நகராத அம்மிகள்

This entry is part 11 of 17 in the series 23 ஜனவரி 2022

 

            ஜோதிர்லதா கிரிஜா

(குங்குமம் 25.07.2003 இதழில் வந்தது. மாற்றம் எனும் சேது-அலமி – சென்னை 600 017 – வெளியீட்டில் இடம் பெற்றது.)

      சங்கரராமனுக்கு வியப்பாக இருந்தது. தங்கள் திருமணத்துக்கு முன்னால் தான் அறிந்திருந்த லதாவுக்கும், இன்றைய லதாவுக்குமிடையே புலப்பட்ட வேறுபாடு அவனை உறுத்தியது. அதிலும் கண்டிப்புக்கும் கறாருக்கும் பேர்போன ஒரு காவல்துறை அதிகாரியின் மகளான அவள் இப்படி ஒரு மாறுபட்ட இயல்பினளாய் நடந்து கொள்ளுவாள் என்பது அவன் சற்றும்  எதிர்பாராத ஒன்றாக இருந்தது. அவனுடைய தங்கைகள் இருவரும் கூட அவனைப் போலவே காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். எனினும் அந்த மாப்பிள்ளைகள் இருவருமே திருமணத்துக்குப் பிறகு காசு பிடுங்கும் விஷயத்தில் தங்கள் மெய்யான இயல்புகளைக் கொஞ்சங்கூட வெட்கமின்றி வெளிப்படுத்தியவர்களே.

      கை நிறையச் சம்பளம் கிடைக்கும் நல்ல வேலைகளில் இருந்தும், பேராசை பிடித்து அலையும் தன்னிரு மச்சான்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சங்கரராமனுக்கு ஒரே வெறுப்பாக இருக்கும்.

      லதா கொஞ்ச நாள்களாய்ச் செயல்பட்டு வரும் தினுசைப் பற்றி நினைத்த போதோ அவனுக்குள் ஆத்திரம் பெருகியது. தன் அப்பா ஒரு கண்டிப்பான காவல்துறை அதிகாரி என்பது பற்றி வாய்க்கு வாய் பெருமைப்பட்டுக்கொள்ளும் லதா கூட அப்படி நடந்து கொள்ளுவதைத்தான் அவனால் தாங்க முடியாது போயிற்று. அவர்கள் இருவரும் காதலித்த போது அவன் அவளை நேர்மையானவளாகத்தான் அறிந்திருந்தான். அக்கம்பக்கத்துப் பெண்களைப் பார்த்து அவளும் ஆசை பிடித்தவளாகிவிட்டாள். ‘ஏன்தானிப்படி  ஒரு நப்பாசையோ இந்தப் பெண்களுக்கு’என்று அவனுக்கு ஒரே வெறுப்பாக  இருந்தது.

      நாலு வீடுகள் தள்ளி இருந்த வசந்தா அவனுடைய அலுவலக நண்பன் முரளியின் மனைவிதான். திருச்சியிலிருந்து மாற்றி வந்து மூன்று மாதங்கள்தான்  ஆகின்றன. தற்செயலாய்க் கோயிலில் இரண்டு பெண்களும் சந்தித்துக்கொண்ட போதுதான் அவர்களிடையே அறிமுகம் ஏற்பட்டு இப்போது லதா அந்தப் பெண்ணுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அதிருப்தி யடையும் நிலை வந்துவிட்டது. போதாக் குறைக்கு அவள் தன் வீட்டு விழா ஒன்றுக்கு அழைக்க, இவளும் போய்வந்தாள். அன்றைக்குத்தான் அந்த அனர்த்தம் பிடித்திருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவனும்தான் அவளுடன் சென்றிருந்தான். அவனது வீட்டின் அகல நீளங்கள் அவனையும் அயர்த்தியதென்னவோ உண்மைதான். புதிதாக மாற்றலாகி அயலூரிலிருந்து வந்தவனாதலால், ஒரு வேளை அவன் பரம்பரைப் பணக்காரனாக இருக்கக் கூடும் என்றுதான் அவனுக்கு எண்ணத் தோன்றியது.

      ஆனால் அப்படியன்று என்பதை லதா மிக விரைவில் கண்டுபிடித்து அதை அவனுக்குச் சொல்லவும் செய்தாள். முதன்முறை சாதாரணமாகத்தான் சொன்னாள்.

       “என்னங்க! உங்க ஃப்ரண்டு – அதான் அந்த முரளி – நிறைய லஞ்சம் வாங்குவாராமே? அந்தப் பொண்ணுதான் சொல்லிச்சு. … உங்களை விட செர்வீஸ் கம்மிதானாம்.”

      அவள் குரலில் தொனித்த எதுவோ அவனுள் ஒரு நெருடலை விளைவித்தது. ஒரு மாதிரியான ஒப்பிடலாய்க்கூட அவளது குரல் ஒலித்ததாய் அவன் எண்ணினான். எனினும் தான் நினைப்பது சரியாக இருக்காது என்று உடனேயே அந்த ஊகத்தைத் தன் உள்ளத்திலிருந்து விரட்டினான்.

      ஆனால் தனது உள்ளுணர்வு  சரிதான் என்பதைக் கொஞ்ச நாளிலேயே அவன் தெரிந்துகொள்ள வாய்த்தது. பிறிதொரு சமயம் இன்னொரு நண்பனின் வீட்டிற்கு அவன் கொண்டாடிய புதுமனை புகு விழாவுக்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றிருந்த போது அங்கேயே அவளது முகமாற்றத்தை அவன் கவனித்துவிட்டான். அவளது இயல்பான முகத்துச் சிரிப்புக் காணாமல் போய்விட்டிருந்தது. ஏதோ ஒப்புக்காக எல்லாருடனும் அவள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாளே தவிர, அந்தச் சிரிப்பில் உயிரே இல்லை என்று அந்த இடத்திலேயே அவன் எண்ணினான்.

      சுற்றி வளைக்காமல் அவள் உடனே  விஷயத்துக்கு வந்துவிட்டாள். “பின்னே என்னங்க? எல்லாரும் சொந்த வீடு கட்டுறாங்க. இத்தனைக்கும் நீங்க அவங்களை யெல்லாம் விட சீனியர்.  நமக்கும் ரெண்டு பசங்க ஆயாச்சு. அவங்களை முன்னுக்குக் கொண்டுவரணுமா இல்லியா? நான் அதிகம் படிக்காதவ. ப்ரைவேட் கம்பெனியில கொறஞ்ச சம்பளத்துக்கு வேலை பாக்குறவ. நீங்க அப்பிடி இல்லியே! அவங்கல்லாம் மட்டும் எப்பிடி இவ்வளவு சம்பாதிக்கிறாங்க? அவங்க வீடுங்கள்ல யெல்லாம் எத்தனை அழகழகான விலை உசந்த பொருள்கள்ளாம் சேர்த்து வச்சிருக்குறாங்க! நாமளும் இருக்கமே!”

       “நாமளும் இருக்கமேன்னு உன்னையும் வேற ஏன் சேத்துக்கறே, லதா? ‘நீங்களும் இருக்கீங்களே!’ன்னு வெளிப்படையாவே கேளு.”

       “சரி. அப்படியே கேக்குறேன். எப்படிங்க அவங்களால் முடியுது? உங்களால மட்டும் முடியல்லே?”

       “போலீஸ் இன்ஸ்பெக்டரா யிருந்த உங்கப்பாவைப்பத்தி நீ எத்தினி வாட்டி எங்கிட்ட ‘லஞ்சமே வாங்காதவரு’ ன்னு பெருமையாப் பேசியிருக்குறே? நானும் அப்படிப்பட்ட ஆளுதான். அதனாலதான் என்னால அளவுக்கு மேல சம்பாதிக்க முடியல்லே. இப்ப என்ன நம சோத்துக்கு இல்லாம பட்டினியா கெடக்குறோம்? இல்லே, துணிமணிக்குத்தான் பஞ்சமா? நீ ஆசைப்பட்டுக் கேட்டது எதையாச்சும் நான் வாங்கிக் குடுக்காம இருந்திருக்கேனா? சொல்லு. நாமும் ஒரு நாள் வீடு கட்டத்தான் போறோம். ஆனா அதுக்குக் கொஞ்ச நாள் ஆகும்.”

       “போதும்! நீங்க எப்ப கட்டுறது, எப்ப நாம அங்கே குடி போறது? நம்ம கடைசி காலத்துலதான். அப்ப நான் ஒரு தலை நரைச்ச கெழவியாகி எந்த ஆசையும் இல்லாதவளாயிடுவேன். அப்ப நீங்க வீடு கட்டினா என்ன, கட்டாட்டி என்ன?”

       சங்கரராமன் அதிர்ந்து போனான்: “என்ன பேச்சு இது, லதா? நாம வேலை செய்யிறதுக்குத்தான் நமக்குச் சம்பளம் தர்றாங்கல்ல? அப்ப லஞ்சம் வேற வாங்கலாமா?  நாம செய்ய வேண்டிய கடமையைச் செய்யிறதுக்குப் பொது மக்கள் கிட்டேருந்து அதிகப்படியா வேற காசு கேக்கலாமா? தப்பில்ல? அப்படி வாங்குறவங்க உருப்படவே மாட்டாங்க. அவங்க பிள்ளைகளும் நல்லாவே இருக்க மாட்டாங்க.”

      “போதும் உங்க வேதாந்தம்.  நான் பார்த்த வரையில அவங்கல்லாம் நல்லாத்தான் இருக்குறாங்க.”

       “அப்படி நெனைக்கிறது தப்பு, லதா. வெளி உலகத்துக்கு வேணா அவங்க சந்தோஷமா இருக்குற மாதிரி தெரிவாங்க. ஆனா உள்ளுக்குள்ள அப்படி இல்ல.”

       “ஆ…மா!  நீங்கதான் புகுந்து போய்ப் பாத்தீங்களாக்கும்! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவங்கல்லாம் நல்லாத்தான் இருக்குறாங்க. நகையென்ன, நட்டென்னன்னு ஜொலிக்கிறாங்க. ஒவ்வொருத்தியும் கட்டுற பொடவையைப் பாத்தா,  அவங்க எதிர்ல நான் ஒரு பிச்சைக்காரி மாதிரி எனக்கே தோணுது. அவங்களோட ஒப்பிட்டா, நாம பொழைக்கிறது நாய்ப் பொழைப்புங்க!”

       சங்கரரமன் முன்னைக்கட்டிலும் மிக அதிகமாக அதிர்ந்து போனான்.  

       “எப்பவாச்சும், ஏதாச்சும் கொறை வச்சிருக்கேனா உனக்கு? சொல்லு.”

       “கொறை வச்சிருக்கேனான்னா கேக்குறீங்க? சரியாப் போச்சு, போங்க! உங்க ஃப்ரண்ட்ஸ்ங்க பொஞ்சாதிங்களோட ஒப்பிட்டா      நான் பிச்சைக்காரி தாங்க. இன்னைக்குப் போன விழாவில அவங்க வீட்டு வேலைக்காரி கூட என்னைய விட நல்லா ட்ரெஸ் பண்ணிட்டிருந்தா.”

       “மானத்தை மறைக்கத்தான் துணின்னு நான் நெனைச்சுக்கிட்டிருந்தேன். நாம கட்டுற துணியால மானத்தை வாங்கவும் முடியும்னு இப்ப நீ சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.”  

“இன்னொண்ணுங்க. அவங வீடுங்கள்ளே யெல்லாம் என்னென்ன சாமான்களை வாங்கிக் குமிச்சிருக்காங்க! நம்ம வீட்டுலயும் சோஃபா செட்னு ஒண்ணை வாங்கிப் போட்டிருக்கீங்களே! உக்காந்தா உறுத்துற மாதிரி!”

       “உன்னையப் பொண்ணு கேட்டு நான் உன் வீட்டுக்கு வந்தப்ப, ‘என்னோட வருமானம் இம்புட்டுத்தான். நான் லஞ்சம் வாங்காதவன். அதனால மத்தவங்களைப் போல என்னால நாலு காசு பாக்க முடியாது’ ன்னு நான் சொன்னப்ப உங்கப்பா எம்புட்டு சந்தொஷப்பட்டாரு! மறந்து போயிடிச்சா? இப்ப நீ இப்படிப் பேசுறது அவருக்கு எம்புட்டு ஏமாத்தமாயிருக்கும்!”

       “ஆ…மா! நீங்க லஞ்சம் வாங்குறதை அவரால பாக்க முடியுமாக்கும்! லஞ்சம் வாங்கக் கூடாதுன்ற கொள்கையால அவரு எங்கம்மா வயித்தெரிச்சலை எப்படியெல்லாம் கொட்டிக்கிட்டாருன்னு எனக்குத்தானேங்க தெரியும்? காதுலயும் மூக்குலயும் பளிச்னு மத்தப் போலீஸ்காரங்க பொஞ்சாதிங்க மாதிரி வைரம் ஜொலிக்கல்லைன்னு எங்கம்மாவுக்கு இருந்த வருத்தமும் ஏமாத்தமும் எனக்குத்தானேங்க தெரியும்?”

       மனத்துள் கனன்றுகொண்டிருந்த எரிச்சலையும் மீறிக்கொண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது: “இதா பாரு! காது நல்ல விஷயங்களைக் கேக்குறதுக்கும், மூக்கு உசிரோட இருக்குறதுக்காக மூச்சு விடுறதுக்கும் கடவுள் குடுத்த அவயவங்க! தோடும் மூக்குத்தியும் போட்டுக்குறதுக்காக இல்லே. தெரிஞ்சுக்க!”

       “அடேங்கப்பா! எப்பேர்க்கொந்த கண்டுபிடிப்பு! காதுவலி வர்றதுக்காகவும், சளி பிடிக்கிறதுக்காகவும்னுல்ல இத்தினி நாளும் நான் நெனைச்சுக்கிட்டிருந்தேன்!”

       “கரெக்ட்! அதுக்காகவும்தான். மனுசங்க நேர்மையா நடக்கல்லேன்னா வியாதிகளும் வருமில்ல! நீ இப்ப சொன்னதும் சரிதான்!”

       “என்ன, கிண்டலா? இத பாருங்க! எங்கப்பா போய்ச் சேந்தாச்சு. நீங்க லஞ்சம் வாங்குறதையும் வாங்காததையும் அவரு பாக்கப் போறதில்ல. நமக்கும் நாலு காசு வேணுமில்ல?”

       “என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறே நீ! இதுக்கு மேல இதைப்பத்தி உன்னோட வாதாட நான் தயாராயில்ல. … இன்னும் பேசினா பல்லு முப்பத்திரண்டையும் பேத்துடுவேன்! ஜாக்கிரதை!”

       “இது ஒண்ணு சொல்லிடுவீங்க ஆம்பளைங்க! பதில் சொல்ல வழி இல்லைன்னா கையை நீட்டிடுவீங்க! …”

       சங்கரராமனுக்குப் பொறுமை அடியோடு போய்விட்டது. அதற்கு மேலும் அவளெதிரே நின்று கொண்டிருந்தால் தான் அவளை அடித்துவிடுவானோ என்கிற அச்சம் அவனுள் எழ, அவன் சட்டென்று அவ்விடம் விட்டகன்று மொட்டை மாடிக்குப் போய்ப் படுத்தான்.

      … அன்றைய கடும் சொல்லாடலுக்குப் பிறகு அவர்களின் இயல்பான பேச்சுவார்த்தை அடியோடு நின்று போயிற்று. அவன் எத்தனையோ தடவைகள் அவளுடன் சமரசம் செய்துகொள்ள முயன்றும் அவனால் அவளது பழைய உறவைப் பெற முடியவில்லை. லஞ்சம் வாங்கி நகைகளும் இன்ன பிற பொருள்களுமாக வீட்டை நிரப்ப அவன் தயாராக இருந்தாலல்லாது அவனுடன் சமாதானமாய்ப் போக அவளும் தாயாராக இல்லை. ஆக மொத்தம், அவர்களிடையே இருந்த தாம்பத்திய உறவும் அடியோடு நின்று போயிற்று.

      அதன் பிறகு வந்த அவர்களது திருமண நாள் விழாவை வழக்கம் போல் கொண்டாட அவள் அவனை அனுமதிக்கவில்லை. அவளது இந்தப் பராமுகமும் நிராகரித்தலும் அவனைப் பெரிதும் வாட்டினாலும் அவனும் உடலுறவுக்கு ஆசைப்பட்டுத் தன் கொள்கைப்பிடிப்பைக் கைவிடத் தயாராக இல்லை! ஆசை ஆசையாய் அவன் வாங்கிவந்த மல்லிகைச் சரத்தை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கடைசியில் நள்ளிரவுக்கு மேல் அவன் அந்த மல்லிகைச் சரத்தை ஏதோ ஒரு சாமி படத்துக்கு அணிவித்தான்.

      தனக்கு ஒரு நேர்மையான கணவன் கிடைத்திருப்பதற்குப் பெருமைப்படுவதற்குப் பதிலாக, இப்படி மற்ரவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து மனம் குமையும் அவள் மீது அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. …

      …  அன்று அலுவலகத்தில் சாப்பாட்டு வேளையின்  போது அவனுடைய நண்பர்கள் லஞ்சம் வாங்குவது பற்றிப் பேச்செடுத்தார்கள். வாக்குவாதம் சிறிதே நேரத்தில் வலுத்தது.  அந்தப் பேச்சை அவர்கள் தொடங்கியதே தன்னை வம்புக்கு இழுப்பதற்காகத்தான் என்பது சங்கரராமனுக்குப் புரியவே செய்தது. அடிக்கடி இப்படி ஒரு வாக்குவாதத்தை வேண்டுமென்றே அவர்கள் கிளப்பித் தன்னைச் சீண்டுவதற்கு ஒரு முடிவு கட்ட அவன் தீர்மானித்தான்.

       வழக்கம் போல் ரங்கராஜன் ஒரு நையாண்டிப் பெருமூச்சுடன் பேசினான்: “என்னமோ ரொம்பத்தான் அலட்டிக்கிறாங்க சிலரு – தாங்க மட்டுந்தான் யோக்கியனுங்க, மத்தவங்கல்லாம் அயோக்கியனுங்கன்றாப்ல…”

       “அதானே! என்ன செய்யிறது, சொல்லு! அந்த மாதிரி கை நீட்டாத ஆளுங்களுக்குச் சொத்து-பத்து ஏதாச்சும் இருக்குமாயிருக்கும். நம்மள மாதிரி அன்னாடனங்காய்ச்சிங்களா இருக்க மாட்டாங்க. … கண்டு பிடிக்கணும்…”

       “ஒருக்கா, சாமியார் வேஷம் போடுறவங்க பொஞ்சாதிங்க பணக்காரன் பெத்த பொண்ணாயிருக்கும். ஆனா நம்ம பொஞ்சாதிங்க அப்பிடி இல்லியே! அவங்க பிடுங்கலும் தொல்லையும் பொறுக்க மாட்டாம போய்த்தானே கையை நீட்டுறோம்? அப்பிடி வாங்குற லஞ்சத்தையெல்லாம் நாமா வச்சுக்கிட்றோம்? அதை வச்சுப் பொம்பளைங்கதானே கழுத்துலயும் கையிலயும் நகையா வாங்கிப் போட்டுக்கிட்றாங்க? நாமளா மைனர் செய்னும் மோதிரமுமா போட்டுக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்குறோம்?”

       “ஆக மொத்தம் நாம லஞ்சம் வாங்குறதுக்கு இந்தப் பொம்பளைங்கதான் காரணம்குறே! அப்பிடித்தானே”

       “பின்னே?”

       “சங்கரராமனால் அதற்கு மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அந்தச் சாடைமாடையான பேச்சுகளுக்கெல்லாம் இன்று ஒரு முடிவு கட்டியாகவேண்டுமென்கிற முடிவுக்கு வந்துவிட்ட அவன்  தொண்டையைச் செருமிக்கொண்டான்.

        “பொம்பளைங்க மேல வீண் பழி சுமத்தாதீங்க.  நாம ஸ்டெடியா இருந்தா அவங்களால ஒண்ணும் செய்ய முடியாது. நம்ம கையாலாகாத்தனத்தை நாம ஒத்துக்கணுமே ஒழிய, அநாவசியமா அவங்க மேல பழி போடக்கூடாது. … நான் ஒண்ணு சொல்லட்டுமா? அவங்களோட இந்த லஞ்சம் விஷயத்துல நாம ஒத்துழைக்கல்லேன்னா, அவங்க படுக்கையில நம்ம கூட ஒத்துழைக்க மாட்டாங்களேங்கிறது நமக்கும் இருக்கிற காசு ஆசையோட இன்னொரு முக்கியமான காரணம். அதை நாம ஒத்துக்கத் தயாரா யில்லாததுனால பொம்பளைங்க மேல அபாண்டமாப் பழி போட்றோம். வரதட்சிணைக்கு அம்மா-அப்பா மேல பழி போட்ற மாதிரி! அப்படின்னா, நாமெல்லாம் முதுகெலும்பு இல்லாதவங்கன்னுதானே அர்த்தம்? பொஞ்சாதிங்க கெணத்துல விழுந்து சாவுன்னா விழுந்து செத்துடுவமா? எத்தினி பொஞ்சாதிங்க குடிக்காதே, குடிக்காதேன்னு தலை தலையா அடிச்சுக்குறாங்க? அதைக் காதுலயாச்சும் வாங்கறோமா? என்னமோ பேச வந்துட்டானுங்க! பெரிஸ்ஸா!”

      அவர்களில் குடிக்கும் வழக்கமுள்ள மூன்று பேருக்கு முகம் விழுந்துவிட்டது. மற்றவர்க்குக் குடிக்கும் பழக்கமில்லாவிடினும், வேறு காரணங்களுக்காக அவர்களின் முகங்கள் அறுந்து தொங்கின. சங்கரராமனின் குரலில் ஒலித்த சத்தியத்துக்கு எதிராக அவர்களில் யாராலும் உடனுக்குடனாய்க் குரலெழுப்ப முடியவில்லை. … எனினும் தன்னை அவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பழி வாங்கிக்கொள்ளுவார்கள் என்பதில் அவனுக்கு ஐயமில்லை.

       வீடு திரும்ப பைக்கில் ஏறிய கணத்தில் அவனுக்குள் ஒரு சிந்தனை தோன்றியது. லதாவை வழிக்குக் கொண்டுவருவதற்கான குறிப்பைக் கொடுத்த அந்தச் சிந்தனையை வாழ்த்தியவாறு அவன் பைக்கை விரைவுபடுத்தினான்.

      அன்றிரவு அவனும் அவளும் வழக்கம் போல் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டார்கள். குழந்தைகள் படிக்கச் சென்றதும், “லதா! உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். கொழந்தைங்க முன்னால பேச முடியாது …” என்றான் மெதுவாக.

       “சொல்லுங்க.”

       “ஒரு பவுன் நகைக்கு எத்தினி ராத்திரி? அதுக்கு ஏதாச்சும் கணக்கு வச்சிருக்கியா?”

        கணம் போல் அதிர்ந்து போன லதா உடனேயே சமாளித்துக்கொண்டாள்: “சீ! என்ன பேச்சுப் பேசறீங்க?”

       “பின்ன? உன்னோட நிராகரிப்புக்கு வேற என்ன அர்த்தமிருக்க முடியும்? ‘லஞ்சம் வாங்கிட்டு வந்து குடுத்தா நம்ம தாம்பத்தியம் தொடரும்; இல்லாட்டி நான் தனி, நீங்க தனி’ ன்னு சொல்றவ உண்மையில ஒரு குடும்பப் பொண்ணுதானான்னு யோசி. ஒண்ணும் அவசரமில்ல. நிதானமா பதில் சொன்னாப் போதும்…”

       திகைத்து நின்ற அவளது நிலையிலிருந்தே தான் அவளை வெல்லப் போவதை ஊகித்துவிட்ட மகிழ்ச்சியுடன் அவன் ஒரு சினிமாப்பாட்டை முனகியபடி தன்னறைக்குப் போனான்….

…….

Series Navigationவிமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறைவேளிமலையின் அடிவாரத்தில்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *