ஜப்பானிய சிகோ கதைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 13 in the series 14 நவம்பர் 2021

 

அழகர்சாமி சக்திவேல்

 

கதை கதையாம் காரணமாம்

காரணத்தில் ஓர் தோரணமாம்

தோரணத்தில் ஓர் துக்கடாவாம்

துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்

வைக்கோல் எடுத்து மாட்டுக்குப் போட்டா

மாடு பால் கொடுத்ததாம்

                                                      (யாரோ)

 

கதைகள் எப்படித் தோன்றியிருக்கும் என்று, நம்மில் பலர் ஆராய்ச்சி செய்து, அந்தக் கதைகள் தோன்றிய விதத்தையே, பல கதைகளாக, நமக்குப் புத்தகங்களில் எழுதிவைத்து இருக்கிறார்கள் என்பது, ஒரு நகைச்சுவையான விசயம்தான். ஆதியில் ஒரு மனிதன், தான் சந்திக்க நேர்ந்த ஒரு சம்பவத்தை, இன்னொரு மனிதனுக்கு, கோர்வையாக விவரித்தபோது, கதை பிறந்தது என்பது, ஒரு பொதுவான கருத்து. அப்படிப் பிறந்த அந்தக் கதைகளை, தான் வாழ்ந்த குகைகளிலும், கற்களிலும், மனிதன், சித்திரங்களாகச் செதுக்கி வைத்தான்.

 

பின்னர் தனக்கென ஓர் எழுத்து வடிவம் கண்டுபிடித்த நாளில் இருந்து. தான் சொல்லவந்த கதைகளை, அவன் வாழ்ந்த அதே குகைகளில், எழுத்துக்களாக எழுதி வைத்தான். அதன் தொடர்ச்சியாக, விலங்குகளின் தோல், பனை ஓலை போன்ற இன்னபிற பொருட்களைச் சுவடியாக்கி, தான் சொல்லவந்த கதைகளை, ஒரு காலத்தில் எழுத ஆரம்பித்தான்.

 

சில கதைகளோ, கிராமத்துப் பெரியவர்கள், தங்களோடு வாழ்ந்த சிறியவர்களுக்குச் சொல்லிச்சென்ற, வாய்வழிப் பகிரப்பட்ட, வழிவழிக் கதைகள் ஆக அமைந்து போனது. அந்த வழிவழிக் கதைகள், தலைமுறை தலைமுறையாய்த் தொடர்ந்தது. நாம் வாழும் நாகரிக காலத்தில், இவை போன்ற கதைகள், புத்தக வடிவம் பெற்ற போதும், இன்றும், நாம், பாட்டி பேரனுக்குச் சொல்லும் வழிவழிக் கதைகளாய், பல கதைகளை வைத்து இருக்கிறோம். அப்படி, வழிவழியாகச் சொல்லப்பட்டு, சித்திரக்கதைகளாக மாறி, இன்றைய ஜப்பானிய இலக்கியத்திலும் இடம் பெற்றுக்கொண்டு இருக்கும், ஓர் வழிவழிக் கதைகள்தான், நாம் இந்தக் கட்டுரையில் பேசப்போகும், ஜப்பானிய சிகோ கதைகள் ஆகும்.

 

“வழிவழிக் கதைகள்தானே, இந்த ஜப்பானிய சிகோ கதைகளுக்கு மட்டும், அப்படி என்ன தனிச்சிறப்பு இருக்கப் போகிறது?” என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஜப்பானின் புத்தமடங்களில் வாழ்ந்த புத்த பிக்குகளுக்கும், அதே மடத்தில் வாழ்ந்த, சிகோ என்ற, பதின்ம வயது ஆண்களுக்கும் இடையே இருந்த, ஓரினச்சேர்க்கை உறவு குறித்துப் பேசும் இந்த ஜப்பானிய சிகோ கதைகள், மற்ற வழிவழிக் கதைகளில் இருந்து மாறுபட்டு, ஓர் தனித்துவம் பெறுகிறது என்பது உண்மைதானே?

 

நாம் இந்தக் கட்டுரையில் சொல்லப்போகும், ஜப்பானிய சிகோ கதைகள், புத்தபிக்குகள் குறித்துப் பேசுவதாலும், புத்தமதம் குறித்துப் பேசுவதாலும், மதங்கள் தோன்றிய விதம் குறித்தும், அவை ஒன்றை ஒன்று, ஆக்கிரமம் செய்த விதம் குறித்தும், புத்தமதம் குறித்தும், இந்தக் கட்டுரையில், கொஞ்சம் விரிவாகப் பார்த்த பின்னர், நாம் சிகோ ஓரினச்சேர்க்கை கதைகளுக்குள் செல்வோம்.

 

ஆதி மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனிதனுக்குள், தன்னை மீறிய ஒரு சக்தி ஒன்று, இந்த உலகத்தில் இருப்பதாக, ஒரு நம்பிக்கை பிறந்தது. அப்படித் தன்னை மீறிய அந்த சக்திக்கு, அவன் கடவுள் எனப் பெயரிட்டான். நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று, இப்படித் தன்னை மீறிய சக்திகளில் எல்லாம், அவன் நம்பிய கடவுள் இருப்பதாக, அவன் தீர்மானித்துக் கொண்டான். தான் நம்பும் அந்தக் கடவுள் உணர்வினை, அவன், சக மனிதரோடு பகிர்ந்து கொண்டான். அவனோடு ஒத்த கருத்துக்கள் உள்ளவர் ஒன்று கூடினர். இப்படியாக, மதம் பிறந்தது.

 

அப்படி ஒன்றுபட்ட, கடவுள் நம்பிக்கை உடைய மனிதர்கள், தாம் வாழும் நிலப்பரப்பு, தட்பவெப்பம், உணவு, பிறப்பு, இறப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப, வாழும் ஒழுக்க நெறிகளைப் படைத்தனர். அந்த வாழும் ஒழுக்க நெறிகளை, தாங்கள் கண்டுபிடித்த மதங்களுக்குள் இட்டு நிரப்பினர். அந்த கடவுள் நம்பிக்கை உடைய மனிதர்கள் சொன்ன ஒழுக்கநெறிகளைக் கடைபிடிக்காதவன் நிந்திக்கப்பட்டான். பாவிகள் ஆக்கப்பட்டான். இப்படியாக, மதங்கள், மனிதர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்தது.

 

கடவுள் நம்பிக்கை உள்ள சில மனிதர்களுள், வலிமை படைத்தவன் என நம்பப்பட்ட சிலர், கடவுளுக்கு இணையாக உயர்த்தப்பட்டனர். சில இடங்களில், அப்படிப்பட்ட வலிமை படைத்தவனே, கடவுள் என்றும் அழைக்கப்பட்டான். கடவுளும், கடவுளின் தூதர்களும், இப்படியாகத் தோன்றினர். மதங்கள், இவர்களின் வழியாக, மனிதனின் சிந்தனைக்குள், பலமாக வேருன்றி, மரமாகத் தழைத்து நின்றது.

 

இப்படி உலகத்தின் பல்வேறு இடங்களில், அந்தந்த வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பத் தோன்றிய மதங்கள், அவை தோன்றிய நிலப்பரப்பில் இருந்து, உலகத்தின் இன்னொரு நிலப்பரப்புக்கு, நகரத் தொடங்கின. நிலம் வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த, உலகத்து மனிதர்கள் வழியாக, அவர் சார்ந்த மதங்கள், ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ளும் தருணம் உருவானது. ஒரு நிலப்பரப்பு மனிதர்கள், உணவு, ஆடை போன்ற, தங்களின் பல வாழ்க்கைத் தேவைகளுக்காய், இன்னொரு நிலப்பரப்பை ஆக்கிரமித்தபோது, ஒரு மதம், இன்னொரு மதத்தை, ஆக்கிரமம் செய்தது. அப்படி ஆக்கிரமிப்பு செய்த மதம், தாங்கள் தோன்றிய இடத்தின் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப, உருவாக்கிய மத ஒழுக்க நெறிகளை, ஆக்கிரமிக்கப்பட்ட மதத்தின் மீது, பல வழிகளில், திணிக்க ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட மதம், அதை எதிர்த்தது. இப்படியாக, மதங்களுக்கு இடையேயான போராட்டம், மதவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டது. 

 

மதங்களுக்கு இடையேயான போராட்டத்தில், சில மதங்கள் தொலைந்து போயின. சில மதங்கள், குறுகிப் போயின. பெரிய மீன், சின்ன மீனை விழுங்கி உயிர்வாழ்தல் போல, சில மதங்கள், சின்னச் சின்ன மதங்களின் முக்கியமான கருத்துக்களை, தனது சொந்தமாக்கிக் கொண்டு, அந்த சின்ன மதத்தை அழித்து, தான் செழித்துத் தழைத்து நின்றன. அப்படிப்பட்ட மதங்களுக்கு இடையேயான போராட்டத்தில், போராடி, இன்றளவும் நிலைத்து நிற்கும், பெருமதங்கள், நான்கு ஆகும். 1. கிறித்துவ மதம். 2. இஸ்லாமிய மதம். 3. இந்து மதம். 4. புத்த மதம் ஆகிய இந்த நான்கு மதங்களே, உலகெங்கும், இப்போது பரவிக் கிடக்கின்றன. மதங்களை ஒப்பிடுவது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். எனினும், மூன்றாம் பாலினச் சிந்தனைகளைப் பற்றி எடுத்துரைக்க நினைக்கும், எனது இந்தக் கட்டுரை, சில விசயங்களுக்காக, மேலே சொன்ன நான்கு மதங்களை, ஒப்பிட நினைக்கிறது.

 

மேலே சொன்ன நான்கு மதங்களில், முதல் இரண்டு மதங்கள், கிட்டத்தட்ட ஒரே இடத்தில், அதாவது, மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய மதங்கள் ஆகும். அடுத்த இரண்டு மதங்களான, இந்து மதமும், புத்த மதமும் இந்தியாவில் தோன்றிய மதங்கள் ஆகும். அப்போதைய சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் தொகை, இந்தியாவோடு ஒப்பிடுகையில், குறைவுதான். எனவே, மக்கள் தொகையைப் பெருக்க, மத்திய கிழக்கில் தோன்றிய அந்த இரண்டு முதல் மதங்கள், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை, தனது மதங்களின் ஒரு ஒழுக்கநெறியாய் சேர்த்துக்கொண்டது. எனவே, மனிதனின் விந்து, இனப்பெருக்கத்துக்காக மட்டுமே உபயோகம் ஆகவேண்டுமே அன்றி, சுய மைதுனம், ஓரினச்சேர்க்கை போன்ற செயல்களால், வீணாக்கப்படுவது தவறு என்று, மேலே சொன்ன அந்த இரண்டு மதங்கள், தத்தம் மத ஒழுக்கநெறியாய் நிர்ணயித்துப் பேசியது.

 

ஆனால், மக்கள் தொகை அதிகமாக உள்ள, இந்தியாவில் தோன்றிய, இந்து மதமும், புத்த மதமும், இனப்பெருக்கம் போன்ற விசயங்களில் அவ்வளவு கவனம் காட்டவில்லை. மாறாய், இம்மை, மறுமை, வீடு பேறு, துறவறம், புலால் உண்ணாமை போன்ற ஆன்மீக விசயங்களில், அதிக கவனம் செலுத்தியது. இந்த ஒரு காரணத்தால், இந்த இரண்டு மதங்களின், ஆரம்ப கால ஒழுக்க நெறிகளில், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவமோ, ஓரினச்சேர்க்கை குறித்த எதிர்ப்பு நிலையோ, பெரிதாய் ஒன்றும் குறிப்பிட்டு பேசப்படவில்லை.

 

இன்னொரு வகை ஒப்புமையில், மத்திய கிழக்கில் தோன்றிய, மேலே சொன்ன, முதல் இரண்டு மதங்களை, நாம், மிகவும் வரையறுக்கபட்ட மதங்கள் என்று குறிப்படலாம். அதாவது, அந்த இரண்டு மதங்களின், ஒழுக்க நெறிகளுக்கென, பைபிள் போன்ற, ஒரு குறிப்பட்ட, வரையறுக்கப்பட்ட மறைநூல்கள், அந்த மதங்கள் ஆரம்பித்த நாட்களில் இருந்தே இருக்கின்றன. காலத்தின் சூழலுக்கு ஏற்ப, புதிதாய் ஒழுக்க நெறிகள் சேர்க்கப்படுவதற்கு, அந்த மத நூல்கள், ஒருபோதும் இடம் தருவதில்லை. மாறாய், புதிதான வாழ்க்கை ஒழுக்க நெறிகளுக்கும், மேலே சொன்ன மறைநூல்களில் சொல்லப்பட்ட விசயங்களின் அடிப்படையிலேயே, விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் தோன்றிய இந்து மதத்திற்கும், புத்த மதத்திற்கும், இது போன்ற, நிர்ணயிக்கப்பட்ட வரையறைகள், எதுவும் இல்லை.

 

சமவெளியிலும், காட்டிலும், மேட்டிலும், பள்ளத்திலும், அதனதன் தன்மைக்கு ஏற்ப, வளைந்து நெளிந்து சுழித்து ஓடும், கட்டுக்கடங்காத ஒரு பெரு நதி போல், புத்தமதமும், இந்து மதமும், அதன் கொள்கைகளை, அவ்வப்போது மாற்றி மாற்றி, இந்த உலகத்தில் பயணித்தன, இப்போதும் பயணிக்கின்றன என்பது, அந்த மதங்களின் தனித்துவம் ஆகும். ஓரினச்சேர்க்கை விசயத்திலும், இந்த இரண்டு மதங்களும், காலத்துக்கு ஏற்றவாறு, மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இருந்தன என்பது, ஒரு மறைக்க முடியாத, ஒரு வரலாற்று உண்மை ஆகும். அப்படி, மாற்றி மாற்றிப் பேசப்பட்ட, புத்த மதத்தின், மூன்றாம் பாலினக் கொள்கைகளை, இந்தக் கட்டுரை பேச நினைப்பதால், புத்தமதம், மூன்றாம் பாலினம் குறித்து, என்ன சொல்கிறது என்பதை, இனி, இந்தக் கட்டுரையில் காண்போம்.

 

அனத்தா, அணிக்கா, துக்கா ஆகிய இந்த மூன்று விசயங்கள்தான், புத்த மதத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை நாம் விரித்தால், “இவ்வுலகில் எதுவும் நிலைத்ததல்ல” என்ற பொருள்படும் அனத்தா, “அழியாத ஆன்மா என்பது இவ்வுலகில் கிடையாது” என்ற பொருள்படும் அணிக்கா, “துன்பம், இந்த உலகில் எப்போதும் இருக்கிறது” என்று சொல்லும் துக்கா, என நாம் விளக்கம் சொல்லலாம். கிமு ஆறாம் நூற்றாண்டில் தோன்றப்பட்டதாகக் கருதப்படும் புத்தர், ““ஆசைகளே துன்பத்திற்குக் காரணம், எனவே ஆசைகளை, அறவே ஒழியுங்கள்” என்று, பொதுவில்தான் சொல்லிவிட்டுப் போனார். குறிப்பாகச் சொன்னால், காம ஆசைகள் என்பது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டுமே நிலவவேண்டும் என்று, அவர் உறுதியாகச் சொல்லிவிட்டுப் போகவில்லை. எனவே, புத்தரின் போதனைகளில், ஓரினச்சேர்க்கை என்ற ஒன்று பற்றி, எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

 

புத்தருக்குப் பின், அவரைப் பின்பற்றி வாழ்ந்த புத்தரின் சீடர்கள், துறவிகளாகவும், பிச்சாந்தேகிகளாகவும், அங்கும் இங்கும் அலைந்து, ஓர் நாடோடி வாழ்க்கையையே பின்பற்றி வாழ்ந்து வந்தமையால், புத்தபிட்சுகள் ஒன்று கூடி உருவாக்கிய சங்கம் என்ற புத்த குருகுலம் தோன்றிய காலம், நமக்கு சரிவரப் புலப்படவில்லை. எனினும், புத்தபிக்குகள் ஒன்றுகூடி வாழும், புத்தசங்கம் தோன்றிய பின்னரே, குருகுலத்தில் தங்கும் புத்தபிக்குகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய, வினயா என்ற வழிகாட்டி நூல்,  முதலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

கிமு நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும், மேல்சொன்ன வினயா என்ற அந்த புத்தமத வழிகாட்டியில், புத்தபிக்குகள், கீழ்கண்ட நான்கு இனங்களோடு உடலுறவு கொள்ளுதலைத் தடை செய்கிறது. அவையாவன.

  1. ஆண்களோடு உடலுறவு பேணுதல்
  2. பெண்களோடு உடலுறவு பேணுதல்.
  3. உபத்யோ வியாஞ்சனகா என்ற ஆண் உறுப்பும், பெண்ணுறுப்பும், தங்கள் உடலில் கொண்டவர்கள்.
  4. பாண்டகா என்ற, அதிகப் பெண்தன்மை கொண்ட ஆண்கள்

 

ஆனாலும், அந்த வினயா என்ற வழிகாட்டி, புத்தபிக்குகளின் வாழ்க்கை நெறி மட்டுமே பேசுவதால், சாதாரண மக்களின் வாழ்க்கை நெறிக்குள், பின்னிப்பிணைந்து இருந்த, ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்-பெண் ஓரினச்சேர்க்கை குறித்து, அது எதுவும் பேசவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால், மேலே பட்டியலிடப்பட்ட உடலுறவு வகைகளில், மூன்றாம் வகையான உபத்யோ வியாஞ்சனகா பற்றியும், நான்காம் வகையான பாண்டகா பற்றியும், வினயா வழிகாட்டிக்கு விளக்கவுரை கொடுத்த பல புத்தபிக்குகள், அவரவர் மனதுக்குத் தோன்றிய கருத்துக்களைச் சொல்லிவிட்டுச் சென்றனரே அன்றி, ஓரினச்சேர்க்கை குறித்து பெரிதாய் எதுவும் விளக்கம் தரவில்லை.

 

புத்தமதத்தின் பெரும்பிரிவுகளாய், நாம் மூன்று பிரிவுகளைச் சொல்லலாம். ஒன்று இந்தியா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாட்டு மக்கள் பின்பற்றும், பழமை நிரம்பிய தேரவாத பௌத்தம். இரண்டு, சீனா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாட்டு மக்கள் பின்பற்றும் மகாயான பௌத்தம். மூன்று, திபெத், மங்கோலியா போன்ற நாட்டு மக்கள் பின்பற்றும் வச்சிரயான பௌத்தம். இதில், ஓரினச்சேர்க்கை வாழ்க்கை குறித்து, இப்போதும், அதிக எதிர்மறை கருத்துக்களைக் கொண்டிருப்பது, தேரவாத பௌத்தம் மட்டுமே. மகாயான பௌத்தமும், வச்சிரயான பௌத்தமும், ஓரினச்சேர்க்கை வாழ்க்கையை, பெரிதாக ஒன்றும் எதிர்த்துப் பேசவில்லை.

 

திபெத்தின் மதத்தலைவர் ஆன, தலாய் லாமா, ஓரினச்சேர்க்கையை ஆதரித்தும், எதிர்த்தும் பேசி இருக்கிறார். “எல்லா ஆசைகளும் பாவத்திற்கே இட்டுச்செல்லும் என்ற வகையில், ஓரினச்சேர்க்கையும், அது போன்ற ஒரு ஆசைப்பாவமாக நாம் கருதவேண்டும்” என்று, ஓரினச்சேர்க்கையை, ஆண்-பெண் காமம் போன்றே, மற்றொரு காமம் என, ஒரு உரையில் உரைத்து இருக்கிறார். இந்து மதத்தின் மகா காளி வடிவத்தை, மா நிங் என்ற பெயரில், திபெத்திய மதம் வழிபடுகிறது. மா நிங் என்ற அந்த மகா காளியின் வடிவம், ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத ஒரு கடவுள் வடிவமாக நினைத்து, திபெத்திய புத்தமதம், இன்றளவும், வழிபட்டு வருகிறது.

 

தாய்லாந்து நாட்டைப் பொறுத்தவரை, அது பழமை நிரம்பிய, மகாயான பௌத்தத்தைப் பின்பற்றிய போதும், ஓரினச்சேர்க்கை விஷயத்தில், அது இலங்கை ;போன்ற நாடுகளில் இருந்து மாறுபட்டே இருக்கிறது. மகாயான புத்தமதமே, தாய்லாந்து நாட்டு மக்கள், பெருமளவில் பின்பற்றினாலும், அந்த நாடு, ஓரினச்சேர்க்கையை, முற்றிலும் அங்கீகரித்து இருக்கிறது. எனினும், தாய்லாந்தின் புத்தசங்கங்கள், ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழும் புத்தபிக்குகளை மட்டும், வன்மையாகக் கண்டிக்கிறது. தாய்லாந்தின், புத்த சங்கங்களில், நிறைய ஓரினச்சேர்க்கை புத்தபிக்குகள், ஆரமபத்தில் இருந்து இருக்கிறார்கள். அது போன்ற 1000 புத்த பிக்குகள், 1989-இல் புத்த சங்கத்தில் இருந்து நீக்கபட்டு இருக்கிறார்கள். இருப்பினும், இப்போது அதற்கான எதிர்ப்புக்குரல், தாய்லாந்து புத்தபிக்குகளிடம் இருந்து, அங்கங்கே ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

 

ஜப்பானைப் பொறுத்தவரை, அது, தாராளமயமாக்கப்பட்ட புத்தமதத்தையே, இன்றளவும் பின்பற்றி வருகிறது. கிபி பதினாறாம் நூற்றாண்டில், ஜப்பானுக்குள் காலடி எடுத்து வைத்த, சில கிறித்தவ மத ஆராய்ச்சியாளர்கள், ஜப்பானில் அப்போது இருந்த பல புத்தமடங்களில், ஓரினச்சேர்க்கை செய்யும் புத்தபிக்குகள் இருந்ததாக, தங்கள் குறிப்புக்களில், எழுதிவிட்டுச் சென்று இருக்கின்றனர். அத்தோடு, வழிவழியாகச் சொல்லப்பட்ட, ஜப்பானிய சிகோ கதைகளின் மூலமும், நாம் ஜப்பானிய புத்தபிக்குகளின் ஓரினச்சேர்க்கை வாழ்க்கையை உறுதி செய்து கொள்கிறோம். சரி, யார், இந்த ஜப்பானிய சிகோக்கள்?

 

ஜப்பானிய சிகோக்கள் என்பவர்கள், ஜப்பானிய புத்தமடங்களில் வாழ்ந்த, பதின்மவயது ஆண்கள் ஆவார்கள். கிபி எட்டாம் நூற்றாண்டில் இந்த சிகோ கலாச்சாரம் ஆரம்பித்து இருக்கலாம், என, வரலாறு நமக்குக் கூறுகிறது. கோவில் பணிகளுக்கு நேர்ந்து விடப்படும் இந்த சிகோக்களை, நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. முற்படுத்தப்பட்ட சிகோக்கள் – பணக்காரப் பெருங்குடி மக்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்து, புத்தமதக் கோவில்களுக்கு நேர்ந்து விடப்பட்ட, பதின்மவயது ஆண்கள். இந்த வகை ஆண்கள், புத்தமடங்களில் போதிக்கப்படும் நன்னெறிகளைக் கற்றுக்கொண்டு, ஒரு குறிப்பட்ட காலம் கழித்து, புத்தமடங்களை விட்டு வெளியேறி, மறுபடியும் தங்கள் இல்லம் செல்லலாம்.
  2. இடைநிலை சிகோக்கள் – புத்திசாலித்தனம் நிறைந்த பதின்மவயது ஆண்கள் மட்டுமே, இந்த இடைநிலை சிகோக்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் மட்டுமே, மடாலயங்களில், மற்ற புத்தபிக்குகளோடு சேர்ந்து, பாராயணம் போன்ற முதன்மை இறைப்பணிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வகை சிகோக்கள் மட்டுமே, வருங்கால புத்தபிக்குகளாக மாற, உரிமை கொண்டவர்கள்.
  3. கடைநிலை சிகோக்கள் – புத்தமத மடாலயங்களில், கூலி வேலை போன்ற சின்னஞ்சிறு பணிகள் செய்வோரின் பிள்ளைகள், குற்றம் புரிந்தவர்களின் பிள்ளைகள், இன்னபிற காரணங்களுக்காக, தாழ்த்தப்பட்டோரின் பிள்ளைகள் போன்றோர், இந்த கடைநிலை சிகோக்கள் ஆகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். மடாலயங்களில், குற்றேவல் வேலை செய்யும், இந்தவகை சிகோக்கள், புத்தபிக்குகளோடு சேர்ந்து, பாராயணம் போன்ற இறைப்பணிகள் செய்ய இயலாது.

 

மேலே சொன்ன இடைநிலை சிகோக்கள் மற்றும் கடைநிலை சிகோக்களில் இருந்துதான், சில புத்தபிக்குகள், தங்கள் ஓரினச்சேர்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், என வரலாறு சொல்கிறது.

 

சற்றே பெண்களைப் போன்ற கூந்தல் (நீளக் கூந்தல் அல்லது தூக்கிவாரிப் பின்னப்பட்ட கூந்தல்) அமைப்பும், வயதுக்கு வந்த பெண்கள் போன்ற உடை அமைப்பிலும் வளைய வந்து இருக்கும், இந்த இடைநிலை மற்றும் கடைநிலை சிகோக்களில் சிலர், சில புத்தமத பிக்குகளின், காமத்துணையாக இருந்து இருக்கிறார்கள்.

 

இந்த வகை சிகோக்கள் வாழ்ந்த, ஷிங்கோன் மற்றும் டென்டாய் புத்த மடாலயங்கள், மலைப்புறம் சார்ந்த மடாலயங்கள் ஆகும். இந்த வகை மலைப்புற மடாலயங்களில், பெண்களுக்கு அனுமதி இல்லாததால், அவ்விடங்களில், புத்தபிக்குகளால், ஓரினச்சேர்க்கை வாழ்க்கை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று வாதிடுவோரும், நம்மில் உண்டு. சிலர், புத்தபிக்குகளுக்கும், சிகோ ஆண்களுக்கும் இடையில் இருந்தது, தந்தை மகன் நேசமே என்றும் வாதிட்டு இருக்கிறார்கள். எது எப்படியோ, நாம் இப்போது சிகோ கதைகளுக்குள் செல்லலாம்.

 

ஜப்பானிய சிகோ கதைகளில், முதன்மை பெறுவது, அகினோ யோனோ நாக மோனோகடாரி என்ற கதை ஆகும். கதைப்படி, ஹீ என்ற மலையில், என்யாகுசி, ஒன்ஜோசி என்ற இரண்டு பெரு புத்த மடாலயங்கள் இருக்கின்றன. இரண்டு மடாலயங்களும், ஒன்றுக்கு ஒன்று, போட்டித்தன்மை மிக்கவை ஆக இருக்கின்றன. புத்தபிக்குவான கேய்கை, என்யாகுசி புத்தமடத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஒருநாள், கேய்கை புத்தபிக்குவின் கனவில், ஒரு அழகிய சிறுவயது வாலிபன் தோன்ற, அவன் அழகில், மயங்கிப் போகிறார், புத்தபிக்கு கேய்கை.

 

ஒருமுறை, ஆற்றோரம் இருக்கும், ஹீ மலையின் இன்னொரு புத்த மடாலயம் ஆன, ஒன்ஜோசிக்குச் செல்லும் கேய்கை, தான் கனவில் பார்த்த சாட்சாத் அதே வாலிபனை, உமேவாகா என்ற சிகோவாக, நேரே பார்த்து, அகமகிழ்ந்து போகிறார். புத்தபிக்கு கேய்கை, தனது விசுவாசமான வேலையாள் மூலம், உமேவாகாவிற்கு தூது அனுப்ப, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. அந்த இரவில், புத்தபிக்குவும், உமேவாகா என்ற அந்த சிகோ வாலிபனும், ஓரினச்சேர்க்கை இன்பம் துய்க்கிறார்கள்.

 

அதன்பிறகு, தனது காதலன் ஆன உமேவாகா வாலிபனைப் பிரிந்து, தனது மடத்திற்கு வந்து சேரும் புத்தபிக்கு கேய்கை, உமேவாகாவை நினைத்து, நினைத்து ஏங்கி, காதல் நோயால் வாடுகிறார். கேய்கை புத்தபிக்குவின் வேலைக்காரன் மூலம், நோய்ச்செய்தியைக் கேள்விப்படும் உமேவாகா, எப்படியாவது, கேய்கையை சந்தித்துவிடத் துடிக்கிறான். அதற்காக, தான் சார்ந்த புத்தமடமான ஒன்ஜோசியின் அனுமதி பெறாமலேயே, கேய்கை புத்தபிக்குவின் வேலைக்காரனுடன், கேய்கையை சந்திக்கக் கிளம்புகிறான் உமேவாகா.

 

அப்படிக் கிளம்பி வரும் வழியில், ஒரு நயவஞ்சக பூதத்திடம் மாட்டிக்கொள்கிறார்கள், உமேவாகாவும், கேய்கையின் வேலைக்காரனும். வயதான கோலத்திற்கு, தன்னை மாற்றிக்கொள்ளும் பூதம், உமேவாகாவை வழியில் எதிர்கொள்கிறது. வயதான தான், வழி தவறிவிட்டதாகவும், தன்னை வீடு கொண்டு சேர்க்கும்படியும் கெஞ்சும் பூதத்திற்கு மனமிரங்கும் உமேவாகா, பூதத்துக்கு உதவி செய்யப்போக, இதுதான் சமயம் என, உமேவாகா மற்றும் வேலைக்காரனைத் தூக்கிக்கொண்டு, பூதம், தனது இருப்பிடம் செல்கிறது.

 

உமேவாகா என்ற சிகோவைக் காணவில்லை என்ற செய்தி அறிந்த ஒன்ஜோசி புத்தமடம், பெருங்கவலையில் ஆழ்கிறது. சில நாட்களுக்கு முன்னர், தங்கள் புத்தமடத்திற்கு வந்த, புத்தபிக்கு கேய்கைதான், உமேவாகாவைக் கவர்ந்து சென்று இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒன்ஜோசி புத்தமடம், புத்தபிக்கு கேய்கை மீதும், அவர் சார்ந்த என்யாகுசி புத்தமடத்தின் மீதும் கோபம் கொள்கிறது. என்யாகுசி புத்தமடத்தை எதிர்க்க, ஒரு வியூகமும் வகுக்கிறது. கூடவே, உமேவாகாவின் அப்பாதான், உமேவாகா, புத்தபிக்கு கேய்கையோடு சேர அனுமதி அளித்திருப்பார் என நம்பி, அவர் தங்கி இருக்கும் வீட்டையும் அழிக்கிறது. நடந்ததை எல்லாம் கவனிக்கும் புத்தபிக்கு கேய்கையும், அவர் சார்ந்த  என்யாகுசி புத்தமடமும், ஒன்ஜோசி புத்தமடத்தை, அடித்து நொறுக்கி, விகாரம் தவிர, மற்ற எல்லாப் பகுதிகளையும், முற்றிலும் அழித்து விடுகிறது.

 

இதற்கிடையில், பூதத்திடம் மாட்டிக்கொண்ட உமேவாகா, எப்படியோ அதை ஏமாற்றித் தப்பித்து, தான் தங்கி இருக்கும் ஒன்ஜோசி புத்தமடம் வந்து சேருகிறான். அழிந்துபோன ஒன்ஜோசி புத்தமடத்தையும், நொறுங்கிப் போன, தனது தந்தை வீட்டையும் பார்க்கும் உமேவாகா, அளவில்லாத் துயரம் கொள்கிறான். தனது உயிரையும் மாய்த்துக் கொள்கிறான். உமேவாகாவின் சாவால், மனமொடிந்து போகும், அவனது ஓரினச்சேர்க்கைக் காதலனான புத்தபிக்கு கேய்கை, ஒரு புதிய புத்தமடத்தை நிறுவி, புது ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறார் என்று முடிகிறது கதை.

 

இரண்டாவது சீகோ கதையாக, நாம் கென்மு கதையை, இங்கே குறிப்பிட விரும்புகிறோம். கென்மு என்ற புத்தபிக்கு, ஒகாரா என்ற இடத்தில் வாழ்பவர். இறைவனை நோக்கிய உண்மைப் பாதை குறித்து அறிந்துகொள்ள ஆசைப்படும் கென்மு புத்தபிக்கு, சன்னோ என்ற கடவுளிடம், அனுதினமும், பிரார்த்தனை மேற்கொள்கிறார். பிறப்பு, இறப்பு என்ற நிலைகளில் இருந்து, தம்மை விடுவிக்கும்படி மன்றாடும் கென்முவின் பிரார்த்தனைக்கு மனமிரங்கும் சன்னோ கடவுள்,  கென்முவின் கனவில் ஒருநாள் தோன்றி, ஹீ மலையில் இருக்கும்,  என்யாகுசி புத்தமடத்திற்குப் போய், அங்குள்ள கொன்பன் சுடோ என்ற, பிரதமப் பிராத்தனை கூடத்தில், யகுசி புத்தரை நினைத்து பிரார்த்தனை செய்தால், நினைத்தது நடக்கும் என்று சொல்லி, கென்முவின் கனவில் இருந்து மறைகிறது.

 

சன்னோ கடவுள் சொன்னபடியே, என்யாகுசி புத்தமடத்தின், கொன்பன் சுடோ பிரார்த்தனைக் கூடத்தில், பிரார்த்தனை செய்யும் கென்மு, தனது பிரார்த்தனையை முடித்துவிட்டு, தனது சொந்த மடத்திற்குத் திரும்பும்போது, வெளியில், அதிகமாய்ப் பனி பெய்யத்தொடங்குகிறது. பனியின் தாக்கம் தாளாமல், அருகில் இருக்கும் புத்தமடத்தில் ஒதுங்கும் புத்தபிக்கு கென்மு, அங்கு வசிக்கும் ஒரு அழகிய சிகோ வாலிபன் ஆன, கன்மட்சுவைச் சந்திக்க நேர்கிறது. கன்மட்சுவின் அழகில் மயங்கும் புத்தபிக்கு கென்முவிற்கு, அளவற்ற காதல் பிறக்கிறது. சிகோ வாலிபன்  கன்மட்சு, நிக்கோ மலையில் இருக்கும் புத்தமடத்தில் இருந்து, இந்த மடத்திற்கு யாத்திரை வந்தவன் ஆவான்.

 

அடுத்த நாள், அளவு கடந்த காதலோடு, கன்மட்சுவைச் சந்திக்க வரும் புத்தபிக்கு கென்மு, கன்மட்சு, அந்த இடத்தை விட்டு, ஏற்கனவே புறப்பட்டுச் சென்ற செய்தி அறிந்து, பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார். அப்படி கன்மட்சு புறப்பட்டுச் செல்கையில், கென்முவிற்கு தான் எழுதிய, ஒரு காதல் கவிதைக் கடிதத்தை, அங்கு உள்ள பணியாளிடம் கொடுத்து விட்டுச் செல்ல, அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்கும் புத்தபிக்கு கன்மட்சு, அளவில்லாத் துயரம் அடைகிறார்.

 

எனது குளிர்ந்த தனிமைப் பயணத் தலையணையில்

இரவெல்லாம் விழித்திருங்கள்

கனவு நான் காண்பதில்லை ஆதலால்

என் கனவுகளில் நீங்கள் வருவதில்லை

 

என்ற கவிதையோடு, தான் வசிக்கும், நிக்கோ மலைக்கு வரும்படி எழுதப்பட்ட, கன்மட்சுவின் காதல் கடிதத்தோடு, தான் வசிக்கும் மடத்திற்கு வந்து சேருகிறார், புத்தபிக்கு கென்மு.

 

பனிக்காலம் முடிந்து, வசந்தகாலம் வருகிறது. தனது காதலன் கன்மட்சுவைத் தேடி நிக்கோ மலை செல்கிறார், புத்தபிக்கு கென்மு. ஆனால், நிக்கோ மலையில், ஏராளமான புத்தமடங்கள் இருக்க, அதில், எந்த மடத்தில், கன்மட்சு இருப்பான் என்று தெரிந்துகொள்ள முடியாமல், விழிபிதுங்கி நிற்கிறார், கென்மு. வழியில் சந்திக்கும் இன்னொரு புத்தபிக்கு மூலம், கன்மட்சு தங்கி இருக்கும், புத்தமடம் குறித்து அறிந்து கொள்கிறார். எனினும், இரவில், அந்த மடத்திற்குச் செல்வது, அவ்வளவு உசிதமானது அல்ல என்ற எண்ணத்தில், அருகில் இருக்கும் இன்னொரு மடத்தில் தங்குகிறார் புத்தபிக்கு கென்மு.

 

அந்த நள்ளிரவில், ஒரு இனிமையான புல்லாங்குழல் சத்தம், கென்முவை விழிக்கச் செய்கிறது. அப்படி அவர் விழித்தபோது, அங்கே கன்மட்சு, ஒரு படைக்கள வீரனைப்போன்ற, போர் உடையில் இருப்பதைப் பார்க்கும் கென்மு, ஆச்சரியம் கொள்கிறார்.

 

கென்முவை, அந்த நள்ளிரவில், தனது புத்தமடத்திற்கு அழைத்துச் செல்கிறான் கன்மட்சு. இருவரும், தனித்திருக்கும் அந்தச் சூழ்நிலையில், ஒரு கவிதை பாடுகிறான் கன்மட்சு.

 

இந்த மாலை மூடுபனியில்

இருவர் நம்மைப் பிரித்து நிற்கும்

இனியமணம் கமழும் இந்தப் பூக்கள்

இன்னொரு காலையில் நாம் காணமாட்டோம்

எனச் சொல்லி நிற்கும் கோலம்

 

என்ற கவிதை பாடியவுடன், மறைந்து போகிறான் கன்மட்சு.

 

அடுத்த நாள் காலையில், அறிமுகம் இல்லாத புத்தபிக்கு கென்முவை, தனது மடத்திற்குள் பார்த்து அதிர்ச்சியடையும் மடத்தின் தலைவரிடம், நடந்த உண்மைகளை கென்மு விவரிக்கிறார். அதிர்ந்து போகும் மடத்தலைவர், “கன்மட்சு, ஆறு நாளைக்கு முன்னரே இறந்துபோனான்” என்ற விஷயத்தை, கென்முவிடம் எடுத்துச்சொல்ல, கென்முவும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அப்போதுதான், நடந்த விபரங்களை, முழுமையாக, மடாதிபதி மூலம் தெரிந்து கொள்கிறார் கென்மு.

 

கன்மட்சுவிற்கு ஆறு வயது இருக்கும்போது, அவனது தந்தையை ஓனோடேரா என்பவன் கொன்றுவிடுகிறான். தனது தந்தையைக் கொன்ற ஓனோடேராவை, வாளால் அறுத்துப் பழிவாங்குகிறான் கன்மட்சு. அதற்குப் பழிக்குப்பழி வாங்கக் காத்திருக்கும், ஓனோடேராவின் மகன், ஆறு நாளைக்குமுன், மடத்திற்குள் புகுந்து, கன்மட்சுவைக் கொல்கிறான்.

 

தான் இறந்தபோதும் ஆவியாக வந்து, தன்னைக் காதலால் மகிழ்வித்த கன்மட்சுவின் மீது அளவற்ற நேசம் கொள்கிறார் புத்தபிக்கு கென்மு.

 

அதன்பின், கென்மு, கன்மட்சுவைக் கொன்ற  ஓனோடேராவின் மகனைச் சந்திக்க நேர்கிறது. ஓனோடேராவின் மகன், இப்போது இன்னொரு புத்தபிக்குவாக மாறி, சிகோ கன்மட்சுவிற்காகவும், தனது தந்தைக்காகவும் வேண்டிக்கொள்கிறான். இருவரும் சேர்ந்து, சன்னியாசிகளாக, பன்னெடும் காலம் வாழ்ந்து, புத்தர் திருவடியை அடைவதோடு, கதை முடிகிறது.

 

இப்படிப்பட்ட, புத்தபிக்குவிற்கும், சிகோ பதின்மவயது ஆண்களுக்கும் இடையில் நிலவும், ஓரினச்சேர்க்கைக் காதல் கதைகள், பல, ஜப்பானிய மொழியில் இருக்கின்றன.

 

இந்தக் கதைகளின் மூலம், நாம் தெரிந்து கொள்ளும் முக்கிய விசயங்கள் இரண்டு. ஒன்று, ஓரினச்சேர்க்கை, ஜப்பானிய புத்தமதத்தில், ஒரு சாதாரண அனுமதிக்கப்பட்ட விஷயம் ஆக இருந்து வந்து இருக்கிறது. இரண்டு, சிகோ என்ற அந்தப் பதின்மவயது ஆணோ, அல்லது அவனோடு இணை சேர்ந்த புத்தபிக்குக்களோ, இறைவனின் திருவடி சேர, அவர் வாழ்ந்த ஓரினச்சேர்க்கை வாழ்க்கை, ஒரு தடையாக இருக்கவில்லை என்பதையும், நம்மால் எளிதில் புரிந்துக்கொள்ள முடிகிறது.

 

இறுதியாய் ஒன்று. மதங்கள்தான், ஓரினச்சேர்க்கை ஆண்களின் வாழ்க்கைக்குத் தடையாக இருந்து இருக்கிறது. அதே மதங்கள்தான், ஓரினச்சேர்க்கை ஆண்கள், தங்களை மறைத்து வாழ, அடைக்கலமும் கொடுத்து இருக்கிறது என்ற விசயம், புத்த மதத்திற்கு மட்டுமல்ல. மேலே சொல்லப்பட்ட, அந்த நான்கு பெருமதங்களுக்கும் பொருந்தும்.

 

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationமனசு25 வது மணி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *