நாவல்  தினை              அத்தியாயம்  பத்தொன்பது          CE 1900

This entry is part 7 of 9 in the series 18 ஜூன் 2023

   

 *

எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது.  இறங்க வேண்டாம்  

காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது. 

இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று படுக்கையிலிருந்து இறங்கப் பார்த்து கால் சரிவர எழாமல் குழைந்து நிற்கிறார். 

அண்ணாரே இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் இதோ உணவையும், ஓய்வையும் நோக்கிப் போகும் நம் பயணத்தைத் தொடரப் போகிறோம். 

குரலில் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தோடு குயிலி சொல்கிறாள். 

நீலரா மசிவார்? தேவலோக அமிர்தமென்றாலும் இப்போது அவர் அஃதொன்றும் நாடார். ஓய்வெடுக்க வீடு போனால் போதும். இந்த நூதன வாகனம் உணவுக்கும் ஓய்வுக்கும் எங்கே கொண்டுபோகிறதோ. அல்லது நான் தான் உணவோ? யாருக்கு? 

இந்தப் பெண்கள் குருதி உறிஞ்சிக் குடிக்க வந்த யட்சிகள் தானோ. யட்சிகள் கூட்டு சேர்த்துக்கொண்டு ரத்த வேட்டை ஆடுவதாகக் கேட்டதுமில்லை படித்ததுமில்லையே. 

மருத்துவரின் கழுத்திலும் செவி மடலிலும் அட்டைப்பூச்சி அப்பி குருதி உறிஞ்சிய தடம் உண்டு எனில், யட்சி கடித்து குருதி உறிஞ்சிய தடம் ஏதுமில்லையே. மேலும், ஒரு பெருங்காலம் நைஷ்டிக ப்ரம்மச்சாரியாக இருந்த பேரிளையவர்களை யட்சியர் பின் தொடர்வது அலாதியன்றோ .

 அவருக்கு மீண்டும் அற்ப சங்கை தீர்க்காமல் வயிறு வலித்தது. அண்ணான் அக்கச்சியரிடம் சிறுநீர் கழிப்பதைப் பற்றிப் பேசுவது சீலமன்று என்று இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லைதானே. 

அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு கூறியது – என்ன பயணமோ சேருமிடமும் தெரியாது போகும் வழியும் புலப்படாது அந்தகாரத்தில் அமர்ந்தபடி அற்பசங்கை தீர்த்துக்கொள்ள யாரோ உதவிடக் காத்திருக்கிறேன். 

ஓ குயிலி உன் உண்மையான பெயர் அதுவோ வேறே எதுவோ அடி வானம்பாடி இப்படியுமா பெயர் வைத்துக்கொண்டு பத்து கிரகம் சூரிய சந்திரன் போய்வரும் பரபரப்போடு சதா அலைந்து கொண்டிருக்கும் சிறுமியே, சங்கை தீர எங்கே போகணும்? இருட்டில் கிழக்கு மேற்கு தெரியவில்லை.

அண்ணாரே பின்னால் பாரும் என்று வானம்பாடி குரல் அவர் காதருகே ஒலிக்கத் திரும்பிப் பார்த்தார். கழிவறைத் தொகுதி அங்கே வந்திருந்தது. அவர் எழுந்து தள்ளாடி அதை நோக்கி நடந்து போக அவசரமாக அவரிடம் குயிலி சொன்னாள்.

 அங்கே போன காரியம் மட்டும் முடித்து வந்தால் போதும்; வேறு கதவுகளோ பலகணியோ தட்டுப்பட்டால் அவற்றை இயக்கிப் பார்க்க வேண்டாம். கருந்துளை பின்னால் இருக்கலாம் காலமும் தூரமும் இல்லாப் பெருவெளியில் உறிஞ்சப் படலாம். 

அவள் தெளிவான கூடவே அன்பான குரலில் சொல்ல மருத்துவர் தன் படுக்கையில் அமர்ந்தார். அற்ப சங்கை சூரிய மண்டலத்தில் சுக்கிரனையோ செவ்வாயையோ நோக்கி என்னைச் செலுத்தி பிரபஞ்சவெளியில் சங்கை தீர்க்க வழி சொல்லுமோ? அத்தனை உலகளாவிய நீர்பிரிதல் எனக்கு வேண்டாம் 

ஐயன்மீர் அது நிற்கும்போது நிற்கட்டும்.  அது இயங்கும்போது கழிவு  நீக்கிவரத் தடையேதும் இல்லை – சிறுமியர் பையச் சொல்ல அவரும் பயம் மாறாமல் போனார்.

இருட்டுக்குள்ளே குருட்டாண்டி மாதிரி எங்கேயோ நடந்து ஏதோ கதவைத் திறந்து உள்ளே போய் வந்திருக்கேன். என்னமோ போ. நாம் போய்ச்சேர இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்? 

அவர் சொல்ல, வானம்பாடி ஓடி யந்திர அறையைப் போய்ப் பார்த்துத் திருப்தியாகித் தலையாட்டித் திரும்பி வந்தாள்.

குயிலி, அண்ணரே நீங்கள் கவிஞர்தானே எங்கே கடைசி அடி இருட்டில் இங்கொரு குருட்டாண்டி என்று வருகிற மாதிரி நிலைமண்டில ஆசிரியப்பா யாத்தருளும் என்று வேண்டினாள். 

இந்த நரகத்தில் அதுதான் குறைச்சல் என்று முணுமுணுத்தபடி சிரித்தார். போகட்டும், வெறும் ஆசிரியப்பா பாடுங்களேன்  பாடி முடிக்க தேனும் தினையும் கலந்து பிடித்த உருண்டையும் வாழைப் பழமும் கிடைக்கலாம் என்றாள் குயிலி. 

ஏதாவது அதுவும் இதுவும் கற்பனை செய்யாதே பெண்ணே. தேனும் தினைமாவும் தர முடியுமென்றால் என்னை வெளியே அனுப்பியிருக்க மாட்டாயா? பசி எல்லாம் ஒரு பொருட்டில்லை எனக்கு. கையும் காலும் மூளையும் பேச்சுமாக திரும்பப் போனால் போதும் என்று நினைக்கிறேன். 

அவர் சொல்லச் சொல்ல ஆசிரியப்பா அவர் புத்தியில் வரி வரியாக உருவாகி வந்தது. எங்கோ கீச்சென்று சில்வண்டு இருளைக் கிழித்துக்கொண்டு சீழ்க்கை அடிக்கும் சத்தம். இரவுதான். 

எத்தனை நூற்றாண்டுகள் கடந்து போனாலும் அவை விடியலிலோ பிறகு நாளின் எந்தப் பகுதியிலோ அழைப்பதில்லை. 

சுவர் மீண்டும் ஒளிர்ந்தது. நீங்கள் ஒதுங்கி இருப்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். பெருந்தேளர் அரசாளும் காலத்திலிருந்து முப்பது நூற்றாண்டு பின்னால் கடந்து சேர்ந்த காலம் அது. பேசிய சுவர் இருளடைந்தது. 

காலப் படகில் புதியதாக நீட்டப்பட்ட குசினிக்குள் இருந்து வானம்பாடி ஒரு வெள்ளித் தட்டில் தினை உருண்டைகளும்,  அரிசிப்பொரி உருண்டைகளும் வாழைப் பழங்களுமாக வைத்து எடுத்து வந்து மருத்துவரிடம் அளித்தாள். வேகவைத்த நிலக்கடலை இரண்டு குவளை நிறையத் தட்டில் இருந்தது.  

படகில் நெருக்கடி நிலைமை அறிவிக்கும் விளக்கு எரிய   மருத்துவரும்   குயிலியும் வானம்பாடியும் மங்கலான விளக்கொளியில் சற்றே உருவம் தெளிவின்றிக் காட்சியளித்தார்கள். 

குயிலி படகின் கூறுகளைச் சற்றே மாற்றியமைக்கும் விசை வேலை செய்கிறதா என்று நோக்க, செய்கிறது என்று சுவர் அறிவிப்பு கூறியது. குயிலி காலப் படகின் இருப்பு தொடர்பான கூறுகளைச் சற்றே மாற்ற, படகு வெளியுலகுக்குக் காணாமல் போனது.

படகுக்குப் பக்கத்தில் சமசமவென்று சத்தம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் பேசுகிறார்கள்.

இன்னிக்கு கிட்டப்பா பாடின மேயாத கானகத்தே இந்த வருஷம் ஒற்றைவாடை கொட்டகையிலே பாடினதை விட அருமை போங்கப்பா. 

நாரதர் அந்தப் பொண்ணு சரியாகப் பாடலே. நாரதர் குரல் இப்படியா கீச்சுனு இருக்கும்? 

கதர்க்கொடி கப்பல் காணுதே பாடமாட்டேனுட்டா போ. வெள்ளைக்காரன் மேலே அப்படி பயமோ பிரேமையோ. வெள்ளையா இருந்தாப் பிடிக்குமா? 

சாயவேட்டியை இடுப்பைச் சுற்றிக்கொண்டு காயாத கானகத்தே பாட்டை சகிக்க முடியாமல் பாடினானொருத்தன். அப்போது மறுபடி சுவர் அறிவிப்பு ஒளிர்ந்தது, 

எம்டன். 

இந்தச் சொல் திரும்பத் திரும்ப சுவரில் பெரிய எழுத்துகளில் வர, சுவர் இருள் பூசியது. நிலம் நடுங்க நெருப்பு உருண்டைகள் வெளியே இருந்து அக்னி எச்சிலாகத் துப்பபட்டன, 

தூரத்தில் கடல் அடங்காமல் இரைந்து கொண்டிருந்தது, கரையைத் தொடுவதுபோல் அலைகளின் போக்கில் ஆடி அலையும் போர்க் கப்பல் ஒன்று விசைத் துப்பாக்கிகளைத் தன் மேல்பரப்பில் இருந்து இயக்கி கடற்கரையில் தீமழை பொழிய வழிசெய்து கொண்டிருந்தது,

  மாறுபட்ட வரலாறாகத் தோன்ற, மதராஸ் பட்டிணத்தின் ,மீது கடல் தாக்குதலும்  வானத்தில் பறக்கும் போர் விமானங்களில் இருந்து அக்னிப் பிழம்புகளாகக் குண்டுகளின் மழை.  

வானம்பாடி பயந்து குயிலியை இறுக அணைத்துக் கொண்டிருந்ததோடு தீக்குடுக்கை தீக்குடுக்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். 

திரை ஒளிர காலம் 20ஆம் நூற்றாண்டு என்றும் தளம் இந்தியாவில் மதராஸ் எனவும் கூடுதல் தகவல் அளிக்கப்பட்டது. எம்டன் என்ற சொல் சுவரில் நகர்ந்தபடி இருந்தது.

வானம்பாடி இடது உள்ளங்கையை விரித்துப் பார்க்க பொது மின் அறிவுத் தொகுதி எம்டன் என்பது யார், எது, என்ன என்று தேவையான அறிவை அவளுக்குள் கடத்தியிருந்தன. 

குயிலி அவள் கையைப் பிடித்தபடி ஒருவினடி நிற்க அவளுக்குள்ளும் அந்த அறிவுடமை சார்ந்து பிடித்தது. 

வெளியே போக வேண்டாம் முதல் உலக மகாயுத்தம் நடக்கிறது என்று சுவர் ஒளிரலாச்சு.

 இரண்டு பெண்களும் ஆர்வத்தோடு உள்ளங்கையைக் கவனிக்க மதறாஸ் 1914 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி என்று காலமும் இடமும் போதமானது. 

எம்டன் போர்க்கப்பல் இலங்கை வழியாக மலேயா போகும் வழியில் மதறாஸ் துறைமுகத்தில் எட்டிப் பார்த்தது. அந்நேரம் சிறு கப்பல் ஒன்று அங்கே நங்கூரம் இட்டிருக்க, வேறு மரக்கலமின்றி வெறுமையான கடல்வெளியில் ஆழமாக்கிய கரை கடந்து பேரலைகள் எழுந்து புரண்டு  மடிந்தன. 

கடற்கரையில் வரிசையாக நின்றிருந்த பர்மா ஷெல் பெட்ரோல் கம்பெனியின் மண்ணெண்ணெய் சேமிப்பு பீப்பாய்களைக் குறிவைத்து எம்டன் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. 

பீப்பாய்கள் தீப்பிடித்து எரியத் துறைமுகம் பகல் நேரத்தில் இருப்பதுபோல் வெளிச்சம் கொண்டிருந்தது. எந்த நிமிடமும் பீப்பாய்கள் வெடித்துச் சிதறலாம் என்பதாக அங்கே வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டம் பயப்பட்டது. 

வெடித்தால் பக்கத்தில் இல்லாமல் இருந்து உயிர் பிழைக்கலாம் என்றோ ஓடிப் பிழைத்துத் தப்பிக்கலாம் என்றோ அசட்டுத் துணிச்சல் அங்கே இருந்தவர்களுக்கு. 

ஓடுங்கடா உசிர் மேலே ஆசைன்னா ஓடுங்க. யாரோ சத்தம்போட அந்தக் கூட்டம் ஓடிப் போனது.

எதிர்பார்த்தபடி பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பீப்பாய்கள் வெடித்துச் சிதறின. 

 எம்டனில் பொருத்திய துப்பாக்கிகள் துறைமுகத்துக்கு நெருங்கிய தெருக்களில் குண்டு எறிந்து கொண்டிருக்கின்றன, அந்தக் காட்சிகள் இப்போது வெளிச்சப்படுகின்றன.  

சுவரில் காட்சி கலைந்து தெருக்கள் தட்டுப்படுகின்றன. வீட்டு வாசல்களில் நின்று அடுத்த வீட்டுக்காரரோடு ஒரு நிமிடம் பேசுவதும், சத்தம் போட்டு ஒருவருக்கு ஒருவர் செய்தி பரிமாறிக் கொள்வதிலும் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்களே தவிர குண்டு தாக்குதலை எதிர்கொள்ள எந்த ஏற்பாடும் செய்வதாகத் தெரியவில்லை. 

இப்போது குண்டு தாக்குதல் நின்றுவிட்டது. எம்டன் போர்க் கப்பல் மதறாஸில் இருந்து வெற்றிகரமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. நேரம் பாதுகாப்பானது.

எங்கே இருக்கிறோம்? கப்பலைக் காட்டுங்கள். நான் ஏறி நாகைப்பட்டனமோ முசிரியோ போய்ச் சேர்ந்துகொள்கிறேன். குண்டு போடும் கப்பல் என்றால் என்ன? சொல்லுங்கள் இப்போதே என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தார் புலவர் நீலன். 

இந்தச் சுவரில் பின்னால் என்ன இருக்கிறது? குட்டிச் சாத்தான் வேலையா இது பேசுவதும் நிற்பதும்? பக்கத்தில் போனால் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ரத்தக் காட்டேரி இதற்குள் இருக்கிறது போல. என்னை இறக்கி விடுங்கள் என்று பின்னும் நிறுத்தாமல் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் அவர். 

இறங்கிப் பார்க்கலாமா என்று வானம்பாடி குயிலியிடம் பார்வையில் கேட்டாள். 

இந்த மனுஷரை என்ன செய்ய? இருட்டு, யுத்தகாலப் பெருநகர். யுத்தம் வேறு நடக்கிறது. 

குயிலி கதவைத் திறக்க எங்கே தான் இருந்ததோ நீலன் வைத்தியருக்குள் அத்தனை வலிமையும் விரைவும். அனுமன் தாள் போற்றி என உச்சக்குரலில் முழங்கியபடி படியிறங்கி ஓடினார். 

கையில் துணிமணி மூட்டையோடு பராரிகள் போல் பலர் இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். சருவப்பானையில் சோறோடு சில முதுபெண்டிர் ஓடிக் கடந்து போனார்கள். 

எரிந்து போன பெட்ரோல் பீப்பாயின் எச்சம் நெருப்புச் சிறகு முளைத்து காற்றில் பறந்து வீதி ஓர மணலில் விழுந்து சிதறியது.  அந்த ஒளி அச்சமூட்ட புலவர் நீலன் நடுவீதியில் மார்பின் குறுக்கே கைகட்டி நின்று நான் எந்தத் தழலுக்கும் அஞ்சேன் எந்த அழலுக்கும் பயப்படேன் என்றபடி கால யந்திரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தார். 

இதுலே படி எங்கே இருக்கு குயிலி? இல்லே கை கொடு ஏறிக்கறேன். கொஞ்சம் சீக்கிரம் வீடு போகலாம். உறக்கம் வருது என்று நைச்சியமாகச் சொல்லியபடி ஏறிவர, வானம்பாடி அவர் பின்னால் இருந்து   பாலிமர் குச்சியால் அவர் தோளைப் பின்னால் இருந்து தொட புலவர்   தன்படுக்கையில் படுத்து உடன் நித்திரை போகினார். 

குயிலியும் வானம்பாடியும் அவரை உள்ளே விட்டுவிட்டு அவர் மேல்துண்டில் இணைத்த காமிரா மூலம் அவரைப் பார்த்துக்கொண்டு 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இருண்ட ராத்திரியில் வடக்கு மதறாஸ் வீதியில் நடந்து வந்தார்கள். 

நாம் காட்சிப்படுவோமா? வானம்பாடி கேட்டாள். குயிலி கூறினாள் – நாம் மட்டும் காட்சிப்பட கூறுகளை நுணுக்கமாக மாற்றியிருக்கிறேன்.

வீட்டு வாசலில் நின்ற கூட்டம் இப்போது எங்கே போனது? 

உள்ளங்கையில் நாளும் நேரமும் பார்த்தாள் குயிலி. ஆண்டு 1914 செப்டம்பர் தேதி 24 இல்லை, 23 என்று ஒரு நாள் பின்னதாக நகர்ந்திருக்கிறது. 

காலயந்திரம் அவ்வப்போது ஒரு நாள் இரண்டு நாள் முன்னே பின்னே நகர்ந்து நிலைகொள்வது வாடிக்கை. மூவாயிரம் ஆண்டு முன்னோ பின்போ பாயும்போது ஒரு நாள் இரண்டு நாள் துல்லியமாக அடையாமல் இருப்பது சகஜம்தான். 

காட்சி மயங்கி அம்மாதிரி நாள் திருத்திக் கொள்ளும்போது,  பரபரப்பான இன்றைய வீதி, அடுத்த நிமிடம் நேற்றைய தெருவாக யாருமின்றிக் கிடப்பது விசித்திரமாக இருக்கும். குவியாடியில், குழியாடியில் முகம் பார்க்கிறது போல அது குயிலிக்குப் பரிச்சயமானதாகி விட்டது. 

இங்கே விசித்திரமாக தெருவே வலம் இடமாக நகர்ந்ததுபோல் உள்ளதும் ராத்திரிப் பறவைகள் தலைகீழாகப் பறப்பதும் காணக் கிடைக்கிறது. நாளை இந்தத் தெருவில் தீக்குடுக்கைகள் சரமாரியாக விழும் என்று இப்போது சொன்னால் யாரும் நம்பப் போவதில்லைதான்,  

நாய்களின் குரைப்புச் சத்தம் அருகே கேட்டது. திண்ணைகளில் தூங்கி இருந்த தெருநாய்கள் காலடிச் சத்தம் கேட்டு சிலிர்த்து எழுந்து தம் ஆட்சேபத்தை வன்மையாகப் பதில் செய்தன. 

தெருவிலேயே பெரிய வீடாக ஓடு வேய்ந்த கூரையும் இரண்டு மாடியுமாகத் தென்பட்ட வீட்டு வாசலில் குயிலியும் வானம்பாடியும் ஒரு வினாடி நின்றார்கள். 

யாரது? கையில் தீபம் ஏந்தி வாசலுக்கு வந்த தீர்க்கமான நாசி உடைய பெண் இவர்களைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தாள். 

தேசாந்தரிகளா என்று கேட்க இந்தப் பெண்கள் அப்படியும் தான் என்றார்கள். புருஷர்களெங்கே என்றபடி தீபம் அணையாமல் வாசல் திண்ணை மாடப்புரையில் வைத்துவிட்டு ஒரு  சிரிப்போடு திரும்பினாள் அந்த இல்லத்தரசி. 

தனியாக திருப்பதி போய்த் தரிசனம் செய்து திரும்புவதாக ஒரு பிரார்த்தனை. இவள் என் தங்கை. பெற்றோர் இல்லை. புருஷன்மார் மலேயாவுக்கு வியாபாரம் செய்யக் கப்பலேறிப் போனவர்கள் திரும்பிவர இன்னும் ஒன்பது மாதம் பிடிக்கும்.  

இருந்தாலும் ஆண்கள் இன்றி. அந்தப் பெண் ராகம் இழுத்தாள். 

இல்லாமல் என்ன? நாங்கள் எங்கள் வயதான தாய்மாமனைத் துணைக்குக் கூட்டி வந்திருக்கிறோம். வயது எழுபது என்பதால் தள்ளாமை காரணம் சீக்கிரம் களைப்படைந்து விடுகிறார். வண்டியில்  உறங்கிக் கிடக்கிறார்.    விடுதி அல்லது போஜனசாலை ஏதாவது தட்டுப்பட்டால் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு அவருக்கும் வாழை இலையில் கட்டி வாங்கிப் போக உத்தேசம். 

அப்படி என்றால் இன்னும் ஐந்து மைல்கல் நடக்கத் தயார் என்றால் சரி. 

அய்யோடா ஐந்து மைல் கல்லா அதுவும் இந்த ராத்திரியிலா. 

அந்தப் பெண் தீபத்தின் இலுப்பெண்ணெய்க் கசிவும் மிச்சமிருந்த சூடும் குயிலிக்குப் பகர்த்தி அவள் கண்களை நிழல் பின்புலத்தில் சந்தித்துக் குறுநகையோடு கேட்டாள்- அப்படி என்றால் என் வீட்டில் பசியாறி இங்கேயே ராத்தங்கிப் போகவேண்டும்.          

 இந்த வீட்டில் நாளை இரவு, இதே நேரத்தில், வீட்டு ஆடவரோடு துணிமணி எடுத்துக் கொண்டு, குண்டு விழுந்ததைத் தொடர்ந்து ஓடி உயிர் பிழைக்க, அவள் அலறியபடி பூமி தொட்டு,  கால் முட்டு நிலம் பட்டு சிராய்த்திருக்க, ஆகுமளவு வேகத்தில் விரைவது மனக் கண்ணில் பட,

 அவள் மேல் பச்சாதாபம் ஏற்பட்டது குயிலிக்கு. .

காலப் பிரவாகத்தையும் நிகழ்வையும் கட்டுப்படுத்த அவள் யார்? எம்டன் கப்பலை நாளைப் பார்க்க வேண்டும் முடிந்தால். 

விருந்தாளிப் பெண்களுக்காக சுடுசோறும் வாழைக்காய்க் கறியும் சமைத்து விருந்தளித்த அவள் பெயர் கன்னியம்மா என்று புலப்பட்டது.

 வானம்பாடி குயிலி காதில் கிசுகிசுத்தாள் இந்தப் பெண் இத்தனை கரிசனம் நம் மீது காட்டுகிறாளே மாற்றுப் பிரபஞ்சத்துப் பெண்ணாக இருப்பாளோ. 

அவளையே கேட்டுவிடட்டுமா? குயிலி அவளை வழிமறித்து மாற்றுப் பிரபஞ்சம் என்றபோது அவள் குழந்தைபோல் விழித்துச் சிரித்தாள். 

 தெலுங்கு தெரியாது அம்மா என்று கூட்டிச் சேர்த்துச் சொல்லவும் செய்தாள். 

உங்களை வாவா என்று வருந்திக் கூப்பிட்டு விழுந்து விழுந்து உபசரிக்கக் காரணம் தெரியாமல் ஏதோ சூதுவாது இதற்குப்பின் இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அவள் கேட்டாள். இல்லை என்று பட்டவர்த்தனமாகச் சொன்னாள் வானம்பாடி.

 அந்தப் பெண் ஒன்றும் பேசாமல் ஒரு இலைப் பொதியை அவளிடம் கொடுத்து இது உங்கள் அம்மாவனுக்கு என்றாள். என்றால்? வண்டியில் உறங்கியிருக்கும் மாமனுக்குப் பசிக்காதா? அவருக்கு ராச்சாப்பாடு இது என்று சொல்லியபடி அடுத்த அறைக் கதவைத் திறந்தாள். 

என் அம்மா வயது 80 ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து வயதுக்குப் பொருந்தாத ஒப்பனையும் உடுப்புமாக ஒரு கிழவியம்மாள் வந்தபடி நலமா எனக் கேட்டாள். 

மூன்றாம் நூற்றாண்டு பிரஜை ஆன அவள் இங்கே இருபதாம் நூற்றாண்டில் என்ன செய்கிறாள்? 

வானம்பாடி மயக்கம் போட்டு விழாத குறைதான். 

காலப் படகைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் காலம் குழம்பி வருகிறது. அதிகம் சுற்றாமல் உள்ளே போய் இருக்கலாம் வா என்று குயிலி அவளை ஆதரவாக அணைத்துக் கூட்டிப் போனாள்.

காட்சி மறுபடி குழம்ப ஓர் அந்தண இல்லம். புதிதாகக் கல்யாணமான கணவன், மனைவி. மற்றபடி சில தேள்கள். 

இரண்டு பெண்களும் அங்கே நடந்தார்கள்.

நானும் வருகிறேன். சும்மா தானே படுத்திருக்கேன்.

குயிலியும் வானம்பாடியும் திகைத்துப் போய்ப் பார்த்தார்கள். சிவப்பு மேல்துண்டைத் தலையில் லேஞ்சி போல் கட்டிக்கொண்டு நீலன் வைத்தியர். குளிராக இருக்குதம்ம என்றார் அவர் கூட நடந்தபடி.

(தொடரும்)

Series Navigationநாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்மௌனி
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *