துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு  என்ன?

This entry is part 14 of 15 in the series 13 மார்ச் 2022

 

 
 
 
 
 
குரு அரவிந்தன்
 
‘ரஸ்யாவால் உக்ரைனின் சில நகரங்களைக் கைப்பற்ற முடியுமே தவிர முழுநாட்டையும் கைப்பற்ற முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். பேச்சு வார்த்தை மூலம் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு துருக்கி நாடு இரண்டு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ரஸ்யா – உக்ரையின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் துருக்கி நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வெளிவிவகார அமைச்சரான டெம்ரோ குலீபாவும், ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவும் துருக்கிக்கு வருகை தந்திருந்தனர். ஏற்கனவே பெலாரஸில் இரண்டு தடவைகள் இரண்டு தரப்பினருக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், எந்த முடிவையும் எட்டவில்லை. அதே போலத்தான் இம்முறையும் எந்த முடிவுக்கும் இருதரப்பினரும் வரவில்லை. ‘பட்டால்தான் தெரியும்’ என்பதுபோல, இரண்டு தரப்பினரும் பட்டுத் தெளிவதற்காகக் காத்திருப்பது போலத் தெரிகின்றது.
 
உக்ரைன் ரஸ்ய யுத்தம் 15 வது நாளைக் கடந்த நிலையில் ஆங்காங்கே ரஸ்ய படைகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. மரியுபோலில் உள்ள சிறுவர் வைத்திய சாலை ஒன்றும் தாக்கப்பட்டது. உக்ரைன் மக்களை உளரீதியாகக் களைப்படைய வைப்பதே ரஸ்யாவின் முதல் நோக்கமாகும். அதற்காக விமானத் தாக்குதல்கள், குறிப்பாகக் குடியிருப்புகள் மீது அதிகமாக நடைபெறுகின்றன. காலம் கனியும்போது சுற்றிப்பிடிப்பதுதான் அதன் நோக்கம். அதுவரை உலக நாடுகளின் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது ரஸ்யா. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் போவதாகவும் அறிவித்திருப்பதால், இதைச் சில ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. காரணம் அனேகமான ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவில் இருந்துதான் ஒரு பகுதி எண்ணெய்யைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40 வீதமான எண்ணெய்யை ரஸ்யாவிடம் இருந்தே பெறுகின்றன. எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்தால், ஜெர்மனிக்கான எரிவாயுவைத் தடை செய்யப் போவதாக ரஸ்யா அறிவித்திருக்கின்றது. இதனால் எதிர்பாராமல் கச்சா எண்ணெய் விலை 130 டொலரால் விலை உயர்ந்தது. உக்ரைன் ரஸ்யா பிரச்சனை காரணமாக, மேற்கு நாடுகளில் புகழ்பெற்ற உணவகங்களான மக்டொனால்ஸ், ஸ்ராபக்ஸ், கொக்காகோலா போன்றவை தங்கள் சேவையை ரஸ்யாவில் நிறுத்தி வைத்திருக்கின்றன.
 
18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என் உக்ரைன் அறிவித்திருக்கின்றது. தாய் மண்மீது கொண்ட பற்றினால் உக்ரைன் அழகு ராணியாகத் தெரிவு செய்யப்பட்ட 24 வயதான அன்ஸதேசியா என்ற மிஸ் உக்ரைனும் இராணுவத்தில் இணைந்து போராடச் சென்றிருக்கின்றார். இன்னுமொரு தளத்தில் உக்ரைன் இராணுவத்தில் இணைந்த காதலர்களான லெசியாவுக்கும் வலேரிக்கும் சக இராணுவ தோழர்கள் சென்ற வாரம் திருமணம் செய்து வைத்தனர். ஒரு பக்கம் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்க, இவர்கள் தளத்தில் நின்றதால், இராணுவ உடையிலேயே அவர்களது திருமணம் நடந்தேறியது. உக்ரைன் அரசின் அவசர அழைப்பை ஏற்று வெளிநாடுகளில் வசித்த சுமார் 60,000 உக்ரேனியர்கள் இராணுவத்தில் இணைவதற்காக உக்ரைன் சென்றிருக்கிறார்கள். வெளிநாட்டவர்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் என்ற உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று, உக்ரைனில் படித்துக் கொண்டிரந்த இந்தியா, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் உக்ரைன் இராணுவ உபபிரிவில் இணைந்து சேவையாற்றுகின்றார்.
 
மேற்குலக நாடுகள் ரஸ்யாவின் சொத்துக்களை முடக்கியதால் பங்குச் சந்தையிலும் ரஸ்யா வீழ்ச்சி கண்டது. ரஸ்யாவின் வர்த்தகம், மற்றும் தனிப்பட்டவர்களின் கொடுக்கல் வாங்கலையும் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தடுத்து வைத்திருக்கின்றன. மற்றும் எண்ணெய், எரிவாயு போன்றவற்றுக்கான ரஸ்யாவின் வருமானத்தையும் இலகுவில் பெறமுடியாதபடி கடுமையாக்கி இருக்கின்றன. ரஸ்ய ஜனாதிபதி, மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் தனிப்பட்ட சொத்துக்களும் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றன. ரஸ்யாவின் பெரிய பணக்கார முதலாளிகள் பிரித்தானியாவுக்கு வருவதையும் தடைசெய்திருக்கிறது பிரித்தானியா. இந்த நாடுகள் ரஸ்யாவில் இருந்து வரும் விமானங்களையும், வேறுநாடுகளில் இருந்து வரும் ரஸ்யர்கள் சார்ந்த விமானங்களையும் தங்கள் நாடுகளில் தரை இறங்குவதைத் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
 
இந்த யுத்தத்தை ரஸ்யா வேண்டுமானால் ஒரு வாரத்தில் முடித்திருக்கலாம். ரஸ்யா தன்னுடைய இராணுவப் பலத்தில் மிகக்குறைந்த அளவு சக்தியையே இது வரை உக்ரைன் மீது பாவித்திருக்கின்றது. ரஸ்யாவின் அதி நவீன விமானங்கள் ஒன்றும் இந்த யுத்தத்தில் இதுவரை பாவிக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாக ரஸ்யாவை இந்த யுத்தம் பாதிக்கும் என்று தெரிந்தாலும், உக்ரைனுக்கு யாரெல்லாம் உதவிக்கு வருகிறார்களோ அவர்களும் பொருளாதாரத்தில் பாதிப்பு அடைய வேண்டும், காலம் கடத்தினால் அவர்களே தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் என்பதும் ரஸ்யாவுக்குத் தெரியும். எண்ணெய், எரிவாயுப் பிரச்சனையே எல்லா நாடுகளுக்கும் முக்கியமான பிரச்சனையாக மாறப்போகின்றது. இதனால் எல்லா கட்டணங்களும், முக்கியமாக உணவுப் பொருட்களின் விலை உயரப்போகின்றது. இருப்பில் உள்ள எரிபொருள் முடிவடையும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதே சிறந்தது.
 
உக்ரைன் – ரஸ்ய யுத்தம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, மறுபக்கம் ஐ.நா.வின் ஜெனிவா நடவடிக்கைகள் சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த அமர்வு இடம்பெறுவதுண்டு. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நிகழ்ச்சி சென்ற வாரம் நடைபெற்றது. இலங்கையில் யுத்தம் முடிந்து 12 வருடங்கள் ஆகிய நிலையிலும் ஜெனிவாவில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இம்முறையும் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் தங்கள் கருத்தை வெளியிட்டிருந்தன. ஏற்கனவே இந்த நாடுகள் பற்றியும், அவர்கள் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதையும் தமிழ் மக்கள் அறிந்தே இருந்தனர். ஆகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்காதது ஒன்றும் புதிதாக நடந்தேறவில்லை. தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஜெனிவாவில் எதுவுமே நடக்கப் போவதுமில்லை, காரணம் வல்லரசுகளான ரஸ்யாவும், சீனாவும் ஐ.நா. வில் வீட்டோ வாக்கை வைத்திருப்பதேயாகும். இதைவிட வடகொரியா, பெலாரஸ், சிரியா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக இம்முறை நடந்து கொண்டன. காலத்தைக் கடத்துவதன் மூலம் ஆதாரங்களை அழிப்பது என்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
 
கியூபாவில் நடந்த அரசியல் மாற்றங்கள் ரஸ்யாவை விட்டு கியூபா விலகிச் செல்கிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றது. இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்காவும், பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்ட வரக்கூடாது என்று 2012 ஆம் ஆண்டு அமர்வில் கியூபா பிரதிநிதி குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். 2012 ஆம் ஆண்டு 24 நாடுகளும், 2013 ஆம் ஆண்டு 25 நாடுகளும், 2014 ஆம் ஆண்டு 23 நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தன. எந்தவொரு தீர்மானத்தையும் தோற்கடிப்பதற்கு 24 நாடுகளின் ஆதரவு வேண்டும். எந்த நல்ல விடயத்தை எடுத்தாலும் அரசியல் காரணங்களுக்காக வீட்டோ மூலம் சில நாடுகள் தடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே! ஒற்றுமையாக ஒன்றைச் செயற்படுத்த முடியாத நிலையில், முன்பு இருந்த ஆர்வம் இப்போது உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்கும் இல்லை என்பதும் புரிகின்றது. பெரும்பான்மை இனத்தவர்கள் தங்குளுக்குள் முரன்படுவது போலக் காட்டிக் கொண்டாலும், சிறுபான்மையினரின் விடயங்களில் தங்களுக்குள் ஒன்றுபட்டே செயற்படுகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் மனத்திருப்திக்காகக் காலமெல்லாம், குறைந்தது வருடத்தில் இரண்டு தடவையாவது ஜெனிவாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்ட வேண்டிய நிலையில்தான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாம் இருக்கின்றோம்.
 
 
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஐ.நா. சபையில் எடுத்து வாதிட்டாலும் அதனால் எந்த ஒரு நன்மையும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. யார் பதவிக்கு வந்தாலும், இப்படித்தான் நடந்து கொள்வோம், இதுதான் அரசியல் என்ற நிலைப்பாட்டைத்தான் எல்லா அரசும் கொண்டிருக்கின்றன. இதனால் பிராந்திய ஆதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகளின் பிடியில் சிக்கி இலங்கை போன்ற சிறிய நாடுகள் அவதிப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கனடா போன்ற அரசியலமைப்பு இருந்தால் சிறுபான்மையினர் ஓரளவு பாதுகாக்கப்படலாம். எதுவாக இருந்தாலும் முடிவு எல்லாமே மனித மனங்களைப் பொறுத்ததுதான்.
Series Navigationபாடம்எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *