தக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]

This entry is part 3 of 8 in the series 8 மே 2022

             

                              பாச்சுடர் வளவ. துரையன்           

 

                   நாம ராசியை உதிர்த்து உரோணிதன்

                  சோம ராசிஅள கமம் சுலாவியே.                         501

 

[நாமம்=பெயர்; உரோகிணி=ஒரு நட்சத்திரம்; சோமராசி=சந்திரனுக்கு உவப்பானவன்; அளகம்=தலைமுடி]

 

பன்னிரண்டு பெயர்களை உடைய ராசிகளை உதிர்த்து உரோகிணி என்னும் சந்திரனுக்கு விருப்பமான நட்சத்திரத்தின் கூந்தலைப் பிடித்துக் கலைத்தனர் சில பூதர்கள்.

                    

 

                   சேய மாதிரத் தேவர் தேவிமார்

                  மாய மேகலா பாரம் வாரியே.                          502

 

[சேய=தொலைவில் உள்ள; மாதிரம்=திசை; மாய=கெட; மேகலாபாரம்=மேகலாபரணம்]

 

வெகு தொலைவில் உள்ள திசைகளின் காவலர்களின் தேவியர் இடையில் அணிந்துள்ள மேகலாபரணத்தின் இரத்தின மாலைகளை அறுத்தெறிந்தனர்.

                   

              

                   மையலால் மிகும் தக்கன் மக்களாம்

                  தையலாரையும் தாலி வரியே.                         503

 

[மையல்=மயக்கம்; தையலார்=பெண்கள்]

 

மயக்கம் அதிகமாகக் கொண்ட தக்கனின் பெண்களுடைய கணவர்களைக் கொன்று அவர்களின் தாலிகளை நீங்கச் செய்தனர்

                  

                   என்ன மாமி என்று யாகபன்னியைக்

                   கன்ன பூரமும் கதும் அள்ளியே.                     504

 

[பன்னி=பத்தினி; கன்ன பூரம்=காதில் அணியும் ஓர் அணிகலன்; அள்ளல்=அறுத்தல்]

 

உமைக்குச் சரியாத மரியாதை தராத காரணத்தால் யாகம் செய்யும் தக்கனின் பத்தினியை என்ன மாமி  எனக் கேலியாகப் பேசி அவர் காதில் அணியும் அணிகலனை அறுத்தனர்.

                              

 

                  பாபதண்டிதன் பசுவைவிட்டு அதன்

                  யூபதண்டு கொண்டுஓட எற்றியே.                       505

 

[தண்டி=தண்டுபவன்; யூபதண்டு=வேள்வித்தம்பம்; எற்றி=அடித்து]

 

பாவத்தைத் தேடிக் கொள்பவனான தக்கன், கொண்டு வந்து கட்டியிருந்த வேள்விப் பசுவை அவிழ்த்து விட்டு அதை ஓடவிட்டு அதைக் கட்டியிருந்த வேள்வித்தம்பத்தைக் கொண்டே அதை அடித்தனர்.

                 

                  விவித முத்தழல்மீது வெய்யநெய்

                  அவிதவிர்த்து நீர்பெய்து அவித்துமே.          506

 

[விவிதம்=வேறு வகைகளான; முத்தழல்= ஆகவனியம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் மூன்று வகைகள்; அவி=வேள்வித்தீயில் இடப்படுவது]

 

மூன்று வகைகளான வேள்வித் தீயின் மீது மேலும் எரிவதற்கு நெய் பெய்வதை விடுத்துத் தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர்.

                  பொய்ப் பருந்து காலொடு பறந்துபோய்

                  மெய்ப் பருந்துடன் விண்ணில் ஆடவே.                 507

 

[பொய்ப்பருந்து=பருந்து உருவில் அமைக்கப்பட்ட யாகசாலை; காலொடு=பந்தல் கால்களுடன்]

 

பொய்யான பருந்து உருவத்தில் அமைக்கப்பட்ட யாகசாலை  நிறுவப்பட்ட பந்தல் கால்களோடு வானில் பறந்தது. அங்கு பறந்து கொண்டிருந்த உண்மையான பருந்துகளுடன் சேர்ந்து பறந்தது.

                    

                  எடும்அடா நமக்கென்று சென்றுபுக்கு

                  அடும்அடா எல்லாம் அற அருந்தியே.                 508

 

[அடா=சமைக்காத; அடும்=சமைத்துள்ள; மடா=உணவு சமைக்கும் பாத்திரம்; அற=அடியோடு]

 

பாத்திரங்களில் நிறைய சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவு நமக்காக  இல்லையென்றாலும் அவற்றை மிச்சம் வைக்காமல் உண்ணுங்கள் என்று கூறி அங்கிருந்த உணவை எல்லாம் பூதர்கள் எடுத்து உண்டனர்.

                   

                  புக்க பதவேதாள யூதமே

                  தக்கன் யாகம் இப்படி சமைக்கவே.                    509

 

[புக்க=புகுந்த பூதம்; யூதம்=படைக் கூட்டம்]

 

தக்கனின் யாக சாலையில் புகுந்த வேதாளப் படைக்கூட்டங்கள் யாகசாலையை இவ்வாறு அழித்தனர்.

                      

      

                  மாலைநாக மார்பர் மேகமாகி நின்று இடிப்பவான்

                  மேலைநாகம் கீழைநாகர் போல் மயங்கி வீழவே.         510

 

[மேலைநாகர்=வானுலகத் தேவர்; கீழை=கீழ் உலகம்]

 

பாம்புகளை மாலையாக அணிந்த பூதப்படைகள் மேகமானது இடி முழங்குவதைப் போல வெற்றி முழக்கம் செய்தனர். அதைக் கேட்ட தேவர்கள் இடியோசை கேட்ட நாகம் போல மயங்கி விழுந்தனர்.

                 

விழுந்த நாரணாதிகட்கு மீளவாழும் நாள்கொடுத்து                 

எழுந்துபோர் தொடங்குக என்றுகுன்ற வில்லிஎவவே.      511

 

[விழுந்த=இறந்த; குன்றவில்லி=மேருமைலயை வில்லாகப் பிடித்த சிவபெருமான்]

 

பூதப்படைகளால் இறந்த திருமால் முதலான தேவர்களுக்கும் மீள வாழ்நாள் அளித்து மீண்டும் போர் தொடங்குக என வீரபத்திரர் ஆணையிட்டார்.

                          

                        சிரமும் சிரமும் செறிந்தன

                        சரமும் சரமும் சரமும் தறிப்பவே.                 512

 

இருபக்கப் படைகளும் போர் தொடங்கின. தலைகளோடு தலைகளும் மோதி முட்டின. அம்புகளோடு அம்புகளும் மோதி முரிந்தன.

                       

                        கனமும் கனமும் கனைத்தன

                        சினமும் சினமும் சிறக்கவே.                      513

 

[கனம்=மேகம்]

 

தேவர்கள் மேகமாக மாறவும் பூதப்படைகளும் மேகங்களாக மாறிப் போரிட்டன. இருபக்கங்களிலும் படைகள் கோபம் மிகக்கொண்டு போரிட்டன.

                                                 

                        கடையும் கடையும் கலித்தன

                        தொடையும் தொடையும் துரப்பவே.                514

 

[கடை=அம்பின் கூர்முனை; தொடை=வில்; துரப்ப=தொடுத்துவிட]

 

இருபடை வீர்ர்களும் அவரவர் வில்லில் பூட்டிய நாணில் கோர்த்துச் செலுத்திய அம்புகள் ஒன்றோடொன்று மோதின.

                         

                        தாரும் தாரும் தழைத்தன

                        தேரும் தேரும் தினைப்பவே.                     515

 

[தார்=காலாட்படை; தழைத்தல்=பெருகுதல்; தினைத்தல்=நெருங்குதல்]

 

காலாட்படைகளும் காலாட்படைகளும் மோதிக்கொண்டன. தேரோடு தேர் மோதின.

                          

                        தோலும் தோலும் துவைத்தன

                        கோலும் கோலும் குளிப்பவே.                    516

 

[தோல்=கேடயம்; துவைத்தல்=அடிபடுதல்; கோல்=அம்பு; குளித்தல்=தைத்தல்]

 

கேடயங்களோடு கேடயங்கள் மோதி எதிர்த்தன. அம்புகளோடு அம்புகள் மோதித் தைத்தன.

                         

                       

                        தோளும் தோளும் தொடங்கின

                        தாளும் தாளும் தரிப்பவே.                         517

 

[தாள்=கால்; தரிப்ப=இருக்க]

 

அவர்களின் கால்கள் மட்டும் நிலைத்தில் தரித்திருக்க தோள்களோடு தோள்கள் மோதின.

                         

                        கிரியும் கிரியும் கிடைத்தன

                        கரியும் கரியும் கடுப்பவே.                       518

 

[கிரி=மலை; கரி=யானை; கடுப்ப=போல]

 

ஒவ்வொருவரும் தம் கைக்குக்கிடைத்த மலைகளை எடுத்து எறிய அவை மோதி விழுந்தது. யானைகள் ஒன்றோடு ஒன்று முட்டி விழுந்ததைப் போல இருந்தது.

                           

                        தலையும் தலையும் தகர்த்தன

                        சிலையும் சிலையும் சிலைப்பவே.               519

 

[தகர்த்தல்=அழித்தல்; சிலை=மலை; சிலப்ப=முழங்க]

 

தலையோடு தலை மோதி உடைந்தன. அது மலையோடு மலையோடு மலை மோதிப் பேரொலி எழுப்புவதைப் போல இருந்தது.

                                           

                  குடையும் குடையும் கொழித்தன

                  படையும் படையும் பகைப்பவே.                        520

 

[குடைஎன்பது குடைகொண்ட படைத்தலைவரைக் குறித்தது. கொழித்தல்=ஆரவாரித்தல்]

 

இருபக்கப் படைகளும் பகை உணர்வுடன் போரிட்டபோது குடைநிழலில் ஊர்ந்து வந்த சேனைத்தலைவர் ஆரவாரம் செய்தனர்

                    

                   மடிந்தன குவலய வலயமே

                  இடிந்தன குலகிரி எவையுமே.                          521

 

[குவலயம்=பூமி; வலயம்=வட்டம்; குலகிரி=இனமலைகள்]

 

இவ்வாறு நிகழ்ந்த பெரும்போரில் மலைகள் எல்லாம் உடைந்து பொடியாகின. பூமிப் பரப்பே அழிந்தது போலாயிற்று.

             

            அற்றன எழிலியொடு அசனியே

            வற்றின ஏழுபெரு வாரியே.                               522

 

[எழிலி=மேகம்; அசனி=இடி; வாரி=கடல்\

 

மேகங்கள் இல்லாததால் இடி இல்லை. ஏனெனில் ஏழு பெருங்கடல்களும் வற்றிப் போயின. ஏழு கடல்கள்: பால், தயிர்,தேன், உப்பு, கருப்பஞ்சாறு, மற்றும் நன்னீர்க்கடல்கள்.

                                      

                  உதிர்வன எழிலியும் உடுவுமே

                  அதிர்வன புடவிகள் அடையவே.                     523.

 

[எழிலி=மேகம்; உடு=நட்சத்திரம்; புடவி=பூமி]

 

வானில் இருந்து உதிர்வன மேகங்களும் நட்சத்திரங்களுமே. மழைநீர் அன்று. அதிர்வன பூமண்டலங்களே. செடி கொடிகள் அல்ல.

                         

                   

                         நெரிந்தன மாசுண நெற்றியே

                        இரிந்தன மாசுணம் எவையுமே.                  524  

 

[மாசு=தூசு; உண=படிய; நெற்றி=ஆகாயம்; மாசுணம்=பாம்பு]

 

மலைகளெல்லாம் உடைபட்டு பூமியில் விழ, அதனால் எழுந்த தூசுகள், வானமுகட்டை மறைக்கப் பாதாள உலகத்தில் இருந்த பாம்புகள் அஞ்சின.

                         

                         அழுந்தின குலகிரி அடையவே

                        விழுந்தன திசைபல மிதியிலே.                  525

 

[குலகிரி=இனமலைகள்; கயிலை, இமயம், விந்தியம், மந்தரம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம்]

 

பூதப்படைகள் காலில் மிதிபட்டு இனமலைகள் எட்டும் பூமிக்குள் புதைந்தன. திசைகளைக் கூட அப்பூதப்பேய்களின் உடல்கள் மறைத்தன.

                         

                       

 

                        

                                         

                         சிதைவது சூழ்வரு திகிரியே

                        புதைவது சிலைகொல் பொருப்புமே.              526  

 

[சிதைவது=உருக்குலைவது; சூழ்வரு=சுற்றியிருக்கும்; சிலை=வானவில்; பொருப்பு=மலை]

 

உடைந்து உருக்குலைது போனது உலகைச் சுற்றியிருக்கும் சக்கரவாள மலையே. மண்ணில் புதையுண்டு போனது வானவில்லும் அதைத்தாங்கும் மலையே.

                    

                   பறிந்தன அடவிகள் பலவுமே

                  மறிந்தன பலகுல மலையுமே.                           527

 

[பறிதல்=பிடுங்கி எறிதல்; அடவி=காடு; மறிதல்=அழிதல்]

 

காடுகள்  எல்லாம் பிடுங்கி எறியப்பட்டன. மலைகள் பலவும் பெயர்ந்து விழுந்தன.

                                       

                  பெருத்தன அமரர் பிணங்களே

                  பருத்தன பூத பசாசமே.                                528

 

[பருத்தல்=பெரிதாதல்; பசாசம்=பேய்]

 

போரில் இறந்த அமரர் எண்ணிக்கை பெரிதானது. அப்பிணங்களை உண்ட பேய்கள் உடல்கள் பெருத்தன

                    

                  அயின்றன எருவையோடு அலகையே

                  பயின்றன பிணமலை பலவுமே.                        529  

 

[அயின்றல்=உண்ணல்; எருவை=கழுகு; அலகை=பேய்; பயின்ற=மிகுந்த]

 

போரில் மலைபோல் பிணங்கள் குவிந்தன. அவற்றைக் கழுகுகளும் பேய்களும் தின்று தீர்த்தன.

                                    

                  முழங்கின முகிலென முரசமே

                  தழங்கின எதிர்எதிர் சங்கமே.                            530

 

[முகில்=இடி; தழங்கின=ஒலித்தன]

 

வெற்றிகளைக் கொண்டாடும் முரசுகள் இடிபோல முழங்கின. போரின்போது சங்குகள் இருபடைகளிலிருந்தும் முழங்கின.

 

Series Navigationவடகிழக்கு இந்திய பயணம்  8பயணம் – 1,2
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *