அழகியசிங்கர்
அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன், ஓராண்டு மட்டும் இந்திரா பார்த்தசாரதி.
அனால் . இப்போது எந்தப் போட்டிக்கும் என் குறுநாவலாகட்டும், நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கவிதை ஆகட்டும் அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
ஏன்? இப்போது நான் எதை எழுதினாலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன்.
அந்தக் கதைத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தப் போட்டிக்கு 300க்கு மேல் கதைகள் வந்தன என்பதை அறிந்தேன். அதிலிருந்து அவர்கள் 13 கதைகள் தேர்ந்தெடுத்தார்கள். என் கதை அதில் இல்லை.
இக் கதைகளையெல்லாம் தேர்ந்தெடுக்கத் தேர்வாளர்களைக் கண்டுபிடித்து கதைகளைக் கொடுத்துப் படிக்க வைக்கிறார்கள். ஒரு குறுகிய காலத்தில் அவர்கள் எல்லாக் கதைகளையும் அவசரம் அவசரமாகப் படிக்கிறார்கள். இதற்காகப் பல தேர்வாளர்கள் செயல்படுகிறார்கள். இதில் என் கதையெல்லாம் தேர்ந்தெடுக்காமல் போவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.
என்னைப் போல் பலர் எழுதியும் தேர்ந்தெடுக்காமல் போய் விடுகின்றன. பொதுவாக நான் போட்டிக்காகக் கதைகளை அனுப்பும் போது ஒன்று சொல்வேன். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுகிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆனால் உங்கள் பங்கிற்கு ஒரு கதை கிடைத்து விடுகிறது.
எப்படியாக இருந்தாலும் திறமையாக எழுதப்படுகின்ற கதைகளைத் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் போவதற்குப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.
1.கதைகளைத் தேர்ந்தெடுக்கிற அறிவு அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
2. அவர்கள் வாசகர்களாக இருக்கலாம். கதைகளைப் பற்றி வாசித்த அனுபவமே அவர்களிடம் மிஞ்சி இருக்கும்.
3. கதைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வாசிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் அவர்கள் கண்ணில் படுகிற சிறந்த கதைகளைச் சரியாக வாசிக்காமல் விட்டிருக்கலாம்.
4.தேர்வாளர்கள் பெரும்பாலும் எழுத்தாளர்களாக இருப்பதில்லை.
5. எழுத்தாளர்களாக இருந்தாலும் அவர்கள் பிரபல பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளரா தீவிர இலக்கியப் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளரா என்ற பாகுபாடு அவசியமாக இருக்கிறது.
6. மேலும் 300 கதைகள் என்று வைத்துக்கொண்டால் பல கதைகள் எழுதத் தெரியாதவர்கள்தான் எழுதுகிறார்கள்.
7. மொத்தத்தில் விடுபட்ட போன கதைகள் பரிசுக்குரிய கதைகளை விடச் சிறப்பாக இருப்பதற்கு எல்லாவித நியாயமும் இருக்கிறது.
நான் ஒரு போட்டிக்கு அனுப்பிய கதை அந்த அமைப்பு தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பெரிய ஏமாற்றம். நான் சிறப்பாக எழுதிய கதையை ஏன் தேர்ந்தெடுக்க வில்லை என்று. நான் பரிசுக்குரிய கதையாக அது தேர்ந்தெடுக்கப்படும் என்று நம்பினேன். ஆனால் பரிசுக்குரியதாக அது தேர்ந்தெடுக்கப் படவில்லை. அப்படியென்றால் ஆறுதல் பரிசாவது அந்தக் கதைக்குக் கிடைத்திருக்க வேண்டும். அப்படியும் இல்லை.
எனக்கு இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அக் கதையை நான் வேறு பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் பிரசுரம் செய்தார்கள் . அந்தக் கதை பிரசுரமான பிறகு, அக் கதையைப் புகழ்ந்து பலர் பேசினார்கள். என்னுடைய கேள்வி ஏன் இந்தக் கதையை தேர்ந்தெடுக்காமல் போனது அந்த அமைப்பு என்பதுதான்.
பொதுவாகக் கதை எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் வேண்டும். இப்போதெல்லாம் நானாகவே கதைகள் எழுதுவதில்லை. எனக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால் நான் ஒரு தூண்டுதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
போட்டி மூலம் எனக்கு ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. எழுதுவோம் என்ற உத்வேகத்தில் எழுதுகிறேன். கதையை எழுதி முடித்தவுடன் எனக்குத் திருப்தி ஏற்படுகிறது. எனக்கு அப்போதே தெரிந்து விடுகிறது. இந்தக் கதை நிச்சயமாக முதல் மூன்று பரிசுகளுள் ஒன்றாவது கிடைக்குமென்று.
ஆனால் அந்தக் கதையைப் படிக்கும் தேர்வாளர்கள் அந்தக் கதை அறுதல் பரிசுக்குக் கூட அருகதை அற்றது என்று தீர்மானிக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவர்கள் தேர்ந்தெடுத்து வருகிற கதைகள் எனக்கு பெரும்பாலும் ஏமாற்றமாக அமைந்து விடுகிறது.
இப்போது ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளருக்குக் கதை எழுத ஒரு தூண்டுதல் தேவையா? அல்லது தானாகவே கதை எழுதக் கூடாதா?
இன்னொரு கேள்வியும் எழுகிறது. சிலர் சாதாரணமாக எழுதுகிற கதை கூட பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறது. எப்படி ?
எனக்குத் தெரிந்து இரண்டு எழுத்தாளர்கள், அவர்கள் போட்டிக்கு அனுப்புகிற எந்தக் கதையாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடும்.
போட்டி என்று வந்தால் அவர்கள் கதைகள் கட்டாயம் இடம் பெறும். கண்ணை மூடிக்கொண்டு போட்டி முடிவு தெரிவதற்குள் குறிப்பிடுவேன். அப்படியே நடக்கும். அவர்கள் எழுத்தில் மட்டும் என்ன மாஜிக் இருக்கிறதென்று தெரியவில்லை.
அதில் ஒரு எழுத்தாளர் அவரே செலவு செய்து பரிசுப் பெற்ற கதைகள் என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்தார் . அவரே புத்தகங்களைத் தூக்கிக்;கொண்டு விற்கவும் முயற்சி செய்தார். அவ்வளவுதான் ஒரு பிரதிகூட அவரால் விற்கமுடியவில்லை. புத்தகம் விற்கவில்லை என்ற அனுபவத்தைக் கதையாக எழுதித் திருப்த்திப் பட்டுக் கொண்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. அவர் பரிசுக்குரிய எழுத்தாளராக இருந்தாலும், அவர் பிரபலம் ஆகவில்லை. அவர் புத்தகத்தை வாங்கிப் படிக்க யாரும் தயாராக இல்லை.
பொதுவாக யாரும் பரிசுக்குரிய கதைகளைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் தான் எழுதிய கதை பிரசுரம் ஆகவேண்டுமென்று நினைக்கிறான். அது பரிசுக்குரிய ஒன்றாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறான்.
தொடர்ந்து கதைகள் எழுதுபவர்கள் பரிசுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து கதைகள் அனுப்ப வேண்டாம். அப்படியே அனுப்பினால் பரிசு கிடைக்கிறதா இல்லையா என்பதைப் பொருட் படுத்த வேண்டாம்
கதைகளை எழுதுபவர்கள் ,மற்றவர்கள் கதைகளைப் படிப்பதில்லை. . மற்றவர்கள் கதைகளையும் வாசிக்க வேண்டும். இப்போது என்ன ட்ரெண்ட் என்று தெரிந்திருக்க வேண்டும்.
கதைகள் பிரசுரமானாலும் அவற்றை வாசிக்க வாசகர்கள் தயவு வேண்டும்.
- ஹேப்பி நியூ இயர்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.
- 2022 ஒரு சாமானியனின் பார்வை
- 21ம் நூற்றாண்டு
- புத்தாண்டு பிறந்தது
- எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோஅங்கம் -1 காட்சி -2 பாகம் -1
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது - பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் சக்தி விருது 2023.
- சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்