மூப்பு

author
0 minutes, 31 seconds Read
This entry is part 1 of 12 in the series 17 ஏப்ரல் 2023

சோம. அழகு

            சாலையோரங்களில் அழுக்குத் தலையும் கந்தல் ஆடையுமாக ஒரு உணவு பொட்டலத்தோடு எந்த வேலையும் செய்து பிழைக்க இயலாத நிலையில் சுருங்கிப் போன உடலை இன்னும் சுருக்கிப் படுத்திருக்கும் ஆதரவற்ற முதியோரைக் காணும் போதெல்லாம் தோன்றும்…. குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் தமக்கு இந்நிலை நேரும் என எண்ணிப் பார்த்திருப்பார்களா? அதிலும் சிலர் வசதியான வாழ்க்கை முறையில் வாழ்ந்திருந்ததாகக் கூறக் கேட்க நேரும் போதெல்லாம் எனது உடல் ஒரு கணம் சில்லிட்டு அடங்கும். இப்படித்தான் முதுமையின் மீதான எண்ணங்கள் என்னைத் தொந்தரவு செய்யத் துவங்கின.  

            வாழ்க்கையில் ஏதோ ஒன்றைப் பார்த்து பயம் இருக்க வேண்டுமே? “உறங்குவது போலும் சாக்காடு…” என மரணம் எனக்கு பயத்தைத் தருவதில் படுதோல்வி அடைந்திருந்தபடியால் அவ்விடத்தை அதைவிடக் கொடிதான மூப்பு நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மூட்டு வலி, குறுக்கு வலி, தளர்ந்த நடை, கண், காது என் புலன்களின் திறன் மங்குதல், மூச்சு வாங்குதல், முழு உடல் பரிசோதனையில் வலுக்கட்டாயமாக வந்து குடியேறும் பிணிகள், மூன்று வேளையும் உணவின் அளவை மிஞ்சும் மாத்திரைகள், நினைத்தாற் போல் பயணப்பட முடியாத நிலை, … இன்னும் என்னென்னவோ! இவையெல்லாம் மனதின் ஒரு மூலையில் லேசான பயத்தை விதைக்க முயல இன்ன பிற காரணங்கள் வேறு உணர்வுகளை உண்டாக்குகின்றன.

மூப்பு என்பதை முதிர்ச்சி என்று பொருள் கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், வயது முதிர்ச்சியோடு மன முதிர்ச்சியும் அதில் தொக்கி நிற்கும் காரணத்தால். தமது ஏனோதானோ வாழ்க்கையில் தாம் பெற்றவை அனைத்தும் அளப்பரிய அனுபவங்கள்(!) என ஒவ்வொருவரையும் நம்ப வைத்தது எது/யார்?  ‘வயதாகி விட்டால் அடுத்தவருக்கு (தன்னைத் தவிர எல்லோரும் அடுத்தவர்தான்!) அறிவுரைகளை வாரி வழங்கும் தகுதி தாமாக வந்துவிடும்’ என்று இபிகோ ஐபேகோ என எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்ன? “வீட்ல பெரிய மனுசன்னு நான் ஒருத்தன் இருக்கேன். என்னை கேட்காம நீயே எல்லாம் முடிவு பண்ணா எனக்கு என்ன மரியாதை?” – பிள்ளைகளிடமே ஆயினும் இது போன்ற  அசட்டுத்தனங்கள் காலத்திற்குப் பொருந்தாதவை. வலுக்கட்டாயமாக மரியாதையைக் கேட்டு வாங்கி தமது முக்கியத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியில் அயராது ஈடுபட்டு மீண்டும் மீண்டும் முதிர்ச்சியற்றவர்களாக தங்களை நிறுவிக் கொள்கின்றனர். How pathetic! ஆனாலும் இவர்கள் மீது பரிதாபம் எல்லாம் வருவதில்லை.

இவ்விடத்தில் ஓர் உளவியல் உண்மையைக் கூற விரும்புகிறேன். பிறப்பிலிருந்து முதுமைக்குச் சற்று முந்தைய காலம் வரை வாழ்வில் அனைத்தும் புதிதாக இருக்கும். எனவே காலம் வேகமாக செல்லும். அப்படித்தான் மூளை நமக்கு உணர்த்தும். ஒரே மாதிரியான நாட்களால் நிறைந்த முதுமையில் புதுமைக்கோ ஆச்சரியத்திற்கோ பெரிய இடம் இல்லாததால், காலம் மெதுவாக நகருவதைப் போல் தோன்றுவது இயற்கையே. இது எல்லோருக்கும் உள்ளதுதான். தமது வாழ்க்கையின் ஓட்டமும் சாட்டமும் முடிந்துவிட்டது. இனி பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ வேண்டிய காலம் என்பதுதானே இயற்கையான எண்ணமாக இருக்க முடியும்? அதை விடுத்து உலகில் ஏதோ தமக்கு மட்டும் கொடுஞ்சாபம் கிட்டியதைப் போல்….உஸ்ஸ்ஸ்!   

50 வயதிலும் சிலர் அரற்றுவதைப் பார்க்கையில் முதுமைக்கென வயது வரம்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட ‘இந்த வயசான காலத்துல நாங்க இப்பிடி தனியா…’ என்று புலம்புவது; வாட்ஸ்ஆப் பல்கலைக்கழத்தில் எவனோ இவர்களைப் போல் பொழுது போகாமல் ‘முதுமை… தனிமை… கொடுமை… கண் மை… பேனா மை…’ என பத்துப் பக்கக் கட்டுரை ஒன்றை சுற்றலில் விட அதைப் படித்துச் சோகமாகி உடனே பிள்ளைகளுக்கு அதைத் தட்டிவிட்டு அவர்களுள் குற்றவுணர்வை உதயமாகச் செய்வது – இவை/இவர்கள் மூப்பின் மீது கடுமையான ஒவ்வாமையைத் தந்து அதுதான் நாளடைவில் வெறுப்பாக என்னுள் உருமாறியிருக்க வேண்டும். 

இது ஏதோ தலைமுறை இடைவெளி என்று கொள்ள வேண்டாம். எனக்கு எல்லா தலைமுறையினருடனும் பிணக்கு உண்டு. எல்லா தலைமுறையிலும் என் மனதிற்கு உவந்த சிற்சில தேர்ந்த பக்குவமானவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் எனக்கு மூத்த தலைமுறையில்தான் எனக்குப் பிடித்தமான சுவாரஸ்யமான கதைசொல்லிகள், அறிஞர்கள், தோழர்கள், நலம்விரும்பிகள் உள்ளனர். எனவே வயது வித்தியாசம் அல்ல பிரச்சனை. அவரவர் தனிப்பட்ட பண்புதான். ‘மூப்பு’ என்பதைத் தமது கேடயமாக வைத்துக் கொண்டு கூர்வாளை நம்மை நோக்கிச் சுழற்றும் சில ‘மூத்தோர்களின்’(!) நடவடிக்கைகள் கடுப்புக்குள்ளாக்குகிறது.

இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்நொடியில் திடீரென என் மனதினுள் சணிக சடுதியில் பளிச்சென கீறிச் செல்கிறது ஒரு மின்னல். பின்னர் இடியும். நிறைய மனிதர்களைக் காணுற நேர்கையில் என் வட்டம் விசாலமாகுகையில் பெரும்பான்மையோரின் சராசரி உளவியல் புலப்படுகையில்…. அவர்களுள் சிறுபான்மையினர் ஆகிப் போன மன முதிர்ச்சி அடைந்தவர்களும் ஏற்கனவே நான் அறிந்த பக்குவப்பட்டவர்களும் என் மனதில் கீழே அமிழ்ந்து போயிருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுத்தே ஆக வேண்டிய தருணம் இது. அவர்கள் மட்டுமே எனது முதுமைக் காலத்தை இனியதாக்கச் சொல்லித் தரப் போகிறார்கள்.

பசுமையான நினைவுகளால் ஆன ஒரு குழந்தைப் பருவத்தைத் தந்த என் சுப்பராயன் தாத்தா (அப்பாவின் அப்பா) தமது கடைசி மூச்சு வரையிலும் மூப்பினால் ஏற்பட்ட இயலாமையைப் பற்றி குறைபட்டுக் கொண்டதே இல்லை, ஒரு முறை கூட. நான் வளர வளர என்னுடன் சேர்ந்து உலகைப் புதிதாய்க் கண்டு ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் அணுகிய தாத்தாவிற்கு, நான் வளர்ந்த பிறகு தமது வாழ்க்கையில் – துயில் எழல், குளித்தல், காலை உணவு, பத்திரிக்கை, மதிய உணவு, குட்டி உறக்கம், தேநீர், தொலைக்காட்சி, இரவு உணவு, உறக்கம் என்று – எவ்வித மாற்றமுமில்லாமல் நகர்ந்த அல்லது நகர மறுத்த நாட்கள் குறித்த சலிப்பும் தென்பட்டதாகத் தெரியவில்லை. நேரம் காலமில்லாமல் வெயில் மழையைப் பொருட்படுத்தாமல் தாசில்தாராக நிறைய ஊர்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தாத்தாவிற்கு வீட்டினுள்ளேயே பொழுதைக் கழிப்பது ஆசுவாசத்தைத் தந்திருக்கும் போலும்.

 இன்றும் கூட எண்பது வயதை நெருங்கும் என் அழகம்மாள் ஆச்சியும் (அப்பாவின் அம்மா) கமலா ஆச்சியும் (அம்மாவின் அம்மா) தத்தமது தேவைகளைத் தாமே பார்த்துக் கொள்கின்றனர். சுப்பராயன் தாத்தாவின் மறைவிற்குப் பின் அழகம்மாள் ஆச்சியை எங்களோடே இருக்கச் சொன்னோம். “எனக்கு மாடில கூடுதலா ஒரு சமையலறை மட்டும் கட்டித் தாயேன். என்னால முடிஞ்ச மட்டும் நானே பொங்கி ஆக்கி இருந்துக்குறேன். என்னால முடியாதப்ப கீழ வாரேன். உங்களுக்கும் எனக்கும் ஃப்ரீயா இருக்கும்” – பொசுக் பொசுக்கென உணர்ச்சி வசப்பட்டு பெரும்பாலும் எரிச்சல் மனநிலையிலேயே இயங்கிப் பழகிப் போன ஆச்சி இவ்வாறாக அப்பாவிடம் நிதானமாக நிதர்சனம் பேசினாள். அவளது ஆணை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அப்பா இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சி மூட்டு வலியுடன் மாடிப்படி ஏறி இறங்க வேண்டாம் என வீட்டில் மின்தூக்கி அமைத்துத் தந்தார்கள்.   

 “நெடு நாட்களாகி விட்டது… இன்று எப்படியேனும் கமலா ஆச்சியிடம்(அம்மாவின் அம்மா) தொலைபேசி விட வேண்டும்” என்று என் மனதில் தோன்றி பின் வேலைகளில் மூழ்கி மறந்து மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து நினைவு வர மீண்டும் பணிகளில் உழன்று மறந்து நாலாம் நாள் ஞாபகம் வரும் முன் ஆச்சியே அழைத்திருப்பாள். “நானே கூப்பிடணும்னு நெனச்சேன் ஆச்சி” என்று ஒவ்வொரு முறையும் வெட்கமே இல்லாமல் அவளிடம் கூறுவேன். “அதனால என்னடா? ஒனக்கு படிப்பு இருக்குல்லா?/பிள்ளைய வச்சுருக்கேல்லா?/அவ்ளோ வேலையும் பாக்கேல்லா?/” என்று ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி என்னை இன்னும் கூனிக் குறுகச் செய்வாள். அடுத்த முறையேனும் நான் முதலில் அவளை விளிக்க வேண்டும் என்று உறுதி எடுப்பேன். ஒவ்வொரு முறையும் அவளே ஜெயித்துக் கொண்டிருக்கிறாள். “ஃபோனயே காணோம்”, “இங்க வரவே மாடேங்குற” போன்ற ஆவலாதி எல்லாம் அவளிடம் கிடையாது. எள்ளளவும் எதிர்பார்ப்பில்லாத அவளது பாசத்தில் திக்கு முக்காடச் செய்து முதுமைக் காலத்திற்கான பாடத்தைச் சொற்களின்றி செய்கைகளில் சொல்லிக் கொடுக்கிறாள்.

Graceful ageing  என்பதைத் தோழர் பொன்னுராஜ் அங்கிளிடமும் தோழர் நாகராஜன் அங்கிளிடமும் காண்கிறேன். ஒருவேளை உயரிய கொள்கைப் பிடிப்பு, நிரம்பிய நூலுடைமை, தெளிந்த நல்லறிவு, பக்குவமும் நிதானமும் கூடிய அணுகுமுறை ஆகிவற்றால் இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருப்பார்களோ? ‘அலுவலகப் பணிக்கு தான் ஓய்வு; மக்கள் பணிக்கு அல்லவே’ – இதுதான் இவர்களின் தாரக மந்திரம் போலும். இன்றும் சமூக நலனில் அக்கறை கொண்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். போராட்டக் களங்களில் ஓங்கி உயரும் இவர்களது கைகளும் உரத்து ஒலிக்கும் குரலும் என்றுமே சோர்வுறுவதாய் இல்லை. ‘குடிசெய்வார்க் கில்லை பருவம்…’ – வாழ்ந்து கண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் இருக்க மனைவியை இழந்த மாதுஞானய்யா சார் இப்போதும் அவ்வீட்டில் தனியாகத்தான் வசிக்கிறார்கள். என் அப்பாவின் பேராசிரியரான அவர்களை எப்போது காணச் சென்றாலும் ஏதேனும் கணக்கு புத்தகம் அல்லது பைபிள் திறந்தே இருக்கும் அன்னாரின் மேசையில். அவர்களது முகம் வாட்டம் என்பதையே அறிந்திராது போலும். தனிமையிலும் மனச்சோர்வை வென்றெடுக்கும் சூத்திரத்தை அறிந்தே இருக்கிறார்கள். பேசும்போது மெல்லிய புன்னகையொன்றைச் சூடியிருக்கும் மாதுஞானய்யா சார் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அளப்பரியதாக்கித் தருகிறார்கள்.

பணிநிறைவு பெற்றிருந்தாலும் MT&TS programme போன்றவற்றை மாணவர்களுக்காக இப்போதும் சற்றும் குறையாத ஆர்வத்துடனும் சுறுசுறுப்புடனும் நடத்திக் கொண்டிருக்கும் கணிதப் பேராசிரியரான குமரேசன் அங்கிளுக்கு இலக்கியத்திலும் அதீத ஈடுபாடு உண்டு. Vector Spaceம் பேசுவார்கள்; வள்ளுவனையும் விளக்குவார்கள். Banach Spaces பற்றியும் பாடம் எடுப்பார்கள்; Beethovan 5th Symphony குறித்தும் சிலாகிப்பார்கள்.

எனது முதுகலைப் பட்டப் படிப்பின் போது எனக்கு C++ கற்றுத் தந்த ஷண்முகம் சாரின் அம்மா (அன்னாரின் பெயர் நினைவில் இல்லை!) தமது எண்பதாம் அகவையில் திடீரென sequence workல் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மறதி நோய்க்குத்(Dementia) தம்மை ஒப்புக் கொடுக்கும் முன் அந்த ஆச்சி தாமே செய்த ஒரு கைவினைப் பொருளைப் பரிசாகத் தந்தார்கள். எல்லாரையும் எல்லாவற்றையும் மறந்து போய்விட்ட ஆச்சியின் நினைவாக அது இன்னமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

இவ்வாறாக மனதிற்கு உவப்பான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ‘முதுமை ஒன்றும் அவ்வளவு கொடிதானது அல்ல’ என்று பதாகை பிடிக்காத குறையாக உணர்த்துகிறார்கள். அதற்காக குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை  என்றில்லை. 

மாயாபஜார் படத்தில் ‘கல்யாண சமையல் சாதம்..’ பாடலில் சாப்பிடத் துவங்கும் போது தனது கதையை தூணில் சாய்த்து வைத்துவிட்டு உருவில் பெரியதாகிச் சாப்பிடும் கடோத்கஜன் உண்டு முடித்து தன் உருவத்திற்கேற்ற பெரிய கதையை எடுக்க அனிச்சையாகக் கையைப் பின்னால் கொண்டு போவதும் பின் அதை உணர்ந்து சிரிப்பதையும் கண்டு தாமும் தமது பேரனும் ரசித்துச் சிரித்த கதையை அவ்வளவு சுவாரஸ்யமாகக் கூறினார்கள், குமரேசன் அங்கிள். அவர்கள் சொல்லும் வரை அப்பாடலில் அந்நுணுக்கத்தை நான் கவனித்ததே இல்லை.

“தாத்தா! ஆச்சிகிட்ட சும்மா சண்ட போடாத… சமத்தா இருக்கணும்” என்று மழலை மாறாத மொழியில் அறிவுறுத்தும் ஆணையிடும் பேரனை பெருமையுடன் நினைவு கூறுகிறார்கள், பொன்னுராஜ் அங்கிள். அடுத்த விடுமுறையில் ஊருக்கு வரும் வரை தமது நினைவாக வீட்டின் சுவற்றிலும் கதவுகளிலும் தங்களது கைவண்ணத்தைப் பதித்துச் சென்ற பேரப்பிள்ளைகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அங்கிளின் குரலில் தனி உற்சாகம் வந்து அமர்ந்து கொள்கிறது.

 எந்த ஒரு விஷயத்திலும் நேரில் கலந்துரையாடல் சாத்தியமற்றுப் போன கோவிட் காலத்தில் காணொளிக் கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள் என கணிணித் திரையே உலகமாகிப் போய் அப்போதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள் நாகராஜன் அங்கிள். பணியின் பொருட்டு படிப்பின் பொருட்டு அயல் தேசத்தில் இருந்த தமது பிள்ளைகள் உலக அரசியலை உன்னிப்பாக உற்று நோக்கி புதிய கோணங்களில் தகவல்களைப் பகிர்வது குறித்த வியப்பு தம்மின் தம்மக்கள் என்னும் பெருமிதமாய் வெளிப்பட்டது நாகராஜன் அங்கிளிடம்.

வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை  பேரப் பிள்ளைகளை அவ்வப்போது காணொளியிலும் எப்போதேனும் அங்கு சென்றும் கண்டு வரும் இவர்களிடம் இன்னொன்றையும் கற்றுணர்கிறேன். பிள்ளைகளின் வாழ்வைத் தமதாக்கிக் கொள்ளவில்லை எவரும். பெற்றோரே ஆயினும் எல்லோரும் அவரவர் வெளியில் தனித்தே இயங்குகின்றனர். இதை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன். எது எதற்கோ மேற்கு பக்கம் தலையைத் திருப்பிக் கொள்ளும் சமூகம் இதற்குத் திருப்பினால் தவறில்லை.

என் பெற்றோரைக் குறிப்பிடாமல் இக்கட்டுரை எங்ஙனம் முழுமை அடையும்? திருமணத்திற்கு முன்பு வரை என் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் என்னை அதீத கவனத்தோடு வழிநடத்திச் சென்ற அப்பாவும் அம்மாவும் “இது உன் வாழ்க்கை; உன் முடிவுகள்; நீ ஏதேனும் யோசனை கேட்டால் சொல்லவும் நீயாக எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்கவும் மட்டுமே எங்களுக்கு உரிமை உண்டு. அதற்கு மேல் நாங்களே உள்ளே வரக் கூடாது; அது நாகரிகம் இல்லை” என்று என் திருமணத்திற்குப் பின் நிலைப்பாடு எடுத்தனர். ஒவ்வொரு முறையும் எனக்கான வெளியை அமைத்துத் தந்து என் பதின் பருவம் முதல் அளவற்ற சுதந்திரத்தையும் தந்த பெற்றோரை ஒரு முறை நான் மெச்சத் துவங்கிய போது அப்பா குறுக்கிட்டார்கள் “பிள்ளைகளின் இயல்பும் போக்கும்தான் பெற்றோர் எவ்வளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. அதனால இதுல எங்கள பாராட்ட ஒண்ணும் இல்ல”. என் முடிவுகளின் தவற்றைச் சுட்டிக் காட்ட ஒருபோதும் அவர்கள் தவறியதில்லை. அதையும் மீறி அம்முடிவில் நான் உறுதியாய் நின்ற போது உண்டாகும் எதிர்மறை விளைவுகளை என்னுடன் சேர்ந்து அல்லது இயன்றால் என்னை அச்சூழலில் இருந்து விலக்கி எனக்காக எதிர்கொண்டிருக்கிறார்கள். “நான் அப்பவே சொன்னேன்ல”  – ஒருமுறை கூட அப்பா இப்படிச் சொன்னதே இல்லை. அதற்காகவே இன்னும் கவனமாக என் முடிவுகளை எடுக்கிறேன்.

வாழ்க்கையில் எனக்குத் தெரிந்து பணி ஓய்வு பெற மிகவும் ஆவலாய்க் காத்திருந்தது என் அப்பாதான். நிறைய பேர் அச்சமயத்தில் வாழ்த்துக்களை அனுதாபம் பொங்க தெரிவித்துக் கொண்டிருந்தனர். பணி நிறைவு பெறுவதைப் பரிதாபத்திற்குரிய விஷயமாக சமூகம் ஏன் பார்க்கிறது? அதன் பிறகு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேவும் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்கிற பயமா? அங்கீகாரத்திற்கான ஏக்கமா? அப்பா அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்துப் பேசினார்கள். “வாசிப்புப் பழக்கம் இருக்குறவங்களுக்கு இது எவ்ளோ பெரிய வரம் தெரியுமா? எனக்கு எப்படா பணிக்காலம் முடியும்? எப்ப எனக்கு பிடிச்சதையா வாசிச்சுத் தள்ளலாம்னு காத்திட்டு இருக்கேன். வாசித்ததையும் அப்பப்போ எழுதுறதைப் பகிரவும் உலக நடப்புகளை விவாதிக்கவும் எனக்குன்னு ஒரு தோழர் வட்டம் இருக்கு. மற்றபடி யார் என்னைக் கண்டுக்கிட்டா என்ன? இல்லன்னா எனக்கென்ன?” மற்றவர்க்குப் பாடம் (கணிதம் மட்டுமல்ல; தமிழ் ஆங்கிலமும் கூட) சொல்லிக் கொடுப்பது அவ்வளவு பிடிக்கும் அப்பாவிற்கு. மற்றபடி வினாத்தாள் எடுப்பது, விடைத்தாள்கள் திருத்துவது எல்லாவற்றையும் கடமையே என்று செய்வார்கள். இனி வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி. அவர்களின் மொழியிலேயே சொல்வதானால்… ‘இனி துயிலெழும் சூரியன் உங்களுக்கானது. வானில் பல ஓவியங்களை வரைந்து செல்லும் வெண்மேகங்கள் உங்களுக்கானது. அவ்வப்போது உங்கள் மனநிலையை இன்னும் இதமாக்க சூழும் கருமேகங்கள், அவை கொண்டு வரும் சாரல், மழை… அவை ஜன்னலில் வழிந்தோடி எழுதிச் செல்லும் கவிதை, அந்நேரத்தில் உங்கள் கையில் தவழப் போகும் புத்தகம், அச்சூழலை இன்னும் அழகாக்கும் இளஞ்சூட்டிலான தேநீரின் மிடறுகள்…. எல்லாம் உங்களுக்கானது; உங்களுக்கே உங்களுக்கானது”     

“வயசான காலத்துல நாம நமக்குன்னு உள்ள gated communityக்கு போய்டலாம். பிள்ளைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது” என்று நான் முதுகலை படித்துக் கொண்டிருந்த போதே அப்பாவிடம் கூறியிருக்கிறாள் அம்மா. அப்போதுதான் எங்கள் ஊரில் சகல வசதிகளுடன் கூடிய முதியவர்களுக்கான ஒரு குடியிருப்பு அமைக்கப்பட்டது, தனித்தனி வீடுகளாக. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் வாய்க்கப் பெற்ற, புறணி பேசப் பிடிக்காத… புறணி மட்டுமல்ல, எச்சூழலிலும் கூடுதலாகக் கூட ஒரு வார்த்தை பேசாத, எந்த விஷயத்திலும் தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக நிற்காத அம்மா எப்படி இப்படி ஆணித்தரமாய் பேசினாள்/யோசித்தாள்? தமது மனைவியைச் சிலாகித்துப் புளகாங்கிதம் அடைந்து அப்பா என்னிடம் இதைக் கூறும் போது நான் முறைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் பதில் வைத்திருந்தார்கள் அப்பா… “அடேய்! அதெல்லாம் நீங்க எங்கள நல்லா பாத்துப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும்…” ……. “அப்போ நீங்க மட்டும் எதுக்கு ஆச்சி தாத்தாவ கூட வச்சிருக்கீங்க? அங்க அனுப்பி எங்களுக்கு முன்மாதிரியா இருங்க” என்று கோபத்துடன் கூறினேன். சிரித்துவிட்டு தொடர்ந்தார்கள்… “கொஞ்சம் பொறுமையா கேளுடா. நீ நினைக்குற மாதிரி அது ஒண்ணும் முதியோர் இல்லம் இல்ல. கொஞ்சம் வசதியானவங்க முதுமைக் காலத்தில் அங்குள்ள ஒரு வீட்டுக்குக் குடியேறலாம். விருப்பப்பட்டால்/முடிந்தால் நாங்களே சமைத்துக் கொள்ளலாம். அல்லது சமைத்துத் தர ஆள் உண்டு. அவசர உதவிக்கும் ஆட்கள் உண்டு. மிகவும் பாதுகாப்பான வசதியான ஒரு அமைப்பு முறை. மற்றபடி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். வேறு வீட்டில் இருப்போம். அவ்வளவே! எதுவும் மாறப்போவதில்லை”. “எனக்கென்னவோ இதை உளவியல் ரீதியா ஏத்துக்கவே முடியல” என்றேன். “It’s just a matter of times. காலப்போக்கில் இது சாதாரணமாகிடும். அப்படியே எங்கள கூட வச்சு பாக்குறதுனாலும் ஒரு ஆளை போட்டுப் பாரு. சரியா? நானோ அம்மாவோ படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால் எங்களைச் சுத்தம் செய்ய ஒரு ஆளை நியமித்துவிடு. உங்களுக்கும் எங்களுக்கும் கஷ்டமாக இருக்காது” என்ற அப்பாவிடம் “நான் குழந்தையா இருக்கும் போது ஆள் வச்சு தான் என்ன கவனிச்சுக்கிட்டீங்களா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் இடத்தை விட்டு அகன்றேன்.

அந்த வயதில் அப்பாவின் இக்கூற்றைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. உணர்ச்சிவசப்பட்டே அணுகினேன். இப்போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது, உணர்வுப்பூர்வமாக அணுகுவதால். அதற்காக அவர்களை அங்கு செல்ல சம்மதிப்பேன் என்றில்லை. முதுமையை அடையும் முன்பே அதீத பக்குவத்தை அடைந்துவிட்ட என் பெற்றோர் எனக்கான வரம். என்னுடனேயே வைத்து அவர்களைத் தங்கத் தட்டில் தாங்க வேண்டும். “அது எப்படிடா பொண்ணு வீட்டுல வந்து இருக்க முடியும்?” – அப்பாதான். எது எதிலோ முற்போக்காகச் சிந்தித்து அசர வைக்கும் அப்பா சில விஷயங்களில் பொதுசன நிலைப்பாட்டை எடுத்து அதிர்ச்சி தருவார்கள்.

தோழர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “என் பொண்ணு” என்று பெருமிதம் பொங்கும் மகிழ்ச்சியைப் பூசிக் கொள்ளும் அப்பா, என் திருமணத்தை ஒட்டி எங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது “பக்குவமா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா அதோட உச்சக்கட்டத்திற்குப் போய்டணும். எல்லா கோமாளித்தனங்களையும் ஒரு சிரிப்புல கடந்திட பழகிடணும்.  கொள்கைகளை மட்டும் பிடிச்சிட்டு இருந்தோம்னா it will get hard to coexist with homosapiens. எனக்கும் ஆடம்பரத்தில் எல்லாம் விருப்பம் இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அதுக்காக? பொண்ண பெத்தவன்டா நான்…” என ஒருவித சுய பச்சாதாபத்துடன் (apologetic tone) கூறவும் உடனடியாக பொன்னுராஜ் அங்கிளிடம் அப்பாவை அப்படிச் சொல்ல வைத்த சமூக நடைமுறைகளைச் சாடி என் வயதிற்கே உரிய கோபத்துடன் முறையிட்டேன். “என்ன அங்கிள் இது? இந்தக் காலத்துலயும் கட்டு, குட்டு, முறை, குறைன்னு…. சுத்தமா பிடிக்கல”. அங்கிளோ “சமூகத்தோட சராசரி மனநிலை இதுதான். நமக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ இந்த சமூகத்துல தான் வாழணும். வேற வழியில்லை. இந்த சமூகத்திடம் இருந்து இவ்வளவுதான் எதிர்பார்க்கலாம்; எதிர்பார்க்கவும் முடியும்” என்று அநியாயத்திற்கு எதார்த்தம் பேசினார்கள். அந்நேரத்தில் நான் கேட்க விரும்பாத பதில் கிடைத்ததில் “அப்போ என்னையும் சராசரியாவே வளத்துருக்க வேண்டியதுதானே? எதுக்கு பெரியாரையும் மார்க்ஸையும் சொல்லிக் குடுத்தீங்க?” என்று படபடக்க, அதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்த பொன்னுராஜ் அங்கிளிடம் அதீத பாசத்தோடும் உரிமையோடும் ஒரு வித பொய்க் கோபத்தோடும் “Hate you Uncle!” என்றேன். அப்போதும் கூட “The more you hate me the more I love you my child” என்றார்கள். பிறக்கும் போதே இவ்வளவு பக்குவத்தோடு பிறந்திருப்பார்கள் போல! What a wisdom!

இவர்களைப் போலவே வாழ்க்கையின் மீதும் யார் மீதும் எந்த எதிர்பார்ப்போ குற்றச்சாட்டோ இன்றி முதுமையைக் கொண்டாடி ரசித்து வாழ விழைகிறேன். என் முதல் நரை நிச்சயம் என்னில் குறுநகையையே விட்டுச் செல்லும். கண்களின் அருகே தோன்றப் போகும் முதல் சுருக்கம் இவர்கள் அனைவரையும் என் கண் முன் கொண்டு வரும்.

  • சோம. அழகு    
Series Navigationஇழை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *