின் அரேபியக்கரையில் அமைந்துள்ள சிவனுக்கான ஆலயம் சோமநாத்.  முகமட் கஜினி 17 முறை இந்தியாமீது  படை எடுத்தவன் என்பார்கள் – அவனால் 1026 இல் சோமநாதபுரத்தில் இருந்த பெருமளவான செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது.  அத்துடன் சிவலிங்கம் உடைக்கப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் உள்ளது.

 

அதன்பின் இந்து மன்னர்களால்  மீண்டும்  புனரமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட ஆலயம்.  அலாவுடின் கில்ஜியால் 1299 மீண்டும் உடைக்கப்பட்டது 1665 மீண்டும் அவுரங்கசீப்பால் உடைக்கப்பட்டது.

 

சுதந்திரத்தின் பின்  இந்தியா –   பாகிஸ்தானாகப் பிரிந்தபோது சோமநாத் ஆலயம் இருந்த,  ஜுனகத் ( Junagadh ) சமஸ்தானம் பாகிஸ்தானோடு சேர்ந்தது.   ஆனால் சில நாட்களின் பின்பு இந்தியா , படைகளை அனுப்பி இந்தியாவோடு ஒன்றாக இணைத்தது

 

இப்படியாக இஸ்லாமிய மன்னர்களால் உடைக்கப்பட்டும்,  பாகிஸ்தானோடு சேர முயன்ற பிரதேசத்திலுள்ள  சோமநாத் ஆலயம் சுதந்திரத்தின் பின்பு  முக்கியத்துவம் பெறுவது வியப்பில்லை. அத்துடன் துவாரகைக்கு அருகில் உள்ளது.

 

இந்தியச் சுதந்திரத்தின்போது மதச்சார்பின்மையை காந்தி , நேரு முன்வைத்தாலும்,  அது தோல்வியில் முடிந்தது. உலக அரசியலில் சோசலிசம் என்ற சித்தாந்தம் இடையில் வந்து,  வந்த வழியே திரும்பிவிட்டது. அரசியலில் மதத்தை விலக்கி வைத்த மேற்கு நாடுகளே திண்டாடும் காலமிது .

 

அத்துடன் அடக்குமுறை ஆட்சி நடத்திய மன்னர் ஷாவுக்கு  எதிராக இஸ்லாம் மதத்தை அயதுல்லா கொமெய்னி   கையில் எடுத்து வெற்றி கண்டதற்கு  முன்னுதாரணமாக ஈரான்  இருக்கின்றது. இதைப் பின்பற்றி தலிபான் –  ஐ சிஸ் போன்ற  தீவிரவாத இயக்கங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள அடக்கு முறைக்கு எதிராகப் போராடுகிறது.  அதேபோல் இலங்கையில் விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க நிச்சயமாகப் பவுத்த சிங்களம் என்ற இனம், மொழி, மதம் கலந்த கூட்டுச்சிந்தனை உதவியது. பர்மாவில் தற்போதைய இராணுவ ஆட்சி பவுத்தத்தைக் கையில் எடுத்து வருங்காலத்தில்  மக்களது ஆதரவை பெற முயலலாம்.

 

எது சரி, ஏது தவறு எனப் பார்ப்பது எனது நோக்கமில்லை. பின் நவீனத்துக்காலத்தில் அதற்குத் தேவையுமில்லை. மக்களை வென்றெடுக்கும் அரசியல் தத்துவமாக ஏதோ ஒன்று மக்கள் ஜனநாயக ஆட்சியில்  தேவைப்படுகிறது.  75 வீதமான இந்துக்கள் உள்ள இந்தியாவில் இந்துத்துவ சிந்தனை குறைந்த பட்சம் 15- 20 வருட  அரசியலுக்கு ஏற்புடையது. அதிலும் வட இந்தியர்களது வரலாற்றில் பாகிஸ்தான்,   சோமநாத்  என்பன  தொடர்ச்சியான அரசியலுக்கு உதவும் காரணிகளாக விளங்கும் .

 

ஆனால் தென்னிந்தியாவின் நிலை வேறானது – பின்பு பார்ப்போம்.

 

—0—

Series Navigationஇருளும் ஒளியும்இறுதிப் படியிலிருந்து கர்ணன்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *