அச்சம்

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 12 in the series 17 ஏப்ரல் 2023

ஆர். வத்ஸலா

நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை

கங்கை போல் என் மேல் பொழிந்து

என் மனதை குளிர்வித்து

வழிந்தது

உன் பாசம்

எனக்கு உன் மேலும்

உனக்கு என் மேலும்

காதல் இல்லை

என்று

யாருக்கும் சொல்லித் தெரிவிக்க வேண்டிய அவசியம்

நமக்கு ஏற்பட்டதில்லை என்றுமே

நீ

எனக்கு மேம்

என் மனைவிக்கு அக்கா

மகளுக்கு ‘ஃப்ரெண்ட் ஆண்டி’

அவர்களால் மட்டும் உன்னை எப்படி

இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிந்தது?

என் மனம் ஏன் திக்குமுக்காடியது?

புரிந்துணர்வும் ஆழமான சிந்தனையும் நிறைந்த

உனது ஒவ்வொரு

பேச்சிலிருந்தும்

செயலிலிருந்தும்

நான் கற்றுந் கொண்ட விஷயங்களை

நான் சாகும் வரை மறக்க மாட்டேன்

ஆனாலும்….

உன் நட்பு எனக்கு சுமையாய் இருந்ததே

ஏன்?!

உன் அருகாமையில் எனக்கு மூச்சு முட்டியதே

ஏன்?!

உன் சிந்தனையின் உயரம் என்னை தாக்கியதா?

உன்னை அண்ணாந்து பார்ப்பதற்கு

நான் வெட்கினேனா?

இதெல்லாம் நான் ஆண் என்பதாலா?

எதுவாயிருந்தால் என்ன?

உன்னை இழந்தது இழந்ததுதான்

உன்னை தவிர்க்க நான் நினைத்ததை

நான் அறிவதற்கு

ஒரு விநாடி முன்பாய்

நீ  விலகிக் கொண்டாய்

என் நேரமின்மை காரணமாய்

சந்திப்புகளும்

தொலைபேசி பேச்சும்

அசாத்தியமாகி போன நிலையில்

நம்மை

இணைக்கும் ஒரே புள்ளியாய்

விளங்கிய குறுஞ்செய்திகள்-

என்னிடமிருந்து எப்போதாவதும்

நான் உள்ளே நுழைந்ததன் சாட்சியாய்

நீல நிறமாகும் ’சரி’ குறிகளில் திருப்தியடையும்

உன்னிடமிருந்து அடிக்கடியுமாக-

அவற்றை படிப்பதை

நான் நிறுத்தியதை

நீ எப்போழுது உணர்ந்தாய்

உணர்ந்தாயா

என

எனக்கு சாகும் வரை தெரியப் போவதில்லை

உன் மௌனம்  

நம் நட்புறவின் சங்கொலியாய்

என் செவியை  தாக்குகையில்

உணர்ந்தேன்…

என் விலகல்

முன்பே தொடங்கிவிட்டிருந்தது என

என்  நேரமின்மை ஒரு சாக்குதான் என

உண்மையில்

ஈடு கொடுக்க முடியாத

உன் அன்பின் தீவிரம்

என்னை அச்சுறுத்தியது

என

Series Navigationபாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்நாவல்  தினை              அத்தியாயம்  பத்து                     CE 300
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *