க்ரோ எனும் கிழவர்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 13 of 14 in the series 27 மார்ச் 2022

 

 

சார்ல்ஸ் டு லிண்ட்

தமிழாக்கம்: மைத்ரேயன்

 (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர். 

கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன். தலைப்பில் உள்ள க்ரோ என்பதை மொழிமாற்றம் செய்யாததற்கு ஒரு காரணம், க்ரோ என்ற பழங்குடி அமெரிக்கர்களின் சமூகக் குழுவை அது பூடகமாகச் சுட்டுகிறது என்பது ஒரு காரணம். ஆனால் அதி புனைவு என்பதால் இந்த கனடிய/ டச்சு எழுத்தாளர் மையப் பாத்திரத்தை கருப்பினத்தவராகச் சித்திரிக்கிறார். 
கதைக்குள்ளும் க்ரோ என்பதை அவர் பெயர் போலவே பயன்படுத்தியுள்ளேன். 
மொழிபெயர்ப்புகளை முழுதும் தமிழ் போலவே மாற்ற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிறிது அன்னியத் தன்மை தெரிவது அவற்றின் மாற்றுப் பண்பாட்டுத் தளத்தை நமக்குப் பரிச்சயப்படுத்தும் என்பதும், எப்படியும் பாத்திரப் பெயர்களும், கதைக்களமும் அன்னியம்தான் என்பதும் என் காரணங்கள். )

கிழவர் க்ரோ இலைமக்கில் வளர்ந்த பாசியும், பைன் மரத்தின் உதிர்ந்த ஊசி இலைகளும் சேர்ந்த தலையணையிலிருந்து தன் தலையை உயர்த்தி, காற்றை முகர்ந்து பார்த்தார். அவரைச் சுற்றி இருந்த பைன் மரக் காட்டில், காற்றைப் போலக் கண்ணுக்குத் தென்படாமலும், சிலந்திக் கடியை விடவும் குறைவான ஒலியோடும், ஏதோ நடந்து போனது. அவரோ கிழவர் க்ரோ, காற்றில் அசையும் சிலந்தி வலையை விட சப்தமின்றி அவரால் இருக்க முடியும். அவர் எழுந்து அமர்ந்தபோது, ஒலியின் கிசுகிசுப்பு கூட அங்கு இல்லை. அவருடைய கரிய பார்வை மரங்களின் அடியிலிருந்த நிழல்களில் தேடியது. உயரத்துக் கிளைகளூடே காக்கைக் குடும்பத்தைச் சார்ந்த நீலக் கழுத்துக் காக்கையின் பறப்புப் பாதையை அவர் பார்த்தார், பின் பன்னெடுங்காலத்துக்கு முன்னர் காட்டின் தரைக்குள்ளிருந்து முட்டி எழுந்த விலா எலும்பு போன்ற கருங்கற்கள் உண்டாக்கி இருந்த குழிகளைப் பரிசீலித்தார்.

“சின்னத் தங்கச்சி, சின்னத் தங்கச்சி,” என்று விளித்தார். “நீ அங்கே இருக்கேன்னு எனக்குத் தெரியும். இந்தக் கிழக் காக்கையை நீ பதுங்கி, ஒளிஞ்சு மறைஞ்சு ஏமாத்த முடியாது.”

“அத்தனை சின்னவளும் இல்லை, உன்னோட தங்கையும் இல்லை,” ஒரு கரகரப்பான குரல் கிட்டத்தட்ட அவர் காதுக்குள்ளேயே பேசியது. “இப்ப யாரு ஏமாந்தாங்க இங்கே?”

அவர் திரும்பிப் பார்த்தபோது, தனக்குத் தெரியாமல் இவ்வளவு நெருங்கி ஒருவர் வர முடிந்ததிலும், தன்னை விடவும் ஒலியின்றி ஒருவரால் நகர முடிந்தது என்பதிலும் அவருக்கு எழுந்த வியப்பதிர்ச்சியைக் காட்டாமல் அவருடைய முகம் மறைத்திருந்தது.

“உன்னை எனக்குத் தெரியாதே,” என்றார்.

பைன் ஊசி இலைகள் மீது சம்மணமிட்டு அமர்ந்த அந்தப் பெண் புன்னகைத்தாள். அவள் பெரிய உருவினள்- அவரை விடப் பெரிய உரு, கிட்டத்தட்ட அவர் அளவு உயரம். அவளுடைய தலைமுடி வகிட்டில் இருந்து கால் சுண்டு விரல் வரை தோல் வெள்ளையாக இருந்தது, சூரிய ஒளியில் பனித் துகள் குவியல் தோன்றுவது போல அவளுடைய முடி இருந்தது, கண்கள் சவக்காட்டின் ரகசியங்களைப் போல இருண்ட நிறத்தில் இருந்தன. அவளுடைய மூச்சில் ஆப்பிளின் இனிப்பு இருந்தது.

“கிழவர் க்ரோவுக்கு எல்லாம் தெரியும்னுதான் எங்கிட்டெ சொன்னாங்க,”என்றாள் அவள்.

“அப்படீன்னா நீ தப்பான ஆட்கள் கிட்டே பேசிக்கிட்டிருக்கே.”

அவள் தோள்களைக் குலுக்கி அதை நிராகரித்தாள், அவளுடைய முலைகள் அந்த அசைவில் எழுந்து அமர்ந்தன.

 “உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா ஏதோ துணியைப் போட்டுக்கிட முடியுமா?” என்றார் அவர்.

அவள் புரியாததைக் கேட்டமாதிரி நோக்கினாள். “என்னைப் பார்க்கிறப்போ உனக்கு என்ன தெரியுது?”

“ஒரு பெரிய, வனப்பான பொண்ணு- இப்படி நிர்வாணமா நடந்து திரியக் கூடாத அளவுக்கு ரொம்பவே வசீகரமா இருக்கறவள்.”

“அட, இதெப்படி ஆச்சு,” என்றாள்.

 “என்னது?”

“இதை இச்சகப் பேச்சா நினைக்கறதா இல்லை அவமரியாதையாப் பார்க்கணுமான்னு தெரியல்லை எனக்கு.”

இப்போது கிழவர் க்ரோவுடைய முறை வந்தது, அவர் ஏதும் புரியாமல் நோக்கினார்.

“எதைப் பத்தி?”

“ஜோயி க்ரீல், நான் பெண்ணே இல்லை. நான் இந்த ஆவிகளோட ஏரிக்குப் பக்கத்திலெ வசிக்கறவ.”

கிழவர் க்ரோ பைன் மரத்தின் மீது சாய்ந்து கொண்டார்.

“அட, அப்படியா,” என்றார். “அது வேற மாதிரி விஷயம்தான். நான் உனக்கு என்ன செய்யணும், சகோதரமே?”

விழித்திருக்கும் உலகில் அவருடைய பெயர் என்னவென்று அவளுக்குத் தெரிந்திருந்தது என்பது அவருக்கு வியப்பளிக்கவில்லை. ஆவிகளின் ஏரியின் பனிப்பாறை மூடிய கரைகளருகே மலைமீது வசிக்கும் ஆவிக் கரடிகள் அப்படித்தான் இருந்தன. நாம் ஒரு வார்த்தை கூடப் பேசாமலே நம்மைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு வழிகள் தெரியும் என்று சொல்லப்பட்டது. ஐந்து விரல்கள் கொண்ட பிராணிகளின் உலகத்தில் உலாவுகையில் சகோதரங்களுக்கும் இப்படி எல்லாம் தெரிகிறார்போலத்தான் அதுவும்.

“நீங்க ஒண்ணைப் பார்க்கணும்னு இருக்கு எனக்கு,” என்றாள்.

அவள் எழுந்து நின்றபோது, அது தண்ணீர் ஓடுவதைப் பார்ப்பதைப் போலிருந்தது. அவள் ஒரு கையை அவரிடம் நீட்டினாள், தன்னைப் பற்றி மேலிழுக்க அவர் அனுமதித்தார். எந்த அளவுக்கு ஒலி எழுப்பாமலும், துரிதமாகவும் அவள் இயங்கினாளோ அந்த அளவு வலு மிக்கவளாகவும் இருந்தாள்.

“என்ன மாதிரி —” அவர் துவங்கினார்.

ஆனால் அப்போது அந்த பைன் மரக்காடு கரைந்து போனது, ஒரு குறுக்குச் சாலையில் அவர்கள் நின்றிருந்தனர், அவர்களைச் சுற்றி கண் பார்வைக்கு எட்டும் தூரம் வரையிலும் எங்கும் கார்கள் நின்றிருந்தன. மென் பளபளப்பாகவும், பண்டைக்காலத்து மரங்கள் அளவு உயரமாகவும் கட்டடங்கள் எழுந்திருந்தன. அவையும் முடிவில்லாமல் எங்கும் இருப்பதாகத் தெரிந்தன, தொடுவான் வரையிலும், நாற்திசைகளிலும் இருந்தன.

கிழவர் க்ரோவால் இதைப் பார்த்துத் தனக்கெழுந்த வியப்பை அடக்க முடியவில்லை. கண்ணைக் கொட்டிக் கொண்டார், தன்னைச் சுற்றிலும் பார்த்தார். எல்லாக் கார்களும் அசைவின்றி நின்றன, பலவற்றின் கதவுகள் திறந்தபடி இருந்தன. அவருக்கு நிறைய நாழிகை கழித்துத்தான் புரிந்தது, அந்தத் தெரு முற்றிலும் அசைவின்றி இருந்தது. அவரும், அந்த கரடி உரு ஆவியும், ஒரு ஒளிப்படத்தின் நடுவில் காலடி எடுத்து வைத்து நுழைந்தது போல இருந்தது. அப்புறம், தங்களுடைய சூழலை ஏற்கும் நிலைக்கு அவர் வந்தபோது, அவருக்கு இன்னொன்று புரிந்தது.

“ஜனங்கள் எல்லாம் எங்கே போய்ட்டாங்க?” அவர் கேட்டார்.

அவள் தெரியாதென்பது போல தோள்களைக் குலுக்கினாள், அவர் தன் பார்வையை அவள் முகத்திலேயே நிறுத்தி வைத்திருந்தார்.

“இதே போலத்தான் இருக்கப்போறது,” அவள் சொன்னாள், “நாம் ரொம்ப காலம் பின்னே போய்க் காலடி எடுத்து வைத்தோமானால்.”

“அதாவது இந்தக் கட்டடங்கள், கார்கள், மற்றப் பல குப்பைகளை ஒதுக்கி விட்டால் மிஞ்சறதா?”

“ஆமாம், அதேதான்.”

அவள் மௌனமானாள். கிழவர் க்ரோ காத்திருந்தார், ஆனால் அவளோ, அந்தத் தெருவில் அசைவில்லாத காலி வாகனங்களின் நடுவில் அவரோடு நின்றிருப்பது போதுமானது என்பது போல இருந்தாள்.

அந்த வாகனங்களில் ஜனங்கள் இருந்திருந்தாலும், இப்படி ஒரு பிரதாபம் பொருந்திய பெண் அவர்கள் முன்னே திடீரெனத் தோன்றினால், அவர்களெல்லாமே அப்படியே ஸ்தம்பித்துப் போயிருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.

“இதை ஏன் எங்கிட்டெ காட்டறெ?” என்று கேட்டார்.

“உங்களுக்கு இது சுவாரசியமாக இருக்கும்னு நினைச்சேன்.”

“இதை விட அந்த பைன் காடுகளைத்தான் எனக்கு  அதிகம் பிடிச்சுது.”

“இதையெல்லாம் நீங்க சரி செய்ய முடியும்னு நான் நினைச்சேன்.”

 “எதைச் சரி செய்யணும்?”

“இங்கே என்ன நடக்கப் போகுதோ, அதை.”

 

ஜோயி க்ரீல் தனக்குப் பழக்கமான படுக்கையில், தனக்குப் பழக்கமான அடுக்ககத்தில், நகரத்தின் பழக்கமான ஒலிகள் அவருடைய படுக்கையறையின் ஜன்னல்கள் வழியே உள்ளே வழிந்தோடியிருக்க, விழித்தெழுந்தார். போக்குவரத்து, ஜனங்கள்  உரையாடுவது, குப்பைத் தொட்டிகளின் தடால் புடால், தொலை தூரத்தில் ஒரு பொலீஸ் சைரன்.

எழுந்தவர், அந்த கரடியின் ஆவி இன்னும் தன்னோடு இருக்கும் எனப் பாதி எதிர்பார்ப்புடன் அமர்ந்தார், ஆனால் அந்த அறையில் அவர் தனியராகத்தான் இருந்தார்.

எழுந்திருந்து, குளியலறைக்குள் போனார், காலை நேரத்து ஒன்றுக்கிருப்பதை நீண்ட நேரம் செய்தார்.  தன் கைகளைக் கழுவிக் கொண்டவர், தன் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் பார்த்தார். அவருடைய தாடி அத்தனை நரையோடி இருந்ததால், அவருடைய கருத்த தோலில் அது முழு வெண்மையாகவே தெரிந்தது. தன் முள்முடிகளை ஒரு முறை அழுந்தத் துடைத்து விட்டு, முடியைத் தன் முகத்திலிருந்து அகற்றித் தள்ளி வைத்தார்.  

தன் கனவைப் பற்றி நினைத்துப் பார்த்தார், கரடி உரு ஆவி தனக்கு விதித்த அந்த வேலையைப் பற்றி யோசித்தார், தன் தலையை உலுக்கிக் கொண்டார். அது ஒரு சக்தி மிக்க கனவு – சக்திக் கனவு -அவருக்கு அதில் எதுவும் புரியவில்லை.

“கடைசில நமக்கு வயசாகிப் போச்சுன்னுதான் தோணுது,” தன் பிம்பத்திடம் அவர் சொன்னார்.

தன் படுக்கை அறைக்குத் திரும்பியவர், உடுப்புகளை எடுத்து அணிந்தார். கருநிற கால்சராய்கள், கௌபாய் காலணிகள், ஒரு பழைய வெள்ளைச் சட்டை. உடுப்பு அலமாரியிலிருந்து சில்லறைகளைத் தேற்றி எடுத்தார், தன் பைக்குள் போட்டுக் கொண்டார். முந்திய நாள் இரவு சோஃபா ஒன்றின் பின்புறம் தான் போட்டு வைத்திருந்த மேலங்கி-சட்டையை எடுத்துக் கொண்டார், காலை உணவுக்கும், காஃபிக்குமென்று தெரு மூலையிலிருந்த ஒரு சிற்றுண்டிக் கடைக்குப் போனார். தன் அடுக்ககத்துக் கதவைப் பூட்டுவது பற்றி அவர் கவலைப்படவில்லை. அங்கு திருடுவதற்கு எதுவும் இருக்கவில்லை- அவருடைய பழைய கிடார் வாத்தியம் கூடச் சிறிதும் மதிப்புப் பெறாதது.

அவரிடம் இருந்த மதிப்புள்ள எதுவும், அவர் தன் தலைக்குள்ளேயே சுமந்திருந்தார்.  

 

“நேத்தி ராத்திரி எனக்கு வந்த கனவு ரொம்ப விசித்திரமா இருந்தது,” அவர் அமர்ந்திருந்த தடுப்புக்குள் நுழைந்த பரிசாரகப் பெண் ரூபி சொன்னாள்.

ஒரு தட்டில் வெந்த முதிரைகள், வறுத்த ரொட்டித்துண்டுகளோடு வேகவைத்த முட்டையுடன், கோப்பையில் காஃபியையும் அவள் கொண்டு வந்திருந்தாள். தான் எப்போது கடைசியாக தனக்கு இன்னது வேண்டுமென்று உத்தரவிட்டோம் என்று அவருக்கு நினைவில்லை. அவருக்கு என்ன கொடுக்கவேண்டுமென்று ரூபி நினைத்தாளோ அதை அவள் கொண்டு வந்து விடுவாள். எது எப்படி இருந்தாலும் அதில் காஃபி இருந்த வரை, ஜோயி அவளே தீர்மானிக்க விட்டு விடுவார்.

“அதில் ஒரு பெரிய, நிர்வாணமான வெள்ளைப் பெண் இருந்தாளா?” ஜோயி கேட்டார்.

ரூபி வாய்விட்டுச் சிரித்தாள். “கனவு காண்றதுக்கு எத்தனை வயசானாலும் பரவாயில்லை, அப்படித்தானே?”

 “என்னை நானே கிழவன்னு சொல்லிக்கிறதே கேவலம். இப்ப நீ வேற ஆரம்பிக்கிறியா, வேண்டாம்.”

ரூபி கவர்ச்சியான, தேவையான உருட்சி திரட்சியெல்லாம் இருந்த இளசு – இருபதுகளில் இருப்பவள், சரசமாடுவதில் தேர்ந்தவள், கோலாகலமாகக் கலைந்த தங்க நிறத் தலை முடியோடு, கையின் மேல் பகுதியில் ஒரு கரிச்சான் காக்கையின் உருவையும் பச்சை குத்திக் கொண்டிருந்தாள்.  பரிமாறும் பகுதியின் முகப்புமேஜைக்குப் பின் புறமிருந்த அலமாரியில் மேல் தட்டில் எதையாவது எடுக்க அவள் கை உயர்த்தும்போது, அவளுடைய சட்டையின் கைப்பகுதிக்குக் கீழே அந்தக் கரிச்சான் காக்கையின் நீண்ட வால் நீட்டிக் கொண்டிருப்பது தெரியும்.

அவள் அந்தச் சிற்றுண்டிச் சாலையைச் சுற்றிலும் பார்த்தாள், வேறு யாருக்கும் தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டாள், பிறகு ஜோயியின் தடுப்பறைக்குள் நுழைந்து எதிரே அமர்ந்தாள்.

“பாருங்க, இந்தக் கனவுல,” அவள் சொன்னாள், “ஜே-ஸி இந்தப் பேட்டையில வசிக்கிறாரு. அவர் இந்த டைனருக்குள்ளே நேர வர்றாரு, நான் அவரோட புது விடியோவுல ஆட வருவேனான்னு கேட்கறாரு.”

“அவர் ஓய்வு பெற்றுப் போயிட்டாருன்னுல்ல நான் நினைச்சேன், இப்ப ஏதோ ரிகார்ட் கம்பெனியை நடத்தல்லியா?”

அவள் தலையை ஆட்டி மறுத்தாள். “அதெப்படி உங்களுக்குத் தெரியும்? உங்களுக்கு எப்பவுமே ஏதோ வினோதமான விஷயமெல்லாம் தெரியறது.”

“நான் நிறையப் பார்த்தவன்,” ஜோயி சொன்னார்.

அவர் அப்படியே பார்த்துமிருந்தார். ஒருகால் பின்னே பண்டைக் காலத்துக்குப் போய், அண்டங்காக்கை தன் பிரும்மாண்டமான பானையிலிருந்து உலகத்தை வெளியே உருவி எடுத்த அந்தக் காலத்த்தைப் பார்த்திருக்க மாட்டார். அல்லது பழங்குடி சிவப்பிந்தியர்கள் இந்த நிலங்களுக்குத் திரிந்தலைந்து சேர்ந்த காலத்தைப் பார்த்திருக்க மாட்டார், ஆனால் அவர் வெகுகாலமாக இங்கே சுற்றியிருக்கிறார். அவர் பெயரும் ஒன்றும் ஜோயெல் க்ரீல் இல்லை, எப்படி கிழவர் க்ரோ என்பதும் அவர் பெயரில்லையே அதே போலத்தான் அதெல்லாம். ஆனால் அந்த இரண்டும் இப்போது அவருடைய கதையின் ஒரு பகுதியாக ஆகி விட்டன.

கோர்பே என்ற பழைய காகக் கூட்டத்தைச் சேர்ந்த இவருக்குப் பொருத்தமான பெயராக இது இருந்திருக்கும்: கதை சொல்லி. அவர் கதைகளைச் சேகரித்தார்- அல்லது கதைகள் என்று அவர் அழைத்தவற்றைச் சேகரித்தார். அவை எப்படி ஆரம்பித்தன அல்லது முடிந்தன என்பது அவருக்கு அரிதாகவே தெரிந்திருந்தது, ஏனெனில் அவை அவருக்குத் துண்டும் துக்கடாவுமாகத்தான் கிட்டின. பஸ் நிறுத்தத்தில் தற்செயலாகக் கேட்டது. செய்தித்தாளில் எங்கோ படித்தது, அல்லது மளிகைக்கடையில் தர வேண்டிய தொகைப்பட்டியல் போடும்போது அங்கே காட்சியாக இருந்த பத்திரிகையில் படித்தது. ஒரு மதுக் கடையில் குடிகாரர் ஒருவர் சொன்னது. சில அணில் சகோதரங்கள் புறாக்களோடு கதைத்தது, இப்படித்தான்.

கதைகள் எங்குமிருந்தன, அல்லது அவற்றின் சில்லுகள் இருந்தன, கோர்பே (காக) இனமே இப்படித் துண்டுகளைச் சேகரித்தவைதான். இவர் சேகரித்த துண்டுகள் வார்த்தைகளாக இருந்தன, பளபளக்கும் அல்லது மின்னும் துண்டங்களாக இல்லை.

“அப்ப நீ ஜே-ஸி கிட்டே என்ன சொன்னே?” அவர் ரூபியிடம் கேட்டார்.

“நான் அந்த மாதிரிப் பொண்ணில்லைன்னு சொன்னேன்.”

“ஆனா நீ எந்த மாதிரிப் பொண்ணு?”

அவள் புன்னகைத்தாள். “திமிர் இருக்கற நல்ல பொண்ணு.”

“அது எனக்குப் புரியுது. நான் மேலெ சொல்றதைக் கேளு. என்னோட கனவுகள்லெ எப்பவாவது வந்துட்டுப் போ. இன்னும் கொஞ்சம் வயசானவளா இருக்கணும், நான் அப்ப கொஞ்சம் இளைஞனா இருக்கேன் – அப்போ என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்.”

“சும்மாக் கனவுதான் கண்டுகிட்டு இருக்கணும் நீங்க.”

“நான் அதைத்தானே இப்ப சொன்னேன்.”

“அதெல்லாம் நடக்காது. நான் இன்னும் கைல் என்னை வந்து கூப்பிடுவான்னு காத்துகிட்டிருக்கேன்.”

“என்னது? அந்தப் பையன் என்ன குருட்டுப் பயலா? அவன் கிட்டே நான் பேசப் போறேன்.”

“அதை நினைச்சுக் கூட பார்க்காதீங்க!”

 

அவர் உதடு விரியப் புன்னகைத்தார், சரியென்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல்.

 “உங்க விஷயம் என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “நீங்க நெசம்மாவே ஒரு பெரிய நிர்வாணமான வெள்ளைக்காரப் பொண்ணைப் பத்தி நேத்திக்கிக் கனவு கண்டீங்களா என்ன?”

ஜோயி ஆமோதித்துத் தலை அசைத்தார், யோசனையில் ஆழ்ந்தார்.

“அவ நிஜத்துல மனுஷி ரூபத்தில இருந்த கரடி ஆவி,” அவர் சொன்னார். “வேடிக்கை என்னன்னா, அவளுக்குத் தான் மனுஷி ரூபத்தில இருக்கோம்னு தெரிஞ்சிருக்கல்லை. அவ எனக்கு ஒரு தரிசனம் கொடுக்க வந்தா.”

“ஒரு தரிசனமா?”

“ஆமா, நான் பைன் மரக்காட்டுல தூங்கிக்கிட்டிருந்தேன், அங்கேயிருந்து என்னை நகரத்துக்குள்ளெ கொண்டு வந்தாள், இந்த மாதிரி,” அவர் இரண்டு விரல்களைச் சொடுக்கினார்.  “அங்கே இடம் மொத்தமும் காலியாக இருந்தது. ஒரு மனுசனைக் கூடக் காணோம். சத்தமே இல்லை. ஒரு பறவைக் கூவல் கூட இல்லை.”

“சில நாள்லெ அந்த மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கற மாதிரி எனக்குத் தோணும்.”

“இது வேற மாதிரி,” அவர் சொன்னார். “அங்கே தெரு நடுவுலெ காரெல்லாம் நின்னுது, எல்லாத்தோட கதவும் திறந்து கிடந்தது- ஆனா எதும் மோதிக்கிட்டு நொறுங்கி இருக்கல்லை. ஏதோ ஜனங்களெல்லாம் அவங்க செய்துக்கிட்டிருந்ததை நிறுத்திப் போட்டுட்டு காணாமப் போயிட்ட மாதிரி இருந்தது.”

“உங்களோட நிர்வாணப் பெண் இதைப் பத்தி என்ன சொன்னாங்க?”

“நான் அதைச் சரி செய்யணும்னாங்க.”

ரூபி தன் தலையை உலுக்கினாள். “உங்களுக்கு ரொம்பவே வினோதமாத்தான் சொப்பனம் வருது.”

அவர் ஆமோதித்துத் தலையசைத்தார். அவர் சொல்லியிருக்க முடியும், “கோர்பே சகோதரங்களுக்கு இது மாதிரி நிறையவே வரும் – உனக்குத் தெரியுமே, என்னை மாதிரி காகங்களுக்கு. வரப் போகிற நிகழ்ச்சிகள் பற்றி, உற்பாதங்களைப் பத்தி எங்களுக்குச் சூசகம் கிட்டும், தீர்க்கதரிசனமும் கிட்டும். ஜனங்களை இந்த உலகிலேர்ந்து மாத்தி மத்த உலகுக்கு எடுத்துப் போகிறதும் பெரும்பாலும் நாங்கதான். மத்த உலகுன்னா, கனவுகளோட உலகங்களைச் சொல்றேன்.”

ஆனால் அவர் சொன்னது என்னவோ இதுதான், “ஆமாம், அப்படித்தான்னு சொல்லணும்.”

முகப்பு மேஜையில் ஒரு மணி அடித்தது, ரூபிக்கு அவளின் வாடிக்கையாளருக்குப் பண்டங்கள் தயாராகி விட்டன என்று தெரிவிக்க அது. பரிமாறுதலில் தன் தேர்ச்சியைத் தெரிவிக்கும் விதத்தில் அவள் நான்கு காலையுணவுத் தட்டுகளோடு, பழச்சாறுகள், காஃபிக் கோப்பைகளையும், ஒரு துளி கூடச் சிந்தாமல் தூக்கி வந்தாள்.

“இன்னக்கி மாலைல உங்களுக்கு நேரம் இருக்குமா?” அவள் கேட்டாள்.

“உல்லாசமாச் செலவழிக்க என்னைக் கூப்பிடறியா?”

“ஐயே, ஆசையைப் பாரு. இல்லை, எனக்கு ஒரு புதுப் பாட்டைக் காட்டுவீங்களான்னு பார்க்கிறேன். போனதடவை கொடுத்த பாட்டை அனேகமா ஒழுங்காப் பழகிட்டேன்னு நினைக்கிறேன்.”

“அதுக்கென்ன, செய்துடலாம். எனக்கு அதைச் செய்யப் பிடிக்கும்,” அவர் அவளிடம் சொன்னார். “மதியச் சாப்பாட்டுக்கு அப்புறம் வீட்டுல இருப்பேன் – அந்தக் கரடி ஆவி மட்டும் என்னை மறுபடி தேடிக்கிட்டு வராமல் இருக்கணும்.”

ரூபி தன் கையில் மேல்புறத்தில் பச்சை குத்தப்பட்ட கரிச்சான் காக்கை உருவைத் தொட்டுக் கொண்டாள். அவர்களுடைய உரையாடல் சகோதரங்களைத் தொடும்போதெல்லாம் அவள் அப்படிச் செய்வாள், வழக்கமாகி விட்டது. அது ஒரு தன்னிச்சையான செயல், அவளுக்குத் தான் அதைச் செய்கிறோம் என்பதே தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது.

“நீங்க ஏன் எப்பவும் இந்த மாதிரியெல்லாம் ஏதாவது சொல்றீங்க?”

“என்ன மாதிரி?”

“உங்களுக்குத் தெரியும். கரடி ஆவி, தரிசனம் இப்படி. நேத்திக்கி ஒரு பூனை உங்க கிட்டே ஏதோ சொன்னதுன்னு எங்கிட்டே சொல்லப் பார்த்தீங்க.”

”சிவிங்கிப் பூனை சகோதரம்.”

“என்னவாவது இருக்கட்டும். இப்படிப் பேசறது என்ன மாதிரி இருக்குங்கறது உங்களுக்கு தெரியுமில்லையா?”

“நான் மத்த ஜனங்களை விட உலகத்திலெ நிறைய விஷயங்களைப் பார்க்கிறேன்னு தெரியுதா?”

அவள் சிரித்தாள். “இருக்கலாம். இல்லைன்னா நீங்க முழுசா நல்ல நிலையில இல்லைன்னும் தோணலாம்.”

அவள் நெற்றிப் பொட்டில் விரலை வைத்துக் காட்டினாள்.

“நான் ஒரு போதும் முழுக்க அங்கே இருக்கறதில்லை,” அவர் அவளிடம் சொன்னார். “என் ஒரு கால் எப்பவுமே இன்னொரு உலகத்திலெதான் இருக்கு.”

 “ஆனா, வேற உலகம்னு எதுவும் இல்லைன்னு…”

அவள் தான் சொல்ல வந்ததை முடிக்காமல் விட்டு விட்டாள்.

”இங்கே பாரு, நீ நிஜம்னு நினைக்க இங்கெ ஒண்ணு இருக்கு,” அவர் சொன்னார். ”கட்டிளங்காளை, அழகன் கைல் இன்னக்கி மதியச் சாப்பாட்டுக்கு வரும்போது, நீ ஏன் அவனை உன்னோட  பேசிப்பழகறத்துக்கு அழைக்கக் கூடாது?”

“என்னால அதைச் செய்ய முடியாது.”

“ஏன்னுதான் கேட்கறேன். அதென்ன அப்படி ஒரு அடம்?”

அவள் பதிலளிக்க வாய் திறந்தாள், மாறாகச் சிரித்தாள்.

ஜோயி குறும்பாக நகைத்தார். “ஒரு நல்ல காரணத்தைக் கூட உன்னால யோசிக்க முடியல்லை, இல்லியா? முடியுதா?

“இல்லை,” அவள் ஒத்துக் கொண்டாள். “எனக்கு ஒண்ணும் தோணல்லை.”

“நீ இதை நினைவு வச்சுக்கணும்,” அவர் அவளிடம் சொன்னார், “வங்கியில உனக்கு இன்னொரு வாழ்க்கை சேமிச்சு வைக்கப்படல்லை. நீ எதை இப்ப வாழறியோ அதை வச்சு எத்தனை செய்ய முடியுமோ அதைத்தான் செய்யப் பார்க்கணும்.”

 

ரூபி மக்காலே, ஜோயி அந்த உணவகத்தை விட்டுப் போவதைப் பார்ப்பதற்குச் சற்று நின்றாள். ஜன்னலருகே இருந்த ஒரு தடுப்பறையின் மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தாள், சாய்மானத்தின் மீது சரிந்து நின்றாள், ஒரு கால் முட்டியை அங்கு சோஃபாவின் மீது வைத்திருந்தாள், அவர் தெருவைக் கடப்பதைப் பார்த்திருந்தாள். அவர் இடது பக்கம் திரும்பினார், லீ தெருவில் தெற்குப் பக்கம் போனார். அவரைப் பார்க்க முடியாத தூரம் அவர் போன பிறகு, அவள் முன்பு செய்து கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள்.

அந்தக் கிழவரை அவளுக்கு ஏனோ பிடித்திருந்தது, அது எதனால் என்று அவளுக்குச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. அவளுடைய தினம் படு மோசமாக இருந்திருக்கும் – கடுகடு வாடிக்கையாளர்கள், மோசமான இனாம், அவளுடைய முதுகும், ஆடுதசையும் வலியெடுத்திருக்கும்- ஆனால் அவர் அந்தக் கடையில் நுழைந்ததும், அந்த உணவகத்தில் அவர் அமர்ந்ததும், அவை எல்லாம் புறந்தள்ளப்பட்டு விடும். அவளுக்கு ஆகியிருந்த இருபத்து மூன்று ஆண்டுகளை அவர் எப்படியோ மாற்றி, அவளைப் பல வருடங்கள் இளையவளாக ஆக்கி விடுவார், அவள் ஒரு சிறுமி போல, மிக்க உற்சாகம் கொண்டவளாக, உலகமே அவள் முன்னால் விரிந்து கிடந்து அவளுக்காகக் காத்திருப்பது போல உணரச் செய்து விடுவார்.

மற்றவர்கள் எல்லாருமே இப்படி உணர்ந்ததாகத் தெரியவில்லை.

“ஐயோ, அவர் வந்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு,” எய்லீன் ஒரு காலையில் சொன்னாள், சில வாரங்கள் முன்பு. 

ஜோயீ அப்போதுதான் வெளியே போய்க் கொண்டிருந்தார், அவள் தன் முறை வேலை நேரத்துக்காக உள்ளே வந்திருந்தாள். கேட்டதும் அசந்து போன ரூபி, அவளைப் பார்க்கத் திரும்பினாள்.

“காமக் கிழவன்கள் கொணரும் அருவருப்பா?” அவள் கேட்டாள். “அவர் உண்மையில் கொஞ்சம் கூட கெடுதலே இல்லாதவர்.”

எய்லீன் தலையை ஆட்டி மறுத்தாள். “அவர் கெட்டவர்னு நான் நினைக்கல்லை. அவரோட தலைமுறை ஆட்களெல்லாம் பெண்கள் கிட்டே சரசம் பேச விரும்புவாங்க, ஆனா அதுக்கெல்லாம் ஒண்ணும் அர்த்தமில்லேன்னு எனக்குத் தெரியும், ஆனாக்க… சரி, அது இல்லை நான் நினைக்கறது.”

”பின்னே வேறென்ன அதுல?”

“அவர் கொஞ்சம்… அவருக்கு ரொம்ப நிறைய தெரிஞ்சிருக்கு. எல்லாத்தையும் பத்தி அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு, அது என்ன விஷயம்னே இல்லை. எல்லாமே.”

“அவர் ரொம்ப விவரமானவர், அவ்வளவுதான்.”

“அதோட சிலநேரம், அவர் என்னைப் பார்க்கும்போது, அவர் என் தலைக்குள்ளே பூந்துகிட்டிருக்கற மாதிரி இருக்கும்.”

ரூபி ஆமோதிப்பாக மெல்லத் தலையசைத்தாள். எவ்வளவோ தடவைகளில் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாதபோதே, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவர் எப்படியோ தெரிந்து கொண்டிருப்பார், அது கொஞ்சம் அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது. ஒரு தடவை அவள், அவரைப் பிறரின் எண்ணங்களை எப்படியோ தெரிந்து கொள்பவர் என்று குற்றம் சாட்டியபோது, அவர் சிரித்தார், பிறகு சொன்னார், தான் மனிதர்களைத்தான் படிப்பதாக. ஜனங்களைப் பற்றிப் பலதும், அவர்கள் எப்படித் தம்மை நடத்துகிறார்கள், மற்றும் தம் தோலுக்குள் எப்படிப் பொருந்துகிறார்கள்- இப்படிச் சொல்வது விசித்திரமாகவே அவளுக்கு அந்த நேரம் தெரிந்தது, இப்போதும் அப்படித்தானிருந்தது- என்பதிலிருந்து தனக்குத் தெரிவதாகச் சொன்னார்.

ஆனால் அவளுக்கு அதுவும் பிடித்துத்தான் இருந்தது – எப்படி அவருக்கு எல்லாச் சமயங்களிலும் சரியானதைச் சொல்லத் தெரிந்திருந்தது என்பதும், அவள் சர்க்கரை பூசிச் சொல்ல நினைக்கும்போதோ, சும்மாவே கதை விடும்போதும் அவர் எப்படி அவளை உடனே நேரடியாகக் கேட்டு விடுவார் என்பதும்.

“ஆனா அது உனக்குத் தொல்லையா இருக்கா?” எய்லீன் அதற்கு மேல் ஏதும் சொல்லாததால், ரூபி அவளிடம் கேட்டாள்.

“கடவுளே, ஆமாம். அது உனக்குத் தொல்லையா இல்லையா?”

ரூபி தலையைக் குலுக்கி மறுத்தாள்.

“இருக்காது. உன்னை ஒண்ணும் செய்யாதுன்னுதான் நினைச்சேன்,” எய்லீன் சொன்னாள், “இந்தக் கடைக்கு வெளியேயும் நீ அவரைச் சந்திக்கிறியே, அதுலெயே தெரியறது. அப்படி நீங்க என்னதான் செய்வீங்க?”

“நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனே. அவர் எனக்குப் பாட்டுகள் சொல்லிக் கொடுக்கறார். அவருக்கு ஆயிரக்கணக்கா பாட்டுகள் தெரியும்போலிருக்கு.”

“நீ எப்ப வெளியில போய் அதையெல்லாம் பாடப் போகிற?”

“ஒரு பாட்டு நிகழ்ச்சி போலன்னு சொல்றியா?”

எய்லீன் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

“நான் அதுக்காகக் கத்துக்கல்ல,” ரூபி சொன்னாள். “ஜோயியோட காலம் ஆனப்பறம், யாராவது அதையெல்லாம் இன்னும் நினைவு வச்சிருக்கணுமேன்னுதான் கத்துகிட்டிருக்கேன்.”

எய்லீன் தலையைக் குலுக்கி மறுத்தாள்.

“இப்ப நீயும் அவரை மாதிரியே விசித்திரமாயிக்கிட்டிருக்கே,” என்றாள், ஆனால் புன்னகைத்தாள்.

“இல்லைமா,”ரூபி சொன்னாள். “எல்லா விசித்திரத்தையும் ஜோயியே கட்டிச் சேர்த்துச் சுமந்துகிட்டிருக்காரு.”

“யார் சொல்றாங்க பாரு,”

அந்தச் சம்பவத்தை நினைவு கொண்ட ரூபி, சிரித்துக் கொண்டாள். மேஜைகளைத் துடைப்பதை பூர்த்தி செய்தாள், நடுப்பகல் உணவுக்கு வரப் போகும் கூட்டத்துக்குத் தேவையான உப பதார்த்தங்கள் மேஜைகளில் இருக்கின்றனவா என்று சோதித்துக் கொண்டிருந்த ஆன்னாவுக்கு உதவி செய்யப் போனாள்.

இது சிரிப்புக்குரியது என்று அவள் நினைத்தாள். ஆன்னாவையும், அவளையும் அருகருகே பார்த்தால் எப்போதுமே ஆன்னா அடங்கியவளாகத் தெரிவாள். எப்போதுமே அவள் தன்னுடைய பழுப்பு நிறக் கூந்தலை பின்னே இழுத்துக் கட்டி குதிரைவால் கொண்டையாக்கி இருப்பாள், காண்டாக்ட் லென்ஸுக்குப் பதில் மூக்குக் கண்ணாடி அணிவாள், வேலை பார்க்கும்போது ஒரு போதும் முகஒப்பனை செய்து கொள்ள மாட்டாள், மாறாக ரூபியின் தலை முடி அடங்காமல் திரியும், அவள் பச்சை குத்திக் கொண்டிருந்தாள், அவள் அந்த உணவகத்தில் வேலை பார்க்கும்போது மட்டுமே முக ஒப்பனை செய்துகொள்வாள். அல்லது அவளுக்கு யாராவது ஆணுடன் மாலை நேரச் சந்திப்பு இருந்தாலும் ஒப்பனை உண்டு.

இரண்டு பேரில், ஆன்னாதான் சுதந்திரப் பிறவி, என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்யத் தயாரானவள். இந்த வருஷம் மட்டுமே அவள் கட்டற்ற வேகத்தில் இறங்கி ஓடும் கிக்காஹாஸ் ஆற்றில் படகு ஓட்டிப் போயிருந்தாள், முதல் தடவையாக விமானத்திலிருந்து பாரசூட் அணிந்து குதித்திருந்தாள், தாய்லாந்தில் இங்கிலிஷ் சொல்லித் தரும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள்.

ரூபியோ அதே ஊரில் வீட்டில் கிடார் வாசிப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்தாள்.

அவள் நெருங்கியபோது ஆன்னா நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹேய்,” என்றாள் ஆன்னா.

“உனக்கும் ஒரு ஹேய்,” என்றாள் ரூபி.

சர்க்கரை இருந்த ஒரு குடுவையின் மூடியைத் திறந்து அதில் சர்க்கரை நிரப்பத் தொடங்கினாள்.

“நீ எப்பவாவது ஒரு ஆணை மாலையில சந்தித்துப் பேசலாம்னு கூப்பிட்டிருக்கியா?”அவள் கேட்டாள்.

ஆன்னா சிரித்தாள். “நிச்சயமா. எனக்குப் பிடிச்சவரோட பேசிக்கிட்டிருக்க வேற எப்படி முடியும்?” சொன்னவள் தலையை ஒரு புறம் சாய்த்துப் பார்த்தபடி அகலமாகப் புன்னகைத்தாள். “ஏன்? நீ ஜோயியை அப்படிக் கூப்பிடப் போறியா?”

“அட, அப்பிடிச் செய்வேனா. அவர் எனக்குத் தாத்தாவா இருக்கற வயசுக்காரர்.”

ஆன்னா தலையசைத்து ஒத்துக் கொண்டாள். “தாத்தா மாதிரி நல்லவரும் கூட.”

“அதுவும்தான்.”

“அப்ப வேற யாரை நீ – இரு, சொல்ல வேணாம். எனக்கு ஏற்கனவே தெரியும். அது அந்த கைல் பையன் தானே?”

“அவன் அழகன்னு நினைக்கறேன்.”

“உன்னோட சேர்த்து அவனைப் பார்க்கற எல்லாப் பெண்களும் அப்படித்தான் நினைப்பாங்க.”

“ஆனா அது அவனுக்குத் தெரியாதுன்னு நினைக்கறேன்.”

“இல்லைன்னா, அது நல்ல நடிப்பு.”

“அப்ப, நான் அவனை சந்திப்புக்குக் கூப்பிடலாம்னு நினைக்கிறியா?”

ஆன்னா சிரித்தாள். “நீ என்ன விளையாடறியா? சும்மா போ, சொல்றேன். அவன் அப்பிடி மோசமா என்ன சொல்லிடப் போறான்?”

“வேண்டாம்னு சொன்னா?”

“பாரு, இதுலதான் நீயும் நானும் வேற வேற,” ஆன்னா சொன்னாள். “நீ என்னவெல்லாம் நடக்குமோ அதையெல்லாம் வாய்ப்புன்னு பொத்தி வச்சுகிட்டிருப்பே, நான் நேரப் போய் வாழ்க்கையைக் குண்டியைப் பிடிச்சு இழுத்துடுவேன்.” நல்லதொரு நகைச்சுவை நடிகனைப் போல, ஒரு கணம் இடைவெளி விட்டவள், தொடர்ந்தாள், “இல்லைன்னா ஒரு அழகனை.”

எக்களிப்போடு, மேஜையின் மீது விரல்களால் அடித்துத் தாளமிட்டாள்.

“ஒருவேளை நான் உன்னை ஆச்சரியப்படுத்துவேனோ என்னவோ,” ரூபி சொன்னாள்.

“நீ அப்படிச் செய்வேன்னு நான் முழுசா எதிர்பார்க்கிறேன்,” ஆன்னா அவளிடம் சொன்னாள்.

 

கைல் ஃபாஸ்டர் ‘ஃப்ரீவீலிங்’ கில் வேலை பார்த்தான், அது அதே தெருவில் கிழக்கே இருந்த, சைக்கிள்கள் பழுதுபார்க்கும் கடை. இந்த உணவகத்தில் தினம் மதியச் சாப்பாட்டுக்கு வந்து போவான். எப்போதும் ரூபியின் பொறுப்பில் இருந்த மேஜைப் பகுதிகளில் உட்காருவதையே குறிப்பாகச் செய்தான். ஆறு வாரங்களாக இப்படியே செய்கிறான். அவன் அந்தக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்து ஆறுவாரங்களே ஆகி இருந்தன, அதிலிருந்து அவன் வரத் தொடங்கி இருந்தான். மென்மையாகப் பேசுபவன், தப்பாமல் மரியாதையாக நடப்பவன் – அது அவனுடைய கூச்ச சுபாவத்தால்தான், தன்னிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததைக் குறிக்கவில்லை என்றே ரூபி நம்பினாள்.

 அவன் வந்த போது ஒரு மணி ஆக இன்னும் கால் மணி இருந்தது, அவளும் ஆன்னாவும் முன் மேஜைக்குப் பின் புறம் நின்றிருந்தனர். வருபவர்கள் தம் தேவையைத் தெரிவிப்பதை வாங்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். ஆன்னா அவனைப் பார்த்ததும் ரூபியை இலேசாக இடித்தாள், ஆனால் ரூபி ஏற்கனவே அவனைப் பார்த்திருந்தாள்.

“அவனோட உலகத்தை நீ புரட்டிப் போடப் போறே,” ஆன்னா அவளிடம் சொன்னாள்.

ருபி தலையசைத்து ஆமோதித்தாள்- அதைத் தான் கேட்டதாக ஆமோதிக்கத்தானே தவிர, அந்தக் கருத்தைத் தான் ஏற்றதற்காக இல்லை. ஒரு கண்ணாடிக் கோப்பையில் ஐஸ் தண்ணீரை எடுத்துக் கொண்டாள், முன்மேஜைக்குப் பக்கவாட்டுப் பெட்டி ஒன்றிலிருந்து உணவுப் பட்டியலை உருவி எடுத்தாள், அவனுடைய மேஜையை நோக்கி நடந்தாள்.

ஆன்னாவிடம் எதையும் சொல்லி இருக்கக் கூடாதென்று நினைத்தாள், ஏனெனில் இப்போது அவள் அதைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“ஹேய், கைல்!” என்றபடி தண்ணீரையும், உணவுப் பட்டியலையும் அவன் முன் மேஜையில் வைத்தாள்.

சரி, இதுவரை நல்லது.  அர்த்தமில்லாதது. தீதில்லாததும் கூட. குறைந்தது, அவள் திக்கித் திணறவில்லை, இன்னமும்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தான். “ரொம்ப வேலையா இன்னிக்கிக் காலைல?” என்று கேட்டான், ஆனால் தன் பார்வையை உடனே தாழ்த்திக் கொண்டான்.

“வழக்கத்தை விட  அதிகமில்ல.”

அவன் மூடியிருந்த உணவுப் பட்டியல் மீது கையை வைத்தான், மேஜை மீது அதை அவளை நோக்கி மெதுவாகத் தள்ளினான்.

“எனக்கு என்ன வேணும்னு தெரியும்,” என்றான். “பாலாடைக் கட்டி, தக்காளித் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து வாட்டின ரொட்டித் துண்டங்கள், கூடவே ஒரு சாலட் கிண்ணம்.”

“உடனே கொண்டு வரேன்,” என்றாள், ஆனால் அவன் மேஜை அருகே நின்றபடி இருந்தாள்.

“எல்லாம்…. ஆ… நல்லபடியா இருக்கா?” அவன் கேட்டான்.

ரூபி மூச்சை நீளமாக இழுத்துக் கொண்டாள், பிறகு கொட்டி விட்டாள், “நீங்க ஒரு மாலை விருந்துக்கோ அல்லது வேறெதற்கோ என்னோட சேர்ந்து போக வருவீங்களா?”

“நான்…..”

”உங்களுக்குப் பிடிக்கல்லைன்னாக்க இல்லை உங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் தோழி இருக்காள்னாலோ, விட்டுடுங்க, பரவாயில்லை – நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன், நிச்சயமா உங்களுக்கு ஒரு பெண் தோழி இருக்கத்தான் போறா.”

ஐயோ கடவுளே, அவள் உளறிக் கொண்டிருக்கிறாள்.

“எனக்கு யாரும் பெண் தோழி இல்லை.” என்றான்.

“ஓ!”

“அது எனக்கும் பிடிக்கும்.”

“உங்களுக்குச் சரிதானா? நான் சொல்றது… ஓ, நல்லது. அது நல்ல விஷயம்.”

“இன்னிக்கி ராத்திரி போகலாமா?” அவன் கேட்டான்.

“இன்னிக்கேன்னா, பிரமாதம்.” அவள் உணவுப் பட்டியலை எடுத்துக் கொண்டாள். “நான்… இப்படி நான் கேட்டது விசித்திரமா இருக்குன்னு நினைச்சீங்களா… உங்களுக்கு நான் கேட்கறது புரியறதில்லியா?”

அவன் தலையைக் குலுக்கி மறுத்தான். “எத்தனையோ வாரமா நானே கேட்கணும்னு தைரியத்தை வரவழைச்சுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்.”

“நீங்களுமா?”

அவன் தலையசைத்து ஆமோதித்தான். “நிச்சயமா உங்களுக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பார்னு நான் நினைச்சேன்.”

அவள் சிரித்தாள். “எனக்கு இல்லை. நா போய் உங்களோட தேவையைத் தெரிவிச்சுட்டு வரேன்.”

முன்மேஜைக்கு மிதந்துதான் போகிறோம் என்பது அவளுக்கு உறுதியாக இருந்தது.

“ஏ பொண்ணே!” என்றாள் ஆன்னா. “அந்த இளிப்பு உன் மூஞ்சில இருக்கறதைப் பார்த்தாலே தெரியுது, என்ன ஆச்சுன்னு நான் கேட்கவே வேண்டியதில்லை.”

“அவனே என்னை அழைக்கறதா இருந்தானாம். ஆனா அவனுக்கு ரொம்பக் கூச்சமா இருந்திருக்கு.”

“உனக்கு வேணுமுன்னா நானும் கூட வரட்டுமா- நீங்க ரெண்டு பேரும் இப்படி ஆசையைக் காட்டத்தான் சேர்ந்திருக்கீங்க, அதனாலெ ஒருத்தரோட ஒருத்தர் நிஜம்மா பேசணுங்கறதை உங்களுக்கு நினைவுபடுத்த ஒருத்தர் வேண்டிருக்குமா?”

ரூபி தன் நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட்டு, சமையலறை ஜன்னலுக்குப் போய் கைல் வேண்டியதைச் சொன்னாள்.

ரூபி வருவதற்கு முன் ஒரு குட்டித் தூக்கம் போடலாமென்று ஜோயி எண்ணினார். தன் கிடாரைச் சரியாகச் சுருதி மீட்டினார், அதை இருக்கையின் பக்கத்தில் சாய்த்து வைத்தார். நீட்டிப் படுத்தார், கண்கள் மீது ஒரு கையை வைத்து மூடிக் கொண்டார். தூக்கத்தில் ஆழ அவருக்கு ஒருபோதும் தொல்லை இருந்ததில்லை, வேண்டும்போது விழிப்பதும் அவருக்கு எளிதாக இருந்தது, இந்த மாலையும் அதேபோலத்தான் இருந்தது.

 

கிழவர் க்ரோவுக்கு ஒரு யோசனை வந்தது அதனால், இந்தத் தடவை மற்ற உலகத்துக்குக் கடந்து போனபோது, அவர் கருப்புச் சிறகுகளால் பறந்தார். பைன் காட்டுக்குள் போகவில்லை, ஆனால் நகரத்திலேயே இருந்தார், இரவு ஏற்கனவே வந்திருந்த அந்த மற்ற உலகத்திலேயே தங்கினார். ஓர் உலகுக்கும் மற்ற உலகுக்கும் நேரம் நேர்நிலையாகப் பொருந்தி வருவதில்லை.

அவர் ஒரு விளக்குக் கம்பத்தில் அமர்ந்தார், இரவு மனிதர்கள் தம் வேலைகளைச் செய்யப் போய் வருவதைப் பார்த்திருந்தார், டாக்ஸி ஓட்டுபவர்கள், கேளிக்கை விடுதிகளுக்குப் போவோர், போதைப் பொருள்களை விநியோகிப்பவர்கள், பொலீஸ் ரோந்து வண்டிகள், நாய்களுக்கு நடை பழக அழைத்துப் போவோர், மற்றும் மக்கென்னிட் தெருவில் அட்டைகளால் தற்காலிகத் தங்குமிடங்களை நிறுவிக் கொண்டிருக்கும் வீடற்ற மனிதர், எல்லாரையும் பார்த்தார்.

ஆனால் அந்நேரம், ஒரு கணத்துக்கும் அடுத்ததுக்கும் இடையில், திடீரென்று அங்கு ஒரு மனிதர் கூட இல்லை, எல்லாம் அமைதியாகிப் போயிற்று. சலனமின்மை, நிச்சலனம், ஆழ்ந்த ஸ்தம்பிதம். இது பின்னிரவின் அமைதி இல்லை, ஏனெனில் இரவு எத்தனை நேரமானாலும், அந்த நகரம் உறங்குவதே இல்லை. அங்கு எப்போதுமே காற்றில் ஒரு ரீங்கரிப்பு இருக்கும் – கம்பிகளில் பாயும் மின்சாரம், ஒரு காலடி ஓசை, மக்கள் விடும் மூச்சின் ஒலி.

இன்றிரவோ, அங்கு எதுவுமே இல்லை. தெருக்களில் கார்கள் என்னவோ இன்னும் இருந்தன, ஆனால் அவை எல்லாம் காலியாக இருந்தன, அவற்றின் கதவுகள் திறந்தபடி கிடந்தன- கரடி ஆவி நேற்று இரவு அவருக்குக் காட்டிய மாதிரியே எல்லாம் இருந்தது. அவர் கவனத்தோடு உற்று நோக்கித்தான் இருந்தார், ஆனால் கார்களை விட்டு விட்டு ஜனங்கள் போனதை அவரால் பார்க்கவில்லை.

கடைசியில், அவர் ஓர் ஒலியைக் கேட்டார். தெருவில் மெத்தென்ற பாதங்களின் நடையொலி கேட்டது, அவர் மேலே நோக்கினார், அவளைப் பார்த்தார், நின்றிருந்த கார்களின் இடையே நடந்து வந்தாள். கரடி ஆவி, இப்போது  தன் உரோமமடர்ந்த தோலைப் போர்த்தி இருந்தாள், நான்கு கால்களாலும் நடந்து வந்தாள்.

அவள் வருவாளா என்றும், அப்படியே வந்தால், கருப்பு இறகுகளில் போர்த்திய முதிய காகத்தைச் சந்திக்க என்ன உருவில் வருவாள் என்றும் யோசித்திருந்தார்.

அவர் விளக்குக் கம்பத்திலிருந்து மிதந்து இறங்கி, அங்கு நின்ற கார் ஒன்றின் மீது அமர்ந்தார், அதன் திறந்த கதவின் விளிம்பைக் கால் நகங்கள் கிடுக்கிப் பிடியாகப் பிடித்திருந்தன. கரடி ஆவி அவரருகே நின்றாள்.

“பாருங்க,” என்றவள் தன் கூம்பு முகத்தால் மேலே சுட்டினாள்.

கிழவர் க்ரோ மேலே பார்த்தார், அவள் என்ன சுட்டுகிறாள் என்பதை அறிந்தார். கட்டடங்களின் மேல் பகுதிகள் காணப்படவில்லை. பத்து, பதினைந்து அடுக்குகளுக்கு மேலே அவை கரைந்து காணாமல் போயிருந்தன.

“நீங்க அதை நிறுத்தணும்,” அவள் அவரிடம் சொன்னாள்.

“எதை நிறுத்தணும்? அங்கே என்ன நடக்கிறது?”

“எல்லாம் போய்கிட்டே இருக்கு. மக்கள், நகரம் எல்லாம்.”

“மரியாதைக் குறைவாச் சொல்ல வரல்லை,” அவர் சொன்னார், “ஆனால் அஞ்சு விரல் ஜீவன்கள் என்ன செய்றாங்கன்னு எப்போலேருந்து உங்களுக்கு அக்கறை வந்தது?”

“நான் அக்கறைப்படல்லை. நீங்க படணும்.”

“அதெல்லாம் எதனாலெ நடக்குது?”

“அங்கே உயரே ஏதோ இருக்கு,” அவள் தன் முகத்தை மேலுயர்த்திக் காட்டிச் சொன்னாள். “அப்புறம் உங்க கிட்டே இருக்கற ஏதோ விஷயமும் காரணம்.”

“என் கிட்டேயா?”

“போய்ப் பாருங்க.”

அவள் மூன்றாவது முறையாக, கட்டடங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் இருண்ட இரவுக்குள் மேலே சுட்டினாள்.

அங்கே எதுவோ சரியாகத்தான் இல்லை- கிழவர் க்ரோவுக்கு அது தெரிந்திருந்தது. அவருடைய வயதாகிப் போன எலும்புகளுக்குள் வரை கூட அவருக்கு அது உணர்த்தப்பட்டிருந்தது. ஒருவேளை அவருடைய எலும்புகளுக்குள் அவர் உணர்ந்ததும், மேலே ஆகாயத்தை மூடிய இருட்டும் ஒன்றேதானோ என்னவோ, அப்படியானால் அவள் சரியான இலக்கைத்தான் தொட்டுச் சுட்டியிருக்கிறாள்.

அவர் தன் கரிய இறகுகளை விரித்தார், கார்க் கதவிலிருந்து மேலே எழும்பினார். ஒரு மாடி, மூன்று மாடிகள், மேலெழுந்து போனவர் உடனே இருளுக்குள் சென்று விட்டார். எங்கே பார்த்தார் என்பது இப்போது ஒரு பொருட்டாக இல்லை, மேலே, கீழே, இருபுறமும் பக்கவாட்டில். எல்லாமே இருட்டு.

            அவருடைய நெஞ்சில் இறுகலாக உணர்ந்தார், அவருடைய இடது புறச் சிறகுக்கு ஏதோ ஆயிற்று. அது மரத்துப் போயிற்று, அவரால் அதை அசைக்க முடியவில்லை. கீழே விழத் தொடங்கினார். தன் வலது சிறகால் கீழே விழுவதை மெதுவாக்க முயன்றார், ஆனால் அது அவரைச் சுழற்சியில் தள்ளியது, சுற்றிச் சுற்றி, கீழே கீழே…

 

ஜோயி விழித்தபோது பார்த்த ஒளி அவரைக் குருடாக்குவது போலிருந்தது. அதனால் கண்களை மறுபடி மூடினார்.

”ஜோயீ?” பழக்கமான ஒரு குரல் விளித்தது.

அவரால் அதை அடையாளம் காண முடியவில்லை. அது பொருந்தாத இடத்திலிருந்து வந்தது. இது என்ன இடமாக இருந்தாலும் இங்கு அவர் பொருந்த மாட்டார்.

இடம்.

அவர் தான் மிருதுவான எதன் மீதோ படுத்திருப்பதை அறிந்தார். அது ஒரு மெத்தை போல இருந்தது. படுக்கை.

 “ஜோயீ?”

அவர் கண்களை மறுபடி திறந்தார், அந்த பிரகாசமான ஒளியால் கண்களை வருத்தாமல் இருக்கக் குறுக்க வேண்டி இருந்தது. ரூபியின் முகம் அவர் பார்வையை நிறைத்தது, பின் அவரால் ஏதும் பார்க்க முடியவில்லை, அது அவள் குனிந்து அவரை அணைத்ததால் என்று உணர்ந்தார்.

“கடவுளுக்கு நன்றி சொல்லணும், நீங்க திரும்பி வந்ததுக்கு,” அவள் சொன்னாள்.

“திரும்பியா..”

அப்போது அவருக்கு நினைவு வந்தது. தான் எல்லை தாண்டியது. கரடி ஆவி. தன்னை விழுங்கிய இருள்.

“என்ன ஆயிற்று?” அவர் கேட்டார்.

ரூபி நிமிர்ந்து அமர்ந்தாள், தான் எங்கே இருக்கிறோம் என்று அவருக்குத் தெரிந்தது. ஒரு மருத்துவ மனையில். நான்கு படுக்கைகளில் ஒன்றில். ரூபி அருகே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

 “உங்க அடுக்ககத்துக்கு என்னோட பாட்டு வகுப்புக்காக வந்தேன்,” அவள் சொன்னாள், “நீங்க கீழே விழுந்திருந்தீங்க, உங்களோட முன் அறையில நடுப்பற கீழே கிடந்தீங்க, அதனாலெ நான் 9-1-1 ஐக் கூப்பிட்டேன்.”

“நான் பறந்துகிட்டிருந்தேன்.”

 “ஓ, அப்படியா, அதான் கீழே விழுந்திட்டீங்க போல இருக்கு. இங்கே நர்ஸ்களோட மையத்தில நான் உங்க பேத்தின்னு சொன்னேன், அதான் இங்கே என்னை இருக்க விட்டாங்க.”

“நாம உறவுக்காரங்கதான்.”

ரூபி புன்னகைத்தாள். அவள் என்ன நினைத்தாள் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆமாம், இந்த கருப்பினக் கிழவனும், பிடாரி போல இருக்கற வெள்ளைக்காரப் பெண்ணும் ரொம்பவே உறவுதான் என்று நினைப்பாள்.

“அப்படீன்னு ஏன் சொல்றீங்க?” அவள் கேட்டாள்.

அவர் தன் கையை உயர்த்தி அவளுடைய சட்டையின் கையைத் தொட்டார், அது அவள் அங்கே குத்திக் கொண்டிருந்த பச்சையை மறைத்திருந்தது.

“கரிச்சான் காக்கையும், காகமும். நாம் இருவரும் காக்கைக் குடும்பம்- நான் இதை உனக்கு முன்னமே சொல்லி இருக்கேன்.”

அவள் மறுபடியும் புன்னகைத்தாள். “நீங்க எனக்கு நிறைய சொல்லி இருக்கீங்க, ஜோயீ.”

“ஆனா, நீ எதையும் நம்பினதில்லையே.”

அவரால் இதை இப்போது காண முடிந்தது, தன்னை ஒரு முட்டாளென உணர்ந்தார். அவர்களிருவரிடையே ஒரு உறவு இருந்ததாக அவர் நினைத்திருந்தார். அவளும் அந்த உறவை உணர்ந்திருந்தாள் என்றும் நினைத்தார். இல்லையென்றால் ஒரு கிழவரோடு அத்தனை நேரத்தை அவள் ஏன் செலவழிக்கப் போகிறாள்? எதற்காகப் பழைய பாடல்களைக் கற்க விரும்பப் போகிறாள்?

இப்போது அவள் தன்னிடம் காட்டியது பரிவு என்று புரிந்தது. அது தாராள மனதால் செய்யப்பட்ட தானம், உறவுப் பிணைப்பில்லை.

இப்போது அவருக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை, அவளுக்கு இசை மீதிருந்த ஆர்வம் நிஜமானதுதான் என்று பாவிப்பதுதான். அந்த மாதிரி ஆர்வத்தை மறைக்க முடியாது.

“உங்களோட கதைகள் எனக்குப் பிடிக்கும்,” என்றாள்.

“அதெல்லாம் வெறும் கதைகளில்லை.”

“அவை கதைகளில்லை என்று எனக்குத் தெரியும்- உங்களுக்கு அப்படி இல்லை. ஆனால் எனக்கு வேற மாதிரிதான் இருந்தன.”

“நான் ஏன் அதை எல்லாம் உனக்கு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டிருந்தேன்னு எப்பவாவது யோசிச்சிருக்கியா?”

“உங்களுக்கு அப்படிச் செய்யப் பிடிக்குங்கறதாலெ.”

அவர் தலையைக் குலுக்கி மறுத்தார். “உனக்குள்ளெ தூங்கிக்கிட்டிருக்கிற தாயாதி ரத்தத்தை எழுப்பறதுக்காக. உனக்கு நினைவில்லைன்னாலும், அதுக்கு நினைவிருக்கு.”

“என்ன சொல்றீங்க?”

 “நீ எதுக்காக கரிச்சான் காக்கையைப் பச்சையாக் குத்திக்கிட்டே?”

அவளுக்கு இப்போது ஆச்சரியம் எழுந்தது.

“எனக்கு விளக்கித்தான் பாரேன்.”

“எனக்குத் தெரியலை. எனக்கு அதுங்களை எப்பவுமே பிடிக்கும்.” அவரை நோக்கி ஒரு சிறு புன்னகை புரிந்தாள், ஏதோ அவரிடம் மன்னிப்பு கோருவது போல இருந்தது அது. “அதுங்களோட எனக்கு ஏதோ தொடர்பு இருக்கற மாதிரி எனக்கு இருக்கு. நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த அந்தப் பாட்டுல வர மாதிரி.”

அவள் மென் குரலில் அதைப் பாடினாள்:

ஊசியிலை மரத்தில் கரிச்சான் குருவி

பாடுகிறாய், உண்மையன்பே, வருவாயா என்னிடம்

அவளின் நீளக் கரும் வாலும், வெண்பனி நெஞ்சும்

அவள் மீது காதல் கொண்டதே என் நெஞ்சம்.

 

ஜோயி ஆமோதிப்பாகத் தலையசைத்தார். பெருமூச்சு விட்டவர், கண்களை மூடிக் கொண்டார்.

“நல்லது, என்னால முடிஞ்சதைப் பண்ணினேன்,” என்றார்.

“ஜோயீ.”

அவர் தன் கண்களை மூடியபடி இருந்தார். அது நடந்து விட்டது, என்று நினைத்தார். சில சமயங்களில் ஏற்கப்படுவது நேர்வதில்லை. சில சமயங்களில் பழைய ரத்தம் இன்னும் ஒளிந்திருக்கவே விரும்புகிறது. அது யாருடைய பிழையும் இல்லை.

“அப்படி இருக்காதீங்க.” அவளுடைய கை தன் கரத்தின் மீது படுவதை அவர் உணர்ந்தார். “நான் உங்கள் மனசை நோகடிக்க நினைக்கல்லை. நீங்க நல்லாயிடுவீங்கன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.”

அவர் அவளை மறுபடி பார்த்தார்.

“டாக்டர் உங்களுக்கு வந்தது வாத வலிப்பு இல்லைன்னு சொன்னார். ஆனால் அவர் இன்னும் சில சோதனைகளின் முடிவுகள் தெரிவதற்குக் காத்திருக்கிறார்.”

“சோதனைகளா?”

“நீங்க ரொம்ப நேரம் நினைவில்லாம கிடந்தீங்க, ஜோயீ.”

அவர் அங்கீகரிப்பாகத் தலையசைத்தார். இருள் அவரைப் பற்றிக் கொண்டு போயிருந்தது. அவர் அதை நினைவு கூர்ந்தார். அவருடைய சிறகு மரத்துப் போயிருந்தது, அவர் கீழ் நோக்கிச் சுழன்று சுழன்று சரிந்து வீழ்ந்து கொண்டிருந்தார்.

“நீங்க மயக்கமடிச்சு விழுந்திருப்பீங்கன்னு அவர் நினைக்கிறார்- ஆனா உங்களோட வயசுல அது தீவிரமான பிரச்சினைதான், ஏன்னா அது ஏன் நடந்ததுன்னு அவங்களாலெ புரிஞ்சுக்க முடியல்லை.”

“நம்ம குடும்பத்துக்காரங்க பொதுவா நோய்வசப்படுவதில்லை- ஐந்து விரல் ஜீவன்கள் மாதிரி இல்லை நாம.”

அவள் அவரைக் குழப்பத்தோடு பார்த்தாள், பிறகு புரிந்தது போலத் தலையசைத்தாள்.

 “சரி,” என்றாள். “ஆனா உங்களுக்கு ஏதோ நடக்கத்தான் செய்தது. அதனாலெ அவங்க உங்களைக் கவனிப்புல வச்சிருக்காங்க.”

“கவனிக்க எதுவுமே இல்லை. நிறைய கதைகளோட இருக்கற ஒரு கிழவன், அதுவும் புத்தி அதிகம் இல்லாதவன், அவ்வளவுதான்.”

“ஓ, ஜோயீ. நான் சொன்னதுக்கு அப்படி ஏதும் அர்த்தமில்ல-”

“நாம வேற எதையாவது பத்திப் பேசலாமே. அந்தப் பையனைச் சந்திப்புக்கு அழைச்சியா?”

அவளுடைய கவனத்தைத் திருப்ப அதுதான் மிகப் பொருத்தமான விஷயம்.

“அவன் சரீன்னு சொல்லிட்டான்!” என்றாள். “நாங்க போகப் போறோம் – ஓ, கடவுளே!” அவள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். “அவன் வேலை முடிஞ்சு வரப்போ நான் அவனைப் பார்க்க வரேன்னு சொல்லி இருந்தேன்.”

“அப்ப, போ!”

“இல்லை. நான் உங்களை விட்டுப் போக முடியாது.”

“நான் நல்லாத்தான் இருக்கேன்,” அவர் சொன்னார். “ஹாஸ்பிடல்லெ இருக்கேன். அவங்களுக்கு ஜனங்களை எப்படிப் பார்த்துக்கிடறதுன்னு நல்லாத் தெரியும். நீ இப்போவே போகணும், அப்புறம், நாளைக்கு நான் இங்கேயே இன்னும் இருந்தாக்க, நீ என்ன நடந்ததுங்கற விவரத்தை எனக்குச் சொல்லணும்.”

அவள் உடனேயோ, விருப்பத்தோடோ போகவில்லை, ஆனால் கடைசியாக அவர் அவளை ஒத்துக்கொள்ளச் செய்தார். அவள் எழுந்து நிற்கு முன், சாய்ந்து, அவருடைய நெற்றியில் ஒரு முத்தமிட்டாள்.

“உங்களுக்கு இது சரியாப்படுதா,” அவள் மீண்டும் துவங்கினாள்.

அவர் அவளைப் பார்த்துச் சிரித்தது பளீரென்று துலங்கியது. “எனக்கு நிச்சயமாத் தெரியும். போ, போ. எனக்கு எப்படியும் கொஞ்சம் ஓய்வு தேவை. இன்னிக்கு எனக்கு ஏற்கனவே நிறைய அதிசயமா நடந்துட்டுது.”

“என்னோட முறை வேலை முடிஞ்சதும் நாளைக்குப் பார்க்க வரேன். உங்களை நானே ஒருகால் வீட்டுக்கு அழைச்சுப் போக முடியலாம்.”

அவர் ஆமோதித்துத் தலையசைத்தார். “நீ வரும்போது ஒரு கப் காஃபி கொண்டு வா, வரியா? இங்கே என்ன மாதிரி காஃபி வச்சிருப்பாங்கன்னு எனக்கு ஊகிக்க முடியுது.”

“செய்யறேன்.”

அவள் போனபோது அவர் கண்களை மூடிக் கொண்டார்.

 

கிழவர் க்ரோ மறுபடியும் மறு பக்கத்துக்குக் கடந்தார், கருப்புச் சிறகுகளால் இரு உலகுகளுக்கு இடையே இருந்த காற்றைக் கிழித்துக் கொண்டு போனார். இந்த முறை அவர் கரடி ஆவி அவரைக் கண்டு பிடிக்கக் காத்திருக்கவில்லை, ஆனால் மலையில் உயரத்தில், பனிப் பாறைகளால் நீரூட்டப்பட்டு, மறைவாக இருந்த அந்த ஏரியருகே அவளைத் தேடினார். அது ஆவிகளின் ஏரி.

   அவர் மலைகளிடையே உயர உயர எழுந்து, பைன் காடுகளுக்கு மேலே பறந்தார், கனவுப் பரப்புகளூடே வடதிசையை நோக்கிப் போனார்.  மரங்களின் வரம்புக் கோட்டைத் தாண்டி மேலே போனவர், அங்கே காற்று வெளியின் அடர்த்தி குறைவாக ஆனதால், இன்னும் மேலெழுவதற்குப் பிரயாசை கூட்ட வேண்டியதைக் கண்டார், மேலும் அங்கே காற்றில் மிதந்து போக உதவும் காற்று ஓட்டங்களும் இல்லை. ஆனால் நகரத்தில் அவரைச் சூழ்ந்து இறுக்கிய இருளும் அங்கு இல்லை, எனவே அவர் தனக்கு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டார்.

இறுதியாக ஒரு கணவாய் வழியே மிதந்து போனார், பசுமையான நீண்ட பள்ளத்தாக்கு ஒன்றுக்குள் இறங்கினார், அங்கு காடாக வளர்ந்த பைன் மற்றும் டாமராக் மரங்கள் ஓர் பதுங்குமிடம் போல உருவாக்கியிருந்த பகுதியில் பெருமதிப்புள்ள அணிகலன் போல அந்த ஆவிகளின் ஏரி கனவுகளால் மூடப்பட்டிருந்தது. நீண்டதொரு சுழற்சியில் அவர் வழுக்கிச் சரிந்து இறங்கும்போது தன் சிறகுகளுக்கு ஓய்வளித்திருந்தார், அப்போது அவரால் அந்த ஏரிக்கரையின் எல்லாப் பகுதிகளையும் பார்க்க முடிந்தது.  அவர் ஏரியின் வடபகுதியைப் பார்த்து நின்ற, காய்ந்து போன ஒரு பைன் மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தார்.

“நீஙக இங்கே இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்,” மூச்சு வாங்கியது நின்று சமநிலை திரும்பியதும், அவர் சொன்னார்.

“அட தெரிஞ்சுகிட்டீங்களா?”

அவர் தன் கிளையில் திரும்பி மறுபுறம் நோக்கி அமர்ந்தார், பைன் மரங்களின் நிழலிலிருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் கரடி ஆவியைக் கண்டார்.

“ஆமாம்,” என்றார். “இப்பவாவது தெரிஞ்சுகிட்டேன்.”

அவளுடைய கண்களில் நகைப்பின் கீற்று மின்னியதைப் பார்த்தார், அப்போது அவள் காட்டுக்கும், அவளுக்காகக் கிழவர் க்ரோ காத்திருந்த அந்தக் காய்ந்து போன பைன் மரத்துக்கும் இடையில் துருத்தி நின்ற சுண்ணாம்புப் பாறைக்கு தடம் பதித்து வந்தாள்.

“என்னை என்ன செய்தீங்க நீங்க?” அவர் கேட்டார். “போன தடவை நான் கனவு கண்டுகிட்டிருந்தப்போ.”

“நான் எதுவும் செய்யல்லை. உங்களுக்கு அதைக் காட்டத்தான் வந்தேன்.”

“அந்த இருளை, ஆமாம். அது என்னை அப்படியே விழுங்கிடுத்து.”

“எனக்குத் தெரியும், நான் பார்த்தேன்.”

“அதுதான் என்ன? அது எல்லாத்தையும் அழிச்சுகிட்டு வருது, எனக்குள்ளே அது இருக்குன்னு சொன்னீங்க இல்லையா?”

கரடி ஆவி தலையசைத்து ஆமோதித்தாள்.

“எனக்குப் புரியல்லே. நீங்க ஏன் நேரா எங்கிட்டெ சொல்ல மாட்டேங்கிறீங்க?”

அவள் அவரை ஒரு நீண்ட கணம் உற்றுப் பார்த்தாள், பின் மறுபடி தலையசைத்தாள்.

“நீங்க தான் ஒரு காகம்னு கனவு காண்கிற மனுசனா மாறிட்டீங்க,” என்றாள் இறுதியாக.

“என்னது?”

 “நீங்க ஒரு காகமா இருந்தீங்க, மனுசனா இருக்கறதைப் பத்திக் கனவு கண்டுகிட்டிருந்தீங்க, உங்களோட பழைய ரத்தம் வலுவா ஓடிக்கிட்டிருந்தது. ஆனா இப்ப?” அவள் எதிர்மாறாக ஆனதைச் சுட்டும்படி தோள்களைக் குலுக்கினாள். “உங்களோட அந்த நீண்ட வாழ்க்கையை நீங்க வாழவே இல்லைங்கற மாதிரி ஆயிட்டுது. நீங்க இப்ப ஒரு அஞ்சு விரல் பிராணியாகிட்டீங்க, வயசாயிப் போய், உங்களோட வாழ்க்கையின் அந்திம காலத்துக்கு வந்துட்டீங்க.”

“இது எப்படி ஆச்சு?”

கிழவர் க்ரோ இந்தக் கேள்வியை கரடி ஆவியிடம் மட்டும் கேட்கவில்லை, தன்னிடமும் கேட்டுக் கொண்டார், ஏனெனில் அவளுடைய சொற்களில் இருந்த உண்மையின் கனம் அவருக்குத் தெரிந்தது. அவர் பெருமளவு மனிதனாகவும் சொல்பமே காகமாகவும்தான் ஆகி விட்டார். இது நடந்து பல வருடங்களாகி விட்டன. மனிதனாக வாழ்ந்தபடி, கனவுகளில் மட்டுமே பறந்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்.

“நான் உங்களுக்கு அதைச் சொல்லணுமா?”

அவர் தலையை ஆட்டி மறுத்தார்.

“இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கக் கூடும்,” அவள் சொன்னாள். “இரண்டு கால்களில் நடந்து கொண்டு, பேசிப் பேசிப் பேசி, மறு உலகில் ரொம்ப காலம் வாழ்ந்தால்.”

“காகங்கள் எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.”

அவள் ஆமோதித்துத் தலையசைத்தாள். “தங்களுக்குள். ஐந்து விரல் பிராணிகளோடு இல்லை. இல்லை என்பதோடு, தாம் பேசுவது அவர்களுக்குப் புரியும் என்றும் எதிர்பார்ப்பதில்லை.”

“ஆனால் அவர்களில் சிலரிடம் பழைய ரத்தம் ஓடுகிறதே, மெலிதாக ஆகி, கனவுகிறதாகவும் இருக்கிறது. அதற்கு விழிப்பூட்டினால் போதும்.”

“அவர்கள் நடுவே வாழாமலே அவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து விட முடியும்.”

“அப்படியா.”

“நான் உங்கள் மனச்சாட்சியோ, தாயாரோ இல்லை,” கரடி ஆவி அவரிடம் சொன்னாள். “உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புகிறபடி செலவழிக்கலாம்.”

அதை ஏற்று அவர் தலையசைத்தார்.

”தவிர, நான் அனேகமாக காகக் குடும்பங்களின் காரணங்களையும், அவை எங்கே இருக்கின்றன என்பனவற்றையும் பற்றி அக்கறை கொள்வதுமில்லை.”

“எனக்குப் புரிகிறது.”

ஆனால் அவள் புன்னகைத்தாள். “இருந்தாலும், தூங்குகிற சொந்தக்காரர்களை விழிக்க வைக்கிறதுல உங்களுக்கு ஆர்வம் இருக்கிற மாதிரி, காகங்களின் உறவுகாரர்களுக்கு அவர்கள் யார்- அல்லது யாராக முன்பு இருந்தனர் – என்பதை நினைவுபடுத்துவதற்கு எனக்கு ஈடுபாடு வருகிறது.”

“அந்த இருள்,” கிழவர் க்ரோ சொன்னார். “அது என் மரணம்தான், இல்லையா?”

அவள் ஆமோதித்தாள்.

“எல்லாம் கரைஞ்சு போகிறதா நீங்க சொன்ன போது, என்னோட உணரும் திறமையெல்லாம் போய்க் கொண்டிருக்குன்னு சொல்ல வந்தீங்க. அதனாலெதான் நான் ஒரு ஆஸ்பத்திரிப் படுக்கையில விழிச்சு எழுந்தேன். நான் செத்துப் போயிட்டிருந்தேன்.”

அவள் மறுபடியும் ஆமோதித்துத் தலையசைத்தாள்.

“நான் இன்னமும் செத்துகிட்டிருக்கேனா?”

“நாம எல்லாருமே செத்துகிட்டிருக்கோம், காகக் கிழவா. ஒவ்வொரு நாளும். ஐந்து விரல் பிராணிகளுக்கும் காகங்களுக்கும் இதெல்லாம் பொது. ஆனா நாம வாழ்ந்துகிட்டும் இருக்கோம். சில சமயம் நமக்கு அது மறந்து போயிடுது.”

அவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தனர். இங்கே நிசப்தமாக இருக்கிறது, கிழவர் க்ரோ எண்ணினார், ஆனால் இது இயற்கையான அமைதி. பைன் கிளைகளூடே தென்றல் பெருமூச்சு விட்டுக் கடந்தது. கரையில் ஏரி நீரலைகள் சலசலத்தன.

“இதனாலெ மனிதர்களுக்கு உதவறதை நீங்க நிறுத்தணும்னு இல்லை,” கரடி ஆவி சொன்னாள்.

கிழவர் க்ரோ தலையசைத்து ஏற்றார். “ஆனா, நான் யாருங்கறத்தையும் நான் நினைவு வச்சிருக்கணும், அதானே.”

“நீங்க அதைச் செய்யணும்.”

“சரி, இப்ப அடுத்ததென்ன?”

அவள் தோள்களைக் குலுக்கினாள். “நீங்க காகமா இருக்க முயற்சி செய்துகிட்டு, மனுசனா இருக்கறதைப் பத்திக் கனவு மட்டும் காணலாம்.”

 

லீ தெருவுக்குப் போகும் தரையடி ரயிலைப் பிடிக்கையில் ரூபியின் மனம் உற்சாகமாக இருந்தது. முன்னம் ஜோயியின் இடத்தில் முன்னறையில், தரையில் விழுந்து கிடந்த அவரைப் பார்த்தது அவளை நிறையவே பயமுறுத்தி இருந்தது. ஆனால் அவள் இப்போது தெம்பாக உணர்ந்தாள். மருத்துவ மனையை விட்டுச் செல்லுமுன், மருத்துவர் அவளிடம் ஜோயிக்கு சாவு அவ்வளவு சீக்கிரமாக வராது என்று நம்பிக்கை ஊட்டி இருந்தார்.

 “உங்க தாத்தா, குதிரை மாதிரி ஆரோக்கியமாத்தான் இருக்கார்,” அவர் அவளிடம் சொன்னார்.

“அப்ப அவர் ஏன் அப்படி விழுந்து கிடந்தார்?”

“எனக்கு இன்னும் தெரியல்லை. சோதனைகளோட முடிவு தெரியறதுக்கு நான் காத்துகிட்டிருக்கேன். ஆனா, இப்போதைய நிலையைப் பார்த்தா, அவரை நாளைக் காலையில வீட்டுக்கு அனுப்பலாம்னு நிச்சயமாச் சொல்வேன்.”

ஆனால் கவலைப்பட இன்னும் ஏதோ கொஞ்சம் இருக்கவே செய்தது, இருந்தாலும் இப்போதைக்கு, அவர் நலமாக இருக்கிறார், திறமையானவர்களின் மேற்பார்வையில் இருக்கிறார் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. மேலும் அவள் கைலை ஒருவழியாக இப்போது சந்திக்கவிருக்கிறாள். அவள் திரும்பி, ஜன்னலில் தன் பிரதிபலிப்பைச் சோதித்தாள், ஆனால் அந்த ஜன்னல் அத்தனை அழுக்காகவும், கறை படிந்தும் இருந்ததால், அவளுடைய முகம் என்ன நிலையில் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒப்பனைக்காக அவளிடம் இருந்த சிறு பேழையைத் திறந்து, தன் உதட்டுச் சாயப் பூச்சைப் புதுப்பித்துக் கொண்டாள், கன்னங்களில் வண்ணப் பூச்சை இலேசாக ஒற்றிக் கொண்டாள், அதற்குள் அவள் சேர வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது, அவள் இறங்க வேண்டியிருந்தது, படிகள் மேலேறித் தெருவை நோக்கி நடந்தாள்.

அந்த சைக்கிள் கடை, ஃப்ரீவீலிங், மூடிப் பத்து நிமிடங்கள் ஆகி இருக்கும். கைல் அங்கே இல்லை என்றால் என்ன செய்ய? அவள் வராமல் அவனை ஏமாற்றி விட்டதாக அவன் நினைத்திருந்தால்?

ஆனால் கடைக்கு வெளியில் கைல் காத்திருப்பதை அவள் பார்த்து விட்டாள், அவளைக் கண்டதும் அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசமாக ஆனது தெரிந்தது, அவள் தன்னை மீறி வாய் அகன்று சிரித்தாள். ஒரு கணத்தில் அவன் முன்னால் நின்றிருந்தாள், திடீரென்று இருவருக்கும் பேச ஏதுமே இருக்கவில்லை.

ஆனால் அவள் ஜோயியைப் பற்றி நினைத்தாள் – அவர் அவளுக்குக் கொடுத்த அந்த அச்சம், தன் கதைகளோடு அவர் எப்போதுமே அவளுக்குக் கொடுத்து வந்த புத்திமதிகள். வாய்ப்பைத் தேடிப் போகாவிட்டால், எப்படி யாருக்குமே எதுவுமே கிட்டாது என்று அவர் சொல்லிக் கொடுத்ததை.

தான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்ந்தாள், கைலிடம் தான் அப்படி உணர்வதைச் சொல்ல இருந்தாள். அவனோடு ரொம்ப ஒட்டிக் கொண்டு, விசித்திரமாக நடந்து கொள்ளப் போவதில்லை அவள், ஆனால் அவள் அவனிடம் ஒளிவு மறைவு ஏதும் காட்டப் போவதுமில்லை.

“இந்த மாதிரி வேலை செய்கிற இடத்துக்கு வெளியிலும் நாம பழகப் போகிறோம்ங்கறதுல எனக்கு மகிழ்ச்சியா இருக்கு,” என்றாள்.

“எனக்கும் கூட. நான் அப்பவே சொன்ன மாதிரி…நான்.. உனக்குத் தெரியுது இல்லியா.. உன்னை இப்படிச் சந்திக்க அழைக்கணும்னுதான் ஆசைப்பட்டிருந்தேன்…”

அவள் புன்னகைத்தாள். “உனக்கும் இது விசித்திரமா இருக்கா? எத்தனையோ வாரமா உனக்கு நான் சாப்பாடு கொடுத்துகிட்டிருந்தேன் அந்த விடுதியில, ஆனா திடீர்னு, நாம இங்கே இப்படி இருக்கோம், இது இனிமே ரொம்பவே வித்தியாசமான விளையாட்டு..”

அவன் ஒரு புருவத்தை உயர்த்தினான். “நீ விளையாட்டுப் போட்டிகளை எல்லாம் விரும்பிப் பார்க்கிறவளா?”

“ஆ, அப்படி ஒண்ணும் இல்லை.”

“நானும்.”

அவன் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். “நாம ஒரு ரெஸ்ட்ராண்டுக்குப் போகலாம். வேற ஒரு பரிசாரகி நமக்குச் சாப்பாட்டைக் கொண்டு வரட்டும். உனக்கு என்ன மாதிரி சாப்பாடு வேணும்?”

 “தெரியல்லியே – உனக்கு என்ன பிடிக்கும்?”

“கிட்டத் தட்ட எல்லாமே பிடிக்கும். டேனி – என்னோட வேலை செய்யறான் – மக்கென்னிட் தெருவுக்குத் தெற்கா ஒரு புது வியத்நாம் கடை இருக்குன்னு சொன்னான். அதை நாம போய்ப் பார்க்கலாம். அங்கே சாப்பாடு நல்லாவும் இருக்கு, மலிவாவும் இருக்குன்னான்.”

“அது நல்ல சேதியா இருக்கே. எனக்கு பட்ஜெட் குறைச்சலாத்தான் இருக்கு. ஒரு புது கிடார் வாங்கறதுக்கு நான் பணம் சேர்க்கறேன்.”

“கிடார் வாசிப்பியா?”

“ம்ம்ம்ம். நான் அதை வாசிக்கும்போது உலகமே கச்சிதமா ஆயிட்ட மாதிரி எனக்கு இருக்கும்- நான் வாசிக்கிறபோது கம்பிகளைத் தவற விட்டாலும் சரி, பாட்டுல சில வார்த்தைகளை மறந்து போனாலும் கூட அது மாறாது.”

“ஒரு பாட்டுக் குழுவுல, நான் முன்னெ மாண்டொலின் வாசிச்சிருக்கேன்,” அவன் சொன்னான். “நகரத்துக்கு நான் வரதுக்கு முன்னால…”

அதற்குப் பிறகு எல்லாம் அப்படியே போயிற்று, பேச்சில் அவர்கள் ஆழ மூழ்கிப் போனார்கள், ரெஸ்ட்ராண்டுக்குப் போகும்போதும், சாப்பிடும்போதும் நெடுக அப்படியே இருந்தது. சாப்பாடு மிக நன்றாக இருந்தது, ஒருவருக்கொருவர் துணை அதை விட மேலாக இருந்தது, ஆனால் சாப்பாட்டுக் கட்டணத் தொகை கிட்டுவதற்கு அவர்கள் காத்திருக்கையில், ரூபிக்கு ஜோயியின் நினைவு வந்தது. அவர் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பார், தனியாகக் கிடப்பார். ஒருகால் அந்த ரெஸ்ட்ராண்டின் ஜன்னலருகே வெளியே நடந்து போன கருப்பின மனிதர் அந்த நினைவைத் தூண்டினாரா. ஒருகால் அவள் குத்தியிருந்த பச்சையைப் பற்றி கைல் சொன்னது காரணமா, அல்லது அவனது பழைய இசைக்குழுவில் அவர்கள் இசைத்த ஒரு பாடலை அது நினைவூட்டியது என்று அவன் சொன்னதா, அந்தப் பாட்டும் ஜோயியிடம் அவள் பாட்டு கற்றுக் கொள்ளத் துவங்கியபோது அவர் சொல்லிக் கொடுத்த முதல் பாட்டாக வேறு இருந்ததா.  அல்லது டாக்டர் அவளுக்குக் கொடுத்த நம்பிக்கையைத் தாண்டி, ஜோயியை அவரது வீட்டில் முன்னறையில் தரையில் விழுந்து கிடந்த நிலையில் பார்த்ததால் அவளுக்கு எழுந்த கவலை இன்னமும் அவள் நெஞ்சிலேயே தங்கி இருந்தது, அவளால் அதை நீக்க முடியவில்லை என்பதா.

“எல்லாம் நல்லபடியா இருக்கா?” என்றான் கைல்.

“என்ன? ஓ, மன்னிச்சுக்க. நான் ஜோயியைப் பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன் – எங்க உணவகத்துக்கு வாடிக்கையாளர் அவர். அவர் எனக்கு நண்பரும் கூட, அவருக்கு… என்னது அதுன்னு இன்னிக்கி எனக்குத் தெரியல்லை. ஆனா அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு விடும்படி ஆச்சு, அவரை இன்னிக்கி ராவுக்கு கவனிப்பில வச்சுகிட்டிருக்காங்க.”

”எனக்கு அவரைத் தெரிஞ்சிருக்குமா?”

“சாத்தியம்தான்.”

அவள் ஜோயியைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கிய போது, கைல் தலையசைத்தான்.

“அவரோட கண்கள் எல்லாத்தையும் பார்க்கிற மாதிரி இருக்கும், அவர்தானே.”

“அது ஜோயிதான், சரியாச் சொன்னே.”

அவரை அன்று முன்மாலையில் அவள் எப்படிக் கண்டு பிடித்தாள் என்பதைச் சொன்னாள், அவர் அவளுக்கு எப்படிப் பழைய பாடல்களைச் சொல்லித் தருகிறார் என்பதையும், சாப்பிட அவளுடைய கடைக்கு ஒவ்வொரு தடவையும் வரும்போது அவர் எப்படி அவளுடைய நாளை நல்ல நாளாக மாற்றுகிறார், ஏன் அதனால் அவளுக்கு அவரைப் பிடிக்கும் என்பதையும் சொன்னாள்.

“பார்வையாளர் நேரம் அங்கே எப்போது முடியும்?” என்றான் கைல்.

“ஒம்பதுன்னு நினைக்கிறேன்.”

அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். “இன்னும் நேரம் இருக்கு. உனக்குப் பிடிக்கும்னா, நாம அங்கே கொஞ்சம் நின்னு அவரைப் பார்க்கலாம்.”

“நிஜம்மாவா?”

அவன் தலையசைத்து ஆமோதித்தான். “நமக்கு முக்கியமானவங்களாத் தெரியறவங்களைப் பராமரிக்கிறது நல்லது.”

 

 “இப்பத்தான் அவரைப் பார்க்கப் போனேன்,” அவர்கள் நர்ஸ்களின் மையத்துக்குப் போன போது அங்கிருந்த நர்ஸ் சொன்னார், “அவர் இன்னமும் தூங்கிக்கிட்டிருக்கார். ஆனால் உங்களுக்கு வேணுமுன்னா அங்கே அவர் பக்கத்திலே உட்கார்ந்திருக்கலாம். ஒன்பது மணி வரைக்கும் பார்வையாளர் நேரம் உண்டு.”

ரூபி புரிந்தவளாகத் தலையசைத்தாள். “எனக்குத் தெரியும். உங்களுக்கு நன்றி.”

கைலை அவன் யார் என்று நர்ஸ் கேட்குமுன்னர், அவள் அந்த நடை வழியே ஜோயி இருந்த அறைக்கு அழைத்துப் போனாள். ஆனால் அவர்கள் அந்த அறைக்குப் போன போது, ஜோயியின் படுக்கை காலியாக இருந்தது. மற்ற மூன்று படுக்கைகளிலும் வேறு மனிதர்கள் உறங்கினார்கள், ஆனால் அவர்களில் யாரும் ஜோயி இல்லை. அவர் படுக்கையை மாற்றி விடவுமில்லை. கழிப்பறைக் கதவு திறந்திருந்தது, அவர்களால் அங்கே யாருமில்லை என்று பார்க்க முடிந்தது.

“இது விசித்திரம்தான்,” என்றாள் ரூபி.

கைலுடன் அவள் நர்ஸ்களின் மையத்துக்குத் திரும்பிப் போனாள், அவர்கள் சரியான அறைக்குத்தான் போயிருந்தனரா என்று சோதிக்க.

“அவர் இன்னும் 318 இல்தான் இருக்கிறார், அன்பே.”

ரூபி மறுபடியும் பீதி எழுவதை உணர்ந்தாள் – அவருக்கு ஆம்புலன்ஸ் வருவதற்காகக் காத்திருந்த போது அப்படித்தான் அவளுக்கு இருந்தது.

“இப்ப இல்லை, அங்கே பார்த்தோம்,” என்றாள் அவள்.

புரியாதவளாக நர்ஸ் அவளைப் பார்த்தாள். “நான் இப்பத்தானே அவரோட அறையில இருந்தேன். அந்த நடை வழியே யாரும் இதுவரைக்கும் வரவில்லையே.”

அவள் அவர்களை மறுபடி 318 ஆம் எண் அறைக்கு அழைத்துப் போனாள், ஆனால் ஜோயி அங்கே இப்போதும் இருக்கவில்லை. அவள் உதவிக்கு ஆட்களை அழைக்க அவசரமாகப் போனாள், ரூபி அந்தப் படுக்கையைப் பார்க்கப் போனாள். ஜோயி இன்னமும் இறக்கவில்லை என்றாலும், தான் அவரை மறுபடி பார்க்கப் போவதில்லை என்று ஏதோ வினோதமாக அவளுக்குத் தோன்றியது.

“அது என்னது?” கைல் கேட்டான்.

அவன் தலையணையைச் சுட்டினான். அங்கே ஒரு நீண்ட கருப்பு இறகு கிடந்தது.

ஒரு காகத்தின் இறகு, என்று ரூபி எண்ணினாள். தன் கையில் பச்சை குத்தியிருந்த கரிச்சான் காகத்தின் உருவைத் தடவிப் பார்த்தாள், அவளுடைய தலைக்குள் ஜோயியின் குரல் கேட்ட மாதிரியே இருந்தது அவளுக்கு.

கரிச்சானும், காகமும். நாம் இருவரும் காக்கைக் குடும்பம் – நான் இதை முன்னமே உனக்குச் சொல்லியிருக்கேன்.

அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு குறுகுறுப்பான உணர்வு எழுந்தது, ஏதோ அவளுக்குள் விரிகிறது என்பதைப் போலிருந்தது. மேலும் அவளால் கேட்க முடிந்தது… கேட்க முடிந்தது..

“இது விசித்திரம்தான்,” என்றான் அவள் பக்கத்திலிருந்த கைல், அவன் குரல் மென்மையாக இருந்தது. “அதை உன்னால் கேட்க முடிந்ததா?”

ரூபி அவனைப் பார்க்கத் திரும்பினாள். “அது என்ன மாதிரி ஒலி?”

“இறகுகளின் படபடப்பைப் போலிருந்தது.”

ரூபி ஆமோதித்தாள். அவளும் அதைத்தான் கேட்டிருந்தாள். நகரத்தின் ஆரவாரம் சற்று அடங்கி அங்கே ஓர் அமைதி நிலவியபோது, ஒரு பெரிய பறவை தலைமேல் பறந்தால் நமக்குக் கேட்கிற வீசப்படுகிற சிறகுகளின் படபடப்பு.

ஒரு புறாவோ அல்லது கடல் நாரையோ. ஒரு காக்கை.

அல்லது ஒரு கரிச்சான்.

அவள் அந்தக் கருமிறகை எடுத்துக் கொண்டாள், கைலின் கையைப் பற்றினாள்.

“உன்னோட நண்பரைப் பத்தி என்ன செய்யணும்?”அவள் அவனைக் கதவை நோக்கி இழுத்தபோது அவன் கேட்டான்.

”அவர் ஏற்கனவே போயிட்டார்னு நினைக்கிறேன்.”

“ஆனால்—-”

 “ஷ்ஷ்ஷ்,”அவள் சொன்னாள். “நீ அதை மறுபடி கேட்டியா?”

கைல் ஆமென்று தலையாட்டினான், மேலே பார்த்தான், இந்த மருத்துவ மனையினுள் ஒரு பறவையை எதிர்பார்த்தவன் போல. ரூபியோ தன் மார்க்கூட்டுக்குள் மறுபடி அந்த எழுச்சியை உணர்ந்தாள், அவளுக்கு இப்போது அந்த ஒலி எங்கேயிருந்து வருகிறது என்று புரிந்திருந்தது.

“அவர் என்னிடம் சொன்ன அந்தக் கதைகளெல்லாம் உண்மைதான் என்று தோன்றுகிறது,” அவள் சொன்னாள்.

“நீ என்ன சொல்ல வர்ரே?”

அவன் கையை விட்டாள், அவளுடைய கையை அவனுடைய கையின் மடிப்புக்குள் நுழைத்துக் கொண்டாள்.

“நாம் போற போது சொல்றேன்,” என்றாள்.

“எங்கே போகப் போறோம்?”

அவள் சும்மாவென்று தோள் குலுக்கினாள், சிரித்தாள்.

“நாம் எங்கே போறோம்னு நமக்குத் தெரியறதோ, அங்கே,” என்றாள்.

***

இக்கதை  ஒரு சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

தொகுப்பின் தலைப்பு: த வெரி பெஸ்ட் ஆஃப் சார்ல்ஸ் டு லிண்ட்.

பிரசுரகர்: டாகியான். ஆண்டு: 2010.

மூலக்கதையின் தலைப்பு: ஓல்ட் மேன் க்ரோ.  (2006 இல் ட்ரிஸ்கெல் பிரசுரம் வெளியிட்ட ஒரு புத்தகத்திலிருந்து தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது.)

தமிழாக்கம்: மைத்ரேயன் / மார்ச் 2022

மூலக் கதாசிரியர் பற்றி அறிய: https://charlesdelint.com/   மற்றும் https://www.honestreaders.com/charles-de-lint-books-in-order/  பக்கங்கள் உதவும்.

அவருக்கான விக்கிபீடியா பக்கம் இது: https://en.wikipedia.org/wiki/Charles_de_Lint

 

Series Navigationவானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டதுஆடும் அழகே அழகு 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *