பயணம் – 1,2

This entry is part 4 of 8 in the series 8 மே 2022

 

ஜனநேசன்

 

            “சீனாக்காரப் பாட்டி உங்களுக்கு ஒரு தபால்!” என்று தபால்காரப் பெண் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் போனாள்.  அன்று சனிக்கிழமை மகன் ஜெயக்கொடி வீட்டில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவன், அம்மா ஓடிப்போய் தபால் வாங்கி ஆர்வமாய் பிரித்து வாசிப்பதைக் கவனித்தான்.  கண்ணீல் நீர்வழிய அம்மா வாசித்தாள்.  விரைந்து எழுந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தான்.  எழுத்துக்கள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களாக இருந்தன. வார்த்தைகள் புரியவில்லை.  அம்மாவின் பெயர் மட்டும் புரிந்தது.  அனுப்பியவர் ‘லிங்டாங், ஷில்லாங் மேகாலயா’ என்றிருந்தது. அம்மாவின் பூர்வீக ஊரிலிருந்து வந்தது மட்டும் புரிந்தது.  அம்மாவைப் பார்த்தான்.  வைரஸ் காய்ச்சலில் உடல் தளர்ந்திருந்து நடுங்கிய அம்மாவை உட்காரச் செய்தான்.

            “என்ன அம்மா தபால் விவரம். ஏன் அழுகிறாய்”.  “எங்க அம்மா மரிச்சுப் போச்சு, 10 நாள் ஆச்சாம்.  எண்பது வயதில நோயில செத்தது.  உடனே அன்றைக்கே அடக்கம் பண்ணிட்டாங்களாம்.  அம்மா கொடுக்க விரும்பிய சீரை வந்து வாங்கிட்டு போ.  நாங்களும் உன்னைப் பார்த்து 35 வருஷம் ஆச்சு என்று எங்க தம்பி, உங்க மாமன் கடிதம் எழுதியிருக்கு” என்று அம்மா திக்கி தடுமாறி சொன்னது.

            ஜெயக்கொடி மனதில் குதூகலக் கொடி பறந்தது.  ‘அம்மா மூலம் சொத்து வருகிறது.  தங்கச்சிக்கு கிடைக்காம நாம சுருட்டியிற வேண்டியது தான்’ என்று திட்டம் மின்னல் வெட்டியது.

            அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு விம்மினான்.  இமைகளை மூடித்திறந்து உதறினான் கண்ணீர் ஒரு சொட்டு கூட உதிரவில்லை.  முகத்தை அஷ்ட கோணலாக பாவித்து சோகத்தை வெளிப்படுத்த முயன்றான்.  மனைவி மல்லிகாவுக்கு கண்ணீர் பொங்கியது.  மாமியாரைக் கட்டிப் பிடித்து அழுதாள்.  மாமியார் ஏதோ புரியாத மொழியில் புலம்பினாள்.  தகவல் தெரிந்து தங்கை ரோஜாவும் வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

            அடுத்தது என்ன என்று மகனின் மனசு சொடுக்கியது.  “அம்மா காய்ச்சல் வந்த உடம்பு, அழுது உடம்பைக் கெடுத்து எங்களையும் அனாதையா விட்டுடாதே அம்மா” என்று பாசத்தை பிரயோகித்தான் மகன்.  தங்கையையும், மனைவியையும் பிரித்து அழுகையை அடக்கினான்.  பெண்கள் விம்மி விசும்பிக் கொண்டிருந்தனர்.

            “என்னம்மா யோசனை. உன் உடம்பிருக்கிற நிலையில நீ ஷில்லாங் போனா நீ திரும்ப மாட்டே. உங்க சொந்தக்காரங்க வரவிட மாட்டாங்க. நாங்கெல்லாம் அனாதையாயிருவோம்” என்று குரலை நெகிழ்த்தி புலம்பினான்.  தங்கையும், மனைவியும் அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.  அம்மா நெகிழ்ந்து அழுதாள்.

            “அம்மா ரெண்டு யோசனை.  ஒன்னு, உனக்கு உடம்பு சரியானதும் ரெண்டு மூணு மாசத்தில் ஷில்லாங் போய் மாமா மற்றும் சொந்த பந்தங்களைப் பார்த்து துக்கம் விசாரிச்சுட்டு ஒரு ஒரு வாரம் இருந்துட்டு வர்றது.  அல்லது நம்ம குடும்ப சார்பா நான் மட்டும் உடனே கிளம்பி ஷில்லாங் போய் துக்கம் விசாரிச்சிட்டு செய்முறை இருந்தா செஞ்சுட்டு வர்றது”

            எவருக்கும் கட்டுப்படாமல் முரட்டுத்தனமாய் பேசி ஊதாரித் தனமாய் திரிந்த மகன் இப்படித் தெளிவாய் பவ்வியமாய்ப் பேசியது அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தது.

            “எனக்கு ஷில்லாங் போய் வர ஆசை.  பிறந்த தேசம், சொந்த பந்தம் எல்லாம் பார்த்து வரணும்.  என் உடல்நிலை இரண்டாயிரம் மைல் போய் வர ஒத்துழைக்குமா. அவர்கள் தான் என்னை திரும்பி வர அனுமதிப்பாங்களா தெரியலை.  ஆசைபட்டு கட்டி வந்து புருஷன் மரிச்ச மண்ணில உயிரை விடறதுதான் அவருக்கு நான் செய்யிற மரியாதை.  நான் பிறந்த மண்ணுக்கு கொடுக்கிற மதிப்பு” என்று சொல்லி விம்மினாள்.  “அம்மா செத்ததுக்கு பெண் பிள்ளைகளுக்குத்தான் முறை செய்யனும்.  என் தங்கையிடம் ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்திரு.  அவ வேணும்கிறதை செஞ்சுக்கட்டும். நீ மட்டும் போயிட்டு வா.  இந்தா ரெண்டாயிரம் ரூபாய் முதலில் மெட்ராஸிலிருந்து கவ்ஹாத்தீ போற ரயிலுக்கு டிக்கட் பதிவு பண்ணிட்டு வா” என்று அம்மா தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.

**************

2

            கவுஹாத்தி செல்லும் திப்ருகார் விரைவு ரயிலில் தனக்கான இடத்தில் அமர்ந்தான்.  தமிழ்நாட்டுக்கு வடக்கே முதல் முதலாக பயணம் மேற்கொள்கிறான்.  அவனைச் சுற்றிலும் வௌ;வேறான முகங்கள் வேறு வேறு மொழிகள் பேசினார்கள்.  இரவு ஒன்பது முப்பத்தைந்துக்கு வண்டி புறப்பட்டது.  அம்மா சொன்னது போல் அவன் 3 அடுக்கு ஏசி பெட்டியில் பதிவு செய்திருந்தான்.  இவனுக்கு கீழடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.  அவரவர் படுக்கைக்கான தலையணை விரிப்பு, கம்பளி முதலியவை கொடுக்கப்பட்டிருந்தது.  மேலடுக்கில் இடம் கிடைத்த ஒரு வயசாளி இவனிடம் தனக்கு கீழடுக்கு கொடுக்குமாறும் அவனை தனது மூன்றாம் அடுக்கில் படுக்குமாறும் இந்தியில் கெஞ்சினார்.  இவனுக்கு இந்தி புரியவில்லை.  அவரது சைகைகள் புரிந்தும் இவன் மறுத்து விட்டான்.  தனக்கான இடத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என்றளவில் இறுகிப் போய் இருந்தான்.  முதலில் கெஞ்சலாகப் பார்த்த பெரியவர் ‘நீயும் ஒரு மனுஷனா’ என்ற ரீதியில் பார்த்தபடி புலம்பியபடி தட்டுத் தடுமாறி மேலே ஏறிப் படுத்தார்.  பெரியவரின் பார்வை அவனுக்குள் உறுத்தியது.  ‘அவரவருக்கு வாய்த்த வாய்ப்பை யாரோ ஒருவருக்கு எப்படி விட்டுக் கொடுக்க முடியும்..?’ என்று நினைத்துக் கொண்டான்.

            அவனுக்கு எதிரில் கீழடுக்கில் அவனது அம்மாவைப் போல சிவந்த தட்டையான நெற்றியும் இலேசான வளைந்த புருவமும் இடுங்கிய, ஒளிமிகுந்த சிறிய கண்களும், குட்டையான 40 வயது மதிக்கத்தக்க  ஒரு பெண்மணி படுக்கையை விரித்துப் படுத்தாள்.  அவனுக்கு அவனது அம்மாவின் நினைவு வந்தது.  அம்மாவும் இந்த வயதில் இப்படித்தானே இருந்திருப்பாள் என்று நினைத்தப்படியே படுக்கையை விரித்தான்.  படுத்தான்.  ரயிலின் வேகம் கூடியது.  விளக்கு அணைத்து எல்லோரும் உறங்கத் தொடங்கினார்.  மெதுவாகத் தாலாட்டியது போல் வண்டியில் அசைவு.  தூக்கம் வரவில்லை.  அம்மாவைப் பற்றி அவன் கேள்விப்பட்டவை அலை அலையாக நினைவில் ஆடின.

***********

 

Series Navigationதக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]அறமாவது …மறமாவது ?!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *