மனசு

This entry is part 4 of 13 in the series 14 நவம்பர் 2021

 

 

செல்வராஜ் ஜெகதீசன்

 

 

“எவ்வளவு நாள் இப்படி ஏமாளியாவே இருக்கப் போறீங்க?”

 

வீட்டுக்குள் நுழைந்த சுந்தரத்தை, வரவேற்றது ஜானகியின் கேள்வி.  

 

ஹாலில் படித்துக் கொண்டிருந்த பெண்ணும் பையனும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்துவிட்டு, பின் அம்மாவைப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து மறுபடி படிக்க ஆரம்பித்தனர்.  

 

அவர்களுக்கும் இது பழகி விட்டது.

 

சுந்தரம் மாதிரி.

 

ஜானகியிடமிருந்து எப்போதும் முதல் கேள்வி இப்படித்தான் வரும். தொடர்ந்து வரக்கூடிய கேள்விகளும் சுந்தரத்திற்கு அத்துப்படி.

 

காலையில் சொன்ன விஷயத்திற்கு, மாலை அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் கேட்க வேண்டிய கேள்விகளை ஜானகி வரிசைப்படுத்தி வைத்திருப்பாள் என்பதும் சுந்தரத்திற்குப் பழகிப்போன ஒன்று.

 

அலுவலகத்தில் அன்று வேலை கொஞ்சம் கூடுதல். அந்த வேலைப்பளுவிலும் ஊரிலிருந்து அண்ணா கூப்பிட்டிருந்ததை ஜானகிக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தான்.

 

ஜானகிக்கு பதில் ஏதும் சொல்லாமல், துணி காயும் ஹாங்கரில் டவலைக் காணாமல் இங்கும் அங்கும் தேடி, ஹால் சோபாவில் இருந்த டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்.  

 

முகம் கழுவும் கண்ணாடியில் பார்த்தபோது “அப்படி ஒன்றும் ஏமாளி மாதிரி இல்லை” என்று தோன்றியது. சொந்த அண்ணன் குடும்பத்திற்கு கஷ்ட காலத்தில் உதவினால் ஏமாளியா?

 

ஆனால் ஜானகிக்கு சுந்தரம் எப்போதும் ஏமாளிதான்.

 

“இன்னும் எவ்ளோ நாள் இப்படி கேட்கறப்ப எல்லாம் கொடுத்துட்டே இருக்கப் போறீங்க?”

 

அப்படியொன்றும் நிறைய வருடங்கள் எல்லாம் இல்லை. போன வருடம் ஆரம்பித்து, இன்றுவரை மிஞ்சிப்போனால் ஒரு நான்கு முறை பணம் அனுப்பியிருப்பான்.

 

அந்த மாதிரி எப்பவும் இருந்தவர் இல்லை அண்ணா.

 

அண்ணா செய்துவந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் ஓரளவு நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எப்போதும் வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருந்தவர் திடீரென்று ஒருநாள் அந்த ஓட்டத்தையெல்லாம் நிறுத்திவிட்டு வீட்டோடு இருக்க ஆரம்பித்தார். வீட்டோடு என்றால் எதற்கும் வெளியில் போகாமல் வீட்டோடு.

 

அதுவரைக்கும் அண்ணனை யாருமே அந்த மாதிரி பார்த்ததில்லை.

 

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. குறிப்பாய் அண்ணிக்கு. ஏதாவது விசாரிக்கலாம் என்றால் அதுநாள் வரை அண்ணனை எப்போதும் வலம் வந்தபடி இருந்த மூன்று நண்பர்களும் கண்ணிலேயே படவில்லை.

 

எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தும் எந்த பதிலும் கிடைக்காமல் அமைதியாகிப் போனாள் அண்ணி.

 

தகவல் கிடைக்கும்போது துபாயில் இருந்த சுந்தரத்திற்கும் எதுவும் புரியவில்லை.

 

நான்கு மாதங்களுக்கு முன் விடுமுறையில் சுந்தரம் ஊருக்கு போயிருந்தபோதுகூட இந்த மாதிரி எதுவும் நடக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

 

சுந்தரம் எப்போது விடுமுறையில் சென்னை வந்தாலும் இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு திருவண்ணாமலை டூர் போவது வாடிக்கை. ஆனால், அந்த வருடம் அதற்குகூட வர முடியாத அளவு அண்ணன் வேலையில் ரொம்பவே பிசியாக இருந்தார். 

 

அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை.

 

சுந்தரம் குடும்பத்தோடு துபாய் திரும்பிய மூன்றாவது மாதம் முதல் முறை அண்ணனிடமிருந்து மிஸ்டு கால் அழைப்பு வந்தது.

 

“பிள்ளைகள் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் வேண்டும், முடியுமாடா?” என்று அலைபேசியில் ஒலித்த அண்ணனின் குரலில் இருந்த தயக்கம் இன்னும்கூட சுந்தரத்தின் மனசில் அப்படியே நிழலாக இருக்கிறது.   

 

“அவர்தான் உங்களை வளர்த்து ஆளாக்கினார் என்பதெல்லாம் சரி…அதுக்காக…”

 

சாலை விபத்தொன்றில் அப்பா அவர்களை விட்டுப் போனபோது அண்ணா கல்லூரி இறுதி வருடத்தில் இருந்தான். சுந்தரம் அப்போதுதான் முதல் வருடம் இஞ்சினீரிங் சேர்ந்திருந்தான்.

 

அப்பாவே உலகம் என்றிருந்த அம்மா அப்படியே இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

 

அடுத்து என்ன என்பது பெரும் மலைப்பாய் இருந்தது. ரெண்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குவது, வருமானத்துக்கு என்ன செய்ய என்ற கேள்வி பூதாகரமாக எதிரில்.

 

அந்த சமயத்தில், அடுத்தடுத்து அண்ணா எடுத்த முடிவுகள் அம்மாவையே ஸ்தம்பிக்க வைத்தன.

 

“சுந்தரம் தொடர்ந்து படிக்கட்டும், நான் அப்பா கம்பெனியில் கிடைக்கும் வேலைக்குப் போகிறேன்” என்று அண்ணன் அன்று எடுத்த முடிவுகளை எப்போது நினைத்தாலும் சுந்தரத்தின் மனசு சில்லிடும்.

 

“உங்க அப்பா ஸ்தானத்துல இருந்து இத்தனை வருஷம் பொறுப்பா எல்லாம் பண்ணினவர் திடீர்னு எப்படி இப்படி ஆனார்?”

 

அதுதான் யாருக்கும் தெரியவில்லை.  

 

எல்லோருக்கும் பார்த்து பார்த்துதான் செய்தார்.

 

குறிப்பாய் சுந்தரம் துபாயில் வேலை கிடைத்ததும் ஏஜெண்டுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்று அவர் செய்த உதவிகள்!

 

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். அதையெல்லாம் துபாய் வந்த நான்கைந்து மாதங்களில் திருப்பிக் கொடுத்து விட்டாலும், தேவைப்பட்ட நேரத்தில் பணத்தை புரட்ட அண்ணன் பட்ட பாடு சுந்தரம் அறிவான்.

 

ஜானகிக்கே அன்றுவரை தெரியாத ஒரு விஷயம் உண்டு.

 

சுந்தரத்திற்கு திருமணம் செய்ய பெண் பார்க்கும் படலத்தின் போது நடந்தது அது.

  

இரண்டு பெண்களைப் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள். சுந்தரத்தால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

 

“இந்தப் பெண் நம் குடும்பத்திற்கு சரியாக பொருந்தி வருவாள்” என்று இரண்டு வரன்களில், ஜானகியை குறித்த அண்ணனின் சொற்களே, சுந்தரம் ஜானகியை டிக் அடிக்கக் காரணம்.  

 

“நமக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்கு”

 

சுந்தரத்திற்காவது ஒரு பெண்ணும் பையனும், ஏழாவது ஐந்தாவது வகுப்புகளில் துபாய் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

அண்ணனுக்கு இரண்டும் பெண் பிள்ளைகள். பதினொன்று, ஒன்பது வகுப்புகளில் இருக்கிறார்கள்.  

 

அவர்களின் படிப்பு, எதிர்காலம் குறித்து என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. சேமிப்பு என்று எங்காவது போட்டு வைத்திருக்கிறாரா என்றும் தெரியவில்லை.

 

அலைபேசியில் விசாரித்தபோது அண்ணனிடம் இருந்து பதிலேதும் இல்லாமல் ஒரு ஆழ்ந்த மௌனம். கொஞ்ச நேரம் கழித்து, “நீ லீவ்ல வரும்போது பேசிக்கலாம்டா” என்றார்.

 

அடுத்த சென்னை விஜயத்தில், நேரில் அண்ணன் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டபோது “இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா, அதுவும் நெருங்கிய நண்பர்கள்”, என்றுதான் சுந்தரத்திற்குத் தோன்றியது.

 

“எதுவுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?”

 

எதுவும் சொல்லாமல் இருந்தாலே போதுமானது என்று சுந்தரத்துக்கு தெரியும்.

 

முதல்முறை இது போன்ற சமயம் நேர்ந்தபோது, சுந்தரம் சொல்ல முற்பட்ட எல்லா பதில்களுக்கும் ஜானகியிடமிருந்து வந்த எதிர் தாக்குதல்கள் இன்னமும் அவன் நினைவில் இருந்தன.

 

“இப்ப என்னதான் பண்ணப் போறீங்க?”

 

சுந்தரம் அதுவரை எதிர்பார்த்திருந்த கேள்வி இதுதான்.

 

(இந்த முறையும்) என்ன செய்யவேண்டும் என்று ஜானகி மனம் திறக்கும் நேரம்.

 

“இந்த ஒரு முறை மட்டும் அனுப்பிக் குடுங்க…எப்படியும் இதுக்கு ஒரு முடிவு கட்டித்தான் தீரணும்…அப்புறம் நல்லா யோசிச்சு என்ன பண்றதுனு பாப்போம்…சரியா?“

 

“சரி” என்றபடி தட்டில் விழுந்த தோசையை சட்னியில் தொட்டு சாப்பிட ஆரம்பித்தான் சுந்தரம்.

 

இது போன்ற நேரங்களில் எப்போதும் நினைவில் வரும் அண்ணனின் சொற்களை (“இந்தப் பெண் நம் குடும்பத்திற்கு சரியாகப் பொருந்தி வருவாள்”) இப்போதும் நினைத்துக் கொண்டான் சுந்தரம்.

 

o

 

Series Navigationநண்பர் வீட்டு புதுமனை புகுவிழாஜப்பானிய சிகோ கதைகள்
author

செல்வராஜ் ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *