தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு – 2

This entry is part 19 of 19 in the series 25 ஜூன் 2023

சென்ற இதழில் நான் காங்கிரஸ் பற்றி எழுதியதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், நக்கலாகவும் சில எதிர்வினைகளை பார்த்தேன்.

அவை அனைத்தையும் நான் புரிந்துகொள்கிறேன்.

நான் முன்னர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில், எனது மேலதிகாரி என்னிடம் ஒன்று சொன்னார். “you are constrained by your imagination” உன்னுடைய கற்பனையே உன்னுடைய விலங்கு என்று ஏறத்தாழ நேரடியாக மொழிபெயர்த்தாலும், இதனை அப்துல் கலாம் நீங்கள் மகத்தான கனவு காணுங்கள் என்று சொன்னதை வைத்து புரிந்துகொள்ளலாம்.

பிரச்னை என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு இன்று தமிழ்நாட்டில் அமைப்பே இல்லை. இதற்கான ஆரம்ப காரணம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள். 1970இலிருந்து இந்திரா காந்தி துவக்கிய காங்கிரஸ் (ஆர்) காங்கிரஸ் (ஐ) போன்றவை. அன்றிருந்த ஸ்தாபன காங்கிரஸுக்கு எதிராக தனது சுய பிம்பத்தை நம்பி உருவாக்கிய பிளவுகள். ஆகவே இந்த காங்கிரஸ் ஆர், காங்கிரஸ் ஐ போன்றவை பின்னால் காங்கிரஸ் என்ற பெயரில் தனது பயணத்தை நடத்திக்கொண்டிருந்தாலும் இன்றைய காங்கிரசுக்கும், நேரு- காமராஜ் போன்றோரின் காங்கிரசுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

நேரு- காமராஜ் முடிய இருந்த காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்தது. தொண்டர்களின் கட்சி தேர்தல்கள் (இன்று திமுக மட்டுமே தமிழ்நாட்டில் தொடர்ந்து இதனை நடத்திக்கொண்டிருக்கிறது) கட்சியை வலுப்படுத்தின. தொண்டர்கள் தலைவர்களாக ஆனார்கள். அதனால்தான், காமராஜ் போன்றவர்கள் தலைவர்களாக ஆனார்கள்.

ஆனால் இந்திரா, தானே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை உடைத்து தனது இந்திரா காங்கிரஸை உருவாக்கி அதன் மூலம் தனது குடும்பத்தை காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற வைத்து, இப்படிப்பட்ட தொண்டர் இல்லாத, பொதுமக்களின் வாக்குக்களை நம்பி வெற்றிபெறும் கட்சியாக ஆக்கினார்.

இதனால் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் அழிந்து, நியமன கலாச்சாரம் துவங்கியது. இன்று தமிழக காங்கிரஸ் கட்சியில் சில தலைமைப்பொறுப்புகளில் இருப்பவர்கள் எவரும் தமிழ்நாட்டு காங்கிரஸ் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவானவர்கள் அல்ல. இவர்கள் நியமிக்கப்பட்டவர்கள். இப்படி நியமனம் செய்யப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், அவர்களுக்கு கீழே இருக்கும் பதவிகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துகொள்கிறார்கள். இங்கே இருக்கும் சூழ்நிலையில் ஒரு காங்கிரஸ் தொண்டர் ஒரு மாவட்டத்தில் வேலை செய்து திறம்பட வேலை செய்ததால் அங்கிருக்கும் உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு தலைவராகி அங்கிருந்து மாநிலதலைமைக்கு செல்வது எல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று.

இன்று பாஜக ஓரளவுக்கு தொண்டர் அடிப்படை உள்ள கட்சியாக இருந்தாலும் அதிலும் நியமனங்கள் நடந்துவருகின்றன. திமுகவும் அப்படியே. காங்கிரஸ் தொண்டர்களே இல்லாத ஒரு கட்சி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம் என்பது மகத்தான வாய்ப்பு அல்ல, மகத்தான கற்பனை என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படி தொண்டர்களே இல்லாத சூழ்நிலையில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? பிராந்திய தலைவர்களை இழுத்து, அவர்களது சொந்த செல்வாக்கு மூலம் கொண்டு வரும் வாக்குக்களை பெற்று வெல்வது ஒரு வழி. அப்படிப்பட்ட வழியைத்தான் வடக்கில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி செய்துவருகிறது. அப்படி ஒரு தலைவர் காங்கிரஸிலிருந்து பிரிந்தால், அது காங்கிரஸை சுத்தமாக அழித்துவிடுகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆந்திர பிரதேசத்தில் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி கீழ் இருந்த காங்கிரஸை சொல்லலாம். ஒ எஸ் ராஜசேகர ரெட்டி இறந்த பின்னால், அவரது மகன், ஒய் எஸ் ஆர் ஜகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் ஒரே வாரிசாக தன்னை முன்னிருத்தியபோது, ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அவரது மகனின் ஆதரவாளர்களாக ஆகிவிட்டனர். காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. இதுவே காங்கிரஸ் தொண்டர் அடிப்படையான கட்சியாக இருந்திருந்தால், காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கும். தொண்டர்களில் ஒருவர் தலைவராக ஆகியிருக்கலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலை, பாஜக போன்ற கட்சிகளுக்கு வரப்பிரசாதம். அப்படிப்பட்ட உள்ளூர் செல்வாக்கு பெற்றவர்களை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரித்து பாஜகவுக்கு கொண்டுவந்தால், பாஜக அவ்விடங்களில் பலம் பெறும். முன்பு ஒரு காங்கிரஸ் தலைவரின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இன்று பாஜக தொண்டர்களாக ஆகிவிடுவார்கள்.

இன்று பாஜக எதிர்ப்பு மனநிலை உள்ளவர்கள் ஆதரிக்க ஒரு இடம் தேடும்போது, அந்த இடத்தில் காங்கிரஸ் இருந்தால் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. இதன் உதாரணம் கர்நாடகா. அங்கு தேவகவுடாவின் ஜனதாதளம் சரியான மாற்றாக இருக்காது என்று கர்னாடக பொதுமக்கள் நினைத்ததால், அந்த பாஜக எதிர்ப்பு வாக்குக்கள் காங்கிரஸிடம் சேர்ந்தன.

ஆனால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் மட்டுமே காங்கிரஸை ஒரு வலுவான கட்சியாக நிலைநிறுத்திவிட முடியாது. இது தற்காலிகமான வெற்றிதானே தவிர, இது உறுதியான அடித்தளமுள்ள வெற்றி அல்ல.

அதற்காக காங்கிரஸ் மீண்டும் தொண்டர்கள் அடிப்படையான கட்சியாக அது உருவாக வேண்டும். அது மட்டுமே நீண்டகாலத்துக்கு அதற்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கி தரும்.

அதன் ஆரம்ப புள்ளியாக, பரிசோதனை களமாக தமிழ்நாடு அமையலாம்.

இங்கே கிராமப்புறங்களில் ஆரம்பித்து ஒவ்வொரு படி நிலையிலும் காங்கிரஸ் உள் கட்சி தேர்தல்களை நடத்தி பார்க்க வேண்டும். கிராமப்புறங்கள், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று அனைத்து தளங்களிலும் பொதுமக்களை ஈடுபடுத்தி தனது தேர்தல்களை நடத்தவேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் தமிழ் நாட்டில் வலு அடையும்.

தற்போது மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் ராகுல்காந்திக்கு ஆதரவாகவும் ஒரு மனநிலை இருக்கிறது. இதனை மிகச்சரியாக தமிழ்நாடு காங்கிரஸ் பயன்படுத்திகொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெறுவதற்கு ஒன்றுமில்லை. இன்று பாஜக அதிமுகவிடம் கையேந்தி பவனை நடத்திகொண்டிருப்பது போல, காங்கிரஸ் திமுகவிடம் கையேந்தி பவனை நடத்திகொண்டிருக்கிறது. இதிலிருந்து பாஜக தன்னை விடுவித்துகொள்ள ஒரு குறைந்த பட்ச முயற்சியை எடுத்து வந்தாலும், அது இன்னமும், மத்திய அரசில் பாஜக அமர்வதற்காக மாநில பாஜகவை பலிகொடுக்கும் பழைய குருடித்தனத்தை விட்டமாதிரி தெரியவில்லை.

அதே போல காங்கிரஸும், மத்தியில் பாஜகவை தோற்கடித்து விடலாம் என்று நப்பாசையில், தமிழக காங்கிரஸை திமுகவுக்கு பலி கொடுத்துகொண்டிருக்கிறது.

உண்மையில் பாஜகவை விட காங்கிரஸே படு கேவலமான நிலையில் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஏனெனில் நாளை திமுக ஐந்து சீட்டுக்களை காங்கிரஸிடம் கொடுத்தாலும் வெட்கம் கெட்டு வாங்கிகொள்ளும் நிலையில்தான் காங்கிரஸின் மனநிலை இருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் கூட்டணி இல்லையென்றால், திமுக பாராளுமன்ற தேர்தலில் சுத்தமாக காலி என்பது காங்கிரஸில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. காங்கிரஸின் பலம் அதன் பாஜக எதிர்ப்பில் இருக்கிறது. திமுக ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சி. வெட்கமே இல்லாமல் நாளை பாஜக ஆட்சி அமைக்க மூன்று எம்பிக்கள் தேவை என்றால், வெட்கமே இல்லாமல் திமுக பாஜகவுக்கு ஆதரவாக அறிக்கை விடும். கூட்டணியில் சேர்ந்துகொண்டு கப்பல் துறையையும், தொலை தொடர்பு துறையையும் பெற்றுகொண்டு, திராவிட வெற்றி என்று முழங்கும். பாஜக எதிர்ப்புக்காக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தவர்களின் பாடுதான் வருந்தத்தக்கதாக இருக்கும். அவர்களை பற்றி இம்மியும் திமுக கவலைப்படப்போவதில்லை.

நாளை நாடாளுமன்ற தேர்தலில், திமுக தனியாகவும், காங்கிரஸ் தனியாகவும் நிற்குமேயானால், பாஜக எதிர்ப்பு வாக்குக்கள், ராகுல்காந்தி பிரதமராக ஆவதற்கு அளிக்கப்படும் வாக்குக்கள் எங்கே செல்லும்? திமுகவிடமா? காங்கிரஸிடமா?

அனைத்தும் காங்கிரஸிடமே சேரும். ஆனால், அதனை விட முக்கியம், காங்கிரஸ் காட்டக்கூடிய வெற்றிபெறக்கூடிய சாத்தியம். “Winnability”

வெறுமே காங்கிரஸ் தனியாக நிற்குமேயானால், அது தோல்வி அடையும். மாற்றாக, காங்கிரஸ் அதன் தலைமையில் விசிக, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, விஜயகாந்தின் தேமுதிக, வைகோவின் மதிமுக, கொங்கு ஈஸ்வரனின் கொங்கு மக்கள் கட்சி போன்றவை, மற்றும் இன்னும் வரக்கூடியவர்களை எல்லாம் சேர்த்து ஒரு கூட்டணி அமைக்குமேயானால், அது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியை பெறும்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அது பெறும் வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் உதவாது. அது முதல்வருக்கான தேர்தல். அந்த தேர்தலில் ஸ்டாலினா, எடப்பாடி பழனிச்சாமியா, அண்ணாமலையா, சீமானா என்பதுதான் முக்கியமே தவிர கட்சி அடையாளம் அல்ல.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டுமென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் முதல்வர் யார் என்று அடையாளம் காணப்பட வேண்டும். அவரிடம் சுதந்திரம் தரப்பட வேண்டும். திமுக-அதிமுக என்று கூட்டணியில் காலத்தை ஓட்டிகொண்டிருந்த நியமன காங்கிரஸ்காரர்கள் ஓரம் கட்டப்பட வேண்டும். ஏறத்தாழ இதனைத்தான் பாஜக தமிழ்நாட்டில் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட தலைவருக்கான இமேஜ் பில்டிங் இன்றே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான தொண்டர் படை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கிராமங்களில் ஆரம்பித்து நகர்ப்புறம், மாவட்டம் மாநிலம் என்று கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும். காங்கிரசுக்கு தொண்டர் படையும் இல்லை, கட்சி அமைப்பும் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். ஆகவே உருவாக்குவது என்பது சாதாரணமான செயல் அல்ல. குறைத்து மதிப்பிடவும் வேண்டியதில்லை.

இவைகளுக்கான வரைபடம் என்பதை நான் போடவேண்டியதில்லை. இதற்காக பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தமிழக காங்கிரஸில் இருக்கிறார்கள். இவற்றை செய்யமுடியவில்லையே என்று வருந்துபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் இது சென்று அடைந்தால், அவர்களது சுயபச்சாத்தாபத்தில் மாற்றம் வரலாம் என்று நான் கருதியதால் இதனை எழுதியிருக்கிறேன்.

மீதி அவர்கள் விருப்பம்.

Series Navigationரோஹிணி கனகராஜ் கவிதைகள் 
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *