- ஆர். வத்ஸலா
பிஞ்சு வயதில்
அப்பா கை பற்றி
உலக அற்புதங்களை காண பழகுகையில்
கண்டேன்
மின்மினி பூச்சியையும் அதன் வால்விளக்கையும்
அப்பாவிடம் கேட்டேன்
சந்திரன் இருக்கும்போது
மின்மினி பூச்சிக்கு விளக்கெதெற்கென
அப்பா சொன்னார் –
‘என் கண்ணே, மின்மினி பூச்சி அறிவாளி
அதற்குத் தெரியும்
சில சில சமயம்
சந்திரனும், சூரியனும், நட்சத்திரமும்
நம்மிடம் கூறாமலே காணாமற் போய்விடும்
ஆகவே எப்பொழுதும் கைவசம் ஒரு சிறு விளக்கு
வைத்துக் கொள்ள வேண்டுமென
அதனால்தான்
நான் பாதை துழாவாமல் நடக்கிறேன் –
கும்மிருட்டிலும்
என்னுள்ளே முணுக்முணுக்கென எரியும்
சின்ன விளக்கொளியில் –
மின்மினி பூச்சியைப் போல