அழகியசிங்கர்
மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2022 16.04.2022 அன்று சிறப்பாக நடந்தது. ராணி சீதை ஹாஙூல் நடந்த இக் கூட்டத்திற்குப் பலர் வந்திருந்தனர்.
முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓவியர் ட்ராஸ்கி மருது இந்த ஆண்டு விருது பெற்றார்கள். வழக்கத்தை விடக் கூட்டம் சிறப்பாக இருந்தது.
கூட்டத்தில் சிறப்பாக உரை நிகழ்த்தியவர்கள் மாண்பமை நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன். காலங்களுக்கிடையில் மா.அரங்கநாதன் என்ற தலைப்பில் பழனி கிருஷ்ணசாமி (ப.சகதேவன்) பேசினார்.
நானும் மா அரங்கநாதனும் அடிக்கடி சந்திக்குமிடம் ரயில்வே ஸ்டேஷன். மின்சார வண்டியில் பார்த்துக்கொள்வோம். அவர் பூங்கா ரயில் நிலையத்தில் இறங்கி விடுவார். நான் பீச் வரை போவேன்.
அந்த அலுவலகப் போகும் நேரத்தில் அவரை அடிக்கடிப் பார்த்துப் பேசுவேன்.
மா அரங்கநாதன் படைப்புகள் என்ற 1021 பக்கங்கள் உள்ள புத்தகம். அதில் மா. அரங்கநாதன் எழுதிய எல்லா எழுத்துக்களும் அடங்கி இருக்கின்றன.
கட்டுரை, நாவல்கள், சிறுகதைகள் என்று பலவும் எழுதியிருக்கிறார் மா.அரங்கநாதன்.
அவருடைய மைலாப்பூர் கதையைப் படித்தேன். அது ஒரு வித்தியாசமான கதையாக எனக்குப் பட்டது.
மைலாப்பூர் என்ற இடத்தில் வந்து இறங்குகிறான் முத்துக் கருப்பன். தலைப்பில்தான் மைலாப்பூர் இருக்கிறதைத் தவிர அது எந்த இடம் என்று விவரிக்கவில்லை. மைலாப்பூரில் என்னன்ன இடங்கள் தட்டுப்படுமோ அவையெல்லாம் கதையில் விவரிக்கப் படுகின்றன.
கண்ணை விழிக்கையில் ஊரைக் காணவில்லை. தூரத்தில் கடல் சிறிதாகத் தெரிந்தது. அதைத் தவிர வேறு எல்லாமே வற்றியிருந்தது. அந்த இடம் எதுவென்று தெரிந்தது. ஆனால் அவன் மட்டுமே அங்கு நின்றிருந்தான் என்றுகதையை ஆரம்பிக்கிறார் முத்துக்கறுப்பன்.
இந்த கதையைப் படிக்கும்போது ஓர் அமானுஷ்ய கதையைப் படிப்பதுபோல் தோன்றுகிறது. இந்தத் தொகுதியிலியே இது வித்தியாசமான கதைதான்.
இக் கதையில் அசையாத ஒரு இடத்தைப் பற்றி விவரித்துக் கொண்டு போகிறார். அந்த இடத்தில் அவர் மாத்திரம் முதலில் இருக்கிறார்.
கதையின் ஒரு இடத்தில் இப்படி வர்ணிக்கிறார்.
சைக்கிள் வண்டிகள் ஏராளமாகக் கிடந்தன. தூசுப்படலம் , ஒரு சினிமா தியேட்டர் முகப்பில் பாட்டுப் பாடி கையை உயர்த்தி அசைவற்றிருக்கும் நடிகன் படம் பாதியாக நின்றது
இடத்தின் அசைவின்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூறுகிறார்.
மனிதர்களே இல்லாத வீடுகள் பார்க்கிறான். ஒரு வெற்றிலை பாக்குக் கடை திறந்தபடி இருந்தது. அதில் தொங்கிக் கொண்டிருந்த அழுகிய வாழைப்பழங்களைப் பிய்த்தெடுத்துச் சாப்பிட்டான். இந்த இடத்தில் ஒரு வரி வருகிறது. எந்த நினைவுமில்லாமல் செயல் நடந்து கொண்டிருக்கிறது என்று.
தரையில் கரப்பான் பூச்சி மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்தவுடன் ஏதோ நினைவில் அவன் காறியுமிழ்ந்தான்.
“ நாற்சந்தியோரமாக ஒருவளைப் பார்க்கிறாள். செருப்பு தைத்துக் கொண்டிருக்கிறாள். ஆடைகள் புதிது. இன்றுதான் கடையிலிருந்து எடுத்து வந்து போட்டிருக்கவேண்டும்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். செருப்பு தைப்பவள்
புதியதாக உடை உடுத்தியிருக்கிறாள். அவனைப் பார்த்து யாரு என்று கேட்கிறாள். அவன் நடுத்தெருவிற்குப் போக வேண்டுமென்கிறான்.
எல்லா இடமும் ஒன்றுதான் என்கிறாள். ஏன் செருப்புக் கடை இல்லையா? புதுசா செருப்பு வாங்கியிருக்கலாமே என்கிறான்.
அவள் சொல்கிறாள் இங்கே செருப்புக் கடை இல்லை துணிக்கடைதான் இருக்கிறது என்று. திறக்கலை. பூட்டியிருக்கு. உடைக்கணும் என்கிறாள்.
அவர்கள் இரண்டு பேர்களும் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது வினோதமாக இருக்கிறது.
அவள் பெயரை காயத்ரி என்று குறிப்பிடுகிறாள். அவன் முத்துக்கறுப்பன் என்று தெரியப்படுத்திக்கொள்கிறான்.
நான் தெரியாத்தனமா காப்பி குடிச்சேன் அதிலே ஒரு கரப்பான் பூச்சியிருந்தது.
இதைக் கேட்டவுடன் அவன் காறித்துப்பினான்.
சூரத்தில் பிளேக் நோய் பற்றி அறிந்து எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. பிளேக் நோய்யால் மனிதர்கள் இறந்திருப்பார்கள். ஆனால் கரப்பான் பூச்சிகள் மட்டும் பிளேக் இருந்தாலும் உயிரோடு இருந்திருக்கும்.
“ எல்லாக் கடைகளும் திறந்து இருக்கின்றன. வேண்டிய மட்டும் கடைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு போகலாம், ஆனால் விற்பனை செய்வதற்கு யாருமில்லை.
ரொட்டிக் கடை நாட்டில் எல்லாம் இருக்கு என்கிறாள் காயத்ரி.
இன்னொரு வாக்கியத்தைக் கதையில் கவனிக்க வேண்டும்.
காயத்ரி அவனை நிமிர்ந்து நோக்கினாள். முத்துக்கறுப்பன் என்று முழு உச்சரிப்போடு கூப்பிட்டாள். வானத்தைப் பார்த்துக் கொண்டாள்.
யாருக்காக முத்துக்கறுப்பன் என்று கேட்கிறாள். அவன் என் பிள்ளைகளுக்கு என்று சொல்ல வாயெடுத்து நிறுத்திக்கொண்டான்.
இங்கே ஏன் அவன் சொல்ல விருப்பமில்லை. தனக்குத் திருமணம் ஆகிவிட்டது, பிள்ளைகள் உள்ளனர் என்று.
“எங்கே படுத்துக்கறே?” என்று கேட்கிறான் அவன்.
“எங்கேயுந்தான்” என்கிறாள். “இப்போ இந்த பாங்க் உள்ளே – இடம் நல்லாவே இருக்கு”..என்கிறாள்.
முத்துக்கறுப்பன் அவளுடன் பேசும்போது, தவறுதலாக, ” நான் சமைப்பேன் காமாட்சி,” என்கிறான்.
அவள் திருத்துகிறாள். “நான் காமாட்சி அல்ல காயத்ரி ” என்று. இரண்டு பெயர் இருந்தா பெயர் அவசியம் என்கிறாள்.
அவள் ஒரு கடைக்குப் போய் முட்டை எடுத்துக்கொண்டு வருகிறாள். முத்துக்கறுப்பன், “நீ இதெல்லாம் சாப்பிட மாட்டேன்னு நினைச்சேன்” என்கிறான்.
அவன் , ” பஸ்ஸிலிருந்து வரும்போது 20ஆம் தேதி” என்கிறான். ஆனால் இப்போது அவர்கள் இருவருக்கும் தேதி தெரியவில்லை. அவர்கள் நடைபாதை பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
அவன் கையில் அகப்பட்டது ஒரு பழைய புத்தகம் – தேவாரம். அவன் அதைப் புரட்டும்போது வாய்விட்டுப் படிக்க வேண்டும் போலிருந்தது. அவளைக் கேட்டான்.
“உனக்குத் தமிழ் படிக்க வருமா?”
“எழுத்துக் கூட்டிப் படிப்பேன்” என்கிறாள்.
“வீட்டிலே என்ன பாஷையிலே பேச்சு”
“வீட்டிலே பேச்சே இல்லை – யாருடனும் – பாச்சாகிட்டேதான பேசுவேன்”.
“யாரு – உன் தாத்தாவா”
“பாச்சா என் பூனைக்குட்டி” என்கிறாள்.
“ஓ – என்கிட்டே பூனை இல்லே..நாய் வளர்த்தேன்” என்கிறார்.
இங்கே முத்துக்கறுப்பன் மூலம் இன்னொன்று குறிப்பிடுகிறார் மா.அரங்கநாதன்.
“நாய்தானே – அது அஞ்ஞானமான பிராணி – பூனை மாதிரியில்லே. “
“இந்த ஊருக்கு வந்தபிறகு என் பூனையும் போச்சு. என் புத்தகங்களும் போச்சு” என்கிறாள்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து போய்விடுவது நல்லது என்று நினைக்கிறார்கள்.
“ஆமாம் அதைத்தான் நானும் நினைச்சேன். நல்லது – கெட்டது – கலாச்சாரம் – பண்பாடு – ஆன்மிகம் எல்லாவற்றையும் பத்தி யோசிக்கத்தான் வேணூம்” என்கிறாள்.
இரண்டு பேருக்கும் ஒத்து வரலை. அவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் நடந்து சிறு பூச்சிகள் போல் மறைகின்றனர்
கடைசியில் முடிக்கும்போது எந்த சப்தமும் இல்லாது அந்த ஊர் மட்டும் நின்று நிலைக்கிறது என்று முடிக்கிறார்.
மா.அரங்கநாதனின் முக்கியமான கதை. மைலாப்பூர் என்ற பெயரை வைத்து அதை முழுவதும் விளக்காமல் ஒரு ஊரை கற்பனை பண்ணிக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கதையைப் பலமுறை படித்துப் பார்த்தால்தான் புரியும். எனக்கு இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன் தேவாரம் படிக்க வேண்டும் போல் தோன்றியது.
- தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி
- மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- நீ வருவாய் என…
- நான்காவது கவர்
- யாரோடு உறவு
- சிப்பியின் செய்தி
- தமிழர்களின் புத்தாண்டு எப்போது?
- திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.
- வாய்ச்சொல் வீரர்கள்
- சொல்லத்தோன்றும் சில
- வடகிழக்கு இந்திய பயணம் – 4
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்