வடகிழக்கு இந்திய பயணம் – 4

This entry is part 13 of 16 in the series 17 ஏப்ரல் 2022

 

 

சுப்ரபாரதிமணியன்

அத்யாயம் நான்கு

தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது  அது  கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு ஊரில் வீசப்பட்டதாயும் அதில் அவரின் உதடு இங்கு வந்து வீழ்ந்து இந்தக்கோயில் உருவாகியிருப்பதாயும் சொன்னார்.

 

 

இன்னொரு சாமியாரிடம் கேட்டபோது அவர் போதை போல் இருந்த கணத்தில் அது உதடல்ல, உதடல்ல.. உதடு போல் இருந்த இன்னொரு உறுப்பு யூகியுங்கள் என்றார்.

 நான் பதில் தெரியாத நான்காம் வகுப்பு மாணவனைப் போல் திருதிருவென் விழிக்க உதடு போல் இருக்கும் பெண்ணின் யோனி என்றார். 

கவுகாத்தியில் காமக்யா கோவில் பிரசித்தி பெற்றது. பல சுற்றாய் பாதைகளைக்கடந்து போனால் கொரானா தடுப்பூசி போட்டதற்கு அத்தாட்சி காட்டி கோயில் நிர்வாகத்திடம் அனுமதி சீட்டு பெற்றுதான் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் அந்த ஈஸ்வரனைச் சந்திக்கவிடாமல் செய்யும் சிரமங்கள் என்று குழுவில் இருந்த பல பெண்களின் கண்களில் கண்ணீர் சுரந்தது.  ஐந்து மணி நேர வரிசை அல்லது 500 ரூபாய் பணச்சீட்டுடன் 1 மணி நேர வரிசை என்று இரண்டு வகை இருந்தது.சுழன்று சுழன்று போய் பாதாளத்தில் நீர்க்கசிவில் இருந்த ஈஸ்வரனைச் சந்தித்து கண்கள் கசிந்தவர்கள் பலர்…இவ்வளவு கஷ்டப்படுத்துகிற கடவுளைப் பார்க்கணுமா  என்று  நான் லேசாகக் கிண்டல் அடித்ததில் பலர் கவுகாத்தியின் கொடும் வெயிலில் முகத்தைக் கருக்கிக் கொண்டவர்கள் போல்  முகத்தைக் காட்டினர்

காமாக்கியா கோவில் . இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.

காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் சிலை இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது, அதனால்தான் காமக்கியா தேவியும் இரத்தப்போக்கு தேவி என்று போற்றப்படுகிறார். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள் , குழந்தை பாக்கியம் கிடைக்கும் , நிண்ட நாள் வயதுக்கு வராதா பிள்ளைகள் பூபு அடைவாரகள்….[6]

இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது.

அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது.

அஸ்ஸாம்- கவுகாத்தி  வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில்

அஸ்ஸாம் பற்றி சில செய்திகள்.

தற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்தியப் பிரதேசங்கள் வந்தன.[1]

1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.

அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.

தனி நாடாக இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.[3]

பிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது.[4] அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது.                ( w p )

இது பழைய கதைதான்.பழைய சரித்திரம்தான்

இன்றைய சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை அங்கு பல முறை பயணம் செய்தவரும் கல்கத்தாவில் 25 ஆண்டுகள் வாழ்ந்தவருமான பத்திரிக்கையாளரின் வி பா கணேசன் அவர்களின் வார்த்தைகளில் அப்படியே கீழே தந்திருக்கிறேன்:

 

வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றின் 98 சதவீத எல்லைகள் சீனா, பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), பூட்டான் ஆகிய அண்டைநாடுகளைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலுமுள்ள நீர்மின் உற்பத்திக்கான திறன் 145 ஜிகாவாட்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 45% (57.6 ஜிகாவாட்ஸ்) வடகிழக்கில் உள்ளது. அதிலும் 46.9 ஜிகாவாட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் (காரணம், பிரம்மபுத்ரா). இருந்தபோதிலும் இயற்கை அழகும் வளமும் நிறைந்த இப்பகுதி இன்றளவும் இந்தியாவின் ‘சவலைப் பிள்ளை’யாகவே இருக்கிறது.

முதல் பர்மா போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 1826-ல் அசாம் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது. அப்போது அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகியவை நிர்வாகப் பிரிவுகளாக இருந்தன. மணிப்பூர், திரிபுரா மன்னராட்சியின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் ‘திறை’ செலுத்திவந்தன. இவற்றின் அரச வம்சத்தினரும் பழங்குடிப் பிரிவினரே. அசாமின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகம் இருந்தது.

எளிதில் அணுக முடியாத மலைப் பகுதிகளில் பழங்குடிகள் தங்கள் இனக்குழுத் தலைவர்களின் பாரம்பரிய முறையிலான நிர்வாகத்தின்கீழ் வாழ்ந்தனர். அசாம் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலை ஆங்கிலேயர் அறிமுகம் செய்தபோது, பழங்குடிகள் கூலி வேலைகளில் ஈடுபட மறுத்தனர். அவர்களுக்குப் பதிலாக, பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நலிவடைந்த மக்களையும் அன்றைய வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயத் தொழிலாளர்களையும் இப்பகுதியில் தொழிலாளர்களாக ஆங்கிலேயர் குடியேற்றினார்கள். மேலும் அன்றைய சூழலில் ‘அதிகம் படித்த’வர்களான வங்காளிகளை நிர்வாக ஊழியர்களாக நியமித்தனர்.

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1947 வரை (இந்து-முஸ்லிம்) வங்காளிகளின் குடியேற்றம் இப்பகுதியில், குறிப்பாக அசாம், திரிபுராவில், தொடர்ந்து நிகழ்ந்தன. கல்வி, மருத்துவம், அரசு நிர்வாகம், நீதித் துறை எனச் சமூகத்தின் முக்கியப் பொறுப்புகளை அவர்கள் வகித்தனர். மறுபுறம் கிறித்துவ பாதிரிமார்கள் எட்டாத மலைப் பகுதிகளுக்குச் சென்று பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர். இதனால் இதர இனத்தவரின் (குறிப்பாக அஹோம், வங்காளி) ஆதிக்கத்தை எதிர்க்கும் கருத்துகள் உருவாகத் தொடங்கின. இதற்கு உரமூட்டும் வகையில் முதல், இரண்டாம் உலகப் போர்களில் பாரம்பரியமாகவே சண்டைக் கலையில் தேர்ச்சி பெற்ற நாகா, மிசோ இனத்தவர் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் இணைந்தனர்.

இந்தியா விடுதலை பெறவிருந்த நேரத்தில் பழங்குடி இனத்தவர், குறிப்பாக நாகா, மிசோ இனத்தவர் தங்கள் தனித்தன்மை கருதி இந்தியாவுடன் இணைய மறுத்தனர். பொதுவாகவே மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள், இனவாரியாக, அதற்குள் அடங்கியிருந்த குழுவாரியாக, தங்களுக்குள் சண்டையிடுவதும், தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பதும் அடிமைப்படுத்துவதும் தொடர்கிறது. இதில் தனிநாடு கோரும் நாகா, மிசோ இனத்தவருக்குப் போட்டியாக, போடோ, குக்கி, சக்மா போன்ற இனங்களும் களத்தில் இறங்கின. மறுபுறம் மணிப்பூர், திரிபுரா அரச வம்சத்தினர் தங்கள் இனக்குழுக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்தியாவுடன் இணைந்துகொண்டனர்.

விடுதலைக்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய வடிவில் நீடித்ததைத் தொடர்ந்தே பல்வேறு கட்டங்களில் அசாம் பகுதியானது அசாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் என ஐந்து மாநிலங்களாயின. இவற்றோடு மணிப்பூர், திரிபுரா இணைந்து ஏழு சகோதரிகளாக இப்பகுதி உருமாறியது. பின்னர் 1980-களில் வடகிழக்கு வளர்ச்சிக்கான கவுன்சில் உருவானபோது சிக்கிம் மாநிலமும் (புவி அமைப்பில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்தபோதிலும்) நிர்வாக வசதிக்காகச் சேர்க்கப்பட்டு ‘அஷ்டலட்சுமி’யாக உருமாற்றம் பெற்றது.

இன்றுவரை இங்கு நீடிக்கும் இன மோதல்கள், அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதுபுதிதாக உருவாகும் ஒப்பந்தங்கள் இந்தியாவின் இதர பகுதிகளைச் செய்திகளாக மட்டுமே வந்தடைகின்றன. இன்றளவும் மத்திய அரசின் கையை எதிர்பார்க்கும் ‘சவலைப் பிள்ளை’களாக நீடிக்கும் இப்பகுதிக்கு இந்திய அரசு அளித்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டதன் விளைவாகவே, மக்களின் தேவைகள் நிறைவேறாத நிலையில், பயங்கரவாதக் குழுக்களின் களமாக, AFSPA என்ற கருப்புச் சட்டம் (விதிவிலக்காக திரிபுராவைத் தவிர) நடைமுறையில் உள்ள பகுதியாக நீடிக்கிறது என்கிறார் வீ பா கணேசன். அவர் விரிவாய் எப்போதாவது எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் ,.

Series Navigationசொல்லத்தோன்றும் சிலதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *