உவள்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 1 of 11 in the series 11 ஜூன் 2023

   

சோம. அழகு

உதுவே உவளது பெயராக இருந்துவிட்டுப் போகட்டுமே! நீங்களும் நானும் நிச்சயம் உவளைப் பார்த்திருப்போம். தற்காலத்தில், பெரும்பான்மைச் சமூகத்தால் ஜீரணிக்க இயலாத முற்போக்குத்தனங்களைச் சுமந்து கொண்டு தனது கொள்கைகளையும் விட முடியாமல் சுற்றத்தின் பித்துக்குளித்தனங்களைச் சகிக்கவும் முடியாமல் மூச்சுத்திணறலுடனேயே  உங்களை அநாசயமாகக் கடந்திருப்பாள் உவள். 

உவளின் இயல்பு அவ்வப்போது உவளையும் மீறிக் கொண்டு கேள்விகளாய் கருத்தாக்கங்களாய்த் தெறித்து விழுந்தன. பெரும்பாலும் தன்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டதில் அனைத்தும் ‘அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’ ஆகிப் போயின. எனவே இறுதியாக அப்பாவிடம் எல்லாவற்றையும் கேட்டாள். “பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட ‘இது சாத்தியமா?’ என சந்தேகத்தை எழுப்பக் கூடிய அல்லது பெரும்பாலும் எதிர்மறை விடையையே தரக்கூடிய கேள்விகள் உன்னுடையவை. பதினாறு அடி பாய்ச்சலில் இப்போதே அவற்றிற்குத் தீர்வு தேடுகிறாய்” என்றார்கள்.   

உவளது அப்பாவிற்குத் தமது நிலைப்பாடுகளுக்காக ஒருபோதும் இடர் வந்ததில்லையே. முதன் முறையாக ‘அன்’ விகுதிக்கு ஏங்கினாள். ஒருவேளை வாழ்வு இன்னும் எளிதாய் இருந்திருக்குமோ? உவளது இவ்வெண்ணம் வந்தியின் பிரம்படியாய் விழுந்தது உலகின் மீது. அக்கணம்… சட்டென நின்றது உலகம். எல்லா உயிர்களும் ஒரு கணம் வெட்கித் தலை குனிந்தன. ஒட்டு மொத்த சமூகமும் தோற்று நின்றது உவளிடமும் உவளது பெண்மையிடமும்.

இல்லையில்லை. நீங்கள் நினைப்பது போல் உவள் பெண்ணியம் எல்லாம் பேச மாட்டாள். ‘பெண்ணியம் என்பது ஓர் மகத்தான இயக்கம்; சமத்துவம் கோரும் ஓர் இயக்கம்’ என்று நன்றாகவே அறிவாள். ஆனால் தற்காலத்தில் ‘பெண்ணியம்’ என்பதை ஆண்களின் மீது வெறுப்பை உமிழ்வதாகவே வரையறையை சிலர் மாற்றி வைத்திருந்தபடியால் உவள் அப்பக்கம் செல்வதே இல்லை. மது அருந்துவது, புகை பிடிப்பது, வீட்டு வேலைகளைச் செய்யாமலிருப்பது – எல்லாம் ஆண் பெண் வேறுபாடின்றி அவரவர் தனிப்பட்ட விருப்பமும் வசதியும் சார்ந்தது. ஆனால் இது போன்ற அற்ப விஷயங்களுக்கான உரிமமாக சிலரால் பெண்ணியம் கையிலெடுக்கப்பட்ட போது அம்மாபெரும் இயக்கத்தில் விரிசல் விழுவதைக் கண்டாள். “ஏன்? பெண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? வேண்டுமென்றால் ஆண்கள் பெற்றுக்கொள்ளட்டும்” என்று கூறுவதில் இருந்து ஒரு எட்டு மட்டுமே தள்ளி நிற்கும் போலிகளால் நிரந்து போன உலகில்….. பகுத்தறிவுப் பகலவனின் வழி நின்று சம உரிமை பற்றிய பேச்சு மிகச் சாதரணமாகவும் இயல்பாகவும் உவளிடம் வெளிப்பட்டதற்கும் இன்றும் வழக்கில் இருக்கும் பழைய கட்டுப்பாடுகளைச் சாடியதற்கும் “ஓ! feministஆ?” என அருவருக்கத்தக்க குரலில் (இந்தக் குரல் எந்தப் பாகுபாடும் இன்றி சில சமயம் இருபாலரிடமும் இருந்து ஒலித்தது!) நக்கலாக வந்து விழுந்த வார்த்தைகளால் அவ்வப்போது உவள் misanthropeஆக மாறிப் போவாள். எவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பிறரும் சேர்ந்து கோருவது இன்னும் சிறப்பாய் அமையுமோ அவ்வாறுதான் ஆண்கள் ‘பெண்ணியம்’ பேசுவது என்பது உவள் எண்ணம்.    

குடும்ப சாகரத்தில் நீச்சல் பயின்று கொண்டிருந்தவளைப் பார்த்து ஜெயகாந்தன் ஒரு ஓரமாக சுவற்றில் சாய்ந்தபடி சன்னமான குரலில் கூறுவார் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. பால் கணக்கு குறித்து வைக்கும் போதெல்லாம் ஏனோ பால்வண்ணம் பிள்ளை நினைவிற்கு வந்து புதுமைப்பித்தனை வாசிக்காமல் இன்னும் ஒரு நாள் கழிந்தது என அறிவிப்பார். துணிகளை மடித்து வைக்கும் போதெல்லாம் மூளையின் மடிப்புகளில் இருந்து காலித் ஹுசைனியும் ஜார்ஜ் ஆர்வெல்லும் மெல்ல வெளியேறத் துவங்கியிருந்தனர். முன்னொரு காலத்தில் ‘அதெப்படி ரசிச்சு வாசிச்ச கதை மறக்கும்?’ என வியந்திருந்தவளுக்கு அதற்கான பதில் மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது. 

ஒவ்வொரு நாளும் அதிகாலை கண் விழித்ததும் பால் காய்ச்சுவதில் துவங்கி வியர்க்க விறுவிறுக்க சமையல் முடித்து, குழந்தையைக் குளிப்பாட்டி, உணவூட்டி, இதற்கிடையில் கொண்டவனை அலுவலகம் அனுப்பி, பாத்திரம் கழுவி, குழந்தையுடன் விளையாடி, பின் தூங்க வைத்து, அந்நேரத்தில் வீட்டைச் சுத்தம் செய்வது, குழந்தை கலைத்துப் போட்டவற்றை ஒழுங்குபடுத்துவது, துணிகளைத் தோய்ப்பது என முடிப்பதற்குள் விழித்துக் கொண்ட குழந்தையைக் கவனித்துக் கொண்டே மிச்ச வேலையை முடிக்க முயல்வது, அலுவலகத்தில் இருந்து வந்த கொண்டவனுக்குத் தேநீர் போட்டு, இரவு உணவு செய்து அடுக்களையைச் சுத்தம் செய்து கண்ணயர்கையில் ஜி.நாகராஜன் மிகச் சரியாக நினைவூட்டுவார் – ‘நாளை மற்றுமொரு நாளே’…….   ஒரு கணம் தான் முடிவிலியாய்ச் சுழலும் சக்கரத்தினுள் ஓடிக் கொண்டிருக்கும் எலியோ என திடுக்கிட்டாள். நாள் முழுக்க வீட்டினுள் முடங்கி இருப்பது கூட உவளுக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. அதில் தனக்கான நேரம் என்று இல்லாமல் போனது தன்னையே தொலைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது உவளுக்கு. நேரமும் காலமும் உவளது விரலிடுக்கின் வழியே நழுவி கரைந்தோடிக்கொண்டிருந்தது. உவளுக்குப் பிடித்த எதையும் செய்ய இயலாது போன காலகட்டம் உவளுள் மெல்ல ஒருவித பயத்தை விதைத்தது. ‘மழலை வளர்ந்த பின் ஒருவேளை கொஞ்ச நேரம் கிட்டுமாயின் தனக்குப் பிடித்தவற்றைச் செய்வதற்கான மனநிலை தன்னிடம் மீந்து இருக்குமா?’ என்பதே பெருங்கேள்வியாய்த் தொக்கி நின்றது. குழந்தையை Day Care Centreல் விடும் அளவு தான் முற்போக்கானவள் இல்லை என்பதையும் ஒரு நன்னாளில் உணர்ந்தாள்.

 திருமணத்திற்குப் பிறகு ஆண்களின் உலகம் கொஞ்சமும் மாறுவதில்லை. நினைக்கும் போதெல்லாம் எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் நண்பர்களைக் காணவும் விளையாடவும் செல்ல முடிகிறது. கோபம் வரும் போதெல்லாம் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு புறச்சூழலை மாற்றி ஆசுவாசம் அடைய முடிகிறது. உவளுக்கோ தனது உலகம் முற்றிலும் மறைந்து போய்விட்ட ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னால் கூட பெண்ணியம் பேசுவதாக முத்திரை குத்தப்படும் அபாயம் இருக்கிறது அல்லது ‘நான் மட்டும் வீட்டினுள்ளேயே இருக்கேன்’ போன்ற சிறுபிள்ளைத்தனமான ஒப்புமைகளில் இறங்கிவிட்டதாகக் கொள்ளப்படும் என்பதாலேயே ஒன்றும் சொல்வதில்லை உவள். “எனக்கும்தான் பிடிச்சத எல்லாம் செய்ய முடியல” என்று பொதுமைப்படுத்தும் கொண்டவனிடம் “பணியிடம் என்று ஒன்று உண்டு உங்களுக்கு. அங்கு நாலு பேரைப் பார்க்கிறீர்கள். அளவளாவுகிறீர்கள். கைக்குழந்தையின் பொருட்டு எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிப்போட வேண்டிய சூழல். அடுக்களையைத் தாண்டி வேறு உலகம் இல்லாதது போல் ஆகிவிட்டது எனக்கு. இக்காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் வெறுமையுடன் தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று புரிய வைக்கும் முயற்சியில் தோற்றுப் போய் அமைதியாகிவிட்டாள் உவள். எவ்வளவோ புரியவில்லை. இது ஒன்று புரியவில்லை என்றால்தான் என்ன? போகிறது.

சிரித்து ஏமாற்றும் பூக்களை விட தமது இயல்பை நேர்மையாக வெளிப்படுத்தும் முட்செடிகள் பிடிக்கும் உவளுக்கு. வித விதமான கள்ளிச் செடிகளைத் தேடித்தேடிச் சேகரித்து வளர்ப்பாள். தினமும் இருமுறை நீரூற்றி உரமிட்டு கண்ணும் கருத்துமாக பேணுவது எதுவும் இல்லாமல் பாலைவனங்களில் யாரின் உதவியும் இல்லாமல் எந்த கவனிப்போ எதிர்ப்பார்ப்போ இல்லாமல் வளரும் கள்ளியை உவள் வலிமையின் அடையாளமாகவே பார்த்தாள். தன்னுடன் அடையாளப்படுத்திக் கொண்டாளோ என்னவோ? விருப்பத்திற்கேற்றவாறு உருவம் கொடுக்க அனுமதிக்கும் மண்பாண்டங்கள் செய்யப் பிடிக்கும்; கம்பீரமாகத் தோற்றமளிக்கும் யானை பிடிக்கும்; அவ்வளவு பெரிய உருவத்தைக் கோவில்களிலோ சாலைகளிலோ பரிதாபமாகப் பிச்சையெடுக்க வைப்பவர்களைப் பிடிக்காது; ஆசீர்வாதம் வாங்குகிறேன் என்ற பெயரில் யானைக்கு ஒவ்வாமையையும் கிருமித் தொற்றையும் தருவது அறவே பிடிக்காது; கடல் தன்னுள் மூழ்கி இருந்த பகலவனைப் பந்தாக்கி மேலே எறிந்து வானில் நிறுத்தி வைக்கும் காட்சி பிடிக்கும்; அலையுடன் தொட்டுப் பிடித்து விளையாடப் பிடிக்கும்; மேகங்களுக்குத் தன் கற்பனை உருவத்தை ஏற்றப் பிடிக்கும்; தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருக்கப் பிடிக்கும்; நேரங்காலம் தெரியாமல் பிடித்த எழுத்துகளில் தொலைந்து போகப் பிடிக்கும்; நல்ல திரைப்படங்களைப் பார்த்து முடித்த நெகிழ்ச்சியில் அழப் பிடிக்கும்; புதிய மொழிகள் கற்க பிடிக்கும்; ஒவ்வொரு மொழிக்கும் உரித்தான மொழிபெயற்க இயலாத சொற்கள் பிடிக்கும்; Hiraeth, Querencia, Nefelibata, Fernweh, Novaturient, Flaneur, Eudaimonia, Meraki, Onism, Ataraxia என அழகிய வார்த்தைகளைத் தேடித் தேடிச் சேகரிக்கப் பிடிக்கும்; உலகின் அற்புதமான சாலைகளை கால்கள் கொண்டு அளக்க பிடிக்கும்; தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்க பயணப்பட பிடிக்கும்…

இப்படியாக இன்னும் என்னென்னவோ பிடிக்கும் உவளுக்கு.

மான்டோவின் கதைக் களங்களில் அலைந்து திரிந்து விக்கித்துப் போனவள், Shoah நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்து வெடித்து அழுதவள், மாரி செல்வராஜின் ‘மறக்கவே நினைக்கிறேன்’ஐ மறக்கவே முடியாமல் கண்களில் நீர்த்திரை சூடியவள், சார்லி சாப்ளினின் பன்முகத்தன்மையை ரசித்தவள், ‘மண்ணிலே ஈரமுண்டு’ பாடல் தொடங்கும்போதே அக்குரலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து பாடலின் முடிவில் பலகோடி மக்களின் வலியை தன் கன்னத்தில் வழிந்த நீரில் உணர முற்பட்டவள்…. இவ்வுணர்வுகள் மீண்டும் ஆட்கொள்ளாதா என்ற ஏக்கத்தை மட்டுமே மனதில் தேக்கி வைத்திருந்தாள். அந்த ஏக்கமும் ரசனையும் மெல்ல மெல்ல மறையத் துவங்கிவிடுமோ என்ற பீதிதான் உவளை ஆட்கொண்டிருந்தது. இவையெல்லாம் மீதமிருக்கும் காலத்திற்கான முன்னோட்டமோ என எண்ணுகையில் தலை சுற்றியது உவளுக்கு.

உலக திரைப்படங்கள், இலக்கியம், பொதுவுடைமை, பகுத்தறிவாதம் – இவற்றால் ஆன உலகிலிருந்து மெல்ல மெல்ல உவளை வெளியே இழுத்துக் கொண்டு வந்த லௌகீக வாழ்வின் சல்லியான நசநசப்புகள் வேறு சகிக்க இயலாதவையாக இருந்தன. ஒவ்வாத எல்லோரிடமும்(வேற யாரு? சொந்த பந்த பிக்கல் பிடுங்கல்தான்!) எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி இருக்கும் உவளது முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. உவளை எங்கேனும் காண நேர்ந்தால் உவளுக்கு நினைவூட்டுங்கள் – “It’s just that you are surrounded by a bunch of toxic creatures” என்று. 

வாழ்வின் மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் உவளது குழந்தை அவ்வப்போது அளவற்றதாய் உவளுக்கு மீட்டுத் தந்து கொண்டிருந்தாள்.

உவளது டைரியிலிருந்து உவளைப் பற்றி இவ்வளவுதான் சேகரிக்க முடிந்தது.

இந்தி திணிப்பு, மதவெறியர்கள், ஏதிலிகள், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து அறச்சீற்றம் கொண்டிருந்தவள் அது பற்றிய கருத்தரங்குகளுக்குச் சென்றவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? அநேகமாக உப்பு குறைந்து விடக் கூடாது, காரம் கூடி விடக் கூடாது, சோறு குழைந்து விடக் கூடாது என கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள். ஆனாலும் இடையிடையே பாதிரியார் ஸ்டான், கௌரி லங்கேஷ், வரவர ராவ், பஞ்சாப் விவசாயிகள் போன்ற எல்லோரும் உவளின் ஆழ்மனதில் கல(க்)கத்தை உண்டு பண்ணிக்கொண்டே இருந்தனர். 

மகிழ்ச்சியான கலகலப்பான இயல்பிலிருந்து தனக்குச் சற்றும் பொருந்தாத இறுக்கமான இயல்பிற்குத் தன்னை அறியாமலேயே மிதந்து சென்று கொண்டிருந்தாள். முற்றிலும் உணர்வற்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பவளுக்கு “இயல்பு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தாயா? உணர்ந்த போது வலித்ததா?” என்ற தனது மனதின் கேள்விக்குக் கூட பதில் இருக்காது உவளிடம். ஏனெனில் எதிர்நீச்சல் இடுவதும் களைத்துப் போவதுமாகக் கடந்த காலகட்டத்தில் “எப்போது வலிக்கத் துவங்கியது? எவ்வளவு வலித்தது?” என்றெல்லாம் உவளுக்கு ஞாபகமிருக்க வாய்ப்பில்லை. 

யாருக்குத் தெரியும்? உவளின் உள் உறங்கும் ஃபினிக்ஸ் மீண்டும் சிறகைப் படபடத்து அடிக்கத் துவங்கலாம்…. அல்லது எல்லாமும் பழகிப் போகலாம்.

இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை.

  • சோம. அழகு
Series Navigationபார்வை 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *