சந்திப்போமா…

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 13 in the series 24 ஏப்ரல் 2022

 

 

சிவகுமார்

 

இருபது வருடங்களுக்கு முன் ஜகனும் கருணாவும் தீர்மானமாக அந்த முடிவை எடுத்தார்கள். கருணாவுக்கு கடவுள் மேலும், கர்மாவிலும், வாழ்க்கை முழுவதும் முன்பே தீர்மானிக்கப் பட்டது என்பதிலும் நம்பிக்கையில்லை. வாழ்க்கையை ஒருவன் அந்த நிமிடம் எது சரி என்று படுகிறதோ, அதைச் செய்து தீர்மானிக்க வேண்டும் என்பது அவன் கருத்து. அதற்கு நேர் எதிர் கருத்து ஜகனுக்கு. தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுள் அருகிலிருந்து கவனித்துக் கொள்கிறார், முன்பே செய்த முன்வினைப் பயன்படி தன் வாழ்க்கை செல்வதாகவும் அதை மாற்றும் வல்லமை படைத்தவராகவும் கடவுளே இருக்கிறார் என்பதை நூறு சதவிகிதம் நம்பினான். இருவருக்கும் திருமணமாகவில்லை. இருபத்தி இரண்டு வயதில் கல்லூரிப் படிப்பை முடித்து கோவையில் முதல் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து பழக்கம். ஒன்றாக சாப்பிடுவார்கள், வேலைக்குப் போவார்கள், சினிமா, ஊர் சுற்றுவது என்று நல்ல நண்பர்கள். கோவிலுக்குப் போகும் போது மட்டும், கருணா வெளியே நின்று பிச்சைக் காரர்களுக்கு எதாவது வாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பான். அடிக்கடி இருவருக்கும் கடவுள், கர்மா என்று வாக்குவாதம் வந்துவிடும். மூன்று வருடங்களில் அந்த வாக்குவாதம் முற்றி, இருபத்தைந்தில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இருவரும் அடுத்த இருபது வருடங்களுக்கு சந்திக்காமல் இருந்து, நாற்பத்தி ஐந்தாவது வயதில், கோயமுத்தூரில் ஜூலை முதல் தேதி அன்று சந்திப்பது என்று, அன்று இருவரும் அவருடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்களா, இல்லையா என்று பார்க்கலாம் என்று சபதமிட்டு பிரிந்தார்கள், இறுதியாக ஒரு புகைப் படம் எடுத்துக் கொண்டு.  காலை முதல் இரவு வரை இருவரும் வழக்கமாக போகும் இடத்திற்கெல்லாம் வரிசையாக போனால் எதாவது ஒரு இடத்தில் இருவரும் சந்திக்கலாம் என்ற வாக்குறுதியுடன்.

 

நாளைக்கு கருணா காத்திருந்த அந்த ஜூலை ஒன்று.

 

இரவு மணி பத்து ஐம்பது. சேரன் எக்ஸ்பிரஸ் வட கோவையை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடத்தில் கோயமுத்தூர் ஜங்க்‌ஷன். இருபது வருடங்களுக்குப் பின் ஜகன் எப்படி இருப்பான் என்று கற்பனை செய்தான் கருணா. சரியாக செய்ய முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக வருவான், அவனையும் அவன் நேரம் தவறாமையையும் வைத்து நிச்சயம் சொல்லிவிடலாம்.

 

கோவை ஸ்டேஷனை முழுவது பார்க்கும் ஆவலில், டிரெய்னின் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டான். மஞ்சள் நிற சிமெண்ட் போர்டில் தமிழில் பெயர் எழுதி கீழே ஹிந்தியில் எழுதி தார் அடிக்கப்பட்டு இருந்தது மீண்டும். கேரளாவில் பருவ மழை துவங்கிவிட்டதன் அடையாளமாக லேசான சாரல் மழை. மேற்கு திசையிலிருந்து வந்த இதமான குளிர் காற்றை ஆசையாகத்தன் மேல் அடிக்கவிட்டான். இந்த காற்றை மறந்து எவ்வளவு நாட்களாச்சு. ஸ்டேஷனில் டிரெய்ன் நுழைந்ததும், போர்ட்டர்கள் வேகமாக ஓடி வந்தனர். நின்றவுடன் பக்கத்தில் இருந்த வயதான பெண்மணிக்கு அவருடைய பெட்டியை கீழே இறக்கிவைத்து உதவினான்.

 

கோயமுத்தூர் ரயில் நிலையம் மட்டும் மாறவே மாறத ஒன்றைப்போலிருந்தது. அந்த காலத்தில் வெஜிடேரியன் ரெஸ்டாரெண்டில் சாப்பாடு ருசியாக இருக்கும் என்ற நினைப்போடு எதாவது சாப்பிடலாம் என்று உள்ளே நுழைந்தான். அதே இடத்தில் இட்லியும் தோசையும் சாப்பிட்டுவிட்டு நேராக வேலைக்கு சென்றிருக்கிறான். இன்று அது முன்பு போல் ருசிக்கவில்லை. இரவு நேரமானதால் அதிகம் பேர் இல்லை. மேஜைகளும், நாற்காலிகளும் மிகவும் அழுக்காகியிருந்தன, எல்லாவற்றிக்கும் வயதான மாதிரி இருந்தது.

 

அதே பிளாட்பார்ம்கள், வெளியே போவதற்கு கீழே இறங்கும் படிகள், சுரங்கப் பாதை எல்லாம் அப்படியே பத்திரமாக இருந்தன. வேலை செய்த நாட்களில் வடக்கு பக்கமாக நடந்து நேராக தங்கயிருந்த வெரைடி ஹாலில் இருந்த மேன்ஷனுக்கு போவான். இப்போது தெற்குப் பக்கம் வந்து, ஆட்டோ பிடித்து ஏற்கனெவே ரிசர்வ் செய்து வைத்திருந்த ஹோட்டலுக்கு போனான். நாளை கெளரிசங்கருக்கு போய் சாப்பிட வேண்டும், உப்பிலிப் பாளைத்தில் இருக்கும் அந்த இடத்தில்தான் ஜகனும் அவனும் அடிக்கடி சாப்பிடுவார்கள்.

 

சாரல் நின்றிருந்தது.

 

ஹோட்டல் ரூம் நன்றாக இருந்தது. கோவை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். கண்ணாடியில் பார்த்தபோது மீசை நறைத்திருந்தது…கறுப்பாக்கலாமா அல்லது அப்படியே இருந்துவிடட்டுமா, ஒரு வேளை கறுப்பாக இருந்தால்தான் ஜகனுக்கு அடையாளம் தெரியுமோ…சிரித்துக் கொண்டான். ஜகனை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது.

 

உடை மாற்றிக் கொண்டு, பல் தேய்த்து பின் இரவு விளக்கை மட்டும் எறிய விட்டு கட்டிலில் ஒரு கால் மேல் ஒரு கால் போட்டுக் கொண்டு முதுகிற்கு தலையணை வைத்து உட்கார்ந்தான். தொலைக் காட்சியை போட்டு பின் அணைத்தான். பின்னிரவு வரும் காதல் குத்து பாடல்களில் நாட்டம் குறைந்திருந்தது.

 

எம்பீ3 யை ஆன் செய்தான், மனைவி பதிவு செய்திருந்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடல்..

 

“இளமையெல்லாம் வெறும் கனவு மயம், அதில் மறைந்தது சில காலம்…தெளிவுமறியாது, முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரியில் நிறுத்தினான். ஜகனும் தன்னைப்போலவே வந்திருப்பானோ, அப்படி வந்தால் எங்கயாவாது பக்கத்தில்தான் இருப்பான். அவனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப் படத்தைப் பார்த்தான். ஜகன் நெற்றில் விபுதியும், அதன் கீழ் குங்குமமும் இட்டுக் கொண்டிருந்தான். நட்பின் உரிமையோடு தோளில் கை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது  தனக்கு நிறைய முடி இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

 

தூக்கமும் யோசனையுமாக மாறி மாறி கருணாவைத் துரத்தின…

 

இருபத்தி ஏழாவது வயதில் திருமணமானவுடனேயே கருணாவின் வாழ்க்கை மாறியது. தங்கையின் கணவன் வியாபாரத்தில் தோல்வியடைந்து, அவர்களும் கருணாவிடம் தஞ்சமடைந்தனர். அப்பாவிற்கு இருதயத்தில் அடைப்புக்கள் அதிகரித்து அந்த நாளே பை பாஸ் செய்ய வேண்டியிருந்தது. தம்பி தனியார் பொறியியல் கல்லூரியில் சேர லட்சக்கணக்காக முன் பணத்தேவை. அம்மாவின் கவலை படிந்த முகம், புதிதாக திருமணமான மனைவியின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத முகம் என்று செய்வதறியாது தவித்த போது தளராமல் சமாளித்தான். அவனை அறியாமல் மனைவி பூஜை செய்யும் வேளைகளில் கடவுள் என்று ஒருவரிருந்தால் எனக்கு உதவி செய்வார் என்று எதிர்பார்த்து ஒவ்வொன்றிலும் வெற்றிகளை ஈட்டி சில வருடங்களில் நிமிர்ந்த போது, மனைவி கடவுளை நோக்கி நன்றி தெரிவித்தாள். குல தெய்வக் கோவிலுக்குப் போன பின் மகன் பிறந்தான். தனக்கு மேல் ஒருவர் இருப்பதை முழுவதும் நம்பலானான். தன்னுடைய மாற்றத்தை ஜகன் அறிந்தால் சந்தோஷ்ப் படுவானே என்று அவனை தேடினான், ஆனால் ஜகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் அவன் பிறந்த நாளான ஜூலை ஒன்றாம் தேதி நினைத்துக் கொள்வான், இப்படியே இருபது வருடங்கள் கடந்தன. நாளை அவனுக்கு கொடுப்பதற்காக அவன் எதிர்பாராத வகையில் வெள்ளியில் தங்க முலாம் போட்ட பிள்ளையார் பெட்டியில் இருக்கிறதா என்று பார்த்தான். பிள்ளையார் சிறு புன்னகை செய்த மாதிரி இருந்தது. நாளை முதலில் ஈச்சனாரி பிள்ளையார் கோவில் போக வேண்டும், ஜகன் அங்குதான் முதலில் வருவான், மகனுக்கு ப்ரணவ் என்ற பெயர் தெரிந்தால் சந்தோஷப்படுவான் என்று நினைத்துக் கொண்டே கண்ணை மூடினான்…தூக்கம் அவனை வென்றது.

 

எப்படி விடிந்ததென்றே தெரியவில்லை, மணி ஆறிருக்கும் என்று கடிகாரம் பார்த்தவன், ஏழு ஆகியிருந்ததைப் பார்த்தவுடன், அவசரமாக குளித்து, போற வழியிலேயே காப்பி குடித்துவிட்டு, பிரைவேட் டேக்ஸி டிரைவரிடம், “ஈச்சனாரி கோவிலுக்குப் போப்பா”, என்றபடி பிள்ளையாரைவிட ஜகனைப் பார்க்கப் போகும் ஆவலில் உற்சாகமானான். பிள்ளையாரைப் பார்த்துவிட்டு ஜகனோடு சேர்ந்து காலை உணவு சாப்பிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டான்.

 

பொள்ளாச்சி போகும் வழியில் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஈச்சனாரி கோவில். மழையின் ஈரத்தில் போகும் வழி பச்சையாக மாறி இருந்தது. கார் ஜன்னலைத் திறந்து தென் மேற்கு பருவக்காற்றை மீண்டும் ரசித்தான். எத்தனை வருடமானாலும் மாறாது இது.

 

கருணாவின் மனம் முழுவதையும் பழைய நினைவுகள் நிறைத்தது…

 

“கடவுள் இருப்பது உண்மைன்னா, அவர் ஏண்டா போன வாரம் நடந்த திருவனந்த புரம் ரயில் விபத்தை அவர் தடுக்கவில்லை? நூற்றி முப்பத்து மூன்று பேர் ஆற்றில் விழுந்து அப்படியே…அந்த சின்னக் குழந்தையை பார்த்தயா…அதோட பொம்மையை டீவியில் காண்பித்த போது உனக்கு கடவுளை இந்த கேள்வி கேட்கத் தோணவில்லை? இருந்தால்தானே கேட்க முடியும்!”

 

“அவரப்படாதடா கருணா…அந்த விபத்து அதில் போனவங்களோட கர்மம்…அவங்களோட விதி, அதை மாற்ற முடியாது. கடவுள் என்னடா பண்ணுவார்?”

 

“அப்ப அந்த காபூல்ல நடந்த விமானக் கடத்தல்…? அதுவும் இதே விதிதானா? விதியே திட்டமிட்டு கடத்தியதா?”

 

“எட்டு பேரைத் தவிர மத்தவங்க பிழைச்சாங்களா, இல்லையா?”

 

“அந்த எட்டு பேர் மட்டும் ஏண்டா சுடப் பட்டு சாகணும் ? அவங்க கடவுள் நம்பிக்கையில்லாதவங்களா?”

 

“எல்லாமே கர்மாதாண்டா…நீ இங்க நிற்கறதும், சாப்பிடறதும் எல்லாமே…”

 

“சரிதான் போடா…விட்டா இப்ப நான் தெரியாம கடிச்ச மிளகாயும் என்னுடைய கர்மா என்று சொல்லுவ…”, விழுந்து விழுந்து சிரித்த போது பொறையேறியது கருணாவிற்கு.

 

“சார்..கோவில் வந்து விட்டது.” என்று நனவுலகிற்கு இழுத்தான் டிரைவர்.

 

அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான் கருணா…அவன் மாற்றத்தை நினைத்து அவனுக்கே ஆச்சரியம். ஆனால் எந்த ஆச்சரியமும் இல்லாதவர் போல் பிள்ளையார் எப்போதும் போல் இருந்தார். அருகம் புல்லை இடுப்பில் கட்டி, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து, உடைந்த வலது தந்தத்துடன் இருந்தார். அருகில் குழக்கட்டை நைவேத்தியம் வைக்கப் பட்டிருந்தது. இவரைத்தான் நான் இருபது வருடங்களுக்கு முன் வெளியிலிருந்து பார்க்காமல் இருந்தேனா…மன்னித்துவிடு என்று நினைத்துக் கொண்டே ஜகன் வந்திருக்கிறானா என்று தேடினான்…ஒருவேளை அடையாளம் தெரியவில்லையோ..அவனைக் காணுமே, சரியான நேரத்திற்கு வந்துவிடுவானே…வலம் வந்து, பிறகு வலப்புறம் இருந்த மேடையில் உட்கார்ந்து கொண்டான்..ஜகன் கண்டிப்பா வருவான். ஒரு மணி நேரம் கடந்தும் ஜகன் வரவில்லை..ஒரு வேளை இன்று காலைதான் கோவை வந்திருக்கலாம். அப்படி இருந்தால், கெளரி சங்கரில் சிற்றுண்டி சாப்பிட வருவான். அங்கு போகலாம் என்று கிளம்பினான்.

 

இன்னும் கூட வெயில் உரைக்காமல் இதமாகத்தான் இருந்தது. பல நாட்கள் ஜகனும் கருணாவும் உணவருந்திய இடம் உப்பிலிப்பாளையம் கெளரிசங்கரில்தான். நிறைய சப்பிடுவான் கருணா. இட்லி, தோசை, இடியாப்பம், கடைசியில் எதாவது இனிப்பு என்று நன்றாக சாப்பிட்டுவிட்டுத்தான் வேலைக்குப் போவார்கள் இருவரும். இப்போது போகும் பாதை மாறியிருந்தது. பக்கத்தில் இருந்த சர்ச் அப்படியே இருந்தது. பழமுதிர் நிலையத்தில் சிலர் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தனர்.

 

காரை டிரைவர் பார்க் செய்தான். “நீங்க சாப்பிட்டு வாங்க சார்”, என்று அவன் வர மறுத்துவிட்டான்.

“கொஞ்ச நேரம் ஆகும், உனக்கு எதாவது வேலை இருந்தால் போய்விட்டு வா”, என்று சொல்லிவிட்டு, ஹோட்டலுக்குள் நுழைந்தான், கண்கள் ஜகனைத் தேடின, கண்டிப்பாக எங்கயாவது இருப்பான்..

 

“முதல்ல இட்லி கொண்டு வாப்பா”, ஆர்டர் செய்தபின் ஜில்லுன்று தண்ணீர் குடித்தான், சுவரில் மாட்டியிருந்த சிற்றுண்டி புகைப்படங்களைப் பார்த்தான்…நினைவுகள் மீண்டும் பின்னால் சென்றன…எதிரில் ஜகனுடன் உட்கார்ந்திருந்த போது பேசிய வார்த்தைகள் காதில் ஒலித்தன.

 

“வெளில எவ்வளவு பேர் பசியோடு பிச்சை எடுத்திட்டிருக்காங்க பாரு…, நீ என்னடான்னா கோவிலுக்குப் போய் பாலை எல்லாம் சாமி மேல கொட்டிட்டு வர…”

 

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? கடவுள் நம் எல்லாரையும் விட உயர்ந்தவர். அவருக்கு தினமும் உணவு கொடுக்கணும்…அவரை பாலால் அபிஷேகம் செய்தால் உலகத்துக்கே நல்லது”

 

“அப்ப ஏன் அவர் இத்தனை பேரை பிச்சைக் காரங்களா அலைய விடரார்…எல்லாரையும் நல்லா வச்சிருக்கலாமே”

 

“எத்தனை பேர் இப்ப நல்லா இருக்காங்க…எல்லாருமா பிச்சை எடுக்கிறாங்க?”

 

“நீ கொட்டற பால் அபிஷேகத்தை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தா அவங்களும், பாவம் பசியாறுவாங்களா, இல்லையா நீயே சொல்லு”

 

“இவங்களுக்கு கொடுக்க எத்தனையோ பேர் இருக்காங்க…கடவுளுக்கு கொடுக்க நான் முன் வரேன்னு வச்சுக்கோ, எனக்கு அதுதான் சந்தோஷமா இருக்கு, விட்டுடேன்…”. ஜகனைத் திருத்தவே முடியாது என்று கருணா நினைத்து சிரித்தான்.

 

“சார், இட்லி”, இட்லி மேஜைக்கு வந்தது.

 

இட்லி சாப்பிட்டு முடித்தான்…தோசையும் சாப்பிட்டாச்சு இன்னும் ஜகனைக் காணுமே…கருணாவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஒரு வேளை மறந்து விட்டானோ, இருபது வருடங்கள் என்பது சற்று நீளம்தான். இருந்தாலும் நம்பிக்கையை விடாமல்,  திரும்பிப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தான்.

 

பக்கத்திலிருந்த கோபுரத்தில் மணி பத்தரை என்று காட்டியது. காருக்கு காத்திருந்த போது ஒரு சிலரைப் பார்த்தால் ஜகன் மாதிரி இருந்தது. ஒரு பிச்சைக் காரன் கிட்டத்தட்ட நாற்பத்து ஐந்து வயதிருக்கும்…அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தான். ஒரு கிழவி, கருணாவையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவளுக்குத் தாகமோ என்று நினைத்து பழமுதிர் நிலையத்திலிருந்து ஜூஸ் வாங்கிக் கொடுத்தான்.

 

எங்கயாவது ஜகன் இருப்பானோ என்ற ஆவல், அவன் கூப்பிடுவது போல் இருந்தது ஆனால் இல்லை. கார் வந்துவிட்டது.

 

அடுத்தது பெரிய தெருவில் இருக்கும் புத்தகக் கடைக்கு போலாமென்று சொன்னான். ரேஸ் கோர்ஸ் ரோடில் சென்று கொண்டிருந்தது. டிரைவருக்கு பேசும் மூடு.

 

“புக்கெல்லாம் படிப்பீங்களா, சார்?”

 

“முன்பு நிறைய படிப்பேன், இப்ப அவ்வளவு இல்லை.”

 

“நான் நியூஸ் பேப்பர் தலைப்பு செய்தி மட்டும் படிப்பேன் சார், தீவிர வாதம் ரொம்ப ஜாஸ்தியாயிடிச்சு சார்…அவர்தான் நம்ம எல்லாரையும் பாத்துக்கணும் சார்…போன தடவை இங்க வெடிச்சப்ப நான் தப்பிப் பொழைச்சேன் சார்”, அப்பதான் கவனித்தான் அவன் காரில் ஒரு ஓரமா நாகூர் மசுதியின் படம் வச்சிருந்ததை. ஜகன் நீதான்டா சரி, கடவுள்தாண்டா காப்பாத்தரார்…இப்ப எனக்கு தெரியுது, ஆனா உன்னைக் காணோமே…சீக்கிரமே வாடா.

 

பெரிய தெரு புத்தகக் கடை வந்தது…மிகவும் பழைய கடை. அந்த காலத்தில் அடிக்கடி ஜகனுடன் வரும் இடம்.

 

உள்ளே நுழைந்தான் கருணா. கடை முதலாளி வயதானாலும், இன்னும் பத்திரமாக இருந்தார். சிறுவனாக இருந்த அவருடைய மகன், இப்ப இளைஞாக இருந்தான், அவந்தான் கடையை பார்த்துப் கொள்கிறான் போலிருகிறது.

 

முதலாளி குருவிற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது கருணாவை அடையாளம் தெரிந்து கொள்ள. தெரிந்தவுடன் முதலில் கேட்டார், “உங்க கூட வருவாரே நெற்றியில் எப்பவும் விபுதி வைச்சுகிட்டு, அவர் ஐஞ்சு வருடத்துக்கு முன் ஒரு தடவை வந்திருந்தார், இப்ப வரலயா?”

 

கருணாவிற்கு கண்கள் பிரகாசமாகியது…அவர் ஜகனைத்தான் சொல்லுகிறார்.

 

“அவரைத் தேடிப் பார்க்கத்தான் நான் வந்திருக்கேன்…இன்னிக்கு அவர் வரணும்…எப்ப வேணா வரலாம்”, என்று தங்கள் இருவது வருட திட்டததைச் சொன்னான் கருணா.

 

“வந்திருந்தாரு தம்பி…ஆனா ஐஞ்சு வருடதுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன்”, குருவின் கண்கள் சிந்தனையை வெளிப்படுத்தின. கருணாவிற்கு ஆவல் அதிகரித்தது.

 

“தம்பி, அவர் ஐஞ்சு வருடத்துக்கு முன் வந்தப்ப கொஞ்சம் வாடித்தான் இருந்தார். மனைவி கேன்சரில் இறந்துட்டாங்க என்று சொன்னார், அவர் கோயம்புத்தூரில்தான் கல்யாணம் செஞ்சுகிட்டாராம்.”

 

சட்டென்று கருணாவிற்க்கு முகம் வாடியது. பாவம் ஜகன் தன்னை கடவுள் பார்த்துப்பார் என்று நினைத்தானே, என்ன ஆச்சோ. திடிரென்று அவனுக்கு சோகமாக இருந்தது…குரு வேறு எதுவும் குறிப்பிடும்படி சொல்லவில்லை. அங்கிருந்தே ஒரு புத்தகத்தை வாங்கி குருவின் மகனுக்கு அளித்துவிட்டு, கருணா தன் போன் நம்பரையும், விலாசத்தையும் கொடுத்தான்.

 

“எவ்வளவு நாள் இருப்பீங்க தம்பி?”

 

“இன்னிக்கு இரவு நீலகிரியில் சென்னை திரும்பறேன்”, வாட்டமான முகத்தோடு கிளம்பினான். 

 

“டீ, காபி எதாவது சாப்பிடறிங்களா சார்…”, டிரைவருக்கு வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

 

“சரி…இந்த சந்தில் ஒரு காபி கடை இருந்தது, நேர போனா வரும்.”

 

காபி கடை வரவில்லை. அந்த இடமும் முழுவதும் மாறி இருந்தது. கருணாவும் ஜகனும் தங்யிருந்த மேன்ஷனும் இல்லை. மாற்றம் கருணாவுக்கு வருத்ததை அளித்தது. இனி எல்லாமே நினைவுகள் மட்டும்தானா..

 

வ.வு.சி பார்க்கிற்கு போய் அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்தின் அருகில் உட்கார்ந்தான். மணி மாலை நாலு. இன்னும் மருத மலை ஒன்றுதான் போக வேண்டும், ஜகன் நிச்சயம் வருவான். முகத்தில் குளிர்ந்த நீரினால் மீண்டும் மலரச் செய்தான். அருகில் இருந்த புதிய இடத்தில் காபி குடித்தான்.

 

 ஜகன் வாரம் தவறாமல் ஞாயிற்றுக் கிழமையன்று மாலை மருத மலைக்குப் போவான். கருணா கீழே காத்திருப்பான், ஜகன் முருகனைப் பார்த்துவிட்டு வரும்வரை. இன்றுதான் முதல் முறையாக மலைக்கு மேல் சென்று முருகனைப் பார்க்கப் போகிறான்.

 

“மருத மலை போகலாம்”…கார் வேகம் எடுத்தது….கருணாவின் நினைகள் பின்னோக்கி பயணித்தது.

 

“ஏண்டா, இங்கேயிருந்து மருத மலைக்குப் போனால்தான், உன் முருகன் உன்னைப் பார்த்துப்பாரா? இல்லாட்டி, கை விட்டுடுவாரா?”

“நான் அப்படியெல்லாம் நினைக்கலைடா…நான் பார்த்தாலும், பார்க்காட்டியும், என் விதிப்படிதான், நடக்கும்”, ஜகன்

“போன தடவை இதைவிட பெரிய வேலைக்கு முயற்சி பண்ணின, உன் முருகன் ஏன் உனக்கு அதை வாங்கித்தரல…நீ கோவிலுக்குப் போனது போதலையா அவருக்கு?”

“அது என் கர்மாடா…முன் வினைப் பயன்.”

“அப்ப ஏண்டா கோவிலுக்குப் போற…எல்லம் கர்மான்னு வீட்டில இருக்க வேண்டியதுதானே?”

“நான் என்ன சொன்னாலும் நீ ஒத்துக்கப் போறதில்ல…எத்தனை முறை இதையே பேசப் போறோம்…, சில சமயம் அலுத்துப் போச்சுடா.. உனக்குத் தோணியதை நீ செய்…வேணும்னா ஒண்ணு செய்யலாம், கொஞ்ச வருடம் கழித்து பார்க்கலாம், நம்முடைய சிந்தனையில் எதாவது மாற்றம் தெரியதான்னு…”

“நிஜமாவா சொல்லற…?”

“இன்னிலேர்ந்து சரியா இருபது வருடங்கள்…நீ கண்டிப்பா மறிடுவ…பார்க்கலாமா?”

 

இப்படி ஆரம்பித்த பேச்சு, நிஜமாகவே அவர்கள் இருவரும் பிரிவதில் முடிந்தது…

 

அதிகம் மாற்றங்கள் இல்லாமல் இருந்த பாதையில் அடுத்த நாற்பது நிமிடத்தில் மருத மலை. மேலே நிமிர்ந்து பார்த்தான், உயர்ந்த மலை…நான் எப்போதும் இதே இடத்தில்தான் இருக்கிறேன், நீதான் மாற்றங்களோடு இன்று இங்கு வந்திருக்கிறாய் என்பது போல இருந்தது. மினி பஸ்ஸில் வளைவு பாதையில் மலை மீது ஏறி முருகன் கோவில் அடிவாரத்தை வந்தடைந்தான். புதிய கோபுரம் கம்பீரமாக இருந்தது, அழகான முருகன், அருமையான காற்று, சற்று உள்ளடங்கி பாம்பாட்டிச் சித்தர் குகை எல்லாவற்றிலும் ஜகனை நினைத்துக் கொண்டே வேண்டுமென்றே மெதுவாக நடந்தான்…ஒருவேளை ஜகன் இருந்தால் பார்க்க வேண்டுமே.

 

மாலை மயங்கியது. ஞாயிறு மறைந்தது. ஜகன் வரவில்லை. ஒவ்வொரு கார், மினி பஸ், ஆட்டோ என்று பார்த்து ஏமாந்தான் கருணா.

 

இனி ஜகனை பார்க்கப் போவது மிகவும் கடினம், எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானதில், மனது கனத்தது.

 

அமைதியாக கீழே இறங்கி, காரில் அமர்ந்தான்.

 

“ஆர் எஸ் புரத்தில் சாப்பிட்டுவிட்டு, நேரா ஸ்டேஷன் போலாம், நீலகிரி எக்ஸ்பிரஸை பிடிக்கணும்”, டிரைவரும் கருணாவின் மன நிலையை புரிந்து கொண்ட மாதிரி, அமைதியாக காரை ஓட்டினான். பென் டிரைவில், “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…” பரத்வாஜ் பாடிக்கொண்டிருந்தார்.

 

டின்னர் சாப்பிட்டுவிட்டு, காரில் ஏறும் போது நல்ல மழை. கோவை ஸ்டேஷனை வந்தடைந்தான்.

 

டிரைவரை அனுப்பிவிட்டு, பிளாட்பார்ம் 2க்கு வந்து, ஏஸி பெட்டியை கண்டுபிடித்து உட்கார்ந்தான். டிரெய்ன் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கின்றன…இனிமேல் நிச்சயம் ஜகனைப் பார்க்கப் போறதில்லை. கருணாவிற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்கள் சற்று கலங்கின. ஏன் இப்படி அவனுடன் வாதம் செய்தோம், இருபது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கலாம் என்று நல்ல நட்பை அறியாமல் நழவுவிட்டுட்டு இப்ப தேடறேனே…ஏன் இப்படி, இதுவும் கர்மாவோ…ஆனந்தவிகடனில் மனம் லயிக்காமல், கண்ணை ஒரே பக்கத்தில் வைத்திருந்தான்.

 

“சார்”, என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் கருணா… பதினெட்டு வயதுள்ள ஒருவன்…சிறிய வயது ஜகன் போலவே இருந்தான்.

 

“ஜகன்…”, ஆச்சரியம் முகத்தில் வெளிப்பட்டது.

 

“ஆமாம் சார், நான் உங்க நண்பர் ஜகனின் பையன் சுந்தர். இன்னிக்கு நீங்க இங்க வருவீங்க என்று உங்களிடம் தரச் சொல்லி இந்த கடிதத்தைத் தந்தார். பெரிய தெரு புத்தக் கடைக்காரர்தான் நீங்க இங்க இருப்பீங்கன்னு சொல்லி இங்க அனுப்பினார்…”, கடிதத்தை நீட்டினான் சுந்தர்.

 

“ஜகனுக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கிறான் இப்ப…ஏன் வரவில்லை?”

 

“சார். இப்ப அவரால் வர முடியவில்லை. நான் மத்தியானம் வந்தேன். உங்களைக் கண்டு பிடிக்க நேரமாயிடுச்சு. மற்றவை இந்த கடிதத்தில் படிச்சுக்குங்க…டிரெய்ன் கிளம்பப் போகிறது, நான் இறங்கிக்கறேன்..”, அவசரமாக இறங்கிக் கொண்டதும், கார்ட் விசிலடிதார், பச்சைக் கொடியுடன், சப்தமில்லாமல் கிளம்பியது நீலகிரி எக்ஸ்பிரஸ்.

 

கையில் கடிதத்துடன் ஒரு சில வினாடிகள் சிலை போல நின்ற கருணா, கடிதத்தைப் பிரித்தான்…ஜகன் எழுத்தைப் பார்த்ததும் கண்ணீர் பெருகியது.

 

“அன்புள்ள கருணா,

என்னை எதிர்பார்த்து ஏமாந்திருப்பாய். முதலில் அதற்காக என்னை மன்னித்துவிடு.

 

என்ன என்னவோ நடந்து விட்டதடா, நாம் பிரிந்த பிறகு. கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், என் மீது நான் நம்பிக்கை வைக்காததால், அப்பாவின் வியாபாரத்தை முன்னின்று நடத்தாமல், சுற்றத்தாரிடம் விட்டு என் குடும்பமே ஏமாந்து போனது. இருபத்தியெட்டு வயதில் திருமணம் செய்து கொண்டேன். சுந்தர் என்ற மகன் பிறந்ததும் மனைவிக்கு கான்சர் வந்தது, கடவுள் பார்த்துப்பார் என்று, அவளுக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்காமல் அவள் இறந்துபோனாள். நான் அவளை சென்னைக்கு அழைத்து சென்று வைத்தியம் செய்திருந்தால் பிழைத்திருப்பாளோ என்னவோ.

 

பிறகு, மும்பைக்கு சென்று ஒரு பைனாஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என் முதலாளி, பணம் போட்டவர்களை ஏமாற்றுகிறார் என்றும் தெரிந்தும், கடவுள் மீது பாரத்தைப் போட்டு அங்கயே இருந்தேன், அவர் அவருடைய லாபத்தில் ஒரு பங்கை கோவில் உண்டியலில் தவறாமல் போட்டதால். சில வருடங்களில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த கம்பெனி மூடப்பட்டது. முதலாளி ஓடிவிட்டார். நான் பயந்து தலைமறவாகி, பின் சரணடைந்தேன். சில வருடங்கள் சிறைக்குச் சென்றேன். மகன் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தான் நான் திரும்பும் வரை. கடவுள் என்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபம் எனக்கு அவர் மீது இருந்த நம்பிக்கையை அழித்தது.

 

சிறையிருக்கும் போது நீ சொன்னதுதான் சரியென்று புரிந்து கொண்டேன்.  கோவிலுக்குப் போவதை நிறுத்தினேன். சிறையிலிருந்து திரும்பியதும் அந்த அனாதை இல்லத்தில் அக்கெளண்ட்ஸ் வேலையில் சேர்ந்து பிறகு மற்ற நிர்வாகத்தையும் கற்று இங்கு வளரும் குழந்தைகளுக்காக சேவை செய்ய ஆரம்பித்தேன். இங்கேயே மகனையும் வளர்த்தேன். இப்போது நான் கோவிலுக்குப் போவதில்லை, கடவுள் என்று ஒருவர் இருக்கலாம், ஆனால் என் வாழ்க்கை என் கையில்தான் என்று தெரிந்து கொண்டேன்.  இப்போது கடவுள் மீது கோபம் இல்லை. ஆனால் உன்னைச் சந்தித்து அதைச் சொல்லும் மன தைரியம் இன்னும் இல்லை.

 

எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது,  மீண்டும் உன்னை எப்போதாவது சந்திப்பேன் என்று,

 

உன்,

ஜகன்” 

 

இப்போது இருக்கும் அனாதை இல்லத்தின் விலாசம் தந்திருந்தான், அவனுடைய புகைப்படத்துடன். அதிகம் மாறாமல் அதே சிரிப்புடன் இருந்தான், ஆனால் நெற்றியில் விபூதியில்லை.

 

நீலகிரி எக்ஸ்பிரஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமெடுத்தது, சென்னையை நோக்கி. தெளிவான வானத்தில் நட்சத்திரங்கள் ஒரிளிர்ந்தன.

 

சென்னை திரும்பியவுடன் கருணா, ஜகனுக்காக வாங்கிய பிள்ளையாரை அவன் விலாசத்திற்கு அனுப்பினான், சிறிய கடிதத்துடன்..”இந்தப் பிள்ளையார் நீ இழந்த கடவுள் நம்பிக்கையை உனக்கு மீண்டும் அளிக்கமட்டுமில்லை, என்னுடைய மாற்றத்தை உனக்கு தெரிவிக்கவும் கூட…அடுத்த ஜூலை உன்னை மும்பையில் சந்திப்பேன்.”

 

 

-சுபம்

Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் :5,6யார் சரி?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *