செயப்பாட்டுவினை

This entry is part 1 of 8 in the series 28 ஆகஸ்ட் 2022

 

 

எஸ்.சங்கரநாராயணன்

 

“ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”

            “எப்ப வர்றது?”

            “வர்ற சனிக்கிழமை வாங்க. நாங்க அங்கதான் இருப்பம்… ஒருத்தருக்கு பூஜை இருக்கு.”

ஊருக்கு ஒதுக்குப்புறம். காற்று கிளம்பும்தோறும் ஒரு சாக்கடை நாற்றம் தூக்கலாய் வந்தது. ஓடை வற்றி இப்போது சாக்கடை. கடைசி பஸ். காலியாக இருந்தது. அங்கே கேட்டு இறங்கும்போது கண்டக்டரே ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

இருட்டில் ஆணியடித்தாற் போல விர்ர் என்று ஒரு விசில். பஸ் அவனை இறக்கி விட்டுவிட்டு புகையைத் துப்பியபடி கிளம்பிப் போனதும் ஒரு அதிதத் தனிமை ராஜேந்திரனைத் தாக்கியது. கிணற்றுக்குள் அவனை இறக்கி விட்டாற் போல திகைப்பாகி விட்டது. அதுவரை அவன்கூட நாலைந்து பயணிகள் தூங்கி வழிந்தபடி அந்த பஸ்சில் துணை இருந்தார்கள். வெளியிருட்டு ஒரு குகை போல இருந்தது. அதைத் துளையிட்டபடி பஸ் போய்க் கொண்டிருந்தது. இப்போது யாருமே எதுவுமே அவன்கூட இல்லை. அவர்களை, அவற்றை பின்பக்கம் இருந்து கண்ணைப் பொத்தி யாரோ இழுத்து அமுக்கி அப்புறப் படுத்தி விட்டார்களா? இருட்பெருவெளி. தான் எங்கே யிருக்கிறோம் என்று தனக்கே தெரியாத பெருவெளி. எதுவுமே அற்ற இந்த இருப்பை எப்படிச் சொல்வது?

உடம்பெல்லாம் அந்தக் கரு மைப் பிசுபிசுப்பு. சிறிது அரிப்பெடுத்தது. அமாவாசை இரவு. இந்தமாதிரி காரியங்களுக்கு அமாவாசையைத்தான் தேர்வு செய்கிறார்கள். இருள் மொத்தக் குத்தகை எடுத்த நாள். இரவு. வானத்தில் இருந்து பூமிக்கு ஒரு சுவர் கட்டி அதைக் கரிபூசி நிற்க வைத்தாற் போல. முட்டிக் கொள்வோமோ என்று பயம் தருகிற இருட்டுக் கசம். எதற்கும் உத்திரவாதம் இல்லை. எதுவும் நடக்கலாம்… என்கிற திகிலைத் தருகிற தினம்.

பயம். அவன் இதயத் துடிப்பு அவனுக்கே கேட்டது. இங்கிருந்து வழி சொல்லி யிருந்தார்கள். வழி தெரியாத இருளில் வழி. உண்மையில் பயம் என்பது பயம் அல்ல. தப்பு செய்கிறோமோ என்ற யோசனை பயமாய் மறிக்கிறது. தப்பு என்று தெரிந்தே செய்கிற தப்பு. மனசாட்சி. அதுதான் பயம். ஆனால்… அவனுக்கு வேறுவழி தெரியவில்லை.

சென்னகேசவலுவை வேறு எப்படியும் அவனால் ஜெயிக்க முடியாது. ஆள்பலம் பணபலம் மிக்கவன். அவன் பக்கத்தில் எப்பவுமே ஐந்தாறு எடுபிடிகள் வைத்திருந்தான். சென்னகேவலுவை யார் பார்க்க வந்தாலும் வாசலில் காவலுக்கு நிற்கிற ஆட்களிடம் சொல்லிவிட வேண்டும். தவிர வாசலில் கட்டிக் கிடக்கும் ராஜபாளையம் நாய் ஒன்று. சதா நாக்கை வெளியே நீட்டி ஆஃப் செய்யாத லாரி போல இருந்த இடத்தில் இருந்தே சிறிது ஆடிக் கொண்டிருக்கும். ஆள் உள்ளேபோய்ச் சொல்லி அவர் உத்தரவு தந்தால் போய்ப் பார்க்க அழைத்துப் போவார்கள்.

அது ஒரு பந்தா. எதிராளியை எல்லையிலேயே நிறுத்தி மரியாதை வாங்கிக் கொள்வது. எதிராளியை சிறு பயத்துடன் பணியச் செய்வது. அந்தக் கால ராஜாக்களின் பாணி இது. பெரும் சபையில் அமைச்சர் புடைசூழ அமர்ந்துகொண்டு பொதுஜனங்களைச் சந்தித்துக் குறை கேட்பது. பிரச்னையைச் சொல்லும்போதே “எசமான்…” என நெகிழ்ந்து கைகூப்பி அரசனிடம் குறைகளை விண்ணப்பம் வைக்கச் செய்கிற உத்தி அது.

அது அவன் வீடு. சென்னகேசவலுவின் கோட்டை. அவனது ராஜ்ஜியம். உள்ளே தனியறையில் அவன் மனைவி. பென்சிலம்மா. கருகருவென்ற பாதி எரிந்த கொள்ளிக்கட்டையின் பளபளப்பு. கரிக்காரி. கொழுகொழுவென்று பசுபோல இருப்பாள். சிறிய பூனைக் கண்களில் பழுப்பு காட்டும். மின்மினிப் பூச்சிகள் போன்ற படபடக்கும் கண்கள். அதுவே ஆளைக் கிறங்கடிக்கும். தோண்டியெடுத்த கிழங்கு.

பென்சிலம்மா சென்னகேசவலுவின் மனைவி அல்ல. ஆந்திராவில் ஒரு கட்டப் பஞ்சாயத்தில் நிலம் ஒன்றை வளைத்தான் சென்னகேசவலு. அதில் மனம் உடைந்து அவன் வயலின் விவசாயி டில்லிபாபு தற்கொலை செய்து  கொண்டான். ஊரில் அவனது சாவுக்கு தர்ணாப் போராட்டம் எல்லாம் நடந்தது. என்றாலும் காவல் துறையில் சென்னகேவலுவுக்கு ஆட்கள் இருந்தார்கள். தப்பித்து விட்டான்.

பென்சிலம்மா டில்லிபாபுவின் மனைவி. காதிலும் மூக்கிலும் திரளாக நகை நட்டு ஆபரணத்துடன் தற்போது அவள் பொலிவாகத்தான் இருக்கிறாள். டில்லிபாபு இறந்தது அவளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு என்றுகூடச் சொல்லலாம்.

தரை ஒருசீராய் இல்லை. திடுக் திடுக்கென்று ஏற்ற இறக்கமாய்த் தடுமாறியது. டார்ச் எடுத்து வந்திருக்கலாம் என்று நினைத்தான் ராஜேந்திரன். டார்ச் இருந்தாலும் இந்த மகா இருட்டில் அதன் வெளிச்சம் கடைசி இட்லி போல தேய்ந்து காணும். இருளை அது அதிகப் படுத்திக் காட்டிவிடும். காட்டுக்குள் முயல்வேட்டை என்று சில சமயம் ராஜேந்திரன் போயிருக்கிறான். அப்போது எட்டுசெல் பேட்டரி எடுத்துப் போவார்கள். அதை ஏற்றி விளக்கு அடித்தால் (ஒரு கெட்ட வார்த்தை.) பத்து முப்பது அடிக்கு வெளிச்சம் பீரிட்டு அடிக்கும், அடக்கி வெச்ச ஒண்ணுக்கு பொல.

இருந்த பயத்துக்கும் குளிருக்கும் லேசாய் நடுக்கம் எடுத்தது. தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். எப்ப அவன் வெளியே கிளம்பினாலும் தனியே போவது இல்லை. அவன்கூட சிகாமணி வருவான். முயல் பிடிப்பதில் சூரன். காட்டில் அந்த டார்ச் வெளிச்சத்தில் விறுவிறுவென்று நடப்பான். பொந்துகளில் வெளிச்சத்தை வெள்ளம் போலப் பாய்ச்ச வேண்டும். முயல்கள் அலமலந்து துள்ளி வெளியே வந்து ஓடும். லபக்கென அதைக் காதைப் பிடித்துத் தூக்க வேண்டும். முயலின் ஓட்டத்துக்கு தரையில் துழாவ முள் உரசி கை கால் எல்லாம் இரத்தம் வழிந்தாலும் முயல்கறி தனி ருசிதான்.

சென்னகேசவலு அளவு இல்லாவிட்டாலும் அவனுக்கும் ஒரு கோஷ்டி இருந்தது. பச்சைமுத்து, கருணாகரன் என்று அவர்கள் ஐந்தாறு பேர். ஒருத்தருக்கு ஒரு பிரச்சினை என்றால் மற்றவர்கள் உதவிக்கு ஓடி வருவார்கள். அவனவன் எல்லை அளவில் காவல்துறையிலும், பிரபலஸ்த வட்டாரத்திலும் ஆளுமை வைத்திருந்தார்கள். எல்லாம் துட்டுச் செலவுதான். பிடிக்காத ஒராளை மாட்டிவிட ஒரு ரேட். வேண்டப்பட்டவனை வெளியே கொண்டுவர ஒரு ரேட்.

சென்னகேசவலு திடீரென்று அந்த வட்டாரத்தில் கோலோச்ச ஆரம்பித்தான். அதுவரை அந்தப் பகுதியில் தர்பார் நடத்தி வந்த ராமசுப்புவை சென்னகேசவலு கோஷ்டி மார்க்கெட்டில் வைத்துப் போட்டுத் தள்ளியது. எப்பவுமே ராமசுப்பு உஷாராய் இருப்பான். இடுப்பு மறைப்பில் உறைக்குள் கத்தி வைத்திருப்பான். அவனுடன் கூடவே இருந்த வேணுக்குட்டிதான் அவனைக் காட்டிக்கொடுத்தது, துப்பு கொடுத்தது என்று கேள்விப்பட்டான் ராஜேந்திரன். இல்லாவிட்டாலும் எதிரி என்று வந்துவிட்டால் எதிரியைக் கண்காணிக்கவும், பின் தொடரவும், வந்து தகவல் சொல்லவும் சென்னகேசவலுவுக்கு ஆள் அம்பு படை இருந்தது.

சந்தையின் நடுவே குப்பை கொட்டிக் கிடந்தது. குப்பையோடு குப்பையாய்க் குத்துப்பட்டுக் கிடந்தான் ராமசுப்பு. போலிஸ் வந்து பார்க்கவே அரைநாள் ஆகிவிட்டது. ஆவேசமாய் பத்து இருபது குத்து கத்தியில் வாங்கி யிருந்தான் ராமசுப்பு. அந்தப் பகுதியின் பதட்டம் அடங்கவே அரைநாள் எடுக்கும் என போலிஸ் பயந்து கிடந்தார்கள் போல.

ராமசுப்பு செத்து ஒருவாரத்தில் தானே தன்னை அறிவித்துக்கொண்டு பதவிக்கு வந்தான் சென்னகேசவலு. சந்தையில் அதுவரை ராமசுப்புவுக்கு மாமூல் கட்டிவந்த சிறுகடைக் காரர்கள் இப்போது சென்னகேசவலுவுக்கு பயந்தார்கள். தன் வலிமையைக் காட்ட என்றேதான் அவன் அத்தனை பெரிய வளாகத்தில் எல்லாரும் பார்க்க ராமசுப்புவைப் போட்டுத் தள்ளியது.

அடர்த்தியான முள்ளுச் செடிகளுக்குள் கிளைகளை ஒதுக்கி ஒதுக்கிப் போவதாய் இருந்தது. சாட்டை சாட்டையாய் முள்ளுக் காய்கள். சில சமயம் பாம்புகளே அப்படி தொங்கிக் கிடக்கும். கிளையை ஒதுக்குகிறேன் என்று பாம்பைப் பிடித்துவிட்டு கையை உதறும்படி ஆகிவிடும். கற்கள் வகைதொகை யில்லாமல் காலில் உறுத்தின. பகலிலேயே அந்த இடத்தில் அதிக நடமாட்டம் இராது போலிருக்கிறது. முள்ளு ஒதுக்கத்தில் சிறிது குட்டையாய்த் தண்ணீர். யாராவது வந்தால் வெளிக்கிருந்துவிட்டுப் போவார்கள். அத்தனை பொட்டல் காட்டில் வழி என்று தனியே சொல்ல என்ன இருக்கிறது. கரம்பை கரம்பையாய் மண்ணே கெட்டித்துக் கிடந்தது. புண்ணாக்குக் கட்டிகள் போல.

ராமசுப்புவோ சென்னகேசவலுவோ போல ராஜேந்திரன் அத்தனை பெரிய ஆள் கிடையாது. அவனும் அவன் சகாக்களும் பேச்சுவார்த்தை என்றாலே முதல் கட்டமாக அதிரடி காட்டுவார்கள். அதிலேயே பாதிப்பேர் பயந்துரும். அதைமீறி எதிராள் விரைப்பு காட்டினால் அவ்வளவுதான். நம்மாள் ஜகா வாங்கிரும். பணத்தாசை. அதைவிட உயிராசை பெரியது.

சென்னகேசவலுவுடன் காளியப்பன் விரோதம் செய்து கொண்டபோது ஒரு மோசமான நிகழ்ச்சி நடந்தது. காளியப்பனுக்கு நாலைந்து பசு மாடுகளும், இரண்டு எருமை மாடுகளும் இருந்தன. இருவருக்கும் இடையே என்ன தகராறு தெரியவில்லை. என்ன பெரிய காரணம். ரெண்டே காரணம். துட்டு தகராறு. நீ பெரியாளா நான் பெரியாளா என்ற அதிகார போதை.  சம்பவத்தன்று மாலை. காளியப்பனின் பசுமாடு ஒன்று உயிரோடு தோலுரிக்கப் பட்டு… சதையும் ரத்தப் பீரிடலுமாய்த் தள்ளாடி “..ம்மா…” என்ற கூக்குரலுடன் காளியப்பனின் வீட்டு வாசலுக்கு வந்து அவன் கண்முன்னே விழுந்து துடிதுடித்துச் செத்துப்போனது. தோல் இல்லாத உடம்பு வெயிலில் என்ன பாடு பட்டிருக்கும்.

முதலில் ராமசுப்பு கொலை. பின்னர் காளியப்பனின் பசுமாட்டின் கோர மரணம் என்று மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தான் சென்னகேசவலு. அடுத்த சில நாட்கள் மொத்த ஊருமே தொண்டை யடைத்துக் கிடந்தது. அவனுக்குக் கோபம் வரும்படி எதுவும் நடந்தாலே அடுத்து என்ன விபரீதம் ஊரில் நடக்குமோ என்று பயமாய் இருந்தது. அவனுக்கு இருக்கிற வெறிக்கு யாரை எப்படி பழி தீர்ப்பான் என்றே சொல்ல முடியவில்லை.

என்றாலும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சென்னசேசவலுவுடன் உரசல் நேர்ந்து விட்டது. ராஜந்திரனுக்கு பெரிய பிசினெஸ் எல்லாம் இல்லை. வேலப்பன் கரடு தாண்டி இராத்திரியானால் சாராயம் விற்றுவந்தான் அவன். அது உள்ளூர் போலிசுக்கும் தெரியும். மாதம் ஒரு கேஸ் போடுவார்கள். தனியே அவர்களுக்கு வாரா வாரம் படியளக்க வேண்டும். ஊரில் அது பெரிய விவகாரம் ஆகி போலிஸ் அதிகாரி மாற்றப் பட்டாலும் நிலைமையில் மாற்றம் இராது. புதுசாய் மாற்றலாகி வரும் அதிகாரியையும் சரிக்கட்டி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த விருத்திகுளம் சரகத்துக்கு மாற்றலாகி வரவே ரொம்ப டிமாண்ட் இருந்தது.

ராஜேந்திரனின் சம்பாத்தியம் அவனுக்கு, சென்னகேசவலுவுக்கு உறுத்தி விட்டது. இதுநாள் வரை, அதாவது ராமசுப்பு காலம் வரை ஓரளவு ராமசுப்புவின் நிழலில் தப்பித்து வந்தான். ராமசுப்புவுக்காக இவன் ஆட்கள், செய்யாத குற்றம் என்றாலும் ஜெயிலுக்குப் போய் வந்தார்கள். அந்தப் பக்கங்களிலேயே போலிஸ் கேஸ் என்றால் ஒரு ஆளைப் பிடித்து குற்றத்தை ஒத்துக் கொள்ளச் சொல்லி ஏற்பாடு, போலிசுக்கும் இவர்களுக்கும் இருந்தது. ஊரில் போலிஸ் இல்லை என்றால் குற்றங்களும் குறைந்துவிடும், என்கிற காலம் இது.

மருதப்பன் சென்னகேசவலுவின் ஆள். ஒருநாள் அவனைத் தேடி வந்தான். “என்ன மருதா?” என்று ராஜேந்திரன் விசாரித்தாலும் உள்ளூற எதோ சரியில்லை என்று அவனுக்கு உதறல் எடுத்தது. “ஐயா உன்னியக் கூட்டியாரச் சொன்னாரு…” என்றான் மருதன். “என்ன விஷயம் மருதா?” என்று சாதாரணம் போலக் கேட்டான் ராஜேந்திரன். அதற்கே அவனுக்குக் கோபம் வந்து விட்டது. சண்டியர் என்று ஒருத்தன் முளைத்தால் சண்டியரின் எடுபிடி கூட விரைத்துக் கொள்கிறான். “ஏல நீ பெரிய மயிராண்டியா? வான்னா வர மாட்டியா? உன்னையக் கட்டியிழுத்துக் கூட்டிப் போவணுமா?” என்றான் மருதன்.

தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. ஒரு மண்டபம். பாழடைந்த காளி கோயில் அங்கே இருக்கலாம். அப்படித்தான் சொல்லி யிருந்தார்கள். அதன்முன் வளாகத்தில். விளக்குகள் இல்லை. அந்தப் பகுதியில் தெருவே கிடையாது. மின் விளக்கு எதுவும் இல்லை. ஒரு சவுக்குக் கம்பில் பெட்ரோமாக்ஸ் விளக்கு மாத்திரம் மாட்டி வைத்திருந்தது. அதன் மேன்ட்டில் குழந்தையின் விதைக்கொட்டை போல வெள்ளை வெளேரென்று எரிந்தது.

சென்னகேசவலு வீடு பெரியது. வெளியே இரண்டாள் உயரத்துக்குக் கதவு. மூடிக் கிடக்கும். சின்ன சதுரம் போல கதவில் இடைவெளி இருக்கும். யாராவது வந்தால் அந்தச் சதுரத்தின் வழியாக “என்ன வேண்டும்?” என்று கேட்பார்கள். அதற்குள் அந்த ராஜபாளையம் நாய் சங்கிலிக்கு எகிறிக் குரைக்கும் சத்தம் கேட்கும். நாயைப் பார்க்காமலேயே அதன் ஆக்ரோஷம் பதற வைக்கும்.

உள்ளே போனால் சென்னகேசவலு உட்கார்ந்திருந்தான். எதிரே நாற்காலி ஒன்று கிடந்தது. ஆனால் அவனுக்கு சரிசமமாக யாரும் அவனுடன் உட்கார முடியாது. காலி நாற்காலி, அது ஒரு பந்தா. முடிந்தவரை விரைப்பு காட்டலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியவில்லை.

அவனை முகத்துக்கு நேராகப் பார்த்தான் சென்னகேசவலு. “வேட்டிய இறக்கி விடுறா வெண்ணே…” என்றான் மருதன். அருகில் நின்றிருந்தான். “கூப்ட்டா எதுக்கு என்னன்னு கேட்டியாமே?” என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டான் சென்னகேசவலு. ராஜேந்திரன் பதில் சொல்லவில்லை. அதற்குள் மருதன் கிட்ட வந்து அவனை ஒரு அறை விட்டான். “பதில சொல்லுடா நாயே…” இன்னொரு அறை.

எதற்குக் கூப்பிடுகிறார்கள். எதற்கு அடிக்கிறார்கள்… எதுவுமே விளங்கவில்லை.

“சாராயத்துல எவ்ளோ வருமானம் வருது?”

பதில் சொல்லாமல் நின்றான். மருதன் கிட்டேநெருங்கி வருமுன் “எங்க பொழப்பே அதுதா,ன்…” என்றான் ராஜேந்திரன்.

“இருக்கட்டும்… இத்தன்னனாள் ராமசுப்பு கிட்ட எவ்ளோ பணம் குடுத்தே…”

“பணம்னு இல்ல….”

“பின்னே?”

“அவனுக்கு போலிஸ் கேஸ் வந்தா நாங்க ஏத்துக்குவம்.”

“அவ்ளதானா?”

இதையெல்லாம் இவனிடம் ஏன் பணிந்து நின்று சொல்லக் கொண்டிருக்கிறோம்? அதுவே ராஜேந்திரனுக்குப் பிடிக்கவில்லை.

“அது பழைய கதை…”

ராஜேந்திரன் சென்னகேசவலுவைப் பார்த்தான்.

“வாரா வாரம் திங்கட்கிழமையாச்சின்னா பத்தாயிரம் ரூபா வந்திறணும்.”

பதில் சொல்லாமல் நின்றான் ராஜேந்திரன்.

“என்ன பாக்கறே?”

“போலிசுக்கு வேற… இதெல்லாம் தாண்டி இதுல என்ன மீரும்?” என்றான் ராஜேந்திரன்.

“அது உன் பிரச்சினை…” என்று சிரித்தான் சென்னகேசவலு. அவன் பேச்சில் தெலுங்கே தூக்கலாய் இருந்தது.

திடீரென்று பேச அலுத்தா மாதிரி “நீ போகலாம். வர்ற திங்கட்கிழமை… ஞாபகம் இருக்கணும். நான் திருப்பித் திருப்பி பேசிட்டிருக்க மாட்டேன். விளங்கிச்சா?”

அதை ஒத்துக் கொள்ளாமலும் மறுக்காமலும் அப்படியே நின்றான். ‘‘மருதா இவனை அழச்சிட்டுப் போ. நல்ல புத்தி சொல்லி யனுப்பு…” கையை உதறி போகலாம் என்று சைகை காட்டினான் சென்னகேசவலு.

அருவருப்பாய் அவமானமாய் இருந்தது. இவனிடம் பணிந்து போவதா?… அந்த நினைப்பே குமட்டியது. அதுவும் அவன் முன்னால் மருதன் அவனை ரெண்டு அறை அறைந்திருக்கிறான். வேறு நேரமாக இருந்தால் என்னைத் தொட்டிருக்க முடியுமா?

வீட்டிற்கு வந்தும்கூட உள்ளே நெடுநேரம் குமுறிக் கொண்டிருந்தது. இதற்கு அவனால் ஒரு முடிவு பிறக்கட்டும். நேரடியாக அவனால் சென்னகேசவலுவுடன் மோத முடியாது…

பூசாரி சிவப்பு வேட்டி கட்டி யிருந்தார். அவர் நெற்றியிலும் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருந்தார். நெஞ்சு நிறைய மயிர்ப் புதர். அவருக்கு உதவியாக ஒரு பெண் இருந்தாள். அந்த ராத்திரியில் அந்த இடத்தில் ஒரு பெண் என்பது விசித்திரமாக இருந்தது. அவள்தான் அவருக்கு பூஜையில் உதவிகள் செய்வது என்று தெரிந்தது. அந்த உதவிக்காரப் பெண் தவிர இன்னொருத்தியும் இருந்ததை கவனித்தான்.

பெட்ரோமாக்ஸ் விளக்கு தஸ் புஸ்சென்று உளறிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு தம்பதி அவரிடம் காரியமாக வந்திருந்தார்கள். மண்ணில் பாய் விரித்து அவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான் ராஜேந்திரன். தலையில் பூ வைத்து அந்த அம்மாள் சுத்த பத்தமாக இருந்தாள். அந்நேரத்துக்குப் பொருத்தமாய் இல்லை அது.

ராஜேந்திரன் போய் அவர் பக்கமாக நின்றான். “வாங்க… நீங்க?…” என்றார் பூசாரி. “போன் பண்ணினேனே?” என்றான். “ஓ…” என்றார் பூசாரி.

அவர் எதிரே பூ வெத்திலை பாக்கு பழம் இரு மாலைகள் என்று சாமான்கள். எதிரே உக்கிரமாய் ஒரு காளி சிலை இருந்தது. அதன் சூலமும் நாக்கு வெளித்தள்ளிய கோலமும் அந்த இருளில் பயத்தைத் தந்தது. தனியே அதைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்துவிட நேரலாம். அந்த இடத்தின் கலவரத்தை அதிகப் படுத்துகிற மாதிரி அங்கே ஒரு உடுக்கை இருந்தது.

“பேப்பர்ல உங்க விளம்பரம் பார்த்தேன்…” என்றான் ராஜேந்திரன்.

“ம்” என அவர் மீசையைத் தடவிக் கொண்டார். திடீரென்று சுதாரித்தாற் போல துண்டால் தன் முதுகைத் தட்டிக் கொண்டார்.

“என்ன பண்றீங்க?”

அவர் புன்னகைத்தார். “குட்டிச்சாத்தன்கள் கூட பழகக் கூடாது ஐயா. நாங்க இதே தொழிலா வந்துட்டம். அதுங்க கெட்ட காரியம் பண்ண உடனே சம்மதிக்காது. அதை அதட்டி மிரட்டி வேலை வாங்கணும்…” என்றவர் பிறகு சொன்னார். “சதா என்னை இப்பிடிப் பண்ணிட்டியே பண்ணிட்டியேன்னு முதுகுல வந்து வந்து தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்கும்…” என்றார். பயமாய் இருந்தது.

“எங்களுக்கு ராத்திரி கிடையாது. பகல் கிடையாது. நிம்மதியா தூங்க முடியாது. அதுங்க எங்களைத் தூங்க விடாது…”

குழந்தைகள் விளையாடும் அளவில் சிரிய துணி பொம்மை ஒன்று மூக்கு முகம் வரைந்து அங்கே சாத்தி வைக்கப் பட்டிருந்தது. அதுதான் குட்டிச் சாத்தானை ஏவுகிற பொம்மை என நினைத்தான் ராஜேந்திரன். படபடப்பாய் இருந்தது. திரும்பிப் போய்விடலாமா என்றுகூட நினைத்தான். அந்த இடமே துர் காற்று நிரம்பிய இடம். இந்த மகா இருளில் இங்கே அவன்… வந்திருக்க வேண்டாமோ என நினைத்தான்.

ஆனால், சென்னகேசவலுவிடம் பட்ட அவமானம் அவனைக் குமுறச் செய்திருந்தது. அவனை ஆள்பலத்தால் வெல்ல நம்மால் ஆகாது. அவனுக்கு எப்படியும் ஒரு முடிவு கட்டியாக வேண்டும்… வேறு வழியில்லை. செய்தித்தாளில் தற்செயலாக அந்த விளம்பரத்தைப் பார்த்தான். ஒரே வரிதான் இருந்தது. “குட்டிச்ச்த்தான்” என்று போட்டு ஒரு அலைபேசி எண். அவ்வளவுதான். உடனே பெசினான் அவன். ஆத்திரத்தில் கண் சிவந்து மனம் பொங்கப் பேசினான். கரகரப்பான குரல் அவனுக்கு பதில் சொன்னது. “சரி. நேர்ல வாங்க பேசலாம்…”

அந்த அமாவாசையில் அவருக்கு ஒரு பூஜை இருப்பதாகச் சொன்னார் பூசாரி. நேரம் நடு ராத்தரியை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் வருவதற்காக அவர் காத்திருந்ததாய்ச் சொன்னார் பூசாரி.

நட்டநடு சாமத்தில் ஒதுக்குப்பறத்தில் காளி சிலைக்கு பூஜை. தனியே வேறு வந்திருக்கிறேன்… அவனுக்கு லேசாய் நடுக்கம் எடுத்தது.

வந்திருந்த அந்த தம்பதிகளில் ஆம்பிளைக்கு ஒரு மாலையைப் போட்டார் பூசாரி. தான் ஒரு மாலையை அணிந்து கொண்டார். கண்ணை மூடி பிரார்த்தனை செய்தார். திடீரென்று “ஜெய்காளி, மகாகாளீய்…” என்று சத்தம் கொடுத்தார். அவர் வாய் என்னென்னவோ மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தது. உதவியாளாக இருந்த பெண்மணி உடுக்கையை அடிக்க ஆரம்பிக்கவும் ஒரு ஏக்க உருமல் உரும ஆரம்பித்தது உடுக்கை. ரும்ம் ரும்ம் என அதன் அதிர்வுகள் புலம்பல் போல அந்த இடத்தை நிரப்பியது.

மாலை அணிந்து கொண்டிருந்த அந்த நபர் தான் கொண்டு வந்திருந்த ஒரு துண்டுத் துணியை அந்த பொம்மைக்குச் சுற்றினான். அதில் கரு மையைத் தீற்றிவிட்டு திரும்பவும் “ஜெய்காளி… மகாகாளீய்…” என உருமினார் பூசாரி. சிறிது நேரம் அங்கே அமைதி… பூசாரி சிறிது முன்பின்னாக ஆடிக் கொண்டிருந்தார். அந்த பொம்மைக்கு ஒரு கை குங்குமத்தை எறிந்தபடி… “வா வா“ என்று யாரையோ கூப்பிட்டா மாதிரி இருந்தது. பொம்மையிடம் அசைவு இல்லை. அவர் விடுவதாக இல்லை. உடுக்கை உக்கிரமாக முழங்கிக் கொண்டிருந்தது. நாலைந்து முறை அந்த பொம்மையை குங்குமம் வீசி அதட்டிக் கொண்டிருந்தார் பூசாரி. பத்தாவது நிமிடம்… ராஜேந்திரன் பார்த்தான். அந்த பொம்மை அசைய ஆரம்பித்தது. துடிக்க ஆரம்பித்தது. அதைப் பார்க்கவே இவனுக்குப் பதறியது.

மாட்டேன் மாட்டேன்… என்கிறாப் போல பொம்மை இட வலமாகத் துடித்தது. பூசாரி அதை விடுகிறாப் போல இல்லை. தொடர்ந்து அதை அதட்டிக் கொண்டிருந்தார். இடைவிடாத உடுக்கையொலியின் பயங்கரம். பூசாரி முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தார். அந்த உடுக்கையை அவர் வாங்கி அடிக்க ஆரம்பித்தார். அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த பொம்மை சிறிது கிறங்கினாற் போல ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டது. அந்தச் சூழலே இப்போது மாறினாற் போல இருந்தது. ஒரு கெட்ட நாற்றம் எங்கும் நிறைந்ததை கவனித்தான் ராஜேந்திரன். செய்வினை வைக்க வந்த அந்த ஆள் கிட்டத்தட்ட மயங்கி யிருந்தான். அவன் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருக்கும்.

வா வா வா வா வா வா…

அந்த பொம்மை திடீரென்று தரைலயில் படுத்த நிலையில் இருந்து நெட்டுக்க நின்றது. ஹா… என்று பெரிதாய்ச் சிரித்தார் பூசாரி.

உன் வேலை என்ன்?

பொம்மை அப்படியே சிறிது ஆடியது.

எங்க போற…

பொம்மையின் தலை மாத்திரம் ஆடியது. தெரியும்… என்கிறாப்போல.

படாரென்று ஒரு வெடிச்சத்தம். எங்கேயிருந்து அத்தனை பெரிய சத்தம் வந்தது தெரியவில்லை. பூசாரி சிறிது பின்னே சரிந்தார். உடுக்கை அடிப்பதை அவர் நிறுத்தவே இல்லை. போ போ போ போ போ… என்று அவர் சத்தமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த பொம்மை அங்கேயிருந்து வானத்துக்கு எகிறியதை எல்லாரும் பார்த்தார்கள். பத்து இருபது அடி உயரம் எகிறி… கீழே உடம்பில் தெம்பே இல்லாமல் விழுந்தது பொம்மை.

ஹா ஹா… என்று சிரித்தார் பூசாரி. கத்திக் கத்தி அவர் தொண்டையே வறண்டிருந்தது. பூஜை சாமான்களுடன் இளநீர் வெட்டி வைத்திருந்ததை எடுத்து கடகடவென்று குடித்தார் பூசாரி.

கண்ணைத் துடைத்துக் கொண்டார். அவர்களைப் பார்த்தார். “யப்பா… என்ன அடம்…” என்றார். “என்ட்ட நடக்காது. நான் விடுவனா?” என்றார்.

கோரிக்கை வைத்தவன் கிட்டத்தட்ட மிரண்டுபோய் இருந்தான். அவன்கூட வந்த அந்தபெண் அழுதுகொண்டிருந்தாள். “நீ அழுவாதம்மா… எல்லாம் சரியாப் போச்சி. உன் தம்பி… இன்னும் ரெண்டே நாள்ல பக்க வாதம் வந்து…”

“சரி சரி… உங்க வாயால அதெல்லா சொல்ல வேண்டாம்..” என்றாள் அந்தப் பெண்.

“ஏவி விட்ருக்கேன். இனி இருக்கு அதோட ஆட்டம். நீங்க யாரும் அவன் வீட்டுப் பக்கம் போயி என்ன நடக்குது, ஏப்பிடி நடக்குதுன்னு வேவு பார்க்க வேணாம். எல்லாம் நடக்கிறபடி நடக்கும்…” என்றார். வந்தவனிடம் “அந்த மாலையைக் கழட்டி தலையைச் சுத்தி வீசி எறிஞ்சிருங்க” என்றார். வீட்டுக்குப் போனதும் உடனே குளிச்சிருங்க. நடந்தது எதையும் ஞாபகம் வெச்சிருக்க வேணாம். அதை நினைச்சா பயமாத்தான் இருக்கும்…” என்றவர் அவன் தந்த பணத்தை வாங்கி இடுப்பில் முடிந்து கொண்டார். “ஐயா எண்ணிக்கங்க..” என்றவனிடம் கையமர்த்தினார். “இருக்கட்டும். சரியா இருக்கும்.”

“இங்க வந்ததையோ இங்க நடந்ததையோ யாராண்டயும் மூச்சு விடப்டாது…” என்றார். “எல்லாத்தையும் காளி பாத்துப்பா. போய்ட்டு வாங்க” என்றார்.

அவர்கள் கிளம்பி இருளில் நடந்துபோனதைப் பார்த்தான் ராஜேந்திரன். பூசாரியிடம் அவனுக்கு நம்பிக்கை வந்தது. சென்னகேசவலுவின் கதையைச் சுருக்கமாகச் சொன்னான். அவன் ஆளே இருக்கக் கூடாது… என்று சொல்லும்போது மூளைக்குள் ரத்தமேறி படபடப்பானான்.

“ஆளையே காலி பண்ணணும்னா… செலவாகுமே தம்பி…”’

“எவ்ளவானாலும் பரவவாயில்லை” என்றவன் “எவ்ளவு ஆகும்?” என்றான்.

“ரெண்டு லட்சம்…”

“லட்சமா?”

..ச். வேணாம் விட்ருங்க. இதெல்லாம் நடக்காம இருக்கறது நல்லது,”

“இல்ல பரவால்ல. ஆனது ஆகட்டும்…” என்றான் ஆத்திரத்துடன்.

“நீங்க என்ன பண்றீங்க. அந்தாளோட துணி எதாச்சும் கொண்டு வரணும். அவனோட தலைமுடி, அவன் காலடி மண்ணு… எது கிடைச்சாலும் சேகரிச்சிக்கிட்டு வரணும்… முக்கியமா இதை நீங்க சேகரிக்கும்போது யார்கிட்டயும் பேசக்கூடாது. இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது…”

“அட்வான்சு” என்றார். ஒரு பத்தாயிரம் கையோடு கொண்டு வந்திருந்தான். “பத்தாதே தம்பி…” என்றபோது “காரியம் நடக்கும்போது மீதி குடுத்திறலாம்.”

“எப்ப வரீங்க?” என்று கேட்டார். “வர்ற சனிக்கிழமைக்குள்ள… அவன் போடற ஒரு துணி. தலைமுடி, காலடி மண்ணு… இதெல்லாம் எப்பிடியாவது ரெடி பண்ணிருவேன். பண்ணிட்டு தகவல் சொல்றேன்…”

திரும்பிப் போகும்போது உற்சாகமாய் இருந்தது. அந்த இருட்டு பயமாய் இல்லை. அடுத்த அமாவாசைக்குதான் பூஜை அவன் முறை. எல்லாம் நல்லபடியா முடிய வேண்டும். நான் பட்ட அவமானம், சென்னகேசவலுவிடம் இதுவரை மற்றவர்கள் படும் அவமானம்… இனி இருக்காது. எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன்…

ஓடைக்கரை தாண்டி மெய்ன் ரோடுக்கு வந்திருந்தான். ஓரம் போய் ஒண்ணுக்கு இருந்தான். அடுத்த பஸ் காலை ஆறு மணிக்குதான். அதுவரை இங்கேதான் இரவைக் கழிக்க வேண்டும். மரத்தடியில் காற்று சுகமாக வந்தது. அப்படியே தரையில் துண்டை விரித்துப் படுத்தான்.

பூசாரி காத்திருந்தார். சனிக்கிழமைக்குள் தகவல் தருவதாகச் சொல்லி யிருந்தான் ராஜேந்திரன். மனிதர்களுக்குள்தான் எத்தனை விரோதம், ஆத்திரம், பழி வாங்குதல்… தொடரும் வன்மம்…

சாத்தான்களுக்கு பூஜை போடுவதை பெரும்பாலும் யாரிடமும் அவர் பகிர்ந்து கொள்வது இல்லை. அவர் என்ன செய்கிறார், என்பதே யாருக்கும் தெரியாது. பகலில் அவர் ரொம்ப சாதுவாய் இருப்பார்..,. அடிக்கடி முதுகில் துண்டால் உதறிக் கொள்வார்.

தறச்யெலாக செய்தித்தாள் பார்த்தார் பூசாரி. முள்ளுப் புதரில் பிணம் என்று சிறு கட்டத்தில் செய்தி. அதை எப்படி அவர் கவனித்தார் அவருக்கே ஆச்சர்யம். அதைவிட அவர் எதிர்பாராத விஷயம் என்னவென்றால்… பிணத்தை அடையாளம் கண்டு பிடித்திருக்கிறார்கள். இறந்து கிடந்தவன் ராஜேந்திரன். வயது 48. கழுத்தறுத்துக் கொலை செய்யப் பட்டிருந்தான். இது குறித்து விருத்திகுளம் சரக போலிஸ் விசாரித்து வருகிறார்கள் என்றது செய்தி.

ஆக சென்னகேசவலு ராஜேந்திரனின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்து விட்டான் போல இருக்கிறது. அவன் முந்திக் கொண்டான், என நினைத்தார் பூசாரி.

அப்போது அலைபேசி அழைத்தது. எடுத்து அடுத்த வேலை பற்றிப் பேச ஆரம்பித்தார் பூசாரி.

  • ••

 

Series Navigationவியட்நாமின்,  சம்பா இந்து அரசு
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Comments

  1. Avatar
    இராய செல்லப்பா says:

    ஒருவனின் செய்வினை இன்னொருவரின் செயப்பாட்டு வினையாகிறது…. இதயம் பலவீனமானவர்கள் படிக்கலாமா என்று தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *