நஞ்சு

This entry is part 14 of 14 in the series 12 ஜூன் 2022

எஸ்.சங்கரநாராயணன்

‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி

‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.)  தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் கொள்வான். உங்களுக்கு மருந்தகம் வரை போற வேலை மிச்சம்தானே? பல்துறை வித்தகனாக அவன் இருந்தாலும் முதல் பார்வைக்கு அவனை “கம்பவுண்டரா?” என்று கேட்டார்கள் வந்தவர்கள். அத்தனைக்கு மோசமில்லை என நினைத்தவர்கள் கூட அவனிடமே “டாக்டர் இல்லையா?” என்று கேட்டார்கள்.

பஞ்சாட்சரம் சுருங்கி பஞ்சு என ஆனால், அவன் பெயர் நஞ்சுண்டேஸ்வரன், அது சுருங்கி நஞ்சு என ஆகிவிட்டது. அவங்க வீட்டிலேயே அவன் நஞ்சுதான். ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் போல விபரீத ராஜமோசமாகிப் போயிற்று. நஞ்சு, மருந்து இரண்டுக்குமே கேது ஆதிபத்தியம். அவன் உத்தியோகத்துக்கு ஒத்துப் போனது. நம்மாட்கள் சங்கட ஹர சதுர்த்தியையே சங்கட சதுர்த்தி என்று சொல்லுவார்கள். அந்தக் கதைதான்.

கழுத்தில் ஒற்றை உத்திராட்சக் கொட்டை கட்டிக் கொண்டிருப்பான். இதென்ன கோவில் அர்ச்சகர் மாதிரி, என்று அவனுக்கே இருந்தது. அதை அவன் கழட்ட நினைத்தபோது அம்மா தடுத்தபடி கோவித்துக் கொண்டாள். “நான் தவம் கிடந்து பெத்த பிள்ளைடா நீ. அது உனக்கு தாயத்து மாதிரி. காவல்… தெரிஞ்சிக்கோ” என்றாள் அம்மா. நல்ல தவம் போங்க. இந்தப் பிள்ளையப் பெத்ததுக்கு தவம், கிவம்லாம் கொஞ்சம் ஓவர்தான். தவம் என்று கண்மூடி அவள் தூங்கிப் போயிருக்கலாம்.

ஆக கழுத்தில் ஒரே மணி உத்திராட்சம் கட்டிக்  கொண்டபடியே தான் நஞ்சு டாக்டருக்குப் படித்து முடித்தான். நல்லவேளை தலையில் குடுமி இல்லை. அப்படியொரு வேண்டுதல் அம்மா மேற்கொள்ளாத வரை சந்தோஷம் தான். இது தவிர நெற்றியில் முப்பட்டையாய் விபூதியும் தேசியக் கொடியில் போல நடு குங்குமப் பொட்டும் கிட்டத்தட்ட கோவில் அர்ச்சகர் சாயலே அவனுக்கு இருந்தது. தன்னை யாரும் பாராட்ட மாட்டார்களா என்ற ஏக்கமும், பாராட்டிவிட்டால் கிண்டல் செய்கிறார்களா என்ற பயமும் இருந்தது. பெரிய படிப்பாளி யெல்லாம் இல்லை. அவன் அரியர் வைத்துத் தான் மருத்துவம் தேறினான். எம் பி பி எஸ் நாலெழுத்து படிப்பை ஒவ்வொரு எழுத்தாக அவன் படித்தாற் போல இருந்தது. அனாடமி வகுப்புகளில் உடல்களைப் பதப்படுத்திய நெடி குடலைப் புரட்டியது. இதில் மேற்படிப்பு ‘எம்.எஸ்’ படிக்கலையா என்று சிலர் அவனைக் கேட்டு திகைக்க வைத்தார்கள். எத்தனை அரியர்ஸ் தேர்வுதான் எழுத முடியும் அவனால், எனறு அவனுக்கே திகைப்பாய் இருந்தது.

அவனது கிளினிக்கின் பெரிய அறையைத் தட்டி வைத்துத் தடுத்த பரிசோதனை அறையில், கல்வி ஆண்டு என்று இல்லாமல் அரியர்ஸ் தனித் தேர்வு மாதத்தில் வாங்கிய மதிப்பெண் சான்றிதழும், அதையடுத்து வாங்கிய டாக்டர் பட்டமும், அதன்பின் அவன் பெற்ற பதிவு எண்ணும் இருந்தது. அதுவே ‘டி வோ ட்டி ஈ – 2’ல் கிடைத்த இடம். தாமதமாய் கல்லூரிப் படிப்பில் இருந்து அவன் மருத்துவம் படிக்கத் தாவினான்.

பஜார்ப் பக்கம் கிளினிக் வைத்தால் நல்ல அளவு வரும்போகும் நபர்களின் பார்வையில் விழும் என்று அவனுக்குத் தோன்றியதால், சித.ராம.பழனியப்பச் செட்டியார் மளிகைக்கடையை ஒட்டிய சந்தில் ஒடுகலான வழி போய் அவன் அறையை அடைய வேண்டும். பிரதான சாலையில் இடது பக்கம் அம்புக்குறி போட்ட போர்டு வைக்க வேண்டி யிருந்தது. பெரிய வருமானம் ஒன்றும் பார்க்க முடியாத நிலையில் அதன் கீழேயே சின்ன போர்டு வைத்தான். ‘இங்கே குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படும்.’

தினசரி காலை ஒன்பது மணி வாக்கில் அவன் கடை திறக்க வருவான். தவறாமல் அவன் கடை வாசலில் ஒரு சிவப்பு நாய் படுத்திருக்கும். உடம்பே எலும்பாய் வரியோடி, எலும்பே உடம்பான நாய். அதற்கென்னவோ அதன் இடத்தில் வந்து அவன் கிளினிக் வைத்திருப்பதாக ஓர் எரிச்சல் இருந்தது. உலகில் எல்லா மனிதருக்கும், சிறு வயசுப் பிள்ளைகள் உட்பட, அதற்கு பயம் இருந்தது. அவர்கள் கிட்டே வந்தாலே வாலை கப்பைக்குள் விட்டு பணிந்து இடத்தைக் காலி பண்ணும். எப்படியோ அவனிடம் மாத்திரம் அதற்கு பயம் சிறிதும் இல்லை. காரணம் நாய்கள் என்றாலே அவனுக்கு பயம்.

அதைப் பார்த்ததுமே அவனது கால் சதை நரம்புகள் நடுங்கித் துடிப்பு காட்டுகின்றன. நாய்கள் அந்தத் துடிப்பை உணர்ந்து கொண்டுதான் அவனது பயத்தை வைத்து அவனைப் பார்த்து குரைக்க ஆரம்பிக்கின்றன. நாயைப் பார்த்த ஜோரில் தானறியாமல் அவன் நடுங்க ஆரம்பித்தான். பிறகும் நாய் இடத்தை விட்டு நகர மறுக்கும். கடையில் (சித.ராம.பழனியப்பச் செட்டியார் மளிகை) இருந்து யாராவது வந்துநிற்கிற ஜோரில் நாய் சர்வாங்கமும் ஒடுங்க படத்தைக் கீழே போட்டாற் போல இடத்தை விட்டு நகரும். கிளினிக்கில் ஓய்வு நேரங்களில், அதாவது அவனது பெரும்பான்மை நேரங்களில், மற்ற பிரபல வைத்தியர்களைப் போலவே அவனும் நோயாளி சிகிச்சை முறைகளை வாசித்து நினைவுகளைப் புதுப்பித்தபடி இருப்பான். அவ்வப்போது அதில் நாய்க்கடி சிகிச்சை பற்றி சரி பார்த்துக் கொள்வான்.  

அவன் அறையைத் தாண்டி பலசரக்குக் கடைக்கு சாமான் இறக்குகிற குடோன் இருந்தது. எப்பவும் அங்கேயிருந்து ஒரு கலந்துகட்டிய தானிய நெடி வந்துகொண்டே யிருந்தது. தனியா, மிளகு, வரை மிளகாய் என கலவை நெடி. மூக்கைத் துளை போடுகிறா மாதிரி தும்மல் வரவழைக்கிற நெடி. தானியங்களை வயதான பெண்மணி ஒருத்தி புச்சக் புச்சக் என்ற விநோத சத்தத்துடன் முறத்தில் புடைத்துக் கொண்டிருப்பாள். யாராவது நோயாளி வந்தால், பெரும்பாலும் வருவது இல்லைதான், அவன் கேள்வி கேட்கும்போதும், வந்த நபர் பதில் சொல்லும் போதும் அந்த புச்சக் சத்தம் ஊடறுக்கும். உங்க பேரென்ன? புச்சக். மணிகண்டன். புச்சக். என்ன வயசு? புச்சக். இருபத்தி புச்சக் மூணு. நாக்க நீட்டுங்க. புச்சக்.  தவிர ஒரு ஹச். அது என்ன? தும்மல்.

குழந்தைகள் தடுப்பூசி என்றால் அதற்கு ஒரு காலக் கிரமம் இருக்கிறது. குழந்தை பிறந்த இத்தனாம் மாதத்தில் இந்தத் தடுப்பூசி. இத்தனை மாதக் குழந்தை இத்தனை எடை இருக்க வேண்டும். எல்லாம் விவரமாகக் குறிக்க தனியாக அச்சடித்த சார்ட் உண்டு. தனியே அதற்கு ரெண்டு ரூபாய் கட்டணம் வாங்குவான். அவனிடம் ஒரு சிறு டைரிநோட்டு உண்டு. அதில் முதல் ஊசி போட்ட நாள், திரும்ப வர வேண்டிய நாள் எல்லாம் குறித்து வைத்திருப்பான். அடுத்த தவணை தடுப்பூசிக்கு அவனே வீட்டிற்குப் போய் அழைத்துவிட்டு வருவான்.

ஒடுகலான சந்தாக இருந்தது அந்த இடம். தவிரவும் பஜார்ப் பக்கம் என்று பார்த்தானே யொழிய அது ஒரு மருத்துவம் பார்க்க என அமைந்த இடமே அல்ல. இந்த இடத்தை அவன் காலி பண்ணினால், சித.ராம.பழனியப்பச் செட்டியார் இந்த இடத்தையும் சேர்த்து சுவிகரித்துக் கொள்ளச் சித்தமாய் இருந்தார். பேஷன்ட்கள் வந்தால் உட்கார என்று நாலைந்து நாற்காலிகள் போடக் கூட அங்கே இடம் கிடையாது. லுங்கி கட்டினாற் போல இடுப்பு உயரம் நீலக் கலரும் மீதி உயரம் வெண்மையுமாய் ஒரு பெயின்ட் அலங்காரம். வெளியே இன்னொரு போர்டு இருந்தது. அவன் பெயர் போட்டு, மருத்துவர் என்று பிளஸ் குறியும் போட்டு, (இன்ட்டு குறி போட்டுவிடக் கூடாது.) பார்வை நேரம் என்று போட்டிருந்தாலும் அவன் அதைக் கண்டுகொள்வது இல்லை. காலை ஒன்பது மணிக்கு திறந்து வைத்தால், மதியம் ஒரு அரையவர் ஒண்ணு ஒண்ணரை சாப்பிட என்று போய்வருவான். பிறகு திரும்ப வந்தால் இரவு பத்து வரை கூட இருப்பான். தூக்கம் வருகிற வரை.

அப்படி அவசர கேஸ் வந்தால் மளிகைக் கடை ஆள் யாராவது தேடி வீட்டுக்கு வரலாம் என்று சொல்லி வைத்திருந்தான். இதுநாள் வரை இந்த பத்து வருடத்தில் அவசர கேஸ் என்று எதுவும் வரவில்லை. ஆனால் மிக அவசரம் என்று நோயாளியை அந்தச் சந்துக்குள் சொருக முடியாதவர்கள் நிறைய இருக்கலாம், என அவனுக்கே தோன்றியதால் அவனை வீட்டுக்கே அழைத்துக் கூட்டிப்போய் நோயாளியைக் காட்டினார்கள்.

“ஒரு கால் வந்திருக்கு… போயிட்டு வந்திர்றேன். பேஷன்ட் யாராவது வந்தா இருக்கச் சொல்லுங்க. கதவு திறந்துதான் இருக்கு” என்பான் செட்டியாரிடம்.

“போயிட்டு வா தம்பி. ஆரு வரப்போரா” என்பார் செட்டியார்.

பிசியான டாக்டர்கள் அவசரம் என்று யாராவது அழைத்தால், “பேசாம பேஷன்ட்டை இங்க கூட்டியாந்துருங்க” என்பார்கள். இவன் உடனே கிளம்பி அவர்களை அவர்களது மூலஸ்தானத்துக்கே போய் சந்தித்தான். நோயாளியைச் சோதிக்க என ஒரு சிறு மெத்தையுடனான ‘பென்ச் மேசை’ மாத்திரமே அவனிடம் இருந்தது. ஒரு ஆளைப் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏத்தக் கூட அங்கே வசதி கிடையாது.

அவன் அம்மாவுக்கு இன்னும் இவனுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்று இருந்தது. “முதல்ல ஒரு நல்ல டாக்டர்னு பேர் எடுக்கணும்மா நான். அப்பறம் கல்யாணம்” என ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தான். அது நடக்காது போல இருந்தது. இவன் எப்ப நல்ல பேர் எடுத்து எப்ப இவனுக்குக் கல்யாணம் பண்ண. நல்லா தவம் இருந்தேன் போ… என அவளுக்கு சலிப்பு.

வயது முப்பதைத் தாண்டியாகி விட்டது. இப்போது அம்மா அவனது கல்யாணப் பேச்சை எடுப்பதே இல்லை, என்கிற வருத்தம் உண்டு அவனுக்கு. அவள் என்ன செய்வாள். ஊரில் பொது இடங்களில், கோவில்  பிராகாரங்களில் சந்தித்துக் கொள்ளும் பெண்கள், இவளுக்கு இவனைப் பார்க்கலாம், என்பதுபோல பேசிக் கொள்வது உண்டு. அவர்கள் எல்லாருமே அம்மா அவர்கள் பக்கத்தில் வந்ததுமே பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவனே நோயாளியை வீட்டில் போய் சந்திக்கிற வழக்கமானதினால் அநேகமாக வேறு டாக்டர்கள் கைவிட்ட கேசுகள், அல்லது அந்த வீட்டு நபர்களே கைவிட்ட கேசுகளே அவனிடம் வந்தன. எப்பவும் வெளியே கிளம்பத் தயார் ஆயத்தத்துடன் அவனிடம் ஒரு மெடிக்கல் கிட், பிரமிட் பையும், உளளே முதலுதவி உபகரணங்கள், டிஞ்சர் அயோடின், பஞ்சு, ஒரு பேண்டேஜ் துணி, கத்திரிக்கோல், சிரிஞ்சு, சில அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் இருந்தன. பெரும்பாலும் பாராசிடமால் போன்ற ஜுர மாத்திரைகள். ஊசி போட வேண்டி யிருந்தால் அந்த வீட்டிலேயே வெந்நீர் போடச்சொல்லி சிரிஞ்சை சுத்தம் செய்து கொள்வான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், என அவன் அறிவான். அட அதெல்லா வல்லவனுக்குத் தானே, என அறியமாட்டான்.

பெரிய கேசுகள் அவனிடம் வருவதே இல்லை. சில தற்கொலை முயற்சி கேசுகள் எப்பவாவது வரும். அவன் பேரே நஞ்சண்டேஸ்வரன். “ஏன் சார், நீங்களே தற்கொலை முயற்சி பண்ணினீங்களா?” என அவனிடமே சந்தேகம் கேட்பார்கள். பரிட்சை ரிசல்ட் வரும் நாட்களில் அவனும் தயாராய் இருப்பான். விஷம் குடித்த கேசுகளுக்கு இனிமா கொடுத்து வாந்தி எடுக்க வைத்து குஊடலை சுத்தம் செய்து தூங்கப் பண்ணுவான். “டாக்டர் நீங்க மட்டும் இல்லன்னா என் பொண்ணு…” என கதறும் பெற்றோர், ஃபீஸ் சொன்னால், “அவ்வளவா?” என்று பேரம் பேசினார்கள். உலகத்திலேயே டாக்டர் கூலி  என்று பேரம் பேசியது அவன் மாத்திரம்தான்.

இது தவிர, வீட்டிலேயே செத்துப்போன கேசுகளுக்கு அவனிடம் ‘டெத் சர்ட்டிஃபிகேட்’ கேட்டு வந்தார்கள். அவன் இதுவரை பார்த்த வைத்தியத்தில் வாய்த்த வருமானத்தை விட இந்த சர்ட்டிபிகேட் தந்து அதிக வருமானம் வந்தது அவனுக்கு. சான்றிதழை எழுதி வைத்துக்கொண்டு அவன் கேட்ட காசைப் பேரம் பேசாமல் தந்துவிட்டுப் போக வேண்டி யிருந்தது. அதில் கறாராய் இருந்தான். பேரம் கிடையாது.

இதுதவிர நாலைந்து கேசுகள் ஆஸ்பத்திரி போக முடியாலும், வசதி இல்லாமலும் ஊரில் இருந்தன. “தினசரி பேஷன்ட்டைப் பார்த்துவிட்டு கிளினிக்கை மூடும் போது சிலரையும், மதிய இடைவேளையில் சிலரையும்  அவன் சைக்கிளில் போய்ப் பார்த்தான். சைக்கிளுக்குக் காத்தடைக்க, அவசர பஞ்சர் போட என அவனுக்கு சைக்கிள் கடையில் அக்கவுன்ட் இருந்தது! “பாத்து ஐயா. கடன் ரொம்ப நிக்குது. நானும் பிழைக்கணும்…” என்பான் சைக்கிள் கடைக்காரன். “நான் டாக்டர், எல்லாரையும் பிழைக்க வைக்கிறதுதான் என் வேலை. கவலைப்படாதே” என்பான் நஞ்சு.

இடுப்பில் முதுகில் அடிபட்டு நகர முடியாமல் படுக்கையோடு கிடக்கும் கிழட்டு கேசுகள் உண்டு. அவர்களைத் திருப்பி பௌடர் போட்டு டெட்டால் வாஷ் செய்ய வேண்டும். முதுகெல்லாம் கொதகொதவென்று இரத்த விளாறியாய்க் கிடக்கும். கெட்ட நாற்றம் வரும். சில உடம்புகளில் உள்ளே பள்ளமே கிடக்கும். அத்தனை சதையும் என்னதான் ஆயிற்று என்று இருக்கும். பஞ்சு வைத்து அந்த துவாரத்தை அடைத்து புண்ணை மூடி பாண்டேஜ் போட்டால், அதைப் போட தனி காசு. இரண்டு நாளில் புண் ஆறிவிட்டதா என்று அதைப் பிரிக்க தனி காசு. “எவ்வளவு?” என்று கேட்டுவிட்டு, “அவ்வளவா?” என்பார்கள். பேரம் பேசுவார்கள். “நீங்க தானே திரும்பத் திரும்ப வரீங்க. பாத்து வாங்குங்க” என்றபடியே கிழவனைப் பார்ப்பார்கள். “இந்தாளும் சாக மாட்டேங்கறான்” என்பார்கள்.

“நான் கைராசியான டாக்டர்…” என்பது போல சம்பந்தம் இல்லாமல் சொலலி ஒருதரம் வாங்கிக் கட்டிக் கொண்டான். “இப்படியாளுகளை உசிரைக் காப்பாத்தி நீங்க எனக்கும் நல்லது செய்யல்ல. நோயாளிக்கும் நல்லது செய்யல்ல” என்று ஒருத்தர் அவனைப் பிடித்துக் கொண்டார். எனக்கும் நகைச்சுவைக்கும் ராசியே இல்லை… என நினைத்துக் கொண்டான் அவன்.

அவனிடம் இப்படி வீட்டு விசிட் வைத்தியத்துக்கு என்று மாத அக்கவுன்ட் வைத்தவர்களும் உண்டு. அப்படி வரும்படிகளை வாங்கித்தான் அவன் சித.ராம.பழனியப்பச் செட்டியாரின் கடன் அடைப்பான். சில நாட்கள் அவன் கிளினிக் போகாமல் வீட்டிலேய இருந்துவிட நிறையப் பேர் வந்து காத்திருப்பதாகக் கனவு வந்து உடனே விழித்துக் கொள்வான்.

அவனுக்குப் பள்ளியில் பாடம் எடுத்த சௌமிய நாராயணன். ஹெட் மாஸ்டராக அவர் ரிடையர் ஆகி, போன வருடம் இறந்து போனார். அவர் அம்மா இன்னும் இருந்தாள். அவருக்கு ஒரே பெண். ஒரு மாதிரி அசடு அது. கண் வேறு. அது நம்மை பார்த்தால் எங்கேயோ பார்க்கிற மாதிரி இருக்கும். எங்கேயோ பார்க்கிறாள் என்று நினைத்தால் நம்மைத்தான் பார்த்துக் கொண்டிருக்கும். சௌமிய நாராயணன் இருக்கும் வரை அவளை யார் தலையிலாவது கட்டிவிட நினைத்து முடியவில்லை. அவளைக் கட்டிக் கொள்பவன் தலையில்லாமல், குறைந்தபட்சம் தலையில் மூளை இல்லாமல் இருப்பான், என நினைத்துக் கொள்வான் நஞ்சு.

சௌமிய நாராயணன் இறந்தபோது அவனிடம் தான் இறப்பு சான்றிதழ் கேட்டு பேரம்பேசி வாங்கிப் போனார்கள். சார் என்பதால் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. வேறு யாருக்குமே பேரம் எல்லாம் எடுபடாது. சாரின் சாவுக்கு அவன் போயிருந்தான். அவர் பெண் ராஜம் ஆம்பளைக் குரலில் அழுததைப் பார்த்து பொம்பளைகளே முகத்தைக் குனிந்துகொண்டு சிரித்தார்கள்.

சாரின் அம்மா இப்போது படுத்த படுக்கை. எங்கேயோ கால் இடறி விழுந்து மூளையில் எக்கு தப்பான அடி. எப்பவும் தானறியாமல் எதாவது பிதற்றிக் கொண்டு கிடந்தாள். திடீர் திடீரென்று காலமே அவளிடம் தடம் புரண்டு முன்பின் குழப்பியது. “சௌமி உயிர் பிழைச்சதே பெரும் பாடாப் போச்சு” என்பாள் திடீரென்று. அவர் செத்துப் போயே ஒரு வருஷம் ஆச்சு. “பொம்மனாட்டிக்கு என்ன இருந்தாலும் இம்புட்டு வாய் கூடாது” என்றாள் ஒருதரம். யாரைச் சொல்கிறாள் தெரியவில்லை. அவளுக்கே அது பொருந்தும்.

பாட்டிக்கு உதவி என்று ராஜம்தான் கூடவே இருந்தது. நஞ்சு இரவு ஒன்பது மணிக்குமேல் கிளினிக்கை மூடிவிட்டு பாட்டியைப் பார்க்க வந்தால் பரபரப்புடன் எழுந்து  நிற்பாள். அவனை நேருக்கு நேர் பார்க்கவே அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இத்தனை பொறுமையா ஒரு வயசான மனுஷியைப் பார்த்துக் கொள்கிறாள் அவள். இதைப்போல பெண் அவனுக்கு எத்தனை வலைவீசித் தேடினாலும் கிடைக்காது… என அவளே தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம். அது அவனுக்குத் தெரியாது. தெரிந்தால் அப்பவே தன் பாக்கெட்டில் ‘டெத் சர்ட்டிபிகேட்’ எழுதி வைத்துக்கொண்டு அவன் செத்து விடுவான்.

சில நாட்கள் பாட்டி எதுவும் நடவாத மாதிரி முழுத் தெளிவாகவும் இருப்பாள். எழுந்து உட்கார முடியாது. தலை கிர்ரிடும். படுத்தபடி பேசுவாள். “ஓ வயசு எனக்கு இருக்கும்போது இவளே. உப்பிலின்னு ஒருத்தன். கோவில் மடப்பள்ளி சேவகம் அவனுக்கு. மத்த நேரம் நல்லா டீக்கா டிரஸ் பண்ணிப்பன். அத்தர் போட்டுப்பன்… ஒருநா என்னாச்சின்னா…” என்று முடிக்குமுன் பாட்டிக்கு பொக்கைவாய் நிறையச் சிரிப்பு. தொண்ணூறு வயசுக் கிழவி. அவளுக்கு ஒரு காதல். இதைப் பற்றி இப்போது ஒரு வியாக்கியானம். அதற்கு இப்ப ஒரு சிரிப்பு வேறு.

கோவில் மடப்பள்ளி பரிசாரகனுக்கு டாக்டர் எத்தனையோ மேல் என்றுதான் தோன்றியது ராஜத்துக்கு. மற்றபடி பாட்டியின் கதை அவளுக்கு ரசிக்கவில்லை. நேற்றைக்குக் கோவிலுக்குப் போயிருந்தாள் ராஜம். அங்கே திடுதிப்பென்று எதிரே பார்த்தால்… யார் தெரியுமா? சுப்புலெட்சுமி மாமி. யார் அது? நஞ்சுவோட அம்மாவாக்கும். வெட்கம் அப்படி பிடுங்கித் தின்றது. சுவாமியே பார்க்காமல் திரும்பி ஓடி வந்துவிட்டாள் ராஜம்.

பாட்டியின் நிலைமை பொழுதுக்கு ஒரு தினுசாய் இருந்தது. ஒவ்வொரு நாளில் ஜுரம் ஆளையே நடுக்கும். ”குளிர்றது குளிர்றது” என்று இருக்கிற அத்தனை துணியையும் போர்த்திக் கொண்டு கிடப்பாள். சாவு பயம் அவளுக்கு இருந்தது. இத்தனை வயதுக்குப் பிறகு அதுவும் இத்தனை சிரமப்பட்டு உயிர் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாள் தெரியவில்லை. “ஆச்சி. நம்ம ராஜத்தோட கல்யாணத்தைப் பார்த்துட்டா, அதுவரைக்கும் எனக்கு உசிர் இருந்தாப் போதுண்டி” என்பாள்.

எட்டில் சனி அவள் ஜாதகத்தில். லேசில் உயிர் போகாது. அவள் சாகப் போவதும் இல்லை. ராஜத்துக்குக் கல்யாணம் நடக்கப் போவதும் இல்லை, என்று பேசிக் கொண்டார்கள் ஊரில். தினசரி என்று இல்லாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து பார்த்துவிட்டுப் போனான் நஞ்சு. தினசரி அவனுக்கு ஃபீஸ் கொடுக்க ராஜத்தின் அம்மாவுக்குக் கட்டுப்படி ஆகவில்லை. அவன் வராத நாள் எல்லாம் பிறவா நாளே, என்று இருந்தது ராஜத்துக்கு. சில நேரம் அம்மா இல்லாமல் இருந்தால் அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வந்து நாணத்துடன் கொடுப்பாள். இவ எதுக்கு திடீர்னு நெளியறா?.. என்று தோன்றும். காபி படு மோசமாய் இருக்கும்.

சில சமயம் பாட்டிக்கு ரொம்ப உடம்பு மூச்சிழுத்து சிரமப் படுத்தினால், யாராவது வந்து சொல்வார்கள். நஞ்சு கிளம்பிப் போய்ப் பார்ப்பான். ஒவ்வொரு தடவையும் அவனே, பாட்டி காலும் ஆயிட்டது, என்று எதிர்பார்ப்புடன் சைக்கிளில் ஏறிப் போவான். ஒரு இஞ்ஜெக்ஷன் போட்டுவிட்டு “பாக்கலாம். நம்ம கைல என்ன இருக்கு?” என்றான் ராஜத்தின் அம்மாவிடம். “அப்ப ஃபீஸ் வேணான்றியா?” என்றாள் மாமி. அவன் பதில் சொல்லவில்ல. அப்டியே ஆயிரம் ஐந்நூறுன்னு அள்ளிக் குடுத்திட்டாப்லதான் சலிச்சிக்கறது… என நினைத்தபடியே பிரமிட் பெட்டியை மூடினான் நஞ்சு.

“உன் வீட்டுக்குள்ள நுழைவேனா பார்” என்று மெல்ல முனகிக் கொண்டிருந்தாள் பாட்டி.  திடீர் திடீரென்று ஒரு காலப் பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருந்தாள். அவள் உதடுகள் துடித்தன. குடிக்கத் தண்ணி வேணுமா தெரியவில்லை. நஞ்சு அவள் பேசுவதைக் கேட்கக் குனிந்தான். “நஞ்சு, எங்க ர்ரா… ராஜத்தைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் பாட்டி. பக்கத்தில் நின்றிருந்த ராஜத்துக்கும் அது கேட்டு, அவளுக்கு சிலிர்த்தது. அவள் அம்மாவுக்கும் அது கேட்டிருந்தது. சிறு புன்னகையுடன் அம்மாக்காரி அவன் முகத்தைப் பார்த்தாள்.

“சுய நினைவே இல்லாம பாட்டி என்னென்னவோ உளர்றா…” என்றபடி வெளியே போனான் நஞ்சு.

ல்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.)  தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் கொள்வான். உங்களுக்கு மருந்தகம் வரை போற வேலை மிச்சம்தானே? பல்துறை வித்தகனாக அவன் இருந்தாலும் முதல் பார்வைக்கு அவனை “கம்பவுண்டரா?” என்று கேட்டார்கள் வந்தவர்கள். அத்தனைக்கு மோசமில்லை என நினைத்தவர்கள் கூட அவனிடமே “டாக்டர் இல்லையா?” என்று கேட்டார்கள்.

  • • •
Series Navigationதெளிந்தது
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *