அழகியசிங்கர்
23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது. அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.
முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து கதைகள் எழுதுபவராக என்னால் ஊகிக்க முடிந்தது.
- வறுமை 2. சிறுவர்களைப் பற்றி எழுதுவது.
‘திரிபுரம்’ என்ற கதையைப் படிக்கும்போது பஞ்சத்தைப் பற்றிக் கதை எழுதியிருக்கிறார். பஞ்சம் பற்றி பொதுவாக அதிகமாகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். ஆனால் கு.அழகிரிசாமியின் கதை கோவில் பட்டியில் நடந்த பஞ்சத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கதையைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும்.
கதையின் ஆரம்பத்தைப் பாருங்கள்
‘பஞ்சம் வந்து விட்டது. பஞ்சம் வந்து விட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமல்லாமல், மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது ஒரு பஞ்சப் பிரதேசத்தை விட்டு அதை விடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்வார்கள். பட்டினிப் பட்டாளங்கள் என்ற நம்பிக்கையுடன் ஒரு சாலையில் எதிர் எதிர்த் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக் கழிவுகளில் ஒன்று.
‘தவிக்கவிடப்பட்ட மேதை’ என்ற தலைப்பில் ச.தமிழ்ச்செல்வன் 24.09.2022 அன்று இந்து தமிழ் திசை பத்திரிகையில் எழுதிய கட்டுரையைப் படிக்கும்போதுதான் திரிபுரம் கதையை ஞாபகப்படுத்தி எழுதியிருந்தார்.
திரிபுரம் கதையைப் படித்த அன்று இரவே எனக்குக் காய்ச்சல் கண்டு, மூன்று நாள் வைத்தியம் பார்த்துத்தான் சரியானேன் என்று எழுதியிருக்கிறார்.
ஒரு கதையைப் படித்தால் இப்படியெல்லாம் ஆகுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பாடமலில்லை.
கொரானா காலத்தில் அவருக்குத் திரும்பவும் திரிபுரம் கதை ஞாபகத்திற்கு வந்ததாக எழுதி இருக்கிறார்.
கு.அழகிரிசாமியைத் தவிர வேறு யாராவது பஞ்சத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்களா என்று என் யோசனை போய்க் கொண்டிருக்கிறது.
பொதுவாக வறுமை குறித்து கு.அழகிரிசாமி அதிகமாகக் கதைகள் எழுதியிருக்கிறார்.
தம்பி ராமையா கதை கூட வறுமையின் சித்தரிப்புதான். கதை எப்படி ஆரம்பிக்கிறதென்றால் ரயிலடிக்குப் புறப்பட்டான் சுந்தரம் என்று ஆரம்பிக்கிறது. அவன் குடும்பத்தில் உள்ள அனைவரும் வழியனுப்புவதற்காக ஸ்டேஷன் வருகிறார்கள்.
யார் யார் வருகிறார்கள்? தகப்பனார் பூரணலிங்கம் பிள்ளை, தாயார் வடிவம்பாள், பன்னிரண்டு வயதுத் தங்கை கோமதி, அவளுக்கு ஒரு வயது இளையவளான துளசி, ஏழு வயதுத் தம்பி ராமையா.
“எதற்காக நீங்கள் இந்த உச்சி வெய்யிலில் ஸ்டேஷனுக்கு வருகிறீர்கள்” என்று கேட்கிறான் சுந்தரம்.
அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு எல்லோரும் திகைத்துப் போகிறார்கள்.
“ஏன் இப்படிச் சொல்றே என்று திகில் அடைந்ததுபோல் கேட்டாள் அம்மா. திகைக்காமலிருந்தவர்கள் சுந்தரத்தின் தகப்பானாரும், தம்பி ராமையாவும் தான். தம்பியின் முகத்தைச் சுந்தரம் கூர்ந்து பார்த்தான்.
சுந்தரம் லீவில் வரும்போதெல்லாம் அவனோடு ரயிலில் போக வேண்டுமென்று ஒரே பிடிவாதமாக அழுது போராடும் ராமையா, உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தான்.
அண்ணாவை வழி அனுப்பக் கொஞ்சங்கூட அக்கறையில்லை. முதலிலிருந்து கதையை ஆரம்பிப்போம்.
கிராமத்திலிருக்கிறது சுந்தரத்தின் குடும்பம். நாலாவது வகுப்பு வரை சுந்தரம் படித்துவிட்டு சாத்தூருக்குப் படிக்கப் போனதிலிருந்து வருஷத்திற்கு மூன்று நான்கு தடவைகள் லீவில் ஊருக்கு வருவான். அவன் படிப்புக்காக. நில உடைமையில் பாதியை விற்று விட்டார் அவன் அப்பா.
ஹைஸ்கூல் படிப்பை முடித்துச் சுந்தரம் ஊருக்கு வந்த மறு வருஷத்தில்தான் ராமையா பிறந்தான். ஆண்பிள்ளை. சுந்தரத்திற்கு ஒரே தம்பி. பெற்றோர்க்குக் கடைக்குட்டிப் பிள்ளை.
ஒரு வருஷம் ஆயிற்று சுந்தரம் வீட்டோடுதான் இருந்தான். இரண்டு வருஷங்களும் ஆகிவிட்டன. அவன் எத்தனையோ இடங்களுக்கு வேலைக்கு எழுதிப் போட்டான்.
மூன்றாவது வருஷமும் பிறந்து விட்டது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தால் தன் வீட்டிலேயே தான் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் விபரீதமான உண்மையைக் கண்டறிந்தான் சுந்தரம். பெற்றோரின் முகத்தில் விழிப்பதற்கே கூசிக்கொண்டிருந்த சமயத்தில் மதுரையிலுள்ள பள்ளித் தோழன் ஒருவன் கை கொடுத்துக் கரையேற்றுவதுபோல அவனுக்குப் பதில் கடிதம் எழுதியிருந்தான். நண்பனின் உதவியால் அறுபது ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
மதுரையிலிருந்து சொந்த ஊருக்கு லீவில் வரும்போதெல்லாம் தங்கைகளுக்கும் தம்பிக்கும் துணிமணிகளும் வேறு சாமான்களும் வாங்கிக்கொண்டு வருவான். தகப்பனார் கையில் ரொக்கமாக முப்பதோ நாற்பதோ கொடுப்பான். இவ்வளவுதான் அவன் ஒரு வருஷச் சம்பளம். ற
அவனுடைய குடும்பத்தை மதுரைக்கு அழைத்துப் போய் அவர்களுக்குப் பசியாமல் சாப்பாடு போடுவது என்ற நம்பிக்கை அவனிடம் தகர்ந்து விட்டது.
போன வருஷம் அவன் மதுரையிலிருந்து வந்தபோது அவனைப் பிரிய மனமில்லாமல் ராமையா அழுதான். அதற்குரிய காரணத்தையும் தெரிவித்தான். ‘நீ போனபிறகு எனக்கு அம்மா கஞ்சிதான் ஊற்றுவாள் அண்ணா’ என்று.
தன்னுடைய அண்ணன் தினந்தோறும் பலகாரங்களும், உயர்ந்த சாப்பாடும் கிடைக்கும் மதுரைக்குத் தன்னை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் சௌக்கியமாக இருப்பதற்குச் சென்று விட்டான் என்று நினைத்தபோது ராமையாவுக்கு அவன் மீது ஒரு மாதிரி வெறுப்பு ஏற்பட்டது.
ரயில் வண்டி வந்து விட்டது. ராமையாவின் முகத்தைப் பார்த்தான் சுந்தரம். அவன் வேறு பக்கம் பார்த்தபடி இருந்தான். ரயில் அசைந்தபோது முன் தடவைபோல் கையை அசைக்கவுமில்லை.
கு அழகிரிசாமி இந்த இடத்தில் வீர வசனம் போல் கதையை முடித்துள்ளார். சுந்தரம் தனக்குள் நினைத்துக் கொள்வதை வெளிப்படுத்துகிறார்.
‘என்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் என் படிப்புப் பயன்பட்டது. காப்பாற்றுவதற்கும் சோறு போடுவதற்கும் படிப்பா? என்ன முட்டாள்தனம். ராமையா எனக்கு ஒரு வருஷ அவகாசம் கொடு. நீ நினைக்கிறபடியெல்லாம் உன்னை வைத்துக் காப்பாற்றுவேன். இல்லையென்றால் என்ன மட்டும் காப்பாற்றும் இந்தச் சுயநலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உன்னிடமே வந்து விடுகிறேன்.’
கதையின் போக்கை நாடகமாக்கி முடித்து விடுகிறார்.
25.09.2022
- பிரபஞ்சத்தின் வயது என்ன ?
- சித்தரும் ராவணனும்
- தேமல்கள்
- ஒரு வழிப்பாதை
- கூந்தல் உள்ளவர்கள் அள்ளி முடிகிறார்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்
- கவிதை
- பூவம்மா
- மெட்ராஸ் டூ தில்லி
- உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3
- சிமோன் அப்பா
- கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..
- கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்
- மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின் பங்கு