எஸ்.சங்கரநாராயணன்
லண்டனில் பனி பெய்ய ஆரம்பித்தால் பகலிலேயே கூட பொழுது மங்கி ஒரு மெழுகு பூசி பழைய சாமான்போல பீங்கான் தன்மையுடன் காண்கிறது. அடிக்கடி துவைத்து நீர்க் காவியேறிய உடை போல. வாணலியில் வெண்ணெய் உருகுவது போல மேகம் உடைந்து திரி திரியாய்க் கொட்டுகிறது. எனக்குத் தெரிந்த நம்மவூர் உதாரணங்கள் இவை. மகள் சத்தியவதியின் பிரசவம் என்று லண்டன் வந்திருந்தேன். நானும் இவளும். அவள் பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது, டாக்டர் தந்த தேதிப்படி. என்றாலும் லண்டனில் குளிர்காலம், என்று சீக்கிரமே நாங்கள் வந்திருந்தோம். தவிரவும் குளிர்காலம் என்றால் இங்கு அடிக்கடி விமான நிலையங்கள் மூடிவிடுவார்கள். அநேக விமானங்கள் ரத்து செய்யப் பட்டுவிடும். நாளைய நிலவரம் என்ன, இன்றைக்குச் சொல்ல முடியாது.
லண்டனில் பனி பெய்தால் நிற்காமல் பெய்து தள்ளுகிறது. சில பிசியான அலுவலகங்களில் ஃபேக்ஸ் சாதனத்தில் இப்படி காகிதம் பீறிட்டு வெளித் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கும். இப்போது ஃபேக்ஸ், டெலக்ஸ், தந்தி எல்லாம் ஓய்ந்துவிட்ட காலம். ஒழுகும் மேகத்தை எதைக் கொண்டு அடைப்பது. ஜன்னல் திறக்க முடியாத பனி. அநேக வீடுகளில் பனி பெய்து வெளித் தோட்டத்தையும் வீட்டையுமே மூழ்கடித்து விட்டது பனி. வீடுகளுக்கே பனிச்சட்டை போட்ட மாதிரி இருந்தது. தெருவில் இருந்து பார்த்தால் பனிக் கூடாரத்துள் முழுசாய் அநேக வீடுகள் சிறைப்பட்டு விட்டன. நம்மூரில் மாவடு, நெல் எல்லாம் படியால் இப்படி கும்பாச்சியாய் அளப்பார்கள்!
சிறிது வெயில் வந்தாலும் மாடிக்குப் போய் ஜன்னலைத் திறந்து…ரொம்ப நேரம் அங்கே அப்படி நிற்க முடியாது. பனிக்காற்று ஆளைத் தள்ளும். பல்லெல்லாம் கிட்டிக்கும், சிப்லாக்கட்டை அடிப்பது போல. (‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தில் சிவாஜி கையில் வைத்து உருட்டுவாரே அதுதான் சிப்லா.) நீண்ட இரும்பு பனிவாரிக் கரண்டிகளால் எட்டுமட்டும் மாடி வெளிக்கூரையில் தேங்கி இறுகியிருந்த பனியை உடைத்துக் கீழே தள்ளுவோம். அதிகபட்சம் பத்து இருபது நிமிடம். அதற்குமேல் அந்தப் பனிக்காற்று ஒத்துக் கொள்ளாது. ஜுரம் வந்துவிடும்.
நல்லா ஒரடி ஒண்ணரை அடி பனி மூடிக் கிடக்கும் அதன் அழுத்தம் கூரையை உடைத்து விடுமோ என பயமாய் இருக்கும். சரிந்த கூரை ஓடுகள் எடுத்த வீடுகள். பனியை செதுக்கித் தள்ள வேண்டும். தெருவில் யாருமே இருக்க மாட்டார்கள். தெருவே மூடிக் கிடக்கும். தெரு என்றில்லை. அரை மைல் தொலைவில் ஓர் ஏரி இருக்கிறது. அந்த ஏரியே இப்போது இறுகி பனிக் கல்லாய், பாறையாய் பாளம் பாளமாய்க் கிடக்கிறது. படிகள் விலகிக் கிடக்கிற குளக்கரை போல.
வீட்டுக்குள் எப்பவும் ஹீட்டர் போட்டுக்கொள்ள வேண்டும். தெருவில் தண்ணீர்க் குழாய்கள் பதித்து வீட்டுக்கே தண்ணீர் சப்ளை வரும். தெருக் குழாய்களுக்கும் ஹீட்டர் உண்டு. வாஷ் பேசினில் தண்ணீர் பிடித்தால் முதலில் சில்லென்று தண்ணீர் வரும். பிறகு சூடான நீர் வரும். கழிவறையில் காகிதம் தான். அந்தக் குளிரில் தண்ணீர் பயன்படுத்த ஒத்துக்கொள்ளாது. குப்பென்று ஜலதோஷம் பிடித்து மூக்கை அடைத்துக் கொள்ளும். நம்ம ஊரில் குழாயைத் திறந்தால் மாடித் தொட்டியில் பகலெல்லாம் பட்ட சூட்டுக்கு தண்ணீர் சூடாக வரும். பிறகு குளிர்ந்த தண்ணீர் வரும். இங்கே நேர் எதிர், உல்ட்டா… அல்லவா?
பனிக் காலங்களில் காரை எடுத்துக்கொண்டு எங்கேயும் வெளியே போக வகையில்லை. தரை வழுக்கும். பிரேக் பிடிக்காது. அவசரத்துக்குக் காரை எடுத்துச் செல்பவர்கள் மெதுவாக ஊர்வார்கள். போக்குவரத்தில் நெரிசல் இருக்கும். சிறிது தூரம் வரை பார்வையில் எதுவுமே தெரியாது. காரின் வைப்பர் வெளியே செல்லாதே என்று இப்படியும் அப்படியுமாக அலைந்துகொண்டே யிருக்கும்.
மக்களும் சிறு தூரம் வரை நடந்தே போய்வர நினைப்பார்கள். வீட்டில் அடைந்து கிடந்ததற்கும் அதற்கும் எல்லாருக்குமே கை காலை உதறி சிறிது வெளியே சென்றுவர, ஆசுவாசப்பட வேண்டி யிருந்தது. வாரம் ஒருமுறை ஊழியர்கள் வந்து வீடுகளில் விழுந்துகிடந்த பனியைத் தட்டி விடுவார்கள். திண்ணையில் படுத்துக் கிடந்த மிருகங்களை விரட்டி விடுவது போல. நம்மூர் உப்பு வயல்கள் போல ஓரங்களில் ஒதுக்கித் தள்ளிய பனி கோபுரங்களைக் காணலாம். தெருவெங்கும், தெருவோர மரமெங்கும் பேய்கள் போல உட்கார்ந்திருக்கும் பனி. அதையெல்லாம் அகற்ற வேண்டும். இலைகளுக்கு பூக்களுக்கு தொப்பி அணிவித்தது பனி.
வாரம் ஒருமுறை கடைகள் திறந்திருக்கும், என்பது ஒரு நியதி. தவிர அலுவலகம் போய்வருகிற ஆட்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் வசதிக்காக கடிகாரத்தையே சற்று நகர்த்தி வைப்பார்கள். பதினோரு மணிக்கு அலுவலகம் துவங்கும். ஒருமணி நேரம் தள்ளி அப்போதைய பதினோரு மணியை பத்து மணியாக கடிகாரத்தில் மாற்றிக் கொள்வார்கள். தெருக்களில் பஸ் பிடித்து அந்தப் பனியில் அலுவலகம் போகவேண்டி யிருந்தது.
ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச் பிரார்த்தனை ‘மாஸ்’ இருக்கும். அதைப் போலவே ஞாயிறுகளில் மாத்திரம் கடைகள் திறந்திருக்கும். மாலை பதினோரு (பத்து!) மணிக்குக் கடை திறந்தால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் மூடி விடுவார்கள். பொழுதே இருட்டி விடும் அப்போது. வெளியே வந்து நடமாடும் மக்களிடம் தான் எத்தனை மகிழ்ச்சி. சிரிப்பு. சிறு குழந்தைகள் ஸ்வெட்டர், கோட் அணிந்துகொண்டு தெருவில் ஆர்ப்பரித்தபடி ஓடித் திரிவார்கள். தலையில் பனிக்குல்லா இருக்கிற தைரியத்தில் குற்றுமரங்கள் அடியில் போய் நின்று மரத்தை உலுக்கி பனி மழைபோல சுற்றிலும் சிதறுவதை ரசிப்பார்கள்.
பனிக்காலங்கள் தனிமையை வலியுறுத்தின. பனி ஒவ்வொரு தனி மனிதனின் அனுபவமாக இருந்தது. அதை சேர்ந்து அனுபவிக்க முடியாது. சில பேரின் தனிமை துயரங்களைத் திரும்பக் கொண்டு வருகிறது. சிலர் அதை ரசிக்கிறார்கள். நியதிகளின் பிடியில் இருந்து ஓய்வு அது தருவதாக நம்புகிறார்கள்.
பிரசவ நாள் நெருங்கி வரும் நிலையில், அதுவும் கொட்டும் இந்தப் பனியில் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் சத்தியவதி. இது அவளுக்கு முதல் குழந்தை. நம்மூரில் இருந்தவரை அவளுக்கு உலகமே தெரியாது. கல்யாணம் என்று வரன் வந்தபோது, மாப்ளை லண்டனா?… என்று யோசனையாய் இருந்தது. ஆனால் எத்தனை சுலபமாக இங்கே அவள் பழகிக் கொண்டாள் என நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது.
பனி கடுமையாக விழ ஆரம்பிக்கும்வரை அவள் காலைகளில் வெயிலேற சிறு நடை என்று வெளியே போய்வந்தாள். மதனகோபால் இருந்தால் அவனும் அவளுடன் போய்வருவான். என்னவாவது வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டே கூட்டிப் போவான் மதனகோபால். சில சமயம அப்படியே கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வருவார்கள். ஆனால் பெரும்பாலும் நானோ இவள், விசாலமோ கடை வேலைகளைப் பார்த்Jக் கொள்ளோம். எங்களுக்கும் பொழுது போகவேண்டுமே.
பகலில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறாப் போல ஆகிப்போனால், குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் எல்லாரும் செய்தி பார்ப்போம். அவசரத் தகவல்கள் சொல்வார்கள். மாவட்டத்தின் சில பகுதிகளில் பனிப்புயல் அடித்து கூரைகள் சேதம்… பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் நெடுஞ்சாலை எண் ….. மூடப் படுகிறது, என்றெல்லாம் சொல்வார்கள். கணினியிய்ல யூடியூபில் விசாலத்துக்குப் பார்க்க ஆயிரம் விஷயங்கள் மகிடைத்தன. நானா? நான் நல்ல சங்கீதம் கேட்பேன். தனிமைக்கு சங்கீதம் அபாரமான துணை அல்லவா?
என் பெயரா? நான் விக்னேஸ்வரன். மின்சார வாரியத்தில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவன்.
சில நாட்களில் சத்தியவதியுடன் நான் காலை உலா போய்வருவேன். தெருவில் தரைவிரிப்பு போல கச்சிதமான தார்ச்சாலை. பனி ஒதுக்கி யிருப்பார்கள். ஓரங்களில் பாத்தி கட்டியிருக்கும் பனியில் சூரிய ஒளி பழுப்பு காட்டி மினுங்குவது அழகு. திருச்செந்தூர் சில்லு கருப்பட்டி! கெட்டியான ஸ்வெட்டர் அவளுக்கு. எனக்கும் மேல்கோட். சில சமயம் தேவைப்படி மழைக்கோட். கழுத்துக்கு ‘ஸ்கார்ஃப்’ உண்டு. இருவர் கையுலும் குடை இருக்கும். பனி அதிகம் கொட்ட ஆரம்பித்து விட்டால் விரித்துக் கொள்ளலாம்.
தான் வாசித்த புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வருவாள் சத்தியவதி. ஊரிலேயே அவளுக்கு ஆங்கிலத்தில் வாசிப்பு ருசி உண்டு. தடிதடியான புத்தகங்களின் சின்னச் சின்ன எழுத்துகள். பெஸ்ட் செல்லர் வகைமை. எழுநூறு எட்டுநூ பக்கம். ஒரே இரவில் வாசித்து முடித்துவிட்டுப் படுக்கப் போவாள். பேசியபடியே திடுதிப்பென்று சில சமயம் அப்படியே நிற்பாள். வயிற்றை அழுத்திக் கொள்வாள். ஸ் என வயிற்றுக் குழந்தையுடன் ரகசிய உரையாடல் நடத்துவாள். “என்னம்மா?” ஒண்ணில்ல, என்று புன்னகையை வரவழைத்துக் கொண்டு திருமப நடந்து வருவாள்.
அரை மைல் அருகிலேயே இந்திய சாமான்கள் கிடைக்கிற கடை இருந்தது. பார்த்து வைத்திருந்தேன். நல்ல அகலமான ரஸ்தா அது. கடை வாசலில் வண்டிகள் நிறுத்தலாம். கடைக்கு எதிரே சிறிது காலியிடம் இருந்தது. நானும் விசாலமும் சில நாட்களில் அந்தக் கடைக்கு வந்துபோகையில் அவனைப் பார்த்திருக்கிறோம். அவன் ஒரு சாக்ஸபோன் கலைஞன். என்ன அருமையாக வாசிக்கிறான்… என்று வியப்பாய் இருக்க்கும், அவன் வாசிப்பு.
மேலே சிறு துணிக்கூரை அமைத்துக் கொண்டிருப்பான். அவன் துணிகள் அத்தனை தரமாய் இல்லை. அழுக்காகவும் இருந்தன. பலநாள் தாடி. முள்ளுக்காடாய்த் தெரிந்தான் அவன். மூக்குப்பொடி போடுவான் போல இருந்தது. அவன் நாசிகள் துவாரங்களில் பழுப்பாய் இருந்தன. பக்கத்தில் வேறு கடைகள் இல்லை. அந்தப் பகுதிக்கே எல்லாருக்கும் அந்தக் கடை அடையாளம். எனக்கு அவன்தான் அடையாளம்.
அவன் பெயர் எனக்குத் தெரியாது. தேவையும் இல்லை. அவன் கலைஞன். என் நண்பன். கலைஞர்கள் எல்லாருக்கும் நண்பர்கள். என்ன அருமையாக அந்த சாக்ஸபோனை வாசிக்கிறான். வாசிக்கையில் அவனது கழுத்து நரம்புகள் புடைத்தன. பாம்பாய் எழுச்சி கொண்டன. தவளை விழுங்கிய பாம்பு. அதல்ல விஷயம். அபார சோகம் இருந்தது அவன் வாசிப்பில்.
அந்தக் கடைக்கு சாமான்கள் வாங்க வருகிறாட்கள் பெரும்பாலும் இந்தியர்கள். அவனுக்கு இந்தியர்களை அடையாளம் தெரியும் என்று தோன்றியது. அநேகர் கடைக்கு வந்துவிட்டு சாமான் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவன் எதிரே விரித்திருந்த துண்டில் நாணயங்களையோ, ரூபாய்த் தாள்களையோ போட்டுவிட்டுப் போனார்கள்.
அவனே ஒரு சோகச் சித்திரமாய் இருந்தான். நிறையக் குடிப்பான் போல இருந்தது. கண்கள் எப்பவுமே சிவந்து கிடந்தன. ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும் இடையிலான சிறு ஓய்வு எடுத்துக் கொள்கையில் அருகில் வைத்திருந்த பையில் இருந்து தண்ணீர் சிறிது அருந்திக் கொண்டான். அவன் எதிரே யார் வந்து நின்றாலும் சட்டை செய்வதில்லை அவன். கர்மயோகி போல தன் வாசிப்பின் திளைப்பிலேயே அவன் இருந்தான்.
வாரம் ஒருமுறை தவறாமல் நாங்கள் கடைக்கு வந்தால் தன்னைப்போல அவனைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது. அவனும் நான் இங்கே வந்த நாளில் இருந்து இடத்தை மாற்றாமல் அங்கேயே வந்து உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். கடை இல்லாத நாட்களில், பனிகொட்டும் காலங்களில் தெருவே அடங்கிப் போகும். நடமாடட்டம் அற்றுப் போகும். ஆக கடை திறந்திருக்கும் நாட்களில் தான் அவனுக்கு வருமானம் என்று தோன்றியது. கடையோ வாரம் ஒருமுறை மாத்திரம் தான் திறக்கிறார்கள்… என்றால் ஒரு வாரத்திற்கான அவனது செலவுகளுக்கு இங்கே அவனுக்குச் செலவுக்குக் கிடைக்கிறதா, என்று தெரியவில்லை.
ஆனால் அற்புதமான வாசிக்கிறான். சாக்ஸ் இசைக்கே சோகத்தைக் கிளர்த்தும் வல்லமை உண்டு. சாக்ஸ், ஷெனாய், நாதஸ்வரம்… எல்லாமே உயர் ’ஸதாயியில் எடுத்தால் எலும்பிச்சம்பழ ஜுஸ் போல மனதைப் பிழிந்துவிடும். அவன் வாழ்க்கையில ஏமாற்றம் எதுவும் இருக்குமா என்று தோன்றியது. கலைஞர்களுக்கே சோகம் ஒரு அழகு. அணிகலன்… என்ன எனக்கு இப்படித் தோன்றுகிறது.
அவன் அழகானவன் அல்ல. அவன் முகத்தில் சில கோரத் தழும்புகள் இருந்தன. எங்காவது விபத்தில் சிக்கி யிருக்கலாம் அவன். ஆனால் அந்தக் கண்களின் ஒளி அபாரமாய் இருந்தது. வாசிக்கும்போது அந்தக் கண்கள் மின்னி அடங்கினாற் போல இருந்தது. சில நாட்கள் விசாலமோ, சத்தியவதியோ கூட வராமல் நான் மாத்திரம் அந்தப் பக்கம் வர நேர்ந்தால் நின்று அவனை கவனித்திருக்கிறேன். அவனது ஒரு பாட்டை முழுமையாகக் கேட்டிருக்கிறேன். அவனைப் பார்ததால் வறுமைக்கு, வயிற்றுப் பசிக்கு வாசிக்கிறவனாய்த் தோன்றவில்லை. அவன் உடம்பில் ஒரு நிமிர்வு இருந்தது. கலை அவனுக்கு அந்த நிமிர்வைத் தந்திருக்கலாம். நான் அவனை நேசிக்க ஆரம்பித்திருந்தேன்.
இன்னும் ஒரு வார காலஅளவில் சத்தியவதிக்கு பிரசவம் ஆகிவிடும் போல இருந்தது. ரொம்ப சிரமமாய் இருந்தாலோ, ஆஸ்பத்திரி அழைத்து வர சிக்கல் எதுவும் இருக்கும் என்று தோன்றினாலோ நீங்கள் இங்கே ‘அட்மிட்’ ஆகிவிடலாம் என்றார்கள். மதனகோபால் முன்னதாகவே சேர்த்துவிடலாம் என அபிப்ராயப் பட்டான். இவள், விசாலம் போய் உதவிக்கு என்று அங்கேயே தங்கலாம். நானும் மாப்பிள்ளையும் வீட்டில். இவன் ஆஸ்பத்திரியை எட்டிப் பார்த்துவிட்டு அலுவலகம் போய்விடுவதாக ஏற்பாடு.
காலையில் இட்லி அல்லது தோசை நான் வார்த்துத் தந்துவிட்டேன் என்றால் மதனகோபால் மதியப்பாட்டை அலுவலகத்தில் பார்த்துக் கொள்வான். பெரிய அலுவலகம் அது. நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். பெரும்பாலும் சீக்கியர்கள். வயதில் பெரியவர்களைப் பார்த்ததுமே சட்டென்று பணிந்து காலைத் தொட்டு வணங்குகிறார்கள். சீக்கியர் என்று இல்லை. வட இந்தியாவிலேயே அந்தப் பண்பாடு இருக்கத்தான் செய்கிறது.
எனக்கு மதியம் ஒரு சோறு மாத்திரம் குக்கரில் வைத்துக்கொண்டால் போதும். கெட்டித் தயிர் ஊற்றிச் சாப்பிட்டு விடுவேன். மாவடு இருக்கிறது. தொட்டுக்கொள்ள. குறைவாகச் சாபபிடுவதே திருப்தியாகிப் போகிற வயது. மாலைகளில் அலுவலகம் விட்டு மதனகோபால் ஆஸ்பத்திரி போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான்.
அவனும் போனபின் எனக்குத் தனித்து விட்டாற் போல இருந்தது. உலகம் என் பிடிக்குள் நியதிக்குள் வந்தாற் போல இருந்தது. சிறிது வெயில் வந்த நாளாகவும் இருந்தது அது. மேத்தா அங்காடிக்கு போன் பண்ணிப் பார்த்தால் திறந்திருந்தது. அதுவரை சிறு நடை நடந்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும். ஒருவேளை அந்த சாக்ஸபோன்காரன்… அவனைக்கூட சந்திக்க வாய்க்கலாம், என்றிருந்தது. போனதடவை கடைக்குப் போயிருந்தபோது அவனைக் காணவில்லை. உடல் நலம் இல்லையோ? இந்த வருமானம் அவனுக்குப் போதுமா என்ற கேள்வி அவனைப் பற்றி எப்போசூம உண்டு என்னிடம். ஒருவேளை அவன் வாசிக்கும் இடத்தை மாற்றிக்கொண்டானோ என்றுகூட நினைத்தேன்.
கடைக்காரனிடம் அங்கே அந்த சாக்ஸபோன்காரன் இல்லாததை விசாரித்தபோது அவன் ஆச்சர்யப்பட்டான். ஆமாம்… வரல்ல போலுக்கே, என்கிற மாதிரி எதோ சொன்னான். அவன் கவனிக்கவில்லை போல இருந்தது. கடைக்குள் கல்லாவில் உட்கார்ந்து விட்டால் அவன் அமர்ந்தபடியே வேலைகளை மேற்பார்வை செய்வான். சிசிடிவி காட்சிகளை ஒருகண் பார்த்துக் கொண்டிருக்கும். என்றாலும் சாக்ஸபோன் வாசிப்பு… அது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும். இந்த வாசிப்பைக் கேட்டபடி வேலை செய்ய உற்சாகமாய் இருக்கும் அவனுக்கு என நான் நினைத்திருந்தேன். அவனது பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.
சாக்ஸபோன்காரனை நினைத்ததும் இன்று ஒருவேளை அவனை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்று யோசித்தேன். கால்கள் தன்னைப்போல ஷுக்களை மாட்டிக் கொண்டது. வெளிக் குளிருக்கு கால்களை அலட்சியப் படுத்திவிட முடியாது. வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.
தளிர் வெயில் உடம்புக்கு இதமாய் இருந்தது. வெயிலின் முகம் பார்த்தாலே ஊர் மக்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்துவிடுகிறது. எல்லாரும் அந்த ஒளிக்குளியலுக்குப் போல தெருவில் நடமாட ஆரம்பித்திருந்தார்கள். நான் பழகிய பாதையில் நடந்து போனேன். ஆகா தூரத்துப் பார்வைக்கே அவன் அதே இடத்தில் திரும்ப வந்துவிட்டது தெரிந்தது. அவன் வாசிப்பு அதற்கு முன்பே காற்றில் மிதந்து வந்து ஒரு செல்ல நாய்க்குட்டி போல என்னைத் தழுவிபயது.
நான் வருவதை அவனும் பார்த்து விட்டான். பொதுவாக அவன் யாரிடமும் பேசுவது இல்லை. என்னிடமும் தான். பேசுவதில் அவன் அக்கறைப் படாதவனாய் இருந்தான். நான் அந்த ஊருக்குப் புதியவன்,எனபதை அவன் கவனித்திருக்கலாம். ஒருநாளில் எத்தனையோ பேரை அவன் சந்திக்கிறான். அவர்களை அவன் மறந்தும் விடுவான். அவர்களிடம் அவனுக்குத் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன? எதுவும் இல்லை. உண்மையில் அவனது மன திருப்திக்காகவே அவன் வாசிக்கிறான். வாழ்க்கையில் அவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது என்ற அளவில் அவன் அந்த சாக்ஸபோன் நாதத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறான்.
சட்டென்று மீன் துள்ளலாய் ஒரு சங்கதி அவன் போட்டபோது என் மனம் எகிறியது. அலுவலக நேரம் இது, என்பதால் பொதுசனக் கூட்டம் என்று கடையில் பெரிதாய் இல்லை. எனக்கும் கடையில் வாங்க எதுவும் இல்லை. நான் சற்று தள்ளி ஒரு மேப்பிள் மரத்தின் பக்கமாக நின்றபடி அவன் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் எதிரே யாரும் இல்லை. அதுவே அவனுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளித்தாற் போல இருந்தது. என்னவோ அவனும் தானறியாமல் சரஸ்வதியின் கரங்களால் உயரத் தூக்கப் பட்டிருக்கலாம்… அன்றைக்கு அவன் வாசிப்பு அத்தனை அற்புதம். கண்ணில் தானே நீரை வரவழைக்கிற, நரம்புகளை நெகிழச் செய்கிற வாசிப்பு அது.
வாசிக்கிற அளவில் தற்செயலாகத் திரும்பி அவன் என்னைப் பார்த்திருக்கலாம். எனக்கு அவனைக் கிட்டேபோய்ப் பாராட்ட வேண்டும் போல இருந்தது. அவன் வாசிப்பை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தான். நான் அவனிடம் போய் நின்றேன். என்ன பேச என்று தெரியவில்லை. அவன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
“அருமையாக வாசிக்கிறீர்கள்…”
“நன்றி” என்று முன்குனிந்து வணக்கம் சொன்னான். “நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதியவர் என யூகிக்கிறேன்…”
“ஆமாம். இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன்…”
“இளையராஜா…” என்று புன்ன்கை செய்தான்.
“ஆமாம்…” என நானும் புன்னகைத்தேன். “உங்கள் வாசிப்பில் ஓர் ஆழ்ந்த சோகம் தெரிகிறதே…” என்று கேட்டேன். “அப்படியா?” என்று சிறிது புருவம் உயர்த்தினான். தனக்குத் தானே தலையாட்டிக் கொண்டான். “நான்கு வருடங்கள்… கடுமையான நான்கு வருடங்கள்…” என்றபடி நெற்றியைத் தேய்த்துக் கொண்டான். கடந்த காலத்தை மனதில் ஓட்டிப் பார்க்கிறானா தெரியவில்லை.
“உங்களுக்கு சங்கடமாய் இருந்தால் விட்டு விடுங்கள்…”
“மிக சுமாராக இருந்தது என் வாசிப்பு” என்றான் திடீரென்று. “இதை வைத்துக்கொண்டு எனக்கு என்ன வருமானம் வந்துவிடும்?” என்றான். “அவள் என்னை விட்டுப் போனது சரிதான்…”
எனக்கு வருத்தமாய் இருந்தது. “உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால், உங்களுக்கு ஒரு பீர் வாங்கித் தர விரும்புகிறேன்…” என்றேன். “இருக்கட்டும்…” என மறுக்க நினைத்தவன், “இந்தப பக்கம் கடை இல்லை. சிறிது நடக்க வேண்டும்…” என்றான்.
“பரவாயில்லை…”
அவன் சாக்ஸபோனை அதன் உறையில் போட்டுக்கொண்டு அதைத் தொங்க விட்டபடி என்னுடன் நடந்தான். எனக்கு மதுக்கூடம் தெரியாது. ஆக நான்தான்அவனுடன் நடந்தேன். அவன் தோளில் இருந்து மூன்றாவது கையாகத் தொங்கியது சாக்ஸபோன்.
நான்அவனை உற்சாகப் படுத்த விரும்பினேன். “அருமையாக வாசிக்கிறீர்கள்..”
“இப்போது… ஆமாம்…” என்றான். “அவள் என்னை விட்டுப்போன தனிமையும் வெறுமையும்… எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட இருந்தது…”
“முழுக்கக் குடித்துவிட்டு ஓரிரவு வீட்டின் இருளில் தனியே நான் எனக்கு மட்டுமாக வாசித்தேன். அன்றைக்குப்போல அதற்குப் பின், இப்போதும் கூட என்னால் வாசிக்க முடியாது. வாயால் அல்ல, நான் என் இசைக்கருவியால் பேசினாற் போல இருந்தது. என் கண்ணில் இருந்து கண்ணீர் பொங்கி கன்னங்களில் வழிந்தது. ஆனால் எனக்கு அது துக்கமாக இல்லை…”
யாரிடமாவது பேச அவன் காத்துக் கிடந்ததாக யூகித்தேன்.
“மீண்டும் இப்போது உங்கள் மனைவி திரும்ப உங்களிடம் வந்தால்?…” என்று கேட்டேன்.
அவன் சிறிது யோசித்தான். “வேண்டாம்” என்றான் அவன்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “ஏன்”
“அவளை நான் இழந்து விட்டேன். உண்மை” என்றான். “ஒரு கதவு மூடியதில் அதைவிடப் பெரிய கதவு எனக்குள் திறந்து கொண்டிருக்கிறது.”
“இசை.”
ஆமாம், என்று அவன் தலையசைத்தான்.
மதுக்கூடம் வந்துவிட்டது. பக்கத்தில் தான் இருந்தது.
“உங்களுக்கு வேண்டிய பானத்தை நீங்கள் சொல்லலாம்…”
“நீங்கள்?”
“இல்லை. நான் மது அருந்துவது இல்லை…” என்றேன்.
“நல்லது….” என்றவன், “கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்றான்.
அப்போது எனது வாட்சப் எண்ணில் குறுஞ்செய்தி வந்திருந்தது. எடுத்துப் பார்த்தேன். விசாலம் தான் அனுப்பியது. “சத்தியவதிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது- சுகப் பிரசவம். தாயும் சேயும் நலம்.”
“ஆசிவதித்துவிட்டார்…” என்றேன் நான் அவனிடம்.
- • •
- துயரம்
- வானத்தில் ஓர் போர்
- கொரனாவின்பின்னான பயணம்
- ஹைக்கூ
- பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்
- வலுவற்ற சூப்பர் வல்லரசு
- சிதறல்கள்
- உள்ளங்கைப்புண்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 11
- பாலினப் போர்
- சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- பயணம் – 5