என் காதலி ஒரு கண்ணகி 

This entry is part 3 of 15 in the series 6 பெப்ருவரி 2022

 

 
 
 
 
(குரு அரவிந்தன்)      
 

நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி,  ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.
 
மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள்  தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன்.
‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.
 
சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?
 
டெனிம் பான்ஸ்சில் மேகவர்ண போலோ சேட்டை இன் பண்ணியிருந்தாள். நைக்கி ஷ_வில் லேற்ரஸ் நாகரீகம் தெரிந்தது.
 
முன்னே தொங்கிய கூந்தலை விரல்களால் கோதிவிட்டு என் நெஞ்சை ஒரு கணம் தவிக்க வைத்தாள். அவளின் ‘இன்ரிமேற்’ மணத்தது என் கையில்!
ஏச்சு வாங்கியும் சூடு சொரணை இல்லாமல், ஏதோ ஒரு சக்தி எனக்குள் புகுந்து இன்னும் ஒரு முறை, ஒரே ஒரு தடவையாவது அவளைத் திரும்பிப் பார் என்று மனசு ஏங்கிற்று.
 
ஆனால் பல இனமும், மதமும், மொழியும் உள்ள இந்த நாட்டில் ‘மனதைக் கண்டபடி அலைய விடாதே’ என்று போராடிய மனசு மறுபுறம் எச்சரிக்கை செய்தது. ஏனோ இந்த நாட்டுப் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் என்னால் மூழ்கிப் போக முடியவில்லை!
 
உடை மாற்றிக் கொண்டு, பிற்ஸ்பேர்க்கில் உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்குப் போகும் அவசரத்தில் அவள் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வண்டி ஓட்டும் போது ஹைவேயில் கவனம் செலுத்தினேன். அவளை மீண்டும் பார்ப்பேனா என்று மனதில் ஏக்கம் தெரிந்தது?, எதையோ பறிகொடுத்து விட்டுச் செல்வது போன்ற உணர்வு எனையாட்கொண்டது. அந்தத் தேவதையின் தரிசனம் மீண்டும் கிடைக்குமா என்ற ஏக்கம் என்னோடு தொடர்ந்தது.
 
வெங்கடடேஸ்வர தீப ஆராதனையின் போது கண்களை மூடிப் பிரார்த்தித்தேன். மனதில் சஞ்சலம். எதையோ பறிகொடுத்த ஏக்கம். மனசு குரங்காய் அங்குமிங்கும் தாவியது.
 
கண்ணுக்குள் அவள் தொலைக் காட்சியானாள். அழகிய கூந்தல் முகத்தை இதமாய் வருடிச் செல்ல, காதுக்குள் மெல்லப் புதுக் கவிதை சொன்னாள். காதல் வசப்பட்டவர்களுக்கு எல்லாமே கவிதையாத்தான் தோன்றுமோ? கோயிற் பிரகாரம் என்பதால் வேண்டாத நினைவுகளை ஒதுக்கிவிட முயன்றேன்.
 
‘என் ஆருயிராய் நின்றானே, இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே அன்பருக்கன்பனே….!’. வார்த்தைகள் காதுக்குள் தேனாய்ப்பாய, செந்தமிழ்த் தேன்மொழியாள் யாரென்று கண்திறந்து பார்த்தேன்.
 
‘ஸ்ருப்பிட்’ அதே குரல் தமிழில்!  வெங்கடேஸ்வரா என்னைச் சோதிக்கிறாயா?
எங்க இனமா? நம்பமுடியாமல் என்னையே கிள்ளிப் பார்த்தேன். சாட்சாத் அவளே தான்! சேலை கட்டி வந்த நிலவோ? கண்களை மூடிக் கைகளைக் கூப்பி பக்திப் பரவசமாய் சிவபுராணம் படித்தாள். நீல வர்ணத்தில் அந்தச் சேலை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது.
 
வண்ணநிலவே நீ விண்ணை விட்டு வந்ததெப்போ? என்னிதயத்தில் வைத்து உன்னை நான் ஆராதிக்க எனக்கொரு சந்தர்ப்பம் தருவாயா?
 
வெங்கடேஸ்வரர் அந்த சந்தர்ப்பத்தை எனக்காக ஏற்படுத்தித் தந்ததாகவே நான் நினைத்தேன். இல்லாவிட்டால் மீண்டும் தரிசனம் தருவாளா? கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடலாமா?
 
ஆலயத்தின் உணவகத்தில் தயிர்ச்சாதமும், புளிச்சாதமும் பிரபலமானது. உணவு மண்டபத்தில் தயிர்ச்சாதத்தையும் புளிச்சாதத்தையும் அவள் ருசித்துச் சாப்பிட்ட போது அவளுக்கு விக்கல் எடுத்தது. கண்ணிலே நீர் முட்ட நெஞ்சிலே கைவைத்துக் கொண்டு விக்கினாள். எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்த என் கவனம் முழுவதும் அவளிடம் போனது. உதவி செய்யலாமா என்று என் மனம் முடிவெடுக்கு முன்பே என் கைகள் தண்ணீர் டம்ளரை எதிரே இருந்த அவளிடம் அவசரமாய் நீட்டின. மனசு படபடத்தது, அவள் ஒரு நிமிடம் தயங்கினாலும் பின் அதை வாங்கி அருந்தி விட்டு நன்றி சொன்னாள். அவள் நினைவாக டம்ளரை மறக்காமல் எடுத்துக் கொண்டேன். அவள் கை பட்ட இடத்தில் என் உதட்டால் கவிதை வரைந்தேன். மீண்டும் என்னை மறந்தேன்! எதிலும் நாட்டமில்லாமல் குழம்பிப்போனேன்.
 
நயாக்கராவில் பார்;த்தேன், பார்த்தாள், பிற்ஸ்பேர்க்கில் கதைத்தேன், கதைத்தாள், ரொரன்ரோவில் வளர்த்தேன், வளர்த்தாள். வளர்ந்தது எங்கள் காதல்.
 
தமிழ்ப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் ஊறிப் போனதாலோ அல்லது அவள் மீது நான் வைத்திருந்த அதீத காதலாலோ அவளது ஒவ்வோர் அசைவும் என்னைப் பெரிதாகப் பாதித்தது. அன்று வேலன்டைன்ஸ்டே. அவள் பிறந்தது கூட பெப்ரவரி 14ம் திகதிதான். மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் எனக்காகப் பூங்காவில் காத்திருந்தாள்.
‘மதுமிதா…..மெனி ஹப்பி றிட்டேன்ஸ்…..’ கையிலே கொண்டு வந்திருந்த மலர்க் கொத்தோடு வேலன்டைன், பார்த்டே கார்ட்டுகளையும் கொடுத்தேன்.
 
ஆசையோடு வாங்கிக் கொண்டு ‘தாங்யூ’ சொன்னவள்,
‘அவ்வளவுதானா?’ என்றாள்.
‘தெரியுமே…..கேட்பாய் என்று! இதோ உனக்காக வாங்கினேன்….பிரித்துப் பாரேன்’.
அவள் பிரித்துப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்தமான ‘இன்ரிமேற்’.
‘தாங்யூ சோ மச்’ என்றாள் மீண்டும், மனசு குளிர்ந்தது.
‘முட்டாள் காதலனே…மலர்ச் செண்டைத் தரும்போதாவது என்னை அணைத்து ஒரே ஒரு முத்தமாவது தந்திருக்கக் கூடாதா? என் மனம் ஏங்குதே’ என்று நினைத்துக் கொண்டாளோ தெரியவில்லை, ஏனோ பெண்மை வெட்கப்பட முகம் சிவந்து மௌனமானாள்.
 
‘மதுமிதா….எப்படி பிறந்த நாள் கொண்டாட்டம்’
 
‘ஓ…அதுவா…காலையிலே ஆபிசுக்குப் போனேனா….ரீட்டா, ஜெனட், ஜெனீபா…எல்லோரும் அணைத்து கன்னத்திலே முத்தம் தந்து விஷ் பண்ணினாங்க. சிவா அப்புறம் பாரேன் பக்கத்திலே இதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்ற பீற்றர்,  ‘ஹெவ் எபவுட் மீ’ என்று சொல்லி திடீர் என என்னை அணைத்து கன்னத்திலே ஒரு முத்தம் கொடுத்திட்டான்.
 
அது மட்டுமா கன்னத்திலே முத்தம் கொடுத்து விட்டு வெகுளிபோல ‘சோ….சொ..வ்ற்’ என்று சொன்னானா, எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்து விட்டார்கள்.’
அவள் தனது கன்னத்தைத் தடவிப் பார்க்க, சிவா முகம் கறுத்துச் சங்கடப் பட்டான். பெரிய சாதனை செய்தது போல இதை என்னிடம் வந்து சொல்கிறாளே! எங்கே போய் முடியுமோ?
 
‘அவன் முத்தம் கொடுக்க நீ அனுமதிச்சியா?’
 
‘நான் என்ன செய்யட்டும் சிவா? இது அவர்களின் கலாச்சாரம். இதை அவர்கள் பெரிய விடயமாக எடுப்பதில்லை’.
 
‘அதற்காக இன்றைக்கு முத்தம் என்பான்……நாளைக்கு கட்டி அணைப்பான்….எல்லாவற்றுக்கும் ஒத்துப் போவியா?’
‘சிவா…ஏன்…..இந்த விடயத்தைப் பெரிது படுத்துகின்றாய் நான் அதை உடனேயே மறந்துவிட்டேன். உன்கிட்டே எதையும் மறைக்கக் கூடாது என்று தான் சொன்னேன். அவ்வளவுதான்,’
 
‘நீ செய்தது சரி என்று நியாயப் படுத்துகின்றாயா?’
‘ஏன் இப்போது வேண்டாத விவாதம். இந்த நாட்டில் இப்படியான தினங்களில் ஆணும் சரி பெண்ணும் சரி கன்னத்தில் முத்தம் கொடுப்பது சகஜம். எயர்போட்டில் யாராவது நண்பர்கள், உறவினர்கள் வந்தால் நாங்கள் கட்டி அணைப்பதில்லையா? அதே போலத் தான் இதுவும். இதில் எந்த விகல்பமும் இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. மனசு சுத்தமாய் இருந்தால் போதும். இங்கே பெண்கள் வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியே வந்தால் இதை எல்லாம் சமாளித்து பொறுத்துத் தான் போகணும்.’
 
‘அதற்காக…..எங்கள் பண்பாடு என்னவாவது?’
‘எது….பண்பாடு? அவன் என்னுடைய விருப்பமில்லாமல் என்னை அணைத்தது உண்மைதான். அதற்காக என்னுடைய கற்புப் போயிடிச்சு என்று சொல்ல வருகிறாயா? அப்படி என்றால் ஊரிலே தினமும் எத்தனையோ ஆண்களுக்கிடையே பஸ்சிலே நெரிந்து போகும் போது எத்தனை தடவை என்னோட கற்பு பறி போயிருக்கும்?’
 
‘கற்பைப் பற்றிச் சொல்ல நீ என்ன கண்ணகியா?’
அவளுக்கு முகத்தில் ஓங்கி அறைந்தாற் போல் இருந்தது. இந்த நாட்டிலே இருந்து கொண்டா இவன்  இப்படிக் கதைக்கிறான்?
‘சிவா நீயா இப்படிச் சொல்கிறாய்? என்னாச்சு உனக்கு?’
யாரோடு அவள் மனதால் வாழ்ந்து கொண்டிருந்தாளோ, யாரிடம் தன்னை அர்ப்பணிக்க நினைத்தாளோ அவனா இப்படிச் சொல்கிறான்? காதலியாய் இருக்கும் போதே இப்படிச் சந்தேகப் படுபவன் நாளை மனைவியானால் எப்படிச் சந்தேகப்படுவான்?
 
அவள் ஒன்றுமே புரியாமல் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தாள். பெண்மை பலவீனப்படும் போதுதான் ஆண்களின் உண்மை ரூபம் வெளிவருவதுண்டு. பெண் என்றால் ஏன் சந்தேகப் படுகின்றார்கள். இந்த ஆண்கள் எல்லோருமே சந்தேகப் பிராணிகளாய்தான் இருப்பார்களோ?
 
‘என்ன முறைத்துப் பார்க்கிறாய்? நீ என்ன பத்தினியா நான் எரிந்து போவதற்கு?’ இந்த வார்த்தையைக் கேட்டதும் அவளது முகம் சிவந்து கண்கள் கலங்கின.
 
வார்த்தையால் என்னமாய்ச் சுடுகிறான்.
 
அவளுக்கு அவன் மேல் வெறுப்புத் தான் வந்தது. இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப வாழ நினைக்காதவன். பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாதவன். பெண்மையை மதிக்கத் தெரியாதவன். இவனுக் கெல்லாம் காதல் ஒரு கேடா?
 
 
‘ஆமாம்….நான் பத்தினி தான். மனதாலும் உடலாலும் நான் பத்தினி தான். உன்னை எரிக்க முடிகிறதோ இல்லையோ ஒன்றை மட்டும் என்னால் எரிக்க முடியும். எப்போ நீ என்மேல் சந்தேகப் பட்டாயோ அந்த வினாடியே காதல் என்கிற அந்தப் புனிதமான தொடர்பை நான் எரித்து விட்டேன். இதை மட்டும் தான் என்னாலே எரிக்க முடியும். உன்னைப் பார்த்து நீ கற்போடு இருக்கிறாயா என்று என்னாற் திருப்பிக் கேட்க முடியும்! அப்படி ஒரு கேள்வியைக் கேட்டு உன்னை சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை! அது எனக்குத் தேவையுமில்லை! இனி எந்த ஜென்மத்திலும் உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீயாரோ, நான் யாரோ. ஒரு பெண்ணோட மனசைப் புரிஞ்சு கொள்ள முடியாத உங்களுக் கெல்லாம் எதுக்கப்பா காதல்?’
 
அவன் கொடுத்த மலர்க் கொத்தை வீசி எறிந்து விட்டு அவள் வேகமாக நடந்தாள். தான் பேசியது வினையாகி விட்டதோ என்று பயந்தான் சிவா. எப்படியாவது அவளைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று நினைத்தான். காலடியில் விழுந்த அந்த மலர்க் கொத்தை எடுத்துக் கொண்டு அவளுக்கு முன்னால் ஓடிவந்து வழி மறித்தான்.
‘மதுமிதா…ஒரு நிமிஷம்’
 
‘என்ன?’ என்பது போலக் கோபத்தோடு முறைத்தாள்.
‘உன்கிட்ட கொடுத்த வெலன்டைன் கார்ட்டைப் பார்த்தியா?’
‘ஏன்?….எனக்கு வேணாம்…நீயே வெச்சுக்கோ’ அவள் வெறுப்போடு நீட்டினாள்.
‘ப்ளீஸ்…எனக்காக…ஒரு தடவை வாசித்துப் பாரேன்.’
உதடுகள் துடிக்க, அவள் பிரித்து வாசித்தாள்.
 
‘மதுமிதா நான் என்ன சொன்னாலும் நீ சிரித்துக் கொண்டே சமாளிக்கிறாய். உனக்குக் கோபமே வராதா என்று நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. கோபம் வந்தால் நீ எப்படி இருப்பாய் என்று உன்னைச் சீண்டிப் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. இன்று முயற்சி செய்து பார்க்கப் போகிறேன். அந்த முயற்சியில் நான் தப்பாக எதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னித்துவிடு.’
 
கார்ட்டை வாசித்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இப்போ அவளின் கோபம் கொஞ்சம் தீர்ந்தது போலத் தெரிந்தது. ஆனாலும் அவளது மௌனம் அவனைப் பாதித்தது.
 
‘என்மேலே கோபம்னா நடந்ததுக்காக என்னை மன்னிச்சுடு. அதற்காக இப்படி மௌனமாய் இருந்து என் மனசை நோகடிக்காதே…ப்ளீஸ்!’
அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு அவன் சொல்வது தனக்குக் கேட்காதது போலப் பார்வையை எங்கேயோ செலுத்தினாள்.
 
‘ப்ளீஸ்……என்னைத் திட்டணும் என்றால் திட்டிக்கோ’ நடந்ததுக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டாலும் பரவாயில்லை என்று நினைத்தான்.
‘நீங்க மட்டும் என்னவாம்…வேடிக்கைக்கும் ஒரு அளவிருக்கு. ‘தெயர்ரிஸ் ஏ லிமிட் ஃபோர் எவ்றித்திங்’. பொய்யாய்க் கோபம் காட்டினாள்.
 
‘மன்னிச்சுடு….மதுமிதா..இந்த நாட்டிலே எப்படி வாழணும், எப்படிப் பழகணும் என்றெல்லாம் எனக்குத் தெரியாதா? நீ சொன்னது அத்தனையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் கூட ஒரு உண்மையை உங்கிட்ட மறைச்சிட்டேன். சொன்னால்; நீ கோபப்படுவாயோன்னு……?’அவன் வார்த்தையை முடிக்காமல் அவளைப் பார்த்தான்.
‘என்னவாம்?’என்றாள் அவசரமாக.
 
‘என்னோட பார்த்டேயன்று எங்க ஆபீசிலே என்கூட வேலைசெய்யும் மாரியா இதேபோல என்னை அணைச்சு முத்தம் கொடு………!’ 
அவன் சொல்லி முடிக்கு முன்பே,
 
‘யூ,..யூ,,,..பாஸ்ட…….!’ அவள் அவனது கையில் இருந்த பூங்கொத்தைப் பறித்து அதனை ஓங்கிக் கொண்டு பொய்க் கோபத்தோடு அவனைத் துரத்த அவன் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஒரு கணம் திகைத்துப் போக, ‘ஓடாதே’ என்று காதல்மனசு அவனது காலைக் கட்டிப்போட,
 
அவன் அவளது கைகளுக்குள் சரணடைந்தான்.
 
Series Navigationமனிதனின் மனமாற்றம்எமிலி டிக்கின்சன் கவிதைகள் [19 -20]
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *