ஏப்பம்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 17 of 17 in the series 22 ஆகஸ்ட் 2021

 

வேல்விழி மோகன்

கூடையை சுமந்துக்கொண்டு அந்த தெருப்பக்கம் திரும்பியபோது அவனை கவனித்தாள்.. ஒரு புன்னகை செய்தான்.. இவள் திரும்பிக்கொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை அருகில் கூடையை வைத்து முகத்தை துடைத்துக்கொண்டாள்.. வெயில் பத்து மணிக்கே முகத்தில் அடித்தது.. லேசான அனல்.. கூடையில் வைத்திருந்த மோர் பாட்டிலை எடுத்து திறந்து ஒரு வாய் பருகினாள்.  பாதி காலி.. வீட்டுக்கு போவதற்கு ஒரு மணி ஆகிவிடும்.. உருளை.. தக்காளி.. கத்தரி.. இதெல்லாம் அதிகமாவே இருக்கிறது.. இன்னும் நான்கு வீட்டில் தினசரி வியாபாரம் இருக்கிறது.. பெரும்பாலும் காலியாகத்தான் வீட்டுக்கு போவாள்.. மீதியாவதை பொரியலுக்கு வைத்துக்கொள்வாள்.. வீட்டுக்காரன் சாம்பார்.. சோறோடு சரி.. குண்டாவை காலி செய்துவிடுவான்.. சாம்பாரை ஏறக்குறைய குடிப்பான்.. பெரிய ஏப்பம் விடுவான். அவள் சாம்பார் குண்டாவை குடையும்போது சிரிப்பான்.. “கொஜ்ஜி புழிஞ்சிக்கோ..” என்பான்..

பொரியலில் கை வைக்கமாட்டான்.. பிடிக்காது. அவளுக்கு பிடிக்கும்.. சாம்பார் இல்லாவிட்டால் சந்தோழமாகவே பொரியலை எடுத்துகொள்வாள்.. வெண்டைக்காய் என்றால் அதிகமாகவே சாப்பிடுவாள்.. “கொழந்தைக்கு பால் வேணுமில்ல..” என்று முனகிக்கொள்வாள்,.

அந்த குழந்தைக்கு ஆறு மாசம் ஆகிவிட்டது.. இவளுக்கு வியாபாரம் பத்து நாளாகத்தான்.. சம்பாதிக்கனுமில்ல.. வீட்டுக்காரனுக்கு நிலையான வருமானமில்ல.. 

கல்யாணத்துக்கு முந்தி செஞ்சுக்கிட்டிருந்த வியாபாரம் இப்ப கை கொடுக்குது.. குழுந்தையைதான் சரியா கவனிக்க முடியல.. வீட்டுக்கு போனா மாமியார்காரி வைவா.. “இம்புட்டு நேரமா..?”

அவள குத்தம் சொல்லமுடியாது.. அவதானே கொழந்தைய பாத்துக்கறா.. அவள புடிக்காதுன்னாலும் கொழந்தைய பாத்துக்கற விழயத்துல கொற சொல்ல முடியாது.. அம்மா இல்லன்னா பாவம் பையலுக்கு புட்டிப்பால்தான்.. பழகிட்டான்.. டாக்டரு சொன்னாரு கெளம்பறப்போ.. “புட்டிப்பாலுக்கு போய்டாதீங்கம்மா.. கொழந்தைக்கு செய்யற துரோகம்.. “

“பொழப்பு துரோகம் செய்ய வச்சிருச்சி..” என்று தனக்குத்தானே முனகிக்கொண்டாள்.. குடிச்ச மோரு தெம்பா இருந்தது.. இன்னும் ஒரு முறை குடித்தாள்.. மோர் அவளுக்கு பிடிக்கும்.. பொரியல் மாதிரி.. பச்சையான தண்ணீர் வாசனையுடன் இருக்கும் காய்களை குழந்தைகளை போலத்தான் தடவிக்கொடுப்பாள்.. முக்கியமாக வெண்டை.. பசித்தால் ஒரு வெண்டையை எடுத்து கடிப்பாள்.. வீட்டில் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தக்காளி.. பச்சை மிளகாய்.. கொத்துமல்லி.. வெண்டை.. உப்பு.. வெங்காயம் போட்டு கலக்கி சாப்பிட்டு விடுவாள்.. வெளியே இருந்தால் அப்படியே புடவை தலைப்பில் நன்றாக துடைத்துவிட்டு கேரட்.. முள்ளங்கி. வெண்டை.. இளசான மக்காச்சோளம் சாப்பிடுவாள்.. 

வீட்டுக்கு போகும்போது பெரும்பாலும் பசியிருக்காது.. இப்போதெல்லாம் பசிக்கிறது.. பசு மாடுகளுக்கு காய்களை தருவது புதிதாக பழக்கமாயிருக்கிறது.. ‘பிரசவத்துக்கு இலவசம்’ ஆட்டோக்கள் கண்களில் தட்டுப்படுகிறது.. வழியில் குழந்தைகள் தெரியும்போது நம்ம பயலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்க தோன்றுகிறது.. தலையில்.. கழுத்தில்.. உடம்பில்.. என்று கொஞ்சம் பணக்காரத்தனமாக பார்க்கும்போது சலிப்பு வருகிறது.. அவங்களுக்கு மட்டும் எப்படி..? பழகிருச்சு இவளுக்கு.. அது சுதந்தரம்.. பண சுதந்தரம்.. தப்பு பண்ணவங்க.. பண்ணாதவங்க.. உழைக்கிறவங்கன்னு அது வேற உலகம்.. ஒரு பெருமூச்சு விடுகிறாள்.. காய் கொடுக்கற பாட்டி சொல்லும்..”புள்ள.. நம்ம நாட்ல தப்பு பண்ணறவங்கதான் பெரும்பாலும் பணக்காரனா இருக்கான்..”

“எப்புடி பாட்டி..?”

“அதுக்கும் அறிவு வேணுமில்ல..”

“அப்படி இருந்தா பணம் சேந்திருமா..?”

“ஆமா.. அரசியலு.. சட்டம்.. வரி.. எல்லாத்திலேயும் ஓட்ட.. “

“அப்ப நமக்கு அந்த அறிவு இல்லியா..?”

“உனக்கு தைரியம் இருக்குதா.. ஏமாத்தறதுக்கு..?”

“இல்ல..”

“அப்ப அந்த அறிவு உனக்கு இல்ல.. நம்ம மூக்குபாண்டி இருக்கான் பாரு.. நாலு வருசத்துக்கு முன்னாடி இங்க மார்க்கெட்டுக்கு தக்காளி விக்க வந்தான்.. அப்பறம் அத விட்டுட்டு புரோக்கரு ஆனான்.. கமிஷன் மண்டி வச்சான்.. இன்னிக்கு கைல பணம் புழுங்குது..  புது வூடு கட்டிட்டான்.. காலேஜு பக்கம் எடம் வாங்கியிருக்கானாம்.. எங்கிட்டேயே பொய் பேசுவான்.. அவம் பொண்டாட்டி மினுக்கிட்டு வர்றா.. நான் பத்து வருசமா மார்க்கெட்டல குப்ப கொட்றேன்.. இன்னும் அதே பொடவ.. அதே வியாபாரம்.. வூட்டுக்கு போம்போது வெத்தலக்காரிக்கிட்ட பத்துரூபாக்கு வெத்தல வாங்கிட்டு போவேன்.. பேரப்பசங்களுக்கு முறுக்கு.. ஜிலேபி..ன்னு வாங்குவேன்.. அவ்வளவுதான் எம் பொழப்பு..”

“அது தெறம பாட்டி.. வேலையும் செய்யனுமில்ல..?”

“அட என்னடி புரியாம இருக்க.. இப்படி வச்சுக்குவோம்.. தக்காளி ஒரு கூடைய நூறுன்னு வாங்கி நூத்து அம்பதுக்கு விக்கறான்.. எவ்வளவு லாபம்..?”

“அம்பது..”

“அதையே நூறுன்னு வாங்கி எறநூறுக்கு விக்கிறான்.. என்னா லாபம்..?”

“நூறு..”

ஒரு விவசாயிக்கும் இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்..?”

“ஒண்ணுமில்லாத மாதிரிதான் தெரியுது.. அவனுக்கு விவசாய செலவு.. இவனுக்கு கைமாத்தற செலவு.. கூட்டி கழிச்சு பாத்தா விவசாயிக்குதான் நஷ்டம்..”

“இதையே கைமாத்தற ஆளு நேர்மையானவனா இருந்தா யாரு பொழப்பாங்க..?”

“விவசாயி..”

“அத யாரு செய்யனும்..?”

“கவர்மெண்டு..”

“ஆறு மாசத்துல ஒரு விவசாயி உழைச்சு நஷ்டப்படும்போது கை மாத்தறவங்க எப்படி லாபம் எடுக்கறாங்க..?”

“உலகம் அப்படித்தான் இருக்கும் போல..”

“இல்ல.. இல்ல..நீ சொன்ன பாரு கவர்மெண்டு செய்யனமுன்னு.. அங்க இருக்குது பாயிண்டு.. ஒருத்தன் ஏமாத்தி பிழைக்க முடியும்னா அந்த இடத்தை உருவாக்கறது யாரு..? விவசாயி நஷ்டத்தை பத்தி இப்ப நான் முக்கியமா  பேசவரலை.. ஒருத்தனோட பாக்கெட்டல பணம் நிரம்புதுன்னா அதுக்கு காரணமா பொய்யும் புரட்டும் இருக்குதுன்னா எப்படி அவனால அதை முழுசா மறைக்க முடியுது..? அதுக்கு உதாரணம் சொல்றேன்.. நம்ம மாவட்டத்துல புளி.. மாங்கா.. இதெல்லாம் அதிகம்.. மூட்ட மூட்டயா வெள்ளாம பண்ணி எங்க எடுத்துட்டு போறாங்க..?”

“கமிஷன் மண்டிக்கு..”

“அப்ப யாரு பொழைக்கறாங்கன்னு பாரு.. மாங்கா ஜூஸ் கம்பெனிங்க எல்லாமே பிரைவேட்டு.. ஒரே ஒரு கவர்மெண்டு கம்பெனி இருந்தது.. அதையும் இழுத்து மூடிட்டாங்க.. யாரு பொழைக்கறாங்க..?.. இதுக்குதான் சொன்னேன்..இங்க சூழ்நிலையெல்லாம் ஏமாத்தறவங்களுக்கு சாதகமா இருக்குது.. அதனாலதான் இப்பிடி” என்பாள் பாட்டி.. எல்லாம் உலக ஞானம்.. அந்த பாட்டி கடையிலேயே பேப்பர் படிப்பதை பார்த்திருக்கிறாள்.. நிறைய சந்தேகம் கேட்பாள்.. பஞ்சகவ்யம் தயாரித்ததை கதை கதையாக சொல்லுவாள்.. அந்தரங்கம் நிறைய பேசுவாள்.. ஒரு கதை மாதிரிதான் இருக்கும்.. சிரிப்புதான் நிறைய வரும்.. 

“அவளுக்கு இருட்டுல என்ன செய்யறதுன்னு புரியல.. கைய வச்ச எடத்துல அய்யோ..பெருச்சாலி..ன்னு அலறிட்டா… அதுக்குள்ள கரண்டு வந்து.. ம்..” என்று இழுப்பாள் பாட்டி

“போதும்.. போதும்.. எனக்கு ஒரு சந்தேகம்?”

“எனக்கும்தான் சந்தேகம்.. ஆம்பளைங்களுக்கு முட்டி வலி வர்றதுக்கு என்ன காரணம் சொல்லு..?’

“அய்யோ பாட்டி.. அத விடு.. என் சந்தேகத்த கேளு..”

“சொல்லு..”

“ஒரு பொம்பள இன்னொரு பொம்பளைய எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியுது..?”

“ஓ.. அதுவா..?.. இதெல்லாம் வேறயா..? சென்னைல ரண்டு பொண்ணுங்க அப்படித்தான் ஓடிட்டாங்களாமே..?”

“எனக்கு பதில் சொல்லு பாட்டி..”

“அதுவா.. “ காதுகளை குடைந்துக்கொண்டு “ஒரு ஆம்பளைய இன்னொரு ஆம்பள எப்புடி கல்யாணம் பண்ணிக்க முடியும்..?”

“இதுதான் பதிலா..?”

“எனக்கு இதெல்லாம் புடிக்காது.. எல்லாம் நாத்தம் புடிச்ச சமாச்சாரம்..  இந்த கேள்விக்கு பதிலே இல்ல.. அவங்களால முடியுது.. அவ்வளவுதான்.. எல்லாம் ருசி.. சுதந்தரம்.. உரிம.. ன்னு பேசறாங்க.. எதுக்கு வம்புன்னு ஒரு சில நாட்ல அனுபவிச்சுக்கோன்னு எழுதி வச்சுட்டாங்க.. எல்லாம் அரசியல்.. மனுசங்களுக்கு எந்த நிலைக்கும் போக முடியுது.. அவங்கிட்டே கடைசில மீதி நிக்கறது எதுவுமேயில்ல,, பூச்சிங்க.. விலங்குங்க பூமிய ஆட்சி செய்யற காலம் வரலாம்.. இப்புடி இருந்தா அப்படித்தான் நடக்கும்.. “ என்கிற பாட்டிக்கு சொல் பலம் அதிகம்.. பேசிக்கொண்டேயிருப்பாள்.. கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.. 

அவள்தான் சொன்னாள்.. “உன் வீட்டுக்காரன் சம்பாதிக்கலைன்னா அதுக்கு புள்ளதாச்சி நீ என்ன பண்ண முடியும்..? கேடு கெட்டவங்களா இருக்காங்க.. கொழந்தைய யாரு கவனிப்பா.?. சரி.. சரி.. இது உன் வூட்டு பொல்லாப்பு.. எனக்கெதுக்கு.. ஆனா வெளியில போகும்போது மோரு எடுத்துக்கோ.. வெயிலுக்கு தாங்கும்.. கொழந்தைக்கு ஒண்ணும் ஆகாது.. “ அவள் சொன்ன பிறகுதான் மோர் இவளுடன் பயணம் செய்தது..  பாட்டி சொன்னது உண்மைதான்.. தெம்பாக இருக்கிறது என்று நினைக்கும்போதுதான் தற்செயலாக அவனை கவனித்தாள்..

 எதிரே இடதுபுறத்தில் சற்று தள்ளி ஒரு புளியமரத்தின் அடியில் நின்றுக்கொண்டு இவளை கவனித்துக்கொண்டிருந்தான் அவன்.. 

0000

சிவப்பு பனியன்.. வெள்ளை பேண்ட்.. பதினேழு  பதினெட்டு இருக்கலாம்.. அகலமான முகம்.. கொஞ்சம் குள்ளம்.. காதுகளுக்கு மேலே இறங்கிய தலைமுடி.. கையில் மொபைல்.. காதுகளுக்கு போன வயர்கள்.. கனமான வெள்ளை ஷூ.. முன்நெற்றியில் புரண்ட முடி.. 

அவள் சட்டென்று கூடையை அள்ளிக்கொண்டாள்.. எதிர்பக்கமாக நடந்தாள்.. இடதுபுறம் இடைவெளி விட்டு இரண்டு மெக்கானிக் கடைகள்.. நடுவில் வீடுகள்.. வலதுபுறம் நீளமாக தென்னை மரங்கள்.. கம்பி வேலி..  அனாமத்தாக தோப்புக்குள்ளிருந்து வரும் குரல்கள்.. தோப்பை தாண்டினால் மெயின் ரோடு.. சந்தடி அதிகமாக இருக்கும்.. பத்து நிமிடத்தில் பஸ் நிறுத்தம் போய்விடலாம்.. இடதுபுறம் சட்டென்று ஒரு வீட்டுக்குள் கேட்டை தள்ளி நுழைந்தாள்.. ஒரு ஓரமாக பார்த்தாள்.. அவன் தெரியவில்லை.. நிம்மதியாக இருந்தது.. சிவப்பு பனியன் ஞாபகம்.. நாளைக்கு எப்படி வருவது.. ?.. 

“ஏம்மா.. உன்னதான்.. என்னவோ ஞாபகத்துல இருக்கே நீ..” அந்தம்மாள் கூடையை சிரித்தபடியே எட்டிப்பார்த்து “வாலக்காய் இருக்கா..?”

“இல்லீங்க.. நாளைக்கு எடுத்தாறேன்..”

“அதானே வேணும்.. வூட்டுக்காரு ஒரே தொந்தரவு.. நைட்டுக்கு பஜ்ஜி செஞ்சிக்கொடுன்னு..”

“கொஞ்சம் தண்ணிம்மா..” என்றாள் வாயில் விரலை வைத்து காட்டி..

“இதா வர்றேன்.. கத்தரிக்கா.. முள்ளங்கி எடுத்து வை.. முள்ளங்கிக்கு எலி மருந்து அடிக்கறாங்களாமே..?” உள்ளே போனபடியே பேசினாள்.. இவள் கேட்டருகே சென்று தற்செயலாக பார்ப்பது போல தெருவை பார்த்தாள்.. இரண்டு எருமைகள் வந்துக்கொண்டிருந்தது..  ஒரு பெரியவர் தலையில் பெரிய பாத்திரத்துடன் கேட்டை கடந்தார்.. 

“இந்தா வா.. என்னா பாக்கற..?”

“ஒன்னுமில்ல.. யாறோ கூப்புட்ட மாதிரி இருந்தது.. “

“கத்தரிக்காய எடுத்து வைக்க சொன்னேனே..”

“இதா..” அவள் தண்ணியை வாங்க ஒப்புக்கு குடித்துவிட்டு திருப்பி தரும்போது “கொழந்த எப்படி இருக்குது..?”

“நல்லாயிருக்குது..”

“நேத்து லேசா சளின்னு சொன்னியே..?”

“சரியாப் போச்சு..”

“சீக்கிரம் வீடு போயி சேரு.. வெயிலு வேற.. உன் வீட்டுக்காரருக்கு உன்னைய வெளிய அனுப்பறதுக்கு எப்படி மனசு வருதோ.. புள்ளதாச்சின்னு பாக்காம.. அந்த கொழந்த சும்மாயிருக்குமா.. அம்மாவுக்கும் பாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன..?”

“இதா போயிடறேன்..” விருட்டென்று அவள் பார்வை காரணமில்லாமல் திரும்பியது.. அந்த சிவப்பு பனியன் கேட்டை வேறெங்கோ பார்த்தபடி கடந்து போனான்.. 

0000

குழந்தை அவள் மீதே இருந்தது.. கொஞ்ச நேரம் அம்மாவுடன் மழலையில் பேசி.. மடியில் தவழ்ந்து.. அம்மாவின் கைகளில் அடைக்கலம் ஆகி.. மார்புகளில் புரண்டு.. பால் குடிக்குப்போது குழந்தையின் தலையில் முத்தமிட்டுக் கொண்டேயிருந்தாள்.. அதற்கு தூக்கம் வந்தபோது கூட நெஞ்சு மீது போட்டுக்கொண்டு  இவளும் உட்கார்ந்துக்கொண்டே குட்டித் தூக்கம் போட்டாள்.. சைக்கிள் சத்தம் கேட்டது.. செருப்பு விடும் சத்தம்.. வெளியே சமையல் கூடத்தில் பாத்திரங்கள் உருளும் சத்தம்.. முருங்கை சாம்பார் வாசனை வந்தது.. முருங்கை காயை பல்லில் வைத்து இழுக்கும் சத்தம்.. தண்ணீர் சொம்பை தரையில் வேகமாக வைக்கும் சத்தம்.. இரண்டாவது முறை சோற்று பாத்திரத்தை தடவும் சத்தம்..  ஒரு சில நிமிடங்கள் மௌனம்.. ஏப்பம்.. மௌனம்.. மாமியார் குரல்.. “ஏண்டா.. உம் பொண்டாட்டி இன்னும் சாப்புல்லடா.. அவளுக்கு கொஞ்சம் வச்சிரு..”

செஞ்சுக்கலாம் மறுபடியும்..”

“வேல இருஞ்சா..?”

“இல்ல.. மேஸ்திரி நாளைக்கு வரச்சொல்லியிருக்கான்..”

“இந்த வாரம் ரண்டு நாள்தான் வேலைக்கு போயிருக்க.. அது போதுமா..?”

“பொளம்பாதே.. சாப்புடும் போது..”

“சாப்புட்டு முடிச்சுட்டியே.. பச்ச கொழந்தைய வச்சுக்கிட்டு வெயில்ல கூடைய சுமந்துட்டு போயிட்டு வர்றா.. அதெல்லாம் தப்புல்ல.?. அவள நல்லா சாப்புட வைக்கனும்,, கறி,, மீனு.. பழம்னு வாங்கி தரனும்.. பொண்டாட்டி சாப்புட்டாளா இல்லையான்னு கூட அக்கறை இல்லாம குண்டாவ காலி பண்ணற.. கொழந்தைக்கு பாலு எப்படி சேரும் அவளுக்கு..? அக்கம் பக்கத்துல சிரிக்கறாங்க..”

“சிரிச்சுட்டு போட்டும்..”

“அதானே.. உனக்கு ஒறச்சாதானே..?”

இவள் இங்கிருந்தே..”அத்த.. அவர ஒண்ணும் சொல்லாதீங்க.. வேல இல்ல.. அவரும் என்ன பண்ணுவாரு.. சம்பாதிக்கற வரைக்கும் நல்லாதான் வீட்டுக்கு செஞ்சாரு.. விட்டுடுங்க..”

“விட்டுட்டேம்மா.. நீயாச்சு அவனாச்சு.. சாப்பாடு காலி.. பக்கத்துல கெழவி வீட்ல கம்பங்களி இன்னைக்கு.. வாங்கித்தரட்டா..?”

“என்னவோ செய்யுங்க..” அவள் குழந்தையை இப்போதும் அணைத்துக் கொண்டிருந்தாள்.. வெளியில் மீண்டும் ஏப்பம்.. 

“அப்புடியே எனக்கும் கம்பங்களி.. கொழம்பு காலி.. கெழவி களின்னா புளி சட்னி வைப்பா.. அதையும் சேத்தி வாங்கிட்டு வந்திடு..”

0000

பாட்டி நாலு பேரை கவனித்துவிட்டு இவள் பக்கம் திரும்பினாள்.. அங்கே ஆறு மணிக்கே பாதி வியாபாரம் முடிந்துவிட்டது.. பாட்டியிடம் கேரட்.. முள்ளங்கி.. கத்தரிக்காய்.. பீட்ரூட்.. வெண்டைக்காய் கண்டிப்பாக சில்லரை விலையில் கிடைக்கும்,, மொத்த வியாபாரம்தான்.. எட்டு மணிக்கு மேல் தளர்ந்து போய் கிளம்பிவிடுவாள்.. இடம் காலியாகிவிடும்.. அந்த இடத்தில் அதன் பிறகு ஒரு தள்ளு வண்டி வந்து நிற்கும்.. குச்சிக்கிழங்கு சிப்ஸ் வண்டி.. சிப்ஸ் வண்டிக்காரனுக்கும் பாட்டிக்கும் அவ்வளவு நெருக்கம்..

“ஏண்டா பேராண்டி.. ஒரு சந்தேகம்..?”

“சொல்லு பாட்டி..”

“கெழவன என்ன சொல்லுவீங்க..?”

“தாத்தா.. பெரியவர்.. கெழம்னு..”

“இல்ல.. அப்படியில்ல.. அவரு.. இவரு..எப்புடி.?.”

“சரிதான் பாட்டி.. கொஞ்சம் வயசான ஆம்பளைங்கள அப்படிதான் சொல்லுவாங்க..”

“கெழவிய..?”

“அவள்.. இவள்.. ஆமா.. எங்க ர்ர்ர்….ரு..?”

“நீயே கேட்டுக்கறியா,, தமிழ்ல பொம்பளைங்களுக்கு ஓர வஞ்சன பாத்தியா..?”

இது வரையிலும் சிப்ஸ்காரனுக்கு பதில் தெரியவில்லை.. பாட்டி இன்றைக்கு அவளிடம்..”உனக்கு பதில் தெரியுமா இதுக்கு..?” என்று கேட்டாள்..

அவள் மௌனமாக இருந்தாள்.. கூடையில் காய்கள் நிரம்ப ஆரம்பித்தது.. பாட்டி “கத்தரிக்கா ..வெண்ட..மூணு மூணு கிலோ..  கேரட்டு ஒரு கிலோ.. சேத்தி போட்டா நாலுன்னு..?”

“ஏதோ போடுங்க..”

“ஒடம்பு சரியில்லையா..?”

“நல்லாத்தான் இருக்கேன்.. போடு போடு பாட்டி..”

“கோவமா பேசற என்கிட்ட..”

“எனக்கு என்னா கோவம்.. கொழந்தைய நேத்து புடுச்சுட்டே இருந்தேன்.. அப்ப  சந்தோசமா இருக்குது.. காலைல பிரிஞ்சு வர்றப்ப துக்கமா இருக்குது.. மாமியா பரவாயில்ல.. அவரு போறாரு.. வர்றாரு.. சாப்புட்றாரு.. நைட்ல வேற..” சட்டென்று நிறுத்தினாள்.. வேறெங்கோ பார்த்தாள்.. 

“கிட்ட எதுக்கு சேத்தற..?.” என்றாள் பாட்டி

“மொரடு.. சாப்பாடு சாப்புட்ற மாதிரியே இதையும்.. முடிஞ்ச பெறகு ஏப்பம் விட்ற மாதிரியே உஸ்ஸ்…..ஸூன்னு ஒரு பெருமூச்சு.. வலிக்குது பாட்டி ரொம்ப. “ வேறெங்கோ பார்த்து கண்களை இறுக்கிக்கொண்டு சொன்னாள்..

பாட்டி சைகை செய்து உடன் இருந்த இன்னும் இரண்டு பேரை அனுப்பிவிட்டு..”அம்மா வூட்டுக்கு போயிடு..” என்றாள் அவள் கன்னத்தை வருடி பரிதாபமாக

“எங்க போறது.. அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல.. அப்பா பேங்களூர்ல சிமெண்டு வேலைக்கு போயிட்டாரு.. அண்ணனும் கூட போயிட்டான்.. தங்கச்சி மட்டும்தான்.. அவளும் கூலி வேலைக்கு போறா.. என்னத்த செய்ய சொல்லற..?..நடக்க முடியல.. வெயிலு வேற.. கொழந்த ஞாபகம்.. என்ன கல்யாணமோ.. வாழ்க்கையோ.. நீயெல்லாம் எப்படி சமாளிச்சே.?.”

“பழகிருச்சு.. “

“பத்தாததுக்கு அந்த செவப்பு பனியன் வேற..”

“செவப்பு பனியனா..?”

“அவன் ஒருத்தன் கெடக்கறான்.. நாலு நாளா பஸ் ஸ்டேண்டுல ஆரம்பிச்சு பின்னாடியே வர்றான்.. ஸ்கூலு படிக்கற பையன் மாதிரி இருக்கான்.. சிரிக்கறான்.. குறுக்க போறான்.. ஸ்டைலா நிக்கறான்..”

“பயந்துட்டியா..?”

“தெரியல.. ஆனா பதட்டமா இருக்குது.. “

“மெரட்டி விடு.. ஆளுங்கல கூப்புடு.. செருப்ப காட்டு.. காறித்துப்பு.. ஏதாவது ஒன்னு பண்ணு..”

“அப்படி பண்ணமாட்டேன்..”

“பெறகு..?”

“இன்னும் நாலு நாள் சுத்துவான். அப்பறம் வேற பொம்பள பின்னாடி போவான்.. எம் பின்னாடி நிறைய பேரு கல்யாணத்துக்கு முன்னாடி சுத்துவாங்க.. இப்ப கூட ஒருத்தரு.. ரண்டு பேருன்னு வர்றானுங்க.. ஏதும் கேட்டுக்கமாட்டேன்.. கண்டுக்கமாட்டேன்.. ஆனா பதட்டமா இருக்கும்.. ஓஞ்சுப்போயி காணாம போயிடுவாங்க.. ஸ்கூல் பையனுக்கு பொம்பள ஆசைய பாத்தீங்களா.?.”

“அதுவும் ஒரு ருசிதான்.. பத்தரமா இரு.. ரொம்ப பதட்டமா இருந்தா போகாத கொஞ்ச நாளைக்கு”

“நைட்ல கூடதான் பதட்டமா இருக்குது..,ரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியல எனக்கு..” கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் அவள்.. 

0000

 
Series Navigationபாகற்காய் விற்க வந்த சிறுமிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *