அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்

author
0 minutes, 1 second Read
This entry is part 6 of 16 in the series 24 அக்டோபர் 2021

 

மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்தோர் முற்றத்தில்   “ கதை எழுதுவோம் வாரீர்  “ அரங்கு !

அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “     

                           வாசிப்பு அனுபவம்

                                       செல்வி அம்பிகா அசோகபாலன்

மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த  மூத்தோர் முற்றம் மெய்நிகர் நிகழ்ச்சியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கதை எழுதுவோம் வாரீர் அரங்கில், கனடாவில் வதியும் பிரபல எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கால் மனிதன் என்னும் சிறுகதை பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை செல்வி அம்பிகா  அசோகபாலன் பகிர்ந்துகொண்டார்.

செல்வி அம்பிகா அசோகபாலன்,  சிட்னியில்  மக்குவாரி பில்ஸ் உயர்தர பாடசாலையில் பத்தாம் ஆண்டிலும், ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தில் பதினொறாம் ஆண்டிலும் கல்வி கற்கின்றார்.  அடுத்த வருடம் உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக  தோற்றவிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும்   திரு, திருமதி அசோகபாலனின் புதல்வியான இவர், இந்த நாட்டில் பிறந்து தமிழையும் ஒரு பாடமாக கற்றுவருபவர்.

அத்துடன் கலை, இலக்கியத்துறையிலும் ஆர்வம் மிக்கவர். இவரது ஆசிரியரான  சிட்னியில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலரும் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினருமான திரு. திருநந்தகுமார் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து உரையாற்றினார்.

மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பின் தலைவர் திரு. நவரத்தினம் வைத்திலிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கு தடையின்றி முதியோர் முற்றம் நிகழ்ச்சி மெய் நிகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் மூத்த – இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்தும்  அவுஸ்திரேலியா மாநிலங்களிலுமிருந்தும் பலர் இணைந்துகொள்கின்றனர்.

இங்கு பிறந்த குழந்தைகளின் நிகழ்ச்சிகள் உட்பட மூத்தவர்கள் பங்கேற்கும் அரங்குகளும் இடம்பெறுவதனால்,  தலைமுறைகளுக்கிடையிலான உறவுப்பாலமாகவும் விளங்குகிறது.

நேற்றைய முற்றத்தில் திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

திருச்சியிலிருந்து திரு. ஈகைவரசன் அய்யா, மெல்பனிலிருந்து சைவப்புலவர் கல்லோடைக்கரன், மற்றும் எழுத்தாளர் ஶ்ரீ மகாதேவ ஐயர்  ஜெயராம சர்மா ஆகியோரின் உரைகளையடுத்து எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி ஒருங்கிணைக்கும் கதை எழுதுவோம் வாரீர் அரங்கில் நேற்றைய தினம் செல்வி அம்பிகா அசோகபாலன்  கனடாவில் வதியும்  பிரபல எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும்  அறிமுகப்படுத்தியவாறு  தனது வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் முத்துலிங்கம் அவர்களின் படம், மற்றும் அவர் எழுதிய நூல்களின் முகப்பு ஆகியனவும் அரங்கில் இணைந்தவர்களுக்கு காணொளியில் காண்பிக்கப்பட்டது.

செல்வி அம்பிகா, தனது வாசிப்பு அனுபவத்தை இவ்வாறு சமர்பித்தார்:

 “ நான் சிறுவயதில் இருந்தே பாட்டி வடை சுட்ட கதை, தென்னாலி ராமன் கதை போன்ற சிறுவர் கதைகளை வாசித்துள்ளேன். இந்தப் புத்தகங்களை நான் வாசித்தபோது, அவற்றில் கூறப்பட்ட பொருள், நகைச்சுவை, எழுதிய விதம், போன்றவற்றை ரசித்துள்ளேன். 

அண்மையில் நான் வாசித்தது ஐந்து கால் மனிதன் என்ற சிறுகதை ஆகும்.  ஹோம்புஸ் தமிழ் பாடசாலையில் பதினோராம் வகுப்பில் நான் படித்துக்கொண்டிருக்கிறேன். 

கற்றலின் ஒரு பகுதியாக, இரண்டாம் தவணையில், மூன்று எழுத்தாளர்களின் சிறுகதைகளுக்கான இணைப்புக் கொடுக்கப்பட்டது. அவற்றில் இருந்து ஏதாயினும் மூன்று சிறுகதைகளை நாம் வாசித்து எமது அனுபவத்தை எழுதவேண்டும். எனக்கு இந்தக் கதையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கதையின் தலைப்பை பார்த்த பொது “அது என்ன, ஐந்து கால் மனிதன்?” என்ற கேள்வி எழுந்தது. அதனை அறியும் ஆவலில் இந்தக் கதையை நான் தேர்ந்தெடுத்து வாசித்தேன். 

இந்தக் கதையில் ஹெலனும் அவருடன் உரையாடுபவரும் முக்கிய பாத்திரங்கள். பல்பொருள் அங்காடி எனப்படும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே துப்புரவாக்கும் பெண், ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஒருவர், அவரது தோற்றத்தையும், அவரது கண்ணில் வெளிப்பட்ட துயரத்தையும் காண்கிறார்.  முன்பு ஒரு போதும் அப்படிக் காணாததால், அவருடன் பேசத் தொடங்குகிறார்.

அப்போது அந்தப் பெண் தான் ஏன் இன்னும் துப்புரவுப் பணியில் இருக்கிறேன் என்பதையும், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் கூறத்தொடங்குகிறாள். ஹெலன் பதின்மூன்று வயதில், கனடாவுக்கு வந்ததாகவும், அவள் பிறந்தது கிரேக்க நாடு என்றும், தான் பிறந்த போது மிகவும் அழகாக இருந்ததனால், அவரது தந்தை, ரோம இதிகாசத்தில் வரும், பேரழகியின் பெயராகிய ஹெலன் என்ற பெயரை வைத்தார் என்றும் கூறுகின்றாள்.. 

ஹெலன் குடும்பத்தில் மொத்தம் ஏழு பிள்ளைகள். ஹெலன் ஆறாவது பிள்ளை. அவரது தந்தை நன்றாக, குறி தவறாமல், வேட்டை ஆடக் கூடியவர், ஆனால் , அவருக்கு ஒரு கால் இல்லை. அவர் எப்பொழுதும் குதிரையில் அமர்ந்திருப்பார். குதிரையின் நான்கு கால்களையும், அவருடைய ஒரு காலையும் கொண்டு, அவரை ஐந்து கால் மனிதன் என்று எல்லோரும் அழைத்தார்கள்.

ஹெலன் படிப்பிலே கெட்டிக்காரியாக இருந்தாள். அவளுடைய குடும்பத்தில் வருமானம் குறைந்து, அதனால் கஷ்டப்பட்டனர். அப்போது அவளுடைய சின்னம்மாவின் உதவியுடன் கனடாவுக்கு, படிப்பதற்காக ஹெலனைத்  தந்தை அனுப்பினார். ஆனால், மொன்றீயலுக்குச் சென்ற இரவே, சின்னம்மா, தன்னை  படிப்பிப்பதற்காக அழைக்காது,  ஒரு வேலைக்காரியாக்கவே அழைத்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்துகொண்டாள். 

ஐந்து வருடங்களின் பின்னர் பதினெட்டு வயதில் தன் சின்னம்மா வீட்டை விட்டு வெளியேறி பேருந்தில், டொரொண்டோவுக்கு செல்கிறாள். அங்கே பொத்தான் தைக்கும் வேலை செய்து, தன்னுடன் வேலை செய்த ஒருவரை மணமுடிக்கிறாள். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கணவன் இறந்த பின்பு, மகனை நன்றாகப் படிப்பிக்கவேண்டும் என்று கஷ்டப்பட்டார். ஆனால்,  வளர்ந்த பின் ஹெலனுடைய மகனோ, பத்து நாள் மட்டும் தெரிந்த பெண்ணை மணமுடித்துக்கொண்டு வாத்து சுடுவதற்காக தாயை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டான். பின்பு தன்னுடன் ஒரு வித தொடர்பும் கொள்ளவில்லை என்றும் கூறி ஹெலன் வருத்தப்படுகிறார். 

ஹெலன் பதின்மூன்று வயதில், துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சுத்தம் செய்யத்தொண்டங்கியதாகவும்  இன்று ஐம்பத்தியைந்து வயதிலும் அதையே இன்னும் மோசமாக செய்கின்றேன் என்றும் கூறுகிறாள்.

இந்தக் கதையின் மூலமாக அ.முத்துலிங்கம் அவர்கள், ஒரு சிறு பெண் எவ்வாறு தனது உறவினரான சின்னம்மா மூலமாக ஏமாற்றப்பட்டாள் என்பதையும், அதில் இருந்து எவ்வாறு வெளியேறினார் என்பதையும் உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார். 

இந்தக் கதையை வாசித்த போது புதிதாக சில விடாங்களைக் கற்று அறிந்துகொண்டேன்.  

– ஹெலன் தன் தந்தை மேல் வைத்திருந்த அன்பும் மரியாதையையும் –

– ரோமா இதிகாசத்தில் இடம்பெறும் அழகியான ஹெலனையும் –

அதுமட்டுமல்ல,  இந்தக் கதையில் வந்த சம்பவங்கள் என்னை கவலைப் படச் செய்தன. இதில் இருந்து நாம் மற்றவரிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். 

இந்தக் கதையை வாசித்த போது என்னை கவர்ந்த விடயம், ஹெலனின் தந்தை ஒரு கால் இல்லாத போதும் கடைசி வரையிலும் தனது குடும்பத்தை அக்கறையுடனும் அன்புடனும் கவனித்துக்கொண்டமையாகும். 

இந்த கதையை நமக்குத் தந்த அ.முத்துலிங்கம் அவர்கள், 1937 ஆம் ஆண்டு, தை மாதம், பத்தொன்பதாம் திகதி, யாழ்ப்பாணம்  கொக்குவிலில் பிறந்தார். 

அவர் கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான படிப்பை முடித்தார். 

இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தில் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றார், 

எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள் பேராசிரியர் கைலாசபதியால், எழுத்துலகத்துக்கு அறிமுகமானார். தினகரன் சிறுகதை போட்டியில், அக்கா என்ற சிறுகதையை எழுத்தி முதல் பரிசைப் பெற்றார். அதைத் தொண்டர்ந்து, சிறு கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தகமதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகின்றார். இவர் தற்போழுது தனது குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார். 

அ. முத்துலிங்கம் என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் ஐந்து கால் மனிதன் என்ற சிறுகதையின் வாசிப்பு அனுபவத்தை உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்வதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுமையோடு என் அனுபவங்களை செவிமடுத்த உங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றி. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் என்ற அந்தப் பெரியாரை வாழ்த்தி வணங்குகிறேன். 

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கும், கேசி தமிழ் மன்றத்தினருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

கேசி தமிழ் மன்றத்தின் முதியோர் முற்றம் நிகழ்ச்சியின்  அரங்குக்குத் தலைமை தாங்கும் திரு.  சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தும் திரு.  நவரத்தினம் ஐயா அவர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் பெரியோர்களுக்கும், நண்பர்களுக்கும் என் வணக்கம்.

கடந்த காலங்களில் எழுத்தாளர்கள் ஆரூரான் சந்திரன், தேவகி கருணாகரன், தாமரைச்செல்வி ஆகியோரின் படைப்புகளும் இந்த கதை எழுதுவோம் வாரீர் அரங்கில் பேசுபொருளாக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசகர்களின்  தேர்ந்த வாசிப்பு அனுபவத்தை பகிரவும்,  படைபிலக்கியத்துறையில் ஈடுபட முன்வருபவர்களின்  எழுத்தாற்றலை வளர்ப்பதற்காகவும் குறிப்பிட்ட கதை எழுதுவோம் வாரீர் அரங்கு நடைபெற்று வருகிறது.

நேற்றைய நிகழ்ச்சி திருமதி செல்வராணி செல்லப்பாவின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.

—0—

 

Series Navigationகுருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)சூட்சுமம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *