2022 ஒரு சாமானியனின் பார்வை

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 12 in the series 1 ஜனவரி 2023

சக்தி சக்திதாசன்

ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியில் வந்து நிற்கிறது. ஓரிரவுக்குள் 2022 ஐக் கடந்து 2023 க்குள் கால் வைக்கப் போகிறோம்.

சரி ஒரு வருடம் எம் வாழ்க்கையில் கடந்து போயிற்று. அதற்குள் அது தாங்கிக் கொண்டும், கடந்து சென்ற நிகழ்வுகள் தான் எத்தனை ?

இன்பம்,துன்பம் எனும் இரண்டு நிகழ்வுகள் வெவ்வேறு வடிவங்களில் எம்மீது நிகழ்த்தி விட்டுச் சென்ற நிகழ்வுகளின் மீது ஒரு சாமானியனாக, பாமரனாக, ஒரு பேரக்குழந்தையின் தாத்தாவாக, தந்தையாக, மாமனாராக, தம்பியாக, அண்ணனாக, கணவனாக உள்ளத்தின் தாக்கங்கள் தந்த உணர்வுகள் மீட்டிய ராகங்கள் தான் எத்தனையெத்தனை ?

முதலில் எனது பிரத்தியேக வாழ்வின் தாக்கங்களை எடுத்துப் பார்க்கலாமே ! 2022 ம் ஆண்டின் அரம்பமே ஒரு சுழற்சியுடன் தான் ஆரபமாகியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இரண்டு ஆண்டுகள் கைகளாக்கிய கொரோனா எனும் வைரஸ் சரி இனி தண்டனை போதும் என்று எண்ணி எம்மை விடுவித்தது.

சரி இலக்கிய தாகத்தின் நிமித்தம் வருடந்தோறும் ஜனவரியில் தமிழகத்தின் தலைநகர் சென்னை நோக்கி ஓடிவரும் எனக்கு இரண்டு வருட வனவாசம் முடிந்து இனிக் கிளம்பலாம் என்று எண்ணி பயண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பிக்கும் போது விழித்துக் கொண்ட கொரோனா விட்டேனா பார் என்றது பாருங்கள்.

ஒமிக்குரோன் எனும் ஒரு புதிய வடிவம் எடுத்து என்னைப் பார்த்துச் சிரித்தது. சரிப்பா ! நானா ? நீயா ? எனும் போட்டி வேண்டாம் நீயே ஜெயித்ததாக வைத்துக்கொள் என்று சொல்லி சரணடைந்து பிரயாண ஏற்பாடுகளை ரத்துச் செய்து விட்டேன்.

இப்படியான எனது 2022 ஆரம்பம் எப்படி இருக்கப் போகிறதோ ? எனும் அங்கலாய்ப்புடன் இருந்தேன். கோவிட்டுக்கான 3ம் தடுப்பூசி, நான்காம் தடுப்பூசி என்று ஏற்றிக் கொண்டே போனபோதுதான் புரிந்தது. ஓ ! முதுமை எனும் வாசலுக்குள் நுழைந்து விட்டேன் எனும் உண்மை.

ஒய்வூதியம் விருப்பத்துடன் பெற்று 7 வருடம் முடிந்த நிலையில் நானிருந்தேன்,என் மனைவி தானும் ஓய்வூதியம் விருப்பத்துடன் இரண்டு வருடத்தின் முன் எடுத்துக் கொண்டும் அதைச் சரியாக அனுபவிக்க கொரோனா விடவில்லையே !

ஆயினும் எப்படியோ நேரம் கிடைப்பதோ அரிது எனும் வகையில் வாழ்க்கை ஓடியது. இடையிலே ஸ்பானிய நாட்டின் பாகமான காஸ்டல் டி சொல் எனும் நகரிற்கு ஒருவார விடுமுறையில் சென்றதும் அத்துடன் அக்டோபர் மாதம் கிரேக்க நாட்டுத் தீவுகளில் ஒன்றான சாக்கிந்தோஸ் அல்லது சாண்டி என்று அழைக்கப்படும் தீவுக்கு ஒரு வார விடுமுறையில் சென்றதும் கோவிட் கெடுபிடிகளில் இருந்து விடுபட்டதற்கான ஒரு அடையாளமானது.

எழுத்து, விடுமுறை, பேத்தியுடனான இனிய பொழுதுகள் எனும் இடையறாத அக்கணப் பொழுதுகளின் சுகிப்போடு இனிமையும், திகிலும், ஆச்சரியத்தையும் தாங்கி பிரத்தியேக வாழ்வு தனது வருடப் பயணத்தை நிறைவு செய்கிறது.

சரி இனி இங்கிலாந்தின் 2022 நிகழ்வுகளைப் பார்ப்போமா ?  2022 இன் ; ந் ஆரம்பம் ஒமிக்குரோன் எனும் திரிபடைந்த கொரோனா எனும் கிருமியின் திக் விஜயத்தின் திசை எத்திசையை நோக்கிப் போகப் போகிறது எனும் கேள்வியே இங்கிலாந்தின் வருடப் பயணத்தின் அனுபவங்கள் இருக்கப் போகிறது எனும் எண்ணமே பலரின் உள்ளங்களையும் ஆக்கிரமித்திருந்தது.

ஒமிக்குரோனைப் பற்றிய பரபரப்பில் ஈடுபட்டிருந்தோருக்கு தெரிந்திருக்குமா ? இங்கிலந்தின் அரசியல் பயணத்தின் ஆச்சரியங்கள் ? ஆம் ஒன்றல்ல , இரண்டல்ல மூன்று பிரதமர்களைக் கண்டது இங்கிலாந்து. அதுமட்டுமா ? இங்கிலாந்து சரித்திரத்தில் முதன்முறையாக இந்தியக் கலாசாரப் பின்னனியைக் கொண்ட ஒருவரைத் தனது பிரதமராக்கிய பெருமையை இங்கிலாந்து மக்களுக்கு 2022 கொடுத்தது .

70 ஆண்டுகள் இங்கிலாந்தின் மகுடத்தைச் சூடிச் சரித்திரம் படைத்த, ஒரே வருடத்தில் மூன்று பிரதமர்களை நியமித்த பெருமையைத் தனதாக்கிய இரண்டாவது
எலிசபெத் மகாராணியின் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ப்ந்ருமைதையும் கொண்டது 2022. எமது வாழ்நாளிலேயே ஒரு மகாராணியாரின் பிரஜையாக இருந்தது மட்டுமில்லாமல் மகாராஜாவின் பிரஜையாகவும் எம்மை ஆக்கிய பெருமையும் 2022 க்கே உண்டு.

30 வருடங்களின் பின் வாழ்க்கை செலவாதாரம் மிகவும் அதிகரித்த நிலையைத் தீவிரமாக்கியது 2022. தமது சம்பள உயர்வுக்காக வேலைநிறுத்தம் எனும் போராட்டத்தில் பல ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நிலையைத் தோற்றுவித்ததும் 2022 எனலாம்.

எரிவாயு, பெட்ரோல், மின்சாரம் ஆகியற்றின் விலை மக்களால் சமாளிக்க முடியாத ஒரு கட்டத்திற்கு உயர்ந்ததும் இந்த 2022 யே ஆகும்.

இப்படியாக இங்கிலாந்தில் தாக்கங்களை ஏற்படுத்திய 2022 சர்வதேசரீதியை மட்டும் விட்டுவிட்டதா என்ன ?

மிக முக்கியமாக சுமார் ஒரு வருடத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட ரஸ்ய – யூக்கிரென் போரின் தாக்கம் அனைத்துலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்ல வேண்டும். மேற்குலக நாடுகள் எரிபொருள்களின் விலையுயர்வு எனும் பிரச்சனைக்குள் மாட்டித் தத்தளிக்கையில் இந்தியா பொருளாதாரத்தில் தன்னை ஸ்திரமாக்கி உலக அளவில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்டக்கூடிய நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அதேநேரம் சிறீலங்காவோ  பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு மற்றைய  நாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டது.

சீனாவுக்குள் கொரோனா வைரஸ் எடுக்கும் மாற்றத்தினை அறியாமல் உலக சுகாதார நிறுவனத்தின் தடுமாற்றம் . அரபு நாடுகளின் நிலையற்ற தன்மை, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆதிக்கம், வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல்கள், ரஸ்ய ஆயுத ஆக்கிரமிப்பின் எல்லைகள் என சர்வதேசத்தைப் பலமுனைகளில் மிரட்டும் சூழல்களுடன் 2022 ஒரு போர்வைக்குள் தன்னை இழுத்து மூடிக் கொள்கிறது.

அனைத்துக்கும் மேலாக காலநிலை, சுற்றுச்சூழல் மாசளவின் தாக்கத்தின் விளைவை நோக்கிய மாற்றங்களின் ஆழத்தை விளக்கும் வகையில் அமெரிக்க நாட்டினை பனிப்பொழிவினுள் மூடி எமக்கெல்லாம் பாரிய சிந்தைகளைத் தூவிவிட்டு மறைந்து போகிறது 2022.

இந்தச் சாமானிய பாமரனின் 2022 ஐ நோக்கிய பின்னூட்டப் பார்வையை எதிர்மறையாக நோக்காமல் அதனுள் புதைந்துள்ள நேர்மறை கருத்துகளை உள்வாங்கிக் கொள்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் விரியும்  2023 இனுள் உங்களுடன் இணைந்து நானும் நுழைகிறேன். வாருங்கள் நல்லதையே தியானிப்போம்.

அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்

சக்தி சக்திதாசன்

Series Navigationபோட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.  21ம் நூற்றாண்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *