திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 11 of 13 in the series 14 நவம்பர் 2021

 

விஜய் இராஜ்மோகன்

 

சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் – ஒரு நான்கைந்து நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது போல இருக்கிறதே என்று.

 

திருமூலர் யார், அவர் எங்கே வாழ்ந்தார் எந்த ஊர், அவருடைய காலம் ஏது என்ற கேள்விகள் பல ஆண்டுகளாகவே எனக்கு இருந்தன. இன்றும் இவற்றுக்கெல்லாம் விடை கிடைக்கவில்லை. இன்றும் கிடைக்கவில்லை, ஆனால் இத்தனையாண்டுகள் பலவற்றையும் படித்தபின்பு தோராயமாக சில தோன்றுகின்றன.

 

திருமந்திரம் குறைந்தது ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கு அடிப்படையாக இருப்பது சோழப்பேரரசன் இராஜராஜனின் காலத்தில் இருந்த நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டத் தொகை. அதில் ஒரு பாடலில் திருமூலரின் வரலாற்றை சுருக்கமாக விவரிக்கின்றார் நம்பி:

 

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
   
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
   
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
   
யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல
   
னாகின்ற வங்கணனே

 

இதை அவர் எழுதி தற்போது ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. துல்லியமாக பதிவு செய்யப்பட்ட வரலாறு இல்லையென்றாலும் தோராயமாக அவர் பதிவு செய்திருக்கிறார். இத்தோராயம் என்று தோன்றுவது எதனால் என்றால் அவரது காலத்தில் இந்த கதைகளில் வட்டார நம்பிக்கைகளும், மிகைகளும், உருமாறிய கருத்துக்களும் புகுந்துவிட்டன என்பது அவ்வரலாறுகளை படிக்கும்போது தெரிகிறது எனவே நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த சைவப்பெரியோர்கள் இவர்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. மேலும் இங்கே ஒரு எளிய ஃபார்முலாவை நாம் பின்பற்றலாம் – ஒருவர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தால் மட்டுமே பொது சமூகம் அவரை ஞானியென்றோ, சித்தரென்றோ ஏற்கும், சமகாலத்தில் அவ்வுயரிய இடம் (பொதுவாக) கிடைக்காது.

 

இது சிலப்பதிகாரம் எழுதப்பட்ட விதத்தை போலத்தான். சிலப்பதிகாரம் நிகழ்வுகளுக்கு சில நூற்றாண்டுகள் கழித்தே இளங்கோவடிகள் அக்கதையைக் கேட்டு காவியமாக உருவாக்குகிறார். அது போல, பல்வேறு சிவனடியார்களின் கதைகளை கேட்டு அவற்றை திருத்தொண்ட ர் வரலாறாக தொகுக்கின்றார் நம்பியாண்டார் நம்பி.

 

இதில் ‘குரம்பை புகு’ என்பது மட்டுமே சற்றே மிகைப்படுத்தப்பட்ட அதிசய நிகழ்வு. எனவே சரித்திர ஆய்வுக்கு அதை மட்டும் ஒதுக்கிவிட்டு பார்த்தால் சாத்தனூர், யாதவகுலம் (கோக்குலம்), மேப்பவர் என்பதையும் சிவனை தமிழாக்கியவர் மூலன்பிரான் என் பதும் தெளிவாகிறது. இங்கே ஒன்றை சொல்லியாகவேண்டும் – திருமூலரை மிகவும் மதிக்கிறார் – அவரது கால்களை தனது சிரசில் வைத்து வணங்குகிறேன் என்கிறார் அப்போது சமூகத்தில் மிகவும் உயர்ந்த அடுக்கில் இருந்திருக்கக் கூடிய சைவக் குருக்களான, ஆதி சைவ அந்தணரான நம்பியாண்டார் நம்பி.

 

பின்பு நூறு, நூற்றைம்பது வருடங்கள் கழித்து பெரிய புராணம்  திருமூலரின் வரலாற்றை விரிவாக விவரிக்கின்றது. அதை இயற்றிய அருண்மொழித்தேவர் (என்கிற) சேக்கிழார், கிபி 12ம் நூற்றாண்டில், அதாவது இன்றைக்கு 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். (இரண்டாம்) குலோத்துங்கன் சோழன் அவையில் அமைச்சராக இருந்தவர். இப்படிச் சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை –  தசாவதாரம் படத்தில் சைவச் செறுக்குடன் விஷ்ணுவின் விக்கிரகத்தை கடலில் போடும் மன்னன் அல்லது இளையராஜாவின் கம்பீரமான இசையில் வரும் “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

என்றால் எல்லோருக்கும் புரிந்துவிடும்.

 

திருமூலரின் வரலாற்றை சொல்லும்போது சேக்கிழார் இவ்விஷயங்களை குறிப்பிடுகிறார்:

  1. சாத்தனூர் என்ற ஊரில் இருந்த மூலன் என்ற இடையர் குல இளைஞனின் உடலில் வடக்கே இமயமலையிலிருந்து வந்த ஒரு முனிவர் புகுந்துகொண்டார்.
  2. அவர் திருவாவடுதுறையில் இருந்த அரச மரத்தடியில் மூவாயிரம் ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கொன்றாக தமிழில் பாடல்களை பாடி சமூகத்திற்கு வழங்கிவிட்டு பின்பு தாம் இருந்துவந்த கயிலாய மலைக்கே திரும்பச் சென்றுவிட்டார்.

இதைப் படிக்கும்போது புரிந்துவிடும், அவர் சொல்லும் இந்த வரலாற்றில் இன்னும் சில அதிசயங்கள் புகுந்துவிட்டது புலப்படும். சாத்தனூரில் வாழ்ந்ததும், திருவாவடுதுறையில் வசித்து பாடல்களை இயற்றியதும் இடையர்குலமும் உண்மையாயிருக்கும் வாய்ப்புகள் அதிகம். இவற்றை மக்கள் கற்பனை செய்துகொள்ள அவசியம் ஏதுமில்லை. ஆனால், இமயமலையிலிருந்து வந்தது பின்பு மீண்டும் இமயமலை எய்தியது போன்றவை யோசிக்கவைக்கின்றன. இவற்றை நம்பியாண்டார் நம்பி சொல்லவுமில்லை.

 

பின்பு இன்னும் சில மாறுதல்களுடன் வரலாறுகள் தோன்றின. அதில் திருமூலர் ஒரு மன்னரின் உடம்பில் புகுந்து கொண்டார்/மன்னர் குலம் (கோக்குலம் என்பதை இப்படியும் அர்த்தம் கொடுக்கலாம்) என்று ஒன்றும், திருமூலரின் தாயார் பள்ளர் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

[’மூன்றான பாதமது மூலத்தீசர் முனையாக பிறந்ததொரு நேர்மையப்பா

சான்றவரா மூலத்தினீசரப்பா சட்டமுடன் வந்துதித்த நாளுமாகும்

ஈன்றதொரு ஜாதியிலே பள்ளஜாதி எழிலான கன்னிகையும் பெற்றபிள்ளை

மேன்மையுடன் தான்பிறந்தார் மூலத்தீசர் மேதினியில் ரிஷிதனக்குப் பிறந்தார்தாமே’ – போகர் ஏழாயிரம்]

 

அது போலவே அவர் வசித்தது சதுரகிரி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றிற்கு தொன்மையான ஆதாரங்கள் எதுவுமில்லை. எனவே சாத்தனூர்க்கார் யாதவ குலத்தவர், குறைந்தது ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது.

 

திருமந்திரத்தில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று பார்த்தால் அதிகம் எதுவும் இல்லை. இருப்பதும் allegorical – இரு பொருள்தரும் விதமாக இருக்கின்றன.

 

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

 

’மூலனை நாடினேன்’ என்று திருமூலர் குறிப்பிடுகிறார். ஆனால் அப்பாடலை படிக்கும்போது மூலன் என்று அங்கே குறிப்பிடப்படுவது சிவன் என்று தோன்றுகிறது. மூலாதாரம் என்று ஒரு அடிப்படை உணர்வு நிலை (சக்கரம்) யோக நூல்களில் குறிப்பிடப்படுவதால், தனது யோக வழிமுறையின் துவக்கத்தை அவர் இப்படி குறிப்பிடுகிறார் என்றே தோன்றுகிறது.

 

ஆனால், ஓரித்தில் ’மூலன் மடவரை’ என்று அவர் குறிப்பிடுவதால், மூலன் மடம் என்ற ஒரு மடம் இருந்தது தெரிகிறது. எனவே அவர் பெயர் மூலன் என்பது சரியே என்று தோன்றுகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலம் சோழப்பேரரசு பல நூற்றாண்டுகள் தழைத்து உச்சத்தில் இருந்த காலம் என்பதால், இயல்பாகவே சாதிப்பெருமிதம் கூடியிருக்கக் கூடிய காலம். பிராம்மண குலம், அரச குலம், சேக்கிழார் போன்ற அமைச்சர் பெருமக்கள் வந்த வெள்ளாள குலம் போன்றவை தாம் எழுந்துவந்த அடிப்படை சாதிகளிலிருந்து தம்மை பிரித்துக்கொண்டு உயர் சாதிகளாக கருதியிருக்க் கூடிய காலம். எனவே அக்காலகட்ட த்தில் இடையர் குலத்திலிருந்து ஒருவர் வந்து பின்னாளில் தமிழக சைவத்தின் அடிப்படை நூலை உருவாக்கியிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது உருவாக்கிய கதையே இது என்பது தெளிவு.

 

ஏனெனில் தன்னை நன்றாக இறைவன் படைத்தான் தம்மை (சிவனை அதாவது ஆகமத்தை) தமிழ் செயுமாறே என்று கூறுவதிலிருந்து திருமூலர் தமிழரே, ஆனால் சமஸ்கிருதத்தை கற்று அதில் சொல்லப்பட்டிருந்த ஆகமக் கருத்துக்களை தமிழ்ப்படுத்தினார் என்றே நான் புரிந்து கொள்கிறேன். இங்கே ஒன்றை குறிப்பிடவேண்டும் இன்றைய காலகட்ட த்தில் சமஸ்கிருதம் என்பது ஒரு ஜாதியினருடன் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், முன்பு அப்படியிருந்திருக்கவில்லை.

 

தமிழுக்கும் சமஸ்கிருத்திற்குமான பிளவு மிகவும் பின்னாளிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் – குறிப்பாக தமிழ் மன்னர்கள் அதிகாரமிழந்த காலகட்டங்களில்.

 

திருமூலர் வடமொழி (சமஸ்கிருதம்), தமிழ் இரண்டையும் ஒரே தட்டில் ஒரே அளவில் வைக்கின்றார். அதுபோலவே வேதம், ஆகம் இரண்டையும் ஒரே தட்டில் ஒரே அளவில் வைக்கின்றார் – சிற்சில இடங்களில் வேத்திற்கு அதீத மரியாதை கொடுப்பது போலவும் தோன்றுகிறது. உதாரணமாக வேதத்தில் எல்லாம் இருக்கிறது, அதை மீறியும் உண்மைகள் இருக்கின்றன என்ற வாத்தை விட்டுவிட்டு (வெறும்) வேதம் ஓதியே வீடுபேறு (மோட்சம்/நிர்வாணம்) பெற்றார்கள் என்று புகழ்வதைப் பார்த்தால், வேறெந்த ஆன்மீக முறைகளையும் பின்பற்றாது வேதபாராயணம் செய்வதை மட்டுமே வழிமுறையாக பின்பற்றியவர்களும் மோட்சம் பெற்றனர், எனவே வேதங்கள் சிறப்பு வாய்ந்தவை என்ற கருத்தை அவர் ஏற்கின்றார்.  இதுவும் இன்றைய பொதுப்புத்தியில் திருமூலர்/சைவம் பற்றி நம்மிடையே பதிந்துவிட்ட கருத்துக்களுக்கு முரணாக இருக்கிறது.

 

இடம் பற்றி இன்னொரு யோசனையும் ஏற்படுகிறது – திருக்கடவூர் பற்றியும் காலனை வென்ற கதையைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் திருவாவடுதுறை பரிபாஷை என்றே தோன்றினாலும், அவருக்கு இந்தப் பிரதேச பரிச்சியம் இருப்பதாலும், தில்லையில் வாழ்ந்த வியாக்கிரபாதர் பற்றிய பல குறிப்புகள் இருப்பதாலும், அவரையும் ஒரு நாதராய் திருமூலர் குறிப்பிடுவதால் அவர் சோழநாடு என்றே தோன்றுகிறது. பொன்னம்பலம் என்று அவர் சொல்வதை வைத்தும், ஒரு பல்லவ மன்னன் சிதம்பரத்தை தங்கத்தால் அலங்கரித்தையும் வைத்து அவர் பொயு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்திருக்க் கூடியவர் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் பொன்னம்பலம் என்பது பரிபாஷயாகவே எனக்குத் தோன்றுகிறது. ‘மன்று’ , அதில் கண்ட சிவனின் நடனம் பின்பு இருந்தேன் எண்ணிலி கோடி யுகங்கள் என்று சொல்வதையெல்லாம் ஒரு அகம் சார்ந்த நிகழ்வுகளின் விவரனையாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

மீண்டும் காலத்திற்கு வருவோம் – திருமூலரின் காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அவர் குறிப்பிடும் சீடர்களின் பெயர்கள். அவரது குருவான நந்தியை பற்றிய எந்தவிதமான அறுதியான முடிவும் எடுக்க நம்மால் முடியவில்லை. நந்தி என்பதையும் சிவன் என்பதையும் மாற்றி மாற்றி பல இடங்களில் பயன்படுத்துகிறார். குரு என்பவரும் கடவுளும் ஒன்று என்று அவர் பாடுவதால் அவர் இப்படி மாற்றிமாற்றி பயன்படுத்துவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சரித்திரத்தை கணிப்பதில் இது சிக்கலை ஏற்படுத்துகிறது.

 

நந்திகள் நால்வர் – திசைக்கொரு நந்தி என்றும் குறிப்பிடுகிறார், இது குழப்பத்தை இன்னும் அதிகரிக்கின்றது. தாம் நாதர் என்று பெயர் பெற்றேன் என்று திருமூலர் குறிப்பிடுவதாலும், மற்ற அம்சங்களை வைத்தும் அவர் நாதர் பரம்பரையில் (சம்பிரதாயத்தில்) வந்தவர் என்பது புரிகிறது. ஆனால், இன்றைய வட இந்தியாவில் நாதர்களின் தோற்றுவாயாக இருந்த மச்சேந்திரநாதர், கோரக்கநாதர் போன்றவர்களை அவர் குறிப்பிடவில்லை. இவ்விருவரும் அவர் சொல்லும் நான்கு நாதர்களா என்பதும் தெரியவில்லை.

 

சனகர், சனத்குமாரர் போன்றவர்களைத் தான் இப்படி நான்கு நந்திகளாக குறிப்பிடுகிறார் என்றால், அவர்கள் புராண காலத்தவர்கள். தட்சினாமூர்த்தியாக இருக்கும் சிவனே மூல நந்தி என்றாகிறது. அதுவும் எவ்வித சரித்திர காலகட்த்தை காட்டாமல் நகர்கிறது.

அது போலவே சிவயோக மாமுனி என்பது அகத்தியர் என்று எடுத்துக்கொண்டால், எதோ ஒரு தொல் பாரம்பரியத்தை குறிப்பிட்டு அப்பாரம்பரியத்தில் வந்தாக தம்மை அவர் கருதிக்கொள்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவரது பாடலில் வரும் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதருக்கும் பொருந்தும். திருமூலருக்கு முன்பாக இருந்த ஏழு நாதர் பரம்பரையைச் சொல்லி அந்த பரம்பரையில் எட்டாவதாக தனக்கென ஒரு அடியார் கூட்டம் உருவாகிவிட்டதையும் அவர்களைப் போல நாதராக தாமும் ஆனோம் என்றும் கூறுகின்றார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

யோக சூத்திரங்களை எழுதிய பதஞ்சலி பொ.யு 2-4 நூற்றாண்டுகளை சேர்ந்தவராக இருக்கலாம். எனவே திருமூலர் பொ.யு 4க்கு பின்பே வந்திருக்க வேண்டும், சமகாலத்தவர் என்றால் பொ.யு 2-4 க்கு மூலரும் செல்கிறார்.

 

இலங்கையில் சிங்கள தேசத்தை காக்கும் நான்கு தேவர்களில் ஒரு நாதரும் இருக்கிறார் – அவர் யார் என்பது தெரியவில்லை. நந்தி ஒரு யக்‌ஷன் என்று எடுத்துக்கொண்டால், இந்த இலங்கையின் தொடர்பும் புரிந்து கொள்ளக்கூடியது. அப்படியென்றால் திருமூலர் சொல்லும் மடங்கள் இலங்கை அல்லது பொதிகை மலைக்கு நம்மை கொண்டு செல்கிறது.

 

எனவே திருமூலர் சொல்லும் எட்டு நாதர்களை, எட்டு நாதர் பரம்பரைகளாக (சம்பிரதாயங்களாக) நாம் எடுத்துக் கொண்டால், அவர் சொல்லும் பதஞ்சலி, வியாக்ரபாதர், நான்கு நந்திகள் போன்றவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்திருக்க் கூடும்.

’மன்று தொழுத’ என்பதை மறைபொருளாக இல்லாமல் நேரடியாக பொருள் கொண்டால், பதஞ்சலி வியாக்ரபாதர் போன்ற நாதர்கள் தமிழ்நாட்டின் தில்லை நகரில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், எதையும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த நாதர் பரம்பரை சிங்களம் தொட்டு நேபாளம், காஷ்மீர், குஜராத், வங்கம் என்று இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. பின்னாளில் பக்தி இயக்கம் தென்னகத்திலிருந்து இந்தியா முழுவதும் பரவியதுபோல இந்த நாதர் பரம்பரைகளும் இங்கிருந்து உருவாகி பரவியதா என்பது ஆய்வுக்குரியது.

 

அவர் அரச மரத்தடியில் தியானத்தில் இருந்து வருத்துக்கு ஒரு பாடலாக மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்தார் என்பதெல்லாம் பின்னால் (பெரிய புராண காலத்திலேயே) ஏற்படுத்தப்பட்ட கற்பனைகள், அவரது பாடல்களை படித்துவிட்டு பாமர்கள் உருவாக்கிக்க் கொண்ட கருத்துக்கள் – போதி மரத்தடியில் இருந்தாக திருமூலர் பாடுவதும் ஒரு allegory தான். இருந்தேன் எண்ணிலி கோடி வருடம், இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே என்பதெல்லாம் யோகநிலையை சொல்லும் அவரது விவரிப்புகள். ஆனால் காலாக்கிரமத்தில் இதையெல்லாம் நேரடியாக எடுத்துக்கொண்டு இக்கதைகள் உருவாகிவிட்டன.

 

மூலரின் காலத்தை கணிக்க ஏதுவாக இருக்க் கூடிய இன்னொரு குறிப்பு அவரது சீடர்கள் பற்றி அவர் குறிப்பிடும் விபரம்.

 

அவரது சீடர்களாக,

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு

இந்த எழுவரும் என்வழி ஆமே

 

என்று ஏழு நபர்களை குறிப்பிடுகிறர் – மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்ரன், காலாங்கி, கஞ்ச மலையன்.

 

இப்படி பெயர்கள் எந்த காலகட்டத்தில் இருந்திருக்க் கூடும், இவர்கள் தமிழரா அல்லது அவரது மடம் வேறெங்காவது இருந்தா என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன. மாலாங்க மலை என்பது மகாராஷ்டிரத்தில் இருக்கிறது (மாலாங்க கிரி). கஞ்ச மலை என்பது சேலத்துக்கு அருகில் உள்ளது. இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன் என்ற பெயரையெல்லாம் வைத்து எந்தவித முடிவுக்கும் வரமுடிவதில்லை.

 

இதில் சொல்லப்படும் காலாங்கி (காலாக்னி  நாதர்– kalagni natha

) வட இந்தியாவின் நாத சம்பிரதாயங்களில் பெரும் நாதராக மதிக்கப்படுகிறார். ஆனால் அங்கும் காலம் தெளிவாகத் தெரியவில்லை. இவரை போகரின் குருவாக சொல்லும் கதைகளை நிஜமென்று கொண்டால், போகர் சீன தேசம் போனதையும் (இதை நாகப்பட்டினத்தின் வடக்கு பொய்யூரில் சமாதியடைந்திருக்கும் கோரக்கரும் குறிப்பிடுகிறார்), அவர் பழனி முருகன் சிலையை விஷங்களை இணைத்து செய்தையும் பார்க்கும்போது, இந்த முறை சீனாவிலிருந்தே இங்கே வந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சீனாவில் மெர்க்குரி, சல்ஃபர் போன்றவற்றை வைத்து அதன் மூலம் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யும் முறை கிபி 4-9 நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்திருக்கின்றது. அங்கே இது பற்றி விரிவான விவரங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நம்மிடையே இது ஒரு பெரும் அறிவியலாக உருவெடுத்தாகத் தெரியவில்லை எனவே போகர் இங்கிருந்து போய் அங்கே இதை கற்பித்தை விட, அங்கிருந்து இந்த டெக்னாலஜியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

 

இதனடிப்படையில் பார்த்தால் மூலர் – காலாங்கி நாதர் – போகர் என்ற சீடர் வம்சாவளி ஒரு நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டே உருவாகியிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் கிபி எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலமாகவே இவர்களின் காலம் இருந்திருக்க வேண்டும்.

 

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அது, திருமூலர் பெளத்தம் பற்றிய எவ்வித குறிப்பையும் தமது நூலில் குறிப்பிடாதது. பெளத்தம் பெரும் இயக்கமாக இந்தியா முழுவதும் மின்னலை போன்று பரவியது. அக்காலகட்டத்திலோ அல்லது அதற்குப் பிறகோ எழுந்த அனைத்து நூல்களிலும் அதை ஆதரித்தோ, எதிர்த்தோ வாதங்கள் இருக்கும். ஆனால், திருமந்திரத்தில் அப்படி எதுவுமில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க் கூடும் – ஒன்று, இது பெளத்த பரவலுக்கு முந்தய சமஸ்கிருந்த நூலின் தமிழாக்கம். இரண்டு, திருமூலர் காலம் பவுத்தம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் வருவதற்கு முன்பான காலம். பெளத்தம் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது அசோகரின் காலமான பொ.மு மூன்றாம் நூற்றாண்டு – இன்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு வருடங்கள் முன்பு. அப்போது அசோகர் ஏற்படுத்திய புத்த விகாரம் கடலூர் அல்லது பூம்புகார் அல்லது நாகப்பட்டினத்தில் இருந்திருக்கின்றது. புத்தரின் பல் கூட இங்கிருந்தே இலங்கை சென்றிருக்கிறது.

 

அப்படி இரண்டாயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முந்தய நூல் அல்ல திருமந்திரம் என்று உறுதியாக சொல்லிவிடலாம். எனவே, தொன்மையான சமஸ்கிருத நூல் ஒன்றை சாத்தனூரைச் சேர்ந்த யாதவ குலத்தில் உதித்த ஒரு சிவயோகி மொழிபெயர்த்திருக்கிறார், அது நிகழ்ந்து குறைந்து ஆயிரத்து இருநூறு வருடங்கள் ஆகிறது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.

 

வையாபுரிப்பிள்ளை திருமந்திரத்தில் பிற்சேர்க்கை நிறைய இருக்கிறதென்று சொல்வதை வைத்துப் பார்த்தால், மிகவும் எளிய மொழி என்பதால் காலத்தை பின்னுக்குத் தள்ள முடியாது என்ற கருத்துக்கே உடன்பட வேண்டியிருக்கிறது. எனவே எப்படிப்பார்த்தாலும் குறைந்த பட்சம் 1200 வருடங்கள் பின்னோக்கி செல்லவேண்டியிருக்கின்றது. இன்னும் துல்லியமாக சொல்ல இதுவரை நம்மிடையே இருக்கும் தரவுகள் போதுமானதாக இல்லை. தந்திர மார்க்கங்கள் குறித்த சமஸ்கிருத படைப்புகளையும், நாதர் பரம்பரை பற்றி பல்வேறு பகுதிகளில் இருக்கும் வரலாறுகளையும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தி பார்த்தால் எதேனும் உறுதியான வரலாற்று விவரங்கள் கிடைக்கலாம்.

Series Navigation“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”சொல்லத்தோன்றும் சில……
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *