பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை

This entry is part 9 of 13 in the series 14 நவம்பர் 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

(தினமணி கதிர் 20.10.2002 இதழில் வந்தது.  “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தின் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

      செண்பகத்துக்குப் பிள்ளைப்பேற்று நாள் வெகு நெருக்கத்தில் வந்துவிட்டது. வயிற்றைத் தூக்கிக்கொண்டு அவளால் நடக்கவே முடியவில்லை. தோள்களையும் கைகளையும் முதுகுப்புறமாகப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு, முன் பாரத்தைச் சரிசெய்துகொண்டு அவள் நடந்தது இரங்கத்தக்கதாக இருந்தது.

      மூசுமூசென்று மூச்சிரைத்தபடி அவள் வயிற்றுச் சுமையோடு தண்ணீர்க் குடத்தையும் சுமந்துகொண்டு, சமையற்கட்டு என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறு மறைப்பினுள் நுழைந்து இடுப்புக் குடத்தை இறக்கி வைப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டாள். சமையற்கட்டுக்கு வெளியே நின்றுகொண்டு நரைத்த முடியைச் சீவோசீவென்று சீவிச் சிங்காரித்துக் கொண்டிருந்த அவள் மாமியார் மரகதம் ஓரத்து விழிகளைல் மருமகளை ஏறிட்டாளே தவிர, இடுப்புக் குடத்தை வாங்கிவைத்து உதவுவோம் என்று நினைத்தாளில்லை. ‘என்ன சென்மமோ! இந்த மனுசியும்தானே சொமந்து பெத்திருக்குது? இதே இடத்துல சொந்த மக இருந்தா இப்படித்தான் யாருக்கு வந்த விருந்தோன்னு பாத்துக்கிட்டு நிக்கிமா?’ என்று மனத்துள் தன் மாமியாரைச் சபித்தபடி செண்பகம் முகத்து வேர்வையைச் சேலை முன்றானையால் ஒற்றித் துடைத்துக்கொண்டபின், “என்ன காயி அத்தே அரியட்டும்?” என்றாள்.                “புடலங்காய்ப் பொரியல் பண்ணி, தக்காளிக் கொளம்பு வய்யி.  வடிவேலு வெளியே போக அவசரப்படலைன்னா, வெள்ளரிக்காயைத் துருவிப் பச்சிடியும் பண்ணிடு.  … அவன் இன்னும் ஒறங்கிக்கிட்டுத்தான் கெடக்குறான். இன்னைக்கி நாயித்துக் கெளமையாச்சே! மெதுவாத்தான் எந்திரிப்பான்,” என்ற மரகதம் சீவி முடித்த தலைமுடியைக் கொண்டை போட்டுக்கொண்டு வாசற்பக்கம் போனாள்.

     ‘கூடமாடக் கொஞ்சமாச்சும் ஒத்தாசை பண்ணப்படாது? எதிர்வீட்டு அம்மாவோட வம்பு வளக்கணும், காலங்கார்த்தால! அப்பத்தான் காலையில குடிச்ச கஞ்சி இந்த அத்தைக்குச் செரிமானம் ஆகும்…’ என்று தன்னுள் மாமியாரைத் திட்டிக்கொண்டே செண்பகம் காய் அரிய அரிவாள்மணையின் முன் மிகுந்த சிரமத்துடன் கால் நீட்டி அமர்ந்தாள். காயை அரிய முடியாதபடி வயிறு முன் தள்ளி அவளைத் தொந்தரவு செய்தது. எனினும் எப்படியோ சமாளித்துக் கோணலும் மாணலுமாய்க் காயை அரிந்தாள்.

    ‘என்ன பொம்பளை இது!’ என்று வாய்விட்டே சன்னமாய்த் தனக்குள்

தன் மாமியாரைப் பற்றி முனகிக்கொண்டாள். ‘பொம்பளை’ என்கிற சொல் அவளுள் கசப்பான எண்ணங்களைக் கிளர்த்தியது. ‘முதலில், பெண்பிள்ளைதானா இவள்? எனக்குப் பிறந்த மூன்று குழந்தைகளையும் அவை பிறந்த மூன்றே நாள்களுக்குள் கொன்று புதைத்தவள். இவளுடைய சதிக்கு எனக்குத் தாலிகட்டினவரும் கூட்டாளி. மாமா மட்டும்தான், ‘அடியே! வேணாண்டி. ஒரு பொம்பளையா இருந்துக்கிட்டு இப்படிப் பொம்பளைப் பிள்ளையைக் கொல்றியே? கடவுளுக்கே அடுக்குமா உன்னோட காரியம்?’ என்று கண் கலங்கினார். ஆனால் அத்தை மாமாவின் மறுப்பைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. … வரிசையாகப் பெண்பிள்ளைகளாகவே பிறப்பதற்கு என் உடல்வாகுதான் காரணமாம். … எதிர்விட்டு லச்சுமி டிவியிலே ஏதோ நாடகம் பார்த்தாளாம். அதில், ஆணோ பெண்ணோ பிறப்பதற்கு ஆணின் உயிரணுக்கள்தான் காரணம் என்று சொன்னார்களாம். அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து அவை சாகடிக்கப்பட்டன. ஆனால், மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துவிட்டது. … அடுத்து ஏதும் பிறக்கவில்லை. கடவுளே! எனக்கும் இந்தத் தடவை ஆண் குழந்தையாகப் பிறக்கவேண்டும். இப்படிப் பெற்றுப் பெற்றுச் சாக அடிப்பது என்னை என்ன பாடு படுத்தும் என்பதைப் பற்றிக் கொஞ்சமேனும் இந்தப் பெண்பிள்ளை நினைத்துப் பார்க்கிறாளா? முதல் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு நான் எப்படி அழுது துடித்தேன்! ‘ஆமாண்டி. நீ பாட்டுக்குப் பெத்துப் போட்றுவே. நாளக்கி அதுங்களுக்குக் கண்ணாலம் பண்ணவும் கருமாதி பண்ணவும் காசு வேணாமாடி? வரதச்சிணை அது இதுன்னு ஆயிரக் கணக்குல செலவு பெண்ணுற நெலமையிலயா நாம இருக்குறோம்? வாள்றது குடிசை. குடிக்கிறது கஞ்சி. ஒரே ஒரு வேளைச்  சோறு. ராத்திரி முக்காவாசி நானு வவுத்துல ஈரத்துணியக் கட்டாத கொறைதான். இந்த லச்சணதுல பொட்டப்புள்ள கேக்குதோ உனக்கு?’ என்று சொல்லிவிட்டாளே மகராசி?…’ – இப்படி அவள் எண்ணங்கள் ஓடின.

      அவர்கள் வாழ்ந்த ஊர் ஓர் இரண்டுங்கெட்டான்  ஊர். நகரத்து வசதிகளில் சில இருந்தாலும், கிராமத்து வாசனையே அதிகமிருந்த ஊர் அது. அங்கே இருந்த அரசு மருத்துவ விடுதியில் தான் அவளுடைய முதல் மூன்று குழந்தைகளும் பிறந்தன. இப்போது சுமந்துகொண்டிருப்பதைப் பெறுவதற்கும் அவள் அங்கேதான் போவாள்.

       ‘கடவுளே! நான் என்ன செய்யப் போகிறேன்? இந்தத் தடவையாவது ஆண் குழந்தை பிறக்காதா? சுமந்து உயிரைக் கொடுத்துப் பெறுவது சாகடிப்பதற்கா?’ – செண்பகம் கட்டுப்பாட்டை இழந்து  கண்ணீர் விடலானாள்.

      மெதுவாய்ச் சுவர் பிடித்து எழுந்து, அரிந்த காய்களைத் தண்ணீரில் போட்ட அவள் வடிவேலு அங்கு வந்த காலடியோசையைக் காதில் வாங்கத் தவறினாள்.

       அவள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட அவன், “என்ன பிள்ள அழுவுறே? அம்மா எங்கே? வலி எடுத்திருச்சா?” என்றான் சற்றே ஆதரவாக. அவன் குரலில் இருந்த ஆதரவை உணர்ந்ததும், அவள் முகம் பொத்தி அழத் தொடங்கினாள்.

       “அம்மா! அம்மா! எங்க போய்த் தொலஞ்சீங்க?” என்று கத்திக்கொண்டே கிளம்ப முற்பட்ட அவனை அவள் பிடித்து நிறுத்தினாள்.

       “வலி எதுவும் இல்லீங்க. இப்படி வரிசையா மூணு கொழந்தைங்களைக் கொல்லும்படி ஆச்சே, இதுவாச்சும் பிழைச்சுக்குமான்னு நினைச்சுக்கிட்டேன். அழுகை வந்திருச்சு …”

       அவனது முகத்துக் கனிவு உடனடியாய்க் காணாது போனது.

       “ஆம்பளைப் பிள்ளையாப் பெத்துத் தாடி. அப்ப ஏன் கொல்லப் போறாங்க?”

       “பொம்பளப் பிள்ளையோ, ஆம்பளப்பிள்ளையோ, அது உங்களோட ரத்தமில்லீங்களா? உங்களோட கொழந்தைங்கிற ரத்த பாசம் கூடவா வராது உங்களுக்கு? என்ன அநியாயம்ங்க இது! சுமக்கிறவ நானுல்ல? அந்த வலியும் வேதனையும் உங்களுக்குத் தெரியுமாங்க?”

       “ஏய்! வாயை மூடு. பிரசங்கமா பண்ணுறே? மூணு வாட்டி உன்னோட அழுகையையும் புலம்பலையும் கேட்டுக் காது புளிச்சுப் போயிறுச்சு. இன்னொருக்கா இது பத்தி எதுனாச்சும் பேசினே…?” – வடிவேலு பல் விளக்க வேப்பங்குச்சி ஒடிக்க வெளியே போனான்.

      செண்பகம் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு சமையல் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள். ‘இந்தக் குழந்தையும் பெண்பிள்ளையாகவே இருந்தால் நான் என்ன செய்யப் போகிறேன்? எப்படி இந்த ராட்சசியையும் முரடனையும் புரிந்துகொள்ள வைப்பேன்? ஒரு பொம்பளையான அத்தைக்கே இம்புட்டுக் கல்லு மனசுன்னா ஆம்பளைய என்ன சொல்ல! என்னோட அதிஸ்டம் மாமா பேச்சையும் யாரும் கேக்குறதில்ல. அவரு ஒருத்தருதான் என்னோட சேந்துக்கிட்டு அழுதவரு…சே..” என்று அவள் எண்ணங்கள் ஓடின.

      பின்னால் காலடியோசை கேட்க, அவள் திரும்பினாள். அவள் மாமா தான்.

       “என்னம்மா, செம்பகம்? உங்க அத்தை எங்க போனா? ஏன் இப்பிடி வதை கொட்றா அவ? நிற மாசத்துலயும் நீ தான் வேலை செய்யணுமா என்ன?”

       “குனிஞ்சு நிமிந்து வேலை செஞ்சா நல்லதுதானே, மாமா? பிள்ளைப்பேறு எளிசாயிருக்கும்னு சொல்லுவாங்கல்ல? அத்தையோட நீங்க எதுவும் வம்பு வளக்காதீங்க, மாமா.”

       “அம்மாடி! செம்பகம்! இந்த வாட்டியாச்சும் ஒனக்கு ஆம்பளப்புள்ள பொறந்திச்சுன்னா நல்லாருக்கும். ஒங்க அத்தை ஒனக்கு வரிசையாப் பொம்பளப் புள்ளைங்களாப் பொறக்குறதால வடிவேலுவுக்கு இன்னொரு பொண்ணைக் கட்டி வெக்கணும்னு பிளான் போட்டுக்கிட்டிருக்கு. ஒனக்குத்தான் தெரியுமே? அப்பிடி எதுவும் நம்ம குடும்பத்துல நடந்துறக் கூடாது. கடவுள்தான் உன்னயக் காப்பாத்தணும், தாயி. ஒனக்கு அப்பனும் இல்லே, ஆயியும் இல்லே. இந்தக் கண்ராவியயெல்லாம் பாக்க வேணாம்னுதான் ரெண்டு பேத்தையும் கடவுள் கூப்பிட்டுக்கிட்டாரு போல! … அளுவாதேம்மா, தாயி. எல்லாம் நல்லபடியாவே நடக்கும். அந்த ராச்சசி வர்றதுக்கு முந்தி கண்ணத் தொடச்சுக்கம்மா …”

      மாமனாரின் புரிந்துணர்வோடு கூடிய ஆதரவுச் சொற்கள் மறுபடியும் கிளர்த்திவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “எனக்காக நீங்களும் வேண்டிக்குங்க, மாமா. … இந்த வாட்டி ஆம்பளப்புள்ளையாப் பொறக்கணும், முந்தி மாதிரிஆயிறக்கூடாதுன்னு…” என்றாள், கசப்பான புன்சிரிப்புடன்.

       “நீ சொல்லணுமா, தாயி? இருபத்துநாலு மணி நேரமும் எனக்கு அந்த நெனப்புத்தான், தாயி. பாக்கலாம்…”

       காலடியோசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். வடிவேலுதான் வந்துகொண்டிருந்தான். மாமா சிரிப்பில்லாத முகத்துடன் வெளியே போனார். …

       … மறு வாரம் அரசு மருத்துவ மனையில் செண்பகத்துக்கு வழக்கம் போல் பெண் குழந்தைதான் பிறந்தது. அது பிறந்த நேரத்தில் மாமியார் மரகதம் அருகில் இல்லை.

        “ஏம்மா அழறே? கொழந்தை அழகாயிருக்கும்மா. நார்மலா, பிறந்த கொழந்தை சப்பை மூக்கும் சாளை வாயுமா இன்ன சாயல்னு சொல்ல முடியாதபடி களிமண்ணை உருட்டி வெச்சாப்ல இருக்கும். ஆனா உன் கொழந்தைங்க எல்லாமே பொறந்த உடனேயே முக்கும் முழியுமா இருக்கு. எதுக்கு இப்ப அழறே? உன்னோட மத்த மூணு மாதிரியே இதுவும் பொண்ணாப் பொறந்துடுத்தேன்னா அழறே? அட, அசடே! இந்தக் காலத்துல அஞ்சு பொண்ணு பெத்தா ஆண்டியும் அரசனாகலாம். தெரியுமில்ல? அது சரி, மத்த மூணு பொண்ணுங்களும் பள்ளிக்கூடம் போயிட்டிருக்காங்களா?” என்று டாக்டரம்மா விசாரித்தாள்.

       “அந்தக் கண்ராவிய ஏம்மா கேக்குறீங்க? அதுங்கள எடுத்துக்கிட்டு நான் வீட்டுக்குப் போன மத்தா நாளே எல்லாம் மேலே போய்ச் சேந்திருச்சுங்க.”

       “என்னது! மேலே போய்ச் சேர்ந்துடுத்தா? என்னம்மா சொல்றே?”

       “எங்கத்தையும் புருசனுமாச் சேந்துக்கிட்டு அந்த மூணு கொழந்தைங்களையும் கொன்னுட்டாங்க, டாக்டரம்மா. இதையும் கொன்னுடுவாங்களோன்னுதான் அழுவுறேன்… எங்க மாமனார் ஒருத்தருதான் எனக்கு எங்க வீட்டுல ஆதரவுங்க. எங்கொழந்தைங்க ஒண்ணொண்ணாச் செத்தப்பல்லாம், என்னோட சேந்துக்கிட்டு அவரு ஒருத்தருதான் அழுதாரு…”

       “அடக் கடவுளே! இப்ப என்ன செய்யப் போறே?”

       “என்னால என்னங்க செய்ய முடியும்? அதான் அழுதுக்கிட்டிருக்குறேன். இதையும் அவங்க கொன்னுடுவாங்க. எம்புருசனுக்கு இன்னொரு கல்யாணமும் கட்டி வெச்சிறுவாங்க. …”

       “நான்சென்ஸ்! வரிசையாப் பொண்ணு பொறந்தா அதுக்கு அந்தத் தாய்

காரணமில்லேம்மா. தகப்பனோட உயிரணுக்கள்தான் காரணம். கிராமத்து ஜனங்க எப்ப புரிஞ்சுக்கப் போறாங்க இதை?”

       “நான் கூட சமீபத்துல கேள்விப்பட்டேம்மா. ஆனாலும் இவங்க கேக்கமாட்டாங்க.”

       “கரெக்ட்தான். பட்டணத்து ஜனங்களே இன்னும் புரிஞ்சுக்காம ஆம்பளைங்களுக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. கிராமங்கள்ள கேக்கணுமா? … ஆனா பழைய காலத்து ஜனங்களுக்கு இந்த உண்மை தெரிஞ்சிருக்கணும்னுதான் எனக்குத் தோண்றது…”

       “எதை வெச்சு சொல்றீங்க, டாக்டரம்மா?”

       “ஒரு தரம் நான் சின்னவளா இருக்கிறச்சே எங்கப்பாவோட சிநேகிதர் ஒருத்தர் அவரைப் பார்க்க  எங்க வீட்டுக்கு வந்தார். ரெண்டு பேரும் சந்திச்சு ரொம்ப நாளாயிருந்தது. போக்குவரத்து இருக்கல்ல. எங்கப்பா, ‘உனக்கு எத்தனை பிள்ளைகள்’னு அவரை விசாரிச்சார். ‘எனக்கு நாலு பையன்க’ அப்படின்னு அவரு சொன்னாரு. ‘பொண் கொழந்தை ஏதும் இல்லையா? இல்லை, பொறந்து போயிடுத்தா’ அப்படின்னு எங்கப்பா அவரை விசாரிச்சாரு. ‘பொறந்தது எல்லாமே பையனுங்கதான்’ அப்படின்னு அவரு பதில் சொன்னாரு… அதுக்கு எங்கப்பா என்ன சொன்னாரு, தெரியுமா?”

       “ …….?”

       “…. ‘அப்படின்னா நீ பொண்ணு பெத்துக்காத பாவியா?’ அப்படின்னாரு. அவரு போனதுக்கு அப்புறம் நான் எங்கப்பா கிட்ட அது பத்திக் கேட்டப்ப, ‘ …பொண்ணு பெறாத பாவின்னு பொண்ணுங்களைச் சொல்றதில்லேம்மா. ஆம்பளைகளைத்தான் அப்படிச் சொல்றது. கிராமங்கள்ள அப்படி ஒரு பழமொழி இருக்கு’ அப்படின்னாரு. இதுலேர்ந்து என்ன தெரியறது? ஒரு ஆம்பளை ஆண் கொழந்தையோ, பொண் கொழந்தையோ பெத்துக்கல்லேன்னா, அதுக்கு அந்த ஆம்பளைதான் காரணம்னுதானே? … சரி, விடு. இப்ப என்ன செய்யறதா இருக்கே?”

       “அதான் சொன்னேனேம்மா? என்னால என்னங்க செய்ய முடியும்? என்னோட விதிய நொந்துக்கிட்டு கம்னு கெடக்க வேண்டியதுதான். எம் புருசனுக்கு ரெண்டாந்தாரம் வேற கட்டி வைக்கப் போறாங்க. அப்பால என்னய வீட்டுல வச்சுக்குறாங்களோ, இல்லாட்டி வெரட்டியடிச்சுறப் போறாங்களோ? யாரு கண்டது?”

       அவள் சொல்லிக்கொண்டே தலை உயர்த்திய கணத்தில் அவள் மாமனார் குமரேசன் அங்கு வந்தார்.   

 “எங்க மாமனாருங்க…. அத்தை வரல்லியே?”

 “ அவளுக்குத் தலை சுத்தல். அதான் வரல்லே. என்ன கொளந்தை தாயி?”

       “வழக்கம் போலப் பொம்பளப்புள்ளதான், மாமா….” என்ற செண்பகம் அழத் தொடங்கினாள்.

       “அளுவாதே, தாயி. நான் ஒரு முடிவோடதான் வந்திருக்குறேன்.

உன்னையும் கொளந்தை பொறந்திருந்தா அதையும் வீட்டுக்கு இட்டாரச் சொல்லித்தான் உங்கத்தை என்னய இங்கிட்டு அனுப்பி வச்சுது. உம்புருசன் வேலைக்கிக் கெளம்பிப் போயாச்சு. அதனால நாம ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டே போயிர்றோம், தாயி. என்ன சொல்றே?” என்றவாறு குமரேசன் அவளுக்கு அருகே அப்போதுதான் பறித்த ரோஜாப்பூப் போல் கண் மூடி உறங்கியபடி இருந்த தம் பேத்தியைப் பார்த்துக் கண் கலங்கினார்.

       டாக்டரம்மா சிரிப்புடன் குறுக்கிட்டாள்: “ரொம்ப நன்னாச்சு, பெரியவரே.  நீங்க நன்னாருக்கணும். இருப்பீங்க. …. இதுக்கு முந்திப் பொறந்த மூணு பொண் கொழந்தைகளையும் உங்க சம்சாரமும் மகனும் சேர்ந்துண்டு கொன்னுட்டாங்களாமே? இப்பதான் உங்க மருமக எல்லாம் சொன்னா. எந்த ஊருக்குப் போவீங்க? என்ன செய்வீங்க? தெரிஞ்ச எடமா?”

       “கடவுள் விட்ட வழின்னு கெளம்பறோங்க. எம்மருமக சம்மதிக்கணும். … மருதைக்குப் போலாம்னு. மருதை பெரிய டவுனாச்சே! பொளச்சுக்கிறலாம். நான் கொத்தநார் வேலை செய்யிறவன். இப்ப சத்தியா கட்டட வேலை இல்லே. அங்க போய்ப் பாத்துக்கிடலாம். இம்மாம் பெரிய ஒலகத்துல நாங்க ரெண்டு பேரும் பொளைக்க வளியில்லாமயா போயிறும்? எம்மவன் ஒரு குடிகாரங்க. நான் சம்பாரிச்சுக்கொண்டார துட்டையெல்லாம் கூடப் பிடுங்கிட்டுப் போயிறுவான். அவனுக்குத் தெரியாம எப்பிடியோ ஒரு ரெண்டாயிரம் போல சேத்து வச்சிருக்கேங்க. தலைகாணியில தொளை போட்டு அதுக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த துட்டுங்க. எம்மருமவளையும் இந்த ராசாத்தியையும் கூட்டிக்கிட்டுப் போயிர்றேங்க. … அம்மா, தாயி, செம்பகம்? என்ன சொல்றே?”

       செண்பகம் கை கூப்பி அவரைத் தொழுதாள்: “போயிறலாம், மாமா, போயிறலாம். உங்களுக்கு எப்பிடி என்னோட நன்றிக்கடனைத் தீக்கப் போறேன், மாமா?”

       “சீச்சீ!  அளுவாதே. கண்னத் தொடச்சுக்க, தாயி. … ஆனா நீ பச்ச ஒடம்புக்காரியாச்சே? … ஏன், டாக்டரம்மா? பயணத்துக்குத் தோதுப்படுமா?”

       “நன்னா ஸ்ட்ராங்காத்தான் இருக்கா உங்க மருமக. கெளம்புங்க ரெண்டு பேரும். இந்தாங்க. என்னோட பங்குக்கு இதை வச்சுக்குங்க.”

      டாக்டரம்மா தன் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்த ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டபின், தன் பையில்  குமரேசன் பத்திரப்படுத்திக்கொண்டார்.

      செண்பகம் புதிய வலிமை பெற்றவள் போல் சடக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். பக்கத்தில் இருந்த குழந்தையை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து மெல்ல அணைத்துக்கொண்டாள். அவள் விழிகளில் மகிழ்ச்சிக் கண்ணீர். முகத்தில் அதுகாறும் குமரேசன் பார்த்தறியாத பரவசப் புன்னகை.

       “அப்ப நாங்க இப்பவே கெளம்பறோம், டாக்டரம்மா!”

       “முடியுமா உன்னால? நான் பாட்டுக்கு நீ நார்மலாயிருக்கேன்னு சொல்லிட்டேன்.”

       “முடியும், டாக்டரம்மா! பொம்பளப் புள்ளையானானும் எம்புள்ளையாச்சே! இதைச் சொமந்துக்கிட்டு எத்தினி காதம் வேணும்னாலும் நடந்தே மருதைக்குப் போயிறுவேம்மா…ரொம்ப, ரொம்ப டாங்க்ஸ், டாக்டரம்மா. நீங்க நல்லாருக்கணும். இருப்பீங்க,  டாக்டரம்மா. …”

       “அதெல்லாம் போகட்டும். உங்க மாமியாரும் புருசன்காரனும் வந்தா, நீ உன்  மாமாவோட கெளம்பிப் போயிட்டேன்னு சொல்லிடறேன். சரிதானே?”

       “சரிதான், டாக்டரம்மா அதுதானேங்க உண்மை? அப்பிடியே செஞ்சிறுங்க. அந்த எரக்கமத்த பயலும் ராட்சசப் பொம்பளையும் வந்தாங்கன்னா, மூணு பொம்பளப் பசங்களையும் அவங்க பொறந்து மூணு நாளுக்குள்ள கொன்னதுக்காகப் போலீஸ்ல பிடிச்சுக் குடுத்துடுவேன்னு பயமறுத்துங்க. தகராறு பண்ணாம போயிறுவாங்க. இல்லாட்டி உங்களுக்குச் செரமம்.”

       “அதை நான் பாத்துக்கறேன், பெரியவரே. மதுரைன்னு கூட நான் சொல்லப் போறதில்லே. மெட்ராசுக்குப் போயிட்டீங்கன்னு சொல்லிடறேன். … மெதுவாக் கூட்டிட்டுப் போங்க.. இல்லாட்டி, கொஞ்சம் இருங்க. எங்க ஆஸ்பத்திரி வேன்ல உங்களை ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் விடச் சொல்றேன். உடனே வர்ற வண்டி எதுவானாலும் அதுல ஏறி யாரு கண்ணுலயும் படாம போயிடுங்க.   … ஆல் த பெஸ்ட்!”

       “அப்படின்னா?”

       “ஓ! சாரி… நல்லாருங்கன்னு அர்த்தம்.”

       சட்டென்று பீரிட்ட உணர்ச்சிகளின்  பெருக்கில், தன் ஒரு கை குழந்தையை அணைத்திருக்க, மறு கையால் டாக்டரம்மாவின் கைபற்றி இழுத்துத் தன் கண்களில் நன்றியோடு ஒற்றிகொண்டபின் செண்பகம் தன் அன்பான மாமனாருடன், “என் ராசாத்தி! பொம்பளப் புள்ளையாவது, ஆம்பளப்புள்ளையாவது! நான் பெத்த புள்ள! அம்புட்டுத்தான்! …” என்று குழறிய குரலில் மகிழ்ச்சியுடன் புலம்பியபடி, டாக்டரம்மா நீட்டிய தாளில் தன்  இடக்கை ரேகையைப் பதித்த பின்னர் குமரேசனுடன் படியிறங்கினாள்.

…….

 

 

     
       

Series Navigationவெப்ப யுகக் கீதை“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *