புகுந்த வீடு  

author
0 minutes, 9 seconds Read
This entry is part 10 of 14 in the series 20 நவம்பர் 2022

மீனாட்சி சுந்தரமூர்த்தி

‘சீக்கிரமாகக் கிளம்பு திருநாவு (ஓட்டுநர்) வந்துவிட்டார்.’ என் கணவர் குரல் கொடுத்தார்.

‘சரிங்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்தீர்களா? ஹார்லிக்ஸ் (சம்மந்தி அம்மாவிற்கு) எடுத்து வைத்தீர்களா?’

‘நீ கொடுத்த அத்தனையும் கட்டைப் பையில் வைத்து வண்டியில் வைத்தாயிற்று.

நான் எனது கைப்பையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு வெளியீட்டு விழாவில் வாங்கி வந்த கவிதை நூலையும், எனக்குப் பிடித்த அழகின் சிரிப்பு மற்றும் உமார் கயாம் கவிதைகளையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். இவரிடம் எல்லாவற்றையும் சரியாகப் பார்த்து பூட்டுங்கள் என்று சொல்லி விட்டு வாசலில் நின்ற செடியிலிருந்து நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்து முன்னால் இருந்த பிள்ளையார் படத்திற்கு வைத்து விட்டு மகிழுந்தில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்தேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்து முன்னிருக்கையில் அமர்ந்தவர் சாவியை என்னிடம் தர வாங்கிக் கைப்பையில் வைத்தேன்.

காலை ஐந்தரை மணி மார்கழிக் குளிர் சாலையெங்கும் பனிப்படலம் போர்த்திருந்தது. பாப்பாத்தி அம்மன் கோவிலிலிருந்து,விநாயகர் அகவல் ஒலித்துக் கொண்டிருந்தது, வண்டி வலது புறம் திரும்பி திருவந்திபுரம்-கடலூர் மையச்சாலையில் கூத்தப்பாக்கம்(ஒரு காலத்தில் தெருக்கூத்துக் கலைஞர்கள் அதிகம் வசித்த பகுதியானதால் கூத்தர் பாக்கம் என வழங்கப்பட்டது) முருகன் கோவில்,பொன் விளைந்த களத்தூர் அம்மன் கோவில்களைக் கடந்தது, ‘ மாரியம்மா எங்கள் மாரியம்மா’ எனப் பாடிக் கொண்டிருந்த எல்.ஆர்.ஈசுவரியின் குரலில் மயங்கி மோனப் புன்னகையில் அருள் வழங்கிக்  கொண்டிருந்த முத்தாலம்மனை வணங்கி நிமிர வண்டி இடது புறமாகத் திரும்பி பெருமாள் கோவில் கடந்தது.மனம், ‘மாரிமலை முழைஞ்சில்’ பாசுரம் அசை போட்டது. கண்ணாடிக் கதவுகளைத் திறந்து விட்டதில் குளிர் காற்று சில்லென்று முகத்தில் ஒற்றியது. சென்னை பயணம்.

சுவிட்சர்லாந்து சென்றிருந்த சம்பந்தி  சென்ற வாரம் வந்து விட்டார், அவரைப் பார்க்கதான் இந்த பயணம். அதோடு மாப்பிள்ளை அங்கிருந்து சாக்லெட்டுகளும், காபித் தூளும் வாங்கித் தந்து அனுப்பியுள்ளார் அவர்களுக்கு சிரமம் இன்றி  அதை சென்னை சென்று பெற்றுக் கொண்டு அவரிடம் மகளும் மருமகனும் பற்றி கேட்டு வர மிகுந்த ஆசை அதற்கான பயணம்தான் இது. பெண்ணையாற்றில் இந்த வருடம் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. கரைபுரண்டு இல்லை, வற்றியில்லாமல் ஓடுகிறது. பார்ப்பதற்கே அழகாக இருந்தது. இருள் அகலாத வேளையிலும் நீரோட்டம் கண்களுக்குத் தெரிந்தது. புதுச்சேரி துவங்கும் வாயில் வந்தது. அதனைத் தொடர்ந்து இருந்த பெட்ரோல் பங்கில் வண்டிக்கு எண்ணெய் நிரப்பினார் என்னவர். வானொலி இராதா ஜெயலட்சுமி  பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு கிருமாம்பாக்கம் தாண்டும் முன்னர் சத்ய சாயிபாபா கோவிலின் முன்னர்  திருநாவு வண்டியை ஓரமாக நிறுத்தினார்.இவர் கும்பிட்டுக்கொள் என்றார்.காலையில் பாபாவின் தரிசனம் அருமை. ஒவ்வொரு முறையும் இவ்வழி செல்லும் போது பாபாவைப் பார்க்காமல் செல்வது இல்லை. நேரத்தைப் பொறுத்து கோவிலுக்குள் செல்வதுண்டு. மற்றபடி வெளியிலிருந்தே தரிசனம் செய்து கொள்வது வழக்கம். தவளகுப்பத்தில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இவர்கள் இருவரும் இறங்கி தேனீர் அருந்தினர். எனக்குத் தேவைப்படவில்லை. அதன் பிறகு புதுச்சேரி கடந்து கடற்கரைச் சாலை பிடித்தானது. இப்போது வெளிச்சம் வந்திருந்தது.நான் புதிதாக வாங்கியிருந்த கவிதை நூலை எடுத்தேன் வாசிக்க.

முன்னுரை, என்னுரை எல்லாம் படித்து கவிதையில் நுழைவு. நூலின் பெயர்,’சிட்டுக்கு’ கதிர் வரவு சொன்னது முதல் கவிதை.

‘காலைக் கதிரவன், பூமிப் பலகையில்

கதிரென்னும்

தூரிகையால் வண்ணம் தீட்டிட வந்தான்.’

எத்தனை பெரிய தூரிகை !

  இயல்பாக சன்னலைப் பார்த்தன விழிகள். கீழைக்கடலில் கதிரவன் மாணிக்கச் செம்பழமாய் உதித்துக் கொண்டிருந்தான். சிறுவர்களுக்கான நூல் இது. அடுத்த கவிதை,

‘மலரோடு பேசும் பட்டுப் பாப்பா!

உன் கன்னம் என்ன

அழகின் சிட்டா’

நெஞ்சம் கொள்ளை கொண்டது. அடுத்தடுத்து வாசிப்பில் ஆழ்ந்து போனேன்.

எட்டு மணிக்கு வீடு போலிருந்த உணவகத்தின் முன்னர் நிறுத்தினர். ஏற்கெனவே வந்துள்ளோம். சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும். கழிவறை பின்புறம் இருந்தது தூய்மையாக.

வண்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டேன் எனக்கு. இட்டிலி வடைகறியும், பூரியும் உருளைக் கிழங்கும் உண்டு காபி ஒன்றும் அருந்தி பின்னிருக்கை சாய,  இலேசாக உறக்கம் வந்தது.

மாமல்லபுரம் தாண்டிக் கொண்டிருந்தோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பா எங்களை அழைத்து வந்திருந்தார்.ஆனால் இப்போது எதுவும் நினைவில் இல்லை. ஒருமுறை இங்கு வரவேண்டும். பல்லவர் கைவண்ணம் கண்டு களிக்க, என்று நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் நினைப்பதுதான். எப்போது நிறைவேறுமென்று தெரியவில்லை. இவர் விமானப்படையில் பணி புரிந்ததால் வட இந்தியாவின் பல இடங்களில் இருந்திருக்கிறோம்,  பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறோம். ஆனால் தென்னகத்தில் காஞ்சி பிறந்தகம், கடலூர் புகுந்த வீடு என்றதால் இவற்றையும்  மதுரை, இராமேசுவரம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஊர்களையும் மட்டுமே கண்டிருக்கிறேன்.

திருவான்மியூர் வந்தாயிற்று சென்னை சென்ட்ரல் கடந்து துறைமுகத்தின் அருகிலிருக்கும் மின்ட் வரும் வழியில் பிரபலமான இனிப்புக் கடையின் முன் நிறுத்தி,

‘நீ வருகிறாயா?’ என்றார் இவர்,

‘இல்லை நீங்களே வாங்கிக் கொண்டு வாருங்கள்’ என்றேன். நேற்றே கடலூரில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை எனப் பழங்கள் வாங்கி விட்டேன்.,இனிப்பும் காரமும்தான் வாங்க வேண்டியிருந்தது. பிஷப் பள்ளியைக் கடந்து கொண்டிருந்தோம். அப்பப்பா என்ன நெரிசலான பகுதி. இங்கு மட்டும் இன்னும் ஒன்றிரண்டு சைக்கிள் ரிகஷாக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.  மிக்சரும்,காராபூந்தியும், மைசூர்பாகும்,இலட்டும் ஒவ்வொரு கிலோ வாங்கினேன் என்று பைகளை என்னிடம் நீட்டினார். இவர்கள் குடும்பம் பெரியது. முதலிரண்டு மகன்களும், மருமகள்களும்  குழந்தைகளும் என்று. எங்கள் மாப்பிள்ளை கடைசி. அதோடு கிராமத்திலிருந்து உறவினர் யாராவது மருத்துவ மனை அல்லது வேறு ஏதேனும் வேலை என்று ஒரு வாரம், பத்து நாள் வந்து தங்குவார்கள் . பெரிய குடும்பமாயிற்றே என்று நான் யோசித்தேன், இவர் ‘நல்லதுதான் சுற்றம் சூழ இருப்பது வலிமை தரும், இங்குதான் தனியாக இருக்கிறாளே’ அங்காவது கூட்டமாய் இருக்கட்டுமே’ என்றார். உண்மைதான் திருமணத்தில் தெரிந்தது அது, மகளை அப்படியே சுற்றிக் கொண்டார்கள். ஒப்பனை முதல் அழைத்து வருவதிலிருந்து,  பிள்ளைகள் சித்தி, சித்தி என்று பாசமாக ஒட்டிக் கொண்டார்கள், திருமணம் முடிந்து பத்து நாட்களில் சுவிட்சர்லாந்து சென்று விட்டனர். ஆறு மாதங்களாகிறது.

சில நாட்களில் இரவு அழைப்பு வரும், ஒரே அழுகைதான். இதுவரையில் எங்களை விட்டுப் பிரிந்தவள் இல்லை, தாத்தா, பாட்டி, அத்தை, பெரியப்பா வீடுகள் என்றாலும் நானோ இவரோ இருந்தால் மட்டுமே இருப்பாள்.

அவளைச் சமாதானப் படுத்திய பின் எங்களின் தூக்கம் விடைபெற்றிருக்கும். ஒருநாள்,

‘ஏண்டா செல்லம் தினமும் பார்த்துப் பேசுகிறோம்

அப்புறமும் எதற்கு வருத்தப்படுகிறாய்? என்றதற்கு

‘இல்லை நான் தொட வேண்டும்,அப்பா மடியில் படுக்க வேண்டும்’

என்றாளே பார்க்கலாம்.

ஒரு கட்டத்தில்  மாப்பிள்ளை,’நீ வேண்டுமானால் ஒரு மாதம் சென்று அப்பா அம்மாவோடு இருந்து விட்டு வா’ என்றார். என்ன நினைத்தாளோ,’ வேண்டாம் நீங்களும் அம்மா அப்பாவை விட்டு தானே இருக்கிறீர்கள் என்றாளாம்.. இப்போது பரவாயில்லை.. இந்த சமயத்தில்தான் மாப்பிள்ளையின் அப்பா மட்டும் சென்று ஒரு மாதம் அங்கு தங்கி வந்தார். நானும் இவரும் வெகுவாகப் பயந்தோம் எப்படி என்ன செய்யப் போகிறாள் என்று. ஏனென்றால் ஒரு நாளும் ஒரு வேலையும் செய்தவள் இல்லை. என்னவரின் அண்ணி கூடச் சொன்னார்கள்,

‘ஒரு பத்து நாள் மட்டும் என்னிடம் அனுப்பு,அவளுக்கு சமையல் சொல்லித் தந்து விடுகிறேன்’என்று.

‘ஏன் பெரியம்மா உங்களுக்கு என்னை வேலை வாங்குவதில் சந்தோஷமா? என்று முகம் திருப்பினாள் மகள்.

என் தம்பி வந்திருந்த போது ஒரு நாள் ,’நீ ஒரே ஒரு தேனீர் போட்டுக் கொடு, என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறேன்’ என்றான்.

‘தேனீர் போடாமலே வேண்டியதை அப்பாவே வாங்கித் தருவார்.’ என்றவள்,  இப்போது என்ன செய்வாளோ என்ற கலக்கம் எங்களுக்கு. வீடு வந்து விட்டது

 எங்கள் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள், நல்ல சம்பந்தம் அமைவதும் கூட இறைவனின் கொடைதான். மாப்பிள்ளையின் அப்பா ஒரே புகழாரம்தான்.சின்ன மருமகளைப் பற்றி.எனக்கு ஒரு சந்தேகம் ஒரு வேளை எங்களுக்காக இப்படிப் பேசுகிறாரோ என்று.

மதிய உணவில் காளான் பிரியாணியும் பாயசமும் இருந்தது. சாப்பிடும்போது அவர் சொன்னார், ‘என்ன செய்திருக்கிறீர்கள்?

அங்கே,’ சின்ன மருமக செய்யிற காளான் பிரியாணி அற்புதம்மா’

என்றவர் ‘இங்கே இவர்களும்தான் சப்பாத்தி செய்கிறார்கள், அதோட கை பக்குவமே தனிம்மா, அப்படியே மெத்து மெத்துண்ணு இருக்கும். சமைக்கறதுக்கு முன்னாடி எதை எப்படிச் செய்யணும்னு

திட்டமிடும். யூ.டியூப் பார்த்து புதிய உணவு வகைகளும் அருமையாகச் செய்யும். நல்லா அருமையா வளர்த்திருக்கிறாய் அம்மா’ என்றார் என்னிடம்.

மாப்பிள்ளையின் பிறந்த நாளுக்கு அவள் செய்திருந்த கேக் பற்றியும் சொன்னார். அதை அவள் எங்களுக்கு படம் பிடித்து அனுப்பியிருந்தாள். அழகான பூந்தொட்டி வடிவம். அதைப்பற்றி எங்கள் சம்பந்தி சொல்கிறார். மகன் கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்றதற்கு,’ வேண்டாம் நானே செய்கிறேன்’ என்றாளாம். செய்வதற்குத் தேவையான பொருட்களை, வடிவமைக்கத் தேவையான அச்சு போன்றவற்றை மாமனாரை அழைத்துக் கொண்டு சென்று தேடித் தேடி வாங்கினாளாம். அன்றிரவு செய்து

முடிக்கும்போது இரவு ஒருமணி ஆகி விட்டதாம். மறு நாள் கேக்கைக் கண்டவர்கள் அசந்து போனார்களாம்.மகன், ‘அப்பா எவ்வளவு அருமையாக உங்கள் மருமகள் செய்திருக்கிறாள்’ என்ற போது எனக்கே கண்கலங்கிப் போச்சுமா, நீங்க ரெண்டு பேரும் அங்கே இல்லையேண்ணு’ என்றார்.

இதைக் கேட்டதும் என் நினைவில் ஒரு சங்கப்பாடல் எழுந்தது.

மணமாகித் தலைவன் வீடு சென்ற மகளைக் கண்டு வரச் செல்கிறாள் செவிலித்தாய்.அங்கே அவள் மெல்லிய விரல்களால் கெட்டித் தயிரைப் பிசைந்து புளி சேர்த்து அடுப்புப் புகை கண்களை வருத்திடச் சமைத்த குழம்பினை நன்றாக சுவையாக உள்ளது  என்று சொல்லி தலைவன் உண்பது கண்டு முறுவலித்து நிற்கும் தலைவியைக் கண்டு வந்து நற்றாயிடம் சொல்கிறாள். 

அந்தப் பாடல் இதோ குறுந்தொகை 167.

 முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்

 கழுவுறு கலிங்கம் கழாது உடீஇக்

குவளை உண்கண் குய்புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகற்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.  ‘

        பாடியவர்- கூடலூர் கிழார்

Series Navigationஇலக்கியப்பூக்கள் 268அய்யனார் ஈடாடி கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *