எங்கேயோ கேட்ட கதை – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 13 in the series 12 மார்ச் 2023

வெங்கடேஷ் நாராயணன்

இப்பொழுது அனைத்து குழந்தைகளும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களுடைய முயற்சியை மேற்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். பத்தாவது பொதுத் தேர்வு ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. அதிலிருந்து அவன் மேற்படிப்புக்கு என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க கூடியது.

ஒரு வீட்டில் ஒரு பிள்ளை 10,11, 12 வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அவர்கள் வீட்டுக்கு வரும் அனைத்து உறவினர்களும், நண்பர்களும் பையன் எப்படி படிக்கிறான்? இந்த வருஷம் பத்தாவது தானே ? நல்ல மார்க் வாங்க வேண்டும். “எங்க ஊர்ல ஒரு பையன் பத்தாவது ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு பள்ளியில் முதல் மாணவனாக வந்தான்” என்று கூறுவார்கள். இது நம் குழந்தைக்கு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இப்படி அனைவரும் வந்து “எப்படி படிக்கிறான்? எப்போது தேர்வு?” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பதால் அது குழந்தைக்கு தேர்வு பயத்தை ஏற்படுத்தும்.. எனவே உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தக்க அறிவுரை கொடுத்து தேர்வு பயத்தை நீக்கி பொதுத்தேர்வை தைரியத்துடன் எதிர் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த கதை சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் ஓடாச்சேரி என்று ஒரு அழகான கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் அக்ரஹாரத் தெருவில் ஒரு புறத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலும் மறுபுறத்தில் சிவனுக்கு ஒரு கோவிலும் உள்ளது. பெருமாள் கோயில் பின்புறம் அழகிய குளம் உள்ளது. குளத்தில் வெள்ளை நிற மற்றும் சிவப்பு நிற அல்லிகள் பூக்கும். சிறுவர்கள் அந்த குளத்தில் குளித்து மகிழ்வர். பெண்கள் அந்த குளத்தில் குளித்துவிட்டு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வர். குளத்தின் மறு கரையில் மாரியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் ஒரு வினோத வேண்டுதல் செய்யப்படுகிறது. கிராமத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அம்மனிடம் வேண்டிக் கொண்டு அவரை ஒரு சிலையாக வடித்து கோயிலுக்கு காணிக்கையாக கொடுப்பர்.

அங்கு நெல், பயறு, உளுந்து, மிளகாய் பயிரிடப்படுகிறது. கிராமத்தில் ஆங்காங்கே தென்னை மரங்களும், பனை மரங்களும் சூழ்ந்து இருக்கும். அங்கு வெட்டாறு என்னும் நதி உள்ளது. கோயிலில் நடக்கும் பூஜைகளுக்கு அங்கிருந்து நீர் எடுத்து பூஜை செய்வர். ஆண்டு முழுவதும் அந்த ஆற்றில் தண்ணீர் இருக்கும். ஆடிப்பெருக்கு மற்றும் காணும் பொங்கலில் குடும்பம் குடும்பமாக கட்டு சோற்றுடன் அங்கு வந்து பொழுதை கழிப்பர்.

எல்லோர் வீட்டிலும் மாடு கன்றுகள் இருக்கும். தங்கள் வீட்டிற்கு தேவையான பால், மோர், தயிர் இவற்றை இவர்களே இந்த மாட்டின் மூலம் பெறுகின்றனர். பாலை கொண்டு திரட்டி பால் செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுகும் கொடுத்து மகிழ்வர். மிகுதியாக இருக்கும் பொருட்களை அருகில் உள்ளவர்களிடம் பகிர்வர். வாரம் ஒரு முறை மாட்டு வண்டியில் திருவாரூருக்கு சென்று தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை சந்தையில் வாங்குவர்.

பெரியவர்கள் வயலில் வேலை செய்வதற்காக நாள்தோறும் பொழுதிலே எழுந்து வயல்வெளிக்கு செல்வர். காலையில் நீர் ஆகாரமும், பழைய சாதமும் சாப்பிட்டு செல்வர். அந்த பழைய சாதத்திற்கு பச்சை மிளகாய் தொக்கு மிகவும் அருமையாக இருக்கும். பச்சை மிளகாய், புளி, வெல்லம், உப்பு இவற்றைக் கொண்டு அம்மியில் விழுதாக அரைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கி வைத்தால், பத்து நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இது பழைய சாதத்திற்கு அமிர்தமாக இருக்கும்.

அந்த கிராமத்தில் இருக்கும் ராஜா என்பவருக்கு ஐந்து மகன்கள், இரண்டு மகள்கள். அதில் மூன்றாவது மகனான பாலசுப்பிரமணியன், நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் நடந்துதான் பள்ளிக்கு போவார்கள். ஒருவர் முன்னே செல்ல தொடர்வண்டி போல மற்ற பிள்ளைகள் அவர்களை பின் தொடர்ந்து செல்வார்கள். பள்ளி முடிந்து மாலை திரும்பும் பொழுது, வழியில் இருக்கும் மரங்களில் இருந்து நெல்லிக்காய், புளி, மாங்காய் போன்றவற்றை கல்லால் அடித்து அதை தின்று கொண்டு நடந்து வருவார்கள்.

வீட்டில் வரும் உறவினர்களும் நண்பர்களும் பாலா எப்படி படிக்கிறான் என்று விசாரிப்பார்கள். பாலாவும் பத்தாவது பொதுத் தேர்வை எதிர் கொண்டான் ஆனால் அவன் மனதில் ஒரு பயம். தேர்வில் தேர்ச்சி பெறுவானா அல்லது தோல்வி அடைவானா? இதனால் அவன் யாரிடமும் சொல்லாமல் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினான். சென்னைக்கு வந்து ஒருவர் வீட்டில் உதவியாளராக சேர்ந்தான். அவர்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு அவன் உதவினான். அவர்கள் வீட்டிலேயே தங்கி சிறுசிறு வேலைகள் செய்தான். அந்த வீட்டின் முதலாளி ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பாலாவின் நல்ல குணத்திற்காக அவனை ரயில்வேயில் டெம்ப்ரவரியாக ஒரு வேலையில் சேர்த்து விட்டார். மிகவும் கஷ்டப்பட்டு அவன் வேலை செய்தான். அந்த காலத்தில் மத்திய அரசு அல்லது மாநில அரசு வேலைகளில் சேர்வதற்கு தேர்வுகள் கிடையாது. பத்தாவது வகுப்பு தேர்ச்சி பெற்றாலோ அல்லது அதற்குரிய படிப்பு இருந்தாலோ சேர்த்துக் கொள்வார்கள். அப்படி சேர்ந்த பாலா அந்த வேலையில் படிப்படியாக முன்னேறினான்.

அதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அவன் பத்தாவது தேர்வில் தேர்ச்சி பெற்றான். அந்த செய்தி அவனுக்கு மிகவும் தாமதமாக தான் கிடைத்தது. இப்பொழுது இணையதளத்தில் அல்லது கைபேசியில் தேர்வு முடிவுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் அந்த காலகட்டத்தில் செய்தித்தாள்களிலோ அல்லது பள்ளிக்கு சென்றால்தான் அந்த பிள்ளையின் தேர்வு என்னை கொடுத்து தேர்வு முடிவுகள் பெற வேண்டும்.

ரயில்வேயில் வேலை செய்து கொண்டிருந்த பாலாவிற்கு திருமணம் முடிந்தது. பணி நிமித்தமாக அவனுக்கு ஹைதராபாத்திற்கு வேலை மாறுதல் ஏற்பட்டது. திருமணத்தை முடித்துக் கொண்டு அவன் ஹைதராபாத்திற்கு குடியேறினான். அவனுக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள். அவன் பிள்ளைகள் ஹைதராபாதில் படித்து நல்ல முறையில் குடும்பத்தை நிர்வாகித்து வருகிறார்கள். பாலா இப்பொழுது தனது பேரன் பேத்திகளுடன் நிம்மதியாக இருக்கிறான். அவர்கள் அனைவரும் ஓடாச்சேரிக்கு அவ்வப்போது வந்து ஆலயத்தை தரிசித்து செல்கிறார்கள்.

இந்த கதையின் மூலம் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் தேர்வு பயமோ அல்லது தோல்வி பயமோ இருக்கக் கூடாது. சில குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு தோல்வியாக கூட அமையக்கூடும். அப்படி அமைந்தால் குழந்தைகள் அதை தைரியமாக எதிர் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். தவறான முடிவுகள் எடுக்கக் கூடாது. இப்போது நிறைய வசதிகளும், வேலை வாய்ப்புகளும் உள்ளன. தேர்வில் தோல்வி அடைவது ஒரு பெரிய குற்றமல்ல. இதுவும் கடந்து போகும். அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் அமையும்.

தேர்வில் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

குறிப்பு – முற்காலத்தில் அந்த கிராமத்தில் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டே இருப்பார்கள். அதனால் அந்த ஊருக்கு ஓதுவாஞ்சேரி என்று பெயர் வந்தது. அதுவே இப்பொழுது மருவி ஓடாச்சேரி என்று ஆனது.முன்பு திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் நீலப்பாடி அல்லது அடியக்கமங்கலத்தில் (சுமார் 7 கிலோமீட்டர்) இருந்து நடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக பேருந்து வசதிகளும் சாலை வசதிகளும் சிறப்பாக உள்ளன.

அந்த கிராமத்தில் கோயில் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அம்மன் கோவிலில் நவராத்திரியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்படும். நவராத்திரியின் கடைசி நாளில் அங்கு உள்ள பெருமாள் கோயிலில், திருவோண நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்பட்டு பெருமாளுக்கு சமார்தனை செய்யப்படும். சிவன் கோவிலில் நவராத்திரியின் போது சண்டி ஹோமம் செய்யப்படும். சிவராத்திரியின் போது நான்கு கால பூஜை நடக்கும்.

இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து வேறு ஊருக்கு சென்று குடியேறியவர்கள் அவ்வப்போது இந்த கிராமத்திற்கு வந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கிறார்கள். கோயிலுக்கு திருப்பணி செய்கிறார்கள்.

Series Navigationதேடல்பிரபஞ்சத்தின் வயதென்ன ?
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ரமேஷ் says:

    அருமை. அந்த கால கிராம வாழக்கையை நன்றாக ப்ரதிபலிக்கிறது இந்த கதை.

  2. Avatar
    S. MUTHUSAMY VOLTAS COLONY FIRST STREET NANGANALLUR. says:

    Excellent. Super. Keep it up. Write more stories. God bless you all.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *