ராமலிங்கம்

This entry is part 1 of 12 in the series 5 செப்டம்பர் 2021

 

 

எஸ்.சங்கரநாராயணன்

  • ••

எனது அருமை நண்பரும், இனிய வாசகரும், பதிப்பாளருமான திரு ராமலிங்கம் (நிவேதிதா பதிப்பகம்) கடந்த 29 ஆகஸ்டு 2021 அன்று இயற்கை எய்தினார். கல்லீரல் புற்றுநோய் எனக் கேள்வியுறுகிறேன். எனது கட்டுரைத் தொகுதி ‘உலகெனும் வகுப்பறை’ நூலை அவர் உற்சாகமாக வெளியிட்டு, அதற்கு ஒரு வெளியீட்டு விழா வைத்து, அன்றைக்கு இரவு விழாவுக்கு வந்த அனைவருக்குமே இரவு விருந்தளித்து மகிழ்ந்ததை என்னால் எப்படி மறக்க முடியும்? அன்னாருக்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன்? இனி அது என்னால் எப்படி முடியும்?)

  • ••

 

ஊரில் எத்தனை பெரிய கல்யாணம் என்றாலும் கனகசுப்புதான் சமையல். ஊருக்கே பசியாற்றுகிற வித்தை அவர் விரல்களில் இருந்தது. பெரிய அண்டாவில் ரசம் கொதித்துக் கொண்டிருக்கும். உட்கார்ந்த இடத்தில் இருந்தே “உப்பு போடல்ல போலருக்கே?“ என்று சத்தம் கொடுப்பார். “போடறேண்ணா…” என்று ஓடுவார்கள். “எப்போ? கொதி வந்ததும் போட்டுறணும். அப்பதான் ‘தான்’ல சேர்ந்துக்கும். ரசம்னா வாசனையப் பாத்தே கரண்டிலேர்ந்து விடறச்ச கையைக் குழிச்சி குடிக்க கைநீட்ட வேண்டாமோ?” என்பார். கண் காது மூக்கு வாய், அனைத்துமே அவருக்குக் கூர்மையானவை. காப்பி போட்டால் புதுப்பால் பழைய பால், புது டிகாஷன் பழைய டிகாஷன், என வித்தியாசம் சொல்லி விடுவார். “இரண்டாவது தடவை சுட வெச்ச காப்பியாடா இது?” என்று கத்துவார்.

வேலை முடிகிற வரைதான் அத்தனை கண்டிப்பும் அதிகாரமும். வேலை முடிந்து கிளம்புகிற சமயம் அத்தனையும் கரைந்து முகம் பாலாய்ப் பொலியும். செய்த வேலையைத் திருப்தியாய்ச் செய்த சந்தோஷம் அது. தன் வேலைக்காரர்களையிட்டு அவருக்கு எப்பவுமே பெருமிதம் உண்டு. மத்தவர்கள் முன் அவர்களை விட்டுத்தர மாட்டார். அவர்களும் அவர் கோபப்படுவதை அந்த நேரத்துக்கு என்று விட்டு விடுவார்கள். அவரிடம் வேலை பார்க்கிற எத்தனையோ பேரை வேறு சமையல்காரர்கள் கூப்பிடுகிறார்கள். யாருமே அவரை விட்டுப் போனதே இல்லை. அவருக்கே இது குறித்து ஆச்சர்யம் உண்டு.

அவரிடம் வேலை பார்க்க வந்தால் கை சுத்தம், மன சுத்தம் வேண்டும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணப்டாது. கல்யாண வீட்டில் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து சீட்டாடக் கூடாது. அங்கே இங்கே பராக்கு பார்த்துக்கொண்டு நிற்க விட மாட்டார். கல்யாணம், காதுகுத்து வைபவம்னா கூட்டம் அதுபாட்டுக்கு வந்துகிட்டும் போய்க்கிட்டும் இருக்கும். நமக்கு நம்ம வேலை. யார் எக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் இருக்கணும். தண்ணி யடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது. காலையில் வேலை ஆரம்பிக்கும்போதே குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீறு பூசி நல்லுடைகளில் வந்து நிற்க வேண்டும். போன மாதம் அவரிடம் வேலைக்குச் சேர்ந்த ஸ்ரீதரன் வரை இந்த நியதிகளில் மாற்றம் இல்லை. ஆகவேதான் அவரை நம்பி இளம் பெண்களும், வயசான பெண்களும் வேலைக்கு என்று வந்தார்கள். காய் நறுக்க, தேங்காய் துருவித்தர, பாத்திரங்கள் சுத்தம் செய்து கழுவித் தர என்று சுற்று வேலைகளுக்குப் பெண்கள். பரிமாறுவது கொள்வது எல்லாம் ஆண்களின் பாடு.

அவர்களுக்கே பழகி பிடித்துப் போய்விட்ட நியதிகள் அவை. அந்தக் கீழ்ப்படி யாளர்களை சமையல் வேலையின் போது என்று இல்லை, வெளியே பொது இடங்களில், பஜாரில், கோயில்களில்… எங்கே பார்த்தாலும் பளிச்சென்று அவர்கள் அடையாளப் பட்டார்கள். ஏற்கனவே ஒருத்தர்வீட்டு விசேஷம் என்று போய் வந்திருந்து அவர்கள் எதிர்ப்பட்டால் சிரிப்புடன் வணக்கம் வைப்பார்கள். கனகசுப்பு அவர்களை நேரிலும், மறைமுகமாகவும் இயக்கினாற் போல இருந்தது. தப்பான யோஜனை வந்தாலே, இது ஜிக்குப் பிடிக்காது… என அவர்கள் அதில் இருந்து விலகிப் போனார்கள். ஜி அவர்களின் தொழிலுக்கு மாத்திரம் அல்ல, வாழ்க்கைக்கே ஆசான்.

சமையல் வேலை எளியது அல்ல. எல்லாருக்கும் அது ஒத்துக் கொள்வதும் இல்லை. கை வரவும் வராது. அது ஒரு கொடுப்பினை. திகுதிகுவென்று கொழுந்து விட்டெரியும் நெருப்புடன் நிற்கப் பழகி யிருக்க வேண்டும். களக் புளக் என்று கொதிக்கும் தண்ணீரில் களைந்த அரிசியைக் கொட்ட வேண்டும். கையெல்லாம் சுடும். அத்தனை கிட்டத்தில் அந்த முகம் இருளும் ஒளியும் அப்பி தனி அடையாளங் காட்டும். தூரத்துப் பார்வைக்கு தழலின் சுடர், சுடரின் நிழல் கன்னத்தைத் தடவித் தருகிறாற் போலத் தெரியும். பசி என்பது வயிற்றில் எரியும் தீ. அதை அணைக்க இந்த அடுப்புத் தீ எரிய வேண்டும். அக்கன்னா அடுப்புகளுக்குள் பொங்கிச் சிரிக்கும் தீயை ருஜியாய் மாற்ற வேண்டும்.

தெரியாமலா சொன்னார்கள், சூடு ஒரு ருஜி, சேப்பு ஒரு அழகு! கிஸ் மிஸ்சோடு முந்திரியை நெய்யில் தகதகவென்று பொன் வறுவல் வறுக்கும் போது அந்தப் பொன்னைப் பார்ப்பது அழகு. அந்த வாசனை. அடாடா. அதைக் கொத்தாகப் பாயசத்தில் போட்டு பெருங் கரண்டியால் கிளறிக் கொடுக்கையில் தாண்டிப் போகிறவர் திரும்பிப் பார்க்க வைத்து விடும். ஏலக்காயைப் பொடித்து உள் விதையும் இதழ்களுமாய் இன்னொரு கொட்டல். உபரி உபசார ஆசிர்வாத அட்சதைகள். பொம்மனாட்டி அலங்காரமாட்டாம் தான் இருக்கும் பார்க்க. பாயசத்தில் வெல்லப் பாயசம், சர்க்கரைப் பாயசம் என்று அததற்கு நிறம் இருக்கிறது. சாப்பிடும் பொருள் ஒவ்வொன்றுக்குமே அதன் ருஜியின் அடிப்படையில் நிறம் அமைந்து போகிறது. நல்ல காப்பி என்றால் அதற்கு என்று ஒரு நிறம் இல்லையா என்ன? மிருதங்கத்தின் சுருதி போல சாப்பிடும் பொருளுக்கு அமைய வேண்டும் நிறம்.

அடுப்பை ஏற்றிய பிறகு அது நாட்கணக்கில் கணகணவென்று எரிந்தபடியே இருக்கும். தீயை அணைத்து விட்டாலும் விறகுக் கட்டைகள் கறுத்து மின்மினி வெளிச்சம் போல மினுங்கிக் கொண்டிருக்கும். நினைத்து நினைத்து உருமிக் கொண்டிருக்கும் நாய் மாதிரி. கல்யாணத்தில் தேவைப்படி சட்டென அதை நிமிண்டி விட்டால் அது உறக்கம் தலைந்தாற் போல சுதாரித்து சுடர் எழுந்து நடனமாடத் துவங்கும்.  நாலைந்து அடுப்புகள் அங்கங்கே மினுங்கும். தேவைப்படி திரும்ப விழிப்படைய வைப்பார்கள்.

லேட் முகூர்த்தம் என்றால் காலை டிபன் என்று பெரிதாய் வராத கூட்டம், முகூர்த்தம் நெருங்க நெருங்க புது வெள்ளமாய் வந்து நிரம்ப ஆரம்பிக்கும். கல்யாணக் கூடத்தின் அத்தனை நாற்காலியும் நிரம்பி உட்கார இடம் இல்லாமல் நிறையப் பேர் நிற்கவேண்டி யிருக்கும். தலைக்கு மேலே மின்விசிறி இருக்கிற மாதிரி இடம் கிடைக்குமா, என அழியும் பவுடரும், இறுக்கமான பிளவுசும், கனமான பட்டுப் புடவையுமாய்ப் பெண்கள் ஒரு மூச்சுத் திணறலுடன் இடுப்புக் குழந்தையையும் சமாளித்தபடி பரிதவிப்புடன் இருப்பார்கள். கூட்டம் என்றாலே வேடிக்கை பார்க்க ஆயிரம் விஷயம் இருக்கிறது. நமக்குதான் வேடிக்கை பார்க்க நேரங் கிடையாது.

கூட்டம் எகிற எகிற அவர்களுக்கு காப்பியோ, ஜுசோ அனுப்பிக் கொண்டே யிருக்க வேண்டும். தர்பூஸ் முதல் சாத்துக்குடி வரை ஜுசில் ஆயிரம் வெரைட்டி. கல்யாணப் பார்ட்டி தேவைப்படி அல்லது ஐவேஜ் படி. இப்போதெல்லாம் வரவேற்பு வாசலிலேயே அதெல்லாம் தயார் பண்ணி விடுகிறார்கள். இது தவிர பஞ்சு மிட்டாய், பலூன், அட்டை கிரீடம் என்று சிறுசுகளைக் கவர நிறைய ஐட்டங்கள்.

ஒரு பார்வையில் கூட்டத்தில் இத்தனை பேர் என அளக்கத் தெரிய வேண்டும். எல்லாரும் மணமக்கள் தாலி கட்டும் வரை காத்திருப்பார்கள். தாலி காட்டிய அடுத்த ஐந்தாவது நிமிடம் சாப்பாட்டுக் கூடம் ஜே ஜே என்றாகி விடும். முகூர்த்த நேரம் நெருங்க பத்து பதினைந்து நிமிடம் இருக்கும் போதே, கனகசுப்பு தன் வாட்சில் மணி பார்த்துக் கொள்வார். “ஆச்சி. இலை போட்டு பரிமாறலாம்…” என்கிற அவர் ஆணைக்கு ஒரு பட்டாளமாய் கீழ்ப்படி யாளர்கள் காத்திருப்பார்கள். விறுவிறுவென்று மேசைகளில் பாயளவு பேப்பர் விரித்து ரப்பர் பேன்ட் போட்டு இலை போட்டு தண்ணீர் தெளித்து வரிசையாய் ஐட்டங்கள் வைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவரை பரிமாறும் கூடத்தின் கதவு ஒருகதவு சாத்தப் பட்டிருக்கும் அங்கே ஒரு ஆள் காவலுக்கு நிற்பான், யாரையும் விடாமல்.

அவன் கதவைத் திறந்த ஜோரில் சொர்க்கவாசலுக்குக் காத்திருந்தாற் போல பெருங் கூட்டம் உள்ளே பாய்ந்து வந்து இடம் பிடிக்கும். சில சின்ன வயசுகள் உள்ளே போய் தன் வீட்டுப் பெரியவர்களுக்கு அடுத்த நாற்காலியைப் பிடித்து வைக்கும். அப்படியும் இடம் கிடைக்காதவர்கள், சாப்பிட அமர்ந்தவர்கள் பின்னால், அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருப்பார்கள். இல்லாவிட்டால் அடுத்த பந்தியிலும் அவர்கள் இடம் பிடிக்க வாய்க்காது, என்பதை அவர்கள் அறிவார்கள். பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்று பழமொழியே இருக்கிறது. பந்திக்குப் பிந்தினால் அடுத்த பந்தியில் ரசம் நீர்த்துப் போகலாம். ரெண்டு கறியில் ஒன்று தீர்ந்து போயிருக்கலாம். போட்டதைச் சாப்பிட வேண்டி யிருக்கும்.

எதிர்பார்த்ததை விட சில சமயம் என்ன, பல சந்தர்ப்பங்களில் கூட்டம் அதிகமாகி விடும். அந்நேரங்களில் மூன்று பந்திக்குப் போட்ட கறி, கூட்டு நாலாம் பந்திக்கு வேறு ஐட்டம் தயாராக்க வேண்டி வரும். அதற்கேற்ப குழந்தை மரக்குதிரை ஆடுகிறாற் போல ஆட்கள் தேங்காய் துருவுவதும், கத்தி கொண்டு டக் டக் என்று காய் நறுக்கித் தள்ளுவதும் என வேலைகள் வேகமெடுக்கும். எல்லாம் கனகசுப்புவின் கை ஜாடையிலேயே நடைபெறும். பந்தி ஆரம்பித்து ஒண்ணரை ரெண்டு மணி நேரம் ஜனங்கள் வந்துகொண்டே யிருப்பார்கள். “நாலு பேர் வெளில போயிருக்காங்க. சாப்பாடு எடுத்து வைங்க” என சில சமயம் உத்தரவுகளும் வரும். எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். எல்லாமே ஒரு கொண்டாட்டம் தான். பரபரப்பான சந்தோஷமான, அவசரமான காரியங்கள். அத்தனையும் முடித்து அக்கடா என்று உட்கார்கையில் உடம்பு வலி பின்னியெடுக்கும். வேலைகள் முடித்து பணம் எல்லாம் பெற்றுக் கொண்டு வீடு வந்து படுத்தால் மரக்கட்டையாக அப்படியே ஆளைக் கிடத்தி விடும். பதினாறு பதினெட்டு மணி நேரம் வரை கூட தூங்குவார். யார்வந்து எத்தனை உசுப்பி அசைத்து எழுப்பினாலும் எழுந்து கொள்ள முடீயாது. ஒண்ணுக்கு மஞ்சள் சூடாய் வரும். அத்தனை வெக்கையை உள்ளே வாங்கிக் கொண்ட உடம்பு. தவறாமல் எண்ணெய் தேய்த்துத் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மஞ்சள் காமாலை என்று இழுத்து விட்டுக் கொண்டால் யார் தாக்குப் பிடிப்பது…

கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்தம் அது. அடுத்த மாதத்தில் கல்யாண முகூர்த்தம் எதுவும் இராது. முழுசாய் ஒருமாதம் வீட்டில் இருந்தாலும் பிடிக்கிறது இல்லை என நினைத்துக் கொண்டார். நமக்கு என்றில்லை. நம்ம வீட்டு ஆளுங்களுக்கே இவன் எப்ப வெளிய போவான்னு ஆயிருது. கல்யாணம் முடிந்த மறுநாள் காலை. மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப கட்டுச்சாதக் கூடை வைத்தல் என சிறு வேலைகள் முடித்து அட்வான்ஸ் போக பாக்கித் தொகை கணக்கு பார்த்துச் சொன்னார். கல்யாண மண்டபத்தில் செலவான கேஸ் செலவுகளைக் கழித்துக்கொள்ள வேண்டி யிருந்தது. மற்ற பிள்ளைகள் சாமான் செட்டைக் கட்டிக் கொண்டு தயாராய் இருந்தார்கள். அவர்களுக்கு வழமையாக வருகிற டெம்போ உண்டு. வெளியே அது சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு காத்திருந்தது. வீட்டுக்கு வந்தபோது மலையைப் புரட்டிப் போட்ட அளவு அசதி இருந்தது. மனைவியிடம் எதும் தகவல் உண்டா, வீட்டு எண்ணுக்கு எதுவும் போன் வந்ததா, சின்னவள் பரிட்சை எப்படி எழுதினாள், என்று விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டு தூங்கப் போய் விட்டார்.

மறுநாள் காலையில் இருந்து தான் அவரது அடுத்த நாள் ஆரம்பித்தது. இரவு சாப்பிடக் கூட அவர் எழுந்து கொள்ளவில்லை. வாசலில் எதோ சத்தம். கிருஷ்ணன். ராமலிங்கம் வீட்டு வேலையாள் சைக்கிளில் வந்து இறங்கினான். எப்படி யிருக்கிறாரோ ராமலிங்கம் தெரியவில்லை.

“என்ன கிருஷ்ணா?” என எழுந்து வெளியில் வந்தார்.

“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டபடியே சைக்கிளில் காலை வெளியே எடுத்து இழுத்துக் கொண்டான் கிருஷ்ணன்.

“என்ன இவ்ள தூரம் கிருஷ்ணா?”

“ஐயா உங்களை ஓய்வா இருந்தால் வீட்டுப் பக்கம் வரச்சொல்லிச் சொன்னாருங்க” என்றான் கிருஷ்ணன்.

“என்னையா?” என்று கேட்டார். அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

“சரி போ. சாய்ந்தரமா வரேன்” என்று சொல்லி யனுப்பினார்.

ராமலிங்கம் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ரத்தத்துடன் வாந்தி எடுத்ததாகச் சொல்கிறார்கள். அதுவரை தலைகாட்டாத வியாதி. ராமகலிங்கம் கட்டை குட்டையாக கனமான மனிதர். எப்பவும் தூய வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை என உற்சாகமாக வளைய வருவார். தான், தன் உடல் என்று பெரிதும் அவர் அலட்டிக் கொள்ள மாட்டார்.

பதறிக் கூட வரும் கமலாவிடம் அவர் புன்னகை செய்தார். பேச முடியவில்லை. “போயிட்டு வந்திர்றேன்…” என்று மகனின் காரில் ஏறி ஆஸ்பத்திரிக்குப் போனார். பின் சீட்டில் மனைவி. “படுத்துக்கணுமா?” வேண்டாம் என்றுவிட்டார். ஏற்கனவே இவர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். மேலும் கலவரப்படுத்த வேண்டாம். ஒருமாதிரி படபடப்பாய்த்தான் இருந்தது. ஆஸ்பத்திரியில் உடனே சேர்த்து அந்த சோதனை, இந்த சோதனை என்று மும்முரமாய் இயங்க ஆரம்பித்தார்கள். “இதுக்கு முன்னாடி இது மாதிரி ஆயிருக்கா?” என்று கேட்டார்கள். “என் ரத்தத்தையே நான் இப்பதான் பாக்கறேன்” என்றார் ராமலிங்கம். சுற்றி எல்லாரும் ரொம்பக் கவலையாய் இருந்தார்கள்.

ஒரு சோதனை முடிந்து அதன் முடிவு பார்த்து அடுத்த சோதனை. அவருக்கு நிலைமை மேலும் சிக்கலடைவது புரிந்தது. குறிப்பாக இப்போது எதையும் அவரால் சாப்பிட முடியவில்லை. உடம்பு எது சாப்பிட்டாலும் உடனே வெளியே துப்பினாற் போல இருந்தது. இது ஏன் தெரியவில்லை. முடிந்தவரை திரவ வடிவமாகவே உடம்பில் செலுத்த வேண்டி யிருந்தது. நன்றாக ஓடியாடிய உடம்பு. திரவ உணவு என்பது தெம்பு தருவதாய் இல்லை அவருக்கு.

“எனக்கு என்ன ஆச்சி டாக்டர்?” என்று கேட்டார் ராமலிங்கம்.

“பாக்கலாம். மேலும் டெஸ்ட் எழுதி யிருக்கு. ரிசல்ட் வரட்டும்” என்றார் டாக்டர் கேசவமூர்த்தி.

வேடிக்கை காட்டுவது போல, “அட எதுக்கு டெஸ்ட் எடுக்கறீங்க? அதையாச்சும் சொல்லுங்க…” என்றார் ராமலிங்கம்.

தைரியமான ஆள்தான். தவிரவும் பயந்து ஆகப்போவது தான் என்ன, என்று இருந்தது அவருக்கு. இரண்டு பையன்கள். ஒரு பெண். எல்லாருக்கும் கல்யாணம் முடித்து அவரவர் குடும்பம் என்று ஆகி குழந்தையெல்லாம் பார்த்தாயிற்று. ரொம்பக் கவலைப்பட என்று தன்னை எப்பவுமே அழுத்திக்கொள்ள மாட்டார் அவர்.

கான்சர் என்றார்கள் ஒரு வழியாக. “பணக்கார வியாதி” என்றார் அவர். அவருக்கு கல்லீரலில் கான்சர் கட்டி இருப்பதாகச் சொன்னார்கள். கல்லீரல் மாத்திரம் எத்தனை அடி வாங்கினாலும் திரும்ப உயிர்த்தெழ வல்லது, என்றார்கள். ஆனால் இந்த கல்லீரல் சிதைவடைகையில் மஞ்சள் காமாலை வந்து விடுகிறது. உடனே முதல் கட்ட சிகிச்சை என ‘கீமோ’ ஆரம்பித்து விட யோசித்தார் டாக்டர் கேசவமூர்த்தி. “நீங்க என்ன சொல்றீங்களோ அப்பிடி” என்றார் ராமலிங்கம். “நீங்க அதுக்குப் படிச்சவர். உங்களுக்கு நாங்க யோசனை சொல்ல முடியாதில்லே?” என்றார்.

இவள், மனைவி முகத்தைத்தான் பார்க்க சகிக்கவில்லை. இத்தனை நாள் அவருக்கு அவள் தெம்பு தந்தவள். இப்போது அவர் அவளைத் தேற்ற வேண்டும்படி ஆகிவிட்டது. இத்தனை திடீரென்று முகத்துக்கு எதிரே பூதம் வந்து குதிக்கிறது. திண்டாடிப் போகும்படி ஆகி விட்டது. எல்லாம் ஒரே குளறுபடியாகி, அடுத்த நோடி சார்ந்தே திகைப்பாகி விட்டது. ஆஸ்பத்திரி ‘வாசம்’ அதாவது வாசனை… இன்னும் எத்தனை நாள் தெரியவில்லை. இதில் இருந்து கூடிய சீக்கிரம் விடுதலைப் பட்டால் நல்லது. முடியுமா?

பேரன் வல்லபன் வந்து பார்த்தபோது அவர் உடபில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. “ரொம்ப வலிக்கறதா தாத்தா?” என்று கேட்டான். பாவம் கவலையாய்த்தான் கேட்கிறான். பெரியாள் கேட்டிருந்தால் “இல்ல. ரொம்ப ஜாலியா இருக்கு” என்று கிண்டல் செய்திருக்கலாம் என நினைத்துக் கொண்டார். திடீரென்று என்ன இப்படி ஆகிவிட்டது? அவரை யாரோ கட்டிலோடு சேர்த்துக் கட்டிப் போட்டு விட்டார்கள். கோகுலத்து கிருஷ்ணனை உரலில் கட்டிப் போடவில்லையா? அதைப் போல. கண்கள் நெருப்பாய்க் கொதித்தன. கண்ணை மூடிக் கொண்டபோது கன்ன ஓரங்களில் வெந்நீர் வழிந்தது.

“ஆரு வந்துட்டுப் போறா?” என்று கேட்டாள் மீனாட்சி. அவரது மனைவி.

“நம்ப கிருஷ்ணன்…” என்றார் கனகசுப்பு.

“ராமலிங்கம் வீட்லருந்தா?”

“ஆமாம்.”

“பாவம் இப்ப எப்பிடி இருக்காராம்?”

“தெரியல. என்னவோ என்னை அவர் பார்க்க விரும்பி வரச் சொன்னாராம். வந்து சொல்லிட்டுப் போறான்…”

“தங்கமான மனுசன் அவர். அவருக்கு திடீர்னு இப்பிடி ஒரு கஷ்டம். ஹ்ம்” என மீனாட்சி பெருமூச்சு விட்டாள்.

“சாய்ந்தரமா வரேன்னிருக்கேன்” என்றபடி அவர் எழுந்து குளிக்கப் போனார்.  கல்யாணம் என்று பெரிய எடுப்பு எடுத்து விட்டு வீடு திரும்பினால் வெறும் மோர் சாதம் தான் அவர் சாப்பிடுவார்.

ராமலிங்கத்துக்கு பிறகு அடிக்கடி ‘கீமோ’ தேவைப் பட்டது. பதினைந்து நாள் என இருந்த வழமை பிறகு வாரம் ஒருமுறை என்று தேவையாகிப் போனது. அப்படியொரு வலி வந்து ஆளையே புரட்டி யெடுத்தது. அந்த நேரங்களில் வலி, வலி மாத்திரமே அவர் பிரக்ஞையில் நின்றது. சுற்றி என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை. உதவி என்று அவர் வெறும் உணர்ச்சி ஒலிகளாலேயே கூப்பிட முடிந்தது. வீட்டில் அவர் மனைவியும், ரெண்டாவது பிள்ளையும் தயாராய் இருந்தார்கள். என்றாலும் உள்ளறையில் அவர் தூங்குவதைப் பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் வேலைக்குப் போனால் திடீரென்று அவரில் வலி விழித்துக் கொண்டு உடலைக் கசக்கிப் பிழிய ஆரம்பிக்கிறது.

அதுவரை அந்த உள் தசைகளைக் கூட அவர் அறிந்தவராய் இல்லை. வலி ஈரத் துணியைப் பிழிகிறாற் போல அவரது தசைகளில் இருந்து ரத்தத்தைப் பிழிவதாய் இருந்தது. என்ன வலி இது? இப்படி யெல்லாம் கூட வலிக்குமா? உடனே காரை எடுத்துக் கொண்டு ‘ராஜா கிளினிக்’குக்கு ஓட வேண்டி யிருந்தது. அங்கே அவர்கள் அவரை எந்நேரமும் எதிர்பார்த்திருந்தார்கள். ஏற்கனவே ‘பெய்ன் கில்லர்கள்’ எழுதித் தந்திருந்ததில், அதைப் போட்டுக்கொண்டு சில சமயம் அவர் தூங்கிப் போனார். அப்படியும் கட்டுப்படாத திணறல்களில் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் அடுத்த ’கீமோ’ தந்தார்கள். அவரது உண்மை நிலவரத்தை அவர்கள் அவரிடம் சொல்லாமலும் தவிர்த்திருக்கலாம். (குடும்பத்தில் மற்றவர்க்கு ஒருவேளை சொல்லி யிருக்கலாம்.)

‘கீமோ’ தேவைப்பட்ட அந்தக் கால இடைவெளி குறைந்துகொண்டே வந்ததை அவர் உணர்ந்தார். அடுத்த மாதம், மார்கழியில் அவருக்குப் பிறந்தநாள் வருகிறது, என்று நினைத்துக் கொண்டார். சில மனத் தெளிவான நிமிடங்களில் அவர் எதேதோ யோசித்தபடி யிருந்தார். “ஒண்ணும் யோசிக்க வேண்டாம். பேசாமல் தூங்குங்க” என்றாள் மனைவி. அவர் பதில் சொல்லவில்லை. சிறு புன்னகையுடன் தலையாட்டினார்.

ராமலிங்கத்தின் வீடு பெரியது. காம்பவுண்டு எடுத்த முன் வளாகத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை எடுத்திருக்கிறது. வீட்டின் இடது பக்கம் குடோன். உள்ளே நெல்மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தார்கள். வீட்டில் சொந்த வயலில் விளைந்த அரிசிதான் சாப்பாடு. பெண் கல்யாணம் ஆகிப் போன பின்னாலும் நெல் மூட்டைகளை லாரியில் அனுப்பி வைப்பார். இரண்டாவது பையன் அவரோடு இருக்கிறான். முதல் பையன் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை அவனுக்கு. உள்ளூர் என்றால் அடிக்கடி பார்க்க கொள்ள சௌகர்யமாய் இருக்கும். அவனுக்கும் அவன் மனைவிக்குமாய் ஒருசேர வேலை அமைய பெங்களூர் என்று ஆகிப்போனது. அவனுக்கும் நெல் போகும். இது அவரது பெருமை.

“அப்பா?” என்று கூப்பிட்டபடி உள்ளே வந்தான் சுதாகர். ரெண்டாவது பிள்ளை. “உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்கப்பா.”

“யாரு?” என்று கேட்டார். படுக்கையில் இருந்தபடியே.

“கனகசுப்பு. சமையல். நீங்க வரச் சொன்னீங்களா?”

“ஆமாம். கிருஷ்ணன் கிட்ட சொல்லி யனுப்பினேன். வரச்சொல்லு வரச்சொல்லு” என எழுந்து கொண்டார்.

“அவரை எதுக்கு வரச் சொன்னீங்க?” என்று கேட்டபடி உள்ளே போனாள் கமலா.

கனகசுப்புதான் அவரது பெண் கல்யாணத்துக்கு சமையல் காரியம் ஏற்றுக் கொண்டது. அப்போதிருந்தே அவருக்கு நல்ல சிநேகம். “வாங்க வாங்க” என்று உள்ளே கூப்பிட்டார் ராமலிங்கம்.

“வாங்க வாங்க கடன்தான்” என்றபடி கனகசுப்பு உள்ளே வந்தார்.

“எப்பிடி இருக்கீங்க?”

“ஹ்ம். இருக்கேன். பூமிக்கு பாரமா” என்றார் ராமலிங்கம். “முன்னைவிட இப்ப ரொம்ப முடியாமப் போச்சு.”

“நீங்க அப்பிடியெல்லாம் நம்பிக்கை இல்லாமல் பேசக் கூடாது. நல்ல படியா பிள்ளையும் மனைவியும் உங்களைப் பாத்துக்கறாங்க.”

“அதெல்லாம் ஒரு குறைவும் இல்லை சுவாமி” என்றார் ராமலிங்கம். “சாப்பாடுதான் ஒரு பொட்டு உள்ள இறங்க மாட்டேங்குது. எது சாப்பிட்டாலும் பேஸ்கெட் பால் விளையாடினாப் போல சர்ர்னு கீழ இறங்கிருது. உடம்புல தெம்பே இல்லை.”

“டாக்டர் என்ன சொல்றாங்க.”

“அவங்க என்ன சொல்றது. பரிச்சை எழுதறவனுக்குத் தெரியாதா பாசா ஃபெயிலான்னு?” என்று சிரித்தார் ராமலிங்கம்.

“அடுத்த மார்கழில… எனக்குப் பொறந்தநாள் வருது.”

“ம்” என தலையாட்டினார் கனகசுப்பு. ராமலிங்கம் பேசப் பேச அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

ராமலிங்கம் உடம்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எப்பவும் டயஃபர் கட்டிக் கொள்ள வேண்டி யிருந்தது. செரிமானமே சுத்தமாக இல்லை. எது சாப்பிட்டாலும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. குழந்தைக்கு ஊட்டுவது போல மையப் பிசைந்த பருப்பு நெய்விட்ட, இளஞ் சூட்டுச் சாதம் கூட உடனே வெளியேறி விடுகிறது. இப்படியே சாப்பிட முடியாமல் போனால் எத்தனை தாக்கு பிடிக்க முடியும் அவரால், என்று எல்லாருக்கும் கவலை வந்தது.

பிறந்தநாள் அன்றைக்கு ஊரையே கூட்டிவிட்டார் ராமலிங்கம். வாசல் ஆஸ்பெஸ்டாஸ் கூரையெடுத்த வளாகத்தில் காலை ஆறு மணியில் இருந்தே கனகசுப்பு வேலைகளை ஆரம்பித்து விட்டார். திகுதிகுவென்று அக்கன்னா அடுப்புகள் விறகு செருகப்பட்டு எரிய ஆரம்பித்து விட்டது. காலையில் சூரியன் வருமுன்னே வைபவப காரியங்கள் நடந்தேறின. கணபதி ஹோமம் நவகிரக சாந்தி என வீடே அமர்க்களப் பட்டது. அந்தத் தெரு மாத்திரம் அல்லாமல் மொத்த ஊருமே அவர் அழைப்பில் வந்திருந்தார்கள்.

அவரால் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லை. ஒரு நாற்காலி கொண்டுவந்து போட்டு உட்கார வைத்தார்கள். உள்ளே டயஃபர் அணிந்திருந்தார். அப்படியும் சோர்வாக இருந்தபோது எழுந்து போய்ப் படுத்துக் கொண்டு விட்டார். யாரும் அவரை வற்புறுத்தவில்லை. தளதளவென்று கொதிக்கிற வெந்நீரில் அரிசி கொட்டுகிற சத்தம் கேட்டது. அங்கங்கே பனையோலைப் பாய் விரித்து உட்கார்ந்து கொண்டபடி காய்கறி நறுக்க, தேங்காய் துருவ என வாசல் பரபரத்துக் கிடந்தது. எப்படியும் கூட்டம் அதிகம்தான். பத்து முந்நூறு பேர் வரை சொல்லி யிருந்தார் ராமலிங்கம். நேரம் ஆக ஆக வாசலில் காத்திருந்த பொதுஜன வரிசை நீண்டபடி இருந்தது. கிருஷ்ணனும் இன்னொரு வேலைக்காரனும் அந்தக் கூட்டத்தை வரிசைப் படுத்தி யிருந்தார்கள்.

 ஆஸ்பெஸ்டாஸ் கூரை தாண்டி வெளியிடத்தில் ஷாமியானா பந்தல் அடியில் நீள நீளமான மேசைகள். வாசலில் காத்திருந்த கூட்டத்துக்கு இங்கேயிருந்தே சமையல் வேலைகள் நடப்பது தெரிந்தது. அவர்கள் சமையல் வாசனையை உள்ளிழுக்க உற்சாகமாய் முயன்றார்கள். சமையல் உதவிக்காரப் பெண்கள் இரண்டு பேர் பேசிக் கொண்டார்கள். “என்னடிது, தன் பொறந்த நாளுக்கு இப்பிடி ஊரயே கூட்டி விருந்து வைக்கிறாரு இவரு?” என்றாள் ஒருத்தி. அதற்கு மற்றவள் “அவரு பேரைப் பாத்தியா? ராமலிங்கம். பேர்லயே வள்ளலாராச்சே? பின்னே?” என்றாள்.

மேசைகளில் பாய் சைஸில் காகிதப் பட்டை விரித்து ரப்பர் பேன்ட் போட்டு, இலை போட்டு, பதார்த்தங்களைப் பரிமாற ஆரம்பித்தார்கள். கூட்டம் உள்ளே நுழையத் துடித்தது. வாசலில் கிருஷ்ணன் இல்லையென்றால் போர்க்களம் ஆகி யிருக்கும் அந்த இடம். எல்லாம் பரிமாறியதும் ராமலிங்கம் வீட்டுக்கு வெளியே வந்தார். அங்கேயே ஒரு சாய்வு நாற்காலி போட்டார்கள் அவருக்கு. கிட்டத்தட்ட ஐந்து வரிசை மேசைகள் பரிமாறப் பட்டு உணவுக்குத் தயாராய் இருந்தன. கூட்டத்தில் இருபது முப்பது பேருக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஒருத்தி நின்றிருப்பதை ராமலிங்கம் பார்த்தார். கையசைத்து அவளை மாத்திரம் முன்னே வரச் சொன்னார். கூட்டம் விலகி வழி விட்டது. முதல் ஆளாக அவளை உள்ளே அனுப்பினார் ராமலிங்கம். பிறகு அடித்துக் கொள்ளாமல் மற்றவர்களை உள்ளே அனுமதித்தான் கிருஷ்ணன்.

இலையில் வலது கீழோரம் பாயசம் பரிமாறப் பட்டிருந்தது. அந்தப் பெண் அதில் ஒரு விரலை வைத்து எடுத்து அந்த விரலைக் குழந்தையின் வாய்க்குக் கிட்டே கொண்டு போனாள். சட்டென குழந்தை அவள் கையை இழுத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சியது. ராமலிங்கம் சிரிப்புடன் அதைப் பார்த்தபடி அந்த ஐந்து மேசைகளையும் வணங்கியபடி கடந்து போனார். ரொம்ப சோர்வாக இருந்தது. என்றாலும் முகம் புன்னகையோடு இருந்தது. சிறிய குரலில் “எல்லாரும் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க” என்று கும்பிட்டபடி போய் அந்தச் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

கடகடவென்று பரிமாறினார்கள். நெய்யும் சாம்பாரும் பருப்பும் பாயசமும்… வாளி வாளியாய் இங்கும் இங்கும் நடமாடின. சாப்பிடுகிறவர்கள் பின்னால் யாரும் காத்திருக்கவில்லை. பந்தி நிரம்பியதும் உள்ளே ஆள் அனுப்புவதை கிருஷ்ணன் நிறுத்தி யிருந்தான். சூடான உணவின் வாசனை. பாயசம் புறங் கையில் வழிய சர்ர்றென நாக்கினால் அதைச் சப்பும் காட்சிகள். பந்தியே அமர்க்களப் பட்டது. இலையை நிரப்பிக் கொண்டே யிருந்தார்கள். முந்நூறு பேர் கணக்கு என்பது ஐந்நூறைத் தாண்டும் போலிருந்தது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டபடி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.

பத்து பந்திக்குமேல் ஓடிக் கொண்டிருந்தது. கூட்டம் பாதிக்கு மேல் வெளியே காத்திருந்தது. சாப்பிட்டுவிட்டு கையைக் கைக்குட்டையில் துடைத்தபடியே டாக்டர் கேசவமூர்த்தி ராமலிங்கத்திடம் வந்தார். “சாப்பாடு ரொம்ப அருமை. எப்படி உங்களுக்கு இப்படி எல்லாரையும் கூட்டி விருந்து வைக்க யோசனை வந்தது?” என்று கேட்டபடி அவர் கையைத் தொட்டார். சட்டென ராமலிங்கத்தின் கழுத்து சரிந்தது. அப்படியே முன்பக்கம் விழுந்தவரைத் தாங்கிக் கொண்டபடி நாடி பார்த்தார் டாக்டர். அடாடா, என உதட்டைப் பிதுக்கினார். அவரை அப்படியே இரண்டு பேர் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போனார்கள்.

ராமலிங்கத்தின் இரண்டாவது பிள்ளை சுதாகர் கனகசுப்புவிடம் வந்தான். “சாப்பாடு தீர்ற வரை பந்தி பரிமாறலாம்” என்றுவிட்டு கடகடவென்று மாடிக்கு ஓடினான்.

  • ••
Series Navigationநட்பில் மலர்ந்த துணைமலராரம்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *