திரை

This entry is part 3 of 9 in the series 18 ஜூன் 2023

ஸிந்துஜா  

காசி ஐயாவின் வீட்டை அடைந்த போது மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்து, வந்த காரியம் பங்கமெதுவுமில்லாமல் நடந்து விட்டால், வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து விட்டு கிரவுண்டுக்கு ஓட வேண்டும். ஒன்பது மணிக்குள் அங்கு நிற்காவிட்டால் அவன் இடத்தைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் முத்துசாமியை கேப்டன் எடுத்துக் கொண்டு விடுவான். மறுபடியும் சான்ஸ் கிடைக்க கேப்டனின் காலில் எவ்வளவு தடவை விழ வேண்டும் என்று அந்தக் கேப்டனுக்கே தெரியாது.அவன் ஆல்ரவுண்டராக நன்றாக விளையாடுவதால் கேப்டனாகி விட்டான். காசிக்கு ரொம்ப இடம் கொடுத்தால் தன் வேலைக்கே உலை வைத்து விடுவான் என்ற பயமும் கேப்டனுக்கு இருந்தது. அதனால்தான் அவனைக் கழித்துக் கட்டக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பான். ஆனால் அம்மாவின் கவலைகளுக்கு முன்னால்  அவன் கவலைகள் ஒன்றும் பிரமாதமானவை அல்ல என்று காசி நினைத்துக் கொண்டான்.

ஐயாவின் வீட்டு வாசல் கதவு வழக்கம் போலத் திறந்து கிடந்தது. வாசலில் நாயோ, காவலாளோ வருபவர்களை வரவேற்கிறேன் என்று பயமுறுத்த வேண்டியதில்லை என்று நினைத்தவர் போல ஐயா அவர்களுக்குத் 

தன்னிடத்தில் தங்க இடம் கொடுக்கவில்லை. காசி வாசலைப் பார்த்த போது சற்றுப் பெரிய கறுப்புக் கடப்பைக் கல்லாலான மூன்று படிக்கட்டுகள் வாசல் நிலைக்கு கீழ் வீற்றிருக்க அவற்றுக்குச் சற்று முன்பாகக்  கோலம் போட என ஒரு வட்ட வடிவ சிமிண்ட் அமைப்பு உட்கார்ந்திருந்தது. காலையில் போட்ட அரிசிமாக் கோலத்தைச் சுவைக்க நாலைந்து சிட்டுக் குருவிகள் பறந்து வந்து உட்கார்ந்தன.

அவன் படிகளை ஏறி நிலையை அடைந்த போது “யார்ரா அது?” என்று கேட்டபடி ஐயாவின் மனைவி கையில் ஒரு பாத்திரத்துடன் வந்தாள். அவனருகில் வந்ததும் “ஓ, நீயா? எப்பிடிடா இருக்கே காசி?” என்று கேட்டவள் கையில் வைத்திருந்த சிறிய தட்டை அவனிடம் நீட்டி “இத அந்த மதில் மேலே வச்சிடறியா?” என்று கொடுத்தாள். கொஞ்சம் அரிசிச் சோறும் பருப்பும் கலந்து வைத்திருந்த காகிதத் தட்டிலிருந்து நெய் வாசனை மணக்க மணக்க வந்தது. அவனிடம் “காக்காய்க்கு. அட! இதப் பாரு. ஏதோ வயித்திலே மணியடிச்ச மாதிரி ரெண்டும் வந்திருச்சு” என்று மதில் சுவரைக் காட்டினாள். இரண்டு காக்கைகள் தம் அலகுகளை அசைத்தபடி அவர்கள் இருவரையும் பார்த்துக் “கா கா” என்று கத்தின. காசி சிரித்துக் கொண்டே மதில் சுவரின் மீது அந்தத் தட்டை வைத்து விட்டுத் திரும்பினான்.

ஐயாவின் மனைவி “உள்ற  வந்து உக்காரு.  ஐயா பூசைலே இருக்காரு.

முடியற நேரந்தான்” என்று சொல்லி விட்டுச் சென்றாள்

அவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டான். பெரிய ஹால். அதன் நடுவே பெரிய சோஃபாக்கள்.  பெரிய டிவி ஒரு பக்கத்தையே அடைத்திருந்தது போலத் தோற்றமளித்தது.. வலது மூலையில் பெரிய குளிர்சாதனப் பெட்டி. எல்லாம் பெரிது பெரிதாக நிமிர்ந்து நின்றன. ஐயாவைப் போல. மரியாதையையும் பயத்தையும் ஒரு சேர எழுப்பும் அவரது தோற்றம் எப்போதும் அவனுக்கு ஒரு விதமான பயத்தைத்தான் தந்திருக்கிறது. அதுவும் திடீரென்று அவர்களுடன் பழக்கத்தை முறித்துக் கொண்டு விட்ட பிறகு கடைத் தெருவில் அவன் அவரைப் பார்த்ததுண்டு. வெள்ளை வெளேரென்ற வேட்டியும், வெள்ளைச் 

சட்டையும் வெள்ளைத் துண்டுமாக அந்த ஆஜானுபாகுவான உருவம் வரும் போது எதிரே வரும் ஆளுக்கு அவர் விரும்பாமலே ஒரு பணிவுத் 

தோற்றம் வந்து விடும். ஐயாவைப் பார்த்தால் அவருக்கு ஐம்பது வயது நடக்கிறது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மிகுந்த தயக்கத்துடன் சொல்வது ஒருவேளை தப்பாயிருக்குமோ என்னும் ஒரு தயக்கம் நிரம்பிய குரலில் ‘நாப்பது வயசு இருக்குமா?’ என்று கூற வைக்கும் உடற்கட்டு. ஒரு நாள் அவனைப் பார்த்த போது அவர் முகம் ஒரு வினாடி சுருங்கிப் பிறகு பழைய நிலைக்கு வந்து “எப்பிடிடா இருக்கே?” என்று கேட்டு விட்டு அவன் பதிலைக் கேட்காமலே நடந்து போனார். 

காசியின் குடும்பத்துடன் அவர் குடும்பம் நெருக்கமாகத்தான் இருந்தது. திடீரென்று ஒரு நாள் அவன் அப்பாவிடம் “ஏம்ப்பா ஐயா இப்பல்லாம் நம்ம வீட்டுக்கு வரதே இல்ல?” என்று கேட்ட போது அப்பா பதில் எதுவும் சொல்லாமல் அவனைக் கோபத்துடன் பார்த்தார். உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த அம்மா “காசி, வெரசா சாப்பிட்டுக் கிளம்புடா. எங்கூட ரேசன் கடைக்கு நீ  வந்தாதான் ரெண்டு பேருமா அவ்வளளோஜாமான்களையும் 

தூக்கிட்டு வர முடியும்” என்றபடி அவனை சமையல் உள்ளுக்கு இழுத்துக் கொண்டு போனாள். அவன் அவளிடம் ஐயாவைப் பற்றிக் கேட்க முற்பட்ட போது  அவள் அவன் வாயைப் பொத்தி விட்டு அவளிருக்கும்இடத்திலிருந்து

கணவன் நின்றிருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் வீட்டு வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவள் காசியிடம் “ஐயாவைப் பத்தி எதுவும் நீ பேசக்கூடாது. அப்பாக்கு எப்படிக் கோபம் வந்திச்சு பார்த்தேல்லே?” என்று கண்டிப்பு நிறைந்த குரலில் கூறினாள். அவன் அவளிடம் ஏதோ கேட்க வாயைத் திறந்த போது “இது பெரியவங்க விசயம். தெரிஞ்சிச்சா? நீ பாட்டுக்கு உன் வேலையைப் பாத்துக்கிட்டு போயிட்டே இருக்கணும்” என்றாள்…

உள்ளேயிருந்து மணி அடிக்கும் ஒலி கேட்டது. பூஜை முடிந்து விட்டது என்று காசி எழுந்து நின்றான். இரு நிமிஷம் கழித்து வெளியே வந்த ஐயா அவனைப் பார்த்தார். ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்தார். சோபாக்களுக்கு நடுவில் இருந்த வட்டமான சிறிய மர மேஜையின் மீது செய்தித் தாள்கள், கைபேசி, சற்றுப் பெரிதான பர்ஸ், 

ஒரு சிறிய கணினி ஆகியவை கிடந்தன. அவர் பர்ஸை எடுத்துத் திறந்து பார்த்து விட்டு காசியின் பக்கம் திரும்பினார்.

“என்னடா உங்கப்பன் அனுப்பி வச்சானா?” என்று கேட்டார். கணீரென்ற அவருடைய குரலில் தென்பட்ட அதிகாரம் அவனைக் கலக்கிற்று.

அவன் பதிலளிக்க வாயைத் திறந்த போது “பணம் வேணும்னுதானே அனுப்பியிருக்கான்?” என்றார். “இப்ப அவரு கவுரதை மானம் மரியாதை எல்லாம் எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டு கிடக்கு? நீ பெரிய மனுஷன்னு உன்னை அனுப்பிச்சானா, இல்லே குளந்தை கணக்கா இருக்கற சின்னப் பையன்னா மனசு எறங்கி ஒண்ணும் கேக்காம பணம் தருவேன்னு கணக்குப் போட்டுட்டானா?”

காசி ஒன்றும் பேசாமல் நின்றான்.

“நீ போயி உங்கப்பன அனுப்பு. காசு விவகாரமெல்லாம் பெரியவங்கதான

ஹேண்டில் பண்ணனும்னு அவனுக்குத் தெரியாதா? நூல் விட்டுப் 

பாக்கறான் போலிருக்கு. நீ போய் அவனை அனுப்பு” என்றார். எதிரில் இருந்த கைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தார்.

காசி நகராமல் இருந்த இடத்திலேயே நின்றான். சில நிமிஷங்கள் கழித்து அவர் பேசி முடித்து விட்டுக் கைபேசியை மேஜை மீது வைத்தார். காசி நின்ற இடத்திலேயே இருப்பதை பார்த்தார்.

“அட நீ இன்னும் போகலையா?” என்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார்.

அப்போது அவர் மனைவி உள்ளேயிருந்து வந்தாள். காசியைப் பார்த்து “என்னடா  தாரகாசுரன் மாதிரி நின்னுக்கிட்டே தவம் பண்ணுறே?” என்று சிரித்தாள்.

ஐயா அவளிடம் ” வீட்டுக்கு கிளம்பிப் போடாங்கிறேன், இங்கனயே நிக்கறான். மகாலச்சுமி அம்மா கையால ஒரு காப்பி வாங்கிக் குடிச்சிட்டுப் போகணும்னு பாக்கறான் போல”  என்று சிரித்தார். அப்போது முகத்தில் கோபமில்லாது அழகான சிரிப்புடன் தோற்றமளித்த அவரைப் பார்த்ததும் தன்னிடமிருந்த பயம் லேசாக விலகுவது போல காசிக்கு இருந்தது.

“அதுக்கென்ன? வாடா உள்ளே. பலகாரமும் இருக்கு. தின்னுட்டுப் போ” என்றாள்  அவள்.

“ஐயோ, அதெல்லாம் ஒண்ணும் குடுத்திராதே. வீட்டுக்குப் போனதும் அவங்கப்பனுக்குத் தெரிஞ்சா  இவந் தொண்டையிலேயே  கையை விட்டுத் தின்னதெல்லாத்தையும் கக்க வச்சிருவான். காப்பி மட்டும் குடு. வீட்டுக்குப் போறப்போ வளியிலே ஒரு தடவை ஒண்ணுக்கிருந்தான்னா காப்பியெல்லாம் வெளியே போயிரும்!” என்றார்.

காசிக்குச் சிரிப்பு வந்து விட்டது. கையால் வாயை இறுகப் பொத்திக் கொண்டான். உடம்பின் அந்தரங்கமான பாகங்களையோ , அவற்றால் நடக்கும் சம்பவங்களையோ யாராவது சொல்லி விட்டால் அவன் அடக்க முடியாது ‘ஹோ ஹோ’ என்று சிரித்து விடுவான். 

மகாலச்சுமி காப்பி கலந்து வர உள்ளே சென்றாள் 

அப்போது “ஐயா!” என்று கூப்பிட்டுக் கொண்டே ஒருவர் உள்ளே வந்தார், அகலமான நெற்றியில் விபூதிப் பட்டையும்  நடுவில் சந்தனமும் குங்குமமும் பொலிந்தன. 

“வாங்க சாமி, வாங்க. என்ன இவ்வளவு காலையிலேயே வந்துட்டீங்க? இன்னிக்கி சாயந்திரம்தானே நானே வரதா சொல்லியிருந்தேன்?” என்றார். 

அவர் ஐயாவின் எதிரே அமர்ந்து கொண்டார். 

“இல்லே, இந்தப் பெயின்டிங் பண்ணுற காண்டிராக்டர் கொஞ்சம் அட்வான்ஸ் வேணும்னு நாலு நாளா  கேட்டுண்டு இருக்கான். அதான் இன்னிக்கு முடிஞ்சதுன்னா…”

ஐயா அவருக்கு எதிரே இருந்த மேஜையிலிருந்து பெரிய பர்ஸை எடுத்துத் திறந்தார். “இப்போதைக்கு ஒரு பத்தாயிரம் குடுங்க” என்று பர்ஸுக்குள் இருந்த கத்தைகளை எடுத்தார். எண்ணிப் பார்த்து அர்ச்சகரிடம் பணத்தைக் கொடுத்தார். மிச்சம் கையில் இருந்த நோட்டுகளைப் பர்ஸில் போட்டார்.  

 அவர் சிவன் கோயில் அர்ச்சகர் என்று காசிக்குத் தெரியும். நேற்றுக் கூட அவனும் அம்மாவும் கோயிலுக்குப் போனார்கள். கோயிலுக்குப் பக்கத்து சந்தில் இருந்த மல்லிகா அத்தையைப் பார்க்கணும் என்றுதான் அவர்கள் கிளம்பி வந்தார்கள்.அம்மாவைப் பார்த்ததும் அத்தை திடுக்கிட்டு “என்னடி சாவி! இப்பிடி தேவாங்கு மாதிரி ஆயிட்டே? மூணு மாசத்துக்கு முன்னாலே உன்னைப் பாத்தப்போ கூட இப்பிடி எட்டாங் கிராஸ் மார்க்கட்டுலே போட்டு வச்சிருக்கிற வதங்கின கத்திரிக்கா மாதிரியா 

இல்லியே! என்ன ஆச்சு? அம்மா! எவ்வளோ  அழகுடி நீ! தெருவிலே போறவனெல்லாம் மயங்கி மயங்கி நின்னு பாத்துட்டுப் போவானுகளே! 

அதெல்லாம் எங்கே போச்சுடி?  ” என்றவள் பல்லைக் கடித்தபடி “எல்லாம் அந்தப் பொறாமை பிடிச்ச நாசகாரப் பயலாலதான் நீ இப்பிடி ஆயிட்டே!” என்று கத்தினாள். 

“அந்தக் கதையெல்லாம் இப்ப எதுக்கு? என்றாள் அம்மா லேசாக நடுங்கின குரலில். “இப்ப நான் உன்னைப் பாக்க வந்தது எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும். இவனுக்கு இன்னும் பீஸ் கட்டலே. வளர்ற பையனுக்கு ஊட்டமா சாப்பிடக் குடுக்க முடியலே. நீ முதலியார் வீட்டிலே சமையக்

காரம்மா வேலை காலி இருக்குன்னு சொன்னியே. அது கிடைச்சா…”

“நா மூணு மாசத்துக்கு முன்னே உங்கிட்டே சொன்னேன். இப்ப ஆள் வந்தாச்சு. வேறே எங்கியாச்சும் கிடைக்குமான்னு பாக்கறேன். அதுக்கு கொஞ்ச நாள் பிடிக்குமே. என்கிட்டேயும் பணம் அவ்வளவா இல்லே. கடன் வேணும்னா கேட்டுப் பாக்கறேன். உதவின்னு பக்கத்திலே போனாதான் நம்ம ஆளுங்க இளுத்தடிப்பாங்களே. அதுவரைக்கும் பீஸ் கட்டாம இருக்க முடியுமா?” என்றாள்.

அம்மா ஒன்றும் பேசவில்லை. அவள் அவ்வாறு பேசாமலிருந்தது காசியை வருத்தியது. 

திடீரென்று அத்தை அம்மாவிடம் “நீ ஐயா கிட்டே கடனா கேட்டுப் பாரேன். நிச்சயமா அவரு உதவுவாரு” என்றாள்.

அம்மா “மல்லி உனக்கு கிறுக்குப் பிடிச்சிருச்சா? இவங்கப்பாவுக்கு ஐயா பேரைக் கேட்டாலே கொதிச்சுக்கிட்டு வருதுங்கிறது உனக்குத் தெரியாதா?” என்றாள் பதட்டத்துடன்.

“இதப் பாரு. அவன் அத்தைச் சொல்வான், இவன் இத்தைச் சொல்வான்னு 

புலம்பிக்கிட்டே கெடந்தா காரியம் நடக்காது. நான் போய்க் கேக்கட்டா?”

அம்மா மல்லிகா அத்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அதெல்லாம் ஒண்ணும்  வேணாம். நான் பாத்துக்கிறேன்” என்று எழுந்தாள். அவர்கள் வீட்டிற்குத் திரும்பும் வழியில் அம்மா காசியிடம் காலையில் ஐயா வீட்டுக்குப் போய் விட்டு வர வேண்டும் என்று சொன்னாள்…

ஐயாவின் மனைவி அர்ச்சகருக்கும் காசிக்கும் காப்பி கொண்டு வந்து தந்தாள். அவர் காப்பியைக் குடித்து விட்டு “அப்ப நான் கிளம்பறேன்” என்றார்.

ஐயா அவரிடம் “கோயிலுக்குதானே  போறீங்க? ஒரு நிமிஷம் இருங்க. டிரைவர் உங்களைக் கொண்டு போய் எறக்கி விட்டிருவான்” என்றார். 

ஐயாவின் மனைவி “கார் கோயிலுக்குப் போகுதுன்னா நானும் ஒரு அஞ்சு நிமிஷம் போயி சிவனைக் கும்பிட்டுட்டு வந்திர்றேன்” என்று அர்ச்சகருடன் கிளம்பிச் சென்றாள்.

அவர்கள் அர்ச்சகருக்கும் காக்கைகளுக்கும் சிட்டுக் குருவிகளுக்கும் 

காண்பிக்கும் கருணையை எங்களுக்கும் காமிக்கணும் கடவுளே! 

ஐயா அவனைப் பார்த்து “காப்பி நல்லா இருந்திச்சாடா? இன்னிக்கி ஸ்கூல் இருக்கா?” என்று கேட்டார்.

“இன்னிக்கி இல்லே” என்றான்.காசி. 

“சரி, நீ போயி உங்கப்பனை வரச் சொல்லு. அவன் கிட்டே பேசி பணம் குடுக்கிறதா வேணாமான்னு பாக்கறேன்” என்றார். 

“எங்க அம்மாதான் பணம் கேட்டுட்டு வரச் சொல்லிச்சு” என்றான் காசி.

அவர் திடுக்கிட்டு “என்னது? என்ன சொன்னே?” என்று அவனைப் பார்த்தார். 

சட்டென்று அவர் முகம் மாறி விட்டது போலக் காசிக்குத் தோன்றிற்று.

“அதை ஏண்டா வந்தவுடனே நீ சொல்லலே?” என்றார். அவர் கை எதிரே இருந்த மேஜையை நோக்கி நீண்டது. 

—————————————————————————————————————————————-             

Series Navigationஅப்பாவின் கை பற்றி…நிழலாடும் நினைவுகள்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *