தேனிசீருடையான்
சொல்லப்படாத கதைகள்.
ஜனநேசன்.
பாரதி புத்தகாலயம்.
பக்கம் 92. விலை 110/
முதல் பதிப்பு டிசம்பர் 2022
நூல் அறிமுகம்.
எளிய மனிதர்களைப்பற்றிய எளிமையான கதைகள். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடு ரத்தமும் சதையுமாய் எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. எல்லாமே சின்னஞ்சிறு கதைகள். 1980களில் ஆனந்தவிகடன் வார இதழ் சின்னஞ்சிறு கதைகளுக்கான போட்டியை நடத்தியது. முக்கியப் படைப்பாளிகள் பலரும் இரண்டு அல்லது மூன்று பக்க அளவில் சின்ன வடிவில் கதைகள் எழுதினார்கள். போன்சாய்த் தாவரங்கள் போல அவை சின்ன உருவம் கொண்டு பெரும்பலன் தந்தன. அந்த உத்தியை இந்தத் தொகுப்பில் எழுத்தாளர் ஜனநேசன் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தொண்ணூற்று ஆறு பக்கங்களில் பதினேழு கதைகள் இருக்கின்றன என்பதை வைத்தே அதன் உருவத்தைக் கணக்கிட்டு விடமுடியும். பக்க அளவு குறைவு என்றாலும் கதைவீச்சு வீர்யமானது.
எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் மூத்த புதல்வர் இ. ஆ. ப அதிகாரி அதுவும் மாவட்ட ஆட்சித் தலைவர் என்பதால். கிடைக்கிற சலுகைகளைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் புழங்கும் நிலப்பரப்புக்குச் சென்று அவர்களின் வாழ்க்கைமுறையை தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ஜனநேசன். அவரின் பல படைப்புகளில் நக்சலைட்டுகளின் வாழ்க்கை, அல்லது அவர்களின் மனிதநேயக் கோட்பாடு பதிவாகியிருக்கிறது. இதற்கு முந்தைய தொகுப்பான “காத்திருப்பு”வில் ஒரு கதை வந்திருக்கிறது. தலைப்பு “தோட்டாவில் பூக்கும் மலர்கள்.” இந்த நூலிலும் பதினேழாவது கதையாக, இறுதிக்கதையாகவும் நூல் தலைப்புக் கதையாகவும் வந்திருக்கிற “சொல்லப்படாத கதைகள்” நக்சலைட்டுகளின் தியாக வாழ்க்கை வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
சீனப் புரட்சிக்கான வரலாற்றுக் காரணங்களை .எல்லாம் புரிந்துகொள்ளாமல் சிலர் சீனப் பாதையைத் தேர்வு செய்து அதன் வழியே தங்கள் பாதையை அமைத்து இன்றுவரை நக்சலைட்டுகளால் மக்களை ஒருங்கிணைத்துப் புரட்சிப் பாதையை வடிவமைக்க முடியவில்லை. ஆனாலும் அவர்களிடம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான மனித நேயமும் சமூக விரோத சக்திகளுக்கு எதிரான ரௌத்திரமும், அதை அமல்படுத்துவதற்கான தியாக உணர்வும் இருக்கின்றன. இத்தகைய தியாக உணர்வைப் பிரதிபலிக்கும் படைப்பே “சொல்லப்படாத கதைகள் “ என்னும் கதை..
லாரி ஓனரும் டிரைவரும் லாரி ஓட்டிக்கொண்டு வடநாடு செல்கிறார்கள். இடையில் நக்சலைட்டுகள் மறித்து லாரியில் இருந்து 40 லிட்டர் டீசலைப் பிடித்துக் கொண்டு அதற்கான தொகையைத் தந்து வழிவிடுகின்றனர். அவர்கள் நினைத்திருந்தால் டீசலுக்குப் பணம் தராமலும் லாயியில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்தும் சென்றிருக்க முடியும். நக்சலைட்டுகளின் நோக்கம் எளிய மக்களைச் சுரண்டுவது அல்ல. இன்னோர் இடத்தில் போலிஸ்காரர் லாரியை மறித்து மாமூல் கேட்டபோது ஒரு நக்சலைட் தலையிட்டு லஞ்சப்பரிமாற்றத்தைத் தடுத்துவிடுகிறார். அவரைப் பார்த்ததும் காவலர் பயந்து ஓடிவிடுகிறார்.
லோடு இறக்கிவிட்டுத் திரும்பி வரும்போது கையூட்டில் இருந்து காப்பாற்றிய அந்தப் போராளி பசிமயக்கத்தில் சாலையில் விழுந்து கிடக்கிறார். ஓனரும் டிரைவரும் அவரை எழுப்பி, டிஃபன் வாங்கித் தந்து பசியாற்றுகின்றனர். அவரைத் தங்களுடன் அழைத்துப் போய்க் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்போடு சுற்றுமுற்றும் பார்த்தபோது அவர் காணாமல் போயிருந்தார். மனம் நெகிழும்படி இந்தப் பகுதி சொல்லப்பட்டிருக்கிறது,
என்னைப் பொருத்தவரை இந்தத் தொகுப்பின் முக்கியக் கதை என்றால் அது “வாயுள்ள பிள்ளை.” அழகான சொல்லாடல்; விருவிருப்பான நடை. வாத்திய இசையின் தாள லயங்கள் பற்றிய விவரிப்புகள்.. எல்லாத் தாளங்களையும் இசைகளையும் வெறும் உதட்டசைவு மூலம் வாசித்து மக்களிடம் யாசகம் பெற்று வாழ்கிறான் மாவூத்து வேலன் என்ற மனிதன். குழந்தைப் பருவத்தில் இருந்தே அவன் இதைச் செய்துவருகிறான்.
“நான்” என்ற கதைசொல்லி அந்தக் கிறுக்கனின் மிமிக்ரி அடவுகளை ஒரு இசைக் கச்சேரிபோல இசைத்தட்டில் பதிவு செய்து கோடைப் பண்பலைக்கு அனுப்புகிறார். அது ஒலிபரப்பாகி அனைவர் நெஞ்சங்களையும் கவர புகழேணியின் உச்சத்துக்குப் போய்விடுகிறான் மாவூத்து வேலன். அவன் வாழ்ந்த கிராமத்தின் பெயரும் (போடிதாசன்பட்டி) திக்கெட்டும் பரவுகிறது. வெறும் கிறுக்கனாய் அலைந்த ஓர் அப்பாவி இத்தனை உயரத்துக்குச் சென்று விட்டானே என்று பெருமைப் பட்டு, அவன் இறந்தபின் அந்த மக்கள் ஊரில் சிலை வைத்துக் கொண்டாடுகிறார்கள். வித்தியாசமான கரு, வித்தியாசமான நடையால் இந்தக் கதை சிறப்படைகிறது.
கொரோனாகாலத்துக் கதைகளோடு (எலியோடு வாழ்தல்) இணயவழிச் சூதாட்டக் கதையும் (கவ்வும் சூது) இதில் உள்ளது. ஓய்வு வயதை உயர்த்திய அரசு அதிகாரத்தின் கொடுங்கரத்தை இன்னொரு கதையில். (தொடர் ஓட்டம்.) சிறப்பாகச் சித்தரிக்கிறார்.
இன்னொரு முக்கியக் கதை “எங்கே போகிறோம்”. அலைபேசி என்ற அறிதிறன் கருவி சமுதாயத்தில் எத்தனையோ தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத் தளங்களுக்குள் நுழைந்து தன்னிலை மறப்பது. விளையாட்டுக்கு அடிமையாவது, புத்தக வாசிப்பு காணாமல் போவது போன்ற சமூக அவக்கேடுகள் நிகழ்கின்றன. இன்னோர் அசிங்கமான சமூக நிகழ்வு, குடும்ப உறவுமுறையில் ஏற்படும் கீறல். யூ டியூப் பார்த்து அண்ணனும் தங்கையும் உடலுறவு கொள்கின்றனர் என்பதை இந்த்க்கதை சித்தரிக்கிறது.
பெரும்பாலான படைப்பாளிகள் நேற்றைய தினத்தைப் பற்றியே அதிகம் பேசுகின்றனர். சிறுகதை இயக்கத்தின் மிக முக்கியமான பாடுதளம் இன்றையைப் பேசுவது. அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் ஜனநேசன். சமகாலத்தைப் பேசுவது ஒரு படைப்பாளியின் முக்கியத் திறன்.
புழக்கத்தில் இருக்கும் சில ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தித் தான் ஒரு தமிழ்ப்ப்பண்டிதர் என்பதையும் நிறுவியிருக்கிறார் ஜனநேசன். srlfi என்பதை ‘தன்படம்’ என்றும் குக்கர் என்ற பொருளை ‘ஆவியழுத்த சமைப்பான்’ என்றும் மொழியாக்கம் செய்துள்ளார். ஒரு படைப்பாளி கதைசொல்லி மட்டுமல்ல; மொழிக்கலைஞனும் ஆவான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
எளிமையான இனிமையான தொகுப்பு. சிறுவர்களும் வாசிக்கும் வண்ணம் குறைந்த பக்க அளவு கொண்டது. மேலும் இத்தகைய தொகுப்புகள் வரவேண்டும் என வாசக மனம் விரும்புகிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்: அங்கம் -2 காட்சி -3 பாகம் -1
- அப்பாவின் கை பற்றி…
- திரை
- நிழலாடும் நினைவுகள்
- ஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்
- நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்
- நாவல் தினை அத்தியாயம் பத்தொன்பது CE 1900
- மௌனி
- தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு